Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 2





*2*


“என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன்.


அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில்.


“நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது... ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.” என்றவன் கையை உல்லாசமாய் தேய்த்துக்கொண்டு கற்பனை குதிரையை தட்டிவிட்டவன், அதை அப்படியே தன் அன்னைக்கும் மொழி கொடுத்து பகிர்ந்தான், “பார்க்குறது தான் பார்க்குற… இந்த ராஷ்மிகா, ஆத்மிகா, மாளவிகா மோகனன் மாதிரி பொண்ணு பாரு… குறிப்பா அப்பாவை இதில் இழுத்து விட்டுறாதா... அப்புறம் அவர் விருப்பத்திற்கு சரோஜாதேவி, சாவித்திரின்னு பெயரை பார்த்தே முடிவு செஞ்சிட்டு வந்து தான் உன்னிடமே சொல்லுவாரு.” தந்தையுடன் முட்டிக்கொண்டாலும் அவரின் தெரிவுகள் எப்படியிருக்கும் என்ற யூகம் அவனுக்கு எப்பொழுதும் உண்டு. அதை கவனித்த நீலா அவன் சொன்ன திணிசிலும், உவமையிலும் ஓசையின்றி சிரித்துக்கொண்டார்.


“அட கேட்குறது தான் கேட்குற இந்த திரிஷா, நயன்தாரா, சமந்தா மாதிரி கேட்காம அதென்ன ராசுமிக்கா? ஆத்துமிக்காதுனு ஆத்துல போறதையெல்லாம் கேட்குற அப்பு?” அவனது பொக்கைப்பல் பாட்டி மங்களம் உட்புக, பற்களை காட்டினான் தச்சன்.


“நீ சொல்றவங்க எல்லாம் ஆன்ட்டீஸ் கிழவி… இப்போ ட்ரெண்டே இந்த ‘மிக்’காஸ் தான். சும்மா வெண்ணை மாதிரி வழுவழுன்னு நம்மள வழுக்கிட்டு போக வச்சிடுவாங்க .” என்று சொல்ல, பட்டென்று அவன் முதுகிலே ஒன்று வைத்தார் நீலா.


“என்னடா பேச்சு இதெல்லாம்? மரியாதையா பேச பழகு.” என்று கண்டிக்க, அவரை முறைத்தான் தச்சன்.


“இது என்ன கொடுமையா இருக்கு. சுதந்திரமா ரசிக்கக்கூட சுதந்திரம் இல்லையா? ஆனாலும் நீ ரொம்ப உஷார் நீலாவதி… எனக்கு சப்போர்ட் செய்யுற மாதிரி வெளியில் காட்டிக்க வேண்டியது... ஆனால் செய்யுறதெல்லாம் அவர் கண்ணசைவுபடிதான்.” என்று முறைத்தவண்ணமே தந்தையையும் இழுக்கத் தவறவில்லை அவன்.


“உன் அப்பா சொல்றது சரிதான். வரவேண்டியவள் வந்து நாலு மொத்து மொத்தினால் தான் உன் கொழுப்பு அடங்கும்.” என்று கடிந்து கொண்டார் நீலா. மகனின் மீது அளவுகடந்த பாசம் இருக்கிறது தான். அதற்காக அவன் செய்பவை எல்லாம் சரியென்று என்றுமே வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததில்லை. தவறு என்றுபட்டால் அவனை அடிக்கவும் தயங்கியதில்லை.


“தோளுக்கு மேல உசந்து கல்யாணத்திற்கு தயாராக இருக்குற பிள்ளையை இன்னும் என்ன கைநீட்டி அடிக்குற பழக்கம்? பத்து மணியாச்சி இன்னமும் அவனுக்கு சாப்பாடு போடலை, ஆனால் அவனை அடிக்கமட்டும் வந்திட வேண்டியது. போ எடுத்துவை அவனுக்கு.” என்று சத்தமாய் மருமகளை விரட்டினார் மங்களம். இப்படித்தான் பாசம் காட்டுகிறேன் என்ற பெயரில் அவனின் செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து அவனின் அகந்தையை அவ்வப்போது ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு மூத்தவரான மங்களமே அவன் எது செய்தாலும் ஏதாவது சப்பைக்கட்டு கட்டி பெற்றோரிடமிருந்து அவனைக் காப்பாற்ற, தவறுகளை திருத்திக்கொள்ள முனைந்ததில்லை அவன். பாட்டியே சொல்லிவிட்டார், பிறகென்ன என்ற அலட்சியம் நிரம்பவே இருந்தது தச்சனிடம்.


‘அவன் தப்பு செய்யும் போது எங்களை அடக்காமல் அவனை கண்டிக்க அனுமதித்திருந்தால் அவனை இன்னமும் நான் ஏன் அடிக்கப் போகிறேன்?’ மாமியார் முகத்திற்கு நேரே சொல்லமுடியாமல் மனதிற்குள்ளேயே நொடித்துக்கொண்டு அடுப்பறை செல்ல எட்டுக்களை எடுத்துவைத்தார் நீலா.


“அவ கிடக்குறா… மிக்காவா, மீகாவோ யாரை உனக்கு பிடிச்சிருக்கோ அவளையே கட்டிக்கோ.” என்று பேரனிடம் மங்களம் கிசுகிசுக்க, அது நீலாவின் காதில் விழுந்துவிட்டது.


“ஏலேய், உன் ஆத்தா சொல்வதை கேட்டுட்டு நீ கனவு கண்டுக்கிட்டு கிடக்காத... உன் அப்பா உனக்கு பொண்ணு பார்த்து, அவங்க வீட்டிலும் பேசிட்டாரு. அவர்களிடம் இருந்து நல்ல செய்தி வரத் தான் காத்திட்டு இருக்கோம். இனியும் பத்து மணிவரை தூங்குவது அப்புறம் சாப்பிட்டுட்டு ஊர் சுத்துறது, பெயருக்கு வயலில் வேலை செய்றேன்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு பொறுப்பா அப்பாவுக்கு துணையா இருந்து ஒழுங்கா வேலை கத்துக்கோ இல்லையா வெளியில் வேற வேலையாவது தேடி பொறுப்பா இருக்க பழகிக்கோ. உன்னை நம்பி வரப்போற பெண்ணை நல்லா வச்சிக்கனும்.” என்று அறிவுரைகளை அடுக்கிக்கொண்டே செல்ல, அதில் அவனுக்கு தேவையானதை மட்டும் பிடித்துக்கொண்டான்.


“எம்மாவ்... கல்யாணம்னு சொல்லிட்டு இப்படி குண்டை தூக்கி போட்டுட்டு போற... எல்லாம் முடிவு பண்ணிட்டு தகவல் மட்டும் தான் எனக்கு சொல்ற? அதெப்படி அவரே பொண்ணு பார்த்து முடிவு பண்ணுவாரு? எனக்கு பிடிக்கணும். அதேமாதிரி என்னால் எல்லாம் அப்பாகூட வேலை செய்ய முடியாது.” என்று முறுக்கினான் தச்சன்.


நீலாவோ இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து உதறி வியர்வையை துடைத்துவிட்டு, “அதெல்லாம் எனக்குத் தெரியாதுடா. எல்லாத்தையும் உன் அப்பாகிட்ட பேசிக்கோ... பொண்ணு மயிலாடுதுறை. பெயர் குந்தவை.” என்று தகவலை சொல்லிவிட்டு அவனுக்கு உணவு எடுக்க நகர்ந்துவிட, தச்சனை பார்க்கவேண்டுமே... வேப்பெண்ணெய் குடித்தவனைப் போல முகத்தை கோணலாக வைத்து, உதட்டை ஒருவாறு இழுத்து, கணக்களை சுருக்கி, “குந்தவையா? எதை குந்த வைக்கணும்?” என்றானே சத்தமாய், அடுப்பறையில் அதற்கு எதிர் பாட்டாய் பாத்திரம் உருண்டது. மங்களம் இல்லையென்றால் அவன் தலையை அப்படித்தான் உருட்டி இருப்பார் போலும்… அது முடியாது போகவும் உணர்வற்ற உலோகத்தின் மீது தன் கடுப்பை காட்டிக் கொண்டிருந்தார்.


‘மண்டை பத்திரம்னு சொல்லாம சொல்லுது நீலாவதி, நீ எஸ் ஆகிடு தச்சா…’ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவன் மங்களத்திடம் அசட்டையாய் சிரித்து வைத்து, “கிழவி அம்ம்மா பாவம்… திட்டாத. எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன். பை.” என்று சொல்லிவிட்டு பூனைநடையிட்டு அங்கிருந்து வெளியேறினான். ஆனாலும் நீலாவின் காதுகளிலிருந்து தப்பவில்லை அவன் சென்ற அரவம்.


“ஏலேய் தச்சா… குளிக்காம சாப்பிடாம எங்கடா போற?” என்று கத்திக்கொண்டே வேகமாய் வாயில் வர, தச்சன் ஏற்கனவே தன்னுடைய பைக்கை தள்ளிக்கொண்டு வெளி வாயில் வரை சென்றுவிட்டான்.


“கண்மாயில் குளிச்சிக்கிறேன்,” என்ற பதில் மட்டும் வந்தது அந்த பைக் வேகமெடுக்கும் முன்...


தச்சனுக்கு விழவேண்டிய ஒன்றிரண்டு வசவுகளை காற்றுக்கு பரிசாக வழங்கிவிட்டு வீட்டு திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் நீலா. திருமணப்பேச்சு எடுத்தாலாவது மகனுக்கு பொறுப்பு வரும் என்று கனவு கண்டிருக்க, அது நடப்பது போலத் தெரியவில்லையே என்ற ஏமாற்றம் அவரை சோர்வுறச் செய்தது.


“என்ன இங்கன வந்து உட்கார்ந்து யோசிச்சிட்டு இருக்க? அதான் அவன் கிளம்பி போயிட்டானே, உள்ளே வரவேண்டியது தானே?” மருமகளை தேடி மங்களம் வெளியேவே வந்துவிட்டார். அவரின் குரலில் தொனித்த அக்கறையில் மீண்டுமொரு முறை பெருமூச்சு எழுந்தது நீலாவிடம்.


மணமாகி வந்தது முதலே புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறார் மங்களம். ஒருநேரம் மாமியார் உரிமையை நிலைநாட்டுபவர் அவர் செய்யும் எல்லாவற்றிக்கும் குறை படிப்பார். அத்தி பூத்தார் போல எப்போதாவது பாராட்டுவார். பின்னோ மகனை சரியாக கவனிக்கவில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு புறம் பேசுவார். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு அவ்வப்போது அக்கறை பேச்சுக்கள் சரளமாய் வரத் துவங்கியது. இப்போதோ வசவுகள் இல்லை என்றாலும் மாமியார் குணத்தை ஆங்காங்கு காட்டிவிடுவார். இப்படியான கலவையான பயணத்திலேயே முடிவு செய்துவிட்டார் தனக்கு வரப்போகும் மருமகளை மகள் போல அரவணைத்து செல்ல வேண்டுமென... அதற்கு மருமகள் மட்டும் ஒத்துத்துழைத்தால் போதாது, அவரது பிள்ளைகளும் சுமூக சூழ்நிலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கணுமே...


“நான் கேட்டுட்டே இருக்கேன் அதுக்கு மதிப்பு கொடுக்காம என்னத்த சிந்திச்சிட்டு இருக்க?” நீலா அமைதி காக்கவும் உசந்தது மங்களத்தின் குரல்.


“உங்க பேரனைவிட வேறு எதை பெருசா யோசித்திட போறேன்? உங்க பையன் போட்டோ கூட பார்க்காம குந்தவை தான் பொண்ணுன்னு முடிவே செய்து அதற்கான வேலையில் இறங்கிட்டாரு, ஆனால் அவரு புள்ளை முடியாதுனு முறுக்கிட்டு போறான். இவங்க இரண்டு பேர் நடுவிலும் மாட்டி தச்சனின் திருமணத்தை முடிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளிடும் போலிருக்கு.” என்ற நீலாவின் குரலில் இப்போதே சலிப்பு தெரிந்தது.


“என் புள்ளைக்கு தெரியும் அவன் புள்ளையை எப்படி அடக்கி சம்மதிக்க வைக்குறதுனு. நீ கவலைப்படாம வேலையைப் பாரு. மாட்டுக்கு தண்ணி காட்டிட்டியா இல்லை உன் பிள்ளை பட்டினியா கிளம்பிட்டானு அதையும் பட்டினி போட்டுட்டியா?” என்று மங்களம் மங்கள வார்த்தை பேசி உசுப்ப, வேகமாக எழுந்த நீலா வீட்டுக்கொல்லையில் இருக்கும் மாட்டுக்கொட்டகைக்கு விரைந்தார்.


***


இதமான வெயிலுக்கு பதில் காற்றில் அனல் கலந்து வீச அதை கிழித்துக்கொண்டு வண்டியில் பறந்தான் தச்சன். அவனுக்கு நினைவு தெரிந்தே, ஒரு காலத்தில் எங்கும் பச்சை பசேலென காட்சி தந்த இடமெல்லாம் இப்போது பொட்டல் காடாய் ஆங்காங்கு எல்லைக்கற்கள் தாங்கி, வீட்டுமனையாய் உருமாறி விற்பனைக்குக் கிடந்தது. வீடுகள் இருக்கும் தெருவைத் தாண்டி மாநில நெடுஞ்சாலையில் வண்டியை விட்டவன் மனம் முழுதும் அன்னை கடத்திய செய்தி தான் ஓடிக்கொண்டிருந்தது. திருமணம் என்றதும் வந்த மகிழ்ச்சி அதையொட்டி வரும் பொறுப்புகளை தெரிந்துகொண்டதும் வடிந்திருந்தது. பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு அவன் எதிர்பார்க்கும் சாதகமான சூழல் இன்னுமே வரவில்லையே... ஆனால் செல்ல நினைத்த இடம் வந்துவிட, பைக்கை மாநில சாலையிலிருந்து சிறியதாய் பிரிந்து செல்லும் ஒத்தையடிப் பாதையில் விட்டவன் சுற்றிலும் இருந்த நெற்கதிர்களை பார்த்த வண்ணம் முன்னேறினான்.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அங்கு தெரிந்த வயல்வெளிகளில் அவர்களுக்கு சொந்தமான வயலும் பெருமளவு இருந்தது. வானம் பார்த்து நின்றிருந்த நெல்மணிகளின் வயலில் அன்பரசன் தென்பட, வண்டியின் வேகத்தை அதிகரித்தவன் அந்த வயல்களைத் தாண்டி இருக்கும் அவர்களின் தோப்பிற்கு விரைந்தான். தோப்பு என்பதைவிட பெரிய கொல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தென்னை, மா, பலா, வாழை, எலுமிச்சை இன்னும் பிற காய்கறிகள் என்று வீட்டுத்தோட்டம் போலவே இருந்தது. அதில் விளையும் அனைத்தும் வீட்டிற்கு பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் வெகுசில கிலோ காய்கறிகளே அவர்கள் ஊரின் மளிகை கடைக்கு விற்பனைக்கு செல்லும். மற்றபடி அவர்களின் வருமானம் என்பது முழுக்க முழுக்க வயலில் கிடைப்பதும், பால் விற்பனை மூலமும் தான்... கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்குமே ஒழிய சேமிப்புக்கு பஞ்சம் தான். அந்த பஞ்சமே தச்சனின் எதிர்காலம் குறித்த பீதியை நிலாவிற்கு கிளப்பியிருந்தது, ஆனால் தச்சனுக்கோ எந்த கவலையும் கிடையாது. அவனது நடை, உடை, பழக்கம் என்று எதிலும் அவர்களின் சேமிப்பின்மை வெளிப்படாது.


துள்ளலுடன் தோப்பிற்குள் நுழைந்தவன் குணாவை தோப்பிற்கு வரச் சொல்லிவிட்டு, அங்கிருந்த போர்செட்டை இயக்கி வயலுக்கு பாய்ச்சும் முன் சேகரமாகும் தண்ணீர் தொட்டியில் உடை களைந்து இறங்கி ஒரு ஆட்டம் போட்டான். மரங்கள் சூழ்ந்திருக்க தோப்பில் இதமாய் இருந்தது.


“தச்சா எப்படி இருக்க?” என்ற குரலில் தான் அந்த தொட்டியை விட்டே இறங்கி வந்தான் அவன். குணாவுடன் தோப்பிற்குள் நுழைந்த குணாவின் அக்கா கணவரைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்தவன், துவாலை கொண்டு ஈரத்தை துடைத்தபடியே,


“வாங்க மாமா... நீங்க எப்படி இருக்கீங்க? நேற்றே வந்திருந்தால் தஞ்சாவூரை ஒரு ரவுண்ட் அடிச்சிருக்கலாம்.”


“விசா விஷயமா நேற்று திருச்சி வரை போயிட்டு வந்தேன்டா…”


“நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது இந்த முறை திவ்யா வீட்டுக்காரருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க.” அவன் மட்டுமே கவலையின்றி ஊதாரியாய் சுற்றுவானே ஒழிய, தங்கை மீது சற்று பாசம் அதிகம் ஆனால் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவன் தங்கை திவ்யாவின் கணவர் திருச்சியில் ஒரு பெரிய கடையில் விற்பனை பிரிவில் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று பணம் அதிகம் சேர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சிலபல இடங்களில் பணம் கொடுத்து ஏமாந்திருக்க, தச்சன் குணா மாமாவை நாடினான். அவரும் தக்க வேலையும் சமயமும் அமைந்தால் கண்டிப்பா அழைத்துச் செல்வதாய் சொல்லியிருக்க, அதை நினைவூட்டியே பேச்சை துவங்கினான் தச்சன்.


“அதென்ன திவ்யா வீட்டுக்காரர்? மாமான்னு சொல்லு இல்லை அத்தான்னு சொல்லு.” குணாவின் மாமா கண்டிக்க, துவாலையை உதறி அங்கிருந்த கட்டையில் போட்டுவிட்டு சட்டையை மாட்டியபடியே, “வந்தா சொல்ல மாட்டேனா… அப்படியெல்லாம் கூப்பிட வரல மாமா… நான் அவரை முறை சொல்லி கூப்பிடுவதில்லைனு திவ்யாவுக்கு கூட கோபம்…”


“எனக்கு நல்லா வந்துரும் வாயில… குணா உன் பிரென்ட் வெளியே வரமுடியாதபடி ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அம்மாட்ட வசமா சிக்கப்போறான் பார்த்துட்டே இரு.”


“என்ன எல்லோரும் கூட்டு களவாணிங்களா? என் அப்பாரு என்னவோ என்னை அடக்க ஒருத்தி வருவான்னு சாபம் கொடுத்துட்டு, எவளோ ஒருத்தியை எனக்கு பார்த்து வச்சிருக்காரு. நீங்களும் இப்போ அதையே தூக்கிட்டு வரீங்க?” என்று முறைத்தவன் திண்டின் மீது ஏறி அமர, அவன் அருகிலேயே அமர்ந்தனர் குணாவும் அவன் மாமாவும்.


“பொண்ணு பார்த்திருக்காங்களா? சொல்லவே இல்லை?” தச்சனைப் போலவே ஆர்வமாய் கேட்டான் குணாவும்.


“நீ வேற இம்சையை கூட்டாத குணா. நானே செம்ம காண்டுல இருக்கேன்.” முகம் இறுக எதிரே தெரிந்த மரங்களை வெறித்தவன், “என்னமோ அவர் கல்யாணம் செய்துக்க போற மாதிரி பொண்ணு பார்த்து முடிவு செய்து வச்சிருக்காரு. என்னை கேட்கணும், என் விருப்பம் முக்கியம்னு என்னைக்குமே நினைச்சது இல்லை அவரு... செம்ம காண்டாகுது அவரை நினைச்சாலே…” என்றவன் திண்டில் ஓங்கி குத்த, பதறிப்போய் அவனை தடுத்தனர் மற்ற இருவரும்.


“என்னை அடிக்க முடியாத கோபத்தை அந்த திண்டு மேல காட்டிட்டு இருக்கானா?” என்ற கம்பீரக் குரல் அவர்களின் முதுகுப்புறம் கேட்க குணாவும் அவன் மாமாவும் தான் பதறிப்போயினர்.


“அப்படியெல்லாம் இல்லை அப்பா… சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று குணா சமாளிக்க, அன்பரசன் குணாவின் மச்சினனை நலம் விசாரித்துவிட்டு தன் மகன் முகம் பார்த்தவர், “இத்தனை நாள் நீ கேட்டுட்டு இருந்தது உனக்கு கிடைக்கும் நீ இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தால்…” என்று ஒரேபோடாய் போட, திண்டிலிருந்து குதித்து இறங்கிய தச்சன் நம்பாத பார்வை பார்த்தான் அவரை.


“என்ன திடீர்னு? என் மேல நம்பிக்கை வந்துடுச்சா?” என்று கேட்ட தச்சனின் கண்களில் ஆர்வம் மெல்ல வந்து போனது.


“அந்த பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று அவனை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, அவரின் பார்வையால் எழுந்த கோபத்தின் வேகத்தை காலை தரையில் உதைத்து கட்டுப்படுத்தினான் தச்சன்.


அவனின் தோளை அழுத்தி அவனை சாந்தப்படுத்த முயற்சி செய்த குணா, “அப்பா சொன்னா சரியா இருக்கும். நீ முரடு பிடிக்காத,” என்க,


“உன் அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும். நீ அப்பா காட்டுற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுங்கா வாழ்க்கையை வாழுற வழியைப் பாரு.” என்று குணாவின் மாமாவும் தச்சனின் தோளை தட்டிவிட்டு குணாவுடன் கிளம்ப, கட்டுக்கடங்கா ஆத்திரம் எழுந்தது அவனுக்கு. அந்த ஆத்திரத்தில் மனம் துணை தேட, தன் சட்டைப் பையை துளாவியவன் ஒரு சிகரெட்டை பற்றவைத்து புகையாய் ஆத்திரம் தீர ஊதித் தள்ளினான்.


***


நித்யாவிடம் அரட்டை அடித்துக்கொண்டே தன் மடியில் இருந்த மழலைகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தவள் தன் அன்னை வந்து உலுக்கவும் தான் அழைப்பை துண்டித்தாள்.


“என்ன அம்மா?”


“அப்பா உன்னிடம் எதுவோ சொல்லனுமா…” என்றவர் கணவரை காண, அவளின் பார்வையும் அவரிடம் சென்றது.


சற்று தயங்கியவர் மகளை சங்கடமாய் பார்த்து, “நம்ம சொந்தத்தில் இருந்து உனக்கு நல்ல வரன் எல்லாம் வருது. சீக்கிரம் முடிச்சிடலாம்னு பார்க்குறேன்.” என்று மென்று விழுங்கி பாதி விஷயத்தை மட்டும் சொல்ல, அவரை கூர்மையாய் பார்த்தாள் அவள்.


“எதுக்குப்பா இப்போ எனக்கு கல்யாணம்? நான் மேல்படிப்பு படிக்கணும். வேலைக்கு போகணும், அப்புறம் தான் எல்லாமே.” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய் அழுத்தமாய் தன் முடிவை சொன்னாள் குந்தவை.


அவளது தந்தை நந்தனோ மெலிதாய் சிரித்துவிட்டு மகளை அருகில் அழைத்தார். தன் மடியில் இருந்த அக்காவின் இரட்டை பிள்ளைகளை தரையில் அமர்த்தி விளையாட பொருட்கள் கொடுத்துவிட்டு தந்தையின் அருகில் வந்தாள்.


“சூழ்நிலையை புரிஞ்சிகிட்டு அதற்கேற்றாற் போல முடிவெடுப்பேன்னு தெரியும். அந்த நம்பிக்கையில் தான் அப்பா முடிவெடுத்துட்டேன்.” என்க, மளுக்கென்று கண்ணீர் திரண்டது அவளது அகண்ட விழிகளில்.


யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசிடும் தைரியம் கொண்டவளுக்கு ஒரே ஒரு பலவீனம், அவளது தந்தை. அவரின் பாசம், அவரின் கோபம். எவ்வளவு முயன்றும் தந்தையின் பாசம், கோபம், அவள் மீதான அவரின் கர்வம், நம்பிக்கை என அவர் எதை முன்வைத்து அவளிடம் யாசிக்கும் காரியங்களுக்கும் அது சரியா தவறா என்று யோசியாமல் தலையாட்டி விடும் குணத்தை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவள் யோசிக்கும் முன்னர் அவள் தலை தானாக ஆகிவிடும் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த கெட்ட பழக்கமே இப்போது அவர் நம்பிக்கையுடன் பேசவும் முந்திக்கொள்ள, அவரின் முடிவை எதிர்த்த புத்தி, கண்ணீராய் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தது.


“அழாத குந்தவை. உனக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துட்டா நாங்க அடுத்தது உன் அக்கா வானதியையும், அவள் பிள்ளைகளையும் பார்ப்போம். ஓட தெம்பு இருக்கும் போதே உனக்கு கல்யாணத்தை பண்ணிட்டு, பசங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்சதை சேர்த்து வைக்கணும். எங்களுக்கு பிறகு வானதி நிம்மதியா வாழ வழி செய்யணுமே.” என்றவர் குரல் இறுதியில் உடைந்துவிட, வாழ்க்கையின் பாரத்தை தாளமுடியாத துக்கம் அந்த குடும்பத்தினர் தொண்டையை அடைத்தது.


“ஏன் இப்படி பேசுறீங்க? நான் மேல்படிப்பு கூட அப்புறம் படிச்சிக்குறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் டிகிரி முடிஞ்சிடும். உடனே வேலையில் சேர்ந்திடுறேன்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து அக்காவை பார்த்துக்கலாம் அப்பா.”


“நீயாவது நிம்மதியா நிறைவா வாழுவதை பார்த்தால் தான் எங்களுக்கே வாழ்க்கையில் பிடிப்பு வரும் குந்தவை. இதற்கு மேல உன் விருப்பம்.” என்று அவள் அன்னை சுமதியும் சேர்ந்துகொண்டு கண்ணை கசக்க, குந்தவைக்கு நெஞ்சு அடைத்தது.


கண்ணீர் திரண்டு மங்கலாய் தெரிந்த பார்வையுடனே வானதியை காண, அவளோ, “நீ எங்க இருந்தாலும் உன்னோட வாழ்க்கையை பிசிறில்லாமல் செதுக்கிப்ப குந்தவை. எனக்காக யோசிக்க வேண்டாம், உனக்கு என்ன தோணுதோ செய். அம்மாவும், அப்பாவும் அவங்களோட துக்கத்தை மட்டும் மனசுல வைச்சு பேசுறாங்க.” என்று தெளிவில்லாமல் வானதி குழப்பியடிக்க, குந்தவையின் பார்வை தன் பெற்றோரிடம் நிலைத்தது. அவர்களின் வேண்டலும் நியாயமானதாகவே இருந்தது.


மூத்த மகள் வானதி மணமாகி இரண்டு வருடங்களிலேயே ஆணொன்று, பெண்னொன்றாய் ஒரு வயது இரட்டை பிள்ளைகளுடன் கணவனை இழந்து தனியாய் பிறந்த வீட்டிற்கு வந்துவிட, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த மழழைகளும், குந்தவையும் தான்... இப்போது குந்தவையின் இளங்கலை படிப்பு முடிய, அவளை மேலே படிக்க வைத்து அதற்கேற்றாற் போல சீர் வரிசைகளுடன் திருமணம் செய்துவைக்க தெம்பில்லை நந்தனுக்கு. மூத்த மகளையும் பார்க்க வேண்டும், இரட்டை பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டுமே... எதிர்காலம் குறித்த பயம் அதிகரிக்க அதிகரிக்க, இறுதிக்காலம் குறித்த ஐயம் கழுத்தை நெறிக்க, தாங்கள் கண் மூடுவதற்குள் குந்தவையை மட்டுமாவது கரை சேர்த்திட வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமானது. அதுவே அவசர அவசரமாய் குந்தவைக்கு மாப்பிள்ளை பார்க்க தூண்ட, தெரிந்தவர்களிடம் சொல்லி இருந்தார். இப்போது அவர்களுக்கு தோதான இடம் வந்திருக்கிறது.


“உங்களுக்காக மட்டும் தான் சம்மதிக்கிறேன். ஆனால் எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. அதற்கு ஒத்துவந்தால் மட்டும் தான் திருமணம்.” என்று கட்டளை போட, மகள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை யூகித்திருந்தார் நந்தன்.


“மாப்பிள்ளை கண்டிப்பா விவசாயம் பார்க்கும் விவசாயியா இருக்கக்கூடாது. நல்லா படிச்சிருக்கணும். சிட்டி பையனா இருக்கனும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது. நான் மேல்படிப்பு படிக்க சம்மதிக்கணும். வேலைக்கு கண்டிப்பா போவேன், என்னோட சம்பாத்தியம் எல்லாம் வானதி பசங்களுக்குத் தான். இதற்கெல்லாம் ஒத்துவந்தால் எனக்கு சம்மதம்.” என்று குந்தவை கராறாய் சொல்ல, மகளை விழியெடுத்து பார்க்காமல், மண்டையை மெல்ல ஆட்டினார் நந்தன்.


அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பெருந்தச்சன் விவசாயம் செய்கிறான் என்று சொந்தத்தில் ஒருவர் சொல்லி விசாரித்து தெரிந்துகொண்ட ஒரே காரணத்திற்காகவே அந்த இடத்தை பேசி முடிப்பதில் ஆர்வமாய் இருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வாளோ... அதுவும் அவன் வசிக்கும் ஊர் பெருநகரமின்றி பத்தாயிரத்திற்கு குறைவாக வசிக்கும் ஊராட்சி என்று தெரிந்தால்…


வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில கொள்கைகளை வைத்திருப்பவள், எப்படியும் வாழலாம் என்ற கொள்கை உடையவனுடன் சேர்ந்தால்?





No comments:

Post a Comment

Most Popular