Menu

Search This Blog

Theeyumillai Pugaiyumillai 45 – Deepababu

 


*45* 


முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவள், "உஃப்... மாமா! இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதைப்பற்றி பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்!" என்றாள் வெட்கப் புன்னகையோடு.

குழப்பத்தோடு அவளை கூர்ந்தவன், "அப்படியா யார்?" என கேட்டான்.

"ஆங்... உங்கள் பாட்டியும், என் பாட்டியும்!" என வெடுக்கென்று சொன்னாள் சுஹா.

அவளையே பாவமாகப் பார்த்தான் கிருஷ்.

"இந்த அமுல் பேபி லுக்கெல்லாம் என்னிடம் வேண்டாம். இங்கே பார் மாமா... இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு. இதிலும் உன்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால், நீ மாக்கான் என்பதை நீயே ஒத்துக்கொள்ள வேண்டும்!" என சுட்டு விரல் நீட்டி எச்சரித்தாள்.

ஒரு கணம் திருதிருவென்று விழித்தவன், சரியென்று சம்மதமாக தலையசைத்தான்.

'கூல் சுஹா... நீயும் டென்ஷனாகி அவனையும் படுத்தாதே, இது மகிழ்ச்சியான விஷயம். அவனும் தெரிந்து ஆனந்தப்படும் அளவுக்கு நிதானமாக சொல்!' என்று தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

அவன் விழிகளை நேராகப் பார்த்தவள், "வரப்போகும் நபர் வெளியூரிலிருந்தோ, வேறு வீட்டிலிருந்தோ வரவில்லை... இன்னும் ஒன்பது மாதத்தில் என் வயிற்றிலிருந்து வரப்போகிறார்!" என்று அவன் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள்.

மெல்ல விஷயம் அவன் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்கி அவனை சிலிர்க்கச் செய்தது, முகமெல்லாம் விகசிக்க அவளை ஆவலாகப் பார்த்தான் கிருஷ்.

"நிஜமாகவா?" என்று குரல் கரகரக்க வினவினான்.

கனிவுடன் அவனை நோக்கி தன் இரு கரங்களையும் நீட்டினாள் சுஹா. அவன் அதற்குள் தஞ்சம் புக, தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

"யெஸ்... நான் அம்மாவாக போகிறேன், என் செல்லக்குட்டி கிருஷ் அப்பாவாக போகிறான்!" என கூறி உவகையுடன் சிரித்தாள் சுஹா.

"ஹு... ஐ ஆம் ஸோ ஹாப்பி சுஹி! என்னால் பேசவே முடியவில்லை, என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. ஆனால் நம் வீட்டிற்கு நமக்கே நமக்கென்று ஒரு குட்டிப்பாப்பு வரப்போகிறது. ஓ காட்! இப்பொழுது நான் செய்ய வேண்டும்... என்ன செய்வது?" என முதலில் தடுமாறியவன் பின் அவளை இறுக கட்டியணைத்து முத்தமழை பொழிய ஆரம்பித்தான்.

"ஏய்... ஏய்... மம்முகுட்டி ரிலாக்ஸ் ரிலாக்ஸ். உன் உணர்ச்சியை எல்லாம் அப்படியே என் மேல் கொட்டாதே... இனி என்னை கண்டபடி இழுப்பது, தள்ளுவது, மடியில் வந்து தொப்பென்று தலையை போடுவது இதையெல்லாம் அவாய்ட் பண்ண வேண்டும் புரிகிறதா?" என்று சுஹா விளக்க, கிருஷின் முகம் விழுந்தது.

"என்ன அதற்குள் ஃப்யூஸ் போய்விட்டது?"

"சிம்பிளாக சொல்லிவிடேன் இனி என் பக்கத்தில் வராதேடா, நான் என் குழந்தையை மட்டும் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், உன்னை பற்றி எனக்கு துளியும் அக்கறையில்லை என்று!" என எரிச்சலுடன் மொழிந்தான்.

"டேய் லூசு... என் குழந்தையா? அப்பொழுது அதற்கு அப்பா யார், நம் குழந்தை என்று சொல்லிப் பழகு!" என அதட்டியவள், "குழந்தை வந்து விட்டால் உங்களை ஒதுக்கி விடுவேன் என்று நான் சொன்னேனா... நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தானே சொன்னேன். பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடுங்கள், இனி நான் எதுவும் சொல்லவில்லை. நாளைப் பின்னே எதுவும் பிரச்சினை என்றால் என்னிடம் சண்டைக்கு வரக் கூடாது. அதையும் இப்பொழுதே சொல்லி விடுகிறேன்!" என்றவள் படபடவென்று பேச, கோபத்துடன் கிருஷ் வெளியேற முயன்றான்.

அவன் கரம்பற்றி தடுத்தவள், "முதலில் உட்காருடா, அதென்ன பழக்கம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கோபம் வந்தால் துரை வேகமாக எழுந்து வெளியேறப் பார்க்கிறீர்கள்... பிச்சுப்பிடுவேன் பிச்சி!" என்று முறைத்தாள்.

அவன் உர்ரென்றே அமர்ந்திருக்கவும், "சரி நான் என்ன செய்யட்டும் என்று நீங்களே சொல்லுங்கள்!" என்றாள் அமைதியாக.

"இனிமேல் எதையுமே என்னிடம் சொல்ல மாட்டேன் என்று சொல்லாதே, எல்லா விவரங்களையும் நீ என்னிடம் சொல்ல தான் வேண்டும். அப்பொழுது தானே குழந்தை பத்திரமாக ஆரோக்கியமாக வயிற்றில் வளரும். என்னவோ ஆகட்டும் என்று சொல்லாதே, எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும்!" என்றவன் கண்கலங்க, அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்து தோளில் சாய்ந்துக் கொண்ட சுஹா அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

"சாரிடா மாமா... நானும் அவசரப்பட்டு அப்படி பேசியிருக்க கூடாது, இனி கவனமாக பேசுகிறேன். டோன்ட் வொர்ரி... நம் குழந்தை நல்லபடியாக தான் பிறப்பான். அதேபோல் குழந்தை மேல் உள்ள பாசத்தில் நான் உன்னை கவனிக்காமல் விட்டு விடுவேனோ என்றெண்ணி சஞ்சலப்பட வேண்டாம் என்றும் என் முதற் குழந்தை கிருஷ்குட்டி தான், மற்ற குழந்தைகள் எல்லாம் அதற்கு அடுத்த வரிசையில் தான் நிற்பார்கள்!" என்று அவனை மலரச் செய்தவள், "சரி இந்த விஷயத்தை சதாப்பாவிடமும், என் அப்பா, அம்மாவிடமும் சொல்ல வேண்டும். அதன் பின் டாக்டரிடம் ஒரு முறை ஃபார்மல் செக்கப்புக்கு சென்று விட்டமின் டேப்ளட்ஸ் வாங்கி வர வேண்டும். அப்புறம் பெரியவர்களிடம் இந்த மாதிரி நேரத்தில் எப்படி எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்!" என பெரிய லிஸ்ட்டே போட்டாள்.

"சுஹி! இனிமேல் நமக்கு நிறைய வேலையிருக்கிறது இல்லை?" என்று கன்னத்தில் கைவைத்து யோசித்தான் கிருஷ்.

"ஹஹா... ஆரம்பிக்கும் பொழுதே தலைவருக்கு களைப்பாக இருக்கிறதா? இன்னும் நாளை பிள்ளை பிறந்து வால்தனம் செய்யும் பொழுது என்ன செய்வீர்கள்? அதுவும் உங்கள் பையன் நிச்சயம் அறுந்த வாலாக தான் இருப்பான்!" என்று லயித்து சிரித்தாள்.

"ஐயோ... வேண்டாம் வேண்டாம், நீ தயவுசெய்து உன்னை மாதிரியே பிள்ளை பெற்றுக் கொடு. அப்பொழுது தான் பிரச்சினையில்லாமல் நாம் ரிலாக்ஸாக இருக்க முடியும்!"

"பார்க்கலாம்... பார்க்கலாம் கடவுள் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறாரோ? நீங்கள் என்னை படுத்துவதற்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டுமென்று நினைத்தால், அசப்பில் உங்கள் காப்பியை தான் எனக்கு குழந்தையாக பிறக்க வைப்பார்!" என்று கண்சிமிட்டினாள்.

"ஓ காட்ஜி! நோ... நோ... செய்த தவறையெல்லாம் ஒத்துக்கொண்டு உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன். ப்ளீஸ்... என்னை போல் இல்லாமல் சுஹா போல் சமத்துப் பிள்ளையாக கொடுத்து விடு!" என்று மேலே பார்த்து வேண்டினான் கிருஷ்.

"ஹலோ சாரே... நீங்கள் செய்கின்ற குறும்புகள் ஒன்றா இரண்டா? உங்களால் எத்தனை விஷயத்தை தான் ஞாபகம் வைத்திருந்து பாவ மன்னிப்பு கேட்க முடியும்?" என்று கேலி செய்தாள் சுஹா.

"ப்ச்... நீ வேற சும்மா இரு, அட்லீஸ்ட் இப்பொழுது செய்ததையாவது முதல் மன்னிப்பாக கேட்டு கவுன்டிங்கை ஆரம்பித்து விடுவேன் இல்லை?" என்றான் வேகமாக.

நெற்றி சுருக்கியவள், "இப்பொழுது என்ன வம்பு செய்தீர்கள்? என்னிடம் கோபித்துக் கொண்டீர்கள் அவ்வளவு தானே?" என புரியாமல் கேட்டாள்.

அவளை தயக்கத்தோடு திருட்டுப்பார்வை பார்த்தவன், "இல்லை... உனக்கு தெரியாமல் ஒன்று செய்தேன்!" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

"என்ன?" என்றாள் கண்கள் இடுங்க.

"இல்லை... நீ முதலில் வெறும் சோர்வு, குமட்டல் என்று சொன்னப்பொழுது உண்மையாகவே விஷயம் என்னவென்று எனக்கு சரியாக புரியவில்லை தான். ஆனால்... ஸ்வீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னாய் பார், அப்பொழுதே நீ பிரெக்னென்டாக இருக்கிறாய் என்பது புரிந்து எனக்கு மிகவும் சந்தோசமாகி விட்டது!" என ஈயென்று அனைத்து பல்லையும் காட்டினான் கிருஷ்.

"அப்புறம் ஏன்டா புரியாதவன் மாதிரியே ரியாக்ஷன் கொடுத்தாய்?" என்று கைவிரல்களை மடக்கினாள் சுஹா.

"அது... அது வந்து... எனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, எப்பொழுதுமே உனக்கு என் மீது கடுப்பு அதிகமாகும் பொழுது பயங்கரமாக டென்ஷனாகி என்னை கண்டபடி திட்டுவாய் பார், அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நன்றாக என்ஜாய் பண்ணுவேன். அதனால் தான் ஒன்றுமே புரியாத மாதிரி நீ மேலும் டென்ஷனாகி திட்டும் அளவுக்கு நடித்தேன். அப்பொழுது நீ எவ்வளவு அழகாக இருந்தாய் தெரியுமா?" என முதலில் மென்று விழுங்கியவன், இறுதியில் ரசனையுடன் அவளை பாராட்டிப் பேச, சரமாறியாக அவளிடம் அடி வாங்க ஆரம்பித்தான் கிருஷ்.

"யூ இடியட்... உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இந்த நேரத்திலும் என்னிடம் இப்படி விளையாடுவாய்? கண்டிப்பாக சொல்கிறேன் என் சாபம் உன்னை சும்மா விடாது, உன்னை விட அறுந்த வாலாக தான் உனக்கு பையன் பிறக்கும் பார்!" என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

***


ஒரு வருடத்திற்கு பிறகு,

"ஏய் சுஹா... உன் பையனை வந்து பாருடி, உன்னிடம் எத்தனை தடவை சொன்னேன் அவனை என்னிடம் தராதே என்று. பார்... மறுபடியும் என் டீசர்டை நனைத்து வைத்து விட்டான்!" என வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான் கிருஷ்.

"உஃப்... உன் அண்ணா கத்த ஆரம்பித்து விட்டார்டி, முகுந்த் என்ன செய்தானோ தெரியவில்லை. மூன்று மாத குழந்தைக்கு என்ன தெரியும்? அதை கூட டாலரேட் செய்ய தெரிவதில்லை. ஓகே பை!" என்று வைதுவிடம் போன் பேசிக் கொண்டிருந்தவள் லைனை கட் செய்து விட்டு அறைக்குள் விரைந்தாள்.

"என்ன? இப்பொழுது எதற்கு இப்படி ஊரை கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?"

"என்னவா? இங்கே பார்!" என தன் டீசர்டை காண்பித்தான், கழுத்து பகுதியிலிருந்து வயிறு வரை முழுவதுமாக நனைந்திருந்தது.

டெலிவரிக்கு கூட சுஹாவை தாய் வீட்டிற்கு அனுப்பாமல் அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி இங்கேயே வைத்துக் கொண்டான். அவனுடைய குணம் அனைவருக்கும் தெரிந்திருந்ததால் ஒரு நிலைக்கு மேல் யாரும் வற்புறுத்தாமல் அவன் போக்கிற்கே விட்டு விட்டனர். சுந்தரம் தாத்தாவும், மீனாட்சிப் பாட்டியும் வந்து தன் பேரன் மனைவியின் பிரவசத்திற்காக மாதக் கணக்கில் துணையிருந்தனர்.

"இப்பொழுது என்ன? போய் டீசர்டை மாற்றுங்கள், அவனை கொடுங்கள் நான் நாப்பி மாற்றி விடுகிறேன்!" என குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

"அதென்ன இவனுக்கு என் மடியில் படுத்தால் தான் பாத்ரூம் ஞாபகம் வருமா? இல்லை என் மடி தான் இவனுக்கு பாத்ரூம் போல் தோன்றுகிறதா? இவனை நீ என் மடியில் படுக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் இப்படியே தான் செய்கிறான்!" என்று எகிறியவனை கண்டு சிரிப்பு மலர இதழ்கிடையே பூட்டினாள் சுஹா.

தெரிந்தால் அதற்கும் கத்துவான், இந்த வாலுப் பையனும் ஏன் தான் இப்படி செய்கிறானோ? அவன் கத்துவதற்கு ஏற்றார் போல், தினமும் இவன் அவன் உடையை நனைக்க தானே செய்கிறான். மடியை நனைக்க கூடாது என்று தான் உறிஞ்சும் தன்மை கொண்ட சிறிய பெட்டோடு அவன் மடியில் குழந்தையை படுக்க வைக்கிறாள். இருந்தும் முகுந்த் போடும் குதியாட்டத்தில் நேப்பி விலகி, மேலே கன்னாபின்னாவென்று ஏதோ ஒரு பக்கத்தில் அடித்து விடுகிறான்.

டீசர்டை மாற்றியபடி கட்டிலில் அமர்ந்த கிருஷ், "எனக்கென்னவோ உன் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது, தந்தை மகன் உறவு குழந்தை முதற்கொண்டே தொடு உணர்வில் அவனுக்கு தெரிய வேண்டும் என்று இரவு அரைமணி நேரம் கட்டாயமாய் அவனை என் மடியில் போடுகிறாய். மேலே நனைக்கிறான் ஹக்கீஸ் மாதிரி மாட்டி விடலாம் என்று சொன்னால் வெளியே செல்லும் பொழுது சரி, வீட்டிலிருக்கும் பொழுது டைட்டாக போடாமல் காற்றோட்டமாக காட்டன் நேப்பி தான் கட்ட வேண்டும் என்கிறாய். எல்லாமே எனக்கெதிரான சதியாக இருக்கிறதே... நீதான் இவனுக்கு சொல்லிக் கொடுக்கிறாயா?" என கூர் பார்வையுடன் கேட்டான்.

"யோவ் மாமா! கொஞ்சமாவது யோசித்துப் பேசு, மூன்று மாத குழந்தைக்கு நான் என்ன சொல்லிக் கொடுத்து அது உன்னை பழி வாங்க போகிறது!" என முறைத்தவள், "எல்லாம் தன் வினைப் பயன் நான் என்ன செய்ய முடியும்?" என்று தோள்களை குழுக்கினாள்.

"ஓஹோ... நான் உன்னை படுத்தி எடுத்ததற்கு தான் இவன் பிறந்து என்னை வம்பிழுக்கிறான் என்கிறாயா? அப்பொழுது... இவன் செய்யும் சேஷ்டைகளுக்கு யார் பனிஷ்மென்ட் தருவது?"

"ம்... மே பீ இவனுக்கு அடுத்து பிறக்கும் குழந்தையின் கொட்டத்திற்கு இவன் அடங்கி விடுவானோ என்னவோ?" என்று குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்தாள்.

"ஏன் சுஹி... இப்படியே இது செயின் ஆக்ஷன் மாதிரி போய் கொண்டேயிருந்தால், நீ எத்தனை குழந்தை தான் பெற்றுக் கொள்வாய் பாவம்?" என அவளுக்காக போலியாக வருத்தப்பட்டான் கிருஷ்.

"ஐயோ... என் செல்லத்திற்கு தான் என் மேல் எவ்வளவு அக்கறை?" என அவனை தன் மடியில் சாய்த்தவள், "எனக்கென்ன ஒரு நாள் வலியோடு போய் விடும், ஆனால் உங்களை நினைத்தால் தான் எனக்கு கவலையாக இருக்கிறது. காலம் முழுக்க நீங்கள் தானே அவர்களை பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள்!" என்று கூறி கண்ணடித்தாள் சுவாஹனா.

"அம்மா தாயே... வேண்டாம் வேண்டாம், இனிமேல் நான் உன்னிடம் வம்பே பண்ணே மாட்டேன்!" என்று அலறியபடி அவளிடம் சரணடைந்தான் சாய்கிருஷ். 

**சுபம்**

2 comments:

Most Popular