Menu

Search This Blog

Poojaiketra Poovithu - Deepa Babu

 


பூஜைக்கேற்ற பூவிது

கதைக்கரு


முன்னிருபதுகளில் தனிமையில் வாழும் இளைஞன் ஒருவன் பெற்றவர்களை இழந்து அநாதரவாக தன் வீட்டிற்கு வருகைப் புரியும் எதற்கும் அஞ்சி நடுங்கும் ஒரு சிறுமிக்கு தன்னம்பிக்கை கொடுத்து அவள் வாழ்வை முன்னேற்றப் பாதையில் செலுத்துவான். திருமண வயதை அடைந்தப் பெண்ணிற்கு அவன் மாப்பிள்ளை பார்க்கும் முன்பே அதிரடியாய் அவர்களின் வாழ்க்கையில் நுழையும் மற்றொரு நாயகனால் வாழ்வு மேலும் கலகலப்பாக வண்ணமயமாக மாறுகிறது.

*******

கதையிலிருந்து சிறு துளிகள்


சற்று நேரம் தோட்டத்தைச் சுற்றி சுற்றி உலா வந்தவளுக்கு இதுவரை இல்லாத விதமாக அந்த இடமே மிக அழகாக தோன்றியது.

'இனி உங்களை போலத்தான் என் வாழ்வும் அழகாக மலர்ந்திருக்கும்!' என அங்கே பூத்திருந்த சிகப்பு ரோஜாக்களிடம் ஆசையாக கதைப் பேசியவளின் விழிகளில் பட்டாம்பூச்சி விழ ஆவலுடன் அதனருகில் சென்றாள்.

ம்... என்று இடையில் கை வைத்தச் சிறுமி, 'இரு... உன்னை மட்டும் விட்டு விடுவேனா... இனி அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்காமல் உன்னை போல தான் வெளியுலகில் நான் சுதந்திரமாக பறக்கப் போகிறேன்!' என உற்சாகமாக நடையில் இளம் துள்ளலுடன் குதித்துக்கொண்டு நடந்தாள்.

சூரியனாரின் ஆதிக்கம் அதிகரிக்கவும் அண்ணா எழுந்து விடுவார் என்று கிச்சனுக்கு விரைந்தவள் ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து வைத்து அவனுக்கு காபி கலக்க வேண்டி டிகாஷன் தயாரிக்க ஆரம்பித்தாள்.

"அருந்ததி!" என்ற அழைப்புடன் ரிச்சர்ட் கதவை தட்டும் ஓசைக் கேட்கவும் வேகமாக வெளியே வந்தவள், மேலே பார்த்து அண்ணா என குரல் கொடுத்தாள்.

மாடியில் இருந்தவன் திரும்பிக் கீழே எட்டிப்பார்த்து, "ஹேய்... குட்மார்னிங்! அதற்குள் எழுந்து விட்டாயா?" என்றபடி மடமடவென்று கீழே இறங்கினான்.

****

"கேட்டீர்களா... இவன் ஆண்பிள்ளை, எவருடைய கட்டுப்பாடுமின்றி தன்னந்தனியாக வீட்டில் வசித்தாலும் சுய ஒழுக்கத்தோடு, குடும்பக் கௌரவத்தையும் காப்பாற்றி வருகிறானே இவன் மனிதன்.

இத்தனை சிறிய வயதில் தனக்குச் சம்பந்தமில்லாத சிறுமி என்றிருந்தும் கண்ணெதிரே வேண்டிய பாதுகாப்பின்றி தனிமையில் அச்சத்தில் தவித்தப் பிள்ளையின் பரிதவிப்பை பார்த்து மனம் கேட்காமல் அவளை தங்கையாக ஏற்று இதுநாள் வரை அவளுக்கு பொறுப்பான அண்ணனாக இருந்து வேண்டிய பாதுகாப்பு கொடுக்கிறானே இவன் தான் ஆண்பிள்ளை.

மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று சுற்றி அனைவரும் இருக்கும் பொழுது வைப்பாட்டியை தேடிச் சென்ற நீயெல்லாம் ஆண்பிள்ளையே இல்லை!" என கணவனுக்கு சவுக்கடி கொடுத்தார்.

****

"ஹாய் அங்கிள்!" என சங்கடத்துடன் அவன் முகம் நோக்கியவன், "சாரி... உங்களை தவிர்த்துவிட்டு ஆன்ட்டியிடம் பேச வந்தேன் என்று எதுவும் என்னை தவறாக எண்ணி விடாதீர்கள்!" என விளக்க முயன்றவனின் தோளில் தட்டிய சித்து, "கூல் மேன், ஜஸ்ட்... லீவ் இட். உட்கார்!" என்று தானும் ஒரு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான்.

"அப்படியில்லை அங்கிள், உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது என் கடமை!"

"ஓஹோ... அப்பொழுது சரி சொல்!" என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.

அடுத்த நொடி சட்டென்று, "ஹேய்... ஒரு நிமிடம்... அதற்குமுன் என் பெண்டாட்டியிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். ஏன்மா நீயே அனைத்தையும் பேசி முடிவெடு என்று சொன்னால் இப்பொழுது எதற்காக என்னை வரச்சொன்னாய் நீ?" என்றான் சித்து அதட்டலாக.

"ஹைய்யோ... அது இல்லைப்பா, அந்த விஷயம் சக்ஸஸ் தான். நாங்கள் இருவருமே தெளிவாகப் பேசி முடிவெடுத்து விட்டோம். கருண், அருந்ததி ரூட் க்ளியர், இது வேறு விஷயம்!"

"ஓ... ஈஸ் இட்?" என்று அகமகிழ்ந்தவன், "ரொம்பவும் சந்தோசம்!" என ரிச்சர்ட்டை தோளோடு அணைத்தான்.

"அருந்ததியை உங்கள் வீட்டிற்கு அனுப்புவதில் எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சி தான் அங்கிள்!" என்று நிறைவாக முறுவலித்தான் அவன்.

"ம்... சரி, நீ எதையோ சொல்ல வந்தாயே அதைச் சொல்!"

"ஆங்... அருந்ததியின் பிரச்சினையை உங்களிடம் டிஸ்கஸ் செய்வதை விட ஆன்ட்டியிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஏனெனில் ஆண்கள் எதையும் சுலபமாக மேம்போக்காய் எண்ணும் குணமுடையவர்கள், அது நல்லதாகட்டும் அல்லது தீயதாகட்டும்.

பட்... பெண்கள் அப்படியில்லை, எந்தவொரு விஷயத்தையும் தங்களுக்குள் நுணுக்கமாக ஆலோசிப்பார்கள். வீட்டின் பொறுப்பை தாங்கி நிற்கும் அவர்களுக்கு தான் குடும்பத்தில் எது பொருந்தும் பொருந்தாது என தீர்க்கமாக முடிவெடுக்க முடியும். அதனால் தான் இப்படியொரு சூழ்நிலையில் இருக்கின்ற பெண்ணை உங்கள் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என அவர்களிடம் பேச வந்தேன்!"

"யா... குட், தட்ஸ் ரைட் சாய்ஸ்!" என கண்சிமிட்டிய சித்தார்த், "அப்புறம் மேடம்... வேறெந்த முக்கியமான விஷயத்திற்காக நீங்கள் என்னை அழைத்தீர்கள்?" என்றான் தன் மனைவியிடம் திரும்பி.

"எல்லாம் நம் ரிச்சர்ட்டின் திருமண விஷயமாக பேசி முடிவெடுக்கத்தான் உங்களை அழைத்தேன்!" என்றாள் சிந்து விரிந்தப் புன்னகையுடன்.

"வாவ்... கிரேட் மேன், உனக்கும் திருமணம் முடிவாகிறது என்றால் ஏற்கனவே பெண் தயாராக இருக்கின்றாளா? கங்கிராட்ஸ்!" என அவன் கரம்பற்றி உற்சாகமாக வாழ்த்தினான் சித்து.

இல்லை... என்கிற வார்த்தை தொண்டையை விட்டு வெளிவராமல் தவிப்புடன் மறுப்பாய் அவன் மண்டையாட்டிக் கொண்டிருக்க, "அச்சோ... நீங்கள் வேற... இதுவரை அவன் எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை. இனி நாம் தான் அவனுக்கு நல்லப்பெண்ணாக பார்த்து முடிக்க வேண்டும்!" என்று அழகாக தன் கணவனை தெளிவாக்கினாள் சிந்துஜா.

****

உலர்ந்த தொண்டையில் இருந்து, 'ம்?' என்கின்ற ஒற்றை எழுத்து கூட அவள் இதழ் வழியே பிரசவிக்க மறுத்து அடம்பிடிக்க, அவனை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளை இன்னும் நெருங்கி அவளின் கரங்களிலிருந்த பூக்கூடையை அவன் மெல்ல பிடுங்கிக் கொண்டான்.

"ப்ச்... இதை வேறு கையில் வைத்திருந்தால் எப்படி பூக்களை பறித்துப் போடுவதாம்? இதைக் கொஞ்சம் பிடி!" என்று தன் கையில் இருந்த பூங்கொத்தை தந்திரமாக அவள் கரத்தினுள் திணித்தான் நாயகன்.

அடுத்தடுத்த அவனுடைய அதிரடி வரவாலும், செயல்களாலும் மலங்க விழித்தபடி நின்றவள், தன் கையில் இருந்ததை மெதுவாக தடவிப் பார்த்தாள்.

தயக்கத்துடன் அவனிடம் விழிகளை உயர்த்த, அவனோ கவனமாக பூக்களை பறித்துக் கொண்டிருந்தான்.

இனிப்பை மொய்க்கும் எறும்பாக தன் பார்வையால் அவன் முகத்தை ஆவலுடன் ஆராய்ந்தவள் சட்டென்று தன்னெதிரே இருப்பவன் பிரமையா உண்மையா என சந்தேகித்து உற்றுப் பார்த்தாள்.

"சந்தேகமே வேண்டாம்... உண்மை தான்!" என்று அவள்புறம் திரும்பாமல் அவனிடமிருந்து குரல் மட்டும் வெளிவந்தது.

நாணச் சிவப்பேற படபடத்த இமைகளை தாழ்த்தி தன் கையில் வீற்றிருக்கும் பூங்கொத்தை வெட்கப் புன்னகையுடன் மென்மையாக வருடினாள் பெண்.

முதல் நாளைய வெட்கத்தை அவளிடம் மீண்டும் கண்ட உற்சாகத்தில் உடனே குதூகலமானவன் அடுத்து, "ஆமாம்... இன்னும் எவ்வளவு பூக்கள் பறிக்க வேண்டும்?" என்றான் பரிதாபமாக.

ஹைய்யோ... என நாக்கை கடித்தவள், "சாரி... சாரி போதும்!" என்று அவனிடம் பூக்கூடைக்காக கையை நீட்டினாள்.

"பரவாயில்லை என்னிடமே இருக்கட்டும், அப்புறம் உன்னுடையதை வாங்கிக்கொண்டு என்னுடையதை திருப்பி தந்துவிட போகிறாய்!" என்றான் கருண் அவளை ஆழ்ந்துப் பார்த்தபடி.

அவன் மொழி புரியாமல் ஒரு கணம் விழித்தவளுக்கு பின்பே விஷயம் புரிய, 'இதென்ன மறைமுக அறிவிப்பா? என்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறாரா?' என்று யோசித்தாள்.

பின் தன் நெஞ்சோடு பூங்கொத்தை இடதுபுறம் இறுக்கிக்கொண்டு, "என்னால் இரண்டையும் வைத்துக்கொள்ள முடியும்!" என்று விழிகள் தழைய முனகியபடி அவனிடம் தன் வலதுக்கரத்தை நீட்டினாள் அருந்ததி.

****

"ஆவ்வ்... உனக்கு கொள்ளைக்காரி என பெயர் வைத்ததற்கு பதில் மோகினிப் பிசாசு என்று வைத்திருக்கனும்டி. நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு போன் செய்கிறாய், ஆவ்வ்வ்..." என மீண்டுமொரு கொட்டாவியை வெளியேற்றினான் கருண்.

"டேய் மங்கூஸ்... எதற்காகடா கண்ட போட்டோவை எல்லாம் என்னுடைய போனுக்கு அனுப்பி வைக்கிறாய் நீ?" என்று எடுத்தவுடனேயே அட்சயா சுள்ளென்று கத்தவும், தூக்கம் போன இடம் தெரியாமல் படக்கென்று விழிகளை திறந்தான் அவன்.

"ஏய்... பத்து மணிக்கு அனுப்பியது இப்பொழுது தான் உன் கண்ணில் பட்டு தொலைத்ததா? எல்லாம் என் கிரகம். அதுசரி... என்ன பொசுக்கென்று அத்தான் போட்டோவை கண்ட போட்டோ என்று சொல்லி விட்டாய் நீ. கொஞ்சமாவது மாமன் மகன் என்கிற மரியாதை இருக்கிறதா உனக்கு?"

"அத்தான்... பொத்தான் என்றாய்... அப்படியே சுடுதண்ணீரை கொதிக்க வைத்து மண்டையில் கொட்டிவிடுவேன் பார்த்துக்கொள்!" என்றவள் மேலும் எகிறவும் அரண்டுப் போனான் கருண்.

"என்னது? ஏய் ராக்காச்சி... நீ செய்தாலும் செய்வாய். உனக்கு பிடிக்கவில்லை என்றால் போட்டோவை டெலிட் பண்ணிட்டு போய் தூங்குடி. என் தூக்கத்தையும் சேர்த்துக் கெடுக்கிறாள்!" என்று கத்தியவன் அலைபேசியை அணைப்பதற்குள் இங்கே இவள் படபடத்தாள்.

"மகனே... போனை மட்டும் கட் பண்ணினே, உன் கல்யாணமே என் கையில் தான் இருக்கிறது. அலுங்காமல் அதை கட் பண்ணிட்டு நான் பாட்டுக்கு போய்க்கொண்டே இருப்பேன், பார்த்துக்கொள்!" என்று மிரட்டினாள் அட்சயா.

அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தவன், "உனக்கு இப்பொழுது என்னடி பிரச்சினை? ஏதோ பாவம் பிள்ளை பிழைத்துப் போகட்டும் என்று நீயாக கேட்காமல் அக்கறையாக நானே உன் ஆளுடைய போட்டோவை அனுப்பியது ஒரு குற்றமா?

நடுராத்தியில் போனை போட்டு என் வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிடுவேன் என மிரட்டுகிறாயே... இதெல்லாம் எங்கே அடுக்கும்? இனி நான் உன் வழிக்கு வருவேனா? உன் வம்பே வேண்டாம், நீ எப்படியோ போ!" என்று புலம்பவும் அதுவரை தன்னை மறைத்து விளையாடிக் கொண்டிருந்தவள் வாய்விட்டு நகைக்க ஆரம்பித்தாள்.

****

ரிச்சர்ட் திகைப்புடன் அவளை பார்க்க, அவனை நெருங்கி நின்றவள், "நீ எப்படி போனால் எனக்கென்னடா? எனக்கு ஏன் அவ்வளவு கோபமும், அழுகையும் வருகிறது?" என்றாள் அவன் விழிகளை நேராக நோக்கி.

அட்சயாவின் 'டா'விற்கா அல்லது அவளுடைய நெருக்கத்திற்கா என்று தெரியாமல் நாயகனின் விழிகள் அதிர்ந்து விழிக்க, "ம்... பதில் சொல்லுங்கள், எத்தனை கேள்விகள் கேட்டேன். அதில் குறைந்தப்பட்சம் ஏதேனும் இரண்டு வினாக்களுக்காவது... இப்பொழுது நீங்கள் கட்டாயமாய் விடையளிக்க வேண்டும்!" என உத்திரவிட்டவள் அடுத்து, "சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்..." என்று ராகம் பாடினாள்.

அவள் கூறியவற்றை எல்லாம் கோர்வையாக்கி சிந்தித்துப் பதில் தேட விடாமல் தடுத்த அவளுடைய நெருக்கம், அவன் இதயத்தில் படபடப்பை கூட்ட பதிலின்றி மூளை மரத்துப்போய் நின்றான் ரிச்சர்ட்.

முழுதாக ஒரு நிமிடம் கூட பொறுமை காக்க முடியாமல், "என்ன பதில் தெரியவில்லையா?" என கேட்டு உதட்டை பிதுக்கினாள் அட்சயா.

அவன் விழிகள் ஒரு நொடி சலனமின்றி அவள் உதட்டில் பதிந்து பின் விழிகளுக்கு உயர்ந்தது.

"ஆனால் நான் கண்டுப்பிடித்து விட்டேன்!"

அவன் நெற்றியை சுருக்க, "நானே அப்பொழுது தான் கஷ்டப்பட்டு கொஞ்சமே கொஞ்சம் என் டென்ஷனை குறைத்தேன். இதில் இந்த கருண் பக்கி... உங்களுடைய போட்டோவை வேறு எனக்கு மெஸேஜ் செய்தான்!" என இமைகளை தாழ்த்தினாள்.

அதுவரை படபடத்தவள் ஜெர்க்காகி மெதுவாக பேசவும், அவன் விழிகளில் சுவாரஸ்யம் பிறந்தது.

"ஆக்ட்சுவலி... உங்களுடையது என்று தனியாக இல்லை, ஐந்து பேர் சேர்ந்து நிற்கின்ற புகைப்படம் தான். ஆனால் பாருங்கள்... என் கண்களில் உங்கள் முகம் மட்டும் தான் பளிச்சென்று தெரிந்து மேலும் கோபத்தை கிளறிவிட்டது!" என்றாள் மெல்லமாக.

தான் என்ன உணர்கிறோம் என்பதே புரியாமல் ரிச்சர்ட் அவள் முகத்தையே பார்த்திருக்க, "அதற்குப்பிறகு தான், நான் ரொம்ப டென்ஷனானது... அழுகை வந்தது எல்லாம்!" என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

"சரி வந்தது வந்துவிட்டது என கொஞ்ச நேரம் நிம்மதியாக அழுதுவிட்டு அப்புறம் தான் ரொம்ப ஆழமாக சிந்தித்தேன். நான் எதற்காக என்னை போட்டு இவ்வளவு குழப்பிக் கொள்கிறேன் என்று... அதற்கு ஒரு பதிலும் கிடைத்தது!" என்றாள் அவன் முகத்தை விட்டு இம்மியளவும் பார்வையை அகற்றாமல்.

எகிறும் இதயத்துடிப்பை சிறிதும் வெளிக்காட்டாமல் அவனும் அவளையே நேர்பார்வையாய் பார்த்திருக்க, "ஐ திங்க்... ஐ ஆம் இன் லவ் வித் யு!" என்றாள் கிசுகிசுப்பாக.

இமைகளை மெல்லக் கொட்டியவன் மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சாவதானமாக திரும்பி நின்று வெளிப்புறம் பார்வையை செலுத்த, மூக்குடைப்பட்டாள் அட்சயா.

தான் எதிர்பார்ப்புடன் காதலை அறிவித்திருக்க, அவனோ எந்தப் பிரதிபலிப்புமின்றி வேறுபுறம் திரும்பிக் கொள்ளவும் வெகுண்டவள், "இடியட்!" என்று அவன் காதுபட நல்ல தெளிவாகவே முணுமுணுத்துவிட்டு, விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேற முயன்றாள்.

அடுத்த நொடி அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் நிறுத்தி, "என்ன சொன்னாய்?" என்று வினவியிருந்தான் ரிச்சர்ட்.

ஒருகணம் திகைத்த அட்சயா மறுகணம் சிலிர்த்துக்கொண்டு, "ம்... இடியட் என்று சொன்னேன்!" என முறைத்தாள்.

மெல்ல இதழ்கள் விரிய, "நான் அதைக் கேட்கவில்லை, அதற்கு முன்னால் ஏதோ சொன்னாயே அதைக் கேட்டேன்!" என்றான் புன்னகையுடன்.

'ஏதோ சொன்னேனாமா...' என புருவம் சுளித்தவள், "நான் ஒரு முறைக்கு மேல் எதையும் திருப்பிச் சொல்ல மாட்டேன்!" என முழங்கி அவனை சவாலாக ஏறிட்டாள்.

அன்றைய பேச்சை நினைவுக் கூர்ந்து கடகடவென்று நகைத்தவன், "ஆனால் நீ எதுவும் கண்டிஷன் போடவில்லையே..." என்று அவளுக்கு நினைவூட்டினான்.

"ஸோ வாட்? எதுவும் என் இஷ்டம்!" என்றாள் அட்சயா மிடுக்காக.

ஓ... என்று மெச்சுதலாக இதழ்களை வளைத்தவன், "பட்... நான் சொல்லலாம் இல்லையா?" என்று வினவவும் அவளுடைய வீம்பு ஆட்டம் காண ஆரம்பித்தது.

****

Poojaiketra Poovithu - Amazon Kindle Link

Most Popular