Menu

Search This Blog

Yenai Mannikka Vendugiren - Deepababu

 


கதைக்கரு


தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். கடவுளின் நல்லாசியால் செப்டம்பர் 2016ல் இக்கதை மாந்தர்களோடு இணைந்து தான் எனது முதல் ஆன்லைன் எழுத்துப் பயணம் தொடங்கியது.


கதையிலிருந்து சிறு துளிகள்


தன்னிடத்தில் அமர்ந்தப் பவித்ராவை யோசனையோடு பார்வையிட்டான் அஜய்.

இவள் அப்படிப்பட்டவள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏன்? அவனுக்குமே கூட இடைவிடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தால் பெரும் குழப்பம் தான் மிஞ்சியது.

'சீச்சீய்... என்ன மாதிரி நான் நினைக்கிறேன்? இவளை போய் நல்லவள் என்கிறேனே... இவளை பற்றித் தான் அவன் அவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னானே... இவள் நல்லவளே இல்லை... அனைவரிடமும் நன்றாக நடிக்கிறாள். நான் இவளை அடியோடு வெறுக்கிறேன்!' என்று தன் வேலையில் மூழ்கியிருந்தவளை வெறுப்பாகப் பார்த்தான் அஜய்.

அந்த நொடியிலிருந்து முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான் நாயகன். முடிந்தவரை அவளிடம் தன்னை அழுத்தமாக காட்டிக்கொள்ள வேண்டும் சிரிக்கவே கூடாது என்று முடிவு செய்தவன் அதை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் செய்தான்.

***


"வில் யூ ஸ்டாப் இட்!" என்று அடங்காத சினத்துடன் அவளிடம் இரைந்தவன் அவளை உறுத்து விழித்தான்.

அதுவரை பவித்ராவிற்குள் இருந்த தைரியம் அனைத்தும் நிலைக்குலைந்து ஓடி ஒளிய முகம் வெளிர, அவனை மிரட்சியோடு பார்த்தாள் அவள்.

"உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? எதற்கெடுத்தாலும் என்னை ராகவ்வோட கம்பேர் செய்கிறாய். லுக்... நான் ஒன்றும் ராகவ் அல்ல அஜய்! காட் இட்?

அன்று அப்படித்தான் நேரமாக வந்து வேலை பார்த்ததற்கு ராகவ் சார் அப்படியெல்லாம் வர மாட்டார் என்கிறாய். இப்பொழுது நான் தான் இங்கே எம்.டி., நான் சொல்வதை தான் நீ செய்ய வேண்டும்.

இஷ்டமில்லை என்றால் வேலையை ரிசைன் பண்ணிட்டு போய்க் கொண்டேயிரு!" என ஆங்காரமாக பேசிக் கொண்டே சென்றவனின் மனதில் சின்ன திடுக்கிடல் தோன்றி வார்த்தைகள் இடையில் தடையிட்டு நின்றது.

‘ரிசைன் செய்துவிட்டு இங்கிருந்து போய் விடுவாளோ?'

மனதில் இனம்புரியாத அலைபுறுதல் உருவாக அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் அழுத்தமாக அமர்ந்திருந்தான் அவன்.

விரல்களை பிசைந்தபடி தவிப்புடன் நின்றிருந்தவள் அதற்குமேல் அவனிடம் எதிர்த்துப் பேச துணிவற்று, "நான் செய்கிறேன் சார். என்ன பிரிப்பேர் பண்ண வேண்டும்?" என மெல்லியக் குரலில் கேட்டாள்.

***


“நீங்கள் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள். பவித்ராவிற்கு எந்தப் பிரச்சனையும் வராமல் நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்!" என்றான் அஜய் வேகமாக.

அவன் பேச்சில் ஒன்றும் புரியாது உறைந்து விட்ட பவியின் தந்தை பின் சிந்தனை குழம்பி, 'என்ன உளறுகிறான் இவன்?' என்பது போல் அவனை குழப்பத்துடன் பார்த்தார்.

"நீங்கள் எப்படி?" என்றார் ராஜசேகர் அவனை துளைக்கும் பார்வை பார்த்து.

சற்றே திணறியவன், "அது வந்து... ஆங்... அலுவலகத்தில் அவளை யாரும் தொந்திரவு செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். வீட்டிற்கு கூட பத்திரமாக நானே அழைத்து வருகிறேன்!" என சட்டென்று சூழ்நிலையை இலகுவாக சமாளிக்கும் விதத்தில் பதிலளித்தான்.

விழிகளில் சலிப்பை வெளியிட்டு அவன் உதவியை ஏற்க மறுத்தார் அவர்.

"நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள். நீங்கள் சொல்வது சற்றும் நடைமுறைக்கு ஒத்து வராது. இதனால் என் பெண்ணிற்கு மேலும் தான் அவப்பெயர் வந்து சேரும். நீங்கள் மனிதாபிமானத்தோடு செய்யும் இந்த உதவியை மற்றவர்கள் தவறாக தான் எடுத்துக் கொள்வர்!"

"அதை விடுங்கள், ஏதோ ஒன்று நிதானமாக யோசித்து நல்ல முடிவாக எடுக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்!"

ராஜசேகர் பெரும் தயக்கத்திற்கு பிறகு அவன் வேண்டுகோளுக்கு சம்மதித்தார்.

***


பெற்றெடுத்த நாள் முதலாக இதுவரை ஒரு நாளும் தன் முன் பேச்சற்று தலைக்குனிந்து அமர்ந்திராதவனின் உடல்மொழி லட்சுமிக்குள் மெல்லிய கலவரத்தை உண்டு பண்ணியது.

“அஜய்!”

அவரின் மெலிதான அழைப்பில் தயக்கத்துடன் நிமிர்ந்து அவரை பார்த்தவன், “ம்மா!” என்றான்.

“என்னம்மா? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்?”

மகனிடம் கேள்வியை கேட்டு விட்டாலும் வழக்கத்திற்கு மாறாக இன்று அவன் நடந்துக்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எதுவோ ஒன்று சரியில்லை என்பதை மட்டும் அவரால் தெளிவாக உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

“அது...” என்றவன் மெல்ல தன்னை திடப்படுத்திக் கொண்டு, “நான்... நான் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்மா!” என்றவனின் விழிகள் மறந்தும் தாயை நேராகப் பார்க்கவில்லை.

கடந்த ஒரு வருடமாக தன் மகனின் வாயிலிருந்து இப்படியொரு வாக்கியம் வெளிவராதா என பெரும் ஏக்கத்துடன் காத்திருந்த பெற்றவருக்கு இன்று ஏனோ அவனின் சொல்லில் மலர்ச்சி தோன்றவில்லை.

அமைதியாக தனக்குள் சில விஷயங்களை ஆலோசித்துக் கொண்டிருந்தார் அவர்.

***

‘இந்தப் பெண்ணிற்கு ஏன் இந்த தலையெழுத்து? விதியின் சதியில் நான் சிக்கிக்கொண்டு தவித்தது பற்றாது என்று இவளையும் அதனுள் இழுத்து விட்டுவிட்டேனே!’

கவலையோடு எண்ணமிட்டபடி காரை ஓரமாக நிறுத்தினான் அவன்.

கார் நிற்கவும் தன் கவலையில் இருந்து வெளிவந்த பவித்ரா தலையை சுழற்றி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.

அருகில் இருப்பவளிடம் அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் அஜய்.

‘இங்கே ஏன் நிறுத்தி இருக்கிறார்?’

தனக்குள் எழுந்தக் கேள்வியுடன் அவன்புறம் திரும்பியவள் அவனுடைய பார்வை தன் முகத்தில் இருக்கவும் இமைகள் படபடக்க விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

பதற்றத்துடன் கைப்பையை இறுக்கிப் பிடிப்பவளின் கரத்தை தன் பிடிக்குள் எடுத்து ஆதரவாக அழுத்திக் கொடுக்க தூண்டிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவன் லேசாக தொண்டையை செறுமிக் கொண்டான்.

“பவித்ரா... நாம் எந்த மீட்டிங்கிற்கும் வரவில்லை. நான் உன்னோடு தனியாக பேச வேண்டுமென்று தான் வெளியே அழைத்து வந்தேன்!” என்கவும் அவள் விழிகளில் பீதி பரவியது.

“ரிலாக்ஸ்... எந்தவொரு தப்பான எண்ணத்திலும் இல்லை. உன் வாழ்வில் நடந்துக் கொண்டிருக்கும் குழப்பத்திற்கு விடை சொல்லத்தான்...”

அவனை மேலே பேச விடாமல் வேகமாக தடுத்தவள், “வேண்டாம்... நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். அதையெல்லாம் என் அப்பா பார்த்துக் கொள்வார் நாம் கிளம்பலாம்!” என்றாள் அவசரமாக.

“இல்லை பவித்ரா... நான் பேசியே ஆகவேண்டும்!”

“ம்ஹும்... நான் கேட்க மாட்டேன், கிளம்பலாம்!” என்று பிடிவாதமாக முகத்தை சுருக்கினாள் பெண்.

“ப்ச்... பவித்ரா!” என அஜய் அதட்ட அதில் லேசாக நெஞ்சம் அரண்டாலும், “என் பெர்ஷனல் விஷயத்தில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, முதலில் காரை ஸ்டார்ட் பண்ணுங்க!” என்று அவனிடம் இரண்டாம் முறையாக சிரமப்பட்டு வரவழைத்த துணிச்சலுடன் அழுத்தமாக கூறினாள்.

அதில் முகம் கறுத்தவன், ‘எனக்கா உரிமையில்லை? எனக்கு மட்டும் தான்டி அந்த உரிமை இருக்கிறது!’ என வெடுக்கென்று மனதில் நினைத்து சிகையை அழுந்தக் கோதியபடி வெளிப்புறம் திரும்பிக் கொண்டான்.

அவன் அமைதியை கலைத்து, “சார்... உங்கள் மேல் ரொம்ப நல்ல எண்ணம் வைத்திருக்கிறேன். தயவுசெய்து என்னுடைய பிரச்சினையை விடுங்கள், அதை என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் காரை எடுங்கள் நாம் போகலாம்!” என்றாள் பவித்ரா கெஞ்சலாக.

நாயகியின் வார்த்தைகளில் துணுக்குற்றவன் கண்களை அழுந்த மூடித்திறந்து தனது அலைபேசியை கையில் எடுத்து அதன் தொடு திரையை தட்டினான்.

***

ஆங்காரமாக ஹார்னை அலற விட்டவள் அஜய் கதவை திறக்கவும் பாய்ந்து அதன் வழியே வெளியே குதிக்க முயல, “ஏய்...” என்று திகைத்து அவளை அடுத்த இருக்கையில் தள்ளியவன் அதே வேகத்தில் உள்ளே தாவி தன்னிடத்தில் அமர்ந்துக் காரை கிளப்பினான்.

“யூ இடியட்... செய்வதையெல்லாம் செய்துவிட்டு எவ்வளவு திமிர் இருந்தால் இன்னும் என்னை கேவலமாக நடத்துவீர்கள்?”

அவன் தள்ளி விட்டதில் கன்னாபின்னாவென்று சீட்டில் விழுந்தவள் தட்டுத்தடுமாறி எழுந்தமர்ந்து கத்த, இவன் வாயே திறக்காமல் காரை புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.

ஆம்... புயல் வேகம் தான். உண்மை தெரிந்த நிமிடத்தில் இருந்து மிகவும் உணர்ச்சிமயமாக மாறி தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பவளை பெற்றவர்களின் பொறுப்பில் ஒப்படைத்து அடுத்து அவர்களிடம் ஒருமுறை தனது மன்னிப்பை யாசிக்க பறந்துக் கொண்டிருக்கிறான்.

நடப்பது ஒவ்வொன்றும் பெரும் தலையிறக்கமாக தோன்றியது அவனுக்கு. ஆனால் வேறு வழியில்லையே... தான் செய்துவிட்ட மோசமான தவறை சீர் செய்ய இதையெல்லாம் இவன் கடந்து தான் ஆக வேண்டும். எப்பொழுதுடா இதெல்லாம் முடிந்து அக்கடாவென்று தன் வாழ்க்கையில் நிம்மதியாக செட்டிலாகுவோம் என்று ஆயாசமாக இருந்தது.

காச்மூச்சென்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியாகவும் இவன் மெல்லமாக திரும்பிப் பார்த்தான்.

கார் செல்லும் சாலையை உற்றுப் பார்த்தவள் அது தன் வீட்டிற்கான வழி என்று புரியவும் கப்சிப்பென்று அமர்ந்துக் கொண்டாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்திய அஜய் டோர் லாக்கை திறக்க, விரைந்து கீழிறங்கியவள் அவசரமாக ஓடிச்சென்று வீட்டின் கதவை படபடவென்று தட்டினாள்.

‘யாருடா இது? இந்த நேரத்தில் இப்படி கதவை உடைப்பது?’ என்று பயத்துடன் பக்கவாட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்த பவித்ராவின் அம்மா அந்நேரத்தில் மகளை கண்டதும் குழம்பி வேகமாக கதவை திறக்க, இவள் உள்ளே சென்று அவசரமாக கதவடைக்க முயலும் நேரம் சட்டென்று நிலைவாசலின் குறுக்கே பாய்ந்து அவளின் முயற்சியை தடுத்தான் அஜய்.

“பவித்ரா... சில்லியாக பிஹேவ் பண்ணாதே!” என்று அதட்டினான்.

“நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்துவதற்கு நீங்கள் ஒன்றும் யோக்கியமானவர் இல்லை!” என்று பவித்ராவும் பதிலுக்கு சத்தமிட்டாள்.

மகளின் திடீர் வரவு, வித்தியாசமான நடவடிக்கை என புரியாது தடுமாறி நின்ற சரஸ்வதி, அவள் தன் எம்.டி.யை எடுத்தெறிந்துப் பேசவும் திகைத்தார்.

***

மித்ரனிடம் டேன்ஸிங் டாய் ஒன்றை விளையாட கொடுத்துவிட்டு தனது பெட்டிகளின் பக்கம் சென்ற பவித்ரா இரவு உடையை எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்ப்பதை கவனித்து வேகமாக அவளருகே சென்றான் அஜய்.

“டிரெஸ்ஸிங் ரூம் அங்கே இருக்கு, வாஷ்ரூமும் அதற்கடுத்து உள்ளே தான் இருக்கிறது!”

“ஓ... தேங்க்ஸ்!” என்றுவிட்டு அவன் கைக்காட்டிய பக்கம் சென்றாள்.

கையில் உள்ள பொம்மையை பாடாய்படுத்தும் பிள்ளையை கண்டு முகம் கனிந்தபடி அருகில் சென்று அவனை கைகளில் அள்ளிக்கொண்டு அழுத்தமாக முத்தமிட்டான் அஜய்.

அவனது செயலுக்கு மரியாதை தரும் விதமாக திரும்பி அப்பாவை பார்த்து ஒரு மயக்கும் புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் தன் வேலையில் தீவிரமானான் மித்ரன். மகனோடு சென்று சோபாவில் அமர்ந்துக் கொண்டவனின் நினைவுகளை மனைவி ஆக்கிரமித்தாள்.

பவித்ரா இயல்பாய் மனைவியாக தன்னறைக்கு வருவாளா மாட்டாளா என்று ஏக்கத்தோடும், கவலையோடும் காத்திருந்தவனுக்கு அவளின் வருகை அத்தனை நிம்மதியை கொடுத்திருந்தது.

உடைமாற்றி வந்தவள் தந்தையையும், பிள்ளையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அலைபேசியுடன் சென்றுக் கட்டிலில் அமர்ந்தாள்.

அப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்க, செப்பு இதழ்களை பிரித்து சிறிதாக கொட்டாவி விட்ட குழந்தை கையிலிருந்த பொம்மையை கீழே போட்டுவிட்டு பாலுக்காக வேண்டி கண்களை கசக்கிக்கொண்டு சிணுங்கினான்.

“குட்டிப் பப்புவிற்கு தூக்கம் வந்துவிட்டதா?” என்று எழுந்தபடி அறையில் பால் பாட்டிலை தேடிய அஜய் அதைக்காணாது மனைவியின் முகம் பார்க்க, அவளும் குழந்தையின் சிணுங்கல்களை புரியாதுப் பார்த்திருந்தாள்.

“பால் எடுத்துட்டு வரலையோ...” என மெல்லமாக இழுத்தான்.

மலங்க விழித்தவள், “இல்லையே... தூங்கும் பொழுது குடிப்பானா?” என்றாள் கேள்வியாக.

“ம்... ஆமாம். விடியற்காலையிலும் பாலுக்கு அழுவான்!” என்று பதிலளித்தபடி கதவருகே செல்ல, “நான் வேண்டுமென்றால் போய் எடுத்து வரவா?” என வேகமாக கட்டிலை விட்டுக் கீழிறங்கினாள் பெண்.

“இல்லை வேண்டாம்... உனக்கு புது இடம் புரியாது. நானே போய் எடுத்து வருகிறேன்!” என்று குழந்தையோடு வெளியேறினான்.

***

Mannikka Vendugiren - Amazon Kindle Link

No comments:

Post a Comment

Most Popular