Menu

Search This Blog

Yennai Theriyuma 1 - Deepababu



*1*


வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்று ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு பங்களாவிற்குள் நுழைய, அதனை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய மரத்தின் பின்னே மறைவாக தன் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கே நடமாடுகின்ற ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான்.

காரிலிருந்து இறங்கிய அந்த பிரபலமான தொழிலதிபர் வீட்டினுள் செல்ல, அவருடன் இரண்டு நபர்கள் மட்டும் உள்ளே சென்றனர். வெளியே நல்ல திடகாத்திரமாக இருந்த இருவர் தொடர்ந்து காவலுக்கு நின்றிருந்தனர்.

பைக்கை மெல்லமாக உருட்டிக்கொண்டு ஓசையின்றி வீட்டிற்குப் பின்னால் சென்றான் ஜெய். சுற்றுச்சுவரை ஒட்டி வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மெதுவாக அதன் மேல் ஏறிப் பார்க்க பின்புறம் ஒருவரும் இல்லை. அதில் உற்சாகமானவன் மெல்ல ஒரு எம்பு எம்பி சத்தம் எழாமல் உள்ளே குதித்தான்.

தன் சட்டைப் பையிலிருந்து மொபைலை எடுத்தவன் வீடியோ ரெக்கார்டிங் ஆன் செய்துக் கொண்டு பூனை போல் பதுங்கிப் பதுங்கி சுற்றும்முற்றும் கவனமாகப் பார்த்தவாறே வீட்டை நோக்கி முன்னேறினான்.

அருகில் சென்றதும் ஒரு இடத்தில் பேச்சுக்குரல் நன்றாக கேட்க, அந்த ஜன்னலருகே சென்று நின்றவன் மெல்ல தன் கையிலிருந்த அலைபேசியை அட்ஜெஸ்ட் செய்து உள்ளே நடப்பதை அதன் திரையில் கவனிக்க ஆரம்பித்தான்.

பெரிய டேபிள் முழுவதும் பண்டில் பண்டிலாக இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுக்கள் அடுக்கப்பட்டிருக்க எதிரே நின்றிருந்த அந்த பணம் படைத்த மனிதர் அதில் சில நோட்டுக்களை எடுத்துக் கண்கள் மூடி ஆசையாய் வாசம் பிடித்தவாறு அட்டகாசமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டு அதிர்ந்தவன், 'அடப்பாவி... இப்படியெல்லாம் தொழில் செய்துதான் நீ பெரிய தொழிலதிபர் ஆனாயா? இந்தக் கள்ள நோட்டுக்களை எல்லாம் மார்க்கெட்டில் சுற்றவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகளை போலீஸில் மாட்டி வைத்துவிட்டு நீங்கள் தப்பி விடுகிறீர்களே... உங்களை விட மாட்டேன்!' என்று தனக்குள் சூளுரைத்தவாறு கைபேசி கேமராவில் அவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்யத் துவங்கினான்.

அந்த தொழிலதிபரின் முகம் நன்றாகத் தெளிவாக தெரிய, "ம்... இதையெல்லாம் என்றைக்கு டெஸ்பாட்ச் செய்கிறீர்கள்?" என தன் கைக்கூலிகளிடம் விவரம் கேட்டார்.

"நாளை நம் ஆட்களை வரச் சொல்லியிருக்கிறேன் சார், இரண்டாயிரம் தனியாக ஐநூறு தனியாக என்று எல்லாம் தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும்!" என்றான் ஒருவன்.

"நோ... நோ... முதலில் ஐநூறை மட்டும் வெளியே விடுங்கள். புது நோட்டு, மேலும் ரிசர்வ் பேங்கே அதில் இரண்டு டிசைன்களில் விட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பல குழப்பங்கள் நிலவுகிறது.

ஸோ... யாராலும் சட்டென்று நோட்டில் வித்தியாசத்தை கண்டுப்பிடித்து விட முடியாது!" என்று அவர் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்க, ஜெய்யின் பின்னால் ஏதோ குர்ர்... குர்ர்ரென்று சத்தம் கேட்டது.

‘எவன்டா அது ரெக்கார்டிங் பொழுது டிஸ்டர்ப் பண்றது?’ என எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு பெரிதாக விரிந்தது.

சின்னக் கன்றுக்குட்டி உயரத்தில் உள்ள பெரிய அல்சேஷன் ஒன்று நாக்கை வெளியே தொங்கவிட்டு மூச்சிரைத்தவாறு அவன் பின்னால் நின்று முறைத்துக் கொண்டிருந்தது.

நெஞ்சம் அதிர பதற்றத்தோடு அதைப் பார்த்தவன், யாருக்கும் தெரியாமல்... குறிப்பாக இதனிடமிருந்து தான் எப்படி தப்பித்துச் செல்வது என்று நெற்றியில் வியர்வை அரும்ப பயத்தோடு வேகவேகமாக சிந்தித்தான்.

இன்னமும் உள்ளே தீவிரமாய் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்க, இவன் மெல்ல மெல்ல சுவற்றை ஒட்டியே பல்லி போல நகர ஆரம்பித்தான். அந்த அல்சேஷன் அமைதியாக கூர் விழிகளுடன் நீர் உமிழும் நாக்கோடு அவன் செய்கையை அசட்டையாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அப்படியே மெதுவாக தன் வண்டி நின்றிருக்கும் நேரெதிர் சுவருக்கு வந்து விட்டான் ஜெய். சட்டென்று ஓடிப்போய் சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து வண்டியில் பறந்து விட்டால் போதும் வேலை முடிந்தது.

இதுவரை எடுத்த ஷுட்டை வைத்தே இவர்களை மக்களுக்கும், போலீஸுக்கும் அடையாளம் காட்டிவிடலாம் என நிம்மதியாக முடிவு செய்தவன் அவசரமாக சுவரை விட்டுப் புல் தரையில் வேக நடையிட, அந்த நாயோ அப்பொழுது தான் வள்வள்ளென்று குரைத்தபடி அவன் அருகில் பாய்ந்தோடி வந்தது.

'அட நாயே... இப்படி மாட்டி விட்டுட்டியே!' என்று உள்ளுக்குள் அதனை சபித்தபடி அசுரவேகத்தில் அவன் காம்பவுன்டை நோக்கி ஓட, நாயின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்த அடியாள் ஒருவன் தன் கையில் இருந்த தடியை ஜெய் சுவரேறும் நேரம் அவன் காலை நோக்கி அதிவேகமாக வீசினான்.

ஆ... என்று அலறியபடி கீழே விழுந்தவன் அடுத்த நொடி ரப்பரென துள்ளி எழுந்து நின்று, அருகில் வந்து விட்டவனின் மூக்கை நோக்கி கைமுஷ்டியை மடக்கி ஓங்கி ஓர் குத்து விட்டான்.

"ஐயோ... அடப்பாவி நாயே..." என்ற அம்மாவின் கூக்குரலை காதில் கேட்டுப் பதறியவன்,

'அடக்கடவுளே... இந்த அம்மா எங்கே இங்கே வந்தார்கள்? நான் ஒருவன் தப்பிப்பது இல்லாமல் இவர்களை வேறு இப்பொழுது காப்பாற்ற வேண்டுமா? ஓ மை காட்... ஹெல்ப் மீ!' என சுற்றும்முற்றும் செண்பகத்தை தேட ஆரம்பிக்க, அவன் முகத்தில் யாரோ பளீரென்று தண்ணீரை அடித்து ஊற்றினார்கள்.

“ஆ... அம்மா...” என்று சின்ன மூச்சிரைப்போடு அலறி அடித்துக்கொண்டு படுக்கையில் வேகமாக எழுந்தமர்ந்தான் ஜெய்சங்கர்.

"ஏன்டா பன்றி... எட்டரை மணிக்கு கிளம்ப வேண்டிய அலுவலகத்திற்கு எட்டு மணி வரை தூங்குகிறாயே என்று உன்னை எழுப்ப வந்தால்... என் மூக்கிலேயே குத்துகிறாயா நீ? உன்னை..." என முகமெல்லாம் ஆத்திரத்தில் சிவந்திருக்க பற்களை அழுந்தக் கடித்தவர் அவன் என்ன ஏதுவென்று சுதாரிக்கும் முன்னர், விறுவிறுவென வெளியே சென்று மாப்ஸ்டிக் ஒன்றை எடுத்து வந்து அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்.

"ஆ... அம்மா வலிக்கிறது வேண்டாம்!" என்று அவன் இங்கும் அங்கும் தாவி தப்பித்து ஓடினான்.

"ஏன்டா எனக்கு மட்டும் நீ விட்ட குத்து வலிக்காமல் இனிக்கிறதா? இங்கே பார்டா... எப்படி சிவந்து வீங்கிப் போயிற்று!" என்று வலியுடன் தன் மூக்கை தேய்த்தபடி அவர் புலம்ப ஆரம்பிக்க, இதுதான் சமயம் என்று அருகில் ஓடி வந்தவன் வேகமாக அவர் கைகளிருந்த ஸ்டிக்கை பிடுங்கியபடி செண்பகத்தின் மூக்கை மெதுவாக தேய்த்து விட்டான்.

"ஐயோ... சாரிம்மா... அவனை குத்தும்பொழுது நீ ஏன்மா குறுக்கே வந்தாய்?" என்று வருந்தியபடி அவரை கட்டிலில் அமர வைத்து ஆயின்மென்ட் போட்டு விட்டான் ஜெய்.

"அவனா... இங்கே எவன்டா வந்தான்? நீ அப்படி ஓங்கிக் குத்தினாய்!" என்று விழித்தார் பெற்றவர்.

ஹிஹி... என்று தலையை சொரிந்தபடி அசடுவழிந்தவன், "அது... அது கனவு போலிருக்கிறதும்மா, அதில் ஒரு ரௌடியை தான் நான் ஓங்கிக் குத்தினேன். தண்ணீர் ஊற்றவும் எழுந்துப் பார்த்தால் உன் மூக்கு வீங்கியிருக்கிறது!" என்றான் நாயகன் மென்று விழுங்கி.

"அடேய்... அடேய்..." என ஆவேசத்துடன் மகனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்திழுத்து நங்நங்கென்று பலமாக கொட்டியவர்,

"இரவில் ஜெய்சங்கர் படத்தை பார்த்துவிட்டு தூங்காதே என்று எத்தனை முறை உனக்கு சொல்லியிருப்பேன். இன்னமும் திருந்தாமல் ஏழு வயதில் ஆரம்பித்த பழக்கத்தை, கனவுலகில் மிதந்தபடி என்னை அடிப்பதையும், உதைப்பதையும் நிறுத்த மாட்டேன் என்கிறாயே..." என்று அலுத்தபடி தலையில் கைவைத்து ஓய்ந்துப் போய் அமர்ந்து விட்டார்.

அவர் அருகில் அமர்ந்து சலுகையுடன் கழுத்தை கட்டிக்கொண்டவன், "சாரிம்மா... உன் பேச்சைக் கேட்டு பத்து வருடங்களாக இரவில் தலைவர் படம் பார்க்காமல் தானே இருந்தேன். நேற்று சுத்தமாக தூக்கம் வரவில்லை, சரி... இப்பொழுது தான் வளர்ந்து விட்டோமே கனவு வராது என்று நம்பி... வல்லவன் ஒருவன் போட்டுப் பார்த்தேன்!" என்றான் அவரிடம் பரிதாபமாக.

"வாயை மூடிக்கொண்டு எழுந்து ஓடிப் போய்விடு, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். உன் அப்பாவிடம் அப்பொழுதே தலையால் அடித்துக் கொண்டேன், பத்து வயது பையனுடைய பேச்சை எல்லாம் கேட்டுப் பெயரையெல்லாம் மாற்றாதீர்கள் என்று. கேட்டாரா? பாவம்... குழந்தை ஆசைப்படுகிறானாம்... குழந்தையாம் குழந்தை..." என இடையில் நிறுத்தி, அவன் தாடையில் ஒரு குத்து விட்டுவிட்டு சோகமாக தொடர்ந்தார்.

"உன் பேச்சைக் கேட்டு ஜெயக்குமார் என்றிருந்த பெயரை கெஸட்டில் ஜெய்சங்கர் என்று மாற்றினாரே அவரைச் சொல்ல வேண்டும்.

மனுஷன்... அதன்பிறகு உன்னிடம் இரண்டு வருடங்கள் மட்டும் உதை வாங்கிவிட்டு, என்னை காலம் முழுவதும் வாங்க வைத்துவிட்டுப் பாதியில் போய் விட்டாரே!" என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார் செண்பகம்.

'ஐயையோ... இந்த அம்மா காலையிலேயே ஆரம்பித்து விட்டார்களே... நான் எத்தனை மணிக்கு அலுவலகம் போவது? நிறுத்தவும் முடியாதே... செய்தப் பிரச்சினைக்கு முதுகில் நல்லப் பெரிய டின்னை வேறு கட்டி விடுவார்கள்!' என்று செய்வதறியாது தலையை பிய்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஜெய்.

"அம்மா!" என மெல்ல அழைத்தவனிடம், "என்னடா?" என்று எரிந்து விழுந்தார்.

"இல்லை... என்னை எதற்கு எழுப்பி விட்டாய்?"

"ஏன் அலுவலகத்திற்கு..." என வேகமாக ஆரம்பித்தவர் பாதியில் நிறுத்தி அவனை முறைத்தார்.

"ஓஹோ... போட்டு வாங்குகிறாயா?"

"இல்லைம்மா... மணி எட்டேகால்!" என்றான் பப்பி முகத்தை வைத்து.

"நீ குளிக்கின்ற காக்கா குளியலுக்கு ஒரு ஐந்து நிமிடம், உடை மாற்ற ஐந்து நிமிடம், வயிற்றில் ஆவி பறக்க கொட்டிக் கொள்வதற்கு ஒரு ஐந்து நிமிடம்.

ஆகமொத்தம்... கூட்டிக் கழித்துப் பார், எட்டரை மணிக்கு நீ கிளம்புவதற்கு கணக்கு சரியாக வரும்!" என்று மகனிடம் நக்கலடித்து விட்டு அறை வாயில்வரை சென்றவர் அவனிடம் திரும்பி,

"டேய்... இதைச் சொல்ல மறந்து விட்டேனே!" என்றார் வேகமாக.

பல்லைக் கடித்து தலையாட்டியவாறே, "சொல்லும்மா... அதையும் கேட்டுவிட்டே குளிக்கப் போகிறேன்!" என்றான் பையன் முறைப்புடன்.

"இல்லை... தயவுசெய்து எந்தப் பெண்ணையாவது இழுத்து வந்து அவளை உனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மட்டும் என்னிடம் எதுவும் கேட்டு விடாதே.

சத்தியமாக அந்தப் பாவக் காரியத்தை எல்லாம் நான் செய்ய மாட்டேன். என்ன தான் நான் அவளுக்கு மாமியாராக இருந்தாலும், தினமும் உன்னிடம் என் மருமகள் உதை வாங்கட்டும் என்று நினைத்து மகிழும் அளவிற்கு ரொம்ப கல்நெஞ்சுக்காரி இல்லை!" என கூறி தன் இதயத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டவர்,

ஜெய்யின் அம்மா... என்ற காட்டுக்கத்தலை திருப்தியுடன் நின்று கேட்டுவிட்டே வெளியேறினார்.

ஜெய்சங்கர் சிறுவயது முதலே அவன் அம்மா குறிப்பிட்டிருந்தபடி மக்கள் கலைஞரின் தீவிர ரசிகன். அவருடைய படங்களின் தாக்கத்தால் பெயரை மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் படித்ததும் ஜெர்னலிசம் தான்.

அவரை போல் சமூகத்தில் நடக்கின்ற நிறைய குற்றங்களை கண்டுப்பிடித்து மக்கள் முன் நிரூபித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உதவ வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன்.

கடந்த நான்கு வருடங்களாக ஃபார்யு டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ரிப்போர்ட்டராகவும் பணியில் இருக்கிறான்.

ஆனால் இத்தனை நாட்களில் அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கப் பெறாமல், 'திக் திக் நிமிடங்கள்!' என்கிற கிரைம் தொடரையும், 'உங்களால் வெல்ல முடியும்!' என்கிற உத்வேக தொடரையும் எழுதி இயக்கி வருகிறான். இதுவரை திரையில் தன்னை அவன் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.


No comments:

Post a Comment

Most Popular