Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 14

 

*14*

எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள்,

நீ என்கிட்ட சொல்லிட்டு வானதியை கூட்டிட்டு வந்திருக்கணும்.என்று அடுத்ததை துவங்கினாள். சாவுகாசமாய் மெத்தையில் அமர்ந்தவன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த அறிவழகியின் கன்னத்தை ஒற்றைவிரல் கொண்டு வருடிவிட்டு திரும்பினான்.

அட… எல்லாத்துக்கும் குதிக்காத.

உனக்கு புரியுதா இல்லையா? அன்றைக்கு தானே மாமா எது செய்தாலும் எங்ககிட்ட முன்னரே சொல்லிட்டு செய்யுங்கன்னு சொன்னாங்க. அப்போ எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இப்போ உன் விருப்பத்துக்கு செஞ்சிட்டு வந்து நிக்குற?” 

அன்னைக்கு நீதான் அவர் சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டுன, நான் இல்லை…என்றான் பட்டென்று.

ஓ… இப்படி வேற நினைப்பிருக்கா உனக்கு… அவளை அழைச்சிட்டு வந்தது எனக்கே அதிர்ச்சியா இருக்கும் போது வீட்டில் என்ன நினைப்பாங்க? எங்கம்மாவை பற்றியும் தான் என்ன நினைப்பாங்க? நீதான் கூப்பிடேன்னா அவங்க எப்படி அனுப்புனாங்கனு தெரியல…சினம் கொஞ்சமும் கரையாதிருக்க, தச்சனும், சுமதியும் செய்ததில் சற்றும் உடன்பாடு வரவில்லை குந்தவைக்கு.

ச்சு… உங்கக்காவ உன்கிட்ட அழைச்சிட்டு வந்ததில் என்ன தப்பிருக்கு? உன்கிட்ட தானே கூட்டிட்டு வந்தேன்? வெளில சொன்னியே எங்களுக்கு உன் வீட்டில் உரிமையிருக்குனு… அதே உரிமை உனக்கும் இங்கே இருக்கு. உனக்கு உரிமையுள்ள வீட்டில் உங்கக்கா வந்து இருக்கலாம். தப்பில்லை.என்று அவன் வாதத்திலேயே நின்றான்.

நீ செஞ்சதை நியாயப்படுத்த பார்க்காத.

அப்போ உன்னோட எண்ணங்கள் தான் சரின்னு நிரூபிக்க நீ முயற்சி பண்ணாத…என்றவன் அவளிடமிருந்த அறிவழகனை பிடுங்கி மெத்தையில் அவன் சகோதரி அருகில் படுக்க வைக்க, அவன் படுக்காமல் மறுப்பாய் ஓசை எழுப்பி, தன் குட்டி விரல்களால் தச்சன் சட்டையை பற்றுக்கோளாய் இறுக பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான்.

தச்சனின் பார்வை இப்போது தன் கவனத்தை இழுக்க முயலும் குட்டியின் மீது பதிந்தது, “தூங்குடா குட்டிப்பையா… உன் சித்தியை சமாதானப்படுத்துற கடினமான டாஸ்க் இந்த சித்தப்பாவுக்கு இருக்குடா… அதுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க குட்டிப்பையா...என்ற அவனின் இலகுவான பேச்சுக்கள் அவளின் எரிச்சலைத் தான் அதிகப்படுத்தின.

“தீவிரமா ஒரு விஷயம் பேசிட்டு இருக்கும் போது இப்படி குறுக்க குறுக்க பேச வேண்டியது… அதென்ன வெளில முக்கியமா பேசிட்டு இருக்கும் போது வாய் நீண்டுச்சே?”

அவளை ஒருபார்வை பார்த்தவன் அறிவழகனை கைகளில் அள்ளிக்கொண்டு எழுந்து அவளை நெருங்கி, “இப்போ நான் உன் அக்காவை கூட்டிட்டு வந்தது உனக்கு பிரச்சனையா இல்லை நான் பேசினது பிரச்சனையா?” என்ற கேள்விக்கு, பதிலேதும் சொல்லாமல் குந்தவை மெளனம் காக்க, அறையிலிருந்து வெளியேற ஆயுத்தமானவன்,

கடுப்போட பார்த்தா எல்லாமே தப்பாத்தான் தெரியும். சண்டை போடத்தான் தோணும். நிதானத்துக்கு விடுப்பு கொடுத்துட்டு கோபத்தை தலையில் உசரமா ஏத்தி வச்சிருக்க அதை கொஞ்சம் கீழ இறக்கு. 

உங்கம்மா உன்கிட்டையும் இங்கேயும் பேசுறேன்னு தான் சொன்னாங்க… அங்கிருந்து நான் இவங்களை கூட்டிட்டு வரும்போது அந்தாளுங்களும் அங்கத்தான் இருந்தானுங்க. உங்களுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் விளக்கி நீங்க அனுமதி கொடுத்ததும் இவங்களை கூட்டிட்டு வந்திருந்தா அதுவே அவங்களுக்கு ப்ளஸ் ஆகியிருக்கும். இதுக்கே இவ்வளவு யோசிக்குறாங்களே நாளைக்கு இவங்க எப்படி பசங்களை பார்த்துப்பாங்கன்னு பேசுவாங்க. ஆனால் இப்போ, உங்க குடும்பத்துக்கு எதுனாலும் முன்ன வந்து நிற்க ஆளுங்களும் அவங்க ஆதரவும் இருக்குனு ஒரு யோசனை வரும். உங்ககிட்ட நேரடியா பிரச்சனை செய்ய யோசிப்பாங்க… அதை நாம பயன்படுத்திக்கனும். நாம கொடுக்குற வாக்கு அந்த நேர இன்னலிலிருந்து தப்பிப்பதற்காக இருக்கக்கூடாது. காலத்துக்கும் சொன்ன வாக்கை காப்பாத்தணும். அதை அவங்களுக்கும் புரிய வைக்கணும்.” என்ற தச்சனின் கண்ணோட்டம் முற்றிலும் வேறாக இருந்தது.

அவனது விளக்கங்கள் அவளை யோசனைக்குள் ஆழ்த்த, அவர்களுக்குள் இருந்த இடைவெளியை குறைத்தவன் அவள் விழியோடு விழி நோக்கி, “நீ மாறிட்ட குந்தவை. அதிகமா யோசிக்குற… எதற்கெடுத்தாலும் கவலைப்படுற… உடம்பை கெடுத்துக்காத… நடக்குறதை தடுத்து நம்மகிட்ட பிடிச்சு வச்சிக்க முடியாது. எதை பற்றியும் நினைக்காம அடுத்த வேலையைப் பாரு.என்றுவிட்டு அறிவழகனோடு வெளியேறிவிட, குந்தவை மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள். 

ஏதோ தன்னைச் சுற்றி தன்னை சார்ந்தவர்களை வைத்தே வலை சுற்றப்படுவது போன்ற பிரம்மை ஏற்பட ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் தான் மிஞ்சியது. விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அந்த விதி எது என்று கணிப்பது தாமரை இலையில் தண்ணீர் ஒட்டியது போலத்தானே. அதுவாக நடக்கும் வரை எதுவெனத் தெரியாது. புலப்படாது.

யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருக்க, மெத்தையில் அப்படியே சரிந்தவள் தலையை அழுந்த பிடித்துக்கொண்டு கண்மூடி படுத்துவிட்டாள். படுத்தவள் எப்போது உறங்கினாளோ வானதி வந்து எழுப்பும் வரையில் நித்திரையின் பிடியில் வலிகள் அடங்கி மனம் நிர்மலமாய் இருந்தது. 

“என்னடி இப்படி நேரம்கெட்ட நேரத்தில் விளக்கு வச்ச பிறகு தூங்கிட்டு இருக்க? உன் மாமியார் திட்டப் போறாங்க.” என்ற பதறளுடம் குந்தவையை பிடித்தெழுப்பினாள் வானதி.

மெதுவாய் ஆறஅமர எழுந்த குந்தவை வானதியின் புலம்பலை சிந்தையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னருகில் குழந்தை உறங்குகிறாளா என்று பார்க்க,

“அவள் முழிச்சிட்டா... வெளில விளையாடிட்டு இருக்கா.” என்ற பதில் வானதியிடமிருந்து வந்தது.

“அத்தை மாமாகிட்ட அம்மா பேசுனாங்க. உன் வீட்டுக்காரர் தான் பேச வச்சாரு. நான் கூட உன் மாமியார் கறாரா இருப்பாங்கனு நினைச்சேன். ஆனால் அம்மாகிட்ட நல்லா பேசுனாங்க.” என்ற தகவலைக் கூட அமைதியாய் கேட்டுகொண்டாள்.

“என்னடி எதுவுமே சொல்ல மாட்டேங்குற?” என்று பாவமாய் வானதி கேட்டதற்கு கூட, 

“என்ன சொல்றதுன்னு தெரியல.” என்றதோடு முடித்துக் கொண்டு முகத்தை சீர்செய்தவள் அமைதியாய் வீட்டு முற்றத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வானதியும் சமையலறை சென்று குந்தவை பருக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். வானதியை உற்றுப் பார்த்த குந்தவை எதுவும் பேசாமல் தண்ணீர் பருகிவிட்டு தம்ளரை தரையில் வைக்கப்போக, “என்கிட்ட கொடு.” என்று அதை வாங்கிச் சென்று உள்ளே வைத்த வானதி திரும்ப வரும்போது தயாரித்து வைத்திருந்த இரவு உணவுகளை பரிமாற ஏதுவாய் முற்றத்தில் கொண்டுவந்து வைத்தாள். அவளைத் தொடர்ந்து வந்த நீலா, “தச்சா வெளில இருக்கான். சாப்பிட கூட்டிட்டு வா குந்தவை…” என்று அனுப்பிவைக்க, தேமேவென வெளியே சென்றவள் தெருவிளக்கு ஒளியில் விழிகளை அங்குமிங்கும் அலையவிட அவனின் குரலும் குழந்தைகள் இருவரின் குரலும் கேட்டதே ஒழிய அவர்கள் கண்ணில் படவில்லை.

“எங்கப்போனாங்க… ரெண்டு வாலுங்க குரலும் கேட்குது… இவன் எப்படி தனியா ரெண்டு பேரையும் சமாளிக்குறான்… இந்த அழகி அவன்கிட்ட போகமாட்டாளே… எப்படி போனா…” என்று தனக்குள் பேசிக்கொண்டே குரல் வந்த திசை நோக்கி நடைபோட, வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் சென்று நின்றாள் குந்தவை. வீட்டின் சுற்றிலும், கொட்டகையிலுமே சுழல் எல்.ஈ.டி பல்ப் பொருத்தப்பட்டிருக்க பெரிதாய் பயமொன்றுமில்லை.

விழி எதிரில் அழகான காட்சியொன்று விரிந்திருக்க, மனம் தன்போக்கில் உற்சாகமானது. ஒருபுறம் அறிவழகன் தச்சனின் கால்களை இறுக பற்றிக்கொண்டு அதிலேயே தன் முகம் பதித்து முகத்தை மறைத்திருக்க, குனிந்திருந்த தச்சனின் ஒருகரம் அவனை பிடித்திருந்தது மறுகரமோ அறிவழகியை பாதுகாப்பாய் சுற்றி வளைத்து அவனது பெரிய கரத்தினுள் அவளது பிஞ்சிக் கையைப் பிடித்து கன்றுக்குட்டியின் மிருதுவான சருமத்தை வருடிக்கொடுத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான்.

அறிவழகன் ஐயத்தில் தன்னை மறைத்துக் கொள்வதுமாய் அவ்வப்போது ஆர்வத்தில் எட்டிப்பார்ப்பதுமாய் இருக்க, அவனுடன் பிறந்தவளோ உற்சாகமாய் ஓசை எழுப்பி கன்றுக்குட்டியை ஆசையுடன் தடவிப்பார்த்து சிலிர்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அந்த தளிர் கரங்கள் கன்றின் மீது மிருதுவாய் வலம் செல்லும் போதும் கன்றுக்குட்டியும் தன் தலையை சிலுப்பி தன்னுடைய ஒற்றவயதுடைய அழகியுடன் அதற்கு தெரிந்த வழியில் விளையாடியது.

“ப்பா... ப்பா... ப்பூ... ம்மூ...” என்று அவ்வப்போது தச்சனை நிமிர்ந்து பார்த்து அவனிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவனும் அவளுக்குச் சமமாய் அவளிடம் கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான்.

“அட... பாரேன்... டூ விட்டிருந்தவ இன்னைக்கு ப்பா... ப்பானு உருகுறா... சொக்குபொடி போட்டுட்ட அவளுக்கும்...” அவர்களின் இனிமையில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் ஆவலுடன் குந்தவை அவர்களை நெருங்கி அறிவழகனை தூக்கிக்கொள்ள, குரல் கேட்டு சட்டென நிமிர்ந்த தச்சன் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துவிட்டு அவள் உணரும் முன்னர் நொடியில் அவளை பிடித்திழுத்து தன் முன் நிறுத்தி அவள் தோளிலும், கழுத்திலும் நாசி கொண்டு ஊர்வலம் நிகழ்த்த, அவளின் ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. 

ஒருநொடி குந்தவை மயங்கி பின் சூழ்நிலை உணர்ந்து நிமிர்ந்தாள், “ப்ச்... என்ன செய்யுற நீ? இது ரூம் இல்லை... பசங்க வேற இருக்காங்க...”

“புடவை கட்டுடி... இப்படி எப்போதும் முழுசா சுடிதாரை சுத்திட்டு வந்து நின்னா மனுஷன் எப்படி ரொமான்ஸ் பண்றது? கல்யாணத்தப்போ புடவையில் பார்த்தது... அப்போவும் சரியா பார்க்கல...” குந்தவை நெளிய அவன் பேச்சுக்கள் வளைந்து நெளிந்து வேறு திசையில் சென்று கொண்டிருந்தது.

“நான் என்ன சொல்றேன்... நீ என்ன செய்யுற? சாப்பிட போகலாம்... நகரு...” மறுப்பு தெரிவித்து அவன் பிடியினில் குந்தவை நகர முயல, அவனது கால்களை சுரண்ட ஆரம்பித்துவிட்டாள் அறிவழகி.

தளிர் கரங்களின் சுரண்டல் அவனை கூசச்செய்ய, சத்தமாய் சிரித்தவன் குனிந்து அறிவழகியை கையில் ஏந்திக்கொண்டான், “அடடா... சித்தி கூட போட்டிபோட தயாராகிட்டீங்களா பாப்பூ...” 

குழைவாய் ஒலித்த அவனது குரலை இனம்கண்டு கொண்டு வியப்பாய் தச்சனை நோக்கிய குந்தவையோ, “உனக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா? என்கிட்ட இப்படிலாம் நீ பேசுனதே இல்லையே...” என்று குறைபட்டுக் கொண்டாள்.

“நீ எங்கடி என்னை பேசவிடுற? என்னை எப்போதும் ஒரு பதற்றத்தில் வச்சிருக்கிறதே உனக்கு வேலையா போச்சு? அந்த பதட்டத்திலும் அப்படி இப்படினு உன்னை கரெக்ட் பண்ணி சைட் கேப்பில் நானே சிந்து பாடிட்டு இருக்கேன்... இதுல மானே தேனே எல்லாம் போட்டு பேசி நேரத்தை வீணடிக்குற முட்டாள்தனமெல்லாம் எவனாது செய்வானா... கிடைக்கிறதை அந்த நேரத்தில் எடுத்துக்கத் தான் குறியா இருப்பான். ஆனால் உனக்குள்ளும் இப்படி எல்லாம் ஆசை இருக்கு பாரேன்...” என்று புருவம் உயர்த்திச் சொல்ல, முறைப்பை உதிரித்து முறுக்கிக்கொண்டாள் குந்தவை.

“அதென்ன எனக்கெல்லாம்? நான் என்ன வேற்றுகிரகத்தில் இருந்தா வரேன்?”

“அதில் சந்தேகம் வேற இருக்கா உனக்கு... எப்போ கிட்ட வந்தாலும் நகரு, என்ன பண்றனு தள்ளிவிட வேண்டியது...”

“எதை எங்க செய்யணுமோ அங்கத்தான் செய்யணும்... ரூமைத் தவிர எல்லா இடத்திலும் எக்குதப்பா உன் கை எல்லை மீறினா கொஞ்சுவாங்களா...” என்று கையை விளையாட்டாய் ஓங்கினாள்.

“அப்போ ரூமில் செஞ்சா ஒகேங்குற...”

“செஞ்சிட்டாலும்...” என்று கழுத்தை வெட்டியவள் அங்கிருந்து நகர்ந்து உள்ளே செல்ல நடைபோட, நீண்ட அடிகளை எடுத்துவைத்து அவள் சடையை பிடித்திழுத்து நிறுத்தினான் தச்சன்.

“ஸ்...ஆ... என்னடா பண்ற?” திரும்பி பார்த்து முறைக்க, விஷமமாய் இதழை வளைத்தவன்,

“ரூமுக்கு போயிட்டா வேற என்னென்னமோ தான் நினைப்பு வருது இதெல்லாம் நியாபகம் வரமாட்டேங்குதே…” என்று இழுக்க பட்டென்று விழுந்தது அவன் வாயிலே ஒரு அடி. முதலில் நெடுங்கரம் ஒன்றால் விழுக, பிஞ்சு கரத்தாலும் அதைத் தொடர்ந்து ஒன்று விழுந்தது. 

குந்தவை அடித்ததை தூசு போல ஒதுக்கியவன் அதைத் தொடர்ந்து விழுந்த அறிவழகியின் செய்கையில் தான் அதிர்ந்து விட்டான். குந்தவை என்ன செய்தாலோ அதையே செய்தாள் அந்த அழகி. என்ன குந்தவை ஒருமுறை செய்ததை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு அறிவழகி இரண்டு மூன்று முறை அவன் வாயிலேயே அடிகளை பரிசாக வழங்க அவளது தளிர் கரங்களை பிடித்தமுக்கி ஒரு முத்தம் வைத்துவிட்டு, குந்தவையை முறைத்தான் அவன்.

“என்கிட்ட இதை செய்யாத, அதை செய்யாத அப்படி இருக்காதேன்னு எத்தனை குறை படிக்குற… இப்போ நீ என்ன செய்யுற குழந்தை முன்னாடி?”

“நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க,

“நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால் நீ செஞ்சதை பார்த்து தான் இவள் செய்யுறா?” என்று தன் கரத்தில் பவ்யமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியை காண்பிக்க, குந்தவை முகம் கூம்பிவிட்டது. 

எப்போதும் நீ செய்வது சரியாய்த் தான் இருக்கும் என்ற நேர்மறை விமர்சனங்களை அதிகம் கேட்டு பழகியவளுக்கு, நீ செய்ததும் தவறு என்ற எதிர்மறை விமர்சனத்தை பட்டென்று அவன் முன்வைக்கவும் மனம் சட்டென சோர்ந்து அதை செமிக்க முயன்றது.

அவளது எண்ணத்தை படித்தானோ என்னவோ தாடையை தடவியபடி விழியை விண்ணில் பதித்து, “ஆனா இதை மாற்ற ஒன்னு செய்யலாம்…” 

“என்ன?” என்ற ஆவல் அவளிடத்தில்...

“இப்போ நீ அடிக்க சொல்லிக் கொடுத்த விதம் விபரீதத்தில் முடியும்… ஆனால் இதையே ப்ளான் பீ (B) யூஸ் பண்ணி நடந்ததை மாத்திடலாமே…”

“சுற்றி வளைக்காம என்ன சொல்ல வர்றியோ அதை நேரா சொல்லு…” என்று அவள் துரிதப்படுத்த, அவளை சுண்டி இழுத்தான் தச்சன்.

அவன் இழுத்த வேகத்தில் பதறி, தன் தோளில் இருந்த அறிவழகனை கெட்டியாக தன்னோடு அணைத்துக்கொண்டு அவனை முறைத்தாள் குந்தவை.

“இந்த முறைப்பை ஓரம்கட்டிட்டு கையால அடிச்சதை அழிச்சிட்டு கிஸ் அடிச்சி மறுபடி ஆரம்பிச்சிடு… அவளும் நல்ல பழக்கத்தை கத்துப்பா… என்ன நான் சொல்றது?” 

“கேடி… அங்க சுத்தி இங்க சுத்தி உனக்கு தேவையானதில் வந்து நிக்குற. நான் கூட என்னவோ உருப்படியா சொல்லப் போறேன்னு நினைச்சேன்…” என்று சிணுங்கினாள் குந்தவை.

“ஏய்… என்னடி இப்படி பொசுக்குனு உருப்படியில்லைனு சொல்லிட்ட… பொண்டாட்டிக்கிட்டேயும், பிள்ளைக்கிட்டேயும் வாங்குற கிஸ்ஸில் இருக்கும் கிக்கு தெரியாதவளா இருக்கியே… சரிசரி.. அந்த பாடமெல்லாம் நான் அப்புறம் எடுக்குறேன். நீ சீக்கிரம் கோட்டை அழிச்சிட்டு மாத்திப் போடு…” என்று கன்னத்தை அவளுக்கு காட்டிக்கொண்டு நிற்க, சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட்டு எவரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பின்பு வேண்டுமென்றே அவன் கன்னத்தை கடித்தாள் குந்தவை.

“ஸ்… திருந்தவே மாட்டடி நீ…” என்று தச்சன் சொல்லி முடித்திருக்கவில்லை அவளிடம் இருந்த அறிவழகன் பாய்ந்து தச்சனின் கன்னத்தில் ஈரலிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்த தன் பல்லின் தடத்தை பதித்தான்.

“டேய்… நீயுமாடா… குடும்பமே சேர்ந்து ஒரு அப்பாவியை எவ்வளவு டேமேஜ் பண்றீங்க…” தச்சனின் முகம் போன போக்கில் வெடித்துச் சிரித்த குந்தவை, தச்சனின் கன்னத்தில் அறிவழகனின் பற்தடத்தோடு சேர்ந்து இடம்பிடித்திருந்த எச்சிலை தன் துப்பட்டா கொண்டு துடைத்துவிட்டு அறிவழகன் பதித்த தடத்திலேயே தன் இதழை ஒற்றி எடுத்தாள்.

“ஷப்பா… ஒரு முத்தம் வாங்க எவ்வளவு மெனக்கெட வேண்டியதிருக்கு… அடி, கடி எல்லாம் வாங்குனாத்தான் கிடைக்கும் போல… ஆனாலும் இதெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி மாதிரி...” என்று அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு செல்ல, மீண்டுமொரு முறை அழுத்தமாய் அவனது கன்னத்தில் இதழ்களை குவித்து, பதித்து பின் பிரித்தெடுத்தாள் குந்தவை.

“இப்போதைக்கு இவ்வளவு தான்… இதுக்கு மேல மூச்சுவிடக்கூடாது…” என்று இதழில் விரல் வைத்து மிரட்ட, 

“தம்மாத்துண்டு முத்தம் கொடுத்துட்டு என்னமா மிரட்டுற நீ…”

புருவங்களை ஏற்றி இறக்கியவள், “இதுக்கு அளவெல்லாம் இருக்கா என்ன?” 

அவள் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னரே அழகியும், அழகனும் பாய்ந்து குந்தவை செய்தது போலச் செய்கிறேன் என்ற பெயரில் அவன் கன்னத்தை மாறி மாறி கடித்து ஈரப்படுத்திக் கொண்டிருந்தனர். இரு பிள்ளைகளுமே தங்களுக்கு கிடைத்த விளையாட்டுப் பொருளென அவன் கன்னத்தை பங்குபோட்டு பிடித்துக்கொண்டு உரிமைப் போராட்டம் நடத்த அங்குமிங்கும் திரும்ப முடியாமல், விலகவும், விலக்கவும் முடியாமல் திக்குமுக்காடிப் போனான் தச்சன்.

“அடேய்… போதும்டா… விடுங்க…” என்று தச்சன் கதற, சிரித்துகொண்டே அவன் படும் இன்ப அவஸ்தைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் குந்தவை.

“அடியேய் என்னடி பராக்கு பார்த்துட்டு நிக்குற… இந்த பாசக்கார புள்ளைங்க கொஞ்சுறேன்னு என்னை குதறத்துக்கு முன்னாடி காப்பாத்துடி…”

“பிள்ளைங்க கிஸ் கிக்கா இருக்கும்னு சொன்னா… கிக்கு அதுக்குள்ள மப்பாகிடுச்சா?” 

“நீயெல்லாம் என்னை கலாய்க்குற நிலைமைக்கு வந்துட்டேன்…” என்று  நொந்துகொண்டவன் ஒருவழியாய் பிள்ளைகளிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப,

“ரெண்டு பசங்களும் உங்களை ரொம்ப தொல்லை பண்றாங்களா?” என்று கேட்டுகொண்டே கவலை தோய்ந்த முகத்தோடு உணவுக் கிண்ணத்துடன் அவர்களிடம் வந்தாள் வானதி.

கவனம் இப்போது வானதியிடம் திரும்பிவிட, அறிவழகி சட்டென தன் அன்னையிடம் தாவினாள்.

“அதெல்லாம் இல்லை…” தச்சன் தயக்கமின்றி பதில் பேச, வானதியிடமிருந்த கிண்ணத்தை வாங்கிக்கொண்டாள் குந்தவை.

“நீங்க சாப்பிட போங்க… அத்தை உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க.” குனிந்த தலை நிமிராமல் தயக்கத்துடன் தச்சனிடம் சொன்னவள் தங்கை புறம் திரும்பி, “குந்தவை நீயும் போ… நான் பசங்களுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்…” 

“எல்லோரும் ஒன்னாவே சாப்பிடலாமே... குந்தவை சாப்பிடலாம் தானே? பசங்க சாப்பிட அடம் பண்ணுவாங்களா?”

மறுப்பாய் குந்தவை தலையசைக்க, அவளிடமிருந்து கிண்ணத்தையும் அறிவழகனையும் வாங்கிகொண்டு உள்ளே சென்றான்.

“ரொம்ப நேரம் வெளில நிக்காதீங்க… இருட்டில் பூச்சி இருந்தாலும் தெரியாது.” என்று சொல்லிவிட்டு செல்ல, அக்கா தங்கை இருவருமே அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.

அன்பரசன் ஏற்கனவே உண்டு கொண்டிருக்க, நீலா தச்சனுக்கும் உணவு எடுத்து வைத்தார்.

வானதி அங்கேயே ஒரு ஓரமாய் பிள்ளைகளை அமர்த்திக்கொண்டு உணவு ஊட்ட, இரு வாண்டுகளும் ஓரிடத்தில் அமர மாட்டேன் என அடம்பிடித்து அவளிடமிருந்து திமுறிக்கொண்டு தச்சனும் அன்பரசனும் இருக்குமிடம் தவழ்ந்து வந்தனர்.

“மம்மு சாபிட்டு வந்து விளையாடலாம்.” என்று வானதி அவர்கள் பின்னேயே ஓடிவந்து பிடித்துத் தூக்க்கிக்கொண்டு நகர, அவளிடமிருந்து நழுவி வேக வேகமாய் கால்களை அங்குமிங்கும் இலக்கின்றி வைத்து தச்சன் மடியிலேயே சென்று விழுந்தனர்.

“மெல்ல நடங்கடா…” ஒற்றைக்கரம் கொண்டு தச்சன் ஒருபிள்ளையை தூக்கி மடியில் அமர்த்திக்கொள்ள, அவன் தட்டில் அறிவழகனும், அன்பரசன் தட்டில் அழகியும் கையை நுழைத்து உணவை கலைத்து உலாத்த, வானதி தயக்கத்துடன் கையை பிசைந்துகொண்டு நின்றாள்.

குந்தவை இருவரையும் தூக்கியதற்கும் சிணுங்கி பின் பெருங்குரலிட்டு அழ,

“விடுமா… சின்ன பிள்ளைங்க அப்படித்தான் இருக்கும்… நாம என்ன செய்றோமோ அதையே செய்யணும்னு நினைப்பாங்க.” என்று அன்பசரன் தடுக்க, நீலா அவர்களுக்கு சிறிய தட்டில் உணவை வைத்துக் கொடுத்தார்.

தனக்கென்று உணவுத் தட்டுகள் முன் வைக்கப்படவும், உற்சாக கூக்குரலிட்டு கால்களை பரப்பி தச்சன் அருகிலேயே அமர்ந்தவர்கள் தரைக்கு பாதியையும் தங்களின் உடைக்கு மீதியையும் கொடுத்துவிட்டு சாப்பிட்டதாய் பெயர் பண்ணினாலும் அவர்கள் முகத்தில் ஒளிர்ந்த வெற்றிப் புன்னகை எதையோ சாதித்துவிட்ட திருப்தியை பிரதிபலித்தது.

இதில் இடையிடையே கை நிறைய உணவை அள்ள முயன்று அனைத்தும் விரல் இடுக்கின் வழியே கீழே சிந்தி மிச்சமீதி மாட்டிய சிறு உணவுத்துகள்களை தச்சனுக்கு ஊட்டிவிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்பாட்டம் வேறு… அவனும் அவர்களுக்கு சிறிது ஊட்டிவிட்டு அவர்கள் ஊட்டியதையும் வாங்கிக்கொள்ள போட்டி போட்டுகொண்டு அவனை பிடித்து எழுந்து நின்று அவன் முகம், சட்டை என அவனையும் சாப்பாட்டு மழையில் நனைத்திருந்தனர் அந்த இரட்டையர்கள்.  இத்தனை களீபரத்திலும் அவர்கள் முகத்தில் தெரிந்த பொலிவு மனநிறைவாய் இருக்க, தந்தையின் அன்பு என்னவென்றே கண்டிராத அந்த பிஞ்சுகள் தங்களுக்கு நன்கு பரிட்சயமாகி நெருங்கிய உறவாகிப்போன தச்சனின் மேல் தங்கள் பாசத்தை போட்டி போட்டுகொண்டு பொழிய அக்காட்சி காணவே கனமானதாகவும், இதமானதாகவும் என இருவிதமாய் பதிந்தது.

அது வானதியிடமும் வெளிப்பட, நீலாவிடமும், அன்பரசனிடமும் சிந்தனை முடிச்சுகள். துன்பங்களை எதிர்கொள்ள திராணியற்று குடும்பத்தை பற்றி நினைக்காமல் மனைவி, பிள்ளைகளை தவிக்கவிட்டு சென்றவனால் பின்விளைவுகளை சந்தித்து வாழ்க்கையை தொலைத்து நிற்பது என்னமோ வானதியும், பிள்ளைகளும் தானே… அவன் செய்த தவறுக்கு இவர்கள் என்ன செய்வார்கள். வானதிக்கு கூட குடும்பத்தை கட்டிக்காத்து, பிரச்சனைகளை களைந்து நெறிபடுத்த வேண்டிய கடமை இருக்க அதில் அவள் தவறியிருக்கும் பட்சத்தில் அவளோடு சேர்ந்து பிள்ளைகள் என்ன பிழை செய்தார்கள்? 

கணநேர உணர்வுச் சிதறலுக்கும், இறக்கத்திற்கும் மதிப்பளித்து இறக்கத்திற்கு பின் வரவிருந்த ஏற்றத்தை அவனே அழித்துக் கொண்டதற்கு இந்த பிள்ளைகள் நியாயமாய் தங்களுக்கு கிடைக்கவேண்டிய தந்தை பாசத்தை இழக்க வேண்டுமா? யாருக்குத் தான் அழுத்தங்களும், கலக்கங்களும் இல்லை? அவரவர் வசதிக்கு, தகுதிக்கு ஏற்ப இக்கட்டுக்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதன் வீரியம் அவரவருக்கே தெரிந்த ஒன்று... அதையெல்லாம் தாண்டித்தானே பலர் சாதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அவ்வளவு ஏன்… பயந்து நடுங்கி வாழ்க்கையில் தெளிவில்லாமல் இருக்கும் வானதி கூட தன்னை துன்புறுத்திக் கொள்வதை பற்றி யோசிக்கவில்லையே…. அவளை ஊக்குவித்தால் நன்றாய் வருவாளோ… அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமையுமோ… அமைந்த பின் ஒருவன் வருவானோ… அந்த பிள்ளைகளின் ஏக்கம் தீர்க்கவும் ஒருவன் பிறக்காமலா இருப்பான்? என்ற எண்ணங்கள் எழ, அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அந்த ஒருவன் அவர்கள் வீட்டில் அவர்களுக்கு பிறந்தவனென்று… இங்கே வரவேண்டியவள் எங்கோ திசை மாறிச் சென்று மீண்டும் கரை தேடி சேர வேண்டிய இடத்திற்கு தங்கை மூலம் வந்து சேர்ந்திருக்கிறாள் என்று அவளுக்கும் தெரியவில்லை. 

No comments:

Post a Comment

Most Popular