Menu

Search This Blog

Theeyumillai Pugaiyumillai 17 – Deepababu


*17*


"இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா?" என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள்.

'சுவாஹனா...!' என வியப்புடன் வைபவ் அவளை நோக்க, கிருஷ்ஷோ கொதிநிலையில் இருந்தான்.

அப்பொழுது தான் வைபவை கவனித்தவள், "ஹாய்! நீங்கள் எங்கே இங்கே?" என்றாள் ஆச்சரியமாக.

"நீ ஆச்சரியப்படுறதெல்லாம் இருக்கட்டும்... என்ன நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை இப்படி தொபுக்கடீர் என்று சர்ப்ரைஸ் ஷாக்கிங் கடலில் தூக்கி போட்டு விட்டீர்கள்?" என கேலியாக வினவினான்.

"அது..." என்று அவள் தயங்க, கிருஷ் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

"திருமணமாகி எத்தனை நாட்கள் ஆகிறது?"

"ஒரு மாதம், பெரியவர்கள் ஏற்பாடு செய்த அரேன்ஜ்ட் மேரேஜ் தான்!" என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

"ஓ! குட்... குட்... உனக்கேற்ற பொருத்தமான ஜோடி இவள் தான் என்று நான் கூட தலைவரிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். இவன் தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என முறுக்கி கொண்டு திரிந்தான், இறுதியில் மாட்ட வேண்டிய இடத்திலேயே மாட்டிவிட்டாயா..." என்று வைபவ் கேலி செய்து சிரிக்க அதற்குள் அவனுடைய மொபைல் கூவியது.

எடுத்துப் பார்த்தவன், "ஓகேமா... இன்னொரு நாள் நிதானமாக பார்க்கலாம் அஃபிஷியலாக வந்தேன். உன் புது நம்பரை கொடு!" என கிருஷிடம் கேட்டு வாங்கி கொண்டவன் அவர்களிடம் கையசைத்து விடைப்பெற்று சென்றான்.

"சரி... கால் வலிக்க சுற்றியதில் எனக்கு பயங்கரமாக பசி வந்து விட்டது. நாம் சாப்பிடப் போகலாமா?" என வினவினாள் சுஹா.

ம்... என்ற ஒற்றை சொல்லுடன் லிஃப்ட் நோக்கி நடந்தான் கிருஷ்.

வார விடுமுறை என்பதால் லிஃப்டில் ஏகத்திற்கும் கூட்டம் இருக்க, முண்டியடித்துக் கொண்டு தான் அவர்கள் ஏற வேண்டியிருந்தது.

நெரிசலை பயன்படுத்திக் கொண்ட கயவன் ஒருவன், சுஹாவின் இடையை மெல்ல தடவினான்.

குர்தியின் மேல் தான் என்றாலும் அந்நியன் ஒருவனின் கரம் தன் மேல் பட்டதால் அருவருப்பில் முகத்தை சுளித்தவள் திரும்பி பார்த்தால், பொறுக்கி கணக்காக அடிக்கின்ற கலரில் உடையணிந்திருந்தவன் அருகில் நின்றபடி அவளைப் பார்த்து பல்லை இளித்தான்.

எரித்து விடுவதைப் போல் அவனை உறுத்துப் பார்த்தவள் ச்சை... என்று மனதினுள் காறி உமிழ்ந்து விட்டு, கிருஷின் கரத்தில் தன் கரத்தை கோர்த்தபடி அவனோடு ஒட்டி நின்றாள்.

அடுத்த நொடி சுஹாவின் கரத்தை வெடுக்கென்று பிய்த்து எறிந்த கிருஷ், "இந்த உரசுகிற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே... மரியாதையாக தள்ளி நில்!" என்று அடிக்குரலில் சீறினான்.

அவன் பேசியது மெதுவாக தான் என்றாலும் சுற்றிலும் அருகிலிருந்த நான்கைந்து நபர்களின் காதுகளில் அது விழுந்து விட அவர்கள் இவர்களை திரும்பி விநோதமாக பார்த்தனர். சுவாஹனா அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள்.

கிருஷின் செயலை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை, பற்றாக்குறைக்கு அந்த பொறுக்கியின் கேவலமான சிரிப்பு அந்த இடத்திலேயே தான் உயிரோடு புதைந்துப் போய்விட மாட்டோமா என அவளைப் பதற வைத்தது.

தன் மெல்லிய விரல்களை உள்ளங்கையில் நகக்கண் அழுந்தும் அளவிற்கு அழுத்தி, கீழ் உதட்டை பற்களால் கடித்துப் பொங்குகின்ற உணர்வை கட்டுப்படுத்தியவள் விழிநீரை வெளியே விடாமல் தலைக்குனிந்தபடி மறைத்து நின்றாள்.

லிஃப்ட் தளத்தில் நின்றதும் இறுகிய முகத்துடன் கிருஷ் விரைந்து வெளியேற, சுஹா மறுபுறம் வேகமாக எஸ்கலேட்டரை நோக்கி ஓடினாள்.

மடமடவென்று இரண்டு மாடிகளையும் கடந்து சாலைக்கு ஓடியவள் அங்கே வழியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி முகவரியை சொல்லி விட்டு ஏறி அமர்ந்தாள்.

தன் பின்னால் கிருஷ் வருகின்றானா... இல்லையா என்றெல்லாம் அவள் திரும்பி பார்க்கவேயில்லை. அவளுடைய தேகமும், நெஞ்சமும் ஒரு சேரப் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.

'எத்தனைப் பெரிய அவமானம்? ஐயோ... இதெல்லாம் எனக்கு தேவையா? எப்படிப்பட்ட இடத்தில் அனைவர் முன்னும் எவ்வளவு மதிப்புடன் வளர்ந்தவள் நான்?' என வழியெங்கும் துடிதுடித்தபடி வீட்டை சென்றடைந்தாள் அவள்.

நேராக தன்னறைக்கு ஓடியவள் பிரேக் போட்டது போல் டக்கென்று நின்றாள், 'நோ... இது அவன் பயன்படுத்தும் அறை, இது எனக்கு வேண்டாம். நான் அவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன், ராஸ்கல்... என்னை எப்படி அவமானப்படுத்தி விட்டான்?' என ஆக்ரோஷத்துடன் அவன் அறைக்கதவை ஓங்கி குத்தியவள் வேறு ஒரு அறைக்குள் ஓடி கதவைத் தாளிட்டு கொண்டாள்.

கதவின் பின்னே சரிந்து அமர்ந்தவள் தனக்கேற்பட்ட அவமானத்தை எண்ணி கதறி அழ ஆரம்பித்தாள்.

மூன்றாவது மாடியில் இருந்த ஃபுட் கோர்ட்டை அடைந்த கிருஷ், அப்பொழுது தான் எரிச்சலுடன் பின்னால் திரும்பி பார்த்தான். அங்கே சுஹாவை காணாமல் ஒரு கணம் திகைத்தவன் சுற்றும்முற்றும் தேடிப் பார்த்தான்.

அங்கே அவள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருக்கவும், ஒவ்வொரு மாடியாக கடுப்புடன் தேட ஆரம்பித்தான்.

'எங்கே போய் தொலைந்தாள் இவள்? சாப்பிட வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டு எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாள்? இந்த அழகில் லிஃப்டில் என்னை உரசுகிறாள் வேறு... ச்சே... அந்த வைபவ் முன்னால் என்னை தலைநிமிர முடியாமல் செய்து விட்டாளே...' என கொதித்தவன் சோர்வாக நெற்றியை தேய்த்தபடி சுஹாவின் நம்பருக்கு டயல் செய்தான்.

அவளுடைய மொபைல் நம்பர் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வரவும் குழம்பியவன் சார்ஜ் கூட போட்டு வைக்காமல் பிசாசு என்ன செய்து கொண்டிருந்ததோ தெரியவில்லையே என சரமாறியாக அவளை மனதில் அர்ச்சிக்க ஆரம்பித்தான்.

சலிப்புடன் ஒரு பத்து நிமிடம் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்திருந்தவன் மனம் கேட்காமல் மீண்டும் சுஹாவின் நம்பருக்கு முயற்சித்தபடியே மால் முழுவதும் இண்டு இடுக்கு விடாமல் அவளை தேட ஆரம்பித்தான்.

பாவம்... அவனுக்கெப்படி தெரியும் தன் துணைவி வீட்டிற்கு சென்று விட்டாள் என்று?

ரெஸ்ட் ரூம் ஏதும் சென்றிருப்பாளோ என்று அந்த புறமாக சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்தான். அங்கே உள்ளவர்கள் அவனை விநோதமாகப் பார்க்க ஆரம்பிக்கவும், முகம் சிவந்தவன் தன்னை இந்த நிலையில் நிறுத்தி விட்டாளே என்று அதற்கும் அவளைச் சாடினான்.

ஒரு மணி நேரமாக கீழே மேலே என பசியுடன் அலைந்ததில், அவனுடைய உடல் மிகவும் சோர்ந்துப் போனது. சுஹாவை விட்டுவிட்டு தான் மட்டும் எதுவும் குடிக்கவும், சாப்பிடவும் அவனுக்கு மனம் வரவில்லை. என்று அவளுடைய அம்மா அவள் தனியே சரியாக உணவருந்த மாட்டாள் என சொன்னாரே, அன்றிலிருந்து பிடிக்கிறதோ இல்லையோ வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளுடன் தான் உணவருந்துவான் கிருஷ்.

செய்வதறியாது அப்படியே நின்றிருந்தவனின் உடல் மிகவும் தளர்ந்துப் போனதால் அது மனதையும் பலவீனமாக்க துவங்கியது. அவ்வளவு நேரமாக தேடியும் சுஹா கிடைக்காததால் அவள் ஏதாவது ஆபத்தில் சிக்கியிருப்பாளோ என பதட்டமானான் கிருஷ்.

தாயை தொலைத்த சேயாக கிடந்து தவிக்க ஆரம்பித்தான் அவன்.

'கடவுளே... எங்கேயிருக்கிறாள் அவள்? அவளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் நீதான் அவளை என் கண்களில் காட்ட வேண்டும் ப்ளீஸ்...' என்றவனுடைய உடல் டென்ஷனில் நடுங்க ஆரம்பித்தது.

கைகளில் இருந்த மொபைல் ஒலி எழுப்பவும் சுஹாவாக இருக்குமோ என்று ஆவலுடன் வேகமாக டிஸ்ப்ளேவை ஓப்பன் செய்தால் அவளுடைய தந்தை அழைத்திருந்தார்.

ஏமாற்றத்தில் துக்கம் தொண்டையை அடைக்க போனை ஆன் செய்தவன், "ஹலோ!" என்றான் மெல்ல.

"மாப்பிள்ளை! நான் தான் கேசவன் பேசுகிறேன். எப்படி இருக்கிறீர்கள்? சுஹா நன்றாக இருக்கிறாளா? சன்டே ஆனால் காலையிலேயே போன் செய்து என்னை ஒரு அதட்டு அதட்டுவாள். இன்று இன்னும் பேசவில்லையே... வெளியில் எதுவும் இருக்கிறீர்களா என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஆ... ஆமாம் மாமா ஷாப்பிங் வந்தோம்!" என்றான் தயக்கத்துடன்.

"ஓ... அப்படியா சரி சரி நீங்கள் பாருங்கள் நான் அவளிடம் இரவு பேசிக் கொள்கிறேன்!" என்று அவர் லைனை கட் செய்ய முயல, "மாமா... மாமா..." என்று வேகமாக அழைத்து அவரை தடுத்தான் கிருஷ்.

"என்னப்பா சொல்லுங்கள்?" என்றார் குழப்பத்துடன்.

அவனுக்கும் இப்பொழுது அவரை விட்டால் ஆறுதலுக்கு வேறு யாரும் உடன் இல்லை சதாவும் வெளியூர் சென்று விட்டார்.

"மாமா ஒரு மணி நேரமாக சுவாஹனாவை காணவில்லை, நான் மால் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை? எனக்கு ரொம்ப பயமாக இருக்கின்றது!" என்றான் குரல் நடுங்க, விழிகளும் இதோ கலங்கி விடுவேன் என தயாராக இருந்தது.

"ஐயோ... என்ன?" என்று பதறியவர், "கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்?" என அவனை துரிதப்படுத்தினார்.

நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறியவன் தவித்தபடி லைனில் காத்திருக்க, அவன் இதயத் துடிப்பை எகிற வைத்தபடி சில நொடிகளை அமைதியில் கழித்தார் அவனின் மாமனார்.

"மாப்பிள்ளை! தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். முறைப்படி இதை நான் உங்களிடம் கேட்க கூடாது தான், ஆனால் வேறு வழியில்லை..." என்று அவர் சொல்லும் பொழுதே இடைமறித்தவன், "ப்ளீஸ் மாமா... நமக்குள் இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுவும் வேண்டாம். நீங்கள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் திட்டக் கூட செய்யுங்கள். ஆனால் எனக்கு சுஹா வேண்டும்!" என்றான் கிருஷ் வேதனையோடு.

தன் மகளை எண்ணி கவலைக் கொள்வதா? இல்லை மருமகனை எண்ணி பெருமைக் கொள்வதா? என்று விசனப்பட்டவர், "உங்களுக்கும் சுஹாவுக்கும் ஷாப்பிங்கின் பொழுது எதுவும் மனஸ்தாபம் ஏற்பட்டதா? இல்லை... நீங்கள் எதுவும் அவளை சத்தம் போட்டீர்களா?" என சங்கடத்துடன் வினவினார்.

புருவம் சுருக்கியவன், "ஆமாம்... நான் சற்று கோபமாக இருந்ததால் அவளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொண்டேன்!" என்றான் தயக்கத்துடன்.

சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவர், "அப்பொழுது அவள் கண்டிப்பாக வீட்டில் தான் இருப்பாள். நீங்கள் முதலில் நேராக வீட்டிற்கு சென்று பாருங்கள்!" என்றார்.

"என்ன நிஜமாகவா? உண்மையாக சுஹா வீட்டில் தான் இருப்பாளா?" என்று மிகவும் எதிர்பார்ப்புடன் உற்சாகமாக கேட்டான் கிருஷ்.

"ஆமாம்... கண்டிப்பாக அவள் வீட்டில் தான் இருப்பாள். அப்புறம் இன்னொன்று... தற்பொழுது அவளுடைய கோபம் முழுக்க உங்கள் மீது தான் என்பதால் நிச்சயமாக உங்கள் அறையில் இருக்க மாட்டாள். வேறு ஏதாவது அறையில் தான் இருப்பாள், உங்கள் அறையில் காணவில்லை என்றதும் பயந்து விடாதீர்கள். அவள் மிகவும் ரோஷக்காரி கொஞ்சம் பிடிவாதமும் ஜாஸ்தி, சிறு வயதில் இரண்டு முறை இப்படி நடந்திருக்கிறது. பிறகு இது மாதிரி எந்த பிரச்சினையும் வந்ததில்லை, அதற்கான சூழ்நிலைகளும் அமையவில்லை. பட்... இப்பொழுது உங்களின் சொல்லை ஏதேனும் சென்ஸிடிவ்வாக எடுத்து அப்செட் ஆகி இருப்பாள் என்று நினைக்கிறேன்!" என்றார் கேசவன் விளக்கமாக.

"என்னை மன்னித்து விடுங்கள் மாமா... இது மாதிரி எதுவும் விபரீதம் நிகழும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை!" என்றான் தொண்டையை அடைக்க உண்மையான வருத்ததோடு.

"சரி விடுங்கள், இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். நீங்கள் பார்த்து டென்ஷன் எதுவும் இல்லாமல் வீட்டிற்கு கவனமாக செல்லுங்கள். அவளைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு போன் செய்து விடுங்கள், கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருக்கும்!" என்று வேண்டினார் கேசவன்.

"ஐயோ... கண்டிப்பாக மாமா, அவளைப் பார்த்தவுடனேயே போன் செய்து விடுகிறேன்!" என்று லைனை துண்டித்தவன், வில்லில் இருந்து புறப்படும் அம்பென காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி காற்றென பறந்தான்.

No comments:

Post a Comment

Most Popular