Menu

Search This Blog

Theeyumillai Pugaiyumillai 26 – Deepababu

 


*26*


காரை தெருமுனை தாண்டி நிறுத்திய கிருஷ், யோசனையோடு மொபைலை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்தான்.

கேசவனுடைய நம்பர் நாட் ரீச்சபிள் என வரவும் இதழ் கடித்தவன், சுகந்திக்கு கால் செய்தான்

"ஹலோ! சொல்லுங்க தம்பி எப்படி இருக்கிறீர்கள்?" என நலம் விசாரித்தார் அவர்.

"ம்... நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள், மாமா..." என்று கேட்டு தயக்கத்துடன் நிறுத்தினான்.

"நாங்களும் சுகம்... சுஹாவிடம் எதுவும் பேச வேண்டுமா, அவளை எழுப்பவா?" என்று கேட்டார்.

குடிக்கெட்டது போங்கள்... என மனதில் நினைத்தவன், "இல்லை... இல்லை வேண்டாம்!" என்று அவசரமாக தடுத்தான்.

அவன் வேகம் கண்டு எதிர்முனையில் இருந்தவர் சிரிக்க, "நீங்கள் தூங்கி விட்டீர்களா? நான் எதுவும் தொந்திரவு செய்து விட்டேனா?" என்று லேசான கூச்சத்துடன் வினவினான்.

"சேச்சே... அதெல்லாம் இல்லை, இப்பொழுது தான் கிச்சனை ஒதுங்க வைத்தேன். இனி தான் தூங்கப் போக வேண்டும்!"

சுஹாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கிளம்புவதென்னவோ கிளம்பி விட்டான். ஆனால் சதா கூறியதை போல் தன்னை தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று தற்பொழுது அவனுக்கு தயக்கமாக இருந்தது.

கிருஷ் எந்த பேச்சுமின்றி அமைதி காக்க, சுகந்தி குழம்பினார். காலையில் சுஹா தனியாக வந்த பொழுதே என்ன ஏதுவென்று தீர விசாரித்து, அவள் ஒரு பிரச்சினையுமில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக அழுத்தி கூறவும் தான் அவர் அமைதியாக விட்டார்.

"எதுவும் பிரச்சினையா தம்பி?" என்று கவலையுடன் மெல்லிய குரலில் கேட்டார்.

"ம்ஹும்... அதெல்லாம் எதுவுமில்லை. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நான் இப்பொழுது அங்கே கிளம்பி வரலாமா?" என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.

அவன் கேள்வியால் அவர் நெஞ்சில் நிம்மதி பரவ, "அதற்கென்ன தாராளமாக வாருங்கள், இது உங்கள் வீடு. சுஹாவிற்கு இருக்கும் அத்தனை உரிமையும் உங்களுக்கும் இருக்கின்றது என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா... அதனால் நீங்கள் தயங்கவே வேண்டாம் வாங்க, நான் வெயிட் பண்றேன்!" என்றார் புன்னகையுடன்.

"ஓ! தாங்க்ஸ் அத்தை, நான் பாட்டுக்கு சுஹாவை பார்க்க கிளம்பிவிட்டேன். டாட் தான் இந்நேரத்திற்கெல்லாம் அங்கே போக கூடாது என்று சத்தம் போட்டார். ஆனால் என்னால் வராமல் இருக்க முடியவில்லை. அது தான் கேட்டுக் கொண்டு வரலாம் என்று... நான் முதலில் மாமாவுக்கு தான் போன் செய்தேன், அவர் லைன் கிடைக்கவில்லை!"

"இல்லை தம்பி... அவர் கேம்ப் போயிருக்கின்றார். வீட்டில் நானும், சுஹாவும் மட்டும் தான் இருக்கின்றோம் நீங்கள் வாருங்கள்!" என்று போனை வைத்தார்.

ஊற்றாக பொங்கி பிரவகித்த உற்சாகத்தில் இதழ் குவித்து விசிலடித்தவாறு சுஹாவின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் கிருஷ்.

அடுத்த நாற்பதாவது நிமிடத்தில் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றவனை, இன்முகத்துடன் வரவேற்றார் சுகந்தி.

"என்ன சாப்பிடுகிறீர்கள்?"

"ஐயோ... அதெல்லாம் எதுவும் வேண்டாம் அத்தை நான் சாப்பிட்டு விட்டு தான் கிளம்பினேன். நீங்கள் தூங்குங்கள், காலையில் பார்க்கலாம்!"

"சரி... உங்கள் நைட் டிரஸ் சுஹாவின் அறையில் உள்ள கப்போர்டில் தான் இருக்கின்றது, மாற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் பாட்டிலும் தூங்கப் போகும் பொழுது அவள் எடுத்து வைத்திருப்பாள் என்று நினைக்கிறேன். குட்நைட்!" என திரும்பியவரை தடுத்தான்.

"நான்... அவள் ரூமில்... அவளிடம் நான் சொல்லவேயில்லையே... திட்டப் போகின்றாள்? நான் வேற ரூம் யூஸ் பண்ணிக் கொள்கிறேனே..." என்றான் கிருஷ் அப்பாவியாக.

தன்னை மறந்து சிரித்தவர், "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்... உங்கள் பெண்டாட்டி ரூமிற்கு போவதற்கு பர்மிஷன் எதற்கு? உங்களுக்கு அனைத்து ரைட்ஸும் இருக்கின்றது, நீங்கள் போங்கள். அவள் ஏதாவது சொன்னால் என்னிடம் சொல்லுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்!" என்று விட்டு தன்னறைக்குச் சென்று விட்டார்.

தயங்கியவாறு கதவை திறந்தவன் சுஹாவை பார்த்தான், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சுக்காற்றை நிம்மதியாக வெளியேற்றி விட்டு கதவை தாளிட்டவன் உடை மாற்றி விட்டு வந்து மெத்தையில் அவளின் மறுபக்கம் அமர்ந்தான்.

அப்பொழுது தான் கிருஷ் அவளை நன்றாக ஊன்றிக் கவனித்தான் சுஹா நைட்டியில் இருந்தாள். எப்பொழுதும் அவன் வீட்டில் புடவை அல்லது சுடிதார், லெகின்ஸ் டாப்ஸ் போன்ற உடைகளை தான் அணிந்திருப்பாள், அவ்வப்பொழுது ஜீன்ஸ் தலைக்காட்டும். இரவு நேரங்களிலும் நைட் டிரஸ் காட்டன் பேன்ட் சர்ட் போல் தான் ஏதாவது அணிந்திருப்பாள்.

இன்று அவள் நைட்டியில் இருந்தது அவன் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது. கணுக்காலுக்கு மேலே கால் தெரிவது போலெல்லாம் உடை அணியமாட்டாள் அவள். இப்பொழுதும் முழு அளவு நைட்டி தான் என்றாலும், உறக்கத்தில் அவள் புரண்டு படுத்திருந்ததில் லேசாக விலகி கெண்டை காலுக்கு சற்று மேலே ஏறியிருந்தது.

அவளின் கொலுசணிந்த வாளிப்பான கால்களும், திருமணத்தின் பொழுது தான் அணிவித்த மெட்டியுடன் இருந்த கால் விரல்களும் அவன் கண்களுக்கு கவர்ச்சியாக தோன்றி மனதை புரட்டிப் போட்டன. அதுவரை தோன்றாத உணர்வின் தாக்குதலில் தன்னையுமறியாமல் தாபத்துடன் அவளை நெருங்கியவன் சட்டென்று சுதாரித்து விலகினான்.

'டேய் லூசு... என்னடா செய்யப் போகின்றாய்? நல்லவேளை... அவளை தொடவில்லை. அப்படி இல்லாமல் தொட்டு அவள் மட்டும் எழுந்து பார்த்திருந்தாள், உன்னை உண்டு இல்லை என்று செய்ய பத்ரகாளி அவதாரம் எடுத்திருப்பாள். தப்பித்தேன்டா சாமி... வந்திருப்பதே அவளுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக, இதில் இந்த ஆசை வேறா உனக்கு? ஏற்கனவே நீ செய்திருக்கும் குளறுபடியால் ஏக கடுப்பில் இருக்கின்றாள். பற்றாக்குறைக்கு அவள் சமாதானம் ஆவதற்குள் முந்திரிக்கொட்டை மாதிரி வேறு எதையாவது செய்து மேலும் மேலும் அவளுக்கு எரிச்சலை மூட்டி விட்டு விடாதே!' என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டு சோகமாக படுத்தான்.

'ப்ச்... ம்க்கும்... அட்லீஸ்ட்... கொஞ்சமே கொஞ்சம் லேசாக கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினாலாவது நன்றாக இருக்கும்!' என்று சலிப்புடன் உறக்கம் வராமல் சற்று உருண்டான்.

'ம்... எங்கே... எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை கிடைத்து விடுமா என்ன? ஐயையோ... இப்படி உருண்டால் அன்று மாதிரி தூக்கம் கலைந்து எழுந்து சண்டைப் போடப் போகிறாள்?' என்று அசையாது நேராகப் படுத்தான்.

'ஆனால் திருமணமான நாளிலிருந்து இவள் இது போன்ற உடைகளை நம் வீட்டில் அணிந்து நான் பார்த்ததில்லையே பின் எப்படி?' என்று யோசித்தான் கிருஷ்.

துலாபாரம் போல் அனைத்தும் தெளிவாக விளங்கியது அவனுக்கு, 'ஓஹோ... என் முன்னே உடைகளில் கூட எவ்வித குறைபாடும் இன்றி நாகரீகமாக இருக்க வேண்டும் என்று தான் உறங்கும் பொழுது கூட பேன்ட் சர்ட் அணிய ஆரம்பித்தாளோ... அப்படிதான் இருக்க வேண்டும். அதனால் தான் அன்று அவள் புடவையில் தலைவாரிக் கொண்டிருக்கும் பொழுது குஷி படத்தை மேற்கோள் காட்டி சண்டையிடவும் பதறியபடி சாரி சொல்லி விட்டு ஓடி விட்டாள் போலிருக்கின்றது. ச்சே... இப்படிப்பட்டவளை போய் அந்நியர் முன்னிலையில் அவ்வாறு அவமானப்படுத்தி பேசி விட்டேனே!' என்று உளமாற வருந்தியவன் அவள்புறம் திரும்பி படுத்து, சாரிம்மா என மெல்ல முனங்கினான்.

சுஹாவின் நிலவு முகத்தையே கண்சிமிட்டாமல் பார்த்திருந்தவன், 'இருந்தாலும் கேடிடி நீ... சிறிது கூட உடம்பு தெரியாமல் இழுத்து போர்த்திக் கொண்டு உடை அணிபவள் தான் மேனகை வேஷம் போட்டு என்னை மயக்கப் போகின்றாயா? சரியான பிராடு... எப்படியெல்லாம் இதை சொல்லி என்னை ஆட்டம் காட்டினாய் நீ?' என்று மனதிற்குள் செல்லமாக கடிந்தான்.

'பட்... இப்பொழுது விஸ்வாமித்திரராக மாற நான் ரெடி, மேனகையாக மாற நீ ரெடியா?' என்று தனக்குள்ளே அவளிடம் குறும்புடன் கேள்வி எழுப்பியவன் புன்னகையுடன் உறங்கியும் போனான்.

விடியும் வேளையில் உறக்கம் கலைந்து வழக்கமான வழக்கமாக தலையை நகர்த்தி குறுக்கே இருந்த தலையணையை அணைத்தபடி படுக்க முயன்ற சுஹா, குழம்பினாள்.

'ஏன் பில்லோ இவ்வளவு ஹார்டாக இருக்கின்றது?' என்று முகத்தை அதில் வைத்து அழுத்தியவளுக்கு, இதமான கதகதப்போடு சீரான இதயத்துடிப்பும் கேட்கவே துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தாள் சுவாஹனா.

அங்கே அவள் கண்ட காட்சி அவளின் இதயத்தை உறையச் செய்தது.

நிச்சலனமாக கிருஷ் உறங்கி கொண்டிருந்தான், 'ஐயோ... இவனையா கட்டிக்கொண்டு நெஞ்சில் தலைசாய்த்து படுத்தேன்! பாப்ரே...' என்று தன் இரு கரத்தாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.

ஒரு நிமிடம் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தவள், 'ஆமாம்... இவன் எப்படி இங்கே வந்தான்? நான் எங்கள் வீட்டில் தானே இருக்கின்றேன்!' என்று குழம்பியபடி சுற்றும்முற்றும் பார்த்தாள்.

'எல்லாம் கரெக்ட் தான், இது என் ரூம் தான்... பின் எப்படி? ஒருவேளை பிரமையோ...' என்று கிருஷின் உருவம் மறையப் போகின்றதா என உற்று உற்றுக் கவனித்தாள் சுஹா.

ஐந்து நிமிடங்களாக கண்களை சிமிட்டி சிமிட்டிப் பார்த்தும் அவன் உருவம் மறையவில்லை எனவும், மெல்ல அருகினில் சென்று அவனுடைய மூச்சுக்காற்று வருகிறதா என்று பரிசோதித்து பார்த்தாள்.

கிருஷுடைய மூச்சுக்காற்று அவள் மூச்சோடு ஒன்றாக கலக்க, சட்டென்று அவளுக்கு கல்லூரியில் நடந்தது நினைவிற்கு வந்தது. தன்னை அவன் வெகு அருகில் இழுத்து பேசியதும்... மின்னலினும் விரைவாக விலகியவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

'சந்தேகமே இல்லை அவனே தான்... இப்பொழுது எதற்காக இங்கே வந்தான்? இவன் தொல்லையே வேண்டாமென்று தானே அம்மா வீட்டிற்கு வந்தேன்... பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து விட்டான். அந்த வீட்டில் தான் அப்பாவியாய் வேஷம் போட்டு என் மனதை கரைக்கப் பார்க்கின்றான் என்று தப்பித்து ஓடி வந்தால்... இங்கும் வந்து விட்டானே, ப்ச்...' என தலையை பிடித்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தவளின் விழிகளில் அப்பொழுது தான் அவள் அணிந்திருக்கும் உடை தென்பட்டு கவனத்தை ஈர்த்தது.

'ஓ காட்! நைட்டி...' என்று வேகமாக காலில் இழுத்து விட்டவள், 'கடவுளே... இன்றைக்கு இன்னும் எத்தனை சோதனைகளை பாக்கி வைத்துள்ளாய்? இவன் வரும்பொழுது எப்படி தூங்கி கொண்டிருந்தேனோ அது வேறு தெரியவில்லையே...' என தன்னையே ஒருமுறை முழுவதுமாக ஆராய்ந்தாள் சுஹா.

'பக்கத்தில் ஒருவன் வந்து படுப்பது கூட தெரியாமல் அப்படியென்னடி உனக்கு தூக்கம்?' என்று தன்னையே நிந்தித்தவள், ச்சீய்... கருமம்... கருமம்... என்ன இது டயலாக் எல்லாம் அசிங்கமாகத் தோன்றுகிறது என புலம்பினாள்.

'முதலில் இந்த அம்மாவை சொல்ல வேண்டும், என்னை எழுப்பி விடாமல் இப்படிதான் தூங்கும் பொழுது ஒரு ஆண்பிள்ளையை அறையின் உள்ளே விடுவதா...' என டங்குடங்கென்று சுகந்தியிடம் பாய்வதற்கு தயாராக கொம்பு சீவிக் கொண்டு அவரிடம் சென்றாள்.

"குட்மார்னிங்!" என்று புன்னகைத்தவரை முறைத்தப்படி நின்றாள் சுஹா.

"என்னடி இது காலையிலேயே கொம்பு சீவி விட்ட மாடு கணக்காக வந்து இப்படி நிற்கின்றாய்?" என்று கேலியுடன் சரியாக வினவினார்.

"ம்... உங்கள் மாப்பிள்ளை எப்பொழுது வந்தார்? யாரை கேட்டு அவரை என் அறைக்குள்ளே விட்டீர்கள்?" என்றாள் கோபமாக.

"முதல் கேள்விக்கு பதில், நீ தூங்கிய அரைமணி நேரத்திலேயே போன் செய்து இங்கே வருவதற்கு பர்மிஷன் கேட்டார் வரச் சொன்னேன். இரண்டாவது கேள்வி அநாவசியமானது, மனைவியின் அறைக்குள் பர்மிஷன் கேட்டு விட்டு தான் கணவன் வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை!" என்றபடி கருமமே கண்ணாக தேங்காய் பால் எடுக்க ஆரம்பித்தார் சுகந்தி.

No comments:

Post a Comment

Most Popular