Menu

Search This Blog

Theeyumillai Pugaiyumillai 1 - Deepababu

 



*1*


சென்னை சர்வதேச விமான நிலையம்!!!

விடியற்காலை மணி நான்கு முப்பது. 

செக் அவுட் ப்ரொஸிஜர் முடிந்து வெளியே வந்தான் சாய்கிருஷ்.

நம் கதையின் நாயகன், பார்க்கும் பெண்களை நொடிப்பொழுதில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் ஆறரை அடி ஆணழகன்.

ஆனால் எத்தனைப் பெண்கள் சுற்றி இருந்தாலும், அவன் விழிகள் யாரையும் நோக்காது. எதிலும் ஒரு அலட்சியம் உண்டு, அவ்வளவு தானே... இதில் என்ன இருக்கின்றது? என்பது போல். அவன் லிஸ்டில் பெண்களும் அந்த வரிசையில் தான் இருந்தனர்.

அவன் முகத்தில் எந்நேரமும் இருக்கும் அந்த திமிரும், அலட்சியமுமே பெண்களை அவன் பக்கம் கவர்ந்திழுக்கப் போதுமானதாக இருந்தது.

வெளியே வந்தவனை, "ஹாய் கிருஷ்... வெல்கம்!", என்று கட்டியணைத்து மகிழ்ச்சியாக வரவேற்றார் அவன் தந்தை சதானந்தம்.

"ஹாய் டாட்!" என புன்னகையோடு அவரை அணைத்து விலகியவன், "என்ன இன்று நீங்களே என்னை அழைக்க வந்து விட்டீர்கள்?" என்று வெகுவாக வியந்தான்.

"ஆங்... பின்னே... இத்தனை நாட்களாக நீ என் மகனாக மட்டும் வந்ததால் நான் வரவில்லை டிரைவரை மட்டும் அனுப்பி வைத்தேன். இன்று அப்படி முடியுமா? நீங்கள் தான் கல்யாண மாப்பிள்ளை ஆயிற்றே... ஸ்பெஷல் வரவேற்பு வேண்டாமா? ஆக்ட்சுவலி பெண் வீட்டாரும் உன்னை அழைக்க தாங்களும் உடன் வருவதாக சொன்னார்கள் தான். அதுதான் முறை என்றாலும் கூட நீ என்ன மூடில் வருகிறாயோ என்று நான் தான் அவர்களை வர வேண்டாமென்று கூறி விட்டேன்!" என்றார் அவர் தீவிரமாக.

"ப்ச்..." என்று முகத்தை சுளித்தவன், "நல்லவேலை செய்தீர்கள்... எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லை. ஒரே நியூஸன்ஸ்... திருமணம் எல்லாம் வேண்டாம் என்று சொன்னால் கேட்கிறீர்களா? நினைத்தாலே எரிச்சலாக வருகிறது. இதுவரை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் ஃபிரியாக இருந்தேன், இப்பொழுது என் ப்ரைவஸியில் குறுக்கிடுவதற்கென்றே மனைவி என்ற பெயரில் ஒருவளை என் தலையில் கட்டுகிறீர்கள். என் வாழ்க்கை முதற்கொண்டு ரூம் வரை அனைத்தையும் அவளோடு நான் ஷேர் செய்ய வேண்டும், ச்சை..." என்று கடுப்புடன் தன் முன்னிருந்த வண்டியின் பேனட்டில் ஓங்கி குத்தினான்.

இதுவரை தன் நண்பர்களுடன் கூட அவன் ரூமை ஷேர் செய்ததில்லை.

எங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அது உள்நாடோ, வெளிநாடோ தனக்கென்று தனி ஷுட் புக் செய்திடுவான்.

எதிலேயும் தனிகாட்டு ராஜாவாக கட்டுப்பாடின்றி வாழ்ந்தவனுக்கு இதுவரை எந்த பெண்களுடனும் நட்போ, உறவோ கிடையாது.

கிருஷுக்கு நான்கு வயதிருக்கும் பொழுதே உடல்நலம் சரியில்லாமல் அவனுடைய அம்மா இறந்து விட்டார். அதன்பிறகு எந்த ஒரு பெண்ணின் வாசனையும் இல்லாமல் அவன் தனியாக தான் வளர்ந்தான்.

அதற்கு முக்கிய காரணம் அவனுடைய அப்பா, ஆங்காங்கே கேள்விப்படும் சம்பவங்களை வைத்து வேலைக்கு வருகின்ற பெண்கள் பணத்திற்காக தன் மகனை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ அல்லது அவனைத் தவறான வழியில் இழுத்து சென்று விடுவார்களோ என்று பயந்தே அவ்வினத்திடமிருந்து அவனை ஒதுக்கியே வளர்த்தார்.

அவருடைய அச்சத்திற்கும் நியாயமான காரணம் இருந்தது, யாருமற்ற அனாதையாக தன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவர் தான் சதானந்தம். கிருஷின் அம்மா பவானியை காதலித்து, ஜாதியை காட்டிப் பெண் தர மறுத்த அவள் வீட்டினரை எதிர்த்து தான் அவளை திருமணம் செய்து கொண்டார்.

கொள்ளுப் பேரனை பார்த்த கண்ணோடு அவர் பாட்டியும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதன் பிறகு பவானியுடனான அவருடைய குடும்ப வாழ்க்கை வசந்த காலமாக தான் சென்று கொண்டிருந்தது, அவளுக்கு உடல்பாதிப்பு வரும் வரை. சிறுவயதிலேயே கீழே விழுந்து அடிப்பட்டதில் அவளுக்கு மூளையில் கட்டி வளர ஆரம்பித்திருக்கிறது. வளர்ச்சியின் வேகம் குறைவு என்பதால் பாதிப்பு அவ்வளவாக இல்லை, யாருக்கும் தெரியவுமில்லை. ஆனால் கிருஷ் மூன்று வயதை கடந்தப் பொழுது முதலில் லேசாக தலைவலி வர ஆரம்பித்திருக்கிறது. அதை அவள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு வந்துள்ளாள்.

தன் பிஸினஸ் விஷயமாக இங்கும் அங்கும் பறந்துக் கொண்டிருந்த அவளுடைய கணவனுக்கும் அதை அவள் தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் கட்டி பெரியதாக வளர்ந்து இரத்த ஓட்டத்தை தடுத்து ஸ்ட்ரோக் வரவும் தான் விஷயம் சதானத்திற்கு தெரிய வந்தது.

நோய் முற்றிய நிலையில் எத்தனை செலவு செய்தும் அவளைக் காப்பாற்ற இயலாமல் தன் துணைவியை இழந்து தனிமையில் நின்றார்.

தன் தாத்தாவிற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் யாருமே, தங்கள் திருமண வாழ்க்கையில் சந்தோசமாக வாழவில்லை என்பது அவர் மனதை அழுத்தியது. அவர் தந்தையின் ஒழுங்கீனத்தால், அவருடைய தாய் சிறு வயதிலேயே தற்கொலை செய்துக் கொண்டார். அதன்பிறகு சுதாரித்த அவர் பாட்டி சதானந்தத்தை ஒழுக்கத்தில் ராமனாக வளர்த்தார், இருந்தும் வாழ்க்கைத் துணையின்றி தனிமரமானார் அவர்.

அது அவர் மனதில் ஒரு உத்வேகத்தை விதைத்தது. தன் தாத்தாவின் வாரிசாக சாய்கிருஷை நிறைந்த வாழ்க்கை வாழச் செய்ய வேண்டும்... எந்த ஒரு குறையும் இல்லாமல் அவன் தன் மனைவியோடும், குழந்தைகளோடும் சேர்ந்து நீண்ட காலம் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணினார்.

இக்காலத்தில் சிறுவர்களை கெடுக்கின்ற அநேக விஷயங்கள் உலகில் மலிந்துக் கிடக்கிறதே என்று அது தன் மகனைத் தீண்டாத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

பள்ளியிலும், கல்லூரியிலும் உடன் பயிலும் பெண்கள் மீது ஈர்ப்பு எதுவும் ஏற்பட்டு ஒன்று தவறானப் பாதையில் சென்று விடுவானோ அல்லது தவறான பெண்ணை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்து விடுவானோ என்ற பயத்தில் பெண்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை சிறு வயது முதலே அவன் மனதில் விதைத்தார்.

பணத்திற்காக எதையும் செய்ய துணிபவர்கள் பெண்கள். உன்னிடம் நல்லவர்கள் போல் வேஷமிட்டு தங்களின் சுயநலத்திற்காக உன்னை பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் நீ தான் அவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக விலகி இருக்க வேண்டும் என்று ஏதேதோ சொல்லி அவன் மனதில் அவர்கள் மீது ஒரு அலட்சியத்தை வளரச் செய்தார்.

தந்தையை தவிர வேறு யாரும் உடன் இல்லாத நிலையில், அவருடைய சொல்லே அவனுக்கு வேதவாக்காக இருந்தது. அவர் காட்டிய பரிவும், பாசமும் அவனை அவருக்காக எதையும் செய்ய வைத்தது.

ஒரு சில நேரம் வயதின் காரணமாக மனதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், அவர் நினைவை மனதில் கொண்டு அனைத்தையும் அநாயசமாக ஒதுக்க கற்றுக் கொண்டான் கிருஷ்.

சாய்கிருஷுக்கு தேவையான எதையும் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்தும் தன்னால் கிடைக்க, அவன் மனதில் இருக்கின்ற அலட்சியப்போக்கு வளர்ந்துக் கொண்டே போனது.

நண்பர்களுடன் உள்ள நட்பு கூட ஒரு எல்லை வரை தான் யாரையும் வீட்டிற்குள் சேர்த்த மாட்டான், இவனும் அவர்கள் வீட்டிற்குப் போக மாட்டான். விருப்பமுள்ளவர்கள் நட்பை தொடரலாம் இல்லையென்றால் முறித்துக் கொண்டு போய் கொண்டேயிருக்கலாம். அதனால் உறவுகளின் அருமை, நட்பின் பெருமை என்று எதையும் அவன் தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று.

பார்க்கின்ற சினிமாக்களில் வரும் நெகிழ்ச்சி சம்பவங்களையும், கதையின் சுவாரசியத்திற்கு சேர்த்திருக்கும் கற்பனைகள் என்று ஒதுக்கி தள்ளி விடுவான்.

மகன் எதிலேயும் இப்படி அக்கறையின்றி, பற்றின்றி வளர்ந்துக் கொண்டிருக்க, ஒழுக்கத்தை மட்டும் கவனத்தில் கொண்ட தந்தை மற்றதை கவனிக்க தவறி விட்டார்.

படிப்பு முடிந்தவுடன் தன் பிசினஸுக்கு அவனை அழைக்கும் பொழுது தான், அவனுடைய குணம் ஒவ்வொன்றாக அவருக்கு புரிய ஆரம்பித்தது.

கிருஷ் எதிலேயும் ஆர்வமில்லாமல் இருந்தான், "இப்பொழுது என்ன... நீங்கள் நன்றாக தானே கவனித்துக் கொள்கிறீர்கள்... பிறகு நான் எதற்கு? உங்களுக்கு முடியவில்லை முழு நேரமும் கவனித்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது என்கிற பொழுது வேண்டுமென்றால் நான் வருகிறேன்!" என்று கூலாக அவரிடம் மறுத்து விட்டான்.

எந்தவொரு வேலையும் இல்லாமல் சும்மா இருப்பது போரடிக்கிறது என்று அடிக்கடி வெளியூர் சுற்றுப் பயணம் மேற்கொள்வான். இல்லையா... ஏதாவது ஆறு மாதம் அல்லது ஒரு வருட டிப்ளமோ கோர்ஸுகளில் சேர்ந்து நாட்களை தள்ளுவான்.

அவனிடம் அவருக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் கம்பெனிக்கு தான் வரவில்லையே தவிர, தங்கள் தொழில் தொடர்பான அனைத்து படிப்புகளையும் வரிசையாக டிகிரிகள் முதல் டிப்ளமாக்கள் வரை அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தான்.

சரி தொழிலில் தான் இப்படி இருக்கின்றான் குடும்ப வாழ்க்கையையாவது அமைத்துக் கொடுத்து தங்கள் வீட்டை மீண்டும் பிருந்தாவனம் ஆக்கலாம் என்ற அவர் வாழ்வின் லட்சியத்திலேயும் மண்ணை அள்ளிப் போட்டான் அவருடைய சீமந்தப் புத்திரன்.

"ப்ச்... என்னப்பா நீங்கள்? பெண்களைப் பற்றி அவ்வளவு தூரம் எனக்கு எடுத்து சொல்லி விட்டு இப்பொழுது நீங்களே என் வாழ்வை பாழாக்க பார்க்கறீர்கள்... எவளையும் நான் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் அன்ட் எவளும் என் அருகே வரக் கூடாது சொல்லி விட்டேன். ஆமாம்... என்னவாயிற்று உங்களுக்கு? என்னை எல்லாவிதத்திலேயும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டு, இப்பொழுது நீங்களே ஏமாந்துக் கொண்டிருக்கிறீர்கள்... யாரையும் நம்பாதீர்கள், அவர்கள் எல்லாம் உங்களை நன்றாக ஏமாற்றப் பார்க்கிறார்கள்!" என்று அவருக்கு திருப்பி பாடம் படித்தான் கிருஷ்.

சதானந்தம் செய்வதறியாது தடுமாறிப் போய் விட்டார். அவனிடம் எப்படி எப்படியோ விதவிதமாக தன் நிலையை எடுத்துக் கூறி, அவனிடம் ஏன் அப்படி சொல்லி வளர்த்தார் அதன் சாதக, பாதக பலன்கள் என்ன என்று அனைத்தையும் கூறி பார்த்து விட்டார். மேலும் குடும்ப கட்டமைப்புக்களை பற்றியும் முடிந்த அளவுக்கு விளக்கி கூறினார். ஆனால் அவை அனைத்திற்கும் தகுந்த பதிலை கொடுத்து ஒட்டு மொத்தமாக அவரின் எண்ணங்களை நிராகரித்தான் மைந்தன்.

அவனுடைய எதிர்கால வாழ்வை எண்ணி பயந்து அவர் விழி பிதுங்கி நின்ற வேளையில் தான், அந்த பொன்னான வாய்ப்பு அவருக்கு இறைவன் கொடுத்த வரமாக அமைந்தது.

2 comments:

Most Popular