Menu

Search This Blog

Unarvu Porattam - Deepababu



உணர்வுப் போராட்டம்

"அம்மா!" என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி.

கிளாஸ் பெயின்டிங் முடித்து பினிஷிங் டெகரேஷன் செய்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தார்.

"வாடா... ஏன் இவ்வளவு நேரம்? வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே!" என்றார் கேலியாக.

"ப்ச்... இல்லைம்மா. சுபிக்ஷா வீட்டில் ஒரு முக்கியமான டிஸ்கஷன் போய்க் கொண்டிருந்தது அதனால் தான் லேட். நாளை நாங்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம்!" என்று பரவசமாக கூறினாள்.

"என்ன போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகிறாயா? விளையாடுகிறாயா நீ... மனதில் பெரிய ஆண் பிள்ளை என்று நினைப்பா? ஒழுங்காக வீட்டில் இருக்கப் பார். போராட்டத்திற்கு போகிறாளாம் போராட்டத்திற்கு... ஏதாவது கலாட்டா ஆனால் என்ன செய்வீர்கள்? உன் அப்பா வேறு வீட்டில் இல்லை, பிரொஜக்ட் என்று ஜெர்மன் போய் ஒரு வாரம் ஆகிறது. வீட்டில் ஆள் இல்லாத சமயம் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்காதே..." என்றார் வேகமாக.

"அம்மா! புரியாமல் பேசாதீர்கள்... பசங்க எல்லோரும் அறவழிப் போராட்டம் தான் நடத்துகிறார்கள். நீங்கள் பயப்படற மாதிரி எந்த கலாட்டாவும் ஆகாது. இரண்டு நாளாக பார்த்து விட்டு தான், நாங்களும் அதில் கலந்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்!" என்றாள் விளக்கமாக.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது ஹரிணி. வேண்டாமென்றால் வேண்டாம் அவ்வளவு தான்!" என்றார் அவர் கோபமாக.

தன் அம்மாவின் மேல் கடுப்பானவள், வேகமாக அவளுடைய ரூமிற்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

"கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டும்... போராட்டம் என்றால் இவளுக்கு விளையாட்டாகத் தோன்றுகிறது போலிருக்கிறது!' என்று புலம்பியபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.

அரை மணி நேரம் சென்றிருக்கும், ஹரிணியின் அப்பாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

பரஸ்பர நல விசாரிப்பிற்கு பின், தமிழ்நாட்டில் நடக்கின்ற ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி ராஜஸ்ரீயிடம் விசாரித்தார் அவர்.

"ஆமாம் இவளும் சொல்லிக் கொண்டிருந்தாள் போராட்டத்தில் கலந்துக் கொள்கிறேன் என்று நான் வேண்டாமென்று மறுத்து விட்டேன். நாம் என்ன காளை மாடா வளர்க்கின்றோம்... நமக்கு என்ன அவசியம் வந்தது... இதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று?" என்றார் அலட்சியமாக.

"ஏய்... புரியாமல் பேசாதே ராஜீ... தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாம் காளை மாடா வைத்திருக்கிறார்கள்? இது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். அது மட்டுமல்ல நம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ தான் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் இளைஞர்கள். நீ முதலில் டிவியை ஆன் பண்ணி எல்லா நியூஸ் சேனல்களையும் பார்... என்னவென்ற விவரம் உனக்குப் புரியும். அவளையும் நாளை மறுக்காமல் அனுப்பி வை!" என்று தொடர்பை துண்டித்தார்.

'என்ன நடக்கிறது இங்கே? இரண்டு நாள் வேலை மிகுதியில் டிவி பார்க்காமல் இருந்தால்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள்!' என்று குழம்பியபடி டிவியை ஆன் செய்தார்.

அனைத்து நியூஸ் சேனல்களிலும் மாற்றி மாற்றி ஜல்லிக்கட்டின் அவசியம் குறித்தும், பீட்டாவை எதிர்ப்பதை குறித்தும் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களின் உணர்ச்சிமயமான போராட்டத்தை நேரலையில் காணும்பொழுது மெய்சிலிர்த்தது அவருக்கு.

அமைதியாக யோசித்தவர் ஹரிணியிடம் பேசச் சென்றார். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தவள் அவரிடம் எதுவும் பேசவில்லை.

"ஹரிணி! எனக்கு இப்பொழுது தான் இதைப் பற்றிய விவரம் புரிந்தது. எத்தனை கல்லூரிப் பெண்கள் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது..." என்றார் வியப்புடன்.

"ஆம் அம்மா... அதுமட்டுமில்லை இங்கே பாருங்கள்!" என்று தன் போனில் வந்து குவிந்துள்ள வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஹைக் மற்றும் டிவிட்டர் தகவல்களை எல்லாம் அவருக்கு காண்பித்து விளக்கி கூறினாள்.

அப்படியே பிரமித்து போய் அமர்ந்து விட்டார் அவர்.

"ஏய் பிள்ளைங்களா... நீங்கள் எல்லோரும் இவ்வளவு வேலை செய்கிறீர்களா? சும்மா போனே கதியென்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றல்லவா உங்கள் தலைமுறையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை இந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து விட்டீர்களே... உண்மையிலேயே உங்கள் முயற்சி ஊக்கமளிக்கப்பட வேண்டிய ஒன்று தான். நாளை நீயும் உன் தோழிகள் மட்டுமல்ல, நானும் என் தோழிகளும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்கிறோம். உங்களையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது!" என்றார் கண்கள் கலங்க.

"வாவ்... தாங்க் யூ அம்மா !" என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள் ஹரிணி.

மறுநாள் கொட்டும் மழையில், ஹரிணியின் சத்தத்தை விட ராஜஸ்ரீயின் சத்தம் தான் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தது.

"வேண்டும்... வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்!"

"வெளியேற்று... வெளியேற்று... பீட்டாவை வெளியேற்று!"

"பனைமரத்துல வௌவ்வாலா... தமிழ்நாட்டுக்கே சவாலா..."

"இந்த கூட்டம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா?"

"எந்த அந்நிய சக்தியிடமும் எங்கள் நாட்டை அடி பணிய விட மாட்டோம்!" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

அன்று சுதந்திரத்திற்கு முன் நம் முன்னோர்கள் ஆங்கிலேயனுக்கு எதிராக அவர்களை வெளியேற்ற போராட்டம் நடத்தினர்...

இன்றோ சுதந்திரத்திற்கு பின், நம் இளைஞர்கள் அந்நிய சக்தியை நாட்டிற்குள்ளே அனுமதிக்காதீர்கள் என்று நம் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துக்கிறார்கள்!!!

இப்பொழுதிருக்கும் நம் நாட்டு தலைவர்கள், நம் நாட்டின் எதிர்காலத்தையும், நம் எதிர்காலத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது கண் கூடாக நாம் அன்றாடம் பார்க்கின்ற விஷயமாகி விட்டது.

ஆனால் அதை எதிர்த்துப் போராட எவரும் முன் வராத நேரத்தில், நம் மாணவர் சமுதாயம் அதை துணிச்சலுடன் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக அறவழிப் போராட்டத்தை நடத்திக் காண்பித்திருக்கிறார்கள்.

போராட்டம் நல்லமுறையில் உலகமே வியந்துப் பாராட்டும்படி அறவழியில் நேர்மையாக சென்றுக் கொண்டிருந்த வேளையில், சில குறிப்பிட்ட நபர்கள் எதிர்கட்சியினரை சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தை மக்களிடையே விதைத்து விட்டனர் சில துஷ்ட சக்திகள்.

*ஆதி நல்லவரா... கெட்டவரா?

*சிவசேனாபதி காசு வாங்கினாரா... இல்லை மிரட்டப்பட்டரா?

*அந்த குறிப்பிட்ட நபர்கள் எதிர்கட்சியினரா... இல்லையா?

*ஆர்.ஜே. பாலாஜி பின் வாங்கினாரா... இல்லையா?

இவை அனைத்தும் கடவுளுக்கே வெளிச்சம்!!!

ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட காரணமானவர்கள் இவர்கள், நமக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்.

ஆதலால் ஏனைய விமர்சனங்களை விட்டு விட்டு நாம் எதற்காக ஒன்றிணைந்து போராடி வென்றோம் என்பதை மட்டும் நினைவில் கொண்டு, இனி வரும் எதிர்காலங்களிலும் நமக்குள் பிளவு ஏற்படாமல் இதே ஒற்றுமையுடனும், உத்வேகத்துடனும் அநீதியை எதிர்த்துப் போராடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது நான் எழுதிய சிறுகதை.

No comments:

Post a Comment

Most Popular