Menu

Search This Blog

Kannal Pesum Penne - Deepababu



கண்ணால் பேசும் பெண்ணே


"அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே...
புதுராகம் நான் பாடவா...

இசைத்தேவன் இசையில்... புதுப்பாடல் துவங்கு... எனையாளும் கவியே... உயிரே...

அதிகாலை கதிரே... அலங்காரச் சுடரே...
புதுராகம் நீ பாடவா..."

"ஹலோ... ப்ளூ சுடிதார்! உன்னைத்தான், ஹேய்..." என்று கைத்தட்டி யாரோ உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது.

மெய்மறந்து ஜானகியின் குரலில் லயித்திருந்தவளை அந்த குரல் கலைத்தது.

அலுவலகம் முடிந்து ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டும், மறுகாதால் சாலையை கவனித்து கொண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தவள், அவன் குரலில் குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள்.

'நான் தான் ப்ளூ சுடி போட்டிருக்கிறேன், அப்பொழுது... அவன் என்னை தான் அழைக்கின்றானா?' என்று புருவம் சுளித்தபடி திரும்பி அவனை பார்த்தாள்.

ரோட்டின் மறுபுறம் நின்றிருந்தான் அவன்.

அவள் தன் புறம் திரும்பியதும், வேகமாக கைகளை ஆட்டியவன் உரக்கப் பேசினான்.

"ஹேய்... உனக்கு முன்னால் ஒரு பெரியவர் ஆட்டோவில் ஏற போகிறார் பார்... சீக்கிரம் அவரை கூப்பிடு. ப்ளீஸ்... ரொம்ப ரொம்ப எமர்ஜென்ஸி!" என்று சாலையை கடந்து வர இருபுறமும் பார்வையிட்டுக் கொண்டே அவசரமாகச் சொன்னான்.

அவன் குறிப்பிட்ட நபரை திரும்பி பார்த்த பிரக்யா திகைத்தாள். காரணம்... அவர் டிரைவரிடம் பேரம் பேசி முடித்து ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தார்.

'ஐயோ... இப்பொழுது அவரை எப்படி தடுத்து நிறுத்துவது? அருகில் செல்வதற்குள் ஆட்டோ கிளம்பி விடுமே!' என்று டென்ஷனில் விரல்களை சொடுக்கெடுத்தாள்.

அவள் அப்படியே அசையாமல் நிற்கவும், "ஏய்... சீக்கிரம் கூப்பிடு, அவர் பெயர் கணபதி!" என்று கத்தினான் அவன்.

ரோட்டில் ஹெவி டிராபிக், இருக்கின்ற வாகன நெருக்கடியில் அவனால் உடனே கடந்து வர இயலவில்லை.

இவளோ செய்வதறியாது தடுமாறினாள், அதற்குள் அந்த பெரியவர் ஆட்டோவில் ஏறிச் சென்றே விட்டார். அனைத்தும் இரண்டே நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது.

"யூ இடியட்... எத்தனை தடவை கத்தினேன், அவரைத் தடுத்து நிறுத்து என்று. அப்படியே அசையாமல் மரம் மாதிரி நின்று அனைத்தையும் கெடுத்து விட்டாயே!" என்று அவளிடம் கோபமாக பேசினான் அதற்குள் அருகில் வந்து விட்ட அவன்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் பேச்சு வருத்தத்தை அளித்தது.

"நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் இருக்கின்ற அக்கறையில் கால்வாசியாவது மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற வகையில் ஏதாவது உதவுவதிலும் இருக்க வேண்டும். யூஸ்லெஸ் ஃபெல்லோ!" என்று மேலும் பொருமினான்.

அதுவரை அமைதியாக இருந்தவளின் முகம் அவனுடைய அடுத்தடுத்த குற்றச்சாட்டால் கோபத்தில் சிவந்தது.

'அவசரத்தில் தெரியாமல் நடந்த ஒரு சிறு தவறுக்காக... ஒரேயடியாக சாடுகின்றானே... இவனுக்கு தெரியுமா? நான் மேக்கப் போட்டுக் கொண்டு சுற்றுகிறவள் என்று' என அவனை உறுத்து விழித்தாள் பிரக்யா.

"உஷ்... சரி போதும் விடுடா. அவரைப் பிடிக்க வேறு வழியில் முயற்சி செய்வோம்!" என்று அவனை சமாதானப்படுத்தினான் அவனுடைய நண்பன் கதிர்.

ஆனால் அவன் மனமோ ஆற மறுத்து அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தது, பதிலுக்கு தீப்பார்வையை வீசியவள் வேகமாக விலகி நடந்தாள்.

"திமிர்பிடித்தவள்!" என்று தனக்குள் முனகினான் அபிஷேக்.

அன்று ஒரு கலை கண்காட்சிக்கு, அபிஷேக்கை வற்புறுத்தி அழைத்து சென்றான் அவனுடைய பள்ளி தோழன் தியாகு.

"டேய்... எனக்கு முக்கியமான வேலையிருக்கிறதுடா. அடுத்த முறை பார்த்தால் என்ன?"

"நோ! நீ இன்றே வந்தாக வேண்டும். ஏன் தெரியுமா? என் தங்கையை பற்றி சொல்வேனே ஞாபகமிருக்கிறதா... அவள் டிராயிங்கில் எக்ஸ்பர்ட் என்று. அவளுடைய ஓவியங்கள் இன்றைய கண்காட்சியில் இடம்பெற்று கலக்கி கொண்டிருக்கிறது!" என்றான் பெருமையாக.

"ஓ! வாவ்... செம... நீ அவளுடைய ஆர்வத்தை பற்றிச் சொல்லும் பொழுது, நான் கூட அவளை பெரிய ஆர்கிடெக்ட் ஆக்கி விடுங்கள் என்று சொல்வேனே... அவளுடையதா?" என்றான் வியப்புடன்.

"ஹஹா... சாட்சாத் அவளே தான்!" என்றான் புன்னகையுடன்.

"கோர்ஸ் முடித்து விட்டாளா?" என்று வினவியபடி காரை நிறுத்தி இறங்கினான் அபி.

"ம்... திட்டாதே... ஒரு கம்பெனிக்கு கடந்து மூன்று மாதமாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள்!" என்றான் அசடு வழிந்தபடி.

அவனை முறைத்தவனிடம், "இல்லைடா... அவள் எதிலும் பர்பெக்ஷன் எதிர்ப்பார்ப்பவள். காலம் முழுக்க உன் கம்பெனியில் தான் வேலை செய்ய வேண்டும் என நான் அவளிடம் கூறினேன். அதற்கு மேடம் என்ன சொன்னாள் தெரியுமா? அவளிடம் எப்பொழுதும் உனக்கு எந்த குறையும் தோன்ற கூடாதாம்... அதனால் சில நாட்கள் வெளியில் பிராக்டிஸ் செய்கிறேன் என்று விட்டாள். நான் என்ன செய்வது?" என்றான் சோகமாக.

சிரித்தபடி அவன் தலையில் தட்டியவன், "ஓவராக நடிக்காதேடா... ம்... பரவாயில்லை வெல் பிளானர் தான் போலிருக்கிறது அவள். ஒரு பெர்ஃபெக்ட் ஆர்கிடெக்டுக்கு தேவையான முக்கியமான குவாலிவிக்கேஷன்!" என்றபடி கேலரியுள் நுழைந்தனர்.

அந்த நேரம் பார்த்து தியாகுவிற்கு ஆபிஸிலிருந்து முக்கியமான அழைப்பு வர, "ஹேய் மச்சான்... முக்கியமான கால்டா, நான் பேசி முடித்து விட்டு வருகிறேன். நீ பார்த்து கொண்டிரு!" என்று அவனின் பதிலை எதிர்ப்பாராமல் வேகமாக வெளியேறினான்.

ம்ஹும்... என்று தலையசைத்தபடி பெருமூச்சு விட்டவன், ஒவ்வொரு படமாக பார்வையிட ஆரம்பித்தான்.

அதில் ஒரு படம் அவனை மிகவும் கவர்ந்தது. அதையே ஆர்வமாக பார்த்திருந்தவன், என்ன ஒரு ரசனை... என்று வியந்தபடி கீழே வரைந்தவரின் பெயரை பார்த்தான்.

"பிரக்யா!" என்று மெல்ல முனகினான்.

"எஸ் சார்!" என்றபடி அங்கே பணிபுரியும் ஒரு பெண் அருகில் வந்தாள்.

"இந்த பெயின்டிங் ரொம்ப சூப்பர்பாக இருக்கிறது... வாட் எ திங்கிங்! ரியலி நைஸ்..." என அவன் அதனை புகழ்ந்து தள்ள,

"அதை அவர்களிடம் நீங்கள் நேரிலேயே சொல்லி விடலாம். வாருங்கள்!" என்று அவனை புன்னகையுடன் அழைத்து சென்றாள்.

"மேம்! இந்த கண்காட்சி ஆரம்பித்ததிலிருந்தே உங்கள் பெயின்டிற்கு மட்டும் கிடைக்கும் தனிப்பட்ட வரவேற்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதோ உங்களுக்கு மற்றுமொரு ரசிகர், உங்கள் திறமையை வானளவு புகழ்கிறார்!" என ஒரு பெண்ணிடம் அவள் சிரித்தபடி கூற, புன்னகையுடன் திரும்பியவளை கண்டு அதிர்ந்தான் அபி.

அவனை கண்டு அவள் முகத்திலும் அதிர்ச்சி தோன்றி இறுகியது.

இருந்தாலும் அவள் திறமைக்கு மரியாதை தர வேண்டும் என்று அவளிடம் புன்னகையுடன் பேசினான்.

"உங்கள் பெயின்டிங் மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் திறமை மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்!"

அவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் லேசாக அசைத்து விட்டு, வெளியே சென்றாள்.

அபிக்கு மிகவும் அவமானமாகி விட்டது, 'என்ன பெண் இவள்? எப்பவும் இப்படித்தான் கர்வம் பிடித்தவள்!' என்று எரிச்சலடைந்தான்.

"இந்த மாதிரி ஆட்களிடம் இனிமேல் என்னை போன்ற ஆட்களை தயவுசெய்து அறிமுகப்படுத்தாதீர்கள். திறமையிருந்தால் மட்டும் போதாது... மற்றவர்களை மதித்து பேச தெரிந்திருக்க வேண்டும்!" என்றான் அந்த பெண்ணிடம் கடுப்புடன்.

"நோ சார்... யூ மிஸ்டேக்கன்!" என்றாள் அவள் வேகமாக.

"என்ன மிஸ்டேக்கன்... பாராட்டுபவனிடம் பதிலுக்கு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாதவளிடம் திறமை இருந்து என்ன பயன்?" என்றான் கோபமாக.

"இல்லை... நீங்கள் நினைப்பது போல் இல்லை, அந்த பெண் மிகவும் நல்லவர். அவரால் வாய் பேச முடியாது... ஊமை!" என்றாள் அமைதியான குரலில்.

அவளின் பதிலில் அதிர்ந்தவன், அவசரமாக வாயிலை திரும்பி பார்த்தான். பிரக்யா ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள்.

தன் தவறை உணர்ந்த அபி, அவளிடம் மன்னிப்பு வேண்ட வேகமாக வாசலை நோக்கி ஓடினான். அதற்குள் அவள் பறந்து விட்டாள், ப்ச்... என்று சலித்தபடி நின்றான்.

அவனுக்கருகில் மற்றொரு குரலும் உச்சு கொட்டியது. அவன் திரும்பி பார்க்க, அங்கே தியாகு நின்று கொண்டிருந்தான்.

"ச்சே... பாப்பாவும் உள்ளே இருந்திருப்பாள் போலிருக்கிறதே... அதற்குள் போன் வந்து கெடுத்து விட்டது. அவள் கிளம்பி விட்டாள்!" என்றான் ரோட்டை எட்டி பார்த்தபடி.

"எந்த பாப்பா?" என்றான் அபி ஒரு மாதிரி குரலில்.

"அது தான் என் தங்கை சொல்லி இருக்கின்றேனே... அவள் பெயின்டிங் கூட உள்ளே இருக்கின்றது!" என்றான் விளக்கமாக.

"அவள் பெயர் என்ன?" என்றான் பல்லை கடித்தபடி.

"பிரக்யா!" என்று அவன் கூறி முடித்தது தான் தாமதம், அபியிடமிருந்து நங்கு நங்கென்று நான்கைந்து கொட்டுக்கள் வாங்கினான் தியாகு.

"ஏன்டா கொட்டுகிறாய்?" என்றான் பாவமாக தலையை தடவியபடி.

"கொட்டுவதா... உன்னை கொலையே செய்து விடுவேன் நான். பாப்பாவாம் பாப்பா... அவளுக்கு பெயரில்லை, எப்பொழுது பார் பாப்பா பாப்பா என்று சொல்லி சொல்லியே பதினைந்து வருடமாக அவள் பெயரே என்னவென்று தெரியாமல் செய்து விட்டான் எனக்கு!" என்றான் வெறியோடு அவனை முறைத்தபடி.

அவன் இவனையே பரிதாபமாக பார்க்க, ஒரு கணம் யோசித்தான் அபி.

"சரி பிழைத்து போ... இதற்கு மேல் உன்னை நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதற்கு பரிகாரமாக நீ ஒன்றே ஒன்று செய்ய வேண்டும். இன்னும் ஒரே மாதத்தில் பிரக்யா எனக்கு மனைவியாக வேண்டும். உன் தங்கையின் காலில் விழுவாயோ இல்லை யார் காலில் விழுவாயோ எனக்கு தெரியாது... அவள் எனக்கு வேண்டும் அவ்வளவு தான்!" என்றான் அதிரடியாக.

அவனுடைய வேகத்தை கண்டவன், வாயை பிளந்து நிற்க. இவன் அவனை காருக்கு இழுத்து சென்றான்.

நடந்த அனைத்தையும் அவனிடம் கூறியவன், "என்னை தவறாக எண்ணாதே... ஏற்கனவே அவள் மேல் எனக்கு ஏதோ ஒரு..." என்று தடுமாறியவன், "எனக்கு சொல்லத் தெரியவில்லைடா... ஆனால் உன் மூலம் அவளை பற்றிய விவரங்கள் தெரிய தெரிய என்னையுமறியாமல் என் மனம் அவளை ஏற்கனவே நேசிக்க ஆரம்பித்து விட்டது போல. இல்லையென்றால்... ஏன் எனக்கு இப்படி திடீரென்று தோன்ற வேண்டும்?" என்று கேட்டான் அபி குழந்தைத்தனமாக முகத்தை வைத்தபடி.

ஹஹாவென்று சிரித்த தியாகு, "யப்பா... என்ன ரியாக்ஷன்டா காண்பிக்கிறாய் நீ..." என்றான் புன்னகையுடன்.

பின் சீரியசாகி, "ஓகே அபி! உனக்காக சித்தப்பா, சித்தியிடம் பேசி நான் சம்மதம் வாங்குகின்றேன். ஆனால் அவளுடையை குறை என்றும் அவளுக்கு பெரியதாக தெரியாமல் நீ தான் கவனித்து கொள்ள வேண்டும். அவள் எங்கள் குடும்பத்தின் உயிர்டா! இதுவரை அவளுக்கு ஒரு குறையுமில்லாமல் நாங்கள் பார்த்து கொண்டோம். இனி..." என்று அவன் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த, அவன் கரங்களை பற்றிக் கொண்ட அபி, "அவளை என் இமைக்குள் வைத்து காப்பேன்! கவலைக் கொள்ளாதே... என்றும் நீ வருந்தும் அளவுக்கு நான் நடந்து கொள்ள மாட்டேன்!" என்றான் தீர்மானமாக.

"தேங்க்ஸ்டா அபி!"என்று கண்கள் கலங்க அவனை கட்டிக் கொண்டான் தியாகு.

"ஹலோ சார்! ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆப் இண்டியா ஆக வேண்டாம். உன் தங்கையை சமாளிக்க வேண்டும் நினைவில் வைத்து கொள், அவள் என் மேல் ஏக காண்டாக இருக்கிறாள். நான் அவ்வளவு செய்திருக்கிறேன்!" என்றான் பெருமூச்சு விட்டபடி.

வாய் விட்டு சிரித்தவன், "கொஞ்சம் கஷ்டம் தான்... ஆனாலும் சமாளித்து விடுவேன். அதன்பிறகு அத்தனையும் உன்னிடம் தான் வந்து சேரும்!" என்று மிரட்டினான்.

"திருமணம் செய்வதென்று முடிவெடுத்தாகி விட்டது... பிறகு இதற்கெல்லாம் பயந்தால் வேலைக்காகுமா. சமாளிப்போம் இல்லை சரண்டர் ஆகி விடுவோம்!" என்று கண்ணடித்தான் அபி.

இரண்டு தினங்கள் கடந்த நிலையில், தியாகுவின் வீட்டிலிருந்தான் அபி.

"ஏன்டா என்னை இப்படி படுத்துகிறாய்? ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக காலையில் பத்து மணிக்கே ஒரு போன் கூட பண்ணாமல் திடுதிப்பென்று வந்து நின்று பாப்பா வீட்டுக்கு இப்பவே போயாக வேண்டுமென்று அடம்பிடித்தால் எப்படிடா? நான் இப்பொழுது தான் எழுந்தேன், அம்மாவும் ஊரில் இல்லை. நான் குளிக்க வேண்டும், சாப்பிட வேண்டும்!" என்று புலம்பி கொண்டிருந்தவனின் முதுகில் ஒன்று வைத்தான் அபி.

"யப்பா சாமி! போதும்டா நீ புலம்பியது... கிளம்புகின்ற வேலையைப் பாரு. போகின்ற வழியில் ஏதாவது ஹோட்டலில் நிறுத்தி உன்னை சாப்பிட வைத்து விட்டு தான் எனக்கு மறுவேலை ஓகே?" என்றவன், "ஆனால் ஏன்டா இந்த பாப்பாவை மட்டும் விட்டு தொலைய மாட்டேன் என்கிறாய்?" என்றான் அலுப்போடு.

"ஹிஹி... விடுடா... இத்தனை வருடமாக அப்படியே பழகி விட்டது. சரி... இப்பொழுது உன்னை எப்படி அங்கே அழைத்து போய் என்னவென்று அறிமுகப்படுத்துவது?" என்று இழுத்தபடி யோசனையில் ஆழ்ந்தான் தியாகு.

"டேய் அறிவுஜீவி... இல்லாத மூளையை தேடிக் கொண்டு நேரத்தை வீண் பண்ணாதே, நீ போய் குளித்து கிளம்புகின்ற வேலையைப் பார். அதையெல்லாம் நான் சமாளித்து கொள்கிறேன், உங்கள் வீட்டு அல்லி ராணியை ஃபேஸ் செய்வது வரை அனைத்து திட்டமும் தயாராக உள்ளது!" என்றான் அபி ஸ்டைலாக கால் மேல் கால் போட்டவாறு.

"ம்... ஒரு மார்க்கமாக தான்டா சுற்றிக் கொண்டிருக்கிறாய். ஜெட் வேகம் தான்!" என்று கேலி பேசியவனை கண்டு சிரித்தவன்,

"பின்னே உன் லட்சணத்தை தான் இரண்டு நாளாக பார்த்தேனே... நோ இம்ப்ரூவ்மென்ட்ஸ். அது தான் நானே அதிரடியாக களத்தில் இறங்கி விட்டேன், சரி சரி... போ போ... ஆகின்ற வேலையை பார்!" என்று அவனைத் துரத்தியவனை கண்டு சிரித்தபடி டவல் எடுத்து கொண்டு பாத்ரூமில் நுழைந்தான் தியாகு.

மூன்று நிமிடங்கள் சென்றிருக்கும், வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது.

யோசனையோடு வாசலையும், பாத்ரூமையும் மாற்றி மாற்றி திரும்பி பார்த்த அபி, தோள்களை குலுக்கி விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

முற்றிலும் எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சியாக, வாயிலில் அழகு தேவதையாக பிரக்யா நின்றிருந்தாள்.

தன் பெரியன்னையின் வீட்டில் அபியை சற்றும் எதிர்ப்பாராதவள் அதிர்ச்சியோடு விழிகள் விரிய நிற்க, மாறாக அபியோ அவளைப் பார்த்த உற்சாகத்தில் இதழ் குவித்து மெல்லியதாக விசிலடித்தான்.

அபியின் மெல்லிய விசில் சத்தம் பிரக்யாவை மீட்க அவனை லேசாக முறைத்தவள், அவன் தோளுக்கு மீறி விழிகளால் வீட்டின் உள்ளே தன் சொந்தங்களை தேடினாள்.

'இவன் எப்படி இங்கே? வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லையே...' என்று யோசனையுடன் நின்றாள்.

அபியோ நிதானமாக அவளின் முக அழகை அணுஅணுவாய் ரசித்து கொண்டிருந்தான்.

'என்ன இவன் நந்தி மாதிரி அசையாமல் வாசலில் குறுக்கே நிற்கின்றான்? ப்ச்... இந்த பெரியம்மா, அண்ணாவெல்லாம் எங்கே?' என்று சலித்தவள், தன் மொபைலை எடுத்து தியாகுவிற்கு ரிங் செய்தாள்.

வீட்டின் உள்ளே இருந்து ரிங்டோன் கேட்கவும், 'இந்த அண்ணா உள்ளே தான் இருக்கின்றானா? இந்த சிடுமூஞ்சியை வாசலில் நிற்க வைத்து விட்டு, இவன் உள்ளே என்ன செய்கிறான்?' என்று உள்ளம் கடுகடுத்தாள்.

பிரக்யாவின் முகத்தில் மாறி மாறி தோன்றும் பாவனைகளை ஆசையுடன் பருகியபடி, அபி சிலையாக நின்றான்.

'இந்த லூசு ஏன் இப்படி என்னையே பே என்று பார்த்தபடி இளித்துக் கொண்டு நிற்கிறது? ஒருவேளை அம்னீஷியாவாக இருக்குமோ... பழசையெல்லாம் மறந்து விட்டானா? ச்சை... எவ்வளவு நேரம் தான் இப்படி வாசலிலேயே அசிங்கமாக நின்று கொண்டிருப்பது? இவன் நிற்கின்ற அழகை பார்த்தால் இப்பொழுதைக்கு வழி விடுபவன் போல் தெரியவில்லை, பேசாமல் திரும்ப வீட்டிற்கு போய் விடலாம்!' என முடிவு செய்து திரும்பினாள்.

அப்பொழுது தான் சுய உணர்வுக்கு திரும்பியவன் வேகமாக அவள் கை பற்றி தடுத்தான், "ஏய்... தியாகு உள்ளே தான் குளித்து கொண்டு இருக்கின்றான் வா!" என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான்.

அவன் செயலில் திடுக்கிட்ட பிரக்யா, 'ஐயோ... இவன் என்ன இப்படி சட்டென்று என் கையை பிடித்து விட்டான்?' என்று அதிர்ந்தாள்.

"ம்... உட்கார்!" என்று சோபாவிடம் சென்றவனின் கரத்திலிருந்து வேகமாக தன் கையை உருவிக் கொண்டவள், அவனை உறுத்து விழித்தாள்.

அதுவரை தன் எண்ணப்போக்கில் உழன்று கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் அவளின் நிலைப் புரிந்தது.

மெல்ல இதழைக் கடித்தவன் அவளிடம் லேசாக அசடு வழிந்தான், "என்ன நீ எப்பொழுது பார் என்னை முறைத்துக் கொண்டே இருக்கிறாய்? இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை ஆமாம் சொல்லி விட்டேன்!" என்றான் அலட்டலாக.

'ஹையோ... எந்த நேரத்தில் என்ன செய்கிறான் என்று தெரியாத இந்த லூசிடம் என்னை தனியாக மாட்டி விட்டு, என் அண்ணன் லூசு எவ்வளவு நேரமாக தான் குளிப்பான்? இவன் என்னவோ இந்த வீட்டின் சொந்தக்காரன் போல் உரிமையுடன் சட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான்!' என்று பொறுமை இழந்து கொண்டிருந்தாள் அவள்.

"ஹேய் பாப்பா... நீயே வந்து விட்டாயா, சூப்பர்... சூப்பர், அங்கே நம் வீட்டிற்கு வருவதற்காக தான் நாங்கள் கிளம்பி கொண்டிருந்தோம்!" என்று பிரக்யாவை பார்த்து ஈயென்று இளித்தான் தியாகு.

பதிலுக்கு தன் அண்ணன் மீது அவள் தீப்பார்வையை வீச, 'ஐயோ... என்ன இது இவள் இப்படி முறைக்கின்றாள்? ஒருவேளை எல்லா உண்மையும் தெரிந்து விட்டதா...' என்று திரும்பி அபியை பார்த்தான்.

அவனோ கூலாக கால் மேல் கால் போட்டபடி வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு பிரக்யாவை விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்.

'அடப்பாவி... நல்ல்ல்லல பிரண்டு...? இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? இவன் என்னவெல்லாம் சொல்லியிருக்கின்றானோ தெரியவில்லையே...' என்று பெக்க பெக்க விழித்துக் கொண்டு நின்றான் தியாகு.

"அது வந்து... பாப்பா..." என்று அவன் ஆரம்பிக்க, தலையில் அடித்துக் கொண்டவள் அவன் ரூமை நோக்கி கை காட்டினாள்.

அப்பொழுது தான் வெறும் டவலோடு நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவன், "இதோ... ஒரே நிமிடத்தில் ட்ரெஸ் மாற்றி விட்டு வந்து விடுகிறேன்!" என்று உள்ளே ஓடினான்.

உஃப் என்றபடி தலையை அசைத்தவள், அபியிடம் திரும்பினாள். அதற்காகவே காத்திருந்தவன் போல் ஏதோ பேசுவதற்கு அவன் முன்னே நகர்ந்து அமர, அவனை அலட்சியப்படுத்தி விட்டு எழுந்து உள்ளே சென்றாள்.

'ம்... என்ன இவள் பாட்டுக்கு எழுந்து போய் விட்டாள், இப்பொழுது நான் அவள் பின்னால் போகவா? வேண்டாமா?' என்று அபி அவனுக்குள் பெரிய பட்டிமன்றத்தையே நடத்திக் கொண்டிருக்க, உடைமாற்றி வந்த தியாகு அபி தனித்திருப்பதை கண்டு வேகமாக அவனருகில் வந்தான்.

"அடேய் பாவி... அவளிடம் அப்படி எதைப் பற்றிடா பேசினாய் என்னைப் பார்த்து அந்த முறை முறைக்கின்றாள்? நான் தான் மெதுவாக விஷயத்தை சொல்கிறேன் என்று சொன்னேனில்லை..." என்று மெல்லிய குரலில் உள்ளே எட்டி பார்த்தபடி அவன் காதை கடித்தான்.

"ஹிஹி... மச்சான்! ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபார்மேஷன், நான் இன்னும் அவளிடம் மேட்டரை ஓப்பன் பண்ணவே இல்லை. அதற்குள்ளகாவே... அதாகப்பட்டது என்னை பார்த்தவுடனேயே சண்டி ராணிக்கு ஏகத்துக்கும் பிரஷர் அதிகமாகி விட்டது!" என்று கண்ணடித்து சிரித்தான் அபி.

"அட கடவுளே..." என்று தலையினில் கை வைத்துக் கொண்டவன், "எப்படிடா இந்த நிலையிலும் இப்படி கூலாக சிரித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று பரிதாபமாக வினவினான் தியாகு.

"அதற்காக... என்னை அழச் சொல்கிறாயா? துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்று திருவள்ளுவரே இதையெல்லாம் எதிர்பார்த்து தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருக்கிறார். ஆமாம்... அது திருவள்ளுவரா... இல்லை ஔவையாரா?" என வடிவேலு பாணியில் இவன் கேட்க, அவனோ அபி... என்று பல்லைக் கடித்தான்.

அதே நேரத்தில் கிச்சனிலிருந்து கரண்டியால் வேகமாக தட்டை தட்டும் ஒலி கேட்டது.

"ஐயோ... அவள் என்னை தான் கூப்பிடுகிறாள்!" என்றான் தியாகு பதட்டத்துடன்.

"தெரிகிறது... தெரிகிறது... போ!" என்றான் அபி அலட்சியமாக.

"இப்பொழுது அவளிடம் சென்று நான் என்ன பேசுவது... எப்படி சொல்வது?" என்று டென்ஷனில் விரல் நகம் கடித்தான்.

அவன் கரத்தை தட்டி விட்டவன், "நீ என்னவோ பேசு... எதை பற்றி வேண்டுமென்றாலும் சொல்லு, ஆனால் என் லவ்வை நான் தான் அவளிடம் நேரடியாக சொல்வேன்!" என்றான் அவனுடைய டீசர்ட் காலரை நீட்டாக எடுத்து விட்டபடி.

"இப்பொழுது அது ரொம்ம்பப முக்கியம்..." என்று அவன் கழுத்தை நொடித்தான்.

"பின்னே... லவ் ஈஸ் லைஃப்மா லைஃப்!" என்றான் அபி ஸ்டைலாக.

"ம்... இதோ இன்னும் பத்து நிமிடத்தில் உன் லைஃப்பை அனுப்பி வைக்கிறேன். அது வொய்ஃபா மாறுகிறதா இல்லை நைஃபா மாறுகிறதா என்பது அப்பொழுது தெரிந்து விடும்!" என்று நக்கலடித்து விட்டு சென்றான் தியாகு.

பிரக்யாவிடம் சென்ற தியாகு, "என்னம்மா?" என்று மெல்ல கேட்டான்.

அவனை நேராக நோக்கியவள், வெளியில் இருப்பவன் யார்? என சைகையில் கேட்டாள்.

"அவன் என் ஸ்கூல்மேட்மா... பெயர் அபிஷேக், கிட்டதட்ட டென் இயர்ஸ் ஒன்றாகப் படித்தோம் அதன்பிறகும் ரொம்ப டச்சிலேயே தான் இருக்கின்றோம். என்னுடைய க்ளோஸ் பெஸ்ட் பிரெண்ட், மிகவும் நல்லப் பையன்!" என்று ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தவனை, அவனைப் பற்றிய பெருமை போதும் நிறுத்து என்பது போல் வாயைப் பொத்திக் காண்பித்தாள்.

'சரி... சாப்பிட்டாயிற்றா?' என விரல்களில் அபிநயம் பிடித்தாள் பிரக்யா.

அவன் இல்லையென்று தலையாட்டவும், ஃபிரிட்ஜை திறந்து குடைந்தவள் இட்லி மாவையும், தேங்காயையும் வெளியே எடுத்தாள்.

ஒரு நொடி தயங்கியவள், 'வெளியில் இருக்கும் அந்த மகாராஜா எப்பொழுது கிளம்புவான் இல்லை அவனுக்கும் செய்ய வேண்டுமா?' என்றாள்.

'என்ன அபியை இந்த இறக்கு இறக்குகிறாள்?' என சிந்தித்தவன், "இல்லைம்மா... அவன் மதியத்துக்கு மேல் தான் கிளம்புவான், அவனுக்கும் சேர்த்து செய்து விடு!" என்று தியாகு கூற, அவள் விழிகள் இடுங்க அவனைப் பார்த்தாள்.

"என்னம்மா... வந்ததிலிருந்து அண்ணாவை ஒரு மாதிரியாகவே பார்க்கின்றாய்?" என்றான் குறையோடு.

லேசாக சிரித்தவள், 'நீ வீட்டிற்கு அழைத்து உட்கார வைத்திருக்கும் ஆள் அப்படி? அவன் காற்று வீசுகின்ற இடத்தில் இப்படி தான் இருக்க முடியும்!' என்று இதழ் வளைத்து பழிப்பு காண்பித்தாள்.

"சரி... அதெல்லாம் இருக்கட்டும், அவன் யார் தெரியுமா? உன்னிடம் அவனைப் பற்றி பல முறை சொல்லியிருக்கின்றேன்... கெஸ் பண்ணு!"

' அவனைப் பற்றியா?'என நெற்றிச் சுருக்கியவள், 'இதுவரை எந்த பிரெண்டை பற்றியும் அண்ணா கேவலமாக சொன்னதில்லையே... அப்பொழுது அவனைப் பற்றி கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டார்கள்!' என்று அசட்டையாக தோள்களை குலுக்கினாள்.

திகைத்தவன், "இல்லைம்மா... உன் படிப்பிற்கு கூட காரணமானவன், அப்புறம் அவன் கம்பெனியில் தான் உனக்கு வேலை..." என்று அவன் முடிக்கவில்லை, வேகமாக திரும்பியவள், 'உண்மையாகவா?' என்பது போல் தலையசைத்து வினவினாள்.

தியாகு ஆமோதிக்க, பிரக்யா வேக வேகமாக மேலே பார்த்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி கடவுளே... என கும்பிடு போட்டாள்.

'நல்லவேளை உன் மொக்கை ப்ரெண்டிடமிருந்து கடவுள் என்னை காப்பாற்றினார். இல்லை... காலம் முழுக்க அவன் ஆபிஸை கட்டிக் கொண்டு அழ வேண்டியதாய் போயிருக்கும்!' என்று அவனிடம் நாக்கை நீட்டி நக்கலாக சிரித்தாள்.

"என்ன பாப்பா நீ? அவனைப் பற்றி முழுவதும் தெரியாமல், இப்படி குறைவாக மதிப்பிடுகிறாய்... அபி எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்று அவளுக்கு அபியை புரிய வைக்க முயன்றான்.

'ஒன்றும் தெரிய வேண்டாம்... அவன் கடைந்தெடுத்த லூசு என்று எனக்கு ஆல்ரெடி தெரியும். நான் தான் அவன் நடவடிக்கைகளை ஒவ்வொரு முறையும் பார்க்கின்றேனே... எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று புரிந்துக் கொள்ள முடியாதவன். அவனுடைய அறிமுகமே எனக்குத் தேவையில்லை!' என்று கரங்களை ஆட்டியவளின் விழிகள் மெல்ல விரிந்தது.

தியாகுவின் பின் கரங்களைக் கட்டியபடி அபி நின்றிருந்தான்.

பிரக்யா தான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்குமா என்ற யோசனையில் தடுமாற, அபி நைஸாக தியாகுவை கிச்சனை விட்டு வெளியேற்றினான்.

அதைக் கவனித்தவள் வேகமாக அவனை பின் தொடர முயன்றாள், அவளை வெளியே செல்ல விடாமல் வழி மறித்து நின்றான் அபி.

முகம் சுளித்தவள், புருவம் நெறிய அவனை முறைத்துப் பார்த்தாள்.

"இதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசர மாட்டோம், நாங்கள் எல்லாம் பனங்காட்டு நரி தெரியுமல்லவா?" என்றான் அசட்டையாக.

ஹும்... என ஏளனமாக இதழை வளைத்தாள் பிரக்யா.

"ஆமாம்... ஏன் என்னை கண்டாலே அடுப்பில் வைத்த பாலாக பொங்கி கொண்டு திரிகிறாய்? நம் முதல் சந்திப்பில் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு காரணம் என்றால் அதை இப்பொழுது விளக்கமாக சொல்லி விடுகிறேன். அந்த பெரியவர் என்னிடம் ஒரு உதவி கேட்டு வந்தார், அவர் வந்தப்பொழுது அது தொடர்பான வேலைகள் முடியாததால் அடுத்து தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். வேலை முடிந்து தேடினால் அவரைப் பிடிக்க முடியவில்லை, கொடுத்திருந்த முகவரியிலும் இல்லாமல் வீட்டை காலி செய்து விட்டாராம். ப்ச்... ஒரு வயதானவருக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. அதனால் தான் அன்று அவரை சாலையில் கண்டதும் போன உயிர் திரும்பி வந்ததாக எண்ணி உன்னிடம் உதவி கேட்டேன். நீ செயல்படவில்லை என்றதும் கோபம் வந்தது, அது தான் அப்படி திட்டி விட்டேன். பிறகு ஆர்ட் எக்ஷிபிஸினில் தான் விவரம் தெரிந்தது, மன்னிப்பு கேட்க உன்னைத் தேடினால் நீ பறந்து விட்டாய்!" என்று விளக்கினான் அபி.

ஓ... என்று இழுத்தாள் பிரக்யா, அவளின் குவிந்த வடிவான இதழ்களின் மேல் அபியின் பார்வை விழுந்தது.

நிமிர்ந்தவள், அவன் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்து, 'என்ன?' என்று விழிகளாலேயே கேள்வி எழுப்பினாள்.

அவளை மெல்ல நெருங்கியவன் குனிந்து, "ஐ லவ் யூ!" என்றான் கண்ணோடு கண் பார்த்து.

'என்ன?' என்று தற்பொழுது இதழசைவில், தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியவள், விரைவாக அவனிடமிருந்து விலகி வெளியே செல்ல முயன்றாள்.

"வெயிட்... வெயிட்... பதில் சொல்லாமல் போனால் எப்படி?" என்று அவளைத் தடுத்தான் அபி.

எரிச்சலுடன் அவனைப் பார்த்தவள், 'உங்கள் விளையாட்டுக்கு ஆடும் பொம்மை நான் இல்லை...' என்று விழிகளை உருட்டி படபடவென்று தன் கரங்களை அசைத்தாள்.

சற்று யோசித்தவள், தன் மொபைலை எடுத்து தான் நினைத்ததை டைப் செய்து காண்பித்தாள்.

அதை வாங்கி அணைத்து அவள் கரங்களில் வைத்தவன், "எல்லாம் புரிகிறது, இதற்கு அவசியமில்லை. அதேபோல் உன்னை என் கைப்பாவையாகவும் இருக்க சொல்லவில்லை. அதெல்லாம் சுத்தப் போர்... நீ எப்பொழுதும் இதே மாதிரி என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக தான் உன்னை திருமணமே செய்து கொள்ள நினைக்கின்றேன், அப்பொழுது தான் லைஃப் செம இன்டிரெஸ்டிங்காக போகும்!" என்று கற்பனையில் விழிகள் மூடி சிலாகித்தான் அபி.

கடவுளே... என தலையிலடித்துக் கொண்டாள் பிரக்யா, "ஹேய்... உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? என் அமரக் காதலை கேட்டு தலையிலடித்துக் கொள்கிறாய்!" என்று இடையில் கை வைத்து பொய்யாய் முறைத்தான்.

அவளையுமறியாமல் இதழ்கள் புன்னகையில் மலரத் துடிக்க, அதை அடக்கியதால் அவளின் கன்னம் சிவந்ததை கண்டும் காணாமல் கண்டான் அபி.

"ஆங்... அப்புறம் என்னால் பேச முடியாது அது இது என்று என்னிடம் பரிதாபத்தை எதிர்பார்க்காதே... இத்தனை திறமைகளை வைத்துக் கொண்டு நீ திமிராக நடந்து கொள்வது பிடித்திருப்பதால் தான் உன் மேல் எனக்கு காதலே வந்தது..." என அவன் பேசிக் கொண்டிருக்க, அவனுடைய மொபைல் ராகம் பாடியது.

அதுவும் எப்படி?

"கண்ணால் பேசும் பெண்ணே... என்னை மன்னிப்பாயா?
கவிதை தமிழில் கேட்டேன்...
என்னை மன்னிப்பாயா?"

'அடப்பாவி...! என்னமாய் சீன் போடுகிறான்?' என்று பிரக்யா, அவனை லேசாக கண்கள் சுருக்கி பார்க்க.

"ஹிஹி..." என்று வழிந்தவன், "அது ஒன்றுமில்லை... என்னிடம் சண்டைப் போட்டு முறைத்துக் கொண்டே சுற்றுவாய் அல்லவா? அதனால் தான் இந்த பாட்டு!" என்று சமாளித்தான்.

ஓஹோ... என்றவள் அப்புறம் என்று கைகளை விரித்து காண்பிக்க, "அடுத்த சிட்சுவேசன் சாங் கூட ரெடி... இப்பொழுது மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லு, ரிங் டோனை மாற்றி விடுகிறேன்!" என்றான் வேகமாக.

அவன் சாதுர்யத்தை எண்ணி வெளிப்படையாகவே சிரித்தவள், தலையசைத்தபடி நகர்ந்தாள்.

"இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?" என்றான் அபி முன்னே வந்து.

ஹும்... என்று நக்கலாய் இதழ் கடித்து பார்த்தவள், 'கண்களால் பேசினாலே புரியுமில்லையா? பிறகு ஏன் என்னை கேட்கின்றீர்கள்?' என்று சைகையில் கேட்டு தோள்களை குலுக்கினாள்.

"புரிகிறது தான்... இருந்தாலும்..." என்று இழுத்தவன், "உன் சிரிப்பில் கொஞ்சம் நக்கல் தெரிகிறதே... என்னை வைத்து காமெடி, கீமடி பண்ணவில்லையே?" என்று சந்தேகமாக வினவினான்.

அபியின் பாவனையில் மீண்டும் சிரிப்பு பீறிட, திரும்பி நின்று கொண்டாள் பிரக்யா.

அவளை பின்னிருந்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், "இன்னும் ஒத்துக் கொள்ள மனம் வரவில்லையா?" என்றான் அவளிடம் குனிந்து.

முகம் சிவக்க விழிகளை தாழ்த்தினாள் அவள், "ப்ளீஸ்..." என்று தன் விரல் கொண்டு நிமிர்த்தினான் அவன்.

ஒரு கணம் அவன் விழிகளை நோக்கி விட்டு மின்னலென பார்வையை விலக்கி கொண்டவள், சம்மதமாக தலையசைத்தாள்.

"ஹுர்ரே..." என்று சந்தோசத்தில் கத்தியவன் ஆவலுடன் அவள் முகம் நோக்கி குனிய, அவன் குரலில் தெரிந்த உற்சாகத்தை கேட்டு ஆர்வத்தை அடக்க முடியாமல் அங்கே பிரசன்னமானான் தியாகு.

"ஏய்... என்னடா பாப்பா சம்மதித்து விட்டாளா?"

"ஷ்... அப்பா... கொஞ்சமாவது டீசன்ஸி இருக்காடா உனக்கு? இரண்டு லவர்ஸ் தனியாக பேசிக் கொண்டிருக்கின்ற இடத்திற்கு இப்படி தான் வருவாயா?" என்று தியாகுவை முறைத்தான் அபி.

"அடேய் பிராடு... உன் தங்கை காலில் விழுவாயோ இல்லை யார் காலில் விழுவாயோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, இன்னும் ஒரே மாதத்தில் அவள் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று சேர்த்து வைக்க சொல்லி விட்டு இப்பொழுது என்னை விரட்டுகின்றாயா?"

அதைக் கேட்டு பிரக்யாவின் முகம் மலர, அபியை விழியினாலேயே கபளீகரம் செய்தாள். அவனோ அவளைப் பார்த்து புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

"பாப்பா... நீயுமா? அண்ணா பேசுவது உன் காதிலேயே விழவில்லை போலிருக்கிறதே?" என்று புலம்பினான் தியாகு.

"அது தான் தெரிகிறது இல்லை... இடத்தை காலி பண்ணு காற்று வரட்டும்!" என்று கைகளால் விசிறினான் அபி.

'இத்தனை தூரம் வளர்ந்ததுக்கு நீ தான் காரணம், உன்னை யார் இவரிடம் என்னை தனியே விட்டு விட்டு போக சொன்னார்கள்? இதற்கு நான் பொறுப்பில்லை!' என்று தோள்களை குலுக்கினாள்.

"ஹும்... சரி சும்மா இருப்பதற்கு அட்லீஸ்ட் பெரியவர்களிடம் விவரத்தை தெரிவிக்கின்ற வேலையையாவது பார்க்கின்றேன்!" என்று அலுத்தபடி சென்றான்.

"ஹேய்... தாங்க்ஸ்டா மச்சான்!" என்று தியாகுவை கட்டிக் கொண்ட அபி, "அப்படியே இந்த வாரத்தில் நல்ல முகூர்த்தம் இருக்கின்றதா என்று பார்க்க சொல்லு!" என்று பல்லைக் காட்டினான்.

"டேய்... இப்படி கேட்க கொஞ்சம் கூட கூசவில்லையா உனக்கு?" என கேட்டான் தியாகு.

"ம்... என் பெண்டாட்டியை திருமணம் செய்து கொள்ள, நான் ஏன்டா கூச்சப்பட வேண்டும்?" என்று சீரியஸாக எதிர்கேள்வி கேட்டான்.

பிரக்யா தலைக்கு மேல் கும்பிட்டு, 'இதற்கு மேல் மானத்தை வாங்காதே போ...' என்று அவனை அனுப்பி வைத்தாள்.

வேகமாக அவளை அருகில் இழுத்த அபி, "இதற்காக தானே அவனை அனுப்பினாய்?" என்று ஆவலுடன் குனிய, நறுக்கென்று அவன் கைகளில் கிள்ளினாள் பிரக்யா.

"ஏய்... ஏன்டி கிள்ளுகிறாய்?" என்று அலறிய அபியின் வாயைப் பொத்தியவள், 'கொன்று விடுவேன்!' என விழிகளாலேயே மிரட்டினாள்.

"ஓவராக தான் மிரட்டுகிறாய்!" என்று முறைத்தவனை, 'உங்களுக்கு சண்டைப் போட்டால் தானே பிடிக்கும்!' என்று சிரித்து சமாளித்தாள்.

பிறகு அவன் வாட்சை நோண்டியவள், அது என்ன பாட்டு என்று மெல்ல விசாரித்தாள். ஏதுமறியா பிள்ளைப் போல் புரியாத பாவனையை வெளிப்படுத்தியவனை கண்டு கோபமடைந்தவள், அவனை விட்டு விலக முயல, அவளை தன் கைப்பிடியிலேயே நிறுத்தியவன் அவளின் மொபைலில் தன் நம்பரை டைப் செய்து கால் பட்டனை அழுத்தினான்.

"கண்கள் இரண்டால்...
உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்... போதாதென்று...
சின்ன சிரிப்பில்...
உன் கள்ளச்சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு..."

என பாட, எப்படி? என்று ஸ்டைலாக புருவம் உயர்த்தி அபி விசாரிக்க, பதிலுக்கு செம என இதழசைத்து கண்களால் புன்னகைத்தாள் பிரக்யா.

** END**


2 comments:

Most Popular