Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 4



*4*



பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய்,


“அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு தான் என்றாலும் மட்டுமரியாதை தெரிந்த பாரம்பரிய குடும்பம்.” என்று அவர் கைவிரிக்க, குந்தவைக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த டீவி ரிமோட்டை சுவற்றில் விசிறியடித்தாள்.


“குந்தவை.” தந்தையின் குரல் உயர, சுமதியின் குரலும் உயர்ந்தது.


“ஆரம்பத்திலேயே குந்தவை தனக்கு என்ன தேவை, என்ன எதிர்பார்ப்பு இருக்குனு தெளிவா சொல்லிட்டா தானே? அதற்கு ஏற்ற மாதிரி பார்க்காம உங்க விருப்பத்திற்கு பார்த்திருக்கீங்க? அதுவும் உண்மையை மறைச்சு பரிசமும் போட்டாச்சு.”


மனைவி குரல் உயர, நந்தனும் பொறுமையை உடைத்து, “அவளுக்கு என்ன தெரியும் இதை பற்றியெல்லாம்? வானதிக்கும் சாமர்த்தியம் பத்தல, அவ வீட்டுக்காரனுக்கும் சாமர்த்தியம் பத்தல. நிலைமையை சமாளிக்க தைரியம் இல்லாமல் அப்படி பண்ணிட்டான். அதற்காக ஒட்டுமொத்த வேளாண் சமுதாயமே வளர்ச்சி இல்லாம, வாழ வக்கில்லாம உயிரை மாய்ச்சிக்குறாங்கனு முத்திரை குத்திவிட முடியுமா? வழிவழியா நாம கூட வேளாண்மை செய்யும் குடும்பம் தான். ஏதோ என் அப்பா வெகுளியா இருந்ததால உழுநிலம் எல்லாத்தையும் பேக்டரி கட்டுறேன்னு சொல்லி ஏமாற்றி எழுதி வாங்கிட்டாங்க. நாங்களும் அப்படியே வேற வேலைனு வந்துட்டோம்.”


“உங்க கதையெல்லாம் எனக்கு வேண்டாம். விவசாயம் செய்றவங்க எல்லாம் வாழ்ந்திட்டு தான் இருக்காங்க, நான் இல்லைனு சொல்லல. எனக்கு வேண்டாம்னு தான் சொல்றேன். இன்னொரு வானதியா நிலையில்லாத வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை. மற்ற வேலையில் இருந்து சம்பளம் குறைவென்றாலும் மாசா மாசம் வருமானம் வரும் என்ற நம்பிக்கையிலாவது நிம்மதியா வாழ்வேன். இந்த இடம் வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லிடுங்க.” என்றாள் வெட்டு ஒன்றாய் துண்டு ரெண்டாய்...


“இனி வேண்டாம் என்று மறுக்கவெல்லாம் முடியாது. பரிசம் போட்டாச்சு.”


“பரிசம் தானே போட்டிருக்கு. இன்னும் கல்யாணம் ஆகலையே. இப்போவே சொல்றது தான் நல்லது. நீங்க சொல்றீங்களா இல்லை நான் சொல்லவா?” என்று தான் பார்த்தாள் குந்தவை. குந்தவை மறுப்பாள் என்று தெரிந்த நந்தன் ஏற்கனவே யோசித்து வைத்திருந்தார், “நீ கேட்கிற மாதிரி பெரிய வேலையில் பெருநகரில் இருக்கும் மாப்பிள்ளை பார்த்தால் வரதட்சணை அதிகமா கேட்பாங்க, அதைச் செய்ய சாதாரண எழுத்தர் வேலையில் இருக்கும் இந்த தகப்பனுக்கு வக்கில்லை. இவங்க தான் உங்களால முடிஞ்சதை செய்யுங்க போதும்னு சொல்லியிருக்காங்க. நான் எதிர்பார்த்த மாதிரியே வேளாண்மை பார்க்கும் குடும்பம். இப்படி எல்லாம் தோதாய் அமையறது எவ்வளவு பெரிய விஷயம். சின்ன வேலையில் இருப்பவரைவிட ஊர் வாழ உணவு உற்பத்தி செய்யும் உழவனுக்கு உன்னை சந்தோசமா கட்டிக்கொடுக்கலாம். புன்னியமாவது சேரும்.” என்று அவர் தரப்பு காரணத்தை மிகைப்படுத்தி பேச, பொங்கிவிட்டாள் குந்தவை.


“வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம். அந்த சட்டத்தை பயன்படுத்தி வரதட்சணை கொடுக்காமல் நமக்கு ஏத்த மாதிரி வரன் பார்த்துக்கலாம். இதெல்லாம் ஒரு காரணம்னு என்னை சமாதானப்படுத்த பார்க்காதீங்க. ரெண்டு புள்ளைங்களோட இந்த வயதிலேயே அநாதரவான நிற்கும் வானதியின் வலியை, எதிர்காலம் குறித்த பீதியை அருகில் இருந்து பார்த்திருக்கேன். ஒவ்வொரு நிமிடமும் எப்படி இனி வாழ்க்கையை சமாளிக்க போறோம், பிள்ளைங்களுக்கு அப்பா என்கிற உறவின் ஏக்கத்தை தீர்த்து எப்படி ஒற்றை ஆளாய் இரு பிள்ளைகளையும் வளர்க்கப் போகிறோம்னு தினம் தினம் பயந்துட்டு இருக்கா அவ. படிச்சி முடிச்சதும் கல்யாணம் செய்யாம அவளை வேலைக்கு அனுப்பியிருந்தா கூட நிமிர்ந்திடலாம் என்கிற தைரியம் அவளுக்கு இருந்திருக்கும். அதையும் செய்யாம விட்டுட்டு இப்போ என்னையும் அதே குழியில் தள்ளப் பார்க்குறீங்க. கிராமத்தில் போய் நான் என்ன வேலை தேடிக்க முடியும்? வாழ்க்கை அமைத்து கொடுக்குறோம் என்கிற பெயரில் எங்களோட சிறகை வெட்டி மறைமுகமா தன்னம்பிக்கையை அழிச்சி கணவன் என்றவனையே சார்ந்திருக்க வைக்குறீங்க.” என்று கத்திவிட்டு அறைக்கு வந்த குந்தவை உடனேயே தச்சனுக்கு அழைத்து தன்னிலையை விளக்க, அவனுடனான பேச்சுக்கள் வளர்ந்து சண்டையில் முடிந்து அதுவேறு ஆத்திரத்தை கிளப்பியது.


‘என்ன தைரியம் இருந்தா என்னையே டி போட்டு கூப்பிடுவான்? என்கிட்டையே சவால் விடுவான். அவனா நானான்னு பார்த்துடுறேன்.’ என்று கருவிக்கொண்டிருந்தவள் மீது சட்டமாய் ஏறி அமர்ந்தான் அறிவழகன்.


அவனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவள், “டேய் குட்டிப்பையா என்னடா பொசுக்குன்னு அவனைப் போய் அப்பான்னு கூப்பிட்டுட்டு இருக்க. அவனும் அவன் பேரும், மூஞ்சியும், பேச்சும்… சகிக்கல. அவன் நமக்கு வேண்டாம்டா. இனி அவனை பார்த்தால் தூக்குனு போய் அவன்கிட்ட நின்ன சித்தி உன்கூட டூ விட்டுருவேன்.” என்று அவனை மிரட்ட, ஒருவயது அறிவழகனுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது? சித்தி ஏதோ சொல்கிறாள் என்று மட்டும் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.


வெளிக்கூடத்தில் குந்தவையின் பேச்சில் தளர்ந்து அமர்ந்துவிட்டார் நந்தன். ‘நான் தன்னம்பிக்கையை அழிக்கிறேனா? என் பொண்ணுங்க நல்லா இருக்கணும்னு தானே நினைச்சேன். அவங்களுக்காக தானே எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்றேன்.’ என்று எண்ணங்கள் அலைபாய, இதயம் படபடவென அடித்துக்கொண்டு வலிப்பது போன்றிருக்க அவர் உடலும் வியர்க்கத் துவங்கியது. அதை கவனித்த சுமதி பதறி அவரை நெருங்கி அவர் நெஞ்சை நீவிவிட,


“ஒன்னுமில்லை சுமதி, ப்ரெஷர் கூடியிருக்கும். காலையில் மாத்திரை போட மறந்துட்டேன், நீ போய் எடுத்துட்டு வா.” என்று நந்தன் மனைவியை அனுப்ப நிமிடத்தில் மாத்திரையுடன் திரும்பி வந்தார் சுமதி. மருந்து உள்ளே இறங்கவும் வலி மட்டுப்பட்டு முகம் சற்று தெளிந்தது.


“கிளம்புங்க டாக்டரை ஒருஎட்டு பார்த்துட்டு வந்துடுவோம். இப்படியெல்லாம் இதுவரை உங்களுக்கு ஆனதே இல்லை.” என்று சுமதி பதற, அவர் கைபிடித்து தடுத்த நந்தன், “அதெல்லாம் ஒன்றுமில்லை.” என்று வாய்மொழியாய் சொல்ல, ஒன்றும் இருக்கக்கூடாது என்று மனமும் மீண்டுமொருமுறை தைரியம் சொல்லிக்கொண்டது.


“வானதி எங்கே? ஆளையே காணோம். குந்தவை பேசியதை கேட்டா மனசு வருந்துவா.” என்று பேச்சை மாற்ற,


“குந்தவையை பொண்ணு பார்க்க வராங்கனு பக்கத்து வீட்டில் வரிசை தட்டு, விரிப்பெல்லாம் வாங்குனோம்ல அதை கொடுத்துட்டு வரச்சொல்லி அனுப்பியிருக்கேன்.” என்று சுமதி சொல்லிக் கொண்டிருக்க, வானதி சரியாக அந்த நேரம் உள்ளே வந்தாள்.


“பெரியம்மாவை இன்னும் அதிக நேரம் இருக்கச் சொல்லியிருக்கலாம். நீ ஏன் போகவிட்ட? அவங்க இருந்திருந்தா அவங்களே வெளியில் முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிருப்பாங்க.”


“எதுக்கு நீ அறைக்குள்ளேயே அடைந்து கிடைப்பதற்கா?” என்று சுமதி அவளை குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, கப்சிப்பென்று அறைக்குள் புகுந்துகொண்டாள் வானதி.


***


“காலையிலேயே எங்க கிளம்பிட்ட தச்சா?” என்றும் இல்லாத திருநாளாய் காலை ஏழு மணிக்கே குளித்து தயாராகி உண்ண அமர்ந்திருக்கும் தச்சனை கண்டு ஆச்சர்யம் தான் நீலாவுக்கு.


“மயிலாடுதுறைக்கு தான்.” என்றான் மர்மப்புன்னகையை பதிலுடன் சேர்த்து வீசி.


மகனின் துள்ளலுக்கு மாறாய் எச்சரிக்கையாய் வந்தது நீலாவின் குரல், “அங்கேயா? அங்கே எதுக்கு?”


“இதென்ன கேள்வி நீலாவதி? நாம தான் இப்போ அந்த ஊரோட சொந்தமாகிட்டோமே. அப்பப்போ போய் பார்த்துட்டு வந்தால் தான் உறவு வளரும்.” என்றான் சீட்டியடித்தபடி.


இப்போது நீலாவின் பார்வை கூர்மையாகி அவனின் வெளித்தோற்றத்தை ஆராய்ந்தது. நேற்று கிளம்பியது போலவே இன்றும் சிரத்தை எடுத்து கிளம்பியிருக்கிறான் என்ற நிதர்சனம் உரைக்கவும் உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது.


“அங்கெல்லாம் சும்மா சும்மா போகக்கூடாது தச்சா.” என்று எச்சரிக்க,


தட்டில் பழையசோறு பரிமாறப்பட, அதை உள்ளே தள்ளிக்கொண்டே, “ஏனாம்?”


“கல்யாணம் ஆகும்வரை நீ அந்த பொண்ணை பார்க்கக்கூடாது.”


“நீ என்னத்த புதுசா சொல்லுற? இந்த காலத்திலும் இதையெல்லாம் பார்த்துகிட்டு. அவ கிடக்குறா நீ போய் பேத்தியை பார்த்துட்டு வா.” எப்பொழுதும் போல நீலா மறுக்க அதையே ஆதரித்தார் மங்களம்.


“கிழவினா கிழவி தான். என் வண்டிலேயே தான் போறேன், சீக்கிரம் வந்துருவேன். குணாவையும் கூட்டிட்டு தான் போகப் போறேன். அவனும் குந்தவையை பார்க்கணும்னு விருப்பப்படுறான்.” என்று செய்தி சொல்லியவன் உண்டு முடித்துவிட்டு பூசையறைக்கு அருகில் சிறியதாய் இருக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பீரோவைத் திறந்து பணத்தை எடுக்க, அவனை தொடர்ந்து வந்த நீலா அதைப் பிடுங்கி,


“இப்போ எதுக்கு பணம் எடுக்குற?””


அதை திரும்பப் பிடுங்கியவன், “இதென்ன புதுசா கேக்குற? வெளியே போகும் போது எப்போதும் எடுக்குறது தானே?”


“பார்த்து செலவு பண்ணு. கல்யாண செலவெல்லாம் இருக்கு.” என்று அவன் கேள்வியை நிராகரித்துவிட்டு வெளியேறிவிட்டார் நீலா. தச்சன் தான் என்னதிது புதிதாய் என்று பார்த்து நின்றான்.


***


“காலையிலேயே கிளம்ப வச்சி எங்க அழைச்சிட்டு வந்திருக்க என்னை?” பைக்கை விட்டிறங்கி எதிரே இருந்த வீட்டினை ஆராய்ச்சியாய் பார்த்தான் குணா.


வண்டியின் சைட் ஸ்டேண்டை போட்டவன் கூலர்ஸையும் கழற்றி சட்டை பையினுள் வைத்துவிட்டு, “இதுதான் குந்தவை வீடு. வா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.


“மாமா…” என்ற விளிப்புடன் உரிமையாய் உள்ளே நுழைந்தவனை அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த நந்தன் தான் எதிர்கொண்டு வரவேற்றார்.


“என்ன தம்பி வீடு வரைக்கும்?”


பேச்சில் நேற்றிருந்த நெருக்கம் குறைந்துவிட்டது போல தோன்றியதை ஒதுக்கி தள்ளிவிட்டு, “இந்த பக்கம் வேலையா வந்தேன். அப்படியே உங்களையும் குந்தவையையும் பார்த்துட்டு போலாம்னு தான் மாமா.” என்க, அவசரமாக இரண்டு நாற்காலியை எடுத்துப் போட்டார் நந்தன். இவர்களின் அரவத்தில் சமையலறையில் இருந்த சுமதியும் வானதியும் வந்து இவர்களை வரவேற்றுவிட்டு மீண்டும் உள்ளே புகுந்து கொண்டனர்.


கூடத்தில் நந்தன் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்த அறிவழகன் விளையாட்டு சாமானை அப்படியே போட்டுவிட்டு தச்சனின் மீது ஏறிக்கொண்டான். நேற்று போலத் தயங்காமல் அவனை தூக்கிக்கொண்டவன் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லெட்டை எடுத்துக்கொடுக்க, சங்கடமாகிப் போனது நந்தனுக்கு. இந்த திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாகி இருக்க தச்சனிடம் பிள்ளைகள் ஒட்டிக்கொள்வது எங்குபோய் முடியப்போகிறதோ என்று தான் இருந்தது.


அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை இவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியிடம் நீட்ட, அவளும் வேகமாய் தவழ்ந்து வந்து அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனருகிலேயே நின்று கொண்டாள்.


“தம்பி யாரு?” என்று குணாவை காட்டி கேட்க,


“குந்தவை இல்லையா மாமா?” அவரது கேள்வியை நாசூக்காய் தவிர்த்து எதிர் வினா எழுப்பினான் தச்சன்.


“இங்கே தான் பக்கத்தில் கடை வரைக்கும் போயிருக்கா வந்துருவா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தச்சனின் சட்டைப்பையில் இருந்த கூலர்ஸை எடுக்க முயன்றான் அறிவழகன்.


“அதெல்லாம் எடுக்கக்கூடாது… தாத்தாட்ட வாங்க..” என்று அறிவழகனை அதட்டி அவனை தூக்கிப்போக, குழந்தையை தன்னுடன் அழுத்திப் பிடித்துக்கொண்ட தச்சன், “பரவாயில்லை. வச்சிக்கட்டும்.” என்று மறுத்து கூலர்ஸை அறிவழகனுக்கு மாட்டிவிட, அவனது உடன்பிறந்தவள் சாக்லெட்டை தூக்கி வீசிவிட்டு அதை பிடுங்கும் முயற்சியில் இறங்கினாள். இவளின் குறும்பில் முறுவல் பூத்தது தச்சனிடம். ஏனோ அறிவழகி அவனுக்கு குந்தவையை நினைவூட்டினாள்.


அதே நேரம் ‘அப்பா’ என்று அழைத்துக்கொண்டு வீட்டினுள் வேகமாய் நுழைய தச்சனின் இருப்பை கண்டு பிரேக்கிட்டு நின்றாள் குந்தவை.


“இவன் என் பிரெண்ட் குணா. இப்போ தான் போலீசில் செலக்ட் ஆகி இந்த பக்கம் தான் போஸ்டிங் போட்டிருக்காங்க. குந்தவை ஏதோ போலீசை பார்க்கணும்னு சொன்னா, எதற்கு நம்ம வீட்டு பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போயிகிட்டுனு இவனை கூட்டிட்டு வந்தேன்.” என்று நேரம் பார்த்து அறிமுகம் கொடுத்து, மர்மமாய் குந்தவையை நோக்கி பார்வையை விரட்ட, பதறிவிட்டார் நந்தன். குணா ஒருபுறம் ஆவென்று பார்த்து அமர்ந்திருந்தான்.


“என்னது போலீசா? குந்தவை எதுக்கு பார்க்கணும்னு சொன்னா? எதுவும் பிரச்சனை பண்ணிட்டாளா? நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே.” என்ற நந்தனின் பார்வை குந்தவை புறம் சென்றது. அவளோ பற்களை நறநறவென கடித்துக்கொண்டு கண்களில் அனலை தேக்கி தச்சனை முறைத்துக் கொண்டிருந்தாள்.


“குந்தவை என்ன பண்ணி வச்ச?” நந்தனின் அதட்டல் அவள் கோபத்தை அதிகரிக்கத்தான் செய்தது. பின்னே அவள் மீது ஏதோ தவறு இருப்பது போல தீர்ப்பை எழுதிவிட்டு விசாரித்தால் சும்மாவா இருப்பாள்…


“ஆமா நான் தான் பண்ணேன். இதோ உட்கார்ந்திருக்கானே இந்த பெருந்தச்சன்… இவன் மேல ஒரு புகார் கொடுக்கணும். இங்கேயே எழுதி தந்தால் வாங்கிப்பீங்களா இல்லை போலீஸ் ஸ்டேஷன் வரணுமா?” என்று நேரே குணாவை பார்த்து பேச அவன் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நண்பன் எதற்கு போலியாய் தன்னை காவலன் என்று அறிமுகப்படுத்தினான் என்று இன்னமும் புரியவில்லை இதில் நண்பனின் மனைவியாகப் போகிறவள் நண்பனின் மீதே புகார் கொடுக்க வேண்டும் என்று சொல்லவும் சட்டென்று ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு. ‘ரெண்டு பேரும் என்னை வச்சு ஏதோ காமெடி பண்றாங்கன்னு மட்டும் புரியுது.’ என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தான்.


“குந்தவை என்ன காரியம் செய்கிற நீ? வீட்டு மாப்பிள்ளையை இப்படித் தான் அவமானப்படுத்துவீயா? தைரியமான பொண்ணா நேர்வழியில் சிந்திச்சு நியாயமா செயல்படுவேன்னு நினைச்சுகிட்டு இருந்தால் இதென்ன மட்டுமரியாதை இல்லாம சுலபமா ஒருவரை அவமானப்படுத்துற? யாரும் எதிர்த்து கேட்பதில்லைனு உன் விருப்பத்துக்கு எல்லாம் செஞ்சிட்டு இருக்க? மன்னிப்பு கேளு முதலில்…” மகள் மீது கட்டுக்கடங்கா ஆத்திரம் வந்தது நந்தனுக்கு. வீட்டினில் தங்களுடன் மல்லுக்கு நிற்பது வேறு, அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இப்படி நடுவீட்டில் அமர்ந்திருக்கும் போது அவரை அவர் நண்பர் முன்னிலையிலேயே அவமரியாதை செய்வது வேறல்லவா… இந்த வரன் அமையவில்லை என்றாலும் நாளை பின்னே இந்த தகவல் வெளியே கசிந்ததால் நல்ல இடம் அமைவதும் தட்டிக்கழிக்கப் படாதா? இந்த பெண்ணிற்கு மட்டும் ஏனிந்த வீம்பு?


“மன்னிப்பெல்லாம் எதற்கு மாமா? நம்மை குந்தவை தானே ஏதோ தெரியாம செய்றா… அதற்காக அவளை திட்டாதீங்க.” என்று தச்சன் வேண்டுமென்றே உட்புக, குந்தவையின் தீப்பார்வை இப்போது அவனின் மீது திரும்பியது.


“என்ன நம்ம குந்தவையா? நீ பேசாதடா… என்ன நடிப்பு நடிக்குற நீ? நேற்று நீ பேசியதென்ன இப்போ நீ செய்றது என்ன? போலீசுனு இவரை கூட்டிட்டு வந்திருக்கியே இவர் போலீஸ் இல்லைனு பார்த்தாலே தெரியுது. போலீஸ் ஹேர்கட் இல்லை, போலீசுக்கு இருக்கும் நிமிர்வு இல்லை பார்த்தாலே உன் இனம்னு நல்லாவே தெரியுது.” என்று பொரிய, சுமதி விரைந்து வந்து குந்தவையை கண்டித்துக் கொண்டிருந்தார்.


“இந்த பொண்ணு இவ்வளவு புத்திசாலியா இருந்தால் உன்பாடு திண்டாட்டம் தான்... என்ன போடு போடுது. மரியாதை கிலோ என்ன விலைன்னு கேட்கும் போலிருக்கு... இதுதான் சாக்குன்னு இதோட இந்த பொண்ணை, இந்த உறவை தலைமூழ்கிடு தச்சா.” என்று இடையில் குணா வேறு தச்சன் காதினுள் கிசுகிசுக்க, அவனை முறைத்தான் தச்சன்.


“என்னைத்தானே சொல்றா… உனக்கென்ன? உன்னை மரியாதையா தான் கூப்பிடுறா.” என்று குந்தவைக்கு வக்காலத்து வாங்கினான் தச்சன்.


“உனக்கு முத்திடுச்சு… இனி நான் சொல்லி என்ன ஆகப்போகுது, நீ நடத்து.” என்று அமைதியாய் அறிவழகிக்கு விளையாட்டு காண்பிக்கத் துவங்கினான் குணா.


நந்தன் தர்மசங்கத்துடன் தச்சனை நேரப்பார்வையாய் சந்திக்கத் திணறி, “அவளுக்காக நான் மன்னிப்பு கேக்குறேன் தம்பி. விருப்பம் இல்லைனு சொன்னாலே ஒழிய இப்படி பேசுவானு நானே எதிர்பார்க்கல.”


“நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்குறீங்க? அவன்கிட்ட விருப்பம் இல்லைனு சொல்லியும் இப்படி தொந்தரவு செய்றான்னா எவ்வளவு திண்ணக்கம் இருக்கும்?” என்று குந்தவை மீண்டும் எகிறிக்கொண்டு வர, அவளை கேலியாய் பார்த்தான் தச்சன்.


“வாயை மூடு குந்தவை. எனக்குத் தெரியாம எதற்கு விருப்பமில்லைனு மாப்பிள்ளையிடமே நேரா சொல்லணும்? அதோட இங்க வந்ததில் இருந்து எந்தஒரு தவறான வார்த்தையும் தொந்தரவும் அவர் தரப்பிலிருந்து வரல…” என்றதிலேயே தவறு உன்மீது என்ற செய்தி இருந்தது. மேலும் தொடர்ந்தவர், “இதுவரைக்கும் உன்னை நினைச்சி பெருமையும் கர்வமும் தான் அதிகம் இருந்தது ஆனால் இன்னைக்கு என்னை தலைகுனிய வச்சிட்ட. இனி நான் உனக்கு மாப்பிள்ளையே பார்க்கல. உன் விருப்பம் போல வாழு.” என்ற நந்தன் தொய்ந்து அமர்ந்துவிட்டார். தச்சனுக்கே அவர் நிலை மனதை நெருடிவிட, குந்தவையின் கண்களில் ஓசையின்றி கண்ணீர் வழிந்தது.


‘ஏண்டி இப்படி ஆகிட்ட?’ என்ற அன்னையின் குற்றம்சாட்டும் பார்வையும் அவளை கட்டிபோட்டுவிட, நந்தனின் ஓய்ந்த உருவம் ஈட்டியாய் அவளிதயத்தை பதம் பார்த்தது.


“என்னால தானே உனக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை வந்திருக்கு. உன் நிம்மதியையும் சேர்த்து அழிச்சிட்டேன்.” என்று வானதி ஒருபுறம் குந்தவையிடம் புலம்ப தச்சன் இதனை எதிர்பார்த்து வரவில்லை.


பிரச்சனை தனக்கும் குந்தவைக்கும் தான். லேசாக அவளை சீண்டி காரியம் சாதித்திட வேண்டும் என்று தான் கிளம்பி வந்திருந்தான். ஆனால் இப்படி அவள் நேரடியாக தாக்குவாள் என்ற எண்ணம் தோன்றியிருக்கவில்லை. தோன்றியிருந்தால் இதனை வேறு வழியில் எதிர்கொண்டிருப்பானோ...


இனி எண்ணங்கள் தோன்றி, யோசித்து என்ன பயன்? குந்தவையை அவள் குடும்பத்தை வைத்தே அவர்களின் உணர்ச்சிகளை அறியாமல் தூண்டி, அவளது கொள்கைக்கு அச்சுறுத்தல் கொடுத்து அவளை இறங்கிவர வைத்தாகிவிட்டது.


ஒருவரை நேருக்குநேர் அடக்கி, மிரட்டி காரியம் சாதிப்பது ஒருவகை என்றால், ஒருவரின் உணர்ச்சிகளைத் தாக்கி ஒரு செயலை செய்யச் சொல்லி நிர்பந்திப்பதும் அடக்குமுறை தான். அதுதான் குந்தவைக்கு நடந்தது.


மனதால் நொந்து எதையும் யோசிக்கும் நிலையை இழந்தவள் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு, “இந்த ஒரு விஷயம் இத்தனை வருடம் நீங்க என்மீது வச்சிருந்த நம்பிக்கையை, கர்வத்தை அழிச்சிருக்குனா நான் தான் ஏதோ தப்பு பண்றேன் போலிருக்கு. உங்க விருப்படி செய்யுங்க.” என்று சம்மதம் சொல்லிவிட,


அவள் மனம் மாறும் முன்பே திருமணம் நடத்திவிட வேண்டும் என்று நினைத்த நந்தன், அவள் படிப்பு முடிந்து செய்வதாக இருந்த திருமணத்தை அதற்கு முன்னமே ஏற்பாடு செய்துவிட்டார். இறுதி பரிட்சைகள் மட்டும் இன்னும் பாக்கி இருக்க, குந்தவையின் பேச்சுக்கள் அவ்வீட்டினில் குறைந்தது. தச்சன் அதன் பிறகு அவளை தொந்தரவும் செய்யவில்லை. தந்தை கொடுக்கிறேன் என்று சொல்லியிருந்த நிலத்தை வைத்து அடுத்து என்ன செய்வது என்று அது சம்மந்தமான வேலையில் இறங்கிவிட்டான்.


இடையில் திருமணப்பட்டெடுக்க அழைத்த போதுகூட தச்சனும் சரி, குந்தவையும் சரி ஏதேதோ சாக்கு சொல்லி கழன்று கொண்டனர். ஆனால் தினம் தினம் ஒருவருக்கு மற்றொருவர் நினைப்பு பலமுறை வந்துவிடும். தான் செய்வது சரியா என்ற எண்ணமும் ஒன்றுபோல இருவருக்கும் அவ்வப்போது இருக்கத்தான் செய்தது. எண்ணங்களுக்கு உள்ளேயே சுழன்று கொண்டிருந்தால் நாள் போவதே தெரியாது என்பதற்கு ஏற்ப, சீக்கிரமே திருமண நாள் வந்துவிட்ட உணர்வு இருவருக்கும்.


சீர்காழியை ஒட்டிய வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் சொந்த பந்தங்கள் குழுமியிருக்க, கூறை புடவை கட்டி ஒப்பனை செய்தும் கடுகடுப்புடன் தான் இருந்தாள் குந்தவை.


மாறாக, அவனது முகம் அந்த நாளிற்கே உண்டான பூரிப்புடன் இருக்க, அவனருகில் அப்பொழுது தான் வந்தமர்த்தப்பட்டவளின் முகம் அதற்கு மாறாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு ஏனோதானோவென இருந்தது.


உலகம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இந்த நூற்றாண்டிலும் பெண்களின் ஆசைகளை அடக்கி, அவர்களின் விருப்பை மறுத்து பல விஷயங்கள் நடேந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியான ஒரு அடக்குமுறையில் அடங்கி, தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக அமர்ந்திருப்பவளின் குமறளுக்கு கொஞ்சம் செவி சாய்த்திருக்கலாம். ஆனால் எங்கே...


வேளாண் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தால் ஒருமுறை அடிபட்டு விழுந்திருந்தாலும் பெற்றவர் தன் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருக்க, பெற்றவளும் மகளும் அடங்கித்தான் போகினர்.


“கொஞ்சம் சிரியேன். ஏன் உர்ருன்னு இருக்க?” என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க, அவனை கண்டுகொண்டாளில்லை... பற்களை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.


“இன்னுமா உன்னோட அதே பிடிவாதத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்க?” என்று மீண்டும் அவன் கேட்க,


"பிடிவாதம்னு நீங்க நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது." என்று அவளும் விதண்டாவாதம் செய்தாள்.


"நீ பண்றதுக்கு பேர் வேற என்னவாம்?"


"நீங்க செய்றதுக்கு பேர் என்னனு உங்களுக்கு தெரியுமா முதல்ல?" பார்வை எதிரில் இருந்த கூட்டத்தின் மீதிருக்க, வார்த்தைகள் அவள் பல்லிடுக்கில் அடிபட்டு, கடிபட்டு விழுந்தது. மரியாதை கூட எங்கிருந்தோ வந்திருந்தது.


"நான் கல்யாணம் தாண்டி செய்துக்குறேன்.... வேற எதுவும் தப்பா செய்யலையே..."


"அதை எப்படி செய்றீங்க?" காட்டமாய் ஒலித்தது அவளது கேள்வியான பதில்.


"என்னை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா நானே விலகி போயிருப்பேன். ஆனால் நீ தேவையில்லாததை பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருக்க... உனக்கும் என்னை பிடிச்சிருக்கு, எனக்கும் விருப்பம் தான். அப்புறம் ஏன் நான் இதை நிறுத்தனும்?"


"கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வாயை மூடுங்க" பின்னிருந்து நீலாவின் குரல் ஒலிக்க, முன்னே வேதங்கள் ஓதப்பட பேச்சுக்கள் தடைபட்டு காரியங்கள் வேகமாய் நிகழ்ந்தேற, சற்று நேரத்திலேயே திருமதி. பெருந்தச்சன் ஆனாள் குந்தவை.





No comments:

Post a Comment

Most Popular