Menu

Search This Blog

Nitharsanam - Deepababu


நிதர்சனம்

"ஹாய்...! என்ன இவ்வளவு நேரம்?" என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா.

"ஹாய்!" என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன்.

"ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க... வேலை அதிகமா?" என்றாள் அவன் கன்னம் தடவி.

"அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்!" என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான்.

"இந்தாங்க டீ..." என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள்.

ஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை குடித்தான்.

"அப்புறம் அத்தை போன் பண்ணியிருந்தாங்க..."

"ம்..."

"அடுத்த திங்கட்கிழமை ஊர்ல கோவில் பண்டிகையின் போது, அவங்க தேர் இழுக்குறாங்களாம், நம்மளையும் ஊருக்கு வரச் சொன்னாங்க!"

"இல்லை வேண்டாம்..." என்றான் மொட்டையாக.

"ஏன் திங்கட்கிழமை தானே... வருணுக்கும், உங்களுக்கும் ஒரு நாள் லீவு போட்டால் போதுமே, நாம் ஊருக்கு போயிட்டு வந்திடலாம்!" என்றாள் அவனை சம்மதிக்க வைக்கும் நோக்கோடு.

"எனக்கு பிடிக்கவில்லை... இன்ட்ரெஸ்ட் இல்லை என்றால் விட்டு விடு இனியா. எனக்கு டயர்டா இருக்கு, டிபன் எடுத்து வை. இதைப் பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை..." என்று உள்ளே சென்றான் நவிலன்.

அவளுக்கு எரிச்சலாக வந்தது, இருந்தாலும் டயர்டாக இருக்கும் பொழுது எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாகி விட்டாள்.

மறுநாள் காலை எதுவும் பேசாமல், சீக்கிரமாக அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான் நவிலன்.

வருணை கிளப்பி பள்ளி வேனில் ஏற்றி விட்டு வந்து வீட்டை ஒதுங்க வைத்து விட்டு ரிலாக்ஸாக சேரில் அமர்ந்தாள் இனியா.

அவள் மொபைல் ராகம் பாடியது. கிரீன் பட்டனை ஸ்வைப் செய்து உற்சாகமாக காதில் வைத்தாள்.

"ஹலோ! எப்படி இருக்கீங்க...?"

"-----------------"

"ம்ம்... இங்கு அனைவரும் நலம்!" என்றாள் புன்னகைத்தபடி.

"-------------------"

"என்ன விஷயம்? எனக்கு தெரியாதே... என்னிடம் யாரும் எதுவும் சொல்லலையே..." என்றாள் நெற்றியைச் சுருக்கி குழப்பத்துடன்.

"------------------"

அவள் முகம் சிவந்து கண்கள் கலங்கியது.

"நீங்க சொல்றது உண்மையா...? கன்பார்மா அப்படிதான்னு தெரியுமா?"

"-------------------"

"ச்சீ.. ச்சீ... இப்படியா? சரி நான் அவரிடம் பேசிக்கிறேன்!" என்றாள் கோபமாக.

"-------------------"

"இல்லை... இல்லை... நீங்கள் சொன்னதாக யாரிடமும் சொல்ல மாட்டேன், அவரிடம் கூட. நீங்கள் ஒர்ரி பண்ணிக்காதீங்க... பை!" என்று போனை கீழே வைத்தாள்.

மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.

மாலை ஏழு மணி அளவில் நவிலன் வீடு வந்தான். இனியா எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் சென்று விட்டாள். வருண் டிவியில் கார்டுன் பார்த்துக் கொண்டிருந்தான்.

டிபன் சாப்பிட்டதும் வருண் தூங்கி விட, அவனைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, நவிலன் அவன் அருகிலேயே அமர்ந்து கண்களை மூடி பின்னால் சாய்ந்துக் கொண்டான்.

"நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்றாள் இனியா நவிலனுக்கு எதிரே வந்து கோபமாக.

"என்ன?" என்றான் புருவம் சுருக்கி.

"ஒன்றும் தெரியாதவர் மாதிரி நடிக்காதீங்க... உங்களுக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்திருக்கு!"

"கொஞ்சம் தெளிவாப் பேசு இனியா!"

"இன்னும் என்ன பேசனும்? எங்கப்பா அம்மா வந்தால்... இரண்டு நாளில் கிளம்பிடனும், அதற்கு மேல் தங்க கூடாது அப்படின்னு... அவங்களுக்கு போன் செய்து உங்கப்பா அம்மா சொல்லி இருக்காங்களாமே..." என்றாள் ஆவேசத்தோடு.

"அது வந்து..."

"போதும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா?" என்றாள் முகம் சிவக்க.

"ம். ஆமாம் உண்மைதான்!" என்றான் அமைதியாக.

"அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, இதைச் சொல்ல? எங்கப்பா அம்மா வந்து என்ன சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறாங்களா? வரும் போதும் போகும் போதும் காய்கறி, மளிகைன்னு வாங்கிப் போடறதில்லாம... வேண்டாம்னு சொன்னாக் கூட கேட்காம, கையில் இரண்டாயிரம், மூவாயிரம்னு பணம் கொடுத்திட்டுப் போறாங்க. அவங்க ஒண்ணும் இங்கே ஓசிச் சாப்பாடு சாப்பிட வரலை!" என்றாள் கோபமாக.

"இல்லைமா... நான்..."

"ப்ளீஸ் வேண்டாம், எதுவும் சொல்லாதீங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை அவங்க இப்படி வந்திருக்காங்களா? எங்கப்பா வருஷத்துக்கு ஒரு தடவை தானே வருவார். ஆனால்... என் ஒரே தம்பி... தம்பி..." என்று அழ ஆரம்பித்தாள்.

"இனியா... இங்கே பாருடா..." என்று அவள் தோளை ஆறுதலாய் பற்றினான்.

"இல்லை... என்னால் முடியவில்லை. இதைக் கேட்கும் பொழுது, அவங்க மனசு எப்படி சுக்கு நூறா உடைந்திருக்கும்... மகனை முழுசா பறிக் கொடுத்து விட்டு, இருக்கும் ஒரே மகளிடமும்... பேரனிடமும் மன ஆறுதல் தேடி வரவங்க கிட்ட இப்படி சொன்னால், அவங்க மனசு என்ன பாடுபடும்?" என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"வயசானவங்க... ஆறு மணி நேரம் ட்ராவல் செய்து வரவங்களை, இரண்டு நாளில் கிளம்புங்கன்னா எப்படி? நாம அங்கே அடிக்கடி போனா... அவங்க ஏன் இங்கே வராங்க? ஸ்கூல், ஆபிஸ் லீவு போட முடியாதுன்னு நாம போகாததால் தானே... அவங்க இங்கே வராங்க. எல்லாம் தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பேசிகிறார்களே, இவங்களும் வர மாட்டாங்க... அவங்க காரியம் ஏதாவது ஆக வேண்டும்னா மட்டும் தான் வருவாங்க, வரவங்களையும் வரக் கூடாதுன்னா எப்படி?"

"ஒரே பொண்ணுன்னு அவங்க பணமும், சொத்தும் மட்டும் வேண்டும், அவங்க வந்து இங்கே தங்க கூடாதா... என்ன நியாயம் இது? ஒரு சிலர் மாதிரி பொண்ணு வீட்ல போய் அதை வாங்கிப் போடு, இதை வாங்கி கொடுன்னா கேட்கிறாங்க... வந்து ஒரு வாரம், பத்து நாள்னு தங்கறது ஒரு குற்றமா?" என்றாள் கோபமாக.

நவிலன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அடுத்த நாள் காலையில், "நான் ஊருக்கு கிளம்பறேன்!" என உம்மென்ற முகத்தோடு கையில் பேகோடு எதிரே வந்து நின்றாள் இனியா.

"சரி வா!" என்று எதுவும் பேசாமல் அமைதியாக பஸ் ஸ்டாண்ட் அழைத்துச் சென்றான்.

இரண்டு நாட்கள் ஓடி விட்டது.

அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் மனது மிகவும் பாரமாக இருந்தது நவிலனுக்கு. மொபைல் ரிங் ஆனது, எடுத்து காதில் வைத்தான்.

"ஹலோ!"

"நான் பஸ் ஏறி விட்டேன். இன்னும் ஆறு மணி நேரத்தில் வந்து விடுவேன்!" என்றாள் இனியா.

"சரி பக்கம் வந்திட்டு போன் பண்ணு, நான் பஸ் ஸ்டாண்ட் வந்திடுறேன்!"

இரவு எட்டு மணிக்கு வருணோடு வந்து சேர்ந்தாள். வெளியிலேயே சாப்பிட்டு விட்டு, தூங்கி வழிந்த குழந்தையோடு வீடு வந்தார்கள்.

குழந்தையை படுக்க வைத்துவிட்டு உடைமாற்றி வந்து அமர்ந்தான்.

அவள் மெல்ல ரூமிற்குள் வந்தாள்.

எதுவும் பேசாமல் சட்டென்று அவனை கட்டிக்கொண்டு, "சாரி..." என்று அழ ஆரம்பித்தாள்.

"ஏய்... என்னம்மா?" என்றான் அவளை அணைத்தவாறு.

"அப்பா எல்லாம் சொன்னாங்க..."

"மாமா என்ன சொன்னாங்க?"

"அவங்க சொன்னதை எல்லாம் மனதில் வச்சுக்காதீங்க... நீங்கள் எப்பவும் போல இங்கே வரனும், தங்கனும்... இது உங்க வீடு, உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு சொன்னீங்களாமே..." என்றாள் கண்கள் கலங்க.

"உண்மை தானேடா கண்ணம்மா... ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் தெயர் பீலிங்க்ஸ். அப்பா, அம்மா செய்தது தப்பு தான். அவங்க மாமாவிடம் இப்படி சொல்லியிருக்கிறோம்னு, என்னிடம் போனில் சொன்னதும்... எனக்கு ஒரே அப்செட். அவங்க செய்தது எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்யறது... அவங்களிடம் சண்டையா போட முடியும்? அவங்க வேற ஊரில் தனியா இருக்காங்க... வயசானவங்க, அவங்களுக்கு தெரிந்த நாலேஜ் அவ்வளவு தான். அதற்காக குடும்பத்தை கோர்ட்டாக்கி நியாயத்துக்காக ஒருத்தருக்கொருத்தர் வாதாடிக் கொண்டிருக்க முடியாதில்லையா... குடும்ப அமைதிக்காகவும், கௌரவுத்திற்காகவும் சிலது விட்டுக் கொடுத்து தான் போயாகனும்... அதில் தப்பில்லையே..." என்றான் நவிலன் அவள் கன்னத்தை வருடியவாறு.

"அப்புறம் இதைக் கேள்விப்படும் பொழுது, உன் மனது எவ்வளவு வேதனைப்படும் என்றும் கவலையாக இருந்தது அதனால் தான் சொல்லவில்லை!" என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே.

"ம்... எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது தான்!" என்றாள் இனியா கண்கள் கலங்க அவன் தோள்களில் சாய்ந்தவாறு.

"புரிகிறதுடா அதனால் தான் எதுவும் பேசாமல் உன்னை ஊருக்கு அனுப்பி வைத்தேன். இந்த சூழ்நிலையில் உனக்கும் சரி, அத்தை மாமாவுக்கும் சரி ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தால் கொஞ்சம் ஆறுதலாக உணர்வீர்கள் என்று எண்ணினேன்!"

"ம்ம்... ஆமாம்! அது சரி... அப்போ நான் எந்த தப்பு செய்தாலும் என்னிடமும் சண்டை போட மாட்டீங்க... விட்டுக் கொடுத்துப் போவீங்க அப்படிதானே?" என்றாள் குறும்பாக அவனைப் பார்த்து கண் சிமிட்டி.

கலகலவென்று நகைத்த நவிலன், "ம்... கண்டிப்பா, ஆனால் எனக்கு இன்னும் ஒன்றும் நன்றாக தெரியும்!" என்றான் கண்ணடித்தபடி.

"என்ன?" என்றாள் இனியா ஆர்வமாக கண்கள் ஒளிர.

"என் இனியா குட்டி அந்த மாதிரி எதுவும் தப்பும் செய்ய மாட்டாள்... அவளுக்கு யார் மனதையும் புண்படுத்த தெரியாது. எந்தக் கோபமாக இருந்தாலும் என்னிடம் தான் காண்பிப்பாளே தவிர மற்றவர்கள் மனம் புண்படும்படி அவள் ஒருநாளும் பேசவே மாட்டாள்!" என்றான் அவள் கன்னங்களில் முத்தமிட்டவாறே.

"ஹ... ஹ... ஹச்... ஓவர் ஐஸ்!" என்றாள் தும்மியபடி.

"ஹேய்... ஐஸ் இல்லை. உண்மையை தான் சொல்கிறேன். இதுவே வேற பெண்ணாயிருந்தால், இந்நேரம் எங்கப்பா அம்மாவிடம் சண்டைப் போட்டிருப்பாள். பிரச்சினைப் பெரியதாகி ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கடமாக இருந்திருக்கும். அந்த விஷயத்தில் நான் லக்கி!" என்றான் அவளை இறுக அணைத்தபடி.

"உண்மை தான்... எனக்கு அன்றைக்கு வந்த கோபத்திற்கு எப்படி பேசியிருப்பேனோ... எனக்கே தெரியாது. ஆனால் நான் வளர்ந்த விதம் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டது ம்ஹூம்..." என்று பெருமூச்சு விட்டவள்,

"ஆனால்... காலத்திற்கும் அந்த வருத்தம் மட்டும் என் மனதிலிருந்து போகாது. அதற்காக என் கடமையிலிருந்து நான் தவற மாட்டேன், அவர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்வேன்!" என்றாள் அமைதியாக.

எதுவும் பேசாமல் அவள் கரங்களை வருடினான் நவிலன், சற்று நேரம் அமைதி நிலவியது.

சட்டென்று சுதாரித்த இனியா, அவன் ஃபீல் செய்வதைப் பார்த்து, 'அவர்கள் செய்த தப்பிற்கு இவன் என்ன செய்வான்?' என்று அவன் தோள்களில் சாய்ந்தவாறு, "உங்கள் மாமா என்ன சொன்னார் தெரியுமா? அவர் மாப்பிள்ளை ரொம்ப நல்லவராம்... அவங்க பேசிய அடுத்த அரை மணி நேரத்தில், அவர் போன் செய்து ஆறுதலாய் பேசினாராம்... யாருக்கும் மனஸ்தாபம் ஏற்படாமல் சுமூகமாக நடந்துக் கொள்கிறாராம்... வருணையும் நான் அதே மாதிரி நல்லப் பையனாக வளர்க்க வேண்டுமாம்..." என்று புன்னகையுடன் ராகம் பாடினாள்.

"என் மேல் உனக்கு எதுவும் வருத்தமில்லையேடா..." என்றான் நவிலன் அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை நேராகப் பார்த்து.

"இல்லை... சுத்தமாக இல்லை..." என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், அவனை இறுக கட்டிக் கொண்டு, "ஐ லவ் யூ!" என்றாள்.

**சுபம்**

No comments:

Post a Comment

Most Popular