Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 19

 

*19*

விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ உறவினரிடம் வளர்ந்தான் என்ற சுருக்கமான பதிலே ஒன்றுபோல தெரிவிக்கப்பட்டது.

அதை நம்பியும் நம்பாமலும் இருவேறாக பேச்சுக்கள் எங்கும் காற்றோடு கலந்திருக்க, அன்றைய விழா நாயகனாக ராஜராஜனே வளைய வலம் வந்துகொண்டிருந்தான். 

மாறாக இத்தனை வருடங்கள் ரவுசு விட்டு சுற்றிக் கொண்டிருந்த தச்சன் அடங்கி ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டு அனைத்தையும் மேன்போக்காய் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் கூட்டாளிகள் வந்து அழைத்த போது கூட பெரிதாய் ஆர்வம் காட்டாது குணாவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். குணா அவனை நொண்டி துருவிய போதும் பதிலேதும் கொடுக்கவில்லை தச்சன். அவனின் இந்த மாற்றத்தில் துணுக்குற்று மனம் கேளாமல் நேரே குந்தவையிடமே சென்று நின்றான் குணா.

“நான் கேக்குறது உனக்கு பிடிக்காம கூட இருக்கலாம் ஆனால் கேட்காம இருக்க முடியல... எதுவும் பிரச்சனையா? தச்சன் இப்படி அமைதியா ஒதுங்கிப் போற ஆளில்லை. ஆனால் இன்னைக்கு எனக்கென்னன்னு ஓரமாய் போய் உட்கார்ந்திருக்கான்? நான் கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்குறான்.” 

திடுமென குணா அவளிடம் வந்து கேள்வி எழுப்பியது இயல்புக்கு மீறியதாய் தெரிந்தாலும் தச்சன் மீதிருக்கும் அக்கறையில் அவன் விசாரித்தது அவளை இளக வைத்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியோ தப்போ அவர் எது செஞ்சாலும் அவரை மட்டுமே முன்னிறுத்தி அவரை கொண்டாடி தீர்த்து பழக்கி விட்டாச்சு. இப்போ திடீர்னு அத்தான் வந்ததும் இவரை விட்டுட்டு  அத்தான் பக்கமே எல்லோரும் சாயுறாங்கன்னு நினைச்சி வீணா கற்பனை பண்ணி மனசை அலைபாய விட்டுட்டு இருக்காரு. நீங்க கவலைப்படாதீங்க உங்க பிரெண்டால ரொம்ப நேரமெல்லாம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு கோபப்பட முடியாது. கொஞ்ச நேரத்தில் தானாய் வழிக்கு வந்துடுவாரு.” என்று இன்முகமாகவே சொல்ல குணா யோசனையாய் நின்றான்.

“சின்ன வயசில் வரவேண்டிய பொறாமையெல்லாம் இப்போ வருது போல…”

“இருக்கும் இருக்கும்…” என்று சிரித்தாள் குந்தவை.

“எதுனாலும் பார்த்துக்கோமா. அவன் எதையும் இதுவரை சீரியஸாவே  எடுத்துகிட்டது இல்லை. ஆனால் அவன் அப்படி வெளில காட்டிக்கிறதால எப்போதும் அப்படியே இருப்பான்னு சொல்ல முடியாது. மனசு எந்த நேரம் எதை நினைச்சித் தொலையும்னு கணிக்க முடியாது. நாம சின்ன விஷயம்னு நினைச்சு கடந்து போற விஷயங்கள் எத்தனையோ பேருக்கு காயத்தை ஏற்படுத்திட்டு தான் நம்மகிட்டயே வந்திருக்கும். வீட்டுல சொல்றதை அவன் கேட்காத மாதிரி திரிஞ்சாலும் எல்லோர் மேலேயும் பாசம் அதிகம். அவன் காயப்பட்டுறாம பார்த்துக்கோமா. நான் கிளம்புறேன். வயலில் வேலை இருக்கு. ரெண்டு நாளுக்கு நானே வயலை பார்த்துக்குறேன். அவன் சரியானதும் அனுப்பினா போதும்.”

“சாப்பிட்டுட்டு போங்க.” என்று அவள் சொல்லவும் தலையாட்டிவிட்டுச் சென்றான் குணா.

அவன் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டவள் யோசனையுடனே தச்சனைத் தேடிப் போனாள். இடையில் தென்பட்ட உறவினர்களிடம் சம்பிரதாயத்திற்காய் சிரிப்பை உதிர்த்துவிட்டு வேக நடையிட்டவள், அவனைத் தேடிக் கலைத்தவலாய் நடையின் வேகத்தை குறைத்து வாயிலிலேயே ராஜனைக் காண்பித்து யாருடனோ பேசிக்கொண்டிருந்த நீலாவிடம் சென்றாள்.

“அவரைப் பார்த்தீங்களா அத்தை? ஆளையே காணோம். காலையிலிருந்து பார்க்கவே இல்லை.”

பேச்சு தடைபட்ட சஞ்சலத்தில், “யாரை?” என்று அவர் அவசரகதியில் கேட்கவுமே குந்தவையின் மனம் வாடியது.

“உங்க அருமைப் புள்ளையத் தான்… காலையிலிருந்து என்கிட்ட திட்டுவாங்காம அவருக்கு சாப்பாடு இறங்கல போல… அவர் பிரென்ட் வந்து சொல்லிட்டு போனாரு.” என்று அவள் சொன்ன தொனியில் ராஜனுக்கு சிரிப்பு வந்தது. 

“ஜாடிக்கு ஏத்த மூடி தான் நீங்க ரெண்டு பேரும்… தச்சன் இங்கதான் எங்கேயாவது இருப்பான்மா… போன் போட்டுப் பாரேன்.” என்று ராஜன் சொல்ல, குந்தவையிடம் அலைபேசி இருந்தால் தானே… தச்சனிடம் சண்டையிட்டு அவன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் தான் புது அலைசிபேசி வாங்குவேன் என்று பிடிவாதமாய் நின்று தச்சனையே சபதம் எடுக்க வைத்தவள் ஆகிற்றே!!!

சங்கடமாய் நெளிந்தவள், “இங்க தான் இருப்பாரு… நான் இன்னொரு முறை தேடிப் பார்க்கிறேன்.” என்றுவிட்டு அப்படியே நகர்ந்துவிட்டாள். மீண்டும் ஒருமுறை கண்களை சுழல விட்டவள் முன்பு தேடாமல் விட்ட வீட்டின் பக்கவாட்டை நோக்கி நடைபோட்டாள். அவளை பொய்க்காமல் யாருமற்ற இடத்தில் அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் தச்சன். அவனைக் கண்டதும் அவளின் எட்டுக்கள் வேகமாகியது.

“இப்போ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துகிட்டு பக்கத்து ஊர் வரைக்கும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?” என்று வேகமாய் குரலை உயர்த்த, விழியை எரிச்சலுடன் அவள் மீது பதித்தான் தச்சன். 

“நான் சிவனேன்னு உட்கார்ந்திருக்கேன். என்னை எதுக்கு இப்போ தொந்தரவு பண்ற?”

“அதுதானே சந்தேகமா இருக்கு. உடம்பெல்லாம் நல்லாத்தானே இருக்கு? காலையிலிருந்து சமத்து பையனாட்டம் என்கிட்ட திட்டு வாங்காம இருக்க.” என்று கிண்டலாய் பேசி அவன் கன்னத்தை தட்டினாள். அவனோ எரிச்சலுடன் அவள் கரத்தை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான்.

“ஷ்… என் வாயை கிளராத குந்தவை. ஏதாவது திட்டி விட்டுருவேன்…”

“ஓ… சாருக்கு திட்டக் கூட தெரியுமா? எங்க திட்டுங்களேன் பார்ப்போம்…” என்று கேலி பேசியவள் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலியிலிருந்து ஒன்றை இழுத்துப்போட்டு கதை கேட்பது போல அமர, அவனது எரிச்சல் பன்மடங்கானது.

“என்னடி லொள்ளா? என்னை கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாம போய் வேற வேலை இருந்தா பாரு…”

“இன்னைக்கு எனக்கு இதுதான் வேலையே…” 

“உன்னை… ஷ்… போடி இம்சை.”

“இம்சையாம்ல இம்சை… போடா டேய்… காஞ்சி போயிருக்கீயே…  காலையிலிருந்தே ஆள் கண்ணிலேயே படலையே… புது புடவை கட்டினதையும் பார்க்கலையேன்னு பாவம் பார்த்து நேரம் கிடைச்சதும் உன்கிட்ட காண்பிக்க தேடி வந்தேன் பாரு என்னை சொல்லணும்…” என்று அவள் கடிந்தபோதும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை. 

வீடு முழுக்க உறவினர்களின் வருகைக்கும் பேச்சுக்கும் பஞ்சமில்லை எனும்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட தச்சனின் கண்கள் நீலா பின்னரே தான் சுற்றியது… நேற்று காலை பேசியது அதன்பின்னர் இப்போது வரை தச்சன் புறம் அவரின் கடைக்கண் பார்வை கூட விழவில்லை. வெகு வருடங்கள் கழித்து வீடுவந்திருக்கும் மூத்தவனை கண்ணுக்குள் நிரப்பி அவனை கவனிப்பதிலேயே அவரின் நேரம் ஓடிவிட, தச்சனுக்குத் தான் பொறுமை கரைந்திருந்தது. அதை யாரிடமும் காட்ட விரும்பாது தனியாய் ஒதுங்கிக்கொண்டான். 

“ரொம்ப பண்றடா நீ…” குந்தவை வேண்டுமென்றே சீண்டுவது கூட புரியாது தன் எண்ணங்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்தவனுக்கு அவள் பேச பேச எரிச்சல் மூண்டது.

“என்ன பண்ணிட்டேன் இப்போ? உனக்கு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும். இல்லைனா சாப்பிட்டது உள்ள இறங்காது… அதுதான் உங்க அம்மா வந்திருக்காங்களே… அவங்களயே போய் கொஞ்சு.”

“நீயும் உங்கம்மாவை கொஞ்சேன்… யார் வேணாம்னு சொல்றா?” 

“அடியேய்… எங்கம்மா என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்குதுனு உட்கார்ந்திருக்கேன், நீ காமெடி பண்ணிட்டு இருக்க. அங்கப்பாரு நீலாவை! என்னோட கல்யாண விருந்துன்னு சொல்லிட்டு அவன் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கு… நேத்திலிருந்து அது உலகத்திலிருந்து நான் மட்டும் மறஞ்சிட்டேன் போல... நான் சாப்பிட்டேன்னான்னு கூட கேட்கல… இதுல கொஞ்சல் ஒன்னு தான் இப்போ குறைச்சல்...” அடக்கப்பட்டிருந்தது அடைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வர, அவன் சோகம் போல சொன்ன தினுசில் பக்கென்று சிரித்துவிட்டாள் குந்தவை.

“குந்தவை...” எரிச்சலுடன் அவன் பல்லிடுக்கில் அவள் பெயர் கடிபட்டு வந்துவிழ, அவனது அழைப்பே தீவிரத்தை உணர்த்தியது குந்தவைக்கு. இத்தனை தினங்களில் எண்ணிலடங்கா சண்டைகள் போட்டிருந்ததன் விளைவு அவனது ‘குந்தவை’ என்ற அழுத்தமான அழைப்புக்கான அர்த்தம் கூட பிடிபட்டிருந்தது.

“இப்ப என்ன அத்தை உன்னை கண்டுகிட்டு உன்னை அவங்க முந்தானையிலேயே முடிஞ்சிகிட்டு சுத்தனுமா?” என்ற அவளது கேள்விக்கு அவன் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் எல்லாப் பக்கமும் தலையை ஒருவாறாய் உருட்ட, அடங்கியிருந்த சிரிப்பு மீண்டும் பொங்கியது குந்தவைக்கு.

“சிரிக்காதடி...”

“ஆளு மட்டும் தான் வளர்த்தி... உள்ள ஒண்ணும் வளரல...” என்று அவன் தலையை லேசாய் தட்டிவிட்டு எழுந்தவள் அவனிடம் எதுவும் சொல்லாது அங்கிருந்து அப்படியே பின்புறமாய் வீட்டிற்குள் நுழைந்து அறிவழகியை தூக்கிக்கொண்டு மீண்டும் நீலாவிடம் சென்றாள். சுற்றி உறவினர்கள் பட்டாளம் சூழ்ந்திருக்க அவர்களை ஒருமுறை பார்த்தவள் நீலாவின் கவனத்தை தன்புறம் திருப்பினாள்.

“அத்தை பாப்பாக்கு சாப்பாடு ஊட்டப் போறேன்... அவரு இன்னும் சாப்பிடல... நீங்க கொஞ்சம் என்னனு பாருங்களேன்.”

“பாப்பாக்கு நான் ஊட்டுறேன். நீயே போய் அவனை கூட்டிட்டு வந்து ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்க. இன்னைக்கு தனித்தனியா சாப்பிட்டா நல்லாயிருக்காது.” என்று சொல்லிவிட்டு அறிவழகியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர, என்ன நினைத்தானோ நீலாவைத் தொடர்ந்துச் சென்று அறிவழகியை வாங்கிக்கொண்டான் ராஜன்.

“நீங்க போய் தச்சனை கூட்டிட்டு வாங்கமா... இந்த குட்டி பொண்ணு இப்போ தான் என்கிட்ட வந்திருக்கா. நான் கொஞ்ச நேரம் வச்சிட்டு இருக்கேன்.” என்று நீலாவிடம் சொல்லிவிட்டு அறிவழகியை கொஞ்ச அவள் அழத் தயாராய் இருந்தாள். நீலாவுக்கோ ராஜன் வீடுவந்த நாழிகை முதல் அவனது பேச்சுக்களே வேதவாக்காகியிருந்தது. நொடியும் தாமதிக்காமல் தச்சன் எங்கிருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு அவன் இருக்கும் திசை நோக்கிச் சென்றார். அவர் நகர்ந்ததுமே அறிவழகி தன் சத்தத்தை கூட்ட ராஜனிடமிருந்து அவளை வாங்கிக்கொண்டாள் குந்தவை.

“நீங்க நேராவே சொல்லியிருக்கலாமே?” குழந்தையை சமாதனம் செய்யும் நேரம் திடுமென ராஜன் கேள்வி எழுப்ப எதுவும் புரியவில்லை குந்தவைக்கு.

“எதை?”

“தச்சனை கண்டுக்க சொல்லி நேராவே சொல்லியிருக்கலாமே? ஏன் இப்படி பாப்பாவை மெனக்கெட்டு தூக்கிட்டு வந்து... சுத்தி வளைச்சு?” என்று ராஜன் இழுக்க, ஆச்சரியமாய் பார்த்தாள் குந்தவை.

“நீங்க மாமா மாதிரி... மாமாவும் டான்னு எல்லாத்தையும் புரிஞ்சிப்பாரு.” என்று அவள் சொல்ல, மென்னகை உதிர்த்தான் ராஜன்.

“அவன் எப்படி பேசுற ஆளுன்னு அன்னைக்கு நைட்டே தெரிஞ்சிகிட்டேன். அப்படி இருக்கிறவன் என்கிட்ட இப்பவரை ஒருவார்த்தை கூட பேசலை என்கிற போதே ஏதோ இருக்குன்னு புரிஞ்சிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லையே. அவன் கோவமா இருக்கானா? நான் இங்க வந்தது அவனுக்கு பிடிக்கலையா?” இன்முகமாய் துவங்கி வருத்தத்தில் முடிந்த அவனது கேள்விக்கு அவள் என்ன சொல்ல என்பது போல நின்றாள்.

“அவன் பேசலைன்னா என்ன... நானே போய் பேசுறேன்.” என்றான் அவளின் அமைதியை படித்தபடி…

“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றது சரியா இருக்காது. நீங்க அவருக்கு அண்ணனா இருந்தாலும் ஒண்ணா வளரல. நீங்க எப்படினு அவருக்குத் தெரியாது அவர் எப்படின்னு உங்களுக்கும் தெரியாது. இந்த நிலையில் நான் உங்க ரெண்டு பேருக்குள்ளும் நடுநிலையா புகுந்து இவங்க இப்படித்தான்னு பிம்பத்தை உருவாக்க விரும்பல. நீங்களா அவரை தெரிஞ்சிக்கோங்க. அவரும் அதை செய்வாரு…” என்று அவனின் கேள்விகளிலிருந்து விலகிக்கொள்ள, 

ராஜன் பெருமூச்சிழுத்தான், “அவன் கோபமா இருக்காங்குறதை இப்படி கூட சொல்லலாம்னு இப்போ தான் தெரியுது.”

“நீங்க மாமாவை விட ஷார்ப் அத்தான்! ஆச்சி மாதிரி யோசிக்கிறீங்க…” என்று குந்தவை மெச்சுதலாய் சொல்ல மீண்டும் மென்முறுவல் அவனிடம். 

கூடவே அவர்களை சுற்றி அங்குமிங்கும் நடமாடுபவர்களை கருத்தில் கொண்டு, “யார் எப்படினு நீ சொன்ன மாதிரியே போகப்போக தெரிஞ்சிக்கலாம்மா… இப்போ போய் சாப்பிடுங்க. வீட்டுல ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. நாம இப்போ இதையெல்லாம் பேசுறது சரியா இருக்காது. எல்லோரும் கிளம்பட்டும் நானே அவன்கிட்ட பேசுறேன்.” என்றான் ராஜன்.

“என்கிட்ட நல்லா பேசுறீங்களே இப்படியே அவர்கிட்டேயும் பேச வேண்டியது தானே? நீங்களும் ஏன் ஒதுங்கிப் போறீங்க? திவ்யா அண்ணிகிட்ட நல்லா பேசுறீங்களே!” என்ற அவளது கேள்வி காற்றுக்கு இரையாகியது. தச்சன் நீலாவிடம் ஏதோ வளவளத்துக் கொண்டே அவர்களை நோக்கி வருவதைக் கண்ட ராஜன் நேரே அவர்களிடம் சென்று தச்சன் தோளில் கைபோட்டான்.

“உனக்காக ஏற்பாடு பண்ணியிருக்கிற விருந்தில் ஜமாய்க்க வேண்டாமா… எங்க போன?” என்று இயல்பாய் ராஜன் பேச, தச்சன் அதிர்ந்து பின் கூர்மையாய் பார்த்து வைத்தான் தன் தமையனை.

“என்ன பேசமாட்டீயா?” என்று ராஜன் கேட்டது தான் தாமதம் நீலா பிடித்துக்கொண்டார்.

“டேய் தச்சா என்ன பிரச்சனை? அண்ணன் கூட பேசலையா நீ?”

“ப்ச்… ம்மா… நான் தான் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் மறந்துடாத… என்னால தான் அவன் வீட்டுக்கு வந்தான்…”

“மரியாதை இல்லாமா அதென்ன அவன் இவன்னு? அண்ணன்னு சொல்லு…” 

“எனக்கு இப்படித்தான் வருது.”

“சொல்ற எதையும் கேட்டுறாத. வக்கனையா பேச்சு மட்டும் தான்…”

“அதை புதுசா இப்போ தான் கண்டுப்பிடிக்கிறியா என்ன?”

“உனக்கு குந்தவை தான் லாயக்கு… அவள் ரெண்டு வாங்குவாங்குன்னா தான் அடங்குவ நீ…”

பேச்சுக்கள் எதுக்கோ துவங்கி எங்கோ செல்ல, தச்சன் ராஜனிடம் பேசாதிருப்பது கருத்திலே நிற்கவில்லை நீலாவுக்கு.

“இப்படி தான் பேசி பேசி அவளை உசுப்பிவிடுறீங்க. அப்புறம் அவள் என்னை திட்டுறான்னு அதுக்கும் பிரச்சனையை இழுக்குறீங்க.” என்று தச்சனும் சளைக்காது மல்லுக்கு நிற்க, குந்தவை தலையிலடித்துக் கொண்டாள்.

“அத்தை மணியாச்சு நீங்களும் சாப்பிடுங்க. அப்பதான் மத்த வேலையை கவனிக்க தெம்பா இருக்கும். எல்லோரும் கிளம்புனதும் இதெல்லாம் சுத்தம் பண்ணி அப்புறப்படுத்த நீங்க பக்கத்தில் இருந்து சொன்னா தான் வேலை நடக்கும். அத்தான் நீங்களும் சாப்பிடுங்க. நீ வா என்கூட…” என்று தச்சனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள் குந்தவை. 

“ஏய் எல்லோரும் இருக்காங்க. நீ பாட்டுக்கு என்னை இழுத்துட்டு போற? சைசா தள்ளிகிட்டு போறேன்னு நினைச்சிடப் போறாங்க...” என்று தச்சன் சிரிக்க, அவன் கையை பட்டென விட்டாள் குந்தவை. 

“இதுதான் பட்டணத்து புள்ளைங்குறது… புருஷனை எப்படி முந்தானையில் முடிஞ்சி இழுத்துட்டு வர்றா பாரு.” அவர்கள் எதிரில் வந்த மங்களம் வயதை ஒத்த ஒருவர் வம்பிழுக்கவென விழி விரித்து அவர்களை இடைமறித்தார்.

“கண்ணு அவிஞ்சி போச்சா உனக்கு? என் பொண்டாட்டி என் கையைத் தான பிடிச்சி இழுத்துட்டு வர்றா கிழவி…” என்று தச்சன் அசட்டையாய் இழுக்க, குந்தவை விழியை உருட்டினாள்.

“முந்தானையில் முடிஞ்சிகிட்டு வரலைன்னு வருத்தமா பேராண்டி உனக்கு?” என்று அவரும் அவனுக்கு சரிசமமாய் பேச குந்தவை தான் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.

“கண்டுபிடிச்சிட்டீயே கிழவி… வாழ்க்கையில கொஞ்சம் கிளுகிளுப்பு இருந்தா தானே சுவாரசியமா இருக்கும்.” என்று தச்சன் கண்சிமிட்ட, தன் பொக்கை வாயில் கைவைத்தபடியே நகர்ந்துவிட்டார்.

அவர் நகர்ந்தவுடனேயே இங்கு குந்தவை அவனை முறைத்துக் கொண்டிருந்தாள், “அவங்ககிட்ட என்னடா பேச்சிது? அவங்க வயசென்ன? இப்படி பேசுற… சவலைப் புள்ளை மாதிரி இவ்வளவு நேரம் இருந்துட்டு இப்போ அத்தைகிட்ட பேசிட்டு வந்தப்புறம் பேச்சைப் பாரு…”

“நல்லா பாருடி… காலையிலிருந்து நான் பேசலைங்கவும் எப்படி வந்து இழைஞ்ச… அந்த கிக்கே சுகமா இருந்துது…” என்று தச்சன் சிலிர்த்து உணர்ந்து சொல்ல, அவன் கையை கிள்ளினாள் குந்தவை. உடனே அவள் இடையில் இருந்த அறிவழகியும் அவனைக் கிள்ள, 

“ஷ்… அடியேய் செல்லாக்குட்டி இவ்வளவு நேரம் இருந்த இடம் தெரியாம அமைதியா தான இருந்த… இப்போ மட்டும் என்னவாம்? சித்தியை அப்படியே காப்பி அடிக்க வேண்டியது…” என்றுவிட்டு அவளை தூக்கிக்கொள்ள, குறும்புப் புன்னகை குந்தவையிடத்தில்…

“ப்பா… ப்பாவ்…” என்று தச்சன் கன்னத்தை தட்டி சிரித்தாள் அந்த சின்ன அழகி.

“இன்னைக்கு ஏதோ நல்ல மூடில் இருக்கா… இல்லைன்னா மேடம் என்கிட்ட வரமாட்டேங்களே.” என்று குந்தவையிடம் சொல்லிக்கொண்டே சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து மறுபுறம் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை அழைத்து அறிவழகிக்கு சிறிய வாழை இலை போடச் சொன்னான்.

“ஏய் அவளுக்கு எதுக்கு இலை? வேஸ்ட் பண்ணுவாடா… அவளுக்கு சாப்பிடவும் தெரியாது. நீ அவளைக் குடு நான் வானதிகிட்ட விட்டுட்டு வரேன்… அம்மா சாப்பாடு ஊட்டுவாங்க…” 

குந்தவை மறுக்க, தச்சன் பிடிவாதம் பிடித்தான்.

“அதெல்லாம் முடியாது… இன்னைக்கு தான் இந்த செல்லம் என்னை அப்பான்னு கூப்பிட்டிருக்கு… அதுக்கே ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. நீ போய் அழகு பையனையும் கூட்டிட்டு வா… இவளை கவனிச்சிட்டு அவனை விட்டுட்டா புள்ளை அழுவான்.” என்று கெத்தாய் சொன்னவனை சாப்பிட்டு முடிப்பதற்குள் கதற வைத்திருந்தனர் இரு அறிவுகளுமே. 

சும்மாவே கண்களுக்கு குளிர்ச்சியாய் இருப்பவற்றை இழுத்துப் பிடுங்கி வாயில் வைக்கும் குழந்தையின் எதிரில் தலைவாழையை விரித்தால் சும்மாவா இருப்பார்கள். தச்சன் குந்தவையை மீறி அறிவழகி ஒருபுறம் இலையை இழுத்தால் குந்தவையிடம் இருந்த அறிவழகன் அதே இலையை வீம்புக்கு மறுபுறம் இழுத்து அதில் இருந்த பதார்த்தங்களை எடுத்து கீழே போட்டான். அதைப் பார்த்த அறிவழகியும் இலையில் இருந்ததை கீழே போட்டாள். பின் தச்சனின் கன்னத்தில் அப்பினாள். அறிவழகனின் மூக்கில் தடவி அவனை இரண்டடி போட்டாள். ஆனால் ஒருபிடி சோறு கூட இதழை தாண்டி உள்ளே போகவில்லை.

“ஏய் சும்மா இருங்க… இதுக்குத் தான் அப்போவே வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா நீ… சின்ன பசங்க மாதிரி அவ்வளவு பிடிவாதம் பிடிச்ச இப்ப ரெண்டும் என்ன சேட்டை பண்ணுதுங்க பாரு…” குழந்தைகளுடன் சேர்ந்து தச்சனுக்கும் இரண்டு திட்டுக்கள் விழுந்தது.

“நான் என்னத்தடி கண்டேன். சொல் பேச்சை கேட்பாங்கன்னு நினைச்சேன்.”

“நினைப்ப நினைப்ப… பதினஞ்சு நாளா இங்கத்தான் இருக்காங்க. சாப்பிடும் போது எப்படி பிடிவாதம் பிடிப்பாங்கன்னு கவனிச்சது இல்லையா நீ…” என்று குந்தவை முறைக்க அவர்களின் சண்டை தான் மையமானது குழந்தைகளின் சேட்டைகளுக்கு இடையில்.

“ஆர்வக்கோளாறால் கூப்பிட்டுட்டேன்…”

“உன் ஆர்வம் தான் பலநேரம் கோளாறாகிடுது. கொஞ்சம் அடக்கி வாசி.” என்று அதட்டியவள் அறிவழகனை தூக்கிக் கொண்டு எழுந்து சென்றாள்.

*** 

“நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து கூட்டமெல்லாம் குறைந்தவுடன் வெளியே உலாத்திக் கொண்டிருக்க, கொடியில் காய்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் துணியை எடுக்க வந்த வானதியை பிடித்துக் கொண்டான்.

“இல்... இல்லையே. அப்படியெல்லாம் இல்லை. நான் ஏன் உங்களைப் பார்த்து மறைஞ்சி போகணும்?” ராஜராஜனின் இருப்பை எதிர்பாராத வானதி மாட்டிக்கொண்ட பாவனையில் திகைத்து திக்கித் திணறினாள்.

ஆனால் அவளுக்கு எதிர்பதமாய் ராஜனோ மிகவும் இயல்பாய், “பொய் சொல்றதையும் பதற்றப்படாம சொல்லுங்க. அப்போ தான் எதிர்ல இருக்குறவங்க நம்புவாங்க.” என்று சொல்ல, ‘இவனிடம் மட்டும் வம்பாய் மாட்டிக்கொண்டு எப்போதும் பேச்சு வாங்குறோமே’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு, அவமானத்தில் சிவந்து பார்வையை எங்கோ பதித்து அவனை நேரே பார்க்க முடியாமல் அவனெதிரே நின்றாள் வானதி.

“நீங்க சங்கடப்படனும்னு சொல்லல. உங்க நல்லதுக்குத் தான் சொன்னேன்.” என்று ராஜன் சமாதானமாய் சொன்னாலும் வானதியால் எதுவும் சொல்லமுடியவில்லை.

“பாருங்க இதுக்குத் தான் சொன்னேன். என்கிட்ட நேரா பேச முடியாம நிக்குறீங்க. எங்க பேசணுமோ அங்க பேசாம, தேவையில்லாம மூக்கை நுழைச்சி தேவையில்லாத காரியத்தில் மாட்டிக்குறீங்க... வீட்டுக்கு வந்தவங்க யாராக இருந்தாலும் வாங்கன்னு சொல்றது தான் வழக்கம். நான் இங்க வந்தப்போ என்னை இங்கிருந்து விரட்டுறதிலேயே குறியா இருந்தீங்க. ஆனா கடைசியா என்ன நடந்துச்சுனு உங்களுக்கே தெரியும். வேற யாரவது வம்பு பேசுறவங்ககிட்ட நீங்க இப்படி பேசியிருந்தா பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். சிலநேரம் நாம நம்ம வாழ்க்கையை மட்டும் பார்த்தா போதுங்க... அடுத்தவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. அதுவும் உங்க தங்கச்சியை பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம். குந்தவை எல்லோரையும் சமாளிச்சு கரை ஏறிடும். நீங்க குந்தவைக்காக யோசிக்கிறேன்னு நினைச்சி அவளுக்கு பிரச்சனையை இழுத்து விட்டுறாதீங்க.” என்று சொல்ல, வானதியின் விழிகளில் கண்ணீர் பெருகி ஒன்றிரண்டு கீழே விழுந்தது. அவன் தான் பதறிவிட்டான்.

“ஐயோ... ஏங்க இதுக்கு போய் இப்படி அழறீங்க? நான் எதார்த்தமாய் தான் சொன்னேன். தப்பா சொல்லலை...”

“இல்லை நீங்க சரியாத் தான் சொல்றீங்க. என் வாழ்க்கையை... பார்க்கிறதை விட்டுட்டு அவள் வாழ்க்கையை காவந்து பண்றேன்னு சுத்திட்டு இருக்கேன். ஆனால் நான்... நான் தான் எதையாவது செய்யத் தெரியாம செஞ்சு பிரச்சனையை இழுத்து விட்டுறேன். எல்லோருக்கும் இடைஞ்சலா இருக்கேன்.” என்று சிறுமையுடன் திணறலாய் சொன்னவள் துணிகளை வாரி சுருட்டிக்கொண்டு, விழத் தயாராயிருந்த கண்ணீரையும் உள்ளிழுத்துக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்துவைத்து சென்றுவிட, ராஜனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

அதே நேரம் சேட்டைகள் செய்து கலைத்து உறக்கத்தை தழுவும் நிலையிலிருந்த அறிவழகனை இடையில் சுமந்தபடி வானதியை தேடி வந்தாள் குந்தவை. வானதி எதிர்படவுமே அவளை நிறுத்தி அறிவழகனை அவளிடத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வானதியின் முகவாட்டத்தையே கவனித்தாள், “என்னடி ஆச்சு? அழுதியா?” என்று கேள்வியோடு கூர்மையாகவும் பார்த்துவைக்க, வானதி மீண்டும் பொங்கத் துடிக்கும் விழிநீரை தொண்டைக் குழியில் இறக்கி,

“நாளைக்கு அம்மாவோட இங்கிருந்து கிளம்புறேனா அதுதான் ஒருமாதிரி இருந்துச்சு... இவ்வளவு நாள் எந்த பிக்கல் பிடுங்கலும் பயமும் இல்லாம இருந்துட்டு திரும்ப அங்க போனதும் இயல்புக்கு திரும்பிடுமேன்னு ஒரு சோர்வு. அவ்வளவு தான்...” என்று வானதி ஒருவாறாய் பதில் சொல்ல ஆச்சர்யமாய் பார்த்தாள் குந்தவை.

தங்கையின் பார்வையில் குழம்பியவள், “என்னடி?” என்று கேட்க குந்தவையிடமிருந்து வந்த பதிலும் வியப்பு தாங்கியே வந்தது.

“நீங்க ஊருக்கு நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லவே இல்லை. அம்மாவும் மூச்சு விடல. உனக்கு என்னாச்சு? முன்னாடி இங்கிருந்து கிளம்புன்னு சொன்னாலே இது என்னவோ உன்னோட பிறந்தவீடு மாதிரி இன்னும் கொஞ்ச நாள்னு சொல்லிட்டு ஜம்பமா கிளம்ப மாட்டேன்னு இருந்த. இப்போ எல்லாத்துக்கும் தயாராகிட்டீயா?”

“என்னைக்கு இருந்தாலும் இது உன்னோட புகுந்த வீடு. உன்னோட புகுந்த வீட்டு சொந்தங்கள் இருப்பாங்க. நான் உன்னோட அக்கா. விருந்தாளியா வரலாம். ஆனால் எப்போதும் இங்கேயே இருந்திட முடியுமா என்ன?” என்று திருப்பி பதில் சொன்ன வானதியை ஆவென்று தான் பார்த்தாள் குந்தவை. 

இதைத் தான் பல நாட்களாக மறைமுகமாக அவளுக்கு புரியவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாள் அதை செவியிலேயே வாங்கிடாதவள் திடுமென இன்று புரிந்துகொண்டதற்கான காரணம் என்னவோ! அதுவும் புரிந்தது அடுத்த சில நொடிகளிலே. சுற்றிமுற்றி பார்த்தவள் என்ன நினைத்தாளோ வானதியை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“இன்னைக்கு வந்தவங்க யாராவது ஏதாவது சொன்னங்களாடி? இல்லை அத்தான் வீட்டுக்கு வந்ததால சொல்றியா?”

“யாரும் எதுவும் சொல்லல.” பேச்சினூடே குழந்தையுடன் கீழே அமர்ந்து அறிவழகனை மடியில் போட்டு தட்டிக்கொடுத்தாள் வானதி.

“நிஜமாவா? என்கிட்ட எதுவும் மறைக்கிறீயா?” என்ற குந்தவையும் கீழே அவள் அருகில் அமர்ந்துகொண்டாள்.

“ப்ச்... நான் என்ன பொய்யா சொல்றேன்! இவ்வளவு நாள் இது உன் வீடுன்னு மட்டும் தான் தோனுச்சு, உன் வீட்டுக்காரும் நல்ல மனுஷன். அவர் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பாரு. ஆனால் இப்போ வந்திருக்காரே... அவர் அண்ணன், அதுதான் உன் அத்தான். ஷப்பா... அவர் இருக்கிற இடத்தில என்னால இருக்க முடியாது. எப்போதும் அவர்கிட்ட ஏடாகூடமா மாட்டிக்கிட்டு பேச்சு வாங்குற மாதிரியே ஆகிடுது. நான் வீட்டுக்கே போறேன்.”

“நீ என்னடி பண்ணிவச்ச? அத்தான் நல்ல விவரமானவரு, தெளிவாவும் பேசுறாரு... அவர்கிட்ட மாட்டிகிட்டேன்னா நீ என்னவோ கிறுக்குத்தனம் பண்ணியிருக்க... என்ன பண்ண?”

“ஏன்? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டீயா? எனக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்கு... எனக்குன்னு வாழ்க்கை இருக்கு. அதை நான் பார்க்க வேண்டாமா?” ராஜராஜனிடம் பேசி சமாளிக்கத் தெரியாமல் தவித்த தவிப்பை குந்தவையிடம் வார்த்தைகளாய் கொட்டினாள் வானதி.

“என்னவோ ஆச்சுடி உனக்கு... எந்த மரத்துக்கு கீழ போய் உட்கார்ந்துட்டு வந்தியோ தெரியல. ஆனால் உருப்படியா பேசுற... ஒழுங்கா யோசிக்கிற. இப்படியே இரு. நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன். நாளை மறுநாளிலிருந்து வேலைக்கு போகவும் தயாராய் இரு.” என்று சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது குறித்து வானதி எதுவும் மறுப்பு தெரிவிப்பாளோ என்பது போல பார்க்க, வானதி மறுப்பும் சொல்லவில்லை சம்மதமும் தெரிவிக்கவில்லை. இதற்கு மேல் தேவையின்றி கேள்விகள் கேட்டு ஒழுங்காய் சென்றுக் கொண்டிருப்பதை கெடுத்துக்கொள்ள வேண்டாமென எண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் குந்தவை.

***

அந்தி சாய்ந்து இரவு வேலை உணவெல்லாம் முடிந்த பின் சமையலறை வாயிலில் அமர்ந்து பிள்ளைகளுக்கு உணவூட்டிக் கொண்டிருக்கும் வானதியை பார்ப்பதுமாய் பின் குழந்தைகளை பார்ப்பதுமாய் நேரத்தை தள்ளிக் கொண்டிருந்தான் ராஜராஜன். அருகில் திவ்யா கணவன் கதிரவன் அமர்ந்துகொண்டு தன் புது மைத்துனனுடம் எதுவோ பேசிக்கொண்டிருக்க, ராஜனால் தான் அந்த உரையாடலில் முழுதாய் ஈடுபட முடியவில்லை. 

மாலை பேசிய போது வானதி அழுகையுடன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளுக்கு பின் எதுவோ மறைந்திருப்பது போலத் தோன்ற, மனம் கேளாமல் நேரே நீலாவிடம் சென்றான்.

“என்னாச்சுமா குந்தவை அக்காக்கு? எல்லோரும் இருக்காங்க ஆனால் அந்த பொண்ணோட வீட்டுக்காரரை காணோம்? அந்த பொண்ணும் எப்போதும் எதையோ இழந்துட்டு நிலையில்லாம வாழுற மாதிரியே இருக்கு. ஒரு ஒதுக்கம் தெரியுது?” என்று கேட்க, அருகில் இருந்த அன்பரசன் அவனை குழப்பமாய் பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை சொல்லவுமில்லை.

நீலா நடந்ததை சொல்ல அதனுடன் வானதி அவனிடம் கடைசியாய் கூறிச் சென்ற வார்த்தைகளை பொருத்திப் பார்த்து அவள் என்ன நினைத்திருப்பாள் என்றும் யூகத்திருந்தான்.

மனம் அவளுக்காகவும் அவளின் பிள்ளைகளுக்காகவும் வருந்த, வார்த்தைகள் அடுத்து அவர்கள் வாழ்க்கையில் என்ன என்ற வினாவை ஆவலாய் எழுப்பியது, “அடுத்து என்ன பண்ண போறாங்களாம்?”

“குந்தவை அவங்க அப்பா வேலை பார்த்த இடத்திற்கு அருகிலேயே வானதிக்கும் வேலைக்கு சொல்லி இருக்காளாம். நாளைக்கு ஊருக்கு கிளம்புறாங்க.” என்று நீலா சொன்னதிலிருந்து வானதியிடம் பேசிட வேண்டுமென நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வானதி அவனை நாசுக்காய் தவிர்த்து அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். இன்னொரு முறை தவறு செய்த பிள்ளை போல அவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்க விருப்பமில்லை அவளுக்கு.

“வானதி என்ன தடவிட்டு இருக்க? நீ போய் துணியெல்லாம் எடுத்து வை. காலையில் வெயிலுக்கு முன்னாடியே கிளம்பிடுவோம். நான் பிள்ளைக்கு ஊட்டி விடுறேன்.” என்று சுமதி வந்து ஒரு பிள்ளையை தூக்கிக் கொள்ள, குந்தவை மற்றொரு பிள்ளையை தூக்கிக் கொண்டு தன் அன்னையை தொடர்ந்தாள். வானதியிடம் தெரிந்த மாற்றத்திற்கு காரணமான ராஜானிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டுப் பார்ப்போமா என்றெழுந்த எண்ணத்தை கூட வானதியின் தன்மானம் கருதி ஒதுக்கிவிட்டாள் குந்தவை. ராஜன் எவ்வளவு தெளிவாய் இருந்தாலும் அவனிடம் வானதியை பற்றி பேசுவது தேவையற்றது தானே… 

பிள்ளைகள் நகர்ந்ததும் வானதியிடம் பேச முடியுமா என்பது போல ராஜன் பார்க்க, அவனை காணாதது போல குந்தவையின் அறைக்குள் புகுந்து கொண்டாள் வானதி. ராஜனும் வேறு வழியின்றி கதிரவனுடன் பேச்சை தொடர்ந்தான்.

***

வெளியே வேடிக்கை காட்டிக்கொண்டே பிள்ளைகளுக்கு உணவூட்டிய அன்னையிடம், “வரவர இந்த குட்டீஸோட சேட்டை அதிகமாதுமா… இங்க வந்ததும் செல்லம் கூடிப் போச்சு. எல்லோரும் இவங்க கேக்குறதை உடனே கொடுத்திடுறாங்களா... பிடிவாதமும் அதிகமாகிடுச்சு. நாளையிலிருந்து தனியா நீ எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல.” இடுப்பிலிருந்து நழுவி கீழே இறங்க முற்பட்ட அறிவழகியை முறைத்தபடியே முறையிட்டாள் குந்தவை.

“அங்க போனதும் மாத்திடலாம்டி... ஊருக்கு கிளம்பும் போது வானதியையும் சேர்த்து கூட்டிட்டு போறேன்னு சம்பந்திகிட்ட சொன்னதும் உன் மாமனார் தனியா போகவேண்டாம் உன்னையும் மாப்பிள்ளையையும் அனுப்புறேன்னு சொன்னாரு. மாப்பிள்ளைக்கு எதுக்கு அலைச்சல் நாங்களே போயிடுறோம் குந்தவை. நீ உன் மாமனார்கிட்ட சொல்லேன். அவர் அப்படி அக்கறையில் சொல்லும் போது முடியாதுன்னு சொல்ல முடியல. ஆனா மாப்பிள்ளை நமக்கு நிறைய செஞ்சிட்டாருடி. அவரை சும்மா சும்மா அலைய வைக்கக் கூடாது.”

“அம்மாவுக்கும் மூத்த பொண்ணுக்கும் எங்கிருந்து திடீர் ஞானம் வந்துச்சுன்னு தெரியல.”

“ம்ச்... நீ தானடி வானதியை அனுப்புறன் வீட்டுக்கு கூட்டிட்டு போன்னு சொல்லிட்டே இருந்த. அதுதான் இங்கிருந்து போகும் போதே கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன். எனக்கும் பசங்க இல்லாம அங்க தனியா இருக்க என்னவோ போல இருக்கு.”

“என்னமோ மரியாதையை தக்கவச்சிகிட்டா சரி. மாமா என்கிட்ட முன்னாடியே இங்கிருந்து நான் தான் வானதியை வீட்டுக்கு கொண்டுபோய் விடணும்னு சொல்லிட்டாங்க. அதை மீறமுடியாது. வானதி நாளை மறுநாளிலிருந்து வேலைக்கு போவா... அவளை கிளப்ப தயாரா இருந்துக்கோ. நாளைக்கு எவ்வளவு வேலையிருக்குன்னு குணா அண்ணனை கேட்டுட்டு அதற்கு தகுந்தமாதிரி அவனும் நானும் அங்க தங்குறோம். என்னால அங்க ரொம்ப நாள் தங்க முடியாது. படிப்புக்கு தகுந்த வேலையை இப்போவே தேட ஆரம்பிக்கணும்.”

“என்னது வேலைக்கா? உன் மாமியார் மாமனார்கிட்ட சொல்லிட்டீயா? மாப்பிள்ளை ஒத்துக்கிட்டாரா?”

“உன் மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லிடுவானா என்ன!” என்று புருவத்தை உயர்த்தியவள், அறிவழகிக்கு உணவு ஊட்டிக்கொண்டே, “எங்க வேலைக்கு போறதுன்னு இன்னும் முடிவு பண்ணல. முடிவானதும் அத்தை மாமாகிட்ட நான் பேசிக்கிறேன். நீ தேவையில்லாம எதையாவது உளறி வைக்காத.”

“என்னடி மாப்பிள்ளையை இப்படி பேசுற... இதெல்லாம் தப்பு. மரியாதை கொடுத்து பேசு.”

“ம்மா... நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற... அவனை இப்படித் தான் கூப்பிடுவேன்னு இங்க எல்லோருக்கும் தெரியும் ஆனா யாருமே எதுவும் சொன்னதில்லை. நீயும் வானதியும் தான் குதிக்கிறீங்க. நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை எப்படி சரிபண்றதுன்னு யோசி. வானதிக்கு மாப்பிள்ளை பார்க்கவான்னு மாமா கேட்டுட்டு இருக்காங்க. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது. நீ அவகிட்ட பக்குவமா பேசு. நான் பேசுனா அவள் பதிலுக்கு ஏதாவது பேசுவா நான் திட்டிடுற மாதிரி ஆகிடும். அப்புறம் அவள் மூக்குறிஞ்ச ஆரம்பிச்சிடுவா.”

“மாப்பிள்ளையா? இன்னொரு கல்யாணமா? புரிஞ்சி தான் பேசுறியா நீ? ரெண்டு புள்ளை இருக்குடி. யார் கட்டிக்க ஒத்துப்பா? அப்படியே ஒத்துகிட்டாலும் நம்ம புள்ளைங்களை முழு மனசோட ஏத்துப்பாங்களா? பசங்களை தன்னோட பசங்க மாதிரி வளர்ப்பாங்களா? எனக்கு பயமா இருக்கு குந்தவை.”

“அதெல்லாம் யோசிக்காம நான் சரின்னு சொல்லுவேன்னு நினைக்கிறீயா? இல்லை இங்க தான் எல்லோரும் அப்படியே விட்டுருவாங்களா? வானதி காலம் முழுக்க இப்படியே தனியா இருந்திடனும்னு அவசியமில்லையே. அவளுக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சி கொடுக்கிறது தான் சரியா வரும். அதோட பசங்களுக்கு ஒண்ணுன்னா உன் மாப்பிள்ளை முன்னாடி வந்து நிப்பான். மாமாவை பத்தி நான் சொல்லனும்னு அவசியமே இல்லை. இந்த முறை தெளிவா விசாரிச்சு வானதியோட முழு விருப்பத்தோட யோசிச்சு செய்யணும். அவளுக்கு நம்பிக்கை வரணும் அப்புறம் தான் கல்யாணம் எல்லாம்... நீ அவகிட்ட இதை பத்தி பேச்சு கொடுத்து பாரு. அதுக்கு தான் உன்கிட்ட முன்னாடியே தகவல் சொல்றேன்.” குந்தவை நம்பிக்கையுடன் அழுத்தமாய் சொல்ல, சுமதிக்கும் வானதிக்கும் ஒரு வாழ்வு அமைந்தால் நன்றாய் இருக்குமே என்ற ஆவல் பிறந்தது. பெற்ற உள்ளம் கேடு நினைத்துவிடுமா என்ன...

“நல்லது நடந்தா சரி... சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.”

“வயலுக்கு போயிருக்காரு... வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை இலகுவாய் சொல்ல, இறுக்கம் சற்று தளர்ந்தது. ஆனால் தச்சன் சற்று நேரத்திலேயே இறுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தான். விருந்தின் வேலை பளுவில் அனைவருமே சற்று ஓய்வாய் அமர்ந்திருக்க பிள்ளைகள் இருவரும் உறங்கியிருந்தனர்.

“ஏன் இவ்வளவு நேரமாச்சு தச்சா? நேரமா சாப்பிட்டுட்டு சீக்கிரம் தூங்கலாம்ல? காலையில் சீக்கிரமே கிளம்பனும்.”

“மேட்டூர் அணையை சீக்கிரம் திறக்கிறதுக்கு வாய்ப்பிருக்குற மாதிரி தெரியுது. அதுதான் இப்போவே நம்ம வயலுக்கு வர வாய்க்கால் வரப்பை எல்லாம் சரிபண்ணி வச்சிட்டா வசதியா இருக்கும்னு பார்த்தேன்.” நீலா கேள்வி எழுப்பவுமே உற்சாகமாய் பதில் கூறினான் தச்சன்.

“சீக்கிரமே திறந்துவிட்டா இந்த முறையாவது கடைமடை வரை அறுவடைக்கு முன்னாடி தண்ணி பாயும். நமக்கும் விளைச்சல் அமோகமா இருக்கும்.” என்று நீலா பெருமூச்சிழுக்க,

“நாம தூர்வாரினா மட்டும் போதாது. ஆறு, குளம், ஏரி, கால்வாய் எல்லாத்தையும் தூர்வாரினா தான் கடைமடை வரை தண்ணி பாயும். அமைச்சர் முதல் கவுன்சிலர், அதிகாரி வரை ஊருக்குள் தண்ணி வர இடத்தை மட்டும் தூர்வாரிட்டு முழுசா தூர்வாரின மாதிரி கணக்கு காண்பிச்சு பணம் பார்த்திடுறாங்க. கடைமட்டத்தில் இருக்குறவங்க தான் அவர்களோட பேராசைக்கு பலியாகுறாங்க.” என்று அன்பரசனும் தன் வருத்தத்தை தெரிவிக்க, ராஜனின் மனம் தன்னைப்போல வானதியின் நிலையை நினைவு கூர்ந்தது.

“இதுக்கு எதுவுமே செய்ய முடியாதா? இப்படி காசு பார்க்கிறவங்களும் சாப்பிடுறாங்க தானே! அதை விளைவிப்பவர்கள் வயிற்றை காயப்போட்டு அவங்க வாழ்வாதாரத்தில் கைவச்சா நாளைக்கு எப்படி உணவு கிடைக்கும்? எல்லாத்துக்கும் ஒரு யூனியன் இருக்குற மாதிரி இதுக்கும் ஏதாவது இருக்குமே அது மூலமா இதற்கு தீர்வு காணலாமே!” என்று ராஜன் யோசனை கூற, தச்சன் தன் தந்தையை பார்த்தான்.

“இருக்கு ராஜா. ஆனால் எதுவும் செய்ய முடியல. விதவிதமா போராட்டம் எல்லாம் பண்ணித்தான் பார்க்கிறாங்க. நான் கூட ரெண்டு முறை கண்டனப் போராட்டத்தில் கலந்துகிட்டேன். அந்த நேரம் நம்மல சமாதானம் செய்ய வாக்குறுதிகள் கொடுக்கிறாங்க. ஆனா அதெல்லாம் தண்ணியில் போட்ட கல்லா அப்படியே கிடக்கு. பூனைக்கு யார் மணிக்கட்டுறதுன்னு தான் தெரியல... இதை பத்தி பேசுனா பேசிகிட்டே இருக்கலாம். சீக்கிரம் சாப்பிட்டுட்டு போய் தூங்குங்க எல்லோரும்.” என்று அன்பரசன் அதோடு அந்த பேச்சை முடித்து நகர, நீலா ஆர்வமாய் தச்சன் கையை சுரண்டினார்.

“நாளைக்கு வயலுக்கு போகும் போது ராஜனையும் கூட்டிட்டு போடா... அவனும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கட்டும். இனிமே நீங்க ரெண்டு பேரும் தான் இதெல்லாத்தையும் பார்த்துக்கணும். உனக்கு துணை அவன், அவனுக்கு துணை நீதான்.” என்று சொன்னவுடன் தச்சனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே... குந்தவை மட்டுமே அதை கவனித்தாள். 

இதற்கு இன்றே ஒரு தீர்வை கண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுடனான தனிமைக்கு அவள் காத்திருக்க அது விரைவிலேயே நடந்தது. உண்டுவிட்டு அறைக்கு வந்தவன் சோர்வாய் சட்டையை கழற்றி வீசிவிட்டு மெத்தையில் அப்படியே குப்புற விழுந்தான். அவனைத் தொடர்ந்து வந்த குந்தவை கதவடைத்து விளக்கை அணைத்துவிட்டு, அவன் முதுகில் முகம் புதைத்து அவனை அணைத்தார் போல அவன் மீதே குப்புற படுக்க, தச்சனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

‘என்னடா அதிசயம்...’ என்று நினைத்தவள் தன் விரலால் அவன் முதுகை சுரண்ட மறுப்பாய் உடலை அசைத்தானே ஒழிய வாய் திறக்கவில்லை.

“பாருடா சாரை… ரொம்ப புகு பண்றாரு.” சத்தமாய் சொன்னவள் அவனிடையை கிள்ள புருவச் சுழிப்புடன் அவள் கையை பிடித்தவன், அவளை தன்மீதிருந்து உதறி திரும்பிப்படுத்து முறைத்தான்.

“என்னடி வேணும் உனக்கு?”

அவன் மார்பில் கையூன்றி குறும்பாய் கண்சிமிட்டியவள், “ஒரு உம்மா வேணும்.” என்று சொல்ல, சிரித்துவிட்டான் தச்சன். அவ்வளவு தான் அவனது முகத்திருப்பலும் வருத்தமும்… இருந்த இடம் தெரியாமல் பின்னுக்கு சென்றுவிட்டது.

“ஏய் என்னடி இப்படி பேசுற? என்னமோ ஆச்சு உனக்கு?”

“பின்ன என்னவாம்… பிரியாணியை மொத்தமா மறந்துட்ட… ரெண்டு நாளா நீ வேற ஏதோ சிந்தனையிலேயே இருக்க.”

“அதை மறப்பேனா நானு…” என்று மறுத்தவன் மறக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு தான் அவளை விட்டு விலகினான்.

அவளின் சிகை கோதியபடி அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான், “தயிர்சாதமா மாறிட்டீயா என்ன? இவ்வளவு நிதானமா இருக்க… அதுவும் என்னை திட்டாம.”

முகத்தை அவன் நெஞ்சத்திலிருந்து உயர்த்தியவள் அவனின் மீசையை வலிக்கும்படி இழுத்து விடுவித்தாள், “ஏன் மதியம் வாங்குனது மறந்து போச்சா? இல்லை இன்னைக்கு டோஸ் பத்தலையா?” 

“ஷ்… போதும்டி… தெரியாம கேட்டுட்டேன். டேஸ்டான பிரியாணியை கொடுத்துட்டு அதை மறக்கடிக்கிற மாதிரி பாகற்காயை கொடுத்திடாத.”

“நான் கொடுக்கிறது இருக்கட்டும். நீ ஏன் அப்பப்போ இஞ்சியை தின்ன மாதிரி சுத்திட்டு இருக்க? மதியம் பேசினோம் தானே. இன்னும் என்ன பிரச்சனை உனக்கு?”

“ஹூம்… அதை நியாபகப்படுத்தாத.”

“டேய்… என்னை பேசவைக்காம என்னனு நீயே சொல்லிடு.”

“என்னத்தை சொல்லணும்? அதுதான் சொன்னேனே நமக்கு கல்யாண விருந்துன்னு சொல்லிட்டு இந்த நீலாவும் அன்பரசனும் அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்தாங்க.”

“சின்ன பிள்ளை மாதிரி புரிஞ்சிக்காம பேசாத. இன்னைக்கு உங்க அண்ணனுக்கு பிறந்தநாளாம். அதுவும் எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்காங்க. அப்போ கொண்டாடத் தான் செய்வாங்க.”

“கொண்டாடட்டும் நான் வேணாம்னு சொல்லல… ஆனால்…” அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த தச்சன் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டான்.

“என்ன ஆனால்? குற்றம் சொல்ல காரணம் கிடைக்கலையோ? நீ பண்றதை எல்லாம் பார்த்தா சிரிப்பு தான்டா வருது எனக்கு.”

“வரும்டி வரும். உனக்கென்ன… உன்னையா இத்தனை நாள் தூக்கிவச்சி கொண்டாடிட்டு கீழ போட்டு உடைச்சாங்க?” தச்சனின் சொல்லிலும் முகத்திலும் கசப்பு பரவியிருக்க, அவனது எண்ணங்கள் செல்லும் திக்கறிந்து அவனை சமாதானம் செய்யவென குந்தவை தன்னை தானே சாந்தப்படுத்திக் கொண்டாள். 

“என்னத்தை உடைச்சிட்டாங்க இப்போ? பிரச்சனைன்னு வந்தப்போ அத்தானை கையாள்வதில் சின்ன பிசகு ஏற்பட்டுடுச்சு. அதை சரிபண்ற நோக்கத்தோட உங்களை எதுவும் சொல்லாம வளர்த்திருக்காங்க. அதுதான் உனக்கு உறுத்துதோ? திரும்பத் திரும்ப தேவையில்லாததை கற்பனை பண்ணி உன்னை நீயே எரிச்சல்படுத்திக்கிற.”

“நான் என்ன வேணும்னேவா அவன் மேல விரோதத்தை வளர்த்திட்டு இருக்கேன். என்னவோ கடுப்பா வருதுடி. வந்தவன் முன்னாடியே வந்து தொலைச்சிருக்கலாம்.” 

“ஏன்? அவங்க இப்போ வந்தது தான் உனக்கு பிரச்சனையா?” என்று குந்தவை கேட்க, காரணம் தேடிபிடித்து அவளிடம் வம்படியாய் முறையிட்டான் தச்சன்.

“நீலா சொன்னதை நீயும் கேட்டியே… நான் அவனை வயலுக்கு கூட்டிட்டு போகணுமாம்.”

“அதுக்கு என்ன? கூட்டிட்டு போ.”

“முடியாது.”

“என்னடா பிரச்சனை உனக்கு? நீதான் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துட்டு போயிடுவீயே. இப்போவும் அதையே செய். அண்ணன் வந்துட்டாங்க. இனி நம்ம கூடவே நமக்கு வழிகாட்டியா இருப்பாங்க, தோள் கொடுப்பாங்கன்னு நினைச்சிக்கிட்டு போயிட்டே இரு. உன் வேலையைப் பாரு. அவங்க அவங்க வேலையை பார்ப்பாங்க. அவங்க உன் எதிரி இல்லை உன் அண்ணன்.”

“நான் எப்போ அவனை எதிரின்னு சொன்னேன். என்னமோ அவன் வந்ததும் எல்லாமே என்னைவிட்டு போகிற மாதிரி தோணுது. எப்போதும் எதையாவது எடக்கா சொல்ற அப்பா கூட என்னை எதுவுமே சொல்லல… 

எல்லாமே மாறின மாதிரி இருக்கு. இதுல நான் அவனை வயலுக்கு கூட்டிட்டு போகணுமாம். இன்னைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லுவாங்க. நாளைக்கே அவனே பார்க்கட்டும் நீ அண்ணனுக்கு ஒத்தாசையா இருன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. என்னால முடியாது. நேத்திக்கு வந்துட்டு நீலாவையும் நிலத்தையும் அவன் பங்குப்போட்டுக்கிறது எனக்கு பிடிக்கல. நான் ஜெய்க்கிறேன் இல்லை அது வேற விஷயம். ஆனா என்னோடது எனக்கானது மட்டும் தான்.” என்று அழுத்தமாய் சொன்ன இந்த தச்சன் புதிதாய் தெரிந்தான் குந்தவைக்கு.

தச்சன் பிடிவாதக்காரன் என்பது குந்தவை முன்னரே அறிந்தது தான் ஆனால் எவ்வளவு பிடிவாதம் பிடித்தாலும் மணமான பின் அவள் சொல்பேச்சை கேட்டு தன்னைத்தானே மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறான் என்பதும் அவள் அறிந்ததே. இப்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம்… அவள் சொல்வது எதுவும் அவன் மண்டையில் ஏறுவது போலவே தெரியவில்லையே. சொன்னதையே வேறு வேறு விதமாய் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறானே என்ற கவலை பிறக்க குந்தவை அசதியாய் அவனை பார்த்து வைத்தாள்.

“என்னடி சோர்வா இருக்கா? தூங்கு. நீயும் காலையிலிருந்து வீட்டுக்கும் கொல்லைக்கும் அலைஞ்சிட்டே இருந்த.” என்று பரிவாய் சொல்லி, அவள் முதுகை இதமாய் வருடிவிட, அவன் நெஞ்சத்திலே முகம் புதைத்து கண்களை மூடிக்கொண்டாள் குந்தவை.

“இப்படி இருக்காதடா. இது நல்லதில்லை. அத்தான் உன்கூட பிறந்தவங்க. உனக்கு அத்தைகிட்ட என்ன உரிமை இருக்கோ அதே உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதை நீ குறைசொல்ல முடியாது. அத்தானும் வேணும்னே எதுவும் செய்யல. அந்த வயசில் அவங்களுக்கு அப்படி தோணியிருக்க கூடாதுதான் ஆனால் அதுக்காக என்ன செய்ய முடியும். பெரிய குடும்பம் இருந்தும் ஊர்ஊரா சுற்றி கஷ்டப்பட்டு இப்போ தான் வீடுவந்து சேர்ந்திருக்காங்க. அவங்களை உனக்கு போட்டியா பார்க்காம திவ்யா அண்ணியை எப்படி பார்க்கிறீயோ அப்படி பாரு. அண்ணி அத்தானை அவங்க அண்ணனா ஏத்துகிட்டாங்க நீதான் முறுக்கிக்கிட்டு இருக்க.” என்று என்றுமில்லாத நிதானத்துடம் அவனுக்கு எடுத்துக்கூறியவள் ‘இதற்கு மேல் இவனிடம் மல்லுகட்ட முடியாது.’ என்ற எண்ணத்தோடு பேச்சை முடித்துக்கொண்டாள். 

தச்சன் அவள் சொன்னதை அசைபோட்டபடி எப்போது தூங்கினானோ காலையில் குந்தவை அவளை உசுப்பவும் தான் எழுந்தான். 

“சீக்கிரம் கிளம்பு. பசங்க தூங்கிட்டு இருக்கும் போதே நாம கிளம்பினா தான் சரியா இருக்கும். இல்லைனா அழுக ஆரம்பிச்சிடுவாங்க.” என்று அவனை அவசரப்படுத்த, தச்சன் விரைவாய் குளித்துவிட்டு கிளம்பினான்.

ஏற்கனவே கார் சொல்லியிருக்க அதுவும் நேரமே வந்து நின்றது. உறங்கும் பிள்ளையை தோளில் போட்டுக்கொண்டு வானதி பையை தூக்க எங்கிருந்தோ வேகமாய் வந்து அவளுக்கு உதவினான் ராஜராஜன்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே எடுத்துப்பேன்.” என்று வானதி விழியை உயர்த்தாமல் நிலத்தில் பதித்து மறுக்க, அவளை சங்கடமாய் பார்த்தான் ராஜன்.

“நேத்து நீங்க அழுதது எனக்கு சங்கடமா ஆகிடுச்சு. உங்களை குறைவா தாழ்த்திப் பேசனும்னு பேசலைங்க. பொதுவா சொன்னேன்.  ஆனால் சொன்ன விஷயம் சரிதாங்க. குந்தவையை நம்பியோ இல்லை உங்க அம்மாவை நம்பியோ உங்க வாழ்க்கை இல்லை. நீங்க அவங்களை சார்ந்து இருக்கலாம் தப்பில்லை ஆனால் அவங்க நிழலிலேயே வாழ்க்கை முழுதும் இருக்கனும்னு முடிவு பண்ணா உங்க வாழ்க்கையை, ஆசையை தொலைச்சிடுவீங்க. அவங்க கைப்பாவையா மாறினாலும் மாறிடுவீங்க. உங்களுக்குன்னு தனிப்பட்டது இருக்காது. அவங்க பேச்சை தான் கேட்கணும். யோசிச்சிக்கோங்க. வேலைக்கு போகப்போறீங்கன்னு அம்மா சொன்னாங்க. நீங்க தைரியமா போயிட்டு வாங்க. அப்புறம் தானா நிமிர்ந்திடுவீங்க.” என்று ஒரே மூச்சில் சொல்ல, ஓசையின்றி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

“என்னங்க அப்படி பார்க்கிறீங்க?”

“எப்போதும் நீங்க தான் பேசுறீங்க. நான் கேட்டுட்டு இருக்கேன். இப்போவும் அதே தான்… நீங்க சொன்னதை நான் கேட்டுகிட்டேன்.” வானதி.

‘என்ன மாதிரியான பதில் இது?’ என்ற கேள்வியோடு ராஜன் காரை நோக்கிச் செல்லும் வானதியை பார்த்து நிற்க, சற்று தள்ளிநின்று அவனையே யோசனையுடன் பார்த்து நின்றார் அன்பரசன். மற்ற அனைவரும் ஏற்கனவே விழித்திருந்த அறிவழகனுக்கு முத்தங்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.

“ராஜா பேக்கை காரில் வைக்காம என்ன யோசிச்சிட்டு இருக்க?” அன்பரசன் நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுக்க, தலையை சிலுப்பிக் கொண்டவன் பேக்கை காரில் வைத்துவிட்டு தள்ளி நின்றுகொண்டான்.

பெண்கள் மூவரும் பின்னே அமர்ந்திருக்க தச்சன் முன்னே ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்தான். 

“பார்த்து பத்திரமா போங்க. தச்சா பார்த்து கூட்டிட்டு போ.” என்று சொன்ன நீலாவிடம் தச்சன் தலையசைக்க, கார் மெல்ல நகர்ந்தது. 

ராஜனின் பார்வை குழப்பத்துடன் கதவோரம் அமர்ந்திருந்த வானதி மீது பதிய, அவளும் அவனைத் தான் பார்த்தாள். கார் வேகமெடுக்கும் முன் பொத்தம்போதுவாய் கையசைத்தவள், ராஜனிடம் சென்றுவருகிறேன் என்பது போல தலையசைக்க, ராஜனின் தலையும் தானாய் அசைந்து இதழில் முறுவல் எட்டிப்பார்த்தது.

No comments:

Post a Comment

Most Popular