Menu

Search This Blog

Mamanar - Deepababu



மாமனார்


முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி.

"உன் அப்பா தன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? சொந்தப் பேரனுடைய ஸ்கூல் அட்மிஷனுக்கு கொடுத்த லட்ச ரூபாய் பணத்திற்கு கூட கணக்காக மாதாமாதம் வட்டிக் கடைக்காரன் போல வட்டிப்பணம் வாங்குகிறார்!"

"ஐயோ... அது அப்படி இல்லைப்பா, அப்பா அவருடைய ரிட்டயர்ட்மென்ட் பணத்தை பாங்கில் டெபாசிட் பண்ணி இருந்தார். அதில் இருந்து தான் நம் அவசர தேவைக்காக என எடுத்து கொடுத்ததால் பாங்கிற்கு வட்டி கட்ட வேண்டுமே என்பதற்காக கேட்கிறார்!" என்றாள் தடுமாற்றத்துடன்.

"ம்... நன்றாக சமாளி!" என்றவன் தனது அலைபேசியை எடுத்து மொபைல் பேங்கிங் மூலமாக மாமனாருக்கு பணத்தை ட்ரான்ஸஃபர் செய்து விட்டு எழுந்து அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானான்.

"சரி நான் கிளம்புகிறேன்!" என ஹாலில் இருந்தவாறு உள்நோக்கி குரல் கொடுத்தான் மணி.

வாஷிங் மெஷினில் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவள், "ஆங்... இதோ வருகிறேன்!" என விரைந்து வெளியே வந்தாள்.

"ஓகே... பை!" என்றவனிடம் அவள் கடனே என்று தலையாட்ட, சட்டென்று அருகில் இழுத்தவன், "கொஞ்சம் சிரிடி!" என இடையை வளைத்தான்.

"ம்... அங்கே சிரிப்பில்லாத பொழுது இங்கே மட்டும் எப்படி வருமாம்?" என்று முனகியபடி அவன் காலரை நீவி விட்டாள்.

அவனையும் மீறி இதழ்கள் மலர குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த ஒற்றி எடுத்தவன், "பை!" என்க, ஒளிரும் விழிகளோடு பதில் முத்தமிட்டு பை என்றவள் நினைவு வந்தவளாக வழக்கமான வினாக்களை தொடுத்தாள்.

"மொபைல் எடுத்தாச்சா..."

"ம்..." என்றவன் ஷுவை மாட்டிக் கொண்டு வண்டியில் ஏற, "ஹேய்... அப்புறம் ஐ.டி?" என்றாள் வேகமாக.

"அச்சோ... அதை மறந்துட்டேன், எடுத்துட்டு வாடி செல்லம்!"

கண்கள் இடுங்கப் பார்த்தவள், "உங்கள் பையன் கூட எல்லாம் கரெக்டாக எடுத்து வைத்துக் கொள்கிறான். நீங்கள் இருக்கிறீர்களே..." என்று அவன் காதை திருகினாள்.

"சரி சரி ஓவராக தான் அலட்டாதடி, போய் எடுத்துட்டு வா!" என அவளை உள்ளே தள்ளினான்.

மணி கிளம்பியதும் வீட்டை ஒழுங்குப்படுத்தி விட்டு அக்கடாவென்று அமர்ந்தவளுக்கு காலையில் அவன் தன்னிடம் தர்க்கம் செய்த விஷயம் நினைவில் அலைமோதியது.

தங்கள் குழந்தையை ஒன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டி நகரத்தில் உள்ள பிரபலமான இன்டர்நேஷனல் பள்ளியை அணுகிய பொழுது தான் அட்மிஷன், டியூசன், ட்ராஸ்போர்ட் ஃபீஸ் என ஆகமொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஆகும் என்றார்கள்.

கண்ணைக் கட்டினாலும் சரி இப்பொழுது மட்டும் எப்படியாவது செலுத்தி விட்டால் பிறகு வருடாந்திர கட்டணம் குறைவு தானே என்று தயங்கிய கணவனையும் ஊக்குவித்து தன் தந்தையிடம் கடனாக வாங்கி குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டாள் ஜோதி.

இதோ அதோ என்று பத்து மாதம் ஓடிவிட்டது. மாதாமாதம் மாமனாரின் அக்கவுன்டில் பணத்தை போடும் பொழுது மட்டும் சற்றே அலுத்துக் கொள்வான் மணி.

வெளியாள் மாதிரி கணக்காக இருக்கிறாரே என்று அவளிடம் எகிறுவானே தவிர மற்றபடி அவரிடம் மிகுந்த மரியாதையுடன் தான் நடந்துக் கொள்வான்.

அவளுக்கும் சங்கடமாக தான் இருந்தது, நான் கடனாக கேட்டிருந்தாலும் அப்பாவாகவே இல்லைம்மா... பேரனுக்கு தானே திருப்பி தர வேண்டாம் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். என்ன செய்வது அவர் மனதில் என்ன இருக்கிறதோ? எதை செய்தாலும் தனக்கும், அண்ணனுக்கும் சமமாக தான் செய்கிறார். இருவரையும் வாரிசாக்கி தனியாக இரண்டு அக்கவுன்ட்டில் பணம் போட்டு வருகிறார் என்பதும் தெரியும், இருந்தும் ஏன் கணக்காக இருக்கிறார் என்று புரியவில்லை. விவரம் கேட்கப் போய் அவர் மனம் சஞ்சலப்பட்டு விடக்கூடாதே என்கிற கவலையில் இவளும் அமைதியாக இருக்கிறாள்.

மணியும் ஒன்றும் கொடுமை செய்யும் கணவன் இல்லை தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் பாசமாக தான் இருக்கிறான். என்ன ஒன்று கெடுபிடியாக பணம் கொடுப்பதற்கு தான் முனகுகிறான் என்று பெருமூச்சொன்றை வெளியேற்றியவளுக்கு ஒன்றை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது.

பெண்களுக்கு மாமியார், மருமகள் பிரச்சினை வருவதை பற்றி தனி டிராக் காமெடி ஓடுவது போல் இந்த ஆம்பிளைங்களுக்கு மாமனார், மருமகன் பிரச்சினை வீட்டிற்கு வீடு உள்ளதே.

எப்படியேபட்ட நல்லவனாக இருந்தாலும் சரி தன் வாழ்நாளில் மாமனாரை இழுத்து கேலி செய்யவில்லை என்றால் தூக்கம் வராது போலிருக்கிறது என புன்னகைத்தவள் தன் தந்தைக்கு கால் செய்தாள்.

***

"அம்மா! இப்பொழுது அப்பாவுக்கு எப்படி இருக்கிறது?" என்று பரிதவிப்புடன் தாயின் கரம்பற்றி வினவிய மணியை சமாதானப்படுத்தினார் வரலட்சுமி.

"இனி ஒன்றும் பயமில்லைடா... சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்!"

"ஓ... தாங்க் காட்! சரி ஹாஸ்பிடலுக்கு பணம்..."

அவனை இடைமறித்தவர், "ஆமாம்பா... நல்லவேளை நீ உன் மாமனாருக்கு பணத்தை அனுப்பி விட்டு என்னிடம் கொடுக்க சொன்னாய். இல்லையென்றால் அப்பாவை வைத்துக் கொண்டு ஒற்றை ஆளாய் நான் தடுமாறிப் போயிருப்பேன்!" என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

'நான் பணம் அனுப்பினேனா?' என விழித்தான் மணி.

தன் மாமனாரிடம் நலம் விசாரித்து விட்டு குழந்தையுடன் அருகில் வந்த ஜோதி, "என்னவாயிற்று ஒரு மாதிரி நின்றுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் மாமாவிடம் பேசினேன் ஆரோக்கியமாக தான் உள்ளார். இனி உணவில் சரியான கட்டுப்பாட்டை பின்பற்றினால் ஒன்றும் பிரச்சினை வராது!" என்றாள் அவன் தோள் தொட்டு ஆறுதலாக.

"ஆங்... இல்லை ஜோதி..."

"அடடேடே... எங்கள் வீட்டு குட்டிப்பையன் ஊரில் இருந்து வந்தாயிற்றா? தாத்தா இப்பொழுது தான் காபி குடிக்க கேண்டின் பக்கம் போய் வந்தேன் அதற்குள் வந்து விட்டானே!" என்றபடி தன் மகளின் அருகில் நின்றிருந்த பேரனை தூக்கி கொஞ்சினார் ராமமூர்த்தி.

"வாங்கப்பா!" என்று முறுவலித்தாள் ஜோதி.

"பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததாம்மா?" என்றார் மகளிடம் வாஞ்சையோடு.

"ஆங்... ப்பா... அப்புறம் அம்மா எப்படி இருக்கிறார்கள்?"

"நன்றாக இருக்கிறாள்மா, ஒரு விசேஷத்திற்கு ஊருக்கு போயிருக்கிறாள் நைட் வந்திடுவாள். மாப்பிள்ளை போன் பண்ணவுடனே நான் இங்கே வந்து விட்டேன்!"

மணியின் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி வந்து மயக்கம் வரவும் பதறியடித்து தன் மகனுக்கு விவரம் சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து வந்து விட்டார் வரலட்சுமி.

வேலை வாய்ப்பிற்காக வெளியூரில் ஐந்து மணி நேர பிரயாண தொலைவில் இருப்பவனால் உடனே கிளம்பினாலும் வருவதற்கு தாமதமாகும் என பக்கத்து ஊரில் இருக்கும் தன் மாமனாருக்கு உதவி கேட்டு தகவல் தெரிவித்து விட்டான்.

"என்ன மாப்பிள்ளை அமைதியாக இருக்கிறீர்கள்? அப்பாவுக்கு ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள்!" என்று ஆறுதலாகப் பேசினார் ராமமூர்த்தி.

"அதில்லை மாமா அவசர அவசரமாக கிளம்பி ஓடி வந்தது கொஞ்சம் தலைவலியாக இருக்கிறது அவ்வளவு தான்!" என்று தடுமாறினான்.

"சரி அப்பொழுது வாங்க, ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும். நீ பிள்ளையை பிடிம்மா, வரும்பொழுது அப்படியே உங்களுக்கு டிபன் வாங்கி வந்து விடுகிறோம்!" என்றவாறு மணியுடன் நடந்தார்.

அவன் மறுப்பை பொருட்படுத்தாது தானே பணம் கொடுத்து காபி வாங்கிக் கொடுத்தவர், உணவுகளுக்கான டோக்கனையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

மணிக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது. முதுகிற்கு பின்னால் தான் என்றாலும் இந்த மனிதரை தான் எத்தனை கேலி, கிண்டல் செய்திருக்கிறோம். கணக்காக பணம் வசூலிக்கிறார் என ஜோதியிடமும் எத்தனை தூரம் சலித்திருக்கிறோம் என்று மறுகினான்.

"என்ன மாப்பிள்ளை காபியில் டிகாஷன் தூக்கலாக கொஞ்சம் கசப்பாக இருக்கிறதா? என்ன செய்வது கிடைப்பதை குடித்துக் கொள்ள வேண்டியது தான்!" என்றபடி எதிரே வந்தமர்ந்தார்.

தாமதிக்காமல் சட்டென்று தன் மன உளைச்சலை கேட்டு விட்டான் மணி.

"ஏன் மாமா அம்மாவிடம் நீங்கள் கொடுத்த பணத்தை நான் கொடுத்ததாக சொன்னீர்கள்?"

"அதுதானே மாப்பிள்ளை உண்மை, அது உங்கள் பணம் தானே?"

"என் பணம்... எப்படி?" என விழித்தான்.

"நீங்கள் எனக்கு மாதாமாதம் பணம் அனுப்புவீர்களே, அதை சொஸைட்டியில் தனியாக சீட்டுப் போட்டிருந்தேன் அந்த பணம் தான்!"

திகைத்தவன், "அது உங்களிடம் நாங்கள் வாங்கிய பணத்திற்கு கொடுக்க வேண்டிய வட்டி தானே?" என்றான்.

"அடப்போங்க மாப்பிள்ளை... சொந்தப் பேரனை பள்ளியில் சேர்த்துவதற்காக கொடுத்த பணத்திற்கு கணக்கா? அது விஷயம் என்னவென்றால்... நானும் நம்ம குட்டிப்பையனுக்கு ஒரு வயது தொடங்கியதிலிருந்தே இந்த ஜோதி பிள்ளையிடம் சொல்லி கொண்டிருக்கிறேன். ஏதாவது நல்லதொரு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து எதிர்காலத்திற்காக சேமித்து வையுங்கள் என்று. அவளோ அந்த செலவு இருக்கிறதுப்பா... இந்த செலவு இருக்கிறதுப்பான்னு தள்ளிப் போட்டுட்டே இருந்தாள். அதுதான் பார்த்தேன் இந்த விஷயம் மாட்டவும் டப்பென்று இதில் பிடித்து போட்டு விட்டேன். இப்பொழுது பாருங்கள்... கடன் முடிந்தாலும் ரெகுலராக ஒரு அமௌன்டை உங்களால் தொடர்ந்து சேமிக்க முடியுமில்லை?" என பெருமையாக சிரித்தார்.

தன் மாமானாரின் குணம் எண்ணி நெகிழ்ந்தவனுக்கு தன்னை எண்ணி வெட்கமாக இருந்தது.

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment

Most Popular