Menu

Search This Blog

Kathai Solla Azhaikkiren - Deepa Babu

 


கதை சொல்ல அழைக்கிறேன்


(இணையத்தில் வெளிவராத நேரடிப் புத்தகம்)

கதைக்கரு


பறவைகள் பலவிதம் என்று நம்ம கவிஞர் கண்ணதாசன் சொன்னதுப் போல், இவ்வுலகில் மனிதர்களும் பலவிதம் தான். அவர்களில் சிலரை பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்யத்தான் இந்த கதைக்கு பேரன்போடு அழைக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக நம்முடைய அன்றாட வாழ்வில் ஆங்காங்கே நாம் கேள்விப் படுபவர்களும், மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்களும் தான்.


Kathai Solla Azhaikiren - Kindle Link


**********

கதையிலிருந்து சிறு துளிகள்


“அடடா... உன் காலுக்கு என்னப்பா ஆச்சு?”

தன் வீட்டை பூட்டிக் கொண்டு இருந்தவன், மனோகரியின் பதறிய குரலில் புருவங்கள் சுருங்க திரும்பிப் பார்த்தான்.

ஞாயிறு விடுமுறை அதுவுமாக அம்மா, மகள், பேத்தி மூவரின் நெற்றியிலும் விபூதி, குங்குமம் வீற்றிருந்து அவர்கள் கோவிலுக்குச் சென்று வந்ததை பறைசாற்றியது.

அவனின் அலசும் பார்வையில் பெண் முறைக்கத் துவங்க, விழிகளை திருப்பிக் கொண்டவன், “ஒன்னும் இல்லம்மா... சின்ன ஆக்ஸிடென்ட், பைக்ல இருந்து ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டேன்!” என்று விவரம் தந்தான்.

‘கண்ணை ரோட்டுல வச்சு ஓட்டி இருந்து இருக்கனும்... சுத்தி பராக்கு பார்த்துட்டுப் போனா அப்படித்தான்...’ என தனக்குள் நொடித்துக் கொண்டாள் ருத்ரா.

“கொஞ்சம் பார்த்துப் போக கூடாதாப்பா... இனிமே கவனமா இரு. வீட்டுக்கு தெரியுமா? பாவம்.. தூரமா இருக்க அவங்களும் விஷயம் தெரிஞ்சா பதறிப் போயிடுவாங்க!” என்று கவலைப்பட்டார்.

அவரின் இரக்க குணத்தில் மெல்ல முகம் கனிந்தவன், “ரொம்ப பயந்துடுவாங்கன்னு சொல்லலைம்மா...” என்று தன்னுள் இருக்கும் வலியை மறைத்து லேசாக முறுவலித்தான்.

“ஆங்... சரி தான். ஆமா.. இன்னிக்கு லீவ் இல்லையா, வெளியில கிளம்பிட்ட?”

“அம்மா...” என அதட்டி, அவரின் அதிகப்படியான பேச்சிற்கு அணைப் போட முயன்றாள் ருத்ரா.

“இவள் ஒருத்தி...” என அலுத்தவர், “இந்தா சாவி... வீட்டை திற!” என்று அவளை விரட்டினார்.

அவனுடைய விழிகள் பிள்ளையின் முகத்தில் நிலைக்க, தன்மீது அவன் பார்வை விழுந்ததில் சின்னவளும் அழகாக மலர்ந்து சிரித்து வைத்தாள். அவளை அள்ளிக் கொள்ள சொல்லி பரபரத்த இதயத்தையும், கைகளையும் ஆடவன் முயன்று அடக்கிக் கொண்டு நிற்க, அவன் பார்வை கண்டு கடுப்பான ருத்ராவோ வெடுக்கென்று தாயின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக் கொண்டு, தங்கள் வீட்டிற்குச் சென்றாள்.

“என்னப்பா.. இன்னிக்கும் வேலைக்குப் போகனுமா?”

அவரின் கேள்வியில் கவனத்தை திருப்பியவன், “இல்லம்மா... லீவ் தான்!” என்று புன்னகைத்தான்.

“அப்புறம் இந்தக் காலோட எங்கே கிளம்பிட்ட? அமைதியா வீட்டுல உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தா தான், இந்த மாதிரி எலும்பு பிரச்சனை எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்!”

தனக்கு ஆலோசனை கூறுபவரிடம், “சின்ன ஏர் க்ராக் தான்மா, பயப்படற அளவுக்கு பெருசா இல்லை. டிபன் வாங்க தான் போறேன், மதியத்துக்கு ஸ்விகில ஆர்டர் போட்டுக்குவேன்!” என்றான்.

“ஒரு டிபனுக்காக வெளியே போறியா? அதெல்லாம் வேணாம். நான் உனக்கு செஞ்சு தரேன், நீ ரெஸ்ட் எடு!”

திகைத்தவன், “அச்சோ.. இல்லயில்ல, வேணாம்மா. நான் இப்பவும் வீட்டுக்கே வரவழைச்சு சாப்பிட்டுக்கறேன்!” என்று பதறியடித்து மறுத்தான்.

‘ஏற்கனவே இவர் மகள் நம்மை கண்டாலே கண்களில் நெருப்பை பற்ற வைக்கிறாள். இதில் இப்படி எல்லாம் நெருங்கினால் அவ்வளவு தான், சட்டையை பிடித்துச் சண்டை போடுவாள்!’

**********

“ஏன்கா? என்னாச்சு?” என்றாள் ஸ்ருதி தயக்கத்துடன்.

“இங்கே நின்னு அவன் கூட என்ன தனியா பேச்சு வேண்டி கிடக்கு உனக்கு?”

முதலில் விழித்தவள் பின் புரிந்து, “நீங்க ஜீவா அண்ணாவையா சொல்றீங்க..?” என்று வியப்புடன் கேட்டாள்.

“அவனைத்தான் சொல்றேன்..” என்று பல்லைக் கடித்தாள் ருத்ரா.

“ச்சே... அவங்களை ஏன்கா இப்படி மரியாதை இல்லாம பேசறீங்க?”

‘இது என்ன? என்னை தவிர எல்லாருக்குமே அவன் மகாத்மாவா தெரியறான்!’

இவள் யோசனையில் நிற்கவும், “நான் கடைக்கு போயிட்டு திரும்பி வரும்போது தான் அவங்க வெளியில கிளம்பினாங்க. வழியில பார்க்கவும் நின்னு, காலேஜ்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சாங்க!” என்று அவளே பதில் தந்தாள்.

“அதுல அவனுக்கு என்ன அக்கறை வேண்டி இருக்கு?”

அவளின் உதாசீனப் பேச்சில் அதுவரை இருந்த இளக்கம் தொலைந்து, “கொஞ்சம் மரியாதையா பேசுங்கக்கா. நீங்க இப்படி பேசறது எனக்குப் பிடிக்கலை!” என்றாள் ஸ்ருதி இறுக்கமாக.

“ஓ...” என ஏளனமாக இதழ்களை வளைத்தவள், “ஹப்பா... அவனை சொன்னா உனக்கு பயங்கர கோபம் வருது!” என்று பரிகாசமாக புன்னகைத்தாள்.

“அதையே நானும் கேட்கறேன்கா. அந்த அண்ணா மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? உங்ககிட்ட இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை!”

ஏமாற்றமாக கூறுபவளை எரிச்சலுடன் பார்த்து, “அவனோட அப்பட்டமான நடிப்பை நம்பி எல்லாரும் எப்படித்தான் ஏமாந்து போறீங்களோ தெரியலை. முதல்ல என் அம்மா, இப்போ நீ, இன்னும் எத்தனை பேர்கிட்ட அவன் கைவரிசையை காண்பிக்கறானோ!” என்று பொரிந்தாள் ருத்ரா.

“அக்கா... ஸ்டாப்!” என அவளின் முன்னே கையை நீட்டிய ஸ்ருதி, “அண்ணா... உங்ககிட்ட ஏதாவது ப்ரொப்போஸ் பண்ணாரா?” என்று தீவிரமாக கேட்டாள்.

“வாட்?” என அதிர்ந்து கூவியவள், “என்னடி கேட்கற நீ?” என்றாள் ஆத்திரமாக.

“அப்போ... ஒரு வேளை.. ரோட்சைட் ரோமியோ மாதிரி பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு சுத்தறாரா?”

“ஸ்ருதி... ஜஸ்ட் ஷட் அப்!”

ருத்ரா கோபமாக இரைய, “வொய்கா..? இங்கே நான் அண்ணாவை தானே டேமேஜ் பண்றேன், அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? ஏன்னா... இதுல உங்களோட இமேஜும் சேர்ந்து டிஸ்டர்ப் ஆகறதுல உங்களுக்கு செம கோபம் வருது. அப்போ ஜீவா அண்ணாவை பத்தி நீங்க பேசின பேச்சுக்கு அவர் எவ்வளவு கோவப்படனும்?” என்றாள் நிதானமாக.

“ஏய் நிறுத்து... ரொம்ப பேசுற நீ?”

“ஹைய்யோ அக்கா... உங்களோட அளவுக்கு மீறின பேச்சுக்கு அண்ணா தான் இதைச் சொல்லனும்!”

“எதுக்குடி இப்படி அவனுக்கு ஓவரா கொடி பிடிக்கற நீ?”

ருத்ராவால் தாங்கவே முடியவில்லை. தன்மீது பெரும் மதிப்பு வைத்துச் சுற்றி வந்தப் பெண், தன்னை நோக்கி விரல் நீட்டி கேள்வி கேட்பதா..? அதுவும் அவனுக்காக, என அவளின் உள்ளம் வெகுவாக காந்தியது.

**********

யாரோ, எவரோ, ஏதோ வாக்குவாதத்தில் மோதிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற அவனின் எண்ணத்திற்கு மாறாக, மனோகரி தான் கையில் அற்புதாவை வைத்தபடி பதற்றத்துடன் ஒரு இளைஞனிடம் சமரசம் பேசிக் கொண்டு இருந்தார்.

அவனோ அவர் அருகில் இருந்த பெண்மணி ஒருவரிடம் நெஞ்சை நிமிர்த்தியபடி சண்டைக்கு நின்று இருந்தான். அவனுடைய உடல்மொழியை வைத்தே பிரச்சனை செய்ய என்றே, நன்றாக மூக்கு முட்ட குடித்து விட்டு வந்து இருப்பது போல் தோன்றியது இவனுக்கு.

அவர்களை அப்படியே விட்டுச் செல்ல மனம் வராமல், அவசரமாக அவ்விடம் விரைந்தான் ஜீவா. இவன் நெருங்கிச் செல்ல செல்லவே, அவன் சடுதியில் ஆவேசம் கொண்டு மனோகரியை பிடித்து தள்ளி இருந்தான். அவர் பிள்ளையோடு கீழே விழத் தடுமாற, பதறியடித்து ஓடினான் ஆடவன்.

“ம்மா...” என்று இவன் கத்திக் கொண்டு நெருங்குவதற்குள், அங்கிருந்தப் பெண்மணியே பெருகிய கண்ணீரோடு அவரை விழாமல் தாங்கிப் பிடித்து, அருகில் இருந்த இருக்கையில் பத்திரமாக அமர வைத்து இருந்தார்.

அந்த அதிர்ச்சியில் மனோகரி ஸ்தம்பித்து அமர்ந்து இருக்க, அற்புதாவும் அச்சத்தில் சத்தமிட்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.

“ஏன்டா... இப்படி பண்ற? கிளம்பிப் போடா, எதுனாலும் அப்புறமா பேசிக்கலாம்!” என்று அந்த இளைஞனிடம் அழுகையோடு கெஞ்சினார் அப்பெண்மணி.

“ம்மா... ஆர் யூ ஓகே?” என்று வேகமாக மனோகரியின் கரத்தை பிடித்தான் ஜீவா.

அவனை கண்டதும் முகம் கலங்கியவர், “ஜீவா, இவன்...” என்று திணறியபடி எதையோ சொல்ல வர, அதற்குள் அக்குடிகாரன் கத்த தொடங்கி இருந்தான்.

“என்னத்தை... அப்புறம் பேசறாங்க? உனக்கு எத்தனை தடவை தான் நான் சொல்றது...”

சட்டென்று அவன் சட்டை காலரை பற்றி, “டேய்... யாருடா நீ? எதுக்கு இங்கே வந்து லேடீஸ் கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க?” என்று கோபமாக உலுக்கினான் ஜீவா.

“தம்பி... தம்பி... விடுங்கப்பா, இவன் என்னோட மகன் தான்!” என்றார் அருகில் நின்றவர் தவிப்புடன்.

நாயகன் அதிர்ந்து பார்க்க, “ஆமா ஜீவா... இவங்களோட கேடுக்கெட்ட மகன் தான் இவன்...” என்று மனோகரியும் எரிச்சலுடன் கூறினார்.

“ஏய்... யாரை கேடுக்கெட்டவன்னு சொல்ற?” என்று அவரிடம் அவன் எகிறிக் கொண்டு செல்ல, ஜீவா அவனை இழுத்து எதிர்புறம் தள்ளி விட்டான்.

“ராஸ்கல்... குடிச்சு இருந்தா, எப்படி வேணும்னாலும் பேசுவியா? அவங்க வயசுக்கு மரியாதை தர்றது இல்ல...”

இவன் மெதுவாகவே தள்ளி இருந்ததால் முதலில் தடுமாறினாலும் பின் நிலைத்து நின்றவன், போதையில் சிவந்த விழிகளோடு இவனை ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தான்.

“என்ன பார்வை? முதல்ல இங்கே இருந்து கிளம்பு!” என்று விரட்டினான்.

“தம்பி.. நானே சொல்லிக்கறேன், பிரச்சனை வேணாம்பா!” என்று இவனிடம் கலக்கத்துடன் கெஞ்சுபவரை பார்க்கவே பாவமாக இருந்தது.

ஜீவா அமைதியாக நிற்க, “டேய் ரவி... ப்ளீஸ்டா, கிளம்பி வீட்டுக்குப் போ. நான் அப்புறமா அக்கா கிட்ட பேசி ஒரு முடிவைச் சொல்றேன்!” என்று அவனை கிளப்புவதில் குறியாக இருந்தார் பெற்றவர்.

“அப்போ... நான் சொன்னதை நீ செய்ய மாட்ட, உன் இஷ்டத்துக்குத் தான் ஆடப் போற?”

“டேய்...” என்று வேதனையில் தழுதழுத்தவர், “நா... நானும் மனுஷி தான்டா...” என்றார் குரல் நடுங்க.

மனோகரியின் விழிகளில் நீர் ஊற்றெடுத்தது, அழுதபடி இருந்த பேத்தியை தன்மீது சாய்த்து முதுகை வருடிக் கொடுத்து இருந்தார் அவர்.

ஜீவாவிற்கு என்ன விஷயம் என்று தெளிவாக புரியவில்லை என்றாலும், பெற்ற மகனால் அந்த தாய் துன்பப்படுகிறாள் என்பது மட்டும் புரிந்து வருத்தமாக இருந்தது.

**********

சற்றே சிந்தித்த பிரசாந்த், “ஓகே... அப்போ நான் தான் பர்ஸ்ட்!” என்றான் வேகமாக.

“ஹப்பா ராசா... சரி வா!” என்று எழுந்த ஸ்ருதி, அதுவரை அவர்களின் பேச்சுக்களை ரசித்து இருந்த ஜீவாவிடம் முறுவலித்தாள்.

“சாரு அக்கா எல்லாம் தெய்வம் தெரியுமா? எந்த நேரமும் இப்படியே தான் போட்டிப் போட்டுட்டு இருப்பானுங்க!”

“ஓகே... ஓகே... ருத்ரமா தேவி அம்மையார் ஒரு வழியா கிளம்பிட்டாங்க, நாம போகலாம்!” என்று அறிவித்தபடி ருத்ராவின் வீட்டில் இருந்து வெளியே வந்த விஷ்வாவின் பின்னே ஓடி வந்து தோளில் ஒன்று வைத்தாள் அவள்.

“ருத்ரமா தேவி சொன்னா உதை விழும் உனக்கு, மறுபடியும் ஆரம்பிக்காத...” என்று மிரட்டியவள், அற்புதாவை தூக்கிக் கொண்டு அபி வெளியே வந்ததும் கதவை பூட்டினாள்.

கரும் பச்சையும், பொன் மஞ்சளும் கலந்த பட்டுப் பாவாடை சட்டையில் இரட்டை குடுமியுடன் வெளியே வந்த பிள்ளையின் அழகில் ஜீவா மலர்ந்து நிற்க, அதை ஓரவிழியில் கவனித்தாள் ருத்ரா.

“அக்கா... நான் தான் பர்ஸ்ட்டுன்னு சொன்னேன்!” என்று ஸ்ருதியிடம் அவசரமாக நினைவுப் படுத்தினான் பிரசாந்த்.

“ஆங்... ஆமா, அபி நீ பாப்பாவை கீழே இறக்கி விடு, அவன் கூட முதல்ல கொஞ்ச தூரம் நடந்து வரட்டும்!”

குழந்தை தன்னை பார்ப்பாளா, மாட்டாளா என்று மற்றவரை மறந்து ஜீவா அவளையே பார்த்து இருக்க, பிள்ளையின் பார்வையும் அவன் மீது விழுந்து, அவனது இதயத்துடிப்பை அதிகரித்தது. தன்னுடைய சில நாள் ஒதுக்கத்தால், அவளும் தன்னை விலக்கி வைப்பாளோ என்பது வேறு ஒருபக்கம் அவனுக்குப் பதற்றமாக இருந்தது.

ஆனால் குழந்தையோ இவனை பார்த்ததும் பளீரென்று சிரித்து, “மாமா...” என உற்சாகமாக கூவி அழைக்க, இவனுக்கோ விரிந்த இதழ்களுக்கு மாறாக விழிகளில் நீர் கோர்த்து விட்டது.

“என்ன இது? இப்போ எதுக்கு இவரு கண்ணு கலங்குறாரு?” என்று விஷ்வா வியப்புடன் கேட்கும் பொழுதே,

“ஷ்... கண்டுக்காத, அவங்க ரெண்டு பேருக்கு உள்ள இருக்க ஏதோ ஒரு பாண்டிங் அது. என்ன வகையான அஃபெக்ஸன்னு அவங்களுக்கும் தெரியாது, பார்க்கற நமக்கும் சுத்தமா புரியாது. ஸோ... இது ரிலேட்டடா நீ எதுவும் வாயை திறக்காத!” என்று அடிக்குரலில் அவனிடம் உத்தரவு இட்டாள் ருத்ரா.

அருகில் நின்று இருந்த ஸ்ருதியுமே அதைக் கேட்டு இருந்தவள், குழப்பத்துடன் ஜீவாவிடம் திரும்பினாள்.

அதற்குள் அற்புதா வேகமாக அபியிடம் இருந்து இறங்கி ஜீவாவை நோக்கி ஓட, பதறியவன் தான் விரைந்து முன்னால் வந்து அவளை கைகளில் அள்ளினான்.

“பார்த்து வரனும்டா மயிலு... பாவாடை போட்டு இருக்கீங்க, விழுந்துடுவீங்க!”

“ம்... புது தெஸ்!” என்றாள் மலர்ந்தச் சிரிப்புடன்.

“ஹான்... ரொம்ப அழகா இருக்கு!”

அவனும் புன்னகையுடன் கூற, “குடுமி?” என்று கேட்ட வேகத்தில், அதைத் தொட்டும் காண்பித்தாள்.

“சூப்பரா இருக்கே..!” என்று கண்களை விரித்தான்.

**********




Most Popular