Menu

Search This Blog

Kathai Solla Azhaikkiren - Deepa Babu

 


கதை சொல்ல அழைக்கிறேன்


(இணையத்தில் வெளிவராத நேரடிப் புத்தகம்)

கதைக்கரு


பறவைகள் பலவிதம் என்று நம்ம கவிஞர் கண்ணதாசன் சொன்னதுப் போல், இவ்வுலகில் மனிதர்களும் பலவிதம் தான். அவர்களில் சிலரை பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்யத்தான் இந்த கதைக்கு பேரன்போடு அழைக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக நம்முடைய அன்றாட வாழ்வில் ஆங்காங்கே நாம் கேள்விப் படுபவர்களும், மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்களும் தான்.


Kathai Solla Azhaikiren - Kindle Link


**********

கதையிலிருந்து சிறு துளிகள்


“அடடா... உன் காலுக்கு என்னப்பா ஆச்சு?”

தன் வீட்டை பூட்டிக் கொண்டு இருந்தவன், மனோகரியின் பதறிய குரலில் புருவங்கள் சுருங்க திரும்பிப் பார்த்தான்.

ஞாயிறு விடுமுறை அதுவுமாக அம்மா, மகள், பேத்தி மூவரின் நெற்றியிலும் விபூதி, குங்குமம் வீற்றிருந்து அவர்கள் கோவிலுக்குச் சென்று வந்ததை பறைசாற்றியது.

அவனின் அலசும் பார்வையில் பெண் முறைக்கத் துவங்க, விழிகளை திருப்பிக் கொண்டவன், “ஒன்னும் இல்லம்மா... சின்ன ஆக்ஸிடென்ட், பைக்ல இருந்து ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டேன்!” என்று விவரம் தந்தான்.

‘கண்ணை ரோட்டுல வச்சு ஓட்டி இருந்து இருக்கனும்... சுத்தி பராக்கு பார்த்துட்டுப் போனா அப்படித்தான்...’ என தனக்குள் நொடித்துக் கொண்டாள் ருத்ரா.

“கொஞ்சம் பார்த்துப் போக கூடாதாப்பா... இனிமே கவனமா இரு. வீட்டுக்கு தெரியுமா? பாவம்.. தூரமா இருக்க அவங்களும் விஷயம் தெரிஞ்சா பதறிப் போயிடுவாங்க!” என்று கவலைப்பட்டார்.

அவரின் இரக்க குணத்தில் மெல்ல முகம் கனிந்தவன், “ரொம்ப பயந்துடுவாங்கன்னு சொல்லலைம்மா...” என்று தன்னுள் இருக்கும் வலியை மறைத்து லேசாக முறுவலித்தான்.

“ஆங்... சரி தான். ஆமா.. இன்னிக்கு லீவ் இல்லையா, வெளியில கிளம்பிட்ட?”

“அம்மா...” என அதட்டி, அவரின் அதிகப்படியான பேச்சிற்கு அணைப் போட முயன்றாள் ருத்ரா.

“இவள் ஒருத்தி...” என அலுத்தவர், “இந்தா சாவி... வீட்டை திற!” என்று அவளை விரட்டினார்.

அவனுடைய விழிகள் பிள்ளையின் முகத்தில் நிலைக்க, தன்மீது அவன் பார்வை விழுந்ததில் சின்னவளும் அழகாக மலர்ந்து சிரித்து வைத்தாள். அவளை அள்ளிக் கொள்ள சொல்லி பரபரத்த இதயத்தையும், கைகளையும் ஆடவன் முயன்று அடக்கிக் கொண்டு நிற்க, அவன் பார்வை கண்டு கடுப்பான ருத்ராவோ வெடுக்கென்று தாயின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக் கொண்டு, தங்கள் வீட்டிற்குச் சென்றாள்.

“என்னப்பா.. இன்னிக்கும் வேலைக்குப் போகனுமா?”

அவரின் கேள்வியில் கவனத்தை திருப்பியவன், “இல்லம்மா... லீவ் தான்!” என்று புன்னகைத்தான்.

“அப்புறம் இந்தக் காலோட எங்கே கிளம்பிட்ட? அமைதியா வீட்டுல உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தா தான், இந்த மாதிரி எலும்பு பிரச்சனை எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்!”

தனக்கு ஆலோசனை கூறுபவரிடம், “சின்ன ஏர் க்ராக் தான்மா, பயப்படற அளவுக்கு பெருசா இல்லை. டிபன் வாங்க தான் போறேன், மதியத்துக்கு ஸ்விகில ஆர்டர் போட்டுக்குவேன்!” என்றான்.

“ஒரு டிபனுக்காக வெளியே போறியா? அதெல்லாம் வேணாம். நான் உனக்கு செஞ்சு தரேன், நீ ரெஸ்ட் எடு!”

திகைத்தவன், “அச்சோ.. இல்லயில்ல, வேணாம்மா. நான் இப்பவும் வீட்டுக்கே வரவழைச்சு சாப்பிட்டுக்கறேன்!” என்று பதறியடித்து மறுத்தான்.

‘ஏற்கனவே இவர் மகள் நம்மை கண்டாலே கண்களில் நெருப்பை பற்ற வைக்கிறாள். இதில் இப்படி எல்லாம் நெருங்கினால் அவ்வளவு தான், சட்டையை பிடித்துச் சண்டை போடுவாள்!’

**********

“ஏன்கா? என்னாச்சு?” என்றாள் ஸ்ருதி தயக்கத்துடன்.

“இங்கே நின்னு அவன் கூட என்ன தனியா பேச்சு வேண்டி கிடக்கு உனக்கு?”

முதலில் விழித்தவள் பின் புரிந்து, “நீங்க ஜீவா அண்ணாவையா சொல்றீங்க..?” என்று வியப்புடன் கேட்டாள்.

“அவனைத்தான் சொல்றேன்..” என்று பல்லைக் கடித்தாள் ருத்ரா.

“ச்சே... அவங்களை ஏன்கா இப்படி மரியாதை இல்லாம பேசறீங்க?”

‘இது என்ன? என்னை தவிர எல்லாருக்குமே அவன் மகாத்மாவா தெரியறான்!’

இவள் யோசனையில் நிற்கவும், “நான் கடைக்கு போயிட்டு திரும்பி வரும்போது தான் அவங்க வெளியில கிளம்பினாங்க. வழியில பார்க்கவும் நின்னு, காலேஜ்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சாங்க!” என்று அவளே பதில் தந்தாள்.

“அதுல அவனுக்கு என்ன அக்கறை வேண்டி இருக்கு?”

அவளின் உதாசீனப் பேச்சில் அதுவரை இருந்த இளக்கம் தொலைந்து, “கொஞ்சம் மரியாதையா பேசுங்கக்கா. நீங்க இப்படி பேசறது எனக்குப் பிடிக்கலை!” என்றாள் ஸ்ருதி இறுக்கமாக.

“ஓ...” என ஏளனமாக இதழ்களை வளைத்தவள், “ஹப்பா... அவனை சொன்னா உனக்கு பயங்கர கோபம் வருது!” என்று பரிகாசமாக புன்னகைத்தாள்.

“அதையே நானும் கேட்கறேன்கா. அந்த அண்ணா மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? உங்ககிட்ட இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை!”

ஏமாற்றமாக கூறுபவளை எரிச்சலுடன் பார்த்து, “அவனோட அப்பட்டமான நடிப்பை நம்பி எல்லாரும் எப்படித்தான் ஏமாந்து போறீங்களோ தெரியலை. முதல்ல என் அம்மா, இப்போ நீ, இன்னும் எத்தனை பேர்கிட்ட அவன் கைவரிசையை காண்பிக்கறானோ!” என்று பொரிந்தாள் ருத்ரா.

“அக்கா... ஸ்டாப்!” என அவளின் முன்னே கையை நீட்டிய ஸ்ருதி, “அண்ணா... உங்ககிட்ட ஏதாவது ப்ரொப்போஸ் பண்ணாரா?” என்று தீவிரமாக கேட்டாள்.

“வாட்?” என அதிர்ந்து கூவியவள், “என்னடி கேட்கற நீ?” என்றாள் ஆத்திரமாக.

“அப்போ... ஒரு வேளை.. ரோட்சைட் ரோமியோ மாதிரி பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு சுத்தறாரா?”

“ஸ்ருதி... ஜஸ்ட் ஷட் அப்!”

ருத்ரா கோபமாக இரைய, “வொய்கா..? இங்கே நான் அண்ணாவை தானே டேமேஜ் பண்றேன், அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? ஏன்னா... இதுல உங்களோட இமேஜும் சேர்ந்து டிஸ்டர்ப் ஆகறதுல உங்களுக்கு செம கோபம் வருது. அப்போ ஜீவா அண்ணாவை பத்தி நீங்க பேசின பேச்சுக்கு அவர் எவ்வளவு கோவப்படனும்?” என்றாள் நிதானமாக.

“ஏய் நிறுத்து... ரொம்ப பேசுற நீ?”

“ஹைய்யோ அக்கா... உங்களோட அளவுக்கு மீறின பேச்சுக்கு அண்ணா தான் இதைச் சொல்லனும்!”

“எதுக்குடி இப்படி அவனுக்கு ஓவரா கொடி பிடிக்கற நீ?”

ருத்ராவால் தாங்கவே முடியவில்லை. தன்மீது பெரும் மதிப்பு வைத்துச் சுற்றி வந்தப் பெண், தன்னை நோக்கி விரல் நீட்டி கேள்வி கேட்பதா..? அதுவும் அவனுக்காக, என அவளின் உள்ளம் வெகுவாக காந்தியது.

**********

யாரோ, எவரோ, ஏதோ வாக்குவாதத்தில் மோதிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற அவனின் எண்ணத்திற்கு மாறாக, மனோகரி தான் கையில் அற்புதாவை வைத்தபடி பதற்றத்துடன் ஒரு இளைஞனிடம் சமரசம் பேசிக் கொண்டு இருந்தார்.

அவனோ அவர் அருகில் இருந்த பெண்மணி ஒருவரிடம் நெஞ்சை நிமிர்த்தியபடி சண்டைக்கு நின்று இருந்தான். அவனுடைய உடல்மொழியை வைத்தே பிரச்சனை செய்ய என்றே, நன்றாக மூக்கு முட்ட குடித்து விட்டு வந்து இருப்பது போல் தோன்றியது இவனுக்கு.

அவர்களை அப்படியே விட்டுச் செல்ல மனம் வராமல், அவசரமாக அவ்விடம் விரைந்தான் ஜீவா. இவன் நெருங்கிச் செல்ல செல்லவே, அவன் சடுதியில் ஆவேசம் கொண்டு மனோகரியை பிடித்து தள்ளி இருந்தான். அவர் பிள்ளையோடு கீழே விழத் தடுமாற, பதறியடித்து ஓடினான் ஆடவன்.

“ம்மா...” என்று இவன் கத்திக் கொண்டு நெருங்குவதற்குள், அங்கிருந்தப் பெண்மணியே பெருகிய கண்ணீரோடு அவரை விழாமல் தாங்கிப் பிடித்து, அருகில் இருந்த இருக்கையில் பத்திரமாக அமர வைத்து இருந்தார்.

அந்த அதிர்ச்சியில் மனோகரி ஸ்தம்பித்து அமர்ந்து இருக்க, அற்புதாவும் அச்சத்தில் சத்தமிட்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.

“ஏன்டா... இப்படி பண்ற? கிளம்பிப் போடா, எதுனாலும் அப்புறமா பேசிக்கலாம்!” என்று அந்த இளைஞனிடம் அழுகையோடு கெஞ்சினார் அப்பெண்மணி.

“ம்மா... ஆர் யூ ஓகே?” என்று வேகமாக மனோகரியின் கரத்தை பிடித்தான் ஜீவா.

அவனை கண்டதும் முகம் கலங்கியவர், “ஜீவா, இவன்...” என்று திணறியபடி எதையோ சொல்ல வர, அதற்குள் அக்குடிகாரன் கத்த தொடங்கி இருந்தான்.

“என்னத்தை... அப்புறம் பேசறாங்க? உனக்கு எத்தனை தடவை தான் நான் சொல்றது...”

சட்டென்று அவன் சட்டை காலரை பற்றி, “டேய்... யாருடா நீ? எதுக்கு இங்கே வந்து லேடீஸ் கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க?” என்று கோபமாக உலுக்கினான் ஜீவா.

“தம்பி... தம்பி... விடுங்கப்பா, இவன் என்னோட மகன் தான்!” என்றார் அருகில் நின்றவர் தவிப்புடன்.

நாயகன் அதிர்ந்து பார்க்க, “ஆமா ஜீவா... இவங்களோட கேடுக்கெட்ட மகன் தான் இவன்...” என்று மனோகரியும் எரிச்சலுடன் கூறினார்.

“ஏய்... யாரை கேடுக்கெட்டவன்னு சொல்ற?” என்று அவரிடம் அவன் எகிறிக் கொண்டு செல்ல, ஜீவா அவனை இழுத்து எதிர்புறம் தள்ளி விட்டான்.

“ராஸ்கல்... குடிச்சு இருந்தா, எப்படி வேணும்னாலும் பேசுவியா? அவங்க வயசுக்கு மரியாதை தர்றது இல்ல...”

இவன் மெதுவாகவே தள்ளி இருந்ததால் முதலில் தடுமாறினாலும் பின் நிலைத்து நின்றவன், போதையில் சிவந்த விழிகளோடு இவனை ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தான்.

“என்ன பார்வை? முதல்ல இங்கே இருந்து கிளம்பு!” என்று விரட்டினான்.

“தம்பி.. நானே சொல்லிக்கறேன், பிரச்சனை வேணாம்பா!” என்று இவனிடம் கலக்கத்துடன் கெஞ்சுபவரை பார்க்கவே பாவமாக இருந்தது.

ஜீவா அமைதியாக நிற்க, “டேய் ரவி... ப்ளீஸ்டா, கிளம்பி வீட்டுக்குப் போ. நான் அப்புறமா அக்கா கிட்ட பேசி ஒரு முடிவைச் சொல்றேன்!” என்று அவனை கிளப்புவதில் குறியாக இருந்தார் பெற்றவர்.

“அப்போ... நான் சொன்னதை நீ செய்ய மாட்ட, உன் இஷ்டத்துக்குத் தான் ஆடப் போற?”

“டேய்...” என்று வேதனையில் தழுதழுத்தவர், “நா... நானும் மனுஷி தான்டா...” என்றார் குரல் நடுங்க.

மனோகரியின் விழிகளில் நீர் ஊற்றெடுத்தது, அழுதபடி இருந்த பேத்தியை தன்மீது சாய்த்து முதுகை வருடிக் கொடுத்து இருந்தார் அவர்.

ஜீவாவிற்கு என்ன விஷயம் என்று தெளிவாக புரியவில்லை என்றாலும், பெற்ற மகனால் அந்த தாய் துன்பப்படுகிறாள் என்பது மட்டும் புரிந்து வருத்தமாக இருந்தது.

**********

சற்றே சிந்தித்த பிரசாந்த், “ஓகே... அப்போ நான் தான் பர்ஸ்ட்!” என்றான் வேகமாக.

“ஹப்பா ராசா... சரி வா!” என்று எழுந்த ஸ்ருதி, அதுவரை அவர்களின் பேச்சுக்களை ரசித்து இருந்த ஜீவாவிடம் முறுவலித்தாள்.

“சாரு அக்கா எல்லாம் தெய்வம் தெரியுமா? எந்த நேரமும் இப்படியே தான் போட்டிப் போட்டுட்டு இருப்பானுங்க!”

“ஓகே... ஓகே... ருத்ரமா தேவி அம்மையார் ஒரு வழியா கிளம்பிட்டாங்க, நாம போகலாம்!” என்று அறிவித்தபடி ருத்ராவின் வீட்டில் இருந்து வெளியே வந்த விஷ்வாவின் பின்னே ஓடி வந்து தோளில் ஒன்று வைத்தாள் அவள்.

“ருத்ரமா தேவி சொன்னா உதை விழும் உனக்கு, மறுபடியும் ஆரம்பிக்காத...” என்று மிரட்டியவள், அற்புதாவை தூக்கிக் கொண்டு அபி வெளியே வந்ததும் கதவை பூட்டினாள்.

கரும் பச்சையும், பொன் மஞ்சளும் கலந்த பட்டுப் பாவாடை சட்டையில் இரட்டை குடுமியுடன் வெளியே வந்த பிள்ளையின் அழகில் ஜீவா மலர்ந்து நிற்க, அதை ஓரவிழியில் கவனித்தாள் ருத்ரா.

“அக்கா... நான் தான் பர்ஸ்ட்டுன்னு சொன்னேன்!” என்று ஸ்ருதியிடம் அவசரமாக நினைவுப் படுத்தினான் பிரசாந்த்.

“ஆங்... ஆமா, அபி நீ பாப்பாவை கீழே இறக்கி விடு, அவன் கூட முதல்ல கொஞ்ச தூரம் நடந்து வரட்டும்!”

குழந்தை தன்னை பார்ப்பாளா, மாட்டாளா என்று மற்றவரை மறந்து ஜீவா அவளையே பார்த்து இருக்க, பிள்ளையின் பார்வையும் அவன் மீது விழுந்து, அவனது இதயத்துடிப்பை அதிகரித்தது. தன்னுடைய சில நாள் ஒதுக்கத்தால், அவளும் தன்னை விலக்கி வைப்பாளோ என்பது வேறு ஒருபக்கம் அவனுக்குப் பதற்றமாக இருந்தது.

ஆனால் குழந்தையோ இவனை பார்த்ததும் பளீரென்று சிரித்து, “மாமா...” என உற்சாகமாக கூவி அழைக்க, இவனுக்கோ விரிந்த இதழ்களுக்கு மாறாக விழிகளில் நீர் கோர்த்து விட்டது.

“என்ன இது? இப்போ எதுக்கு இவரு கண்ணு கலங்குறாரு?” என்று விஷ்வா வியப்புடன் கேட்கும் பொழுதே,

“ஷ்... கண்டுக்காத, அவங்க ரெண்டு பேருக்கு உள்ள இருக்க ஏதோ ஒரு பாண்டிங் அது. என்ன வகையான அஃபெக்ஸன்னு அவங்களுக்கும் தெரியாது, பார்க்கற நமக்கும் சுத்தமா புரியாது. ஸோ... இது ரிலேட்டடா நீ எதுவும் வாயை திறக்காத!” என்று அடிக்குரலில் அவனிடம் உத்தரவு இட்டாள் ருத்ரா.

அருகில் நின்று இருந்த ஸ்ருதியுமே அதைக் கேட்டு இருந்தவள், குழப்பத்துடன் ஜீவாவிடம் திரும்பினாள்.

அதற்குள் அற்புதா வேகமாக அபியிடம் இருந்து இறங்கி ஜீவாவை நோக்கி ஓட, பதறியவன் தான் விரைந்து முன்னால் வந்து அவளை கைகளில் அள்ளினான்.

“பார்த்து வரனும்டா மயிலு... பாவாடை போட்டு இருக்கீங்க, விழுந்துடுவீங்க!”

“ம்... புது தெஸ்!” என்றாள் மலர்ந்தச் சிரிப்புடன்.

“ஹான்... ரொம்ப அழகா இருக்கு!”

அவனும் புன்னகையுடன் கூற, “குடுமி?” என்று கேட்ட வேகத்தில், அதைத் தொட்டும் காண்பித்தாள்.

“சூப்பரா இருக்கே..!” என்று கண்களை விரித்தான்.

**********




Kanavugal Pala Kodi - Deepa Babu

 


கனவுகள் பல கோடி

(இணையத்தில் வெளிவராத நேரடிப் புத்தகம்)


கதைக்கரு


மனிதராய் பிறந்தவர்களுக்கே ஆசைக் கனவுகள் பல அவரவர் கற்பனையில் பலமாய் உதித்திடுமாம். அவை பலருக்கு வசப்படவும் செய்யலாம், இல்லை.. சிலருக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கலாம். ஆனாலும் கனவு என்பது சில நிமிட கற்பனை உலகில் நம்மை ஆனந்தமாக மூழ்கடிக்க செய்ய கூடியது தான். அப்படியான இனிய நினைவிலும், எதிர்பார்ப்பிலும் மூழ்கி கனவு காணும் நாயகியும், நாயகனும் தங்களது வாழ்வில் அவற்றுக்கு வண்ணங்கள் கொடுத்து, எண்ணங்களாய் உருமாற்றி செயல் ஆற்றினார்களா, இல்லையா என்பதை கதையில் தெரிந்து கொள்வோம்.

என்னுடைய பாணியில் ஆசிரியர், மாணவிக்கு இடையே இரு குடும்பத்தாராலும் முடிவு செய்யப்படும் திருமணமும், அவர்களின் உணர்வுகளும் கதையாக விரிகிறது. அதோடு மருமகள் எழுத்தாளர் ஆகவும், மாமியார் தீவிர ஆன்லைன் வாசகி ஆகவும் உங்களில் ஒருவராக வருகிறார்கள்.

ஆங்... உங்களிடம் இதைச் சொல்ல மறந்து விட்டேனே, எனது ஆக்கத்தில் 25வது நாவலாக வெளியாகிறது இக்கதை. இத்தனை தூரம் என்னை நலமாய் செதுக்கி அழைத்து வந்து இருக்கும் இறைவனுக்கும், வாசக நட்புக்களுக்கும், விநியோகிஸ்தருக்கும், எனது முன்னேற்றத்தில் உறுதுணையாய் இருந்து வழி நடத்திச் செல்லும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

தீபா பாபு

Kanavugal Pala Kodi - Kindle Link

**********

கதையிலிருந்து சிறு துளிகள்


தன்னை மனதார வாழ்த்தும் பெரியவரின் சொல்லில் முகம் மலர்ந்தவள், அவரை நிமிர்ந்துப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.

“இப்போ தான் பொண்ணு முகத்துல கொஞ்சம் தெளிவு வந்து இருக்கு!” என்கிற கேலிக் குரலில் அவரின் புறம் பார்வையை திருப்பினாள் பெண்.

“நான் தான்மா மாப்பிள்ளையோட அப்பா, ரிட்டையர்ட் தமிழ் வாத்தியார்!”

செழியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, சின்ன வியப்புடன் அவரிடம் மென்னகை புரிந்தாள் அவள்.

“பிரியஞ்சலி தானே...?”

பேச்சை வளர்த்துவதற்காக அவர் கேட்ட அந்தக் கேள்வி மகனின் உள்ளத்தை திடுக்கிட செய்து, பெண்ணின் முகத்தை திகைப்புடன் ஊன்றிப் பார்க்க வைத்தது.

அவள் வந்ததில் இருந்தே மனதில் இருந்த சலிப்பின் காரணமாக அவளை சரியாக கவனிக்காது, ஒரு முறை மட்டும் அசுவாரசியமாக பார்த்து வைத்து இருந்தவன், இப்பொழுது தான் நன்றாக பார்த்தான்.

இருந்தும் அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தப் பெயர் மட்டும் வருடங்கள் கடந்தும் மறவாமல் மூளையின் நியூரான்களில் ஆழமாக பதிந்து இருந்தது.

‘என்ன பேரு இது? பிரியஞ்சலி... ஒரு அட்டெண்டென்ஸ் எடுக்க சட்டுன்னு வாயில நுழையுதா..? இதுல நீ வாங்குற மார்க்குக்கு இந்தப் பேரை வேற கஷ்டப்பட்டு கூப்பிட்டு பேப்பரை கொடுக்கனும் நான்!’ என அன்று தன்னெதிரே தவிப்புடன் நின்று இருந்த சிறு பெண்ணை பார்த்து முறைத்தபடி, சிடுசிடுவென சாடியது மின்னலென அவன் நினைவில் வந்துப் போனது.

“என்ன மாறா... நீ ஏதாவது பேசனுமா?”

தந்தையின் சொல்லில் தன்னை மீட்டவன் அவள் முகம் நோக்க, அவளும் அப்பொழுது அவனைத்தான் பதற்றத்துடன் பார்த்து இருந்தாள்.

‘ஸோ... அவள் தான். அதே மாதிரி இவளை பெண் பார்க்க, நான் தான் வரேன்னு என்னை போல இவளுக்கும் விஷயம் தெரியலை!’ என்று பெண்ணை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தான்.

அவன் பார்வையில் விரைந்து இமைகளை தாழ்த்திக் கொண்டவளின் முகம் லேசாக கலங்கிப் போய் இருந்தது.

‘மாப்பிள்ளை... மேத்ஸ் ஸாரா?’ என அதிர்ந்தவளின் இதயம், இப்பொழுது தான் தனது முழு அசுர வேகத்தையும் தன் துடிப்பில் காட்டியது.

‘ஒரு ஆறு வருஷத்துல சட்டுன்னு அடையாளம் பிடிபடாத அளவுக்கு கொஞ்சம் உடம்பு வச்சு பெரியவளா தெரியறாளே... அப்போ எல்லாம் ஒட்டடை குச்சி மாதிரி தானே இருப்பா...’

“என்ன யோசனை மாறா? பேசறியான்னு கேட்டேன், இல்ல... எதுவும் தனியா பேசறீங்களா?”

அவள் பதைபதைப்போடு இவனை பெற்றவரை பார்ப்பதை கண்டவன், “இல்ல இருக்கட்டும்பா.. வேணாம்!” என்று உடனே மறுத்து விட்டான்.

“ஓ... சரி, நீ எதுவும் பேச விரும்பறியாமா?”

அடுத்து தன்னிடம் நேரடியாக கேட்பவரை மிரண்டு போய் பார்த்து, அவசரமாக மறுத்து தலை அசைத்தாள். வாத்தியின் விழிகள் அவளையே அழுத்தமாக கவனித்து இருந்தது.

பூங்கோதை எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை, வாயையும் திறக்கவில்லை. ஏற்கனவே விருப்பம் இல்லாமல் கிளம்பி வந்தவருக்கு, வீட்டை பார்த்து இன்னமுமே மனது சுணங்கித்தான் போனது.

“என்னம்மா கோதை... நீ அமைதியா இருக்கியே? உனக்கு ஏதாவது கேட்கனும்னு இருந்தா இப்பவே வெளிப்படையா கேட்டுடு!”

பன்னீரின் பேச்சில் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவர், திரும்பி தன் கணவரையும், மகனையும் நோக்கினார். அவர்கள் இருவருமே இவரை அமைதியாக கவனித்து இருக்க, மெல்லிய பெருமூச்சை வெளியேற்றினார்.

“எனக்கு ஒன்னும் இல்லை அண்ணா, வீட்லயே பேசிட்டு வந்தது தானே... அடுத்து என்னென்னு நீங்க பேசி முடிவு எடுங்க!”

“என்னப்பா செழியா?” என நண்பனிடம் கேட்டார் அவர்.

“அவ்வளவு தான்... பையனுக்கும், பொண்ணுக்கும் பிடிச்சுடுச்சுன்னா, வீட்டுக்குப் போய் கலந்து பேசி நல்ல நாள் பார்த்துட்டு அடுத்து கல்யாண வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்!”

“ஆமா... யாரும் இன்னும் பொண்ணு, மாப்பிள்ளையோட சம்மதத்தை நேரடியா கேட்கவே இல்லையே...” என்று பன்னீரின் மனைவி கேட்டு வைக்க, பிரியாவின் முகம் கலக்கம் கொண்டது.

**********

அவர்கள் வெறுமனே சாற்றிச் சென்ற கதவை அவன் தாழிடுவதை மெதுவாக இமைகளை உயர்த்தி பார்வை இட்டவளுக்கு, அப்பொழுதே கட்டிலின் அலங்காரமும், அவன் எழுந்தப் பின்பும் அவள் இன்னமும் அமர்ந்தே இருப்பதும் மூளையில் உறைக்க, அவசரமாக எழுந்து நின்றாள்.

தன் மீதே நிலைத்து இருக்கும் ஆழ்ந்த பார்வையுடன் கணவன் திரும்பி வரவும், இவளின் நெஞ்சு உலர்ந்து போக பரிதவிப்புடன் நின்று இருந்தாள் பெண்.

“ஏன் நிக்கற? எதுவும் வேணுமா..?”

“இ.. இல்ல...” என திணறி மறுத்தாள்.

“அப்புறம் என்ன? உட்காரு!” என்று எதிரே கை காட்டியவாறு மெத்தையில் அமர்ந்தான்.

அவள் பெரும் தயக்கத்துடன் கட்டிலின் விளிம்பில் மெதுவாக அமர, அவளை மேலிருந்து கீழ்வரை விழிகளால் அளந்தான் அவன்.

“ஸோ.. இன்னியில இருந்து நீ என்னோட வொய்ப், ரைட்?”

தவிப்புடன் அவனிடம் ஒரு முறை உயர்ந்த விழிகள் மீண்டும் தாழ்ந்து விட, நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் ஆடவன்.

“லைஃபை நினைச்சா ஒரு நேரம் ரொம்ப சர்ப்ரைஸிங்கா தான் இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு, உன்னை இப்படி ஒரு சிட்சுவேஷன்ல திரும்ப மீட் செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணலை!” என்று உதட்டை பிதுக்கினான்.

அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, அவன் பேசுவதை எல்லாம் மௌனமாக காதில் வாங்கியபடி, தன் மடியில் பார்வையை பதித்து அமர்ந்து இருந்தாள்.

மாறனின் முகத்தில் மெல்லிய சலிப்பு தோன்ற, அதன் வீரியம் வார்த்தைகளாக உருமாறி பெண்ணிடத்தில் அழுத்தமாக சென்று சேர்ந்தது.

“ஆக்ட்சுவலி உன்னை வொய்ஃபா அக்செப்ட் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நீ என்னோட ஓல்ட் ஸ்டூடண்ட் அப்படிங்கறது சின்ன சங்கடம்னா, பளிச்சுன்னு பேச ட்ரை பண்ணாம ரொம்ப இன்ட்ரோவர்ட்டா இருக்கறது அடுத்த இம்சையா இருக்கு. என்ன சொல்றது? ப்ச்... ஓகே, முதல்ல என்னை நிமிர்ந்து பார்த்து நேரா பேசப் பழகு, அப்புறமா மத்ததை பார்த்துக்கலாம்!” என்றான் ஒருவித எரிச்சலுடன்.

அவனின் கடுமையில் அழுது விடாமல் இருக்க, கை விரல்களில் புடவையை இறுக்கியவள், தலையை மட்டும் லேசாக அசைத்து வைத்தாள்.

“ஹும்.. இதுக்கும் இவ்வளவு தான் ரியாக்ஸன்!” என முனகி விட்டு அவன் எழ, அவளும் பின்னோடு எழுந்துக் கொள்ள முயன்றாள்.

“ஹே... ஃபர்ஸ்ட்டு உட்காரு, இன்னமும் ஸ்கூல் படிக்கற நினைப்புலயே இருக்காத...”

அவளை அதட்டியபடி அலமாரியிடம் சென்று இரவு உடை ஒன்றை கையில் எடுத்தவாறு குளியலறை நோக்கி திரும்பியவன், சட்டென்று நின்று அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“ஆமா... நீதான் தலையவே நிமிர்த்த மாட்டியே, அப்போ இங்கேயே உன் முன்னாடி நான் ட்ரஸ் சேஞ் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இருக்காது இல்ல..?”

அதுவரை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை திகைப்புடன் பார்க்க, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

பதில் சொல்வது அறியாது பதற்றத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி அவள் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல, “அட ஆண்டவா.. நீதான் என்னை காப்பாத்தனும்!” என்று மேலே பார்த்து கூவி விட்டு, குளியல் அறைக்குள் நுழைந்தான் மாறன்.

கதவை தாழிடும் ஓசையை கேட்டப் பிறகு தான் சிறிது தெம்பாக தலையை உயர்த்தி, சுற்றும்முற்றும் அறையை பார்வை இட்டாள் பிரியா.

ஒவ்வொன்றாக அலசி எடுத்த விழிகளில், அங்கே ஓரமாக இருந்த மேசையின் மீது அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல்வேறு கணித புத்தகங்கள் விழவும், பீதியில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

‘அச்சோ... எதைப் பார்த்து நான் அரண்டு ஓடினேனோ, திரும்பவும் அங்கேயே வந்து சிக்கிக்கிட்டேனே...’

“என்ன அப்படி வெறிச்சு பார்க்கற? வேணும்னா எடுத்துப் படிச்சு பாரு!” என்ற நக்கலான குரல் காதில் விழவும் தான், மாறன் வெளியே வந்து விட்டதை உணர்ந்து திடுக்கிட்டு போனாள் பெண்.

முதன் முதலாக அவனை நேருக்கு நேர் பார்த்து விழித்தவளின் செயலில் புன்னகை வரப் பார்க்க, அதை முயன்று அடக்கினான் நாயகன்.

**********

உண்மையிலேயே வியந்து போன மாறன், “ஜஸ்ட்.. ஒரு என்டர்டெயின்மென்ட் நாவல்ல நிஜமாவே இவ்வளவு விஷயங்கள் இருக்குதாம்மா? அந்த அளவுக்கு மக்கள் கிட்ட இது எல்லாம் ரீச் ஆகுதா..!” என்றான் ஆச்சரியமாக.

“எல்லாமே அப்படியே ரீச் ஆகுதுன்னு சொல்லிட முடியாது மாறா.. சினிமால எப்படி யதார்த்தத்தை தாண்டி அதிரடியையும், அடாவடியையும் அதிக மக்கள் ரசிக்கறாங்களோ... அதே போல தான் நாவல்களும் பல விதமா பரிணாமம் அடைஞ்சு, அதுல வர்ற அடாவடி ஹீரோ, ஹீரோயின் கதைங்க தான் இப்போ ரீடர்ஸ் கிட்ட அதிகம் சக்சஸ் ஆகுது.

ஆனா அதைத் தாண்டி யதார்த்தத்தை விரும்புற வாசகர்கள் வட்டமும் குறிப்பிட்ட அளவுல இருக்கத்தான் செய்யுது. அவங்கள்ல ஒரு சில ரீடர்ஸ் கதையில வர சில இடங்களை அவங்க லைஃப்ல ஃபேஸ் பண்றதா, ஓப்பனாவே ரைட்டர்ஸ் கிட்ட ஷேர் பண்றதை நான் ஸைட்லயும், பேஸ்புக்லயும் பார்த்து இருக்கேன்!”

“ஹோ... பட்.. நான் ஒரு ஆர்ட்டிக்கிள் படிச்சேன்மா. இன்னிக்கு இருக்குற பேமிலி நாவல்ஸ் எல்லாம் ரொம்பவே தரம் இறங்கி, ரொமான்ஸ் அப்படிங்கிற பேருல லஸ்ட் பேஸ்ட் ஸ்டோரீஸ் தான் நிறைய என்கரேஜ் பண்றாங்க, எல்லாமே வெறும் வியாபாரத்துக்கும், பணத்துக்கும் நம்ம சமூக அமைப்பையே சீரழிக்கறாங்கன்னு ஒரு ஃபெமிலியர் மேல்(male) ரைட்டர் பயங்கரமா விமர்சனம் செஞ்சு இருந்தாங்க. ஸோ, நான் அதுல இப்படி ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலை, நீங்க சொல்றது கொஞ்சம் புதுசா தான் இருக்கு!” என்று தோள்களை குலுக்கினான்.

“ஆமாடா... நீ சொல்ற அந்த இலக்கியவாதியை எங்க பொண்ணுங்க எல்லாம் பேஸ்புக்ல கிழி கிழின்னு கிழிக்கத்தான் செஞ்சாங்க. அவரு சொல்ற மாதிரி மோசமான விஷயங்கள் இருக்குன்னாலும், பொத்தாம் பொதுவா எல்லா பெண் எழுத்தாளர்களையும் குறி வச்சு தாக்கிப் பேசினா, அவங்க எப்படி சும்மா இருப்பாங்க? குடும்ப நாவலுக்கு இருக்குற மிகப் பெரிய சாபம், சினிமால இருக்கற மாதிரி தரச் சான்றிதழ் இல்லாதது தான்.

அதனால அந்த வகையில மோசமா வெளியில வர கதைங்க எல்லாம் சுலபமா, குடும்ப நாவல் முக்காடு போட்டுட்டு நல்லா கல்லா கட்டிக்குறாங்க. இதுவே அப்படி ஒரு சர்ட்டிபிக்கேஷனோட நாவலுங்க வெளியில வருதுன்னு வை, தன்னோட புத்தகத்துக்கு மேலே “A” முத்திரை குத்தி கதையை வெளியில விடறதுக்கு ரொம்பவே தயங்குவாங்க. அதோட சமூகத்துல அவங்க மேலே ஒரு மோசமான அடையாளமும் விழுந்துடும் இல்ல... அதுக்கு பயந்தவங்களும் அதுல இருக்கத்தானே செய்வாங்க. பாரு.. எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போயாச்சு!”

“கண்டிப்பாம்மா... எதுக்கு இப்படி மைக் பிடிச்சு பேசாத குறையா, இவ்வளவு தம் கட்டி நீங்க பேசறீங்களோ எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை!” என்று தளர்வாக சாய்ந்து அமர்ந்தான் மாறன்.

“ம்... இப்படி பேச வேண்டியவளுக்கு பதிலா தான், நான் அவள் இடத்துல இருந்து பேசிட்டு இருக்கேன்!”

“ஹான்... என்ன? ப்ச்... மறுபடியும் உளற ஆரம்பிக்காதீங்க, சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லி முடிங்க!” என்றான் அவன் சலிப்பாக.

“சரி சரி.. அந்த ஜீவிகா பொண்ணை பத்தி பேச வந்து தான், இவ்வளவு தூரம் வேற விஷயங்களை பேசியாச்சு!”

“ஓகே, சொல்லுங்க. அந்தப் பொண்ணு ரொம்ப நல்லா கதை எழுதுவாளா?”

“நல்லா கதை எழுதுவாளாவா..? சரியா போச்சு போ, அவ்வளவு அருமையா எழுதுவா!”

“ம்...” என இழுத்து தன் தாடையை வருடியவாறு, “பில்டப் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே!” என்றான் கேலியாக.

“போடா... திரும்பவும் ஏதாவது கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடாத. இதுவரை அவள் எழுதின கதைகளோட பிளாட்டை சொல்றேன் கேளு, நீயே ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிடுவ!”

ஆர்வமாக கூறும் தாயை புன்சிரிப்புடன் பார்த்தவன், “ம்ஹும்... பார்க்கலாம்!” என்று நக்கலாக சிரித்தான்.

“டேய்...” என மீண்டும் கடுப்பானவர், அவன் தோளிலே ஒன்று ஓங்கி வைத்தார்.

அந்நேரம், “அத்தை...” என திரும்பவும் பெண் தயக்கத்துடன் அழைத்தாள்.

“மறுபடியும் என்னம்மா?” என்று கோதையும் அலுப்புடன் கேட்டார்.

“இல்ல... நீங்க ஆன்லைன் கதைங்க எல்லாம் ரொம்ப படிப்பீங்களா?” என்றாள் மெல்லமாக.

“படிப்பாளாவா..? அவள் தினமும் ஒரு தடவையாவது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காம தூங்க மாட்டா!”

செழியன் வேகமாக கூற, அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஆமா... படிப்பேன்!” என மருமகளிடம் அழுத்தமாக மொழிந்தார் அப்பெண்மணி.

“உங்க பேரை நான் அங்கே பார்த்தது இல்லையே...”

“ஏய்... இரு இரு, அப்போ நீயும் அம்மாவோட கேஸ் தானா.. நிறைய கதைங்க படிப்பியா?”

திகைப்புடன் கேட்கும் கணவனிடம் திரும்பியவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாற, “இருடா... முதல்ல நாங்க பேசி முடிச்சிடறோம்!” என்று மகனை தடுத்தார் பெற்றவர்.

“பேஸ்புக்ல, சைட்ல எல்லாம் என்னோட ப்ரொபைல் நேம்.. பூங்கோதை இல்ல, கோதை நாச்சியார்!”

அவர் கேலிச் சிரிப்புடன் மொழிய, “ஓ...” என இழுத்தவளின் இதழ்களும் லேசான வெட்கப் புன்னகையில் நெளிந்தது.

**********

Unai Kaivida Matten - Deepa Babu

 


உனை கைவிட மாட்டேன்

(இணையத்தில் வராத நேரடிப் புத்தகம்)

கதைக்கரு


என் பாணியில் ஒரு இலகுவான காதல் கதை. அவரவருக்கு என்று இவ்வுலகில் தனி ஒரு நியாயம் இருக்கிறது அல்லவா? அதைத்தான் தன்னவளின் தவறென்று பெரிதாக ஒன்றுமில்லை, அவளுடைய சூழ்நிலை மட்டும் தான் அவளை திமிர் கொண்டவளாக, மோசமானவளாக சித்தரிக்க காரணம் என்று அவளுக்காக குரல் கொடுக்கிறான் ஆடவன்.

“உனை காப்பேன் உயிராக” நாவலின் சஞ்சய் கதாப்பாத்திரம், இங்கே நாயகனாக களம் இறங்குகிறான். அவனுடன் இணைந்து உங்களுடன் பயணிக்க, அக்கதை மாந்தர்கள் மீண்டும் வருகிறார்கள்.

Unai Kaivida Matten - Amazon Kindle Link


**********

கதையிலிருந்து சிறு துளிகள்


போர்டிக்கோவில் வாகனத்தை நிறுத்தியவன் பெண்ணை கீழே இறக்காமல், தன்னிடம் இருந்த சாவியால் முதலில் வீட்டின் கதவை திறந்து, நேராக சென்று பிரணவிகாவின் அறைமுன் நின்றான்.

‘வேற வழியே இல்ல... இவகிட்ட தான் நாம ஹெல்ப் கேட்டாகனும். அவளை என் ரூம்ல தங்க வைக்கறது எல்லாம் சரிவராது!’ என்று யோசித்தவன், ‘நட்டநடு இராத்திரில கன்சீவா இருக்கவளை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கே...’ என சற்று சங்கடமாக உணர்ந்தாலும், மனதை தேற்றிக் கொண்டு கதவை தட்டினான்.

தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் தட்டியும் பெண் கதவை திறக்கும் வழி தெரியாததால், “கும்பகர்ணி... அவளுக்கு மேல இவ இருப்பா...” என்று புலம்பியவாறு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.

“ஹலோ... சொல்லு அத்தான்!” என முனகியபடி, லேசாக கொட்டாவி விட்டாள்.

“பார்த்து நிதானமா எழுந்து வந்து கதவை திற!”

“லூசு... சாவி எடுத்துட்டுப் போகலையா நீ? நேரங்கெட்ட நேரத்துல வருவேனு தெரியும் இல்ல... அப்புறம் எதுக்கு எடுக்காம போன..?”

“என்கிட்ட சண்டை போடறதுன்னா மட்டும் நல்லா தூக்கம் தெளிஞ்சிடுமே உனக்கு... வீட்டுக்கு உள்ள வந்துட்டேன், உன் ரூம் கதவை திறடி!” என்றான் கடுப்புடன்.

“என்ன? சரி இரு, வரேன்!” என்று இணைப்பை துண்டித்தாள்.

அடுத்த சில நொடிகளில் கதவை திறந்தவள், “இந்த நேரத்துக்கு தூங்கப் போகாம, என்னை ஏன் வந்து எழுப்பிட்டு இருக்க?” என்று முறைத்தாள்.

“ப்ச்...” என அலுத்தவன், “ஒரு சின்ன பிரச்சனை... நீதான் பார்த்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்!” என்றான் மெதுவாக.

“ஹ்ஹ... பாருடா, என்கிட்ட இவ்வளவு பவ்யமா பேசுவியா நீ...” என நக்கலாக சிரித்தாள்.

“அம்மு... விளையாடாத. நானே அங்கே, இங்கேன்னு அலைஞ்சு திரிஞ்சு ரொம்ப டயர்டா வந்து இருக்கேன்!”

“என்ன ஆச்சு அத்தான்? மப்பு எதுவும் அதிகமாகி எங்கேயாவது ஆக்ஸிடன்ட் செஞ்சுட்டியா... யாராவது துரத்திட்டு வராங்களா?” என்று கலவரம் ஆனாள்.

“வாயை கழுவுடி... பேச்சை பாரு. நான் எல்லாம் தெளிவா தான் இருக்கேன், என் கூட வந்து இருக்க ஒருத்தி தான் ஓவர் மப்புல மட்டையாகி கிடக்கா...”

“என்னது?” என்று விழிகளை விரித்தவள், “உனக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா... அதுவும் கூட சேர்ந்து குடிக்கற அளவுக்கு...” என இதழ்களை பிளந்தாள்.

“இல்ல... இது வேற பிரச்சனை. என்னை நிக்க வச்சிட்டே, வரிசையா கேள்வியா கேட்டு கொல்லாத. அவளை தூக்கிட்டு வந்து உன் ரூம்ல படுக்க வைக்கறேன், நீ என் ரூம்ல படுத்துக்கோ. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத பொண்ணை என் ரூம்ல தங்க வைக்கறது சரிவராது!” என்று பேசியபடியே மளமளவென்று கீழே இறங்கிச் சென்றான்.

‘இந்த அத்தான் என்ன சொல்றான், செய்றான்...?’ என குழம்பியபடி, அவன் சென்ற திசையை பார்த்து இருந்தாள் அவள்.

அடுத்து அவன் கைகளில் அள்ளி வந்த பெண்ணை பார்த்து, ‘யப்பா... என்ன... கலரா இருக்காடா இவ...!’ என்று வெகுவாக வியந்து நின்றாள் பிரணவி.

**********

“ஹாய்!”

தன் பின்னே கேட்ட குரலில் புருவம் சுருங்க திரும்பியவள் அவனை கண்டு வியந்து, “ஹாய்!” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

சஞ்சய் மௌனமாக முறுவலிக்க, “என்ன... இந்தப் பக்கம்?” என்று கண்களை இடுக்கினாள்.

“உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு, வந்துட்டேன்!”

முகம் மாற, “வாட் டூ யூ மீன்?” என கடினமாக கேட்டாள்.

அவனோ உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்க, பெண்ணின் முகத்தில் சலிப்பு தோன்றியது.

சோர்வாக கையில் இருந்த கூடையை அழுந்தப் பற்றியவள், “காபி சாப்பிட போலாமா?” என்றாள் அடுத்து வேகமாக நிமிர்ந்து.

“ம்... வொய் நாட்? லெட்ஸ் மூவ்!” என்று இயல்பாக முன்னால் நடந்தான்.

அவன் முகத்தில் தேவைக்கு அதிகமாக எந்த உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் தெரியாததை அவதானித்தபடி மெல்ல உடன் நடந்தாள் சஞ்சனா.

“சம்திங்... ஏதாவது சாட் ஆர்டர் பண்ணலாமா?”

“நோ... ஒன்லி காபி!” என்றாள் அழுத்தமாக.

“ஓகே...” என்றுவிட்டு அவள் கேட்டதை கொண்டு வர பணித்தவன், எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணின் முகத்தை பார்த்தான்.

“ஸோ... என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?”

அவளின் கேள்விக்கு அவன் தன்னுடைய தொழிலை கூற, கண்களில் கேலிச் சிரிப்புடன் அவனை பார்த்து இருந்தாள் அவள்.

“நான் அதைக் கேட்கலை...”

“வேற...” என மறுப்பாக தலை அசைத்தவன், “புரியலை!” என்றான்.

“ப்ச்...” என்கிற அலுப்புடன் உதட்டை சுழித்தவள், “நான் என்னை பார்க்க வந்ததை கேட்டேன்!” என்று தெளிவுப் படுத்தினாள்.

“ஹோ... எதுக்கும் இப்படி கொஞ்சம் தெளிவாவே பேசினா நல்லா இருக்கும், இதெல்லாம் எனக்கு சுத்தமா பழக்கம் இல்லை!”

“ஃபைன்... பழக்கம் இல்லாததை எதுக்கு செய்ய ட்ரை பண்றீங்க?”

“தெரியலையே... அப்பப்போ உன்னோட தாட்ஸ் வந்து என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. என்னோட கஸின் பிரணவி... அன்னிக்கு வீட்டுல பார்த்தியே, அவள் கூட சொன்னா... நீ ஏதோ வித்தியாசமா தெரியறேன்னு... எனக்குமே கூட கொஞ்சம் அது புரியுது. ஆனா என்னன்னு தான் தெளிவா தெரிஞ்சிக்க முடியலை!”

உண்மையில் அவனுடைய வார்த்தைகள், சஞ்சனாவை மண்டை காய வைத்தது.

அவள் நெற்றியை தாங்கிக் கொள்ளவும், “தலைவலிக்கு தான் காபி கேட்டியா?” என்று மெதுவாக கேட்டான் சஞ்சய்.

நிமிர்ந்து அவனை முறைத்தவள், “உங்களை பார்த்ததால தான் எனக்கு தலைவலியே வந்துச்சு!” என்று பல்லைக் கடித்தாள்.

“ஓ...” என உதட்டை குவித்தவன், “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? வேணும்னா... இன்னொரு காபி எக்ஸ்ட்ராவா வாங்கி தரேன்!” என்றான் அசட்டையாக.

**********


“இன்னும் என்ன யோசனை?” என்றான்.

“இல்ல... என்ன வேண்டறதுன்னு தெரியலை...”

அவளை வியப்புடன் பார்த்து, “உன்னை தூக்கிட்டுப் போய் மியூஸியத்துல தான் வைக்கனும். மனுஷனா பிறந்து வாழ்ற எல்லாருக்குமே ஏதாவது தேவை இருந்துட்டே தான் இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமா வரிசையா வேண்டுதல் வச்சிட்டே இருப்பாங்க. நீ என்ன இப்படி சொல்ற?” என்று இதழ்களை பிதுக்கினான்.

“அது... நான் பெருசா சாமி கும்பிட மாட்டேன், அதனால எதுவும் வேணும்னு கேட்க தோணினது இல்ல...”

“ம்... ரொம்ப இல்லைன்னாலும் எனக்கு எல்லாம் எங்க வீட்டுல பழகிடுச்சு!” என்றவன், “இதுக்கு ஏன் இவ்வளவு திணறுற...? ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணை மூடி உட்கார்ந்து, உனக்கு ஏதாவது வேணும்னு தோணுதான்னு கொஞ்சம் டீப்பா யோசிச்சு பாரு. அப்புறம் அதையே ஒருமுகமா மெடிட்டேட் பண்ணு!” என்றான் இலகுவாக.

“அதெல்லாம் தேவையில்லை... இப்பவே ஒன்னு வேணும்னு தோணிட்டு தான் இருக்கு!”

“சூப்பர் போ... அப்புறம் என்ன? ப்ரொஸீட் பண்ணு!”

“இல்ல... அதுக்கு உன் பர்மிஷன் வேணும்!”

“என்ன...?” என்று நெற்றியை சுருக்கியவன், “நீ வேண்டுறதுக்கு நான் எதுக்கு பர்மிஷன் தரனும்?” என்றான் புரியாமல்.

“நான் வேண்டுறதே உன்னை பத்தி தானே...”

பெண் மெதுவாக கூற, சஞ்சய் அசையாது அவளையே பார்த்து இருந்தான்.

“வந்து... அப்படி வேண்டலாமா, கூடாதான்னு எனக்கு சரியா தெரியலை...” என்றாள் தடுமாற்றத்துடன்.

இன்னமுமே ஆடவன் இதழ் திறவாமல் இருக்க, “நா... நான் என்ன செய்யட்டும்?” என்று கண்கள் கலங்க அவன் முகம் பார்த்தாள்.

நாயகனின் இதயத்தினுள் ஏதேதோ கலவரம் நிகழ, அதைமீறி அவளின் கண்ணீர் சுமந்த விழிகள் மனதை பாதித்தது.

“பர்மிஷன் க்ரான்டட்... உனக்கு எப்படி தோணுதோ, அப்படியே ப்ரே பண்ணிக்கோ!” என்றான் அமைதியாக.

கன்னங்களில் நீர் உருண்டு இறங்க, “நிஜமாவா? அ... அப்படியே வேண்டிக்கட்டுமா...” என்றவளின் தொண்டைக்குழி சீரற்ற மூச்சால் மேலும் கீழும் தவிப்புடன் ஏறி இறங்கியது.

**********


இரண்டு நாட்கள் கழித்து தன் அருகில் இருந்தவனிடம், “சஞ்சு... அம்மா ஏதாவது கேட்டாங்களா?” என மெல்லமாக விசாரித்தாள் சஞ்சனா.

“ம்...” என்றபடி அவள் கையை எடுத்து, தன் விரல்களை கொண்டு அவளின் உள்ளங்கையில் மிருதுவாக கோடு இழுத்தவாறே, “இல்லையே...” என்று தோள்களை குலுக்கினான்.

“அச்சோ... என்ன பண்ற? எனக்கு கூசுது...” என்றவள் கையை உருவ முயல, தன் விரல்களோடு அவளுடையதை அழுந்த பிணைத்தபடி நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்தான் சஞ்சய்.

“எதுனாலும் ஃபேஸ் பண்ண ரெடி ஆகிக்கோ சஞ்சு... சும்மா அப்செட் ஆகக்கூடாது!”

அவனின் மொழியில் மெல்ல முகம் வாடியவள், “ம்...” என தலை அசைக்க,

“அதுக்குள்ள ஃப்யூஸ் போகற பார்த்தியா?” என்று கண்டனத்துடன் முறைத்தான்.

“ப்ச்...” என சோர்வாக பார்வையை திருப்பியவளை பக்கத்தில் இழுத்து, மென்மையாக அவளின் கன்னத்தில் அவன் உதடுகளை உரச, தேகம் சிலிர்த்து விழிகளை மூடிக்கொண்டாள் பெண்.

“டோன்ட் டெம்ப்ட் மீ சஞ்சு...”

மயக்கத்துடன் அவள் முனகிய நிமிடம், ஆடவனின் இதழ்கள் இரகசியச் சிரிப்பில் மலர்ந்து தன்னுடைய அதரங்களை நோக்கி மெதுவாக ஊர்ந்து வருவதை உணர்ந்து வேகமாக சுதாரித்தவள், அவசரமாக அவனை நெருக்கி அணைத்து கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

“ஏய்... எதுக்கு இப்படி அரெஸ்ட் பண்ற?”

“நான் எங்கே அரெஸ்ட் பண்ணேன்? உன்னை ஆசையா கட்டிப்பிடிச்சு இருக்கேன், அவ்வளவு தான்!” என்றாள் கள்ளச்சிரிப்புடன்.

“வாலு...” என அவளின் இடையில் கிள்ளி துள்ளி விழ வைத்தவன், அவள் திரும்பவும் சுதாரிக்கும் முன் பட்டென்று குனிந்து இருவரின் இதழ்களையும் ஒன்றாக பூட்டிக் கொண்டான்.

அவன் பிடரி முடியை விரல்களில் இறுக்கி, “சஞ்சு...” என கிறங்கியவள், வேகத்தோடு தன் உதடுகளை பிரித்து, அவனுடைய தோளில் புதைந்து தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.

“இப்படியே எதையும் யோசிக்காம என்னை மட்டும் நினைச்சிட்டு இரு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்!”

“உன்னால அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியும்னு நம்பிக்கை இருக்கா?”

நிமிர்ந்து சிறிது பயத்துடனே கேட்பவளின் நெற்றியில் முட்டியவன், “டூ ஹன்ட்ரட் பர்சென்ட் இருக்கு!” என்று அழுத்தமாக உரைத்தான்.

“ஹோ...” என தெளிந்தவள், அவனை மலர்ச்சியுடன் இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“ஓகே... கிளம்பலாமா?”

“ம்... இன்னும் கொஞ்சம் நேரம்!” என்று கெஞ்சி அவனை மேலும் இறுக்கிக் கொள்பவளின் முதுகை சிரிப்புடன் வருடிக் கொடுத்தான் சஞ்சய்.

“ஹான்... இப்போ போகலாம்!”

விலகி புன்னகையுடன் கூறுபவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன், “குட் கேர்ள்!” என்றுவிட்டு காரை எடுத்தான்.

**********

திரும்பி வந்த சஞ்சயின் கரங்களில் பழச்சாறு கோப்பைகள் அடங்கிய தட்டு இருக்க, அனைவருக்கும் அதைக் கொடுத்தான். குறிப்பாக தாயின் மனதை எந்த விதத்திலும் கடுப்பாக்க கூடாது என்றே தெளிவாக அவர்கள் பக்கம் முதலில் சென்றவன், இறுதியாக தான் தன்னவளிடம் வந்து அருகில் அமர்ந்தான்.

“செம அத்தான்... அப்படியே பொண்ணு பார்க்கற அட்மாஸ்பியரை சூப்பரா கொண்டு வந்துட்ட. என்ன ஒன்னு...? உல்டாவா, சஞ்சனா உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்து இருக்கா!” என்று கேலி செய்து சிரித்தாள் பிரணவி.

தன் வீட்டினரை பற்றிச் சொல்லி சற்று தளர்ந்து போய் இருந்தவளை தேற்றவே, அந்த வேலையை செய்து இருந்தவன் சட்டென்று திகைத்தான்.

‘இவள் வேற தேவை இல்லாம எதையாவது உளறி இந்த அம்மாவை கிளப்பி விடறாளே...’ என்ற அவனின் பயத்திற்கு ஏற்றவாறு தான் சாரதாவும் அண்ணன் மகளை கடிந்து கொண்டார்.

“அம்மு... கண்டபடி உளறதை நிறுத்து நீ...”

“ஐயோ... இல்ல அத்தை, சும்மா விளையாட்டுக்கு...”

அவளை முடிக்க விடவில்லை, “இதுல என்ன விளையாட்டு...? என் பையன் ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது!” என்று முறைத்தார்.

“ஆமாமா... உன் பையன் பெரிய மகாராஜாவே தான், அவன் கிரீடத்தை கீழே இறங்க விட்றாத...” என்று செல்லமாக நொடித்தாள் பிரணவி.

சாரதாவின் உஷ்ணமான பார்வையை தாண்டி, வந்து இருந்த பெண்ணின் இதழ்கள் லேசான புன்னகையில் விரிவதை ஆண்கள் இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதோடு அவளின் கண்கள் அத்தனை காதலை சுமந்து தங்கள் வீட்டுப் பிள்ளையை பார்ப்பதையும், கவனமாக கவனித்தனர்.

“அவங்க சொல்றது உண்மை தான் பிரணவி, உன் அத்தான் ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது... என்னை மாதிரி இருக்கறவளுக்கு தான் சஞ்சுவோட ப்ரீஸியஸ் வேல்யூ தெரியும்!”

ஒருவித நெகிழ்ந்த நிலையில் ஆழ்ந்து அனுபவித்து சொல்லும் பெண்ணின் குரலில், அனைவரும் அவளை அமைதியாக ஏறிட்டனர்.

“இவளுக்கு போட்டியா சும்மா எதையாவது உளறாம அமைதியா இரு நீ!” என்று அவளை கண்டித்தான் சஞ்சய்.

“நோ சஞ்சு... ஐ க்னோ வெரி வெல், வாட் ஐ டிஸர்வ். என்னோட லக்கி சார்ம் நீ!”

கண்ணில் நீரோடு புன்னகைக்கும் பெண்ணை வருத்தத்துடன் பார்த்து, “உன்னோட வேல்யூ புரியாம, உன்னை நீயே டௌன் பண்ணிக்காதன்னு பல முறை சொல்லி இருக்கேன்!” என்று அவள் கரம்பற்றி அழுத்தினான்.

“எனக்கே தெரியாத என்னோட வேல்யூ எல்லாம் உன்னால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும்பா!”

பெண்ணின் சோர்ந்த முகத்தில் மின்னல் கீற்றாய் ஆனந்த வெளிச்சம் மின்னி மறைய, ஒரு பெருமூச்சுடன் அவள் கன்னத்தை தட்டி விட்டு தன் வீட்டு மனிதர்களிடம் திரும்பினான் அவன்.

“நான் ஏற்கனவே இவளை பத்தி உங்க கிட்ட சுருக்கமா சொல்லிட்டேன். இன்னும் என்ன தெரிஞ்சிக்கனும்னு நினைக்கறீங்க?” என்ற கேள்வியை பொதுவாக கேட்டாலும், தாயை குறிப்பாக பார்த்தான் சஞ்சய்.

“முதல்ல இருந்தே என்னை அப்செட் ஆக்குற ஒரே விஷயம்... இவளோட கேரக்டர் தான்!” என்றவர் மகன் எதையோ வேகமாக கூற வரும் முன்னே அவசரமாக அவனை தடுத்தார்.

“நான் இவகிட்ட தான் பேசனும் சஞ்சய்!” என்றார் சாரதா அழுத்தமாக.

“ம்மா...” என்று இயலாமையுடன் அவன் விளிக்க,

“நோ ப்ராப்ளம் சஞ்சு... என்கிட்ட பேசறதுக்கு தானே கூப்பிட்டு இருக்காங்க, அப்புறம் ஏன் அவங்களை ரெஸ்ட்ரிக்ட் பண்ற?” என்று அவனை அடக்கினாள் சஞ்சனா.

“ஓகே... அப்ஜெக்ஸன் ஒன்னும் இல்லை. ஆனா நீங்க ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப முக்கியம், உங்க மனசு வருத்தப்படற மாதிரியான பேச்சுக்களை எப்பவும் நான் விரும்ப மாட்டேன்!” என்று தன் எதிர்பார்ப்பையும் நாசூக்காக தெரிவித்தான் அவன்.

நேரடி புத்தகமாக தற்பொழுது விற்பனைக்கு தயாராகி விட்டது.



Mudiya Oviyam Nee - Deepa Babu

 



கதைக்கரு


என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சிநேகிதியின் வாழ்வை தழுவி கற்பனையில் உதித்த நாவல். சிலருக்கு கதையின் கரு கொஞ்சம் முரண்பாடாக கூட தெரியலாம். ஆனால் எனக்கு அவ்வாறு தவறாக தோன்றாததால் நான்கைந்து வருடங்களாக சிறிது தயங்கி கிடப்பில் போட்டு இருந்த கதையை தூசு தட்டி எடுத்து முழு நாவலாக உருவாக்கி இருக்கிறேன்.

இக்கதையின் மாந்தர்கள் தங்களின் மேம்பட்ட குணங்களினால் வாசிப்பவர்களை நிச்சயம் கவர்ந்து இழுப்பார்கள் என நம்புகிறேன். சற்றுப் பிசகினாலும் விரசமாக போய்விடும் என்கிற காரணத்தினால் மிகவும் கவனமாகவே கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கிறேன். மீண்டும் எனது கைவண்ணத்தில், மற்றுமொரு கதைக்களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,

தீபா பாபு


Mudiya Oviyam Nee - Amazon Ebook Link



***********


கதையிலிருந்து சிறு துளிகள்



“அப்போ... காலையில நான் சொன்ன மாதிரி டிவோர்ஸுக்கு ரெடியா தான் இருந்து இருக்கே!”

நவ்யுத் கூர்மையாக கேட்கவும் தடுமாறியவள், “வேற என்ன செய்ய முடியும்?” என்று முனகினாள்.

“ம்... முதல்லயே தெளிவா என் வாழ்க்கையில வராம இருந்து இருக்கனும் நீ!”

முகம் கசங்கியவள், “அதுக்குத்தான் அவங்க விடலையே... உங்க தாத்தா மூலமா தன் பையனோட தொழிலை முன்னுக்கு கொண்டு வர என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க!” என்றாள் இயலாமையுடன்.

“சரி... நீ தனியா போகனும்னு முடிவு பண்ணிட்ட, என் நிலைமையை நினைச்சுப் பார்த்தியா? ஒரு டிவோர்ஸியா எல்லார் முன்னாடியும் நிக்கனும் நான்!”

நெற்றிச் சுருக்கத்துடன் நிமிர்ந்தவள், “அதனால என்ன? பொதுவா இந்த மாதிரி சங்கடம் எல்லாம் பொண்ணுங்களுக்கு தானே வரும், நீங்க ஆம்பிளைங்க உங்க வசதிக்கு எப்படி வேணா வாழ்க்கையை அமைச்சிக்கலாமே... அதோட நீங்க பணக்காரர் வேற, ரொம்ப சுலபமா பொண்ணுங்க கிடைப்பாங்க!” என்றாள் அலட்சியமாக.

‘அடிப்பாவி...’ என பார்த்தவன், “உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? என்னை பத்தி எதுவும் தெரியாம, என்னோட கொள்கைகள் என்னென்னும் தெரிஞ்சிக்காம, நீ எப்படி உன் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம்? உன்னோட சேர்ந்து என் வாழ்க்கையும் தான் பாதிக்குது அப்படிங்கும் போது, நீ என்கிட்ட நேரா வந்து பேசி இருக்கனும் இல்ல...

ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒரு லவ், ஒரு வொய்ஃப், ஒரு லைஃப்னு எனக்கு உள்ள நானும் சில சட்ட, திட்டங்கள் வச்சு இருக்கேன். அதை எல்லாம் உன் வசதிக்கு மொத்தமா மாத்தி இருக்க. என்னை சுத்தமா கலந்துக்காம, நீயா எப்படி இப்படி தன்னிச்சையா ஒரு முடிவு எடுத்த? சொல்லு... உன் பிரச்சனையை என்கிட்ட நேர்ல வந்து பேசி இருக்கனுமா, இல்லையா?” என்றான் கோபமாக.

அவளுமே அப்பொழுது தான் அதை யோசிக்க, ‘அச்சோ... ஆமா, இவர் சொல்ற மாதிரி நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? இவரு கிட்ட பேச கொஞ்சமும் ஸ்டெப் எடுக்கலையே நான்... எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டேன்!’ என கலக்கம் கொண்டாள்.

தன்னை மிரண்டு பார்ப்பவளை அழுத்தமாக பார்த்தவன், “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? பதிலை சொல்லு...” என அதட்டினான்.

“நா... நான்... இதை எல்லாம் இப்படி யோசிக்கவே இல்லை. அம்மா பத்தி, என்னை பத்தி மட்டும் தான் நினைச்சு இருக்கேன். தப்பு தான்... புரியுது...” என மூக்கின் நுனி சிவக்க கண் கலங்கியவள், “அப்போ கொஞ்சமும் தோணவே இல்லை, ரொம்ப செல்ஃபிஷா நடந்து இருக்கேன். ஸாரி...” என மன்னிப்பு கேட்டு விட்டு, “இப்போ என்ன செய்றது?” என்று பரிதாபமாக கேட்டாள் ராகவி.

அவ்வப்பொழுது தன்மானத்திலும், ரோஷத்திலும் மட்டுமே பொங்கி எழுபவள் இன்னமும் சிறுமியாகவே இருக்க, உள்ளுக்குள் அவளை ரசித்தாலும், வெளியே இரும்பாகவே காட்டிக் கொண்டான் கணவன்.

“என்ன செய்றது? வாழ்ந்து தான் ஆகனும்!”

பட்டென்று வெடிப்பவனை புரியாது பார்த்தவள், “ம்...?” என்று கேட்க, இவனுக்கு தான் மீண்டும் இதயம் சலனப்பட்டது.

***


‘என்னடா இது?’ என இவனுக்கு தர்மசங்கடமாக இருக்க, அவளுக்கு படபடப்பாக இருக்க, மெதுவே ஆற்றை நோக்கி நடந்தனர்.

“கீழே கவனமா பார்த்து நடக்கனும். இது மண் பாதை, சமதளமா இல்லாம கல்லுங்க வேற இருக்கும்!”

“ஓ...” என்றவள் அவன் சொல்படி கவனத்துடன் நடந்தாள்.

ஆற்றின் அருகே வந்து விடவும் அவளிடம் காண்பிக்க வேண்டி திரும்பியவன், ஏற்கனவே அதை பார்த்து விட்டதற்கு அடையாளமாக மெல்லிய பூரிப்புடன் அடி எடுத்து வைப்பவளை கண்டு முகம் கனிந்தான்.

“ஒரு அஞ்சு நிமிஷம் நிதானமா ஆத்து தண்ணில நின்னு காலை நனைச்சிட்டு, வேடிக்கை பார்த்துட்டே போகலாம். இப்போ பாதையில கவனம் இல்லைன்னா தடுமாறி விழனும்!”

திடுக்கிட்டுப் பார்த்தவள், “இல்ல... அது எல்லாம் வேணாம்!” என்றாள் அவசரமாக.

‘பெரிம்மா சொல்ற மாதிரியே வேணாம் பாட்டு ஆரம்பிச்சிட்டா...’

பதில் ஏதும் தராமல் அவன் மௌனமாக நடக்க, இவளும் அவனை பின்பற்றினாள்.

“சில நேரம் படி வழுக்கும், அழுத்தமா கால் வச்சு இறங்கனும்!”

தலை அசைத்தவள் பயந்து பயந்து பாதம் பதித்து இறங்க, தன் நமட்டை கடித்து புன்னகையை அடக்கியபடி அவளுடன் இறங்கினான் நிஜந்தன்.

தண்ணீரில் கால்களை நனைத்ததும் அவள் மேனி சிலிர்க்க, “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்கு!” என்றாள் ஆர்வமாக.

தன்னை மீறி அவளாக பேசிய முதல் பேச்சு. திரும்பி பக்கவாட்டில் பார்த்தான், அவள் கவனம் இவனிடத்தில் இல்லை. முகம் முழுவதும் பெரும் உற்சாகத்தில் திளைத்து இருந்து, கருவிழிகள் ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாக சுழன்று, புதிதாக தெரிந்த ஒவ்வொன்றையும் ஆவலுடன் படம் பிடித்தது.

பார்த்த நிமிடம் முதலாக எந்நேரமும் கலக்கம், பதற்றம், கவலை என்றே மாற்றி மாற்றி சுமந்து பரிதவித்து இருந்த அந்தப் பூ முகம், இப்பொழுது தான் இத்தனை தூரம் மலர்ந்து ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அதை கலைக்க மனம் வராமல் அமைதியாக அருகில் நின்று இருந்தான் அவன்.

முழுதாக பத்து நிமிடங்கள் கடந்த பிறகே மெல்ல உணர்வுக்கு திரும்பி, அவனை பார்த்தாள் சுரபி.

“இங்கே வேற ஏதாவது செய்யனுமா?”

“என்ன?” என்று புருவங்களை சுருக்கினான்.

“இல்ல... நேரம் ஆகிடுச்சு போலிருக்கே!”

“ம்... போகலாம்!”

அவன் திரும்பி படிகளில் ஏறத் துவங்க, ‘எதுக்கு இவ்வளவு நேரம் இங்கே சும்மா நின்னோம்?’ என புரியாமல் அவன் பின்னே ஏறினாள் அவள்.

***


ராகவியின் உபயத்தால் அவளுடன் பேசி, பழகுவதில் ஓரளவு ஆங்கிலம் நன்றாக புரியும் என்றாலும் அவன் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாறி விட்டாள் தான். பிறகு மனைவி என்கிற சொல்லோடு தொடர்பு படுத்தி, அவனிடம் வெளிப்படும் அதீத கோபத்திலும் சரியாக உணர்ந்து கொண்டாள்.

அதில் இன்னும் கொஞ்சம் மிரண்டு, “அச்சோ... அவங்க மனசுல இப்படியா பதியறது? நீங்க...” என எதையோ சொல்ல விழைந்தவளை தனது சொற்களால் மிரட்டி விட்டான் அவன்.

“சுரபி... ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சன்ஸ். நான் அதைவிட்டு வெளியில வரனும்னு நினைக்கறேன், மறக்கனும்னு விரும்பறேன். நீங்க திரும்பத்திரும்ப அதையே பேசி என் மனசுல எதையும் விபரீதமா பதிச்சிடாதீங்க... காட் இட்?”

அவன் அழுத்தமாக சொன்னதில் இவள் முதுகு தண்டுவடம் சில்லிட, உறைந்து போய் பார்த்தாள்.

“புரிஞ்சுதா...?”

“ம்...” என்றாள் கலக்கத்தோடு.

“ஓகே... எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும், நீங்களும் ச்சில் ஆக ட்ரை பண்ணுங்க!” என்று கண்களை மூடி சாய்ந்து விட்டான்.

பயணம் முடியப் போகும் நேரம் நெருங்கவும், தன்னால் எழுந்து கொண்டவன் திரும்பி பார்க்க, சுரபி சோர்வாக வெளியே பார்த்து இருந்தாள்.

இவனுக்குமே அவள் நிலை சங்கடத்தை தான் கொடுத்தது. ஆனால் இவன் திட்டமிட்டா எதுவும் நடந்தது... அவளாக வந்தாள், பேசினாள். அதற்கு நான் பொறுப்பேற்று அவளிடம் போய் தெளிவுப்படுத்த வேண்டும் என்றால் அது எல்லாம் நடக்க கூடிய காரியமா என்று இப்பொழுதும் கடுகடுப்பு கிளம்பியது.

‘நோ... அதைவிட்டு வெளியே வா நிஜா. சும்மா அந்தப் பிசாசையே நினைச்சுக்கிட்டு...’ என சலித்தவனாக அருகில் இருந்தவளை அழைத்தான்.

அவள் திரும்பி பார்க்க, “ஏர்போர்ட்ல அவளை பார்த்ததையும் சரி, பேசினதையும் சரி... யார் கிட்டயும் சொல்ல வேணாம்!” என்றான்.

“ஹான்... சொல்ல மாட்டேன்!”

“பெரிம்மா, அக்கான்னு யார் காதுக்கும் விஷயம் போக கூடாது!”

அவள் தலை ஆட்ட, “ஆமா... இதை மறந்துட்டேனே. நீங்க தான் உங்க பொண்ணு கிட்ட எல்லாம் சொல்லிடுவீங்களே...” என சந்தேகமாக இழுத்தான்.

திருதிருவென்று விழித்தவள், “பாப்பா கிட்டயும் சொல்ல கூடாதா?” என கேட்டாள்.

“கண்டிப்பா கூடாது... அவளுக்கு தெரிஞ்சா அடுத்து நவிக்கு போகும், அப்படியே அக்கா, பெரிம்மான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!”

“ஓ... சரி, சொல்லலை!”

“நம்பலாமா?” என்று அவன் கேலிப் புன்னகையுடன் கேட்க,

இவள் முகத்திலும் சின்ன ஆசுவாசம் பிறந்து, “ம்... நம்பலாம்!” என முறுவலித்தாள்.

***


ஸ்வப்னாவிடம் முதல் ஆளாக இருந்து மருதாணி வைத்து இருக்கும் தன் மனைவியை கண்டு நவ்யுத்தின் இதழ்கள் புன்முறுவல் பூக்க, அருகில் லேசாக தொண்டையை செருமினான் ஹர்ஷா.

அவனிடம் கண்களை இடுக்கியபடி திரும்பியவன், “என்னடா?” என்றான் அதிகாரமாக.

“தெரியலை மாம்ஸ்... தொண்டையில ஏதோ கிச்சுக்கிச்சு போல இருக்கு!”

“ம்... அங்கே ஓரத்துல பெரிய தடியை சாச்சு வச்சு இருக்காங்க பாரு, அதை எடுத்துட்டு வா. வாயை பொளந்து ஒரே குத்துல சிக்கிட்டு இருக்கறதை வயித்துக்கு உள்ள தள்ளிடறேன்!”

“அட கொலைகார பாவிகளா... நான் போய் என் சித்தப்பா கிட்ட உட்கார்ந்துக்கறேன்!” என எழுந்துச் சென்றான்.

தன்னிடம் வந்து அமர்பவனை கண்ட நிஜந்தன், “என்னடா பம்மிட்டு வர்ற?” என சந்தேகமாக பார்த்தான்.

“நான் என்ன பம்முறேன்... இந்த நவி மாம்ஸ் அநியாயம் பண்றாரு!”

அவன் பொருமலில் அக்கா மகனை பார்த்த நிஜந்தன் சிரித்தவாறு, “ஏன்? என்ன செஞ்சான்?” என விசாரித்தான்.

“ம்... அவரு பொண்டாட்டியை சைட் அடிக்கறதை லேசுபாசா கேட்டுட்டேனாம், அதுக்கு டெர்ரர் பேஸ் காண்பிக்கறாரு!”

அவன் புலம்பலில் பெண்கள் கூட்டத்தின் பக்கம் பார்வையை விரட்டியவன், பின் நெற்றியை சுருக்கினான்.

‘இவளை எங்கே காணலை? வழக்கம்போல வேணாம் பாட்டு படிச்சிட்டு உள்ளயே உட்கார்ந்து இருக்காளா...’

“யாரை சித்தப்ஸ் தேடறீங்க?”

சட்டென்று தோன்றிய திகைப்பை மறைத்து, “நான் யாரை தேடறேன்? எல்லாம் என்ன பண்றாங்கன்னு பார்த்தேன்!” என்று சமாளித்தான்.

“மருதாணி வைக்கற இடத்துல என்ன தோசை சுட்டா சாப்பிடுவாங்க... எல்லாம் மருதாணி தான் வச்சிட்டு இருப்பாங்க!”

பல்லைக் கடித்தவன், “உன்கிட்ட அவன் டெர்ரர் பேஸ் காண்பிச்சதுல தப்பே இல்லைடா!” என முறைத்தான்.

“போங்க சித்தப்ஸ்... நீங்களும், உங்க மருமகனும் ஒரு டைப்பா தான் சுத்தறீங்க. டேய் அண்ணா... நீயாவது என்கிட்ட ஒழுங்கா பேசுடா!” என்று அருண் புறமாக திரும்பி அமர்ந்தான் ஹர்ஷா.

“அதுக்கு நீ ஒழுங்கா பேசனும்டி... போயிடு அங்கிட்டு. நான் பிரேம் அண்ணா கூட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்!”

“ஆமா... ரெண்டு பேரும் முக்கியமா பேசி அப்படியே கோயமுத்தூருக்கும், மேட்டுப்பாளையத்துக்கும் நடுவுல மெட்ரோ ட்ரைன் விடப் போறீங்க. ஓவர் அலட்டலா இல்ல இருக்கு...” என்றவன் நொடிக்க,

“உன்னை...” என்று அருண் கழுத்தை நெரிப்பது போல் கைகளை கொண்டு வரவும், ஹர்ஷா அலறியடித்து அங்கிருந்து ஓடி விட்டான்.

ஆண்களின் பலத்த சிரிப்பு ஒலியில் திரும்பிய பெண்கள், தங்களை நோக்கி தலைதெறிக்க ஓடி வருபவனை புரியாமல் பார்த்தனர்.

“நீ ஏன்டா இப்படி ஓடி வர?”

“போங்க பாட்டி... அங்கே எல்லாரும் டூ பேட். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்!”

“என்னத்தையோ சேட்டையை இழுத்துட்டு, தப்பிச்சு ஓடி வந்து இருக்கான் இவன்!”

சரியாக கணித்து சொல்லும் ஸ்வப்னாவை முறைப்பாக பார்த்தவன், “நாளையில இருந்து உங்க பிள்ளைங்களை நீங்களே பார்த்துக்கோங்க. என் தலையில கட்டினீங்க, நடக்கறதே வேற...” என்றான் விறைப்பாக.

“டேய்... டேய்... என் செல்லம் இல்ல... அண்ணி சும்மா விளையாடினேன்டா. உனக்கு வேணும்னா எல்லாரை விட அழகா மருதாணி வச்சு விடறேன், கையை காட்டு!” என்று தாஜா செய்தாள் பெரியவள்.

“எனக்கு எதுக்கு அதெல்லாம்... இந்தாங்க, இவங்களுக்கு வேணா வச்சு விடுங்க!”

அங்கே வந்த சுரபியின் கையை பிடித்து பட்டென்று முன்னே இழுத்துக் கொடுத்தான் ஹர்ஷா. ருக்மணிக்கு மாத்திரை, மருந்து சாப்பிட வெந்நீரை வைத்து எடுத்து வந்து இருந்தவள், அவன் செயலில் திடுக்கிட்டு வேகமாக கையை இழுத்துக் கொண்டாள்.

“எனக்கு எல்லாம் வேணாம்!”

“ஆரம்பிச்சிட்டாடா...” என்று தலையில் கை வைத்துக் கொண்டார் மூதாட்டி.

“சரி, உன்னோட ஆசையை ஏன் கெடுப்பானேன்... உன் சித்தியை பிடிச்சு இழுத்து உட்கார வை. மகளுக்கு முடிச்சிட்டு அடுத்து அம்மாவுக்கு வரேன்!”

ஸ்வப்னா அலட்டாமல் கூறவும், “இல்ல... தம்பி சும்மா விளையாடறாங்க. நீங்க மத்தவங்களுக்கு பாருங்க!” என்றாள் சுரபி அவசரமாக.

“ஏன்டா ஹர்ஷா... நீ வந்து இத்தனை நாள் ஆகியும், எப்படிடா இவங்க இப்படியே இருக்காங்க. நமக்கு எல்லாம் எத்தனை மரியாதை பார்த்தியா?”

“என்ன செய்றது? உங்களை மாதிரி ரௌடிங்களை பார்த்து எங்க சின்ன அத்தைக்கு தன்னால மரியாதை வந்துடுது. அப்படித்தானே அத்தை...”

வைசாலி நக்கல் செய்யவும், “சித்தி... அப்படியா?” என்று நெஞ்சில் கை வைத்தான் ஹர்ஷா.

அவனுடைய அதிகப்படியான அதிர்வில் அரண்டு போன சுரபி, “அப்படிலாம் இல்லைப்பா!” என்றாள் பதறி அடித்து.

“அப்போ, டேய் ஹர்ஷா... நகர்ந்து உட்கார்ந்து எனக்கு இடம் கொடுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!”

விழித்தவள், “இல்ல... பரவாயில்லை, நான் இப்படியே கூட உட்கார்ந்துக்கறேன்!” என இருந்த இடத்தில் அவள் பட்டென்று அமர்ந்துவிட, சுற்றி இருந்த பெண்கள் பக்கென்று வெடித்து சிரித்து விட்டனர்.

“அங்கேயும் போய் இவன் வேலையை ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு!” என்ற நவி, “வாங்க மாம்ஸ்... என்னென்னு போய் பார்ப்போம்!” என்று நிஜந்தனின் பார்வை அங்கேயே இருப்பதை கவனித்து விட்டு கிளப்பிக் கொண்டு நடந்தான்.

“இருந்தாலும் நீங்க என்னை இப்படி இன்சல்ட் செஞ்சு இருக்க கூடாது சித்தி!” என்று நெற்றியில் கை விரல்களை மடக்கி முட்டிக் கொண்டு, சோகமாக தலை அசைத்தான் ஹர்ஷா.

அவள் தடுமாற்றத்துடன், “நான் ஒன்னுமே செய்யலையே...” என்று மெல்லிய குரலில் பேசி இருக்கும் பொழுதே, ஆண்கள் இருவரும் அங்கே வந்து விட்டனர்.

“என்ன... என்ன நடக்குது இங்கே? சத்தம் பெருசா வருது!”

நவ்யுத் தன் மனைவியின் அருகே அமர்ந்தபடி விசாரணை நடத்த, “உங்க மாமன் மகன் இருக்க இடத்துல சத்தத்துக்கு என்ன அண்ணா குறைச்சல்... ஒரே காமெடி தான் போங்க!” என்று பொங்கி சிரித்தாள் வைசாலி.

“உங்க ஊட்டுக்காரரும் அவருக்கு மாமன் மகன் தான்!” என்று கண்களை உருட்டினான் சின்னவன்.

“இருந்தாலும் காமெடின்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லி இருக்கேன் இல்ல... அது எல்லாம் உங்க அண்ணாக்கு வராதுன்னு என் அண்ணனுக்கு நல்லா தெரியும்!”

“ம்க்கும்...” என்றவன் உதட்டை கோணிக்க, நிஜந்தன் அவன் அருகில் அமர்ந்தான்.

“ஆமா... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்கே வந்தீங்க?”

“உனக்கு என்னடா... நாங்க எங்க வேணா வருவோம்!” என்று அலட்டிய நவி, “ஆமா ஸ்வப்... என்ன கலாட்டா போயிட்டு இருக்கு இங்கே?” என தமக்கையிடம் விவரம் கேட்டான்.

***


உறங்கும் நேரம் நெருங்கவும் தனிமையில் அறைக்குச் சென்றவரை பின்தொடர்ந்து சென்று மௌனமாக நின்றாள் சுரபி.

மெத்தையில் கிடந்த தலையணையை நேராக வைத்து விட்டு திரும்பிய மூதாட்டி, தன்னெதிரே வந்து நிற்கும் பெண்ணை நிதானமாக ஏறிட்டார்.

“உங்களுக்கு என் மேலே கோபமா?”

வெறுமையாக முறுவலித்தவர், “அந்த உரிமை எனக்கு இருக்கா என்ன?” என்று பதில் கேள்வி கேட்டார்.

அவள் வழக்கம்போல் கரகரவென்று நீரை உகுக்க, “ப்ச்... உட்காரு!” என்று தானும் கால் நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தார்.

“நான் எதுவும் உங்களை கஷ்டப்படுத்த நினைக்கலை!”

வேகமாக சொல்லும் பெண்ணை பார்த்தவர், “நானும் உன்னை கஷ்டப்படுத்திட கூடாதுன்னு தான் தள்ளி இருக்கேன்!” என்றார் அமைதியாக.

“உங்களால என்னை கஷ்டப்படுத்த முடியாது அத்தை!”

விரைந்து சொல்பவளை கூர்மையாக நோக்கி, “அந்த நம்பிக்கை உனக்கு இருந்து இருந்தா, என்கிட்ட இருந்து தப்பிச்சு உன் மகள் கூட ஓடனும்னு நினைச்சு இருக்க மாட்ட!” என அழுத்தமாக மொழிபவரை, வாயடைத்து போய் பார்த்தாள் அவள்.

“இதை இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா?”

முகம் சிவந்தவள், “அப்போ இருந்த பதட்டத்துல தப்பு பண்ணிட்டேன்!” என்றாள் பாவமாக.

“சரிவிடு... புரியுது!” என மெல்ல புன்னகைத்தார்.

“இனிமே அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டேன், எப்பவும் உங்க கூடவே இருந்துக்கறேன்!”

அவளை ஆதூரமாக பார்த்தவர், தலை அசைத்துக் கொண்டார்.

சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பின் நிமிர்ந்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா... நான் ஒன்னு சொல்லவா?” என்றாள் தயக்கத்துடன்.

“உன் மனசுல பட்டதை நீ சொல்லப் போற... அதை ஏன் நான் தப்பா நினைக்கப் போறேன்?”

இலகுவாக கூறும் அம்மூதாட்டியின் வார்த்தைகளில் இவளுக்குத்தான் குற்றவுணர்வாக இருந்தது.

‘அவங்கவங்க மனசுல பட்டதை பேசுறதுல தப்பு இல்லைங்கிற மாதிரி இவங்க எவ்வளவு பெருந்தன்மையா சொல்றாங்க? ஆனா அவருக்கு என்னை பிடிச்சு இருக்குன்னு அவங்க அண்ணா எல்லார் கிட்டயும் சொன்னதும் நான் எவ்வளவு கோபப்பட்டேன், தேவை இல்லாததை எல்லாம் நினைச்சு கஷ்டப்பட்டேன்...’

“என்ன கண்ணு...? சொல்லு!”

“அது...” என திணறியவள், “பெரியவங்க குடும்பம் இங்கே ஊர்ல இருக்கும் போதே, நீங்க அவருக்கு வேற இடத்துல நல்லப் பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணம் முடிக்கலாமே... எல்லாரும் இதை நினைச்சு தானே கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க, அவரு மனசு மாறி இருக்குற நேரம் சட்டுன்னு ஏற்பாடு பண்ணுங்களேன்!” என்றாள் மெல்லமாக.

“உன்கிட்ட அபி அவனை பத்தி சொன்னதா சொன்னாளே...”

“ம்... சொன்னாங்க. அப்போ அவருக்கு கல்யாணத்து மேலே வெறுப்பு இருந்தது, அதனால ஒத்துக்கலை. இப்போ தான் அவரே ஆசைப்பட்டு கேட்கறாரே...”

‘அவன் ஆசைப்பட்டு கேட்கறது கல்யாணத்தை இல்லை தாயி... உன்னை, இதை எப்போ இவள் புரிஞ்சிக்க போறாளோ?’

மனதின் சலிப்பை மறைத்து, “சரி பேசிப் பார்க்கறேன்!” என்றதும், பெண்ணின் முகம் மலர்ந்தது.

தானும் முறுவலித்தவர், “நீ பயப்பட வேணாம், இந்த விஷயத்துல கண்டிப்பா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். இதுவரைக்கும் செஞ்சது எல்லாம் உன்னோட நன்மைக்கு மட்டும் தான் அப்படிங்கிறதால, எனக்கு எதுவும் தப்பா தோணல தைரியமா விரட்டினேன். ஆனா இது அப்படியில்லை... என் பையன் மேலே வச்சு இருக்க பாசத்துக்கு, அவன் நல்லா இருக்கனும்கிற ஆசையில நான் சுயநலமா நடந்து, உன் மனசை நோகடிச்சிட கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கேன்!” என்று தன் எண்ணங்களை பகிர்ந்தார்.

தன்னை எதுவும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என நினைத்து மகிழ்வதா, அல்லது இதனால் இவரது மகனின் வாழ்வு பாதிப்பதை நினைத்து உள்ளூர கவலையில் தவிப்பவரை எண்ணி நோவதா என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி... இதை எல்லாம் நினைச்சு மனசை குழப்பிக்காம, நிம்மதியா போய் தூங்கு. இதுக்கு மேலே நான் எதுவும் நினைக்கப் போறது இல்லை, எல்லாம் அவன் செயல். ஆண்டவன் போட்ட விதிப்படி எதுனாலும் நடக்கட்டும்!”

அலுப்புடன் கூறி பெருமூச்சு விடுபவரை வேதனையோடு பார்த்தவள், செய்வதறியாது பரிதவித்தாள்.

***


அனைவருக்கும் தனது திருமணத்திற்கான உடைகளை எடுத்துக் கொடுத்து விட்ட நிஜந்தன், மணப்பெண்ணின் முகூர்த்த புடவையை மட்டும் ரகசியமாக வைத்து இருந்து அனைவருக்கும் போக்கு காட்டினான்.

“டேய்... கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. புடவையை கண்ல காட்ட மாட்டேங்குற, வீட்ல வச்சு சாமி கும்பிட வேணாமா... இதுல ப்ளவுஸ் வேற அவளுக்கு அளவு சரியா இருக்கனும், நீ பாட்டுக்கு ஏதாவது ரெடிமேடை கடைசி நேரத்துல தூக்கிட்டு வந்துடாத...” என்று ருக்மணி வேறு ஒருபக்கம் அதட்டினார்.

“ப்ச்... பெரிம்மா, அதெல்லாம் எனக்குத் தெரியும். அவளோட அளவு ப்ளவுஸோட தான் தைக்க கொடுத்து இருக்கேன்!”

“என்னது? அளவு ப்ளவுஸா... அது ஏது உனக்கு?”

மாட்டிக் கொண்ட பாவனையில் சற்றே விழித்தவன், “அது...” என இழுத்துவிட்டு, “ஸாரிம்மா மருமகளே...” என்று வைசாலியிடம் கூறியவன், “அவளை தான் எடுத்து தரச் சொன்னேன்!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“அட கூட்டு களவாணிகளா... ஏய் புள்ளை... அப்போ நீ புடவையை பார்த்துட்டியா?” என மருமகளிடம் சண்டைக்கு நின்றார் புவனா.

“அச்சோ இல்லை அத்தை... புடவைலாம் என் கண்ணுல காட்டுலை. மாமா, சொல்றதை சரியா சொல்லுங்க!” என்று அவனிடம் முறைத்தாள்.

“ஆமாமா... அவளுக்கும் தெரியாது!”

“ஷ்... அப்பா... என்னடா பண்ற நீ?”

அபிராமி அலுப்புடன் கேட்க, “நாளைக்கு காலையில ப்ளவுஸ் வந்துடும் க்கா, அதோட சேர்த்து காண்பிக்கறேன்!” என்றான் நிஜந்தன்.

“ப்ளவுஸை நாங்க தனியா கூட பார்த்துக்குவோம்... நீங்க முதல்ல புடவையை காட்டுங்க மாமா, ரொம்பத்தான் பண்றீங்க!” என்று அடுத்து சண்டைக்கு தயாரானாள் ஸ்வப்னா.

“ஏய்... இந்த பொம்பளைங்களை அடக்க முடியாதுடா, நீ எடுத்துட்டு வந்து காட்டு!”

தாமு தம்பியிடம் பேச, “ஓ...” என்று ஸ்வப்னாவும், வைசாலியும் ஒருசேர ராகமிழுத்து அவரிடம் வேகமாக திரும்பினர்.

“நான் வரலைம்மா இந்த ஆட்டத்துக்கு... என்னை ஆளை விட்டுடுங்க!” என்று அவர் பெரிய கும்பிடாக போட்டு விட்டார்.

நிஜந்தன் தலை அசைத்து நகைத்தபடி, புடவையை எடுக்க அறைக்குச் சென்றான்.

“இங்கே இத்தனை களேபரம் நடக்குது... இந்த அம்மாவும், பொண்ணும் எங்கே?” என்று சுரபி, ராகவியை தேடினாள் வைசாலி.

“ஆமா... அதுங்களை முதல்ல வெளியில வரச் சொல்லு!” என்றார் ருக்மணி.

ஒரு ஆர்வத்தில் வேலை செய்வது என்னவோ செய்து விட்டான். ஆனால் இப்பொழுது அதை அனைவரின் முன்னிலும் காண்பிக்க, அவனுக்கு கூச்சம் நெட்டித் தள்ளியது. சிறிதே மூளையை தட்டி விட்டவனுக்கு ஒரு அருமையான யோசனை தோன்ற, அதன்படி தெளிவாக வெளியே வந்தான் நிஜந்தன்.

“சரி, நீங்க எல்லாம் புடவையை பாருங்க. எனக்கு மில்லுல கொஞ்சம் வேலை இருக்கு, போய் என்னென்னு பார்த்துட்டு வந்துடறேன்!” என்று நழுவ முயன்றான்.

“எங்கே... எங்கே ஓடறீங்க நீங்க? அதை ஒரு அரைமணி நேரம் கழிச்சு பொறுமையா கூட போய் பார்த்துக்கலாம்!” என்று குறுக்கே பாய்ந்து, வழி மறித்து நின்றான் நவ்யுத்.

“அருண்... நீ போய் அந்த கதவை லாக் பண்ணுடா!”

“டேய்... அவ்வளவு சீன் எல்லாம் இல்லைடா!”

மாமன் பதற, “அதை நாங்க முடிவு பண்ணிக்கறோம், நீங்க இப்படி வந்து உங்க அண்ணாவோட உட்காருங்க மாம்ஸ்!” என்று அவனை பிடித்து தாமுவின் அருகில் அமர வைத்தான் மருமகன்.

“இங்கே என்ன நடக்குது?”

ராகவி கேட்க, “ம்... உன் அம்மாவோட கல்யாண புடவையில உன்னோட அப்பா ஏதோ ஸ்பெஷலா வேலை பார்த்து இருக்கார். அதைத்தான் இப்போ என்னென்னு எல்லாரும் தெரிஞ்சிக்க போறோம்!” என்றான் நவ்யுத் கேலிச் சிரிப்புடன்.

அவள் நிஜந்தனை வியப்புடன் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த சுரபியின் முகம் என்னவோ, ஏதோ என்று கலவரம் ஆகியது.

**********

நேரடி புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.

Most Popular