Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 5





*5*


அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் சற்று மட்டுப்பட்டது.

வெள்ளியில் ஆன மெட்டியை அவளது பாதம் பிடித்து விரல்களில் அவன் போட்டுவிட, அதனைத் தான் அவனே காலில் விழுந்தது போன்றெண்ணி சற்று உவகை கொண்டாள் குந்தவை. எப்பொழுதும் உம்மென்று மனதில் கோபத்தை தீட்டி வளர்ப்பதிலும் மனம் வெகுவாய் சோர்ந்து போயிருந்தது. சோர்ந்த மனதிற்கு சற்று தெம்பேற்றும் விதமாய் அவன் மெட்டி போட்டுவிடுவதையே மனதிற்குள் கேலியாய் உருவகித்துக் கொண்டவள் முகமும் சற்று தெளிந்து விரிய, எழுந்த தச்சன் அவளை நேராய் பார்த்து கேலிப் புன்னகையுடன்,

“நானே உன் காலில் விழுந்த மாதிரி சந்தோசமா இருக்குமே…” என்று சரியாய் கணித்துக் கூற,

“ஆமாம். இப்போ சம்பிரதாயத்திற்காக விழுந்த, கூடிய சீக்கிரம் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தது தப்புனு விழுவ,” என்றாள் அவளும் திமிராய்.

ஓசையின்றி நகைத்தவன் அவள் தோள் உரசி நின்றுகொண்டு யாரும் அறியா வண்ணம் அவள் புறம் சாய்ந்து, “நல்லா கனவு காணுற. கோபம் எல்லாம் போயிடுச்சோ… மரியாதை அதிகமாகிடுச்சே?” அவளது ஒருமை விளிப்பை கேலி பேசியவன் எதிரே வந்தவர்களை பார்த்து முறுவல் உதிர்த்து இயல்புநிலையை காக்கவும் தவறவில்லை. கோபத்தில் தான் அவனை ஒருமையில் அழைக்கிறோம் என்கிறதே அவன் சொல்லித்தான் கவனித்தாள் குந்தவை. உணர்ந்த பின் அவள் பதிலின்றி மெளனத்தை கடைபிடிக்க, தீவிரமானவன்,

“ஏதோ ஒருவகையில் திருமணம் வேண்டுமென்றால் உன்னை நிர்பந்தித்து நடந்திருக்கும். ஆனால் என்னை பிடிச்சிருக்குனு சொல்லி பரிசம் போட்டது எல்லாம் உன்னோட விருப்பத்தின் பேரில் தான். அதில் நான் எதுவுமே செய்யல. பரிசம் போட்டதிலேயே நீ எனக்கானவள் என்பது முடிவாகிடுச்சு. என்னுடையதை நான் மிஸ் பண்ணிடாம தக்கவச்சிகிட்டேன் அவ்வளவு தான்.” என்று தச்சன் தோள்களை குலுக்கிக்கொள்ள, தன்னுடைய குமுறல் இன்னும் அவனுக்கு புரியவில்லை என்று தான் தோன்றியது குந்தவைக்கு. தச்சனுக்கோ அப்படி என்ன வறட்டு வீம்பு அவளுக்கு என்ற எண்ணம்.

பிடித்திருந்தால் வாழ்ந்துவிட முடியாதா என்று அவன் நினைக்க, பிடித்தம் ஒன்று மட்டும் வாழ்க்கைக்கு எப்படி போதும் என்று நினைத்திருந்தாள் அவள். அந்த நினைப்பைத் தான் துவக்கம் முதலே செயலாய் வெளிப்படுத்தினர் இருவருமே.

அதற்கு மேல் அவர்களை சிந்திக்க விடாமல் வானதியின் பிள்ளைகள் இருவர் காலடியிலும் நின்று அவர்களின் கவனத்தை இழுக்க, இம்முறை அறிவழகியை தூக்கி வைத்துக்கொண்டான் தச்சன். உடுத்தியிருந்த பட்டுப்பாவாடை சட்டை ஒருபுறம் அறிவழகியின் தளிர் சருமத்தை உறுத்த, தச்சனின் கழுத்தில் இருந்த மாலை ஒருபுறம் என எரிச்சல் தாளாது வீலென்று அழத்துவங்கினாள் அவள். வானதி வேகமாக ஓடிவந்து அவளை தூக்கிக்கொள்ள, தூரத்தில் இருந்த நீலாவின் முகம் சுருங்கியது.

அருகில் இருந்த மகளிடம், “இந்த பொண்ணு ஏன் பிள்ளைங்களை சபையில் விட்டு அங்குமிங்கும் உலாத்திட்டு இருக்கு. தாலியிறங்கி ஒரு வருடம்கூட முடியாத இந்த பொண்ணு மணவறையில் ஏறுவதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“அம்மா என்ன இப்படி பேசுற?” என்று திவ்யா அதிர்வுடன் அன்னையின் புறம் திரும்ப,

“ப்ச்... உன் அண்ணன் சரியில்லைடி. இப்போவே அவங்களுக்கு நிறைய இடம் கொடுக்குறான். நீ சூதானமா இருந்துக்கோ.” என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டுவிட்டு நீலா உறவினர்களை கவனிக்கச் சென்றுவிட, திவ்யாவின் பார்வை எடைபோடும் விதமாய் தன் அண்ணனின் மீதும் குந்தவையின் மீதும் படிந்தது. புன்னகை முகமாய் தச்சன் இடைவிடாது அவ்வப்போது குந்தவையிடம் ஏதோ பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்க, குந்தவையின் முகத்திலிருந்து எதையும் யூகிக்கமுடியவில்லை.

‘அம்மா ஏதோ உளறிட்டு போறாங்க… அண்ணியோட அக்காக்கு நம்ம வயசு தான் இருக்கும், ஏதோ இந்த குழந்தைங்க ஓரிடத்தில் நிற்காமல் ஓடிட்டே இருக்கும் போது அவங்க அமைதியா எப்படி இருக்க முடியும்? அண்ணனுக்கும் இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு அப்படி இப்படின்னு கொஞ்சம் நெருக்கமாத் தான் இருப்பாங்க, அம்மா புரியாம அந்த காலத்திலேயே இருக்காங்க.’ என்று நினைத்துகொண்டு திவ்யா நகர்ந்துவிட்டாள்.

மகள் மட்டும் பிறந்த வீட்டை, உடன்பிறந்தவனை கெட்டியாக கைக்குள் பிடித்துவைத்து தன் உறவுகளுடன் பிணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மருமகள் அதைச் செய்தால் குற்றம் என்ற சராசரி மாமியாராக அவரையே அறியாமல் நீலா மாறிக் கொண்டிருக்க, மங்களம் அனைத்தையும் அமைதியுடன் கவனித்துக் கொண்டிருந்தார். அவரும் அந்த நிலையை கடந்து வந்தவர் தானே அதனால் அவருக்கு நீலாவின் போக்கு உடனே பிடிபட்டுவிட்டது.

தொடர்ந்து திருமணத்திற்கு பின்னான சடங்குகள் சூழ்ந்துகொள்ள, வந்திருந்தவர்களின் வாழ்த்தை பெற்று இன்முகமாக புகைப்படத்திற்கும் நடித்து என புது தம்பதிகளுக்கு மூச்சுவிட நேரம் கிடைத்ததே திரும்ப தச்சனின் வீட்டிற்கு கிளம்பிய பின்தான்.

அழுவாள் என்று எதிர்பார்த்திருக்க, அனைவரின் எண்ணத்திற்கு மாறாக அழுத்தமாக கிளம்பினாள் குந்தவை.

“உங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன். இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்று ஒட்டாத தன்மையுடன் தந்தையிடம் விளித்துவிட்டு, சுமதியிடம் சிறு தலையசைப்பு மட்டுமே. துவக்கத்தில் தனக்கு ஆதரவாக பேசியவர் இடையினில் ஏனோ தந்தையுடன் சேர்ந்து வார்த்தைகளின்றி தன்னை கட்டாயப்படுத்தியது போலத் தோன்ற அவரிடமும் பேச்சை குறைத்தாள். வானதி கையை பிடித்து விடுவித்து ஒன்றிரண்டு தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை மட்டும் பேசியவள் குழந்தைகளை பார்த்ததும் கண் கலங்கிவிட்டாள். பிறந்ததிலிருந்து அருகினிலேயே அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்திருக்க, பிரிவது சிரமமாய் இருந்தது.

‛கூடிய சீக்கிரம் நீயும் ஒரு பிள்ளையை பெத்துக்க. இந்த ஏக்கம் எல்லாம் போயிடும்.’ என்ற குரல் கூட கூட்டத்ததில் எங்கிருந்தோ கேட்டது. அதை அலட்சியம் செய்துவிட்டு இருபிள்ளைகளையும் தூக்கி கொஞ்சி முத்தம் வைத்துவிட்டே விடைபெற்றாள் குந்தவை. அவ்வளவு தான் அவள் அங்கிருந்து கிளம்பிய படலம்.

விருப்பத்திற்கு மாறாய் நிர்பந்தித்து திருமணம் செய்ததில் தச்சனின் பங்கு பாதி என்றால் மீதி அவள் குடும்பத்தினரது தானே... அவர்கள் மட்டும் இவளின் விருப்பிற்கு மதிப்பு கொடுத்திருந்தால் தச்சனாவது எவனாவது என்று எவரையும் தூக்கி போட்டிருக்க மாட்டாள்? என்ற கோபம் அழுத்தமாய் மாறியிருக்க பெரிதாய் செல்லம் கொஞ்சிக்கொண்டு கிளம்பவில்லை குந்தவை. கோபம் மொத்தமும் இருபக்கமும் சரிசமமாய் இருக்க, இருந்த வருத்தம், துக்கம், கோபம் என அனைத்தையும் அடைத்து மனதில் பூட்டிவைத்து அதை கொட்ட நேரம் பார்த்து காத்திருந்தாள்.

***

காரினில் ஒருபுறம் அவள் பெரியம்மா இருக்க மறுபுறம் அவளை வேண்டுமென்றே இடித்துக்கொண்டு அமர்ந்தவனை முறைக்கக்கூட முடியாமல் குந்தவை அமர்ந்திருக்க, தன் விரல் கொண்டு அவள் முழங்கையை மெல்ல நிமிண்டினான் தச்சன்.

“என்ன பிரச்சனை உங்களுக்கு இப்போ?” என்று பார்வையை திருப்பாமல் அடிக்குரலில் சீற,

“இங்கே பாரு.” என்று தன் அலைபேசியை பதிலுக்கு அவளிடம் நீட்டினான் தச்சன்.

என்ன சொல்ல வருகிறான் என்பது போல பார்த்தவள் அவனது அலைபேசியை வாங்கிப் பார்க்க, இம்முறை அதன் வால்பேப்பரில் சற்று முன் எடுத்த அவர்களின் திருமணப் புகைப்படம் ஒன்று இருந்தது. மனம் சாந்தமாகவா என்ற வினாவிற்கு விடை காண, அவளது பார்வை அந்த புகைப்படத்தை இதயத்திற்குள் பதித்துக் கொண்டது.

கோபம், வீம்பு, கொள்கை என்று எது இருந்தாலும் அவன் புறம் மனம் சாய்ந்தது உண்மை தானே! திருமணம் நடந்து இந்த வாழ்க்கை முழுதும் அவளுக்கு துணையானவனும் அவன் தானே! அவன் கட்டிய தாலி அவள் நெஞ்சத்தினுள் அழுத்தமாய் இடம்பிடித்திருப்பதும் மெய் தானே! அந்த மெய் மேலெழும்ப மனதினில் மெல்லிய சாரல். எல்லாம் அவன் பேசத் துவங்கிய வரை தான்.

“நீ கொஞ்சம் சிரிச்சிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.” என்று வேறு யாருக்கும் கேட்கா வண்ணம் அவள் செவியின் அருகில் கிசுகிசுக்க,

“நான் சிரிக்குற மாதிரியா எல்லாம் நடக்குது?” என்றாள் மீண்டும் வீம்பை பிடித்துக்கொண்டு… என் பேச்சை எவரும் கேட்கவில்லை தானே நானும் உங்கள் எவரின் விருப்பத்திற்கும் இசைந்து கொடுக்க மாட்டேன் என்ற வீம்பு.

அதில் எரிச்சலுற்றவன், “என்ன பிரச்சனை உனக்கு? ஒன்னுமில்லாததை பெருசாக்கி நீயும் நிம்மதியா இல்லை உன்னை சார்ந்திருப்பவங்களும் நிம்மதியா இல்லை.”

“இதுக்கு தான் முன்னாடியே கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்.” என்று அவள் பதில் பேச, அவளருகில் இருந்த அவளின் பெரியம்மாவிற்கு கேட்டு விட்டது. அதிர்ந்தவர் முன்னே காரில் பயணம் செய்யும் தச்சனின் நண்பன் குணா கேட்டிருப்பானோ என்று பார்க்க,

“அவருக்கு முன்னாடியே தெரியும்.” என்றாள் குந்தவை சும்மாயிராமல்.

“என்னடி பேசுற நீ? உங்கக்கா வாழ்க்கை இப்படி முடிஞ்சி போச்சேன்னு உங்க அம்மா அழுது புலம்பாத நாளிலில்லை. இப்போ தான் உன் கல்யாணம் நடக்கவும் கொஞ்சம் தெளிஞ்சிருக்கா. ஆனால் நீ இப்படி பேசிட்டு இருக்க.”

“ப்ச்… அதுதான் கல்யாணம் நடந்துருச்சே. இனி என் வாழ்க்கை என்பாடு.” என்று அவள் எரிச்சலாய் மொழிய,

“குந்தவை அமைதியா இரு.” என்று குரலில் கடினம் கூட்டி எச்சரித்தான் தச்சன்.

“எல்லோரும் என் வாயை அடைங்க. அவங்கவங்க விருப்பம் அவங்கவங்களுக்கு முக்கியம் ஆனால் நான் மட்டும் எதுவும் விருப்பப்படக் கூடாதா?” என்று எதிர்த்துக்கொண்டு வர, இன்றுமா என்றிருந்தது தச்சனுக்கு.

“நான் பேசிக்கிறேன் அத்தை. நீங்க ஓய்வெடுங்க.” என்று குந்தவையின் பெரியம்மாவிடம் சொல்ல, அவரோ என்ன இவள் நல்ல வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்வாளோ என்று பயம் கொண்டு தச்சனின் பேச்சையும் மீற முடியாமல் தவிப்புடன் அமர, குந்தவையை அழுத்தமாய் பார்த்தவன்,

“நாம அப்புறம் பேசலாம்.” என்றான். அதன் பின்பு அவள் வாய் திறக்கவில்லை.

அவளுக்கும் புரிந்தது, தன்னுடைய நியாயத்தை இனி எவரும் புரிந்துகொள்ளப் போவதில்லை. என்னவென்றாலும் அவளையே பணிந்து போகச் சொல்லுவார்கள் என்று. அதுதானே காலம் காலமாய் நடக்கிறது? இனி பேச வேண்டியது எல்லாம் தச்சனிடம் மட்டும் தான், என்று முடிவெடுத்துக் கொண்டு, பின்னே சரிந்து கண்மூடிக் கொள்ள மனம் நிம்மதியின்றி தவித்தது. எப்படி அனுபவித்திருக்க வேண்டிய தருணம் ஆனால் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி பூதாகரமாய் தெரிய, உடலுடன் உள்ளமும் சோர்ந்து கண்ணயர்ந்து விட்டாள்.

முன்னே இருந்த குணா என்னடா என்பது போல தச்சனை பார்க்க, ஒன்றுமில்லை என்று தலையசைக்க, ஒன்றில் நிலையில்லாமல் மனம் தடுமாறியது. சொன்னபடியே திருமணம் முடித்தாகிவிட்டது. அடுத்தது என்ன? என்ற கேள்வி அவனுள்ளும் எழ, ஒன்றும் புரியவில்லை. குந்தவையை சமாளிப்பது எளிதானதாக இருக்காது என்று மட்டும் புரிந்தது.

தலையை சரித்து அவளைப் பார்க்க, பார்வை அவளுக்கு மறுபுறம் இருந்தவரின் மீதும் விழுந்தது. இருவரின் கண்களுமே மூடியிருக்க, மனம் இலகுவாகி, ‛இது தான்டா சரியான நேரம். உன் பொண்டாட்டி எழுந்துட்டா காளியாட்டம் ஆடிடுவா. அப்புறம் எங்க இவ்வளவு நெருக்கமா பார்க்குறது. நேரம் கிடைக்கும் போதே ட்ரையல் பார்த்துடனும். என்சாய்.' என்று மனத்திற்குள்ளேயே அலப்பறை கூட்டி, உல்லாசமாய் ஒரு கையை தூக்கி அவள் தோள் சுற்றி போட்டவன் மெல்ல முகத்தை மட்டும் அவள் புறம் சரிக்க, அவளின் சுகந்தம் அவன் நாசியினுள் சென்று சுகமாய் இம்சித்து இதோவென்று இதழ்களை அவள் கன்னத்தில் பதிக்கும் நேரம் வேகத்தடை சரியாய் தடையாக வந்துவிட, எக்குத்தப்பாய் அவள் முகத்தினில் மோதி அவளையும் விழிக்க வைத்திருந்தான் தச்சன்.

திடுமென அதிர்வில் முழித்தவள் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து, முறைப்பது போல அவனைப் பார்த்து, “என்ன பண்ண?” என்று அவள் கேட்ட தினுசில் தச்சனுக்கு உதறல் எடுத்தது.

“ஒன்னுமில்லையே.” என்றவன் நேராய் அமர்ந்து தலையை பின்னே சாய்த்து, கண்களை இறுக மூடிக்கொண்டான்.

குந்தவையின் இதழ்கள் விரிவேன் என சண்டித்தனம் செய்து புன்னகையாய் விரிய, அவனையே கண்களில் நிரப்பிக் கொண்டவள் கார் சீட்டில் சாய்ந்து பின் உறக்கத்தில் சரிவது போல அவன் தோளினில் தலை சாய்த்துக் கொண்டாள். அவனுமே உறக்கத்தில் சாய்வது போல் அவள் தலை மீது தன் தலை சரிக்க, சற்று நேரத்தில் உறங்கியும் விட்டிருந்தனர் இருவரும்.

அனைத்தையுமே அமைதியாய் பார்த்தும் பார்க்காத மாதிரி கவனித்துக் கொண்டிருந்த குணா மெல்ல நகைத்துக் கொண்டான், ‛என்ன காதல்டா இரு, இம்சைங்க. சண்டை போடுற மாதிரி போட்டுட்டு ஜோடி போட்டு தூங்குறதை பாரு... இதுக ரெண்டும் சமாதானம் ஆகும் முன்னம் இன்னும் என்னென்ன ஏழரை எல்லாம் கூட்டப் போதுங்களோ… இவங்க இடையில் வரவங்க செத்தாங்க.’

★★★

“எழுந்திருங்க நல்லவங்களே… ஊர் வந்துடுச்சு.” ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு குணா இருவரையும் எழுப்ப, உடனேயே விழித்துக்கொண்ட தச்சன் குந்தவையை எழுப்பலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, அவனது அசைவில் ஏற்கனவே விழித்திருந்தாள் குந்தவை. விழித்தவள் ஒன்றும் அறியாதது போல அவன் தோளிலிருந்து தலையை எடுத்து சுற்று புறம் கவனிக்க கார் நெரிசல் இல்லாத சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆதவன் ஆரவாரமாய் தன் கதிர்களை வீசினாலும் சாலைக்கு இருபக்கமும் வரிசைகட்டி விரிந்து படர்ந்திருந்த மரங்கள் வெப்பத்தை சற்று தணித்தன. இளம்பச்சை நிறம் ஆக்கிரமித்து, கண்களுக்கு குளிர்ச்சியாய் அந்த மரங்களுக்கு பின்னே வயல்வெளியில் நாற்று நடப்பட்டிருக்க, காற்றும் பஞ்சமில்லாமல் நன்றாகவே வீசியது.

நெடிய கண்ணாடி கட்டிடங்கள், நினைத்த நேரத்திற்கு எதுவும் கிடைக்குமிடம், எந்நேரமும் வெளிச்சமாய் தூங்கா நகரத்தை எதிர்பார்த்திருந்தவள் இனி இதுதான் வாழ்க்கை என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள முயன்றாலும், இந்த சிறிய ஊரில் எப்படி உயரிய இடத்திற்கு வளரப்போகிறோம் என்று புத்தி முரண்டியது. சுத்தமான காற்று நுரையீரளுக்குள் புகுந்தாலும் அதனருகில் இருக்கும் உறுப்பு அடங்க மறுத்தது.

“அங்கேயும் போய் இப்போ பேசின மாதிரி மாப்பிள்ளைகிட்ட அவங்க சொந்தங்கள் முன்னாடி பேசி வச்சிடாத. மாப்பிள்ளை வேண்டுமென்றால் நீ பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவங்க வீட்டில் அதே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க. பிடிக்குதோ பிடிக்கலையோ இது தான் இனி உன் வாழ்க்கை. இதை வெளிச்சமாக்கிக் கொள்வதும் இருளை இழுத்து விட்டுக்கொள்வதும் உன் கையில் தான் இருக்கு. பார்த்து இருந்துக்கோ.” என்று அவளின் பெரியம்மா கண்டிக்க, எரிச்சல் வந்தது குந்தவைக்கு.

‘அவன் மட்டும் என் வீட்டில் வந்து அதிகாரம் பண்ணலாம் நான் அவன் வீட்டுல பண்ணக்கூடாதா. எல்லாத்துக்கும் ஏன் என்னையே அடக்குறீங்க?’ என்று கேட்க நினைத்ததை வாயோடு முழுங்கிக் கொண்டவள் அதன் பிறகும் வாயை திறக்கவில்லை.

ஆலம் சுத்தி வீட்டினுள் வலக்கால் எடுத்து உள்நுழைய அதன் முன்னமே அந்த வீட்டை ஆராய்ந்திருந்தாள் குந்தவை. வீட்டை சுற்றி பெரிய வேலி இருக்க, உள்ளே சுற்றிலும் செடிகளும் கொடிகளும் இடத்தை ஆக்கிரமித்திருந்தன. வீடு பெரியதாய் இருந்தாலும் ஓட்டுவீடாய் இருக்க மனம் இன்னுமே சோர்ந்து போனது. வீட்டில் விளக்கேற்றுவது முதல் பால் காய்ச்சுவது வரை அனைத்தையும் மற்றவர்கள் சொல்படி செய்தாள். சம்பிரதாயங்கள் முடிந்ததும் உடை மாற்றச் சொல்லி அனுப்பி வைக்க அடுத்த நெருடல் காத்திருந்தது.

வீட்டின் நடுவே முற்றத்தை தாண்டி பெரிய சமையலறை அருகில் பூசையறை, முற்றத்துக்கு முன்னர் கூடத்தை ஒட்டியே தனிஅறை என்று இரண்டு அறைகள் காற்றோட்டத்திற்கு பஞ்சமில்லாத போதும், அங்கே மயிலாடுதுறையில் அவர்கள் இருப்பது வாடகை வீடென்றாலும் அனைத்தும் வீட்டினுள்ளே இருக்கும். இங்கோ குளியலறை, கழிப்பறை என்று அத்தியாவசியம் அனைத்தும் சமையலறை தாண்டி கொல்லைப்புறத்தில் வெளியே இருக்க, முகமும் மனமும் தன்னால் சுணங்கியது. வீட்டின் இறுதியில் கொல்லைப்புற நுழைவில் வேறு சிறு அறை ஒன்று இருந்தது.

“என்ன முகம் போற போக்கே சரியில்லையே... வீடு நல்லா எல்லா வசதியோடையும் தானே இருக்கு.” என்று அவள் பெரியம்மா அவளின் உடமைகளை அறையினுள் எடுத்து வைத்துக்கொண்டிருக்க, அங்கிருந்த புது மெத்தையில் அமர்ந்தவள், “அவசரத்துக்கு கூட நான் கொல்லை வரைக்கும் போகணும். நயிட் எல்லாம் எப்படி போறது?”

“புதுசா இருக்குறதால அப்படி இருக்கு. கொஞ்ச நாளான உனக்கு பழகிடும். அதுவரை மாப்பிள்ளையை துணைக்கு கூட்டிட்டு போ.” என்க முறைத்தாள் குந்தவை.

“எது கேட்டாலும் பழகிடும், அட்ஜஸ்ட் பண்ணிக்க, இதைத்தான் சொல்றீங்க.” என்று கடுப்படித்தவள் கழுத்தில் இருந்த நகைகளை அவசரமாய் கழற்றி கடாசினாள். பிடிக்காததால் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று அவளது பார்வை அனைத்தையுமே எதிர்மறை எண்ணத்தோடே பார்த்தது.

இவள் உர்ரென்று முகத்தை வைத்து அமர்ந்திருக்க, தயக்கத்துடன் உள்ளே நுழைந்த திவ்யா, “அண்ணி கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க. பொழுது சாய்ந்ததும் கோவிலுக்கு போகணும், அப்புறம் தான் எல்லாம்னு அம்மா சொல்லக் சொன்னாங்க.” என்று இருவரையும் பொதுவாய் பார்த்து விளிக்க, குந்தவை எதுவும் சொல்வாளா என்பது போல பார்த்துவிட்டு, “எதுவேண்டுமென்றாலும் என்னை கூப்பிடுங்க அண்ணி. நான் இங்க கூடத்தில் தான் இருப்பேன்.” என்று கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் திவ்யா.

“சம்பிரதாயத்திற்காகவாவது அந்த பொண்ணை பார்த்து சிரியேண்டி. உன்கிட்ட தகவல் சொன்னால் அதற்கு பதில் கொடுக்கணும். உன்னோட கடுப்பையெல்லாம் இங்க காண்பிக்கக் கூடாது. அதுவும் அந்த பொண்ணு உன்னோட நாத்தி, இப்படி நீ அந்த பொண்ணுக்கு மரியாதை கொடுக்காம இருந்தா உனக்குத் தான் பிரச்சனை...” என்று அடுத்த அறிவுரை படலத்தை துவங்க, கடுப்பாகி மெத்தையில் சரிந்து கண்ணை மூடிக் கொண்டாள் குந்தவை.

மருமகள் இங்கு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, அவளது மாமியார் கொல்லைப்புறத்தில் அதே நிலையில் இருந்தார்.

“மருமகள் வந்துட்டா. பொறுப்பை அவளிடம் கொடுத்துட்டு அக்கடான்னு ஓய்வெடு. சும்மா எல்லாத்தையும் தலையில் போட்டுக்கிட்டு இருக்குறதையும் கெடுத்துக்காத.”

“என்ன இப்படி சொல்றீங்க? நான் எதை கெடுத்துக்கிட்டேன்?”

“கல்யாணம் ஆன புதுசிலும், இறுதி காலத்திலும் புருஷனுக்கு பொண்டாட்டி துணை, பொண்டாட்டிக்கு புருஷன் துணை. இதை மனசுல வச்சு எதுனாலும் செய். இப்போ கையில இருக்குறவனையும் உன்னோட செயலால விட்டுறாத, அவ்வளவு தான் நான் சொல்லுவேன். இனி உன்பாடு.” என்று சொல்லிவிட்டு செல்லும் தன் மாமியாரை கலக்கத்துடன் பார்த்து நின்றார் நீலா.

அந்நேரம் அவரை தேடி வந்த அன்பரசன் தன் சட்டை பையில் இருந்த பணத்தை எண்ணிக்கொண்டே, “உன்னை எங்கெல்லாம் தேடுறது நீலா? விருந்து வைக்கிறது எப்போ வைப்பதுனு முடிவு செய்யணும், இப்போவே முடிவு பண்ணிட்டா ஊரில் எல்லா வீட்டுக்கும் தகவல் சொல்லிடலாம். வா.”

அதை காதில் வாங்காதவர் தவிப்புடன் கணவரை ஏறிட்டு, “நான் ஏதாவது தப்பு செய்றேனா?” என்று கேட்க, மனைவியின் குரலில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்த அன்பரசன் குழப்பத்துடன் நிமிர்ந்து,

“ஏன் அப்படி கேக்குற?”

“அத்தை அப்புறம் ஏன் அப்படி சொல்லிட்டு போறாங்க?”

“என்ன சொன்னாங்க?”

“நான் இவனையும் விட்டுருவேனாம்.” அழுதுவிடுவேன் என்பது போல அவரது குரல் ஒலிக்க, தவித்துப்போன அன்பரசன் நீலாவின் கைப்பிடித்து அழுத்தம் கொடுக்க, மளுக்கென்று கண்ணீர் வந்தது நிலாவிற்கு.

“இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டி, உன் தங்கக்கம்பி இரும்புக்கம்பி.” என்றார் கேலி போல…

“நிசமாவா?” என்று நம்பிக்கையின்றி கேட்க, ஆதரவாய் அவரை தன் தோள் சாய்த்துக் கொண்டார் அன்பரசன்.

***

மதியம் கிளம்பியவன் மாலை கோவில் கிளம்பவென வீடு வரவும் அவனை பின்புறம் இருக்கும் அறைக்கு இழுத்துச் சென்று பிடிபிடியென பிடித்துவிட்டார் நீலா.

“என்ன நினைச்சிகிட்டு இருக்க நீ? வீட்டில் இருக்காம எங்க போய் ஊர் சுத்திட்டு வர இன்னைக்கும்?”

“குணா, திவ்யா வீட்டுக்காரர் இன்னும் மத்தவங்க எல்லாம் ட்ரீட் கேட்டாங்க. அதுதான் சும்மா அப்படியே போயிட்டு வந்தோம்.”

“கொஞ்சமாச்சும் இருக்காடா உனக்கு? இன்னைக்கு தான் கல்யாணம் ஆகியிருக்கு. குந்தவையும் இங்க வந்துருக்கா. இன்னைக்கு கூட அவளுடன் இருக்காமல் வெளில போனால் அவங்க வீட்டில் என்ன நினைப்பாங்க.”

“ம்மா… நான் வீட்டில் இருந்தால் மட்டும் அவ கூட பேச விட்டுடுவீங்களா என்ன? திவ்யா அப்போவே சொல்லிட்டா குந்தவையை தொந்தரவு செய்ய கூடாதுனு அப்புறம் இங்க இருந்து நான் என்ன செய்ய?” என்று அவனும் கடுப்பாய் மொழிய,

“சீக்கிரம் கிளம்பி வா. நேரமாச்சு.” என்று அவனை வெளியே தள்ளினார் நீலா.

ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அவனும் அறைக்குச் செல்ல, அறை காலியாய் இருந்தது ஆனால் அவளது சுகந்தமும் புதிதாய் இடம்பெற்றிருக்கும் அவளது உடமைகளும் அங்கேயே இருந்து அவனுக்குள் உவகையை தோற்றுவிக்க இரவு குறித்த கனவுகள் இப்பொழுதே...

“கனவு காணாம சீக்கிரம் கிளம்பி வா. அண்ணி உனக்காக காத்திருக்காங்க.” என்று சொல்லிவிட்டு போக, அவசரமாய் கிளம்பி குந்தவையை தேடிப் போனான்.

அவளோ கடுகை போட்டால் வெடித்துவிடுவேன் என்பது போல சூடேறி இருந்தாள். பின்னே அவளை முன்னரே கிளம்பச் சொல்லியிருக்க, தச்சன் ஊர் சுற்ற கிளம்பியதால் அவனுக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டதே என்ற கடுப்பு.

“ஏன் கோபம்?” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தவன் இயல்பாய் அவள் கையை பற்றிக்கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்தவள் யாருமில்லை எனவும் வெடுக்கென கையை உருவிக் கொண்டு, விறுவிறுவென நடந்து அங்கிருந்த காரில் ஏறினாள்.

‘உன்பாடு ரொம்பவே கஷ்டம்தான்.’ என்று தனக்குத்தானே துக்கம் விசாரித்துக் கொண்டவன் அமைதியாய் அவளை தொடர்ந்து அருகில் அமர்ந்துகொண்டான்.

ஒன்றிரண்டு தச்சன் வீட்டு உறவினர்கள் இருக்க அடக்கியே வாசித்தாள் குந்தவை. எங்கே அவர்கள் முன் இவள் கத்திவிடுவாளோ என்று பயந்து அவனும் அவளுக்கு இம்சை கொடுக்கவில்லை.

அந்திசாய்ந்து இருளும் படர்ந்துவிட குந்தவையை கேலி பேசியபடியே சிரத்தை எடுத்து ஒப்பனை செய்துவிட்ட திவ்யாவை என்ன செய்தால் தகும் என்பது போல குந்தவை பார்த்திருக்க, அவளின் எண்ணம் செல்லும் திசையை உணர்ந்த அவள் பெரியம்மாவோ எதுஎதுவோ பேசி சீக்கிரமே குந்தவையை அறையினுள் அனுப்பிவைத்துவிட்டார்.

விறைப்பாய் அறையினுள் நுழைந்தவள் அங்கே மெத்தையில் ஒய்யாரமாய் படுத்து கால்மேல் கால் போட்டு ஏதோ பாடலை முணுமுணுத்தபடி இருந்தவனைக் கண்டதும் விரைந்து முன்னேறி பால் சொம்பை நங்கென்று மேசையில் வைத்தாள் குந்தவை.

“சொம்பு பத்திரம்டி… இதுக்காக ஸ்பெஷலா வாங்குன சொம்பாம்.” என்று கேலி பேச, பற்றிக்கொண்டு வந்தது குந்தவைக்கு.

அவன் சொன்னான் என்பதற்காக வேண்டுமென்றே அந்த சொம்பை மீண்டும் கையிலெடுத்து நங்கென்று வைத்தாள்.

“சொம்பா முக்கியம். சொம்பு வாங்கின நோக்கம் தான் முக்கியம்.” என்றான் மீண்டும் வம்பாய். வேண்டுமென்றே சீண்டுகிறான் என்று புரிந்துகொண்டவள் நா வரை வந்த சில அற்புத வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு ஆடியபடி இருந்த அவனது காலை தட்டிவிட்டு சுவரின் ஓரம் உள்ளே ஏறி படுத்துகொண்டாள்.

‘அட என்ன அதிசயம், சுனாமி பம்முது.’ என்று சத்தமாகவே சொன்னவன் வேண்டுமென்றே அவளை நெருங்கிப் படுத்து அவள் மீது கையைப் போட, அதற்கு மேலுமா சும்மா இருப்பாள் குந்தவை?

வேகமாக அவனின் கையை தட்டிவிட்டவள் எழுந்தமர்ந்து, “தள்ளுடா... மேல கைபட்டுச்சு கொன்னுடுவேன் உன்னை.” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க, அவனும் எழுந்து பேச்சோடு பேச்சோடு நெருங்கியமர்ந்து அவளின் விரலில் தன்னுடைய விரலை கோர்த்தவன், “கைபடாம இருக்க எதுக்குடி கல்யாணம்.”

“இப்படி எல்லாம் பேசுனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” கண்களில் அனலைக் கக்கி மீண்டும் எச்சரிக்க, அதை காற்றில் பறக்கவிட்டவன் கரத்தை கீழிறக்கி அவள் இடையை இறுகப் பற்ற, எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு சக்தி வந்ததோ அவன் கரத்தை தட்டிவிட்டவள் அவனை வேகமாய் தள்ளினாள். அவளது வேகத்தை எதிர்பாராதவன் நிலைதடுமாறி பின்புறம் சாய்ந்து நிதானிக்கமுடியாமல் கீழேயே விழுந்துவிட்டான்.

“ஒருமுறை சொன்னா புரியாதா? என் விருப்பமில்லாம தொடுவியா நீ?” என்று எகிற, கீழே விழுந்த வேகத்தில் தசைகள் பிடித்துக்கொண்டு இடுப்பும் முதுகும் வலிக்க சட்டென்று எழமுடியாமல் தச்சன் முகத்தை சுழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனின் பாவனையில் தன் வேகத்தை குறைத்தவள் கண்களை உருட்டி மேலிருந்தபடியே கீழே குனிந்து பார்க்க,

“இப்படியெல்லாம் செஞ்சு நான் இசகுபிசக்கா விழுந்தால் உனக்குதாண்டி கஷ்டம்.” என்றான் நழுவிய வேட்டியை சரிசெய்து கொண்டு அடக்கப்பட்ட கோபத்தில்…

“எனக்கென்ன கஷ்டம்?” என்று வினாவினூடே அவன் எழுவானா என்று பார்க்க, அவன் சொன்ன பதிலில் அவள் தான் எழுந்து அவன் வாயினில் இரண்டடி போட்டாள்.

“முதராத்திரி முடிஞ்சி இடுப்பை பிடிச்சிக்கிட்டு நொண்டி நொண்டி நான் நடந்து போனா நீ வெளியவே போகமுடியாது பார்த்துக்கோ…”

“என்னடா பேச்சு இதெல்லாம்?” என்று உடல் கூசி அவன் வாயிலேயே பட்டென்று போட்டாள் குந்தவை.

அடிக்கவென தன் இதழில் பதிந்த அவளது கரத்தினை அப்படியே பிடித்துக்கொண்டவன் அவள் கண் பார்த்து, அவளையும் பார்க்க வைத்து, “இப்போ நான் எதில் குறைஞ்சி போயிட்டேன்னு நீ வேண்டாம் வேண்டாம்னு பஜனை பாடுற?”

“அந்த காரணத்தை ஏற்கனவே சொல்லிட்டேன்.” அவனின் தணிந்த குரலில் அவளுமே தணிந்து போனாள்.

“அதை நான் காரணமாவே ஏத்துகல. வேற சொல்லு.”

“சொன்னா என்ன செய்வீங்க? இனி திரும்ப நான் என் அப்பாக்கு பொண்ணா போக முடியுமா? இல்லை இந்த கல்யாணம் தான் இல்லைனு ஆகிடுமா?”

“நடந்ததை எப்படி மாத்த முடியும்? இனி நடக்கப்போறதை வேண்டுமென்றால் சரி செய்து நம்ம வாழ்க்கையை நாம அமைச்சிக்கலாம்.” தனக்கு இவ்வளவு தெளிவாக பேசத் தெரியும் என்பதே அவனுக்கு அவளுடன் பேசும் போது தான் தெரிந்தது.

தக்க சூழ்நிலையும், நிகழ்வுகளும் வரும்வரை தனக்கு இது செய்ய வரும், தன்னால் இதையும் செய்ய முடியும் என்பது தெரிவதில்லை. அப்படித்தான் இருந்தது அவனுக்கு. வேலை வெட்டியின்றி சுற்றியவன் நின்று நிதானமாய் ஒருவரிடமும் உருப்படியாய் பேசியதாய் நினைவிலேயே இல்லை. ஆனால் இன்று எல்லாம் சரளமாக வருகிறதே. நமக்கும் பொறுப்பு வந்துடுச்சோ? இதை தான் அன்பரசன் குந்தவை மேல நம்பிக்கை இருக்குனு சொன்னாரா? என்ற எண்ணம் வரவும் தான் தன்மேலின்றி குந்தவை மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி, தன்மீது அவநம்பிக்கை செலுத்திய தந்தையின் மீது கோபம் இருக்கிறது என்ற நினைவே வந்தது. வந்து என்ன செய்ய? இப்போது குந்தவையை பிடித்த பிறகு, நிலம் கைக்கு கிடைத்த பிறகு அவர் மீது கோபமெல்லாம் எங்கு சென்றது என்றுகூட தெரியவில்லை. அவனது நினைப்பை கலைக்கும் விதமாய் அவனின் கேள்விக்கு பதில் கேள்வி எழுப்பினாள் குந்தவை.

“அப்போ என்ன காரணம்னு சொன்னால் சரி பண்ணுவீங்களா? பேச்சு மாறக்கூடாது.”

“அன்னைக்கு சொன்னதை விட வேறு ஏதாவது உருப்படியான காரணம் சொல்லு. மாத்துவோம்.”

“சென்னையில் வேலைக்கு சொல்லி வச்சிருக்கேன். எக்ஸாம் முடிஞ்சதும் அங்கே போகணும்.”

‛இதெல்லாம் காரணம் என்று தூக்கிட்டு வந்துடாத,’ என்று பார்வையாலேயே செய்தி கடத்தினான் தச்சன்.

“சம்பாரிச்சு வானதிக்கு கொடுக்கணும்.” என்க, அவன் முகம் கனிந்தது. வேறு எது சொல்லியிருந்தாலும் மறுத்திருப்பான் இல்லையா அதை தனக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில் தான் இருந்தான். ஆனால் வானதி என்றதும் இருபிள்ளைகளும் தான் நினைவுக்கு வந்தது. அவர்களுக்காக இவளை அனுப்புவதில் தவறில்லை என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் குடும்பம் என்பது இவர்கள் இருவர் மட்டுமே சார்ந்தது அல்லவே அது மறந்தே போனது அவனுக்கு. அவளுக்கும் தான்…

“ஏன் சென்னை வரைக்கும்? இங்கேயே போ.” என்று அவனும் தணிவாய் சொல்ல முறைத்தாள் அவள்.

“இங்கயேவா? எங்க? உங்க கூட வந்து புல்லு பிடுங்கனுமா?”

“தேவையில்லாம வார்த்தையை விடாத குந்தவை. இப்படி எல்லாம் பேசினா எனக்கு பிடிக்காது.”

“நீங்க சொல்ற பதிலுக்கு நான் வேற எப்படி பேச முடியும்? இங்க உங்க ஊரில் அப்படி என்ன வேலை இருக்கு நான் பார்க்கிற மாதிரி?”

“இங்கன்னா இங்கேயேவா… பக்கத்தில் டவுன் இருக்கு. அங்க பாரு. ஆனால் எங்க வீட்டில் பொண்ணுங்க யாரும் வேலைக்கு போனதில்லை.”

“அதுக்காக என்னால் போகாம எல்லாம் இருக்க முடியாது. ஒன்னு என் கூட நீங்களும் சென்னைக்கு இல்லை திருச்சிக்கு வாங்க. எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கை துவங்குவோம். இல்லைனா நான் மட்டும் போவேன்.” என்று மீண்டும் வீம்பு அவளிடத்தில்.

அவளும் ஏன் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று புரியவைக்க முயலவில்லை அவனும் அவள் ஏன் இந்த வாழ்க்கையை மறுக்கிறாள் என்ற ஆழமான காரணத்தை தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை.

அவளின் பதிலில் எரிச்சலுற்றவன், “இங்க தான் பிறந்தேன், வளர்ந்தேன், வாழுவேன், சாவேன். நீயும் இதில் அடக்கம். நீ ஒரு ஊரில் நான் ஒரு ஊருன்னு தனித்தனியா வாழறத்துக்கு கல்யாணம் பண்ணல. இன்னொரு முறை இப்படி பேச்சு வந்துச்சுன்னா நீ வேற தச்சனைத்தான் பார்ப்ப.” என்று எச்சரித்துவிட்டு தரையைப் பிடித்து எழுந்தவன் அமைதியாய் மெத்தையில் ஏறி சுவரோரம் படுத்துக்கொண்டான். எந்த முடிவும் எட்டப்படாமல் அவனையே வெறித்துப் பார்த்தவளும் அமைதியாய் அவனுக்கு முதுகு காட்டி அவனருகிலேயே படுத்துக்கொண்டாள்.

No comments:

Post a Comment

Most Popular