Menu

Search This Blog

Nanoru Sindhu 1 - Deepababu

 




*1*


அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த்.

இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி செல்லும் அவனைப் பற்றிய சிறு அறிமுகம்.

சிவில் இன்ஜினியரிங் முடித்த தகுதியோடு ஒரு தனியார் நிறுவனத்தில் திறமையான இன்ஜினியர் என பெயர் பெற்று வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் இருபத்தொன்பது வயது சராசரி இளைஞன்.

பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையாக சாரதா இல்ல ஆசிரமத் தொட்டிலில் அநாதையாக கண்டெடுக்கப்பட்டு வளர்ந்தவன்.

தன் நிலையை எண்ணியோ அல்லது தாய், தந்தைக்காகவோ ஒரு நாளும் அவன் ஏங்கியதேயில்லை. தன்னை வேண்டாமென்று விட்டு சென்றவர்களுக்காக வருந்தி இருக்கின்ற பொழுதையும், அமைதியையும் ஏன் இழக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவன்.

வாழ்வின் நிதர்சனங்களை உளமாற அப்படியே ஏற்றுக் கொள்பவன். ராமக்கிருஷ்ணர், விவேகானந்தரின் போதனைகளால் கவரப்பட்டு அதைப் பின்பற்ற முயலுபவன். கல்வி கற்கும் திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் இல்லையே என்று புலம்பி நேரத்தை வீணடிக்க விரும்பாதவன். தன் உழைப்பாலும், திறமையாலும் இலக்கை அடைய முடியும் என்ற உத்வேகம் கொண்டவன்.

சித்தார்த்! தனது லட்சணமான, சாந்தமான முகத்தாலும், குணத்தாலும் அனைவரின் மனதையும், தோழமையையும் மிகச் சுலபமாக வென்று விடுவான்.

கதவை திறந்து உள்ளே நுழையும் இந்த ஃபிளாட் அவனுடையது அல்ல. அவன் நண்பன் ஒருவன் இந்த ஃபிளாட்டை ரீசேலில் புதியதாக வாங்கி நான்கு மாதம் தான் ஆகிறது. அவன் அதிர்ஷ்டம் இதை வாங்கிய நேரம் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது.

வாங்கிய வீட்டை பூட்டி வைக்கவும் மனமில்லாமல் வாடகைக்கு விடவும் மனமில்லாமல் இரண்டுக்கும் இடையில் குழப்பத்துடன் தள்ளாடிக் கொண்டிருந்தவன் இறுதியில் தன் நண்பனான சித்தார்த்திடம் கெஞ்சி கூத்தாடி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தான் அவனை அவ்வீட்டில் குடியேற வைத்திருந்தான்.

எதற்கு கெஞ்ச வேண்டும்?

சைட் இன்ஜினியர் என்பதால் சித்து பல இடங்களுக்கும் சுற்றி அலைபவன், ஆதலால் வீடு, ஏரியா மாறுவதொன்றும் அவனுக்கு பெரிய பிரச்சினை இல்லை தான். ஆனால் எப்பொழுதும் தேவைக்கு அதிகமாக ஆடம்பரமாக வாழ்வது என்பது அவனுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம். அதனால் தான் தன் ஒருவனுக்கு எதற்கு அவ்வளவு பெரிய டபுள் பெட்ரூம் ஃபிளாட் என முதலில் தன் நண்பனின் கோரிக்கைக்கு உடன்பட மறுத்தான் அவன்.

அவனிடம் அதையும், இதையும் சொல்லி சமாளித்து சில மாதங்களுக்கு மட்டும் இருடா, அப்புறம் அங்கிருப்பவனின் கை, கால்களில் விழுந்தாவது இங்கே மாற்றல் வாங்கி கொண்டு வந்து விடுகிறேன் என்று அவனை சம்மதிக்க வைத்தான் ரமேஷ்.

பிறகு வேறு வழியில்லாமல் இவனும் அதை ஒப்புக்கொண்டு இங்கு குடி வந்து விட்டான்.

ஆறு மாதங்களாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் கட்டுமானப் பணிகள் மிகவும் துரிதமாக நடந்துக் கொண்டிருப்பதால், காலநேரம் இல்லாமல் நாளின் பெரும்பான்மையான நேரம் சைட்டிலேயே தான் குடியிருந்தான் சித்தார்த். இப்பொழுது தான் கட்டிடம் ஒரு நிலைக்கு வந்து வேலை கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

குளித்து உடை மாற்றியவன் தனக்கு காபி கலந்து எடுத்து கொண்டு, தொலைக்காட்சியை ஒளிரச் செய்து விட்டு சேரில் அமர்ந்தான்.

ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வர கீழே தரை தளத்தில் இருந்து ஒரே ஆரவாரமும், கூச்சலும் கேட்டது. தன் போக்கில் ஏதோ ஒரு சேனலை போட்டுப் பார்த்து கொண்டிருந்தவனை மீண்டும் மீண்டும் கீழே இருந்து எழும்பிய சத்தம் அசைத்துப் பார்க்க எழுந்து பால்கனியில் எட்டிப் பார்த்தான்.

அருகில் அப்பார்ட்மென்ட் வளாகப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சத்தம் தான் அது. அவன் வீடு கார்னர் ஃபிளாட் என்பதால் அங்கிருந்தே அவர்களை நன்றாக பார்க்க முடிந்தது.

சிறிது நேரம் அவர்களின் விளையாட்டை வேடிக்கைப் பார்த்தவன் எவ்வளவு நேரம் தான் உள்ளேயே அடைந்து கிடப்பது, சற்று வெளியே நடைப்பயின்று விட்டு வரலாம் என கிளம்பினான்.

இங்கு குடி வந்ததிலிருந்தே வீடு, வேலை என்று அலைய தான் அவனுக்கும் நேரம் சரியாக இருந்தது. அப்பார்ட்மென்டை கூட சரியாக சுற்றிப் பார்க்கவில்லை, வாங்கலாமா வேண்டாமா என ரமேஷ் யோசிக்கும் பொழுது அவனுடன் ஆலோசனைக்காக வந்து பார்த்ததோடு சரி.

சிறிது நேரம் சுற்றி வந்தவன், பின்பு பார்க்கில் ஒரு ஓரமாக ஸ்டோன் பென்ஜ் ஒன்றில் அமர்ந்து எந்தவொரு கவலையும் இல்லாமல் தங்கள் உலகில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து விளையாடும் சிறுவர்களை வாஞ்சையுடன் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் அருகில், "ஷ்... உஃப்..." என்ற சத்தம் வந்தது.

நெற்றியை சுருக்கியவன், சத்தம் வந்த திசையில் நோக்கினான். சற்று தொலைவில் ஒரு குட்டையான போன்சாய் மரத்தின் பின்னே மூன்றிலிருந்து ஐந்து வயதிற்குள் இருக்கும் சிறு பாலகன் ஒருவன் தன் இடது கையை தூக்கி இதழ் குவித்து அதில் ஊதிக் கொண்டிருந்தான்.

எறும்பு கடித்திருக்கும் போல... தன்னையுமறியாமல் அந்த சிறுவனையே வைத்த விழி எடுக்காமல் பார்க்க ஆரம்பித்தான் சித்தார்த்.

மெலிந்த தேகம், தலைமுடி படிய வாரப்பட்டு நெற்றியில் சிறிய விபூதி கீற்று இருந்தது. கழுத்திலும், கையிலும் ஏதோ சாமி கயிறு போல சிகப்பு நிறத்தில் மெல்லிய கயிறு கட்டப்பட்டிருந்தது. பனியனும், அரைக்கால் சட்டையும் அணிந்து கால்களில் ஸ்லிப்பர் போட்டிருந்தான். முகத்தில் பெண்மை கலந்த மென்மையான ஜாடை தெரிந்தது, விழிகள் மின்ன ஆர்வமாக அவனுக்கு சமமான மற்ற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதிலும், பின்பு திரும்பி தன்னை விட வயதில் மூத்த சிறுவர்களின் விளையாட்டை சுவாரசியமாக கவனிப்பதுமாக இருந்தான்.

அப்பொழுது அவனருகே ஒரு பந்து வந்து விழுந்து விட, ஆவலாக குனிந்து தன் பிஞ்சு கரங்களால் அதை எடுக்க முயன்றான் அவன்.

"ஏய்... ஏய்... தொடாதே... நானே எடுத்துக் கொள்கிறேன்!" என்று பத்து வயது சிறுவன் ஒருவன் அவனை அதட்டியபடி வந்து பந்தை எடுத்துச் சென்றான்.

முகம் விழுந்து விட, அவன் சென்ற திசையை ஏக்கத்துடன் பார்த்து நின்றான் குழந்தை.

அந்தப் பார்வையும், முகமும் சித்தார்த்தின் இதயத்தை கசக்கிப் பிழிந்து ஒருவித பாரத்தை ஏற்றி வைத்தது.

சில நொடிகள் தலைக்குனிந்து நின்றவன், பின்பு திரும்பி குடுகுடுவென்று பூங்காவின் மறுதிசையில் ஓடினான்.

உடலில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ள, இவனும் வேகமாக எழுந்து குழந்தை ஓடிய திசையில் சென்றான்.

ஆள் அரவமில்லாத இடத்தில், தனிமையில் அமர்ந்து தொலைவில் தெரிந்த சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணிடம் சென்று மடியில் தலை புதைத்து தன் தளிர் கரங்களால் அவள் இடையை சுற்றிக் கொண்டான் அக்குழந்தை.

அதுவரை உணர்வின்றி அமர்ந்திருந்தவள், குனிந்து மடியில் விழுந்த பாலகனை பார்த்தாள். வாய் சொல் எதுவுமின்றி அமைதியாக அவன் முதுகை மென்மையாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.

இவனும் என்னவென்று எந்த விவரமும் சொல்லவில்லை, அவளும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. மௌன மொழியில் அங்கே ஓர் ஊமை நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஒன்றும் புரிந்து கொள்ள இயலாமல் அவர்களை நோக்கிய சித்தார்த், அந்த பெண்ணை யோசனையுடன் பார்வையிட்டான்.

அந்த குழந்தைக்கு தப்பாமல் அதே மெலிந்த தேகம், தலை வாரியிருந்ததிலும் உடை உடுத்தியிருந்ததிலும் கடமையே என மற்றவர் பார்வைக்கு உறுத்தாதபடி கவனத்தை செலுத்தியிருந்தாள். முக ஒற்றுமையிலும் மாறுதல் இல்லை அப்படியே அக்குழந்தையின் ஜாடையில் இருந்தாள்.

'ஓ... ஒருவேளை இவள் அந்த சிறுவனின் அக்காவா? ஆனால் ஏன் இப்படி வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறாள் என்ன பிரச்சனையாக இருக்கும்? விழிகள் மருந்துக்கும் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. குழந்தை ஓடி வந்து மடியில் சாய்ந்தானே என்ன ஏதுவென்று விசாரிக்கும் உணர்வு கூட தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறாளே...' என்று எண்ணமிட்டபடி எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ அவளிடம் அசைவு தெரிந்து இவனும் உணர்வுக்கு வந்தான்.

அண்ணார்ந்து இருட்ட துவங்கியிருக்கும் வான்வெளியை வெறித்தவள், "தருண்! வீட்டிற்கு போகலாமா?" என்று குனிந்து குழந்தையிடம் மெல்லிய குரலில் வினவினாள்.

ம்... என்றபடி எழுந்து அவள் கைப் பற்றியபடி நடக்க ஆரம்பித்தான் அவன்.

ஏதோ ஒரு உணர்வு கட்டியிழுக்க இவனும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.

இருவரும் லிப்டை உபயோகிக்காமல் மெதுவாக படியில் ஏற ஆரம்பித்தனர்.

இரண்டாம் தளத்தில் நடந்தவர்கள் சாவியை கொண்டு வீட்டைத் திறக்க, குழப்பத்துடன் திரும்பி பார்த்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

அவன் தங்கியிருந்த வீட்டின் எதிர்வீட்டிற்கு அடுத்த வீட்டை தான் அவர்கள் திறந்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்து அவர்கள் தாளிட்டு கொள்ளவும், லேசான பெருமூச்சோடு தன் வீட்டு கதவை திறந்தான் சித்தார்த்.

வீட்டின் உள்ளே லைட்டை போட்டவன், கிச்சனுக்கு சென்று தண்ணீர் அருந்தினான்.

தன் போக்கில் தரையில் பாயை விரித்து படுத்தவனின் மனம் அவர்கள் இருவரை பற்றியும் அசைப் போட ஆரம்பித்தது.

'அவர்களுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? ஏன் அவள் அப்படி உயிர்ப்பே இல்லாமல் இருக்கின்றாள்? தன்னுடலின் பாரம் கூட தாங்க இயலாதவள் போல ஓய்ந்து போய் தளர்ந்த நடை நடக்கிறாளே... சிறுவர்கள் விளையாடுவதை ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த குழந்தை கூட அவளிடம் வந்ததும், அப்படியே உணர்விழந்து போனானே... அவளுக்கு சமமாக நடையில் வயதுக்குரிய துள்ளல் இல்லாமல் இருக்கின்றானே... ஒருவேளை பெற்றவர்கள் சரியில்லையோ? ஆம்... அப்படி தான் இருக்க வேண்டும், அதனால் தான் இருவரும் தங்கள் தனிமையை நொந்துக் கொண்டு, இப்படி சுற்றுகிறார்கள் போல... இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை பார்த்தால் ஏனோ தானேவென்று மனம் போன போக்கில் வாழும் பெற்றவர்களால் வளர்க்கப்படுபவர்கள் போல் தோன்றியது. ஹும்... இப்படிப்பட்ட பெற்றோரிடம் இருப்பதற்கு என்னை போல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து விடலாம்!' என்றெண்ணி கசந்தான் சித்தார்த்.

Nanoru Sindhu- Amazon Kindle Link

5 comments:

Most Popular