Menu

Search This Blog

Mudiya Oviyam Nee - Deepa Babu

 



கதைக்கரு


என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சிநேகிதியின் வாழ்வை தழுவி கற்பனையில் உதித்த நாவல். சிலருக்கு கதையின் கரு கொஞ்சம் முரண்பாடாக கூட தெரியலாம். ஆனால் எனக்கு அவ்வாறு தவறாக தோன்றாததால் நான்கைந்து வருடங்களாக சிறிது தயங்கி கிடப்பில் போட்டு இருந்த கதையை தூசு தட்டி எடுத்து முழு நாவலாக உருவாக்கி இருக்கிறேன்.

இக்கதையின் மாந்தர்கள் தங்களின் மேம்பட்ட குணங்களினால் வாசிப்பவர்களை நிச்சயம் கவர்ந்து இழுப்பார்கள் என நம்புகிறேன். சற்றுப் பிசகினாலும் விரசமாக போய்விடும் என்கிற காரணத்தினால் மிகவும் கவனமாகவே கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கிறேன். மீண்டும் எனது கைவண்ணத்தில், மற்றுமொரு கதைக்களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,

தீபா பாபு


Mudiya Oviyam Nee - Amazon Ebook Link



***********


கதையிலிருந்து சிறு துளிகள்



“அப்போ... காலையில நான் சொன்ன மாதிரி டிவோர்ஸுக்கு ரெடியா தான் இருந்து இருக்கே!”

நவ்யுத் கூர்மையாக கேட்கவும் தடுமாறியவள், “வேற என்ன செய்ய முடியும்?” என்று முனகினாள்.

“ம்... முதல்லயே தெளிவா என் வாழ்க்கையில வராம இருந்து இருக்கனும் நீ!”

முகம் கசங்கியவள், “அதுக்குத்தான் அவங்க விடலையே... உங்க தாத்தா மூலமா தன் பையனோட தொழிலை முன்னுக்கு கொண்டு வர என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க!” என்றாள் இயலாமையுடன்.

“சரி... நீ தனியா போகனும்னு முடிவு பண்ணிட்ட, என் நிலைமையை நினைச்சுப் பார்த்தியா? ஒரு டிவோர்ஸியா எல்லார் முன்னாடியும் நிக்கனும் நான்!”

நெற்றிச் சுருக்கத்துடன் நிமிர்ந்தவள், “அதனால என்ன? பொதுவா இந்த மாதிரி சங்கடம் எல்லாம் பொண்ணுங்களுக்கு தானே வரும், நீங்க ஆம்பிளைங்க உங்க வசதிக்கு எப்படி வேணா வாழ்க்கையை அமைச்சிக்கலாமே... அதோட நீங்க பணக்காரர் வேற, ரொம்ப சுலபமா பொண்ணுங்க கிடைப்பாங்க!” என்றாள் அலட்சியமாக.

‘அடிப்பாவி...’ என பார்த்தவன், “உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? என்னை பத்தி எதுவும் தெரியாம, என்னோட கொள்கைகள் என்னென்னும் தெரிஞ்சிக்காம, நீ எப்படி உன் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம்? உன்னோட சேர்ந்து என் வாழ்க்கையும் தான் பாதிக்குது அப்படிங்கும் போது, நீ என்கிட்ட நேரா வந்து பேசி இருக்கனும் இல்ல...

ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒரு லவ், ஒரு வொய்ஃப், ஒரு லைஃப்னு எனக்கு உள்ள நானும் சில சட்ட, திட்டங்கள் வச்சு இருக்கேன். அதை எல்லாம் உன் வசதிக்கு மொத்தமா மாத்தி இருக்க. என்னை சுத்தமா கலந்துக்காம, நீயா எப்படி இப்படி தன்னிச்சையா ஒரு முடிவு எடுத்த? சொல்லு... உன் பிரச்சனையை என்கிட்ட நேர்ல வந்து பேசி இருக்கனுமா, இல்லையா?” என்றான் கோபமாக.

அவளுமே அப்பொழுது தான் அதை யோசிக்க, ‘அச்சோ... ஆமா, இவர் சொல்ற மாதிரி நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? இவரு கிட்ட பேச கொஞ்சமும் ஸ்டெப் எடுக்கலையே நான்... எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டேன்!’ என கலக்கம் கொண்டாள்.

தன்னை மிரண்டு பார்ப்பவளை அழுத்தமாக பார்த்தவன், “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? பதிலை சொல்லு...” என அதட்டினான்.

“நா... நான்... இதை எல்லாம் இப்படி யோசிக்கவே இல்லை. அம்மா பத்தி, என்னை பத்தி மட்டும் தான் நினைச்சு இருக்கேன். தப்பு தான்... புரியுது...” என மூக்கின் நுனி சிவக்க கண் கலங்கியவள், “அப்போ கொஞ்சமும் தோணவே இல்லை, ரொம்ப செல்ஃபிஷா நடந்து இருக்கேன். ஸாரி...” என மன்னிப்பு கேட்டு விட்டு, “இப்போ என்ன செய்றது?” என்று பரிதாபமாக கேட்டாள் ராகவி.

அவ்வப்பொழுது தன்மானத்திலும், ரோஷத்திலும் மட்டுமே பொங்கி எழுபவள் இன்னமும் சிறுமியாகவே இருக்க, உள்ளுக்குள் அவளை ரசித்தாலும், வெளியே இரும்பாகவே காட்டிக் கொண்டான் கணவன்.

“என்ன செய்றது? வாழ்ந்து தான் ஆகனும்!”

பட்டென்று வெடிப்பவனை புரியாது பார்த்தவள், “ம்...?” என்று கேட்க, இவனுக்கு தான் மீண்டும் இதயம் சலனப்பட்டது.

***


‘என்னடா இது?’ என இவனுக்கு தர்மசங்கடமாக இருக்க, அவளுக்கு படபடப்பாக இருக்க, மெதுவே ஆற்றை நோக்கி நடந்தனர்.

“கீழே கவனமா பார்த்து நடக்கனும். இது மண் பாதை, சமதளமா இல்லாம கல்லுங்க வேற இருக்கும்!”

“ஓ...” என்றவள் அவன் சொல்படி கவனத்துடன் நடந்தாள்.

ஆற்றின் அருகே வந்து விடவும் அவளிடம் காண்பிக்க வேண்டி திரும்பியவன், ஏற்கனவே அதை பார்த்து விட்டதற்கு அடையாளமாக மெல்லிய பூரிப்புடன் அடி எடுத்து வைப்பவளை கண்டு முகம் கனிந்தான்.

“ஒரு அஞ்சு நிமிஷம் நிதானமா ஆத்து தண்ணில நின்னு காலை நனைச்சிட்டு, வேடிக்கை பார்த்துட்டே போகலாம். இப்போ பாதையில கவனம் இல்லைன்னா தடுமாறி விழனும்!”

திடுக்கிட்டுப் பார்த்தவள், “இல்ல... அது எல்லாம் வேணாம்!” என்றாள் அவசரமாக.

‘பெரிம்மா சொல்ற மாதிரியே வேணாம் பாட்டு ஆரம்பிச்சிட்டா...’

பதில் ஏதும் தராமல் அவன் மௌனமாக நடக்க, இவளும் அவனை பின்பற்றினாள்.

“சில நேரம் படி வழுக்கும், அழுத்தமா கால் வச்சு இறங்கனும்!”

தலை அசைத்தவள் பயந்து பயந்து பாதம் பதித்து இறங்க, தன் நமட்டை கடித்து புன்னகையை அடக்கியபடி அவளுடன் இறங்கினான் நிஜந்தன்.

தண்ணீரில் கால்களை நனைத்ததும் அவள் மேனி சிலிர்க்க, “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்கு!” என்றாள் ஆர்வமாக.

தன்னை மீறி அவளாக பேசிய முதல் பேச்சு. திரும்பி பக்கவாட்டில் பார்த்தான், அவள் கவனம் இவனிடத்தில் இல்லை. முகம் முழுவதும் பெரும் உற்சாகத்தில் திளைத்து இருந்து, கருவிழிகள் ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாக சுழன்று, புதிதாக தெரிந்த ஒவ்வொன்றையும் ஆவலுடன் படம் பிடித்தது.

பார்த்த நிமிடம் முதலாக எந்நேரமும் கலக்கம், பதற்றம், கவலை என்றே மாற்றி மாற்றி சுமந்து பரிதவித்து இருந்த அந்தப் பூ முகம், இப்பொழுது தான் இத்தனை தூரம் மலர்ந்து ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அதை கலைக்க மனம் வராமல் அமைதியாக அருகில் நின்று இருந்தான் அவன்.

முழுதாக பத்து நிமிடங்கள் கடந்த பிறகே மெல்ல உணர்வுக்கு திரும்பி, அவனை பார்த்தாள் சுரபி.

“இங்கே வேற ஏதாவது செய்யனுமா?”

“என்ன?” என்று புருவங்களை சுருக்கினான்.

“இல்ல... நேரம் ஆகிடுச்சு போலிருக்கே!”

“ம்... போகலாம்!”

அவன் திரும்பி படிகளில் ஏறத் துவங்க, ‘எதுக்கு இவ்வளவு நேரம் இங்கே சும்மா நின்னோம்?’ என புரியாமல் அவன் பின்னே ஏறினாள் அவள்.

***


ராகவியின் உபயத்தால் அவளுடன் பேசி, பழகுவதில் ஓரளவு ஆங்கிலம் நன்றாக புரியும் என்றாலும் அவன் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாறி விட்டாள் தான். பிறகு மனைவி என்கிற சொல்லோடு தொடர்பு படுத்தி, அவனிடம் வெளிப்படும் அதீத கோபத்திலும் சரியாக உணர்ந்து கொண்டாள்.

அதில் இன்னும் கொஞ்சம் மிரண்டு, “அச்சோ... அவங்க மனசுல இப்படியா பதியறது? நீங்க...” என எதையோ சொல்ல விழைந்தவளை தனது சொற்களால் மிரட்டி விட்டான் அவன்.

“சுரபி... ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சன்ஸ். நான் அதைவிட்டு வெளியில வரனும்னு நினைக்கறேன், மறக்கனும்னு விரும்பறேன். நீங்க திரும்பத்திரும்ப அதையே பேசி என் மனசுல எதையும் விபரீதமா பதிச்சிடாதீங்க... காட் இட்?”

அவன் அழுத்தமாக சொன்னதில் இவள் முதுகு தண்டுவடம் சில்லிட, உறைந்து போய் பார்த்தாள்.

“புரிஞ்சுதா...?”

“ம்...” என்றாள் கலக்கத்தோடு.

“ஓகே... எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும், நீங்களும் ச்சில் ஆக ட்ரை பண்ணுங்க!” என்று கண்களை மூடி சாய்ந்து விட்டான்.

பயணம் முடியப் போகும் நேரம் நெருங்கவும், தன்னால் எழுந்து கொண்டவன் திரும்பி பார்க்க, சுரபி சோர்வாக வெளியே பார்த்து இருந்தாள்.

இவனுக்குமே அவள் நிலை சங்கடத்தை தான் கொடுத்தது. ஆனால் இவன் திட்டமிட்டா எதுவும் நடந்தது... அவளாக வந்தாள், பேசினாள். அதற்கு நான் பொறுப்பேற்று அவளிடம் போய் தெளிவுப்படுத்த வேண்டும் என்றால் அது எல்லாம் நடக்க கூடிய காரியமா என்று இப்பொழுதும் கடுகடுப்பு கிளம்பியது.

‘நோ... அதைவிட்டு வெளியே வா நிஜா. சும்மா அந்தப் பிசாசையே நினைச்சுக்கிட்டு...’ என சலித்தவனாக அருகில் இருந்தவளை அழைத்தான்.

அவள் திரும்பி பார்க்க, “ஏர்போர்ட்ல அவளை பார்த்ததையும் சரி, பேசினதையும் சரி... யார் கிட்டயும் சொல்ல வேணாம்!” என்றான்.

“ஹான்... சொல்ல மாட்டேன்!”

“பெரிம்மா, அக்கான்னு யார் காதுக்கும் விஷயம் போக கூடாது!”

அவள் தலை ஆட்ட, “ஆமா... இதை மறந்துட்டேனே. நீங்க தான் உங்க பொண்ணு கிட்ட எல்லாம் சொல்லிடுவீங்களே...” என சந்தேகமாக இழுத்தான்.

திருதிருவென்று விழித்தவள், “பாப்பா கிட்டயும் சொல்ல கூடாதா?” என கேட்டாள்.

“கண்டிப்பா கூடாது... அவளுக்கு தெரிஞ்சா அடுத்து நவிக்கு போகும், அப்படியே அக்கா, பெரிம்மான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!”

“ஓ... சரி, சொல்லலை!”

“நம்பலாமா?” என்று அவன் கேலிப் புன்னகையுடன் கேட்க,

இவள் முகத்திலும் சின்ன ஆசுவாசம் பிறந்து, “ம்... நம்பலாம்!” என முறுவலித்தாள்.

***


ஸ்வப்னாவிடம் முதல் ஆளாக இருந்து மருதாணி வைத்து இருக்கும் தன் மனைவியை கண்டு நவ்யுத்தின் இதழ்கள் புன்முறுவல் பூக்க, அருகில் லேசாக தொண்டையை செருமினான் ஹர்ஷா.

அவனிடம் கண்களை இடுக்கியபடி திரும்பியவன், “என்னடா?” என்றான் அதிகாரமாக.

“தெரியலை மாம்ஸ்... தொண்டையில ஏதோ கிச்சுக்கிச்சு போல இருக்கு!”

“ம்... அங்கே ஓரத்துல பெரிய தடியை சாச்சு வச்சு இருக்காங்க பாரு, அதை எடுத்துட்டு வா. வாயை பொளந்து ஒரே குத்துல சிக்கிட்டு இருக்கறதை வயித்துக்கு உள்ள தள்ளிடறேன்!”

“அட கொலைகார பாவிகளா... நான் போய் என் சித்தப்பா கிட்ட உட்கார்ந்துக்கறேன்!” என எழுந்துச் சென்றான்.

தன்னிடம் வந்து அமர்பவனை கண்ட நிஜந்தன், “என்னடா பம்மிட்டு வர்ற?” என சந்தேகமாக பார்த்தான்.

“நான் என்ன பம்முறேன்... இந்த நவி மாம்ஸ் அநியாயம் பண்றாரு!”

அவன் பொருமலில் அக்கா மகனை பார்த்த நிஜந்தன் சிரித்தவாறு, “ஏன்? என்ன செஞ்சான்?” என விசாரித்தான்.

“ம்... அவரு பொண்டாட்டியை சைட் அடிக்கறதை லேசுபாசா கேட்டுட்டேனாம், அதுக்கு டெர்ரர் பேஸ் காண்பிக்கறாரு!”

அவன் புலம்பலில் பெண்கள் கூட்டத்தின் பக்கம் பார்வையை விரட்டியவன், பின் நெற்றியை சுருக்கினான்.

‘இவளை எங்கே காணலை? வழக்கம்போல வேணாம் பாட்டு படிச்சிட்டு உள்ளயே உட்கார்ந்து இருக்காளா...’

“யாரை சித்தப்ஸ் தேடறீங்க?”

சட்டென்று தோன்றிய திகைப்பை மறைத்து, “நான் யாரை தேடறேன்? எல்லாம் என்ன பண்றாங்கன்னு பார்த்தேன்!” என்று சமாளித்தான்.

“மருதாணி வைக்கற இடத்துல என்ன தோசை சுட்டா சாப்பிடுவாங்க... எல்லாம் மருதாணி தான் வச்சிட்டு இருப்பாங்க!”

பல்லைக் கடித்தவன், “உன்கிட்ட அவன் டெர்ரர் பேஸ் காண்பிச்சதுல தப்பே இல்லைடா!” என முறைத்தான்.

“போங்க சித்தப்ஸ்... நீங்களும், உங்க மருமகனும் ஒரு டைப்பா தான் சுத்தறீங்க. டேய் அண்ணா... நீயாவது என்கிட்ட ஒழுங்கா பேசுடா!” என்று அருண் புறமாக திரும்பி அமர்ந்தான் ஹர்ஷா.

“அதுக்கு நீ ஒழுங்கா பேசனும்டி... போயிடு அங்கிட்டு. நான் பிரேம் அண்ணா கூட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்!”

“ஆமா... ரெண்டு பேரும் முக்கியமா பேசி அப்படியே கோயமுத்தூருக்கும், மேட்டுப்பாளையத்துக்கும் நடுவுல மெட்ரோ ட்ரைன் விடப் போறீங்க. ஓவர் அலட்டலா இல்ல இருக்கு...” என்றவன் நொடிக்க,

“உன்னை...” என்று அருண் கழுத்தை நெரிப்பது போல் கைகளை கொண்டு வரவும், ஹர்ஷா அலறியடித்து அங்கிருந்து ஓடி விட்டான்.

ஆண்களின் பலத்த சிரிப்பு ஒலியில் திரும்பிய பெண்கள், தங்களை நோக்கி தலைதெறிக்க ஓடி வருபவனை புரியாமல் பார்த்தனர்.

“நீ ஏன்டா இப்படி ஓடி வர?”

“போங்க பாட்டி... அங்கே எல்லாரும் டூ பேட். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்!”

“என்னத்தையோ சேட்டையை இழுத்துட்டு, தப்பிச்சு ஓடி வந்து இருக்கான் இவன்!”

சரியாக கணித்து சொல்லும் ஸ்வப்னாவை முறைப்பாக பார்த்தவன், “நாளையில இருந்து உங்க பிள்ளைங்களை நீங்களே பார்த்துக்கோங்க. என் தலையில கட்டினீங்க, நடக்கறதே வேற...” என்றான் விறைப்பாக.

“டேய்... டேய்... என் செல்லம் இல்ல... அண்ணி சும்மா விளையாடினேன்டா. உனக்கு வேணும்னா எல்லாரை விட அழகா மருதாணி வச்சு விடறேன், கையை காட்டு!” என்று தாஜா செய்தாள் பெரியவள்.

“எனக்கு எதுக்கு அதெல்லாம்... இந்தாங்க, இவங்களுக்கு வேணா வச்சு விடுங்க!”

அங்கே வந்த சுரபியின் கையை பிடித்து பட்டென்று முன்னே இழுத்துக் கொடுத்தான் ஹர்ஷா. ருக்மணிக்கு மாத்திரை, மருந்து சாப்பிட வெந்நீரை வைத்து எடுத்து வந்து இருந்தவள், அவன் செயலில் திடுக்கிட்டு வேகமாக கையை இழுத்துக் கொண்டாள்.

“எனக்கு எல்லாம் வேணாம்!”

“ஆரம்பிச்சிட்டாடா...” என்று தலையில் கை வைத்துக் கொண்டார் மூதாட்டி.

“சரி, உன்னோட ஆசையை ஏன் கெடுப்பானேன்... உன் சித்தியை பிடிச்சு இழுத்து உட்கார வை. மகளுக்கு முடிச்சிட்டு அடுத்து அம்மாவுக்கு வரேன்!”

ஸ்வப்னா அலட்டாமல் கூறவும், “இல்ல... தம்பி சும்மா விளையாடறாங்க. நீங்க மத்தவங்களுக்கு பாருங்க!” என்றாள் சுரபி அவசரமாக.

“ஏன்டா ஹர்ஷா... நீ வந்து இத்தனை நாள் ஆகியும், எப்படிடா இவங்க இப்படியே இருக்காங்க. நமக்கு எல்லாம் எத்தனை மரியாதை பார்த்தியா?”

“என்ன செய்றது? உங்களை மாதிரி ரௌடிங்களை பார்த்து எங்க சின்ன அத்தைக்கு தன்னால மரியாதை வந்துடுது. அப்படித்தானே அத்தை...”

வைசாலி நக்கல் செய்யவும், “சித்தி... அப்படியா?” என்று நெஞ்சில் கை வைத்தான் ஹர்ஷா.

அவனுடைய அதிகப்படியான அதிர்வில் அரண்டு போன சுரபி, “அப்படிலாம் இல்லைப்பா!” என்றாள் பதறி அடித்து.

“அப்போ, டேய் ஹர்ஷா... நகர்ந்து உட்கார்ந்து எனக்கு இடம் கொடுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!”

விழித்தவள், “இல்ல... பரவாயில்லை, நான் இப்படியே கூட உட்கார்ந்துக்கறேன்!” என இருந்த இடத்தில் அவள் பட்டென்று அமர்ந்துவிட, சுற்றி இருந்த பெண்கள் பக்கென்று வெடித்து சிரித்து விட்டனர்.

“அங்கேயும் போய் இவன் வேலையை ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு!” என்ற நவி, “வாங்க மாம்ஸ்... என்னென்னு போய் பார்ப்போம்!” என்று நிஜந்தனின் பார்வை அங்கேயே இருப்பதை கவனித்து விட்டு கிளப்பிக் கொண்டு நடந்தான்.

“இருந்தாலும் நீங்க என்னை இப்படி இன்சல்ட் செஞ்சு இருக்க கூடாது சித்தி!” என்று நெற்றியில் கை விரல்களை மடக்கி முட்டிக் கொண்டு, சோகமாக தலை அசைத்தான் ஹர்ஷா.

அவள் தடுமாற்றத்துடன், “நான் ஒன்னுமே செய்யலையே...” என்று மெல்லிய குரலில் பேசி இருக்கும் பொழுதே, ஆண்கள் இருவரும் அங்கே வந்து விட்டனர்.

“என்ன... என்ன நடக்குது இங்கே? சத்தம் பெருசா வருது!”

நவ்யுத் தன் மனைவியின் அருகே அமர்ந்தபடி விசாரணை நடத்த, “உங்க மாமன் மகன் இருக்க இடத்துல சத்தத்துக்கு என்ன அண்ணா குறைச்சல்... ஒரே காமெடி தான் போங்க!” என்று பொங்கி சிரித்தாள் வைசாலி.

“உங்க ஊட்டுக்காரரும் அவருக்கு மாமன் மகன் தான்!” என்று கண்களை உருட்டினான் சின்னவன்.

“இருந்தாலும் காமெடின்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லி இருக்கேன் இல்ல... அது எல்லாம் உங்க அண்ணாக்கு வராதுன்னு என் அண்ணனுக்கு நல்லா தெரியும்!”

“ம்க்கும்...” என்றவன் உதட்டை கோணிக்க, நிஜந்தன் அவன் அருகில் அமர்ந்தான்.

“ஆமா... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்கே வந்தீங்க?”

“உனக்கு என்னடா... நாங்க எங்க வேணா வருவோம்!” என்று அலட்டிய நவி, “ஆமா ஸ்வப்... என்ன கலாட்டா போயிட்டு இருக்கு இங்கே?” என தமக்கையிடம் விவரம் கேட்டான்.

***


உறங்கும் நேரம் நெருங்கவும் தனிமையில் அறைக்குச் சென்றவரை பின்தொடர்ந்து சென்று மௌனமாக நின்றாள் சுரபி.

மெத்தையில் கிடந்த தலையணையை நேராக வைத்து விட்டு திரும்பிய மூதாட்டி, தன்னெதிரே வந்து நிற்கும் பெண்ணை நிதானமாக ஏறிட்டார்.

“உங்களுக்கு என் மேலே கோபமா?”

வெறுமையாக முறுவலித்தவர், “அந்த உரிமை எனக்கு இருக்கா என்ன?” என்று பதில் கேள்வி கேட்டார்.

அவள் வழக்கம்போல் கரகரவென்று நீரை உகுக்க, “ப்ச்... உட்காரு!” என்று தானும் கால் நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தார்.

“நான் எதுவும் உங்களை கஷ்டப்படுத்த நினைக்கலை!”

வேகமாக சொல்லும் பெண்ணை பார்த்தவர், “நானும் உன்னை கஷ்டப்படுத்திட கூடாதுன்னு தான் தள்ளி இருக்கேன்!” என்றார் அமைதியாக.

“உங்களால என்னை கஷ்டப்படுத்த முடியாது அத்தை!”

விரைந்து சொல்பவளை கூர்மையாக நோக்கி, “அந்த நம்பிக்கை உனக்கு இருந்து இருந்தா, என்கிட்ட இருந்து தப்பிச்சு உன் மகள் கூட ஓடனும்னு நினைச்சு இருக்க மாட்ட!” என அழுத்தமாக மொழிபவரை, வாயடைத்து போய் பார்த்தாள் அவள்.

“இதை இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா?”

முகம் சிவந்தவள், “அப்போ இருந்த பதட்டத்துல தப்பு பண்ணிட்டேன்!” என்றாள் பாவமாக.

“சரிவிடு... புரியுது!” என மெல்ல புன்னகைத்தார்.

“இனிமே அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டேன், எப்பவும் உங்க கூடவே இருந்துக்கறேன்!”

அவளை ஆதூரமாக பார்த்தவர், தலை அசைத்துக் கொண்டார்.

சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பின் நிமிர்ந்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா... நான் ஒன்னு சொல்லவா?” என்றாள் தயக்கத்துடன்.

“உன் மனசுல பட்டதை நீ சொல்லப் போற... அதை ஏன் நான் தப்பா நினைக்கப் போறேன்?”

இலகுவாக கூறும் அம்மூதாட்டியின் வார்த்தைகளில் இவளுக்குத்தான் குற்றவுணர்வாக இருந்தது.

‘அவங்கவங்க மனசுல பட்டதை பேசுறதுல தப்பு இல்லைங்கிற மாதிரி இவங்க எவ்வளவு பெருந்தன்மையா சொல்றாங்க? ஆனா அவருக்கு என்னை பிடிச்சு இருக்குன்னு அவங்க அண்ணா எல்லார் கிட்டயும் சொன்னதும் நான் எவ்வளவு கோபப்பட்டேன், தேவை இல்லாததை எல்லாம் நினைச்சு கஷ்டப்பட்டேன்...’

“என்ன கண்ணு...? சொல்லு!”

“அது...” என திணறியவள், “பெரியவங்க குடும்பம் இங்கே ஊர்ல இருக்கும் போதே, நீங்க அவருக்கு வேற இடத்துல நல்லப் பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணம் முடிக்கலாமே... எல்லாரும் இதை நினைச்சு தானே கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க, அவரு மனசு மாறி இருக்குற நேரம் சட்டுன்னு ஏற்பாடு பண்ணுங்களேன்!” என்றாள் மெல்லமாக.

“உன்கிட்ட அபி அவனை பத்தி சொன்னதா சொன்னாளே...”

“ம்... சொன்னாங்க. அப்போ அவருக்கு கல்யாணத்து மேலே வெறுப்பு இருந்தது, அதனால ஒத்துக்கலை. இப்போ தான் அவரே ஆசைப்பட்டு கேட்கறாரே...”

‘அவன் ஆசைப்பட்டு கேட்கறது கல்யாணத்தை இல்லை தாயி... உன்னை, இதை எப்போ இவள் புரிஞ்சிக்க போறாளோ?’

மனதின் சலிப்பை மறைத்து, “சரி பேசிப் பார்க்கறேன்!” என்றதும், பெண்ணின் முகம் மலர்ந்தது.

தானும் முறுவலித்தவர், “நீ பயப்பட வேணாம், இந்த விஷயத்துல கண்டிப்பா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். இதுவரைக்கும் செஞ்சது எல்லாம் உன்னோட நன்மைக்கு மட்டும் தான் அப்படிங்கிறதால, எனக்கு எதுவும் தப்பா தோணல தைரியமா விரட்டினேன். ஆனா இது அப்படியில்லை... என் பையன் மேலே வச்சு இருக்க பாசத்துக்கு, அவன் நல்லா இருக்கனும்கிற ஆசையில நான் சுயநலமா நடந்து, உன் மனசை நோகடிச்சிட கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கேன்!” என்று தன் எண்ணங்களை பகிர்ந்தார்.

தன்னை எதுவும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என நினைத்து மகிழ்வதா, அல்லது இதனால் இவரது மகனின் வாழ்வு பாதிப்பதை நினைத்து உள்ளூர கவலையில் தவிப்பவரை எண்ணி நோவதா என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி... இதை எல்லாம் நினைச்சு மனசை குழப்பிக்காம, நிம்மதியா போய் தூங்கு. இதுக்கு மேலே நான் எதுவும் நினைக்கப் போறது இல்லை, எல்லாம் அவன் செயல். ஆண்டவன் போட்ட விதிப்படி எதுனாலும் நடக்கட்டும்!”

அலுப்புடன் கூறி பெருமூச்சு விடுபவரை வேதனையோடு பார்த்தவள், செய்வதறியாது பரிதவித்தாள்.

***


அனைவருக்கும் தனது திருமணத்திற்கான உடைகளை எடுத்துக் கொடுத்து விட்ட நிஜந்தன், மணப்பெண்ணின் முகூர்த்த புடவையை மட்டும் ரகசியமாக வைத்து இருந்து அனைவருக்கும் போக்கு காட்டினான்.

“டேய்... கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. புடவையை கண்ல காட்ட மாட்டேங்குற, வீட்ல வச்சு சாமி கும்பிட வேணாமா... இதுல ப்ளவுஸ் வேற அவளுக்கு அளவு சரியா இருக்கனும், நீ பாட்டுக்கு ஏதாவது ரெடிமேடை கடைசி நேரத்துல தூக்கிட்டு வந்துடாத...” என்று ருக்மணி வேறு ஒருபக்கம் அதட்டினார்.

“ப்ச்... பெரிம்மா, அதெல்லாம் எனக்குத் தெரியும். அவளோட அளவு ப்ளவுஸோட தான் தைக்க கொடுத்து இருக்கேன்!”

“என்னது? அளவு ப்ளவுஸா... அது ஏது உனக்கு?”

மாட்டிக் கொண்ட பாவனையில் சற்றே விழித்தவன், “அது...” என இழுத்துவிட்டு, “ஸாரிம்மா மருமகளே...” என்று வைசாலியிடம் கூறியவன், “அவளை தான் எடுத்து தரச் சொன்னேன்!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“அட கூட்டு களவாணிகளா... ஏய் புள்ளை... அப்போ நீ புடவையை பார்த்துட்டியா?” என மருமகளிடம் சண்டைக்கு நின்றார் புவனா.

“அச்சோ இல்லை அத்தை... புடவைலாம் என் கண்ணுல காட்டுலை. மாமா, சொல்றதை சரியா சொல்லுங்க!” என்று அவனிடம் முறைத்தாள்.

“ஆமாமா... அவளுக்கும் தெரியாது!”

“ஷ்... அப்பா... என்னடா பண்ற நீ?”

அபிராமி அலுப்புடன் கேட்க, “நாளைக்கு காலையில ப்ளவுஸ் வந்துடும் க்கா, அதோட சேர்த்து காண்பிக்கறேன்!” என்றான் நிஜந்தன்.

“ப்ளவுஸை நாங்க தனியா கூட பார்த்துக்குவோம்... நீங்க முதல்ல புடவையை காட்டுங்க மாமா, ரொம்பத்தான் பண்றீங்க!” என்று அடுத்து சண்டைக்கு தயாரானாள் ஸ்வப்னா.

“ஏய்... இந்த பொம்பளைங்களை அடக்க முடியாதுடா, நீ எடுத்துட்டு வந்து காட்டு!”

தாமு தம்பியிடம் பேச, “ஓ...” என்று ஸ்வப்னாவும், வைசாலியும் ஒருசேர ராகமிழுத்து அவரிடம் வேகமாக திரும்பினர்.

“நான் வரலைம்மா இந்த ஆட்டத்துக்கு... என்னை ஆளை விட்டுடுங்க!” என்று அவர் பெரிய கும்பிடாக போட்டு விட்டார்.

நிஜந்தன் தலை அசைத்து நகைத்தபடி, புடவையை எடுக்க அறைக்குச் சென்றான்.

“இங்கே இத்தனை களேபரம் நடக்குது... இந்த அம்மாவும், பொண்ணும் எங்கே?” என்று சுரபி, ராகவியை தேடினாள் வைசாலி.

“ஆமா... அதுங்களை முதல்ல வெளியில வரச் சொல்லு!” என்றார் ருக்மணி.

ஒரு ஆர்வத்தில் வேலை செய்வது என்னவோ செய்து விட்டான். ஆனால் இப்பொழுது அதை அனைவரின் முன்னிலும் காண்பிக்க, அவனுக்கு கூச்சம் நெட்டித் தள்ளியது. சிறிதே மூளையை தட்டி விட்டவனுக்கு ஒரு அருமையான யோசனை தோன்ற, அதன்படி தெளிவாக வெளியே வந்தான் நிஜந்தன்.

“சரி, நீங்க எல்லாம் புடவையை பாருங்க. எனக்கு மில்லுல கொஞ்சம் வேலை இருக்கு, போய் என்னென்னு பார்த்துட்டு வந்துடறேன்!” என்று நழுவ முயன்றான்.

“எங்கே... எங்கே ஓடறீங்க நீங்க? அதை ஒரு அரைமணி நேரம் கழிச்சு பொறுமையா கூட போய் பார்த்துக்கலாம்!” என்று குறுக்கே பாய்ந்து, வழி மறித்து நின்றான் நவ்யுத்.

“அருண்... நீ போய் அந்த கதவை லாக் பண்ணுடா!”

“டேய்... அவ்வளவு சீன் எல்லாம் இல்லைடா!”

மாமன் பதற, “அதை நாங்க முடிவு பண்ணிக்கறோம், நீங்க இப்படி வந்து உங்க அண்ணாவோட உட்காருங்க மாம்ஸ்!” என்று அவனை பிடித்து தாமுவின் அருகில் அமர வைத்தான் மருமகன்.

“இங்கே என்ன நடக்குது?”

ராகவி கேட்க, “ம்... உன் அம்மாவோட கல்யாண புடவையில உன்னோட அப்பா ஏதோ ஸ்பெஷலா வேலை பார்த்து இருக்கார். அதைத்தான் இப்போ என்னென்னு எல்லாரும் தெரிஞ்சிக்க போறோம்!” என்றான் நவ்யுத் கேலிச் சிரிப்புடன்.

அவள் நிஜந்தனை வியப்புடன் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த சுரபியின் முகம் என்னவோ, ஏதோ என்று கலவரம் ஆகியது.

**********

நேரடி புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.

Most Popular