Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 17


                                                                  *17*

போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை.

ஏற்கனவே குந்தவை ம் என்றால் வரிந்துகட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்கிறாள் இதில் பெற்றவரே அவனை அவள் முன் வைதால்… அவனை மதிப்பாளா… அவனை இன்னும் தானே ஏசுவாள்… என்ற எண்ணம் வலுபெற அன்பரசன் சொன்னதையெல்லாம் காதிலே வாங்கவில்லை அவர். 

நேரே அவனை அறைக்கு கூட்டிவந்து மெத்தையில் படுக்கவைத்துவிட்டு குந்தவையிடம் அவனை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதெப்படி அவர் அதைச் சொல்லலாம்? அவங்க பையனை நான் என்ன தொந்தரவு செய்திடப் போகிறேன்… என்ற சுணக்கம் குந்தவைக்கு ஏற்பட்டாலும் அதை புறந்தள்ளிவிட்டு தச்சனிடம் கவனத்தைப் பதித்தாள். கசங்கியிருந்த அவனது மேல்சட்டையை முழுதாய் நீக்கிவிட்டு ஒருநிலையில் இல்லாமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை பிடித்து தன் புறம் திருப்பினாள் குந்தவை.

“என்னடா பண்ணிட்டு வந்திருக்க? யாரைக் கேட்டு குடிச்ச? என் பேச்சை கேட்கக்கூடாதுன்னே முடிவு பண்ணிட்டீயா?” வருத்தமும், எரிச்சலும் பன்மடங்கு இருந்தாலும் அவனிடம் இப்போது அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் சற்று தணிந்தே பேச்சு கொடுத்தாள் அவள்.

“நீதானே சொன்ன… வேற என்னனென பழக்கம் இழுக்கோ அதையெல்லாம் ஒன்னா சொல்லிடுனு… உன் பேச்சை கேட்டாலும் டிட்டுற கேட்கலைன்னாலும் என்னையே டிட்டுற நீ…” என்று அவன் முகத்தை சுழிக்க, அவளது பொறுமையெல்லாம் காற்றில் பறக்க தயாராய் இருந்தது.

“டேய்… நடிக்காத… சொல்லச் சொன்னா குடிக்குற பழக்கம் இருக்குனு நீ சொல்லியிருக்கனும் ஆனால் நீ அதை செஞ்சிட்டு வந்திருக்க…” என்று குந்தவை முறைக்க, தச்சன் கை உயர்த்தி அவள் கன்னத்தில் கோடிட்டிட்டான்.

“நீ டிட்டுனீயா அதுதான் குச்சேன்.”

அவன் கையை தட்டிவிட்டவள், அவனை முறைத்தபடியே தான் நின்றாள். “திட்டுனா அதை திருத்திக்க பார்க்கணும். அதை விட்டுட்டு இன்னொரு தப்பை பண்ணிட்டு வந்திருக்க… இப்போவும் திருந்துற யோசனை கிடையாது அதுதானே?”

“போ… நீ எப்போதும் டிட்டிட்டே இருக்க…”

“நீ பண்ற வேலைக்கு உன்னை கொஞ்சுவாங்களா? குடும்பம்னு ஆகிட்டு இன்னமும் விவரம் புரியாம தானே இருக்க?” என்று அவள் கடிய, அவனோ பட்டென்று அவள் கையை பிடித்துக்கொண்டான்.

“கொஞ்சேன்… நான் கொஞ்சலைன்னு மட்டும் சொல்ற… நீயும் என்னை கொஞ்ச மாட்டேங்குற.” என்று ஏக்கமாய் உரைத்தவன் தடுமாறி எழுந்தமர்ந்து முகத்தை அவளருகில் கொண்டு போக, அவன் கன்னத்தை பிடித்து மறுபுறம் திருப்பினாள் குந்தவை.

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… விழுந்துட்டேன்னு சொன்ன… எங்க விழுந்த? எப்படி விழுந்த?” என்று பேச்சை திசைதிருப்பி அவனை ஆராய, 

“லாரில மோதி… விளுண்டுட்டேன்.” என்றான் சாவுகாசமாய். அவளுக்குத்தான் பக்கென்றிருந்தது.

“என்ன? லாரில மோதுனீயா?” என்று பதறியவள் அவன் கை கால்களை தடிவிப்பார்த்து அவனுக்கு பெரிதாய் எதுவும் ஆகவில்லை என்பதை மனதில் பதியவைக்க முயன்றாலும், ஐயம் சூழ்ந்துகொண்ட மனம் அமைதியடைய மறுத்தது.

“மோதிடுச்சுன்னு இவ்வளவு சுலபமா சொல்ற… ஏன்டா இப்படி பண்ணி என்னை டென்ஷன் பண்ற? லாரில மோதின வேகத்துக்கு ஏதாவது விபரீதமா நடந்திருந்தா… நான் திட்டுனா நீயும் திரும்ப திட்ட வேண்டியதுதானே… அதை விட்டுட்டு இன்னைக்கு தான் நான் புதுசா திட்டுன மாதிரி குடிச்சிட்டு வந்திருக்க? என்னை பத்தி யோசிக்கவே மாட்டீயா நீ? நீ இல்லாம நான் என்னடா பண்ணுவேன்… குடிச்சிட்டு உன்னை யாரு வண்டி ஓட்டிட்டு வரச்சொன்னா? ஏடாகூடமா எதுவும் ஆகியிருந்தா? ஏன் திரும்பத் திரும்ப நான் பயப்படுற காரியத்தையே பண்ணி வைக்குற? என்னால இன்னொரு வானதியா இருக்க முடியாது… அந்த இழப்பை தாங்குற சக்தியும் எனக்கில்லை…” ஐயத்தில் தேம்பலுடன் வந்து விழுந்த வார்த்தைகளுக்கு இணையாய் அவளது கண்ணீரும் அடைபடாமல் கீழிறங்க, எப்போதும் திடமாய் இருக்கும் அவளது மனமும், உடலும் சட்டென சோர்ந்து நடுங்கியது. அவனுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ற நினைப்பே அவளது நேர்மறை தைரியங்களை அடித்து துவம்சம் செய்துவிட, அவள் அவளாகவே இல்லை. தள்ளாட்டத்துடன் கீழே கால் மடித்து அமர்ந்துவிட்டாள். 

எண்ணங்களில் முதிர்ச்சி அடைந்த பெண்தான் என்றாலும் வானதியின் நிலையைக் கண்டு அவளைப் போலவே நெருக்கமானவரை இழுந்து விடுவோமோ... என்று ஆழ்மனதில் பதிந்திருந்த தேவையற்ற பயம்தான் துவக்கத்தில் தச்சனை வேண்டாம் என்று சொல்ல வைத்தது. திருமணம் முதல் அவனது பழக்கவழக்கங்கள் வரை அனைத்துமே அவள் கையை மீறி நடந்திருக்க, இப்போதும் அவள் அஞ்சியது போலவே விவசாயத்தில் இழப்பு என்று மாமியார் மூலம் தெரிந்தவுடன் சட்டென அவள் அகத்தில் வந்து போனதேல்லாம் வானதியின் இடத்தில் அவள் நிற்பது போலத்தான். அதன் தாக்கம் தச்சனிடம் கடுஞ்சொற்களாய் பிரதிபலித்துவிட, அவனோ குடித்துவிட்டு லாரி முன் விழுந்து வந்திருக்கிறான். இறுதியில் அவள் ஐயமே நடந்தேறியிருக்க, திடமெல்லாம் விலகி உடல் உதறல் எடுத்து நடுங்கியது.

திடத்திற்கு பின் ஒளிந்திருந்த அவளது பலகீனம் அவளையும் அறியாமல் வெளிப்பட்டுவிட, அதை சரிசெய்ய வேண்டியவனோ அதனை கிரகித்து செயல்படும் நிலையில் இல்லை. அவள் அழுகிறாள் என்பது மட்டும் புரிந்து கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தவன், தள்ளாடியபடியே கீழே இறங்கி அவள் எதிரில் பொத்தென்று அமருவது போல வந்து தடுமாறி விழுந்தான்.

“ஏய் என்ன பண்ற?” பதறிய குந்தவை அவனை நிமிர்த்தப் போக, அவள் கையை தட்டிவிட்டு அவள் மடியிலேயே தலைவைத்து படுத்துவிட்டான் தச்சன்.

விழியில் தேங்கிய நீருடன் குனிந்து தச்சனை பார்த்துக் கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, வீடு வந்து சேர்ந்துவிட்ட திருப்தியில் அவள் இடையை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் அவளது உறக்கத்தையும் சேர்த்தெடுத்துக் கொண்டு… குந்தவையின் விரல்கள் தானாய் அவன் சிகைக்குள் புகுந்துகொண்டது.

சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்தெடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த நீலா தச்சன் உறங்குவதை பார்த்து விட்டு அவனை தொந்தரவு செய்ய விரும்பாது திரும்பிச் செல்ல முயல, குந்தவை அமர்ந்திருந்த தொனி மனதை நெருடியது. என்ன நினைத்தாரோ தச்சனுக்கென்று எடுத்து வந்திருந்தததை குந்தவையிடம் நீட்டினார்.

“நீயும் சாப்பிடல தானே? இதை குடிச்சிட்டு தூங்கு. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. தூங்கி எழுந்ததும் அவன் வேலையை ஆரம்பிச்சுடுவான்… அப்புறம் இதுக்கா அழுதோம்னு நீதான் வருத்தப்படுவ…” என்று தணிவாய் சொன்னவர் அவள் பதிலுக்குக் காத்திராது வெளியேற, வாயிலில் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள் வானதி.

“அத்தை சாப்பாடு எடுத்து வைக்கவா?”

“வேண்டாம் நான் பார்த்துக்குறேன்…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

வானதி வெளியேறாமல் அங்கேயே நின்றாள். அதை கவனித்த குந்தவை கண்களை துடைத்துக்கொண்டு அவளை பார்ப்பதை தவிர்த்து, தொங்கிக் கொண்டிருந்த தன் துப்பட்டாவை தச்சனின் உடலில் போர்த்திவிட்டாள். “என்னடி இங்கேயே நிக்குற? பசங்கள போய் பாரு… போகும் போது கதவை சாத்திட்டு போ...”

தன்னை தவிர்க்கும் தங்கையை குறுகுறுவென பார்த்தவள் தான் நினைத்ததை சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்புடன், “நீ ஏன்டி இப்படி இருக்க? உனக்கு அமைஞ்சிருக்கிற வாழ்க்கையை நீயே ஏன் கெடுத்துக்குற? வாயைக் குறைடி… நேர்மையா இருக்கேன் அதுஇதுன்னு சொல்லி இருக்குறதை இழந்துடாத. நீ திட்டிட்டேனு சொல்லி இன்னைக்கு குடிச்சவர் நிதானமில்லாம லாரில போய் மோதியிருக்காரு… ஏதோ நல்ல நேரம் சேதாரம் இல்லாம வீட்டுக்கு வந்துட்டாரு. மாறாக விபரீதம் நடந்திருந்தா உன் வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு நினைச்சாலே அடிவயிறு கலங்குதுடி. இனியாவது குறையை கண்டுபிடிக்காம கிடச்சதை தக்க வச்சிக்க. என்னை மாதிரி மூலையில முடங்கிடாத… அந்த வாழ்க்கை நரகம். அது உனக்கு வேண்டாம்.

நீ திட்டியதாலத் தான் இவ்வளவும் நடந்ததுன்னு இன்னும் இங்க யாருக்கும் தெரியாது. தெரியாம இருக்குறது தெரியாமலேயே பார்த்துக்க… வீட்டுல தெரிஞ்சா அதுவும் பிரச்சனை ஆகும். அத்தை உன்மேலத் தான் கோபப்படுவாங்க. உயிர் பிழைச்சு வந்திருக்காரு… இனி எல்லாமே உன் கையில தான் இருக்கு.” என்று குந்தவையின் பயத்தை கீறிவிட்டுச் சென்றுவிட, மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் முட்டிகொண்டு வந்தது.

“நான் தான் உன்னை கொடுமை பண்றேனா? உனக்கு இம்சை கொடுக்கிறேனா? சும்மா வாழ்ந்தோம்னு இல்லாம நல்ல பழக்கங்களோடும் பேரு புகழோடும் அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா மரியாதையோட நீ இருக்கணும்னு நினைச்சு தானே எல்லாமே சொல்றேன்… அப்புறம் ஏன் நீ, அக்கா, அம்மான்னு எல்லோரும் என் ஆசை தப்புங்குற மாதிரியே பேசுறீங்க? உடம்புக்கும் மனசுக்கும் எதெல்லாம் தீங்கோ அதெல்லாம் செய்யுற. நீ நல்லாயிருந்தா நானும் நல்லாயிருப்பேன், நம்ம குடும்பமும் நல்லாயிருக்கும். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? ஏட்டிக்கு போட்டியாய் செஞ்சிட்டு இருக்க. ஏற்கனவே அடுத்து நான் என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்… இப்போ நீயும் இப்படி பண்ற…” அவளது புலம்பல்கள் அனைத்தும் சுற்றியிருந்த நான்கு சுவருக்குள் சென்று மறைந்துவிட, தச்சன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.

***

“என்ன நடந்தது வீட்டுல? எதுக்கு அவன் குடிச்சிட்டு வந்தான்?”

“இதென்ன கேள்வி… அவனுக்கு தோணியிருக்கும் குடிச்சிருப்பான்.”

“என்கிட்ட எதை மறைக்கணும்னு நினைச்சாலும் முடியாதுன்னு உனக்கே தெரியும் நீலா. அந்த பய அடிக்கடி தம்மடிப்பான் ஆனால் ஏதாவது விஷேசம் நடந்தா மட்டும் தான் குடிப்பான். இன்னைக்கு இந்த ஊரில எந்த வீட்டிலும் விஷேசம் கிடையாது. முன்ன மாதிரி வெட்டிப் பசங்க கூடவும் இப்போ இவன் சுத்துறது கிடையாது. அப்புறம் திடீர்னு என்ன ஆச்சு இன்னைக்கு?” என்று அன்பரசன் கிடுக்கிபிடி போட, நீலா மாலை நடந்ததை சொன்னார்.

“நான் எப்போதும் போலத்தான் சொன்னேன். அவனும் எப்போதும் போல அலட்டிக்காம பதில் பேசி காசு வாங்கிட்டு போயிட்டான்.”

“நீ ஏன் இவ்வளவு கடினமா பேசுன? பொறுமையா சொல்ல வேண்டியது தானே… நீ சொன்னா கேட்காமலேயே போயிடுவான்.”

“வெளில அவனை அந்த முறை முறைச்சீங்க. இப்போ உங்க புள்ளையை நான் திட்டிட்டேன்னு என்கிட்ட பாயுறீங்க…” என்று நீலா கேட்டேவிட, அன்பரசன் முகம் கனிந்தது.

“எப்போதும் நான் தான் அவனை ஏதாவது சொல்லிட்டே இருப்பேன், நீ சமாதனம் பண்ணி வைப்ப. இப்போ நீயே இவ்வளவு கடினமா பேசுனா அவன் தாங்குவானா… புள்ளை பாவம்டி. இப்போ தானே வேலை செய்யவே இறங்கி இருக்கான். அதோட ஒரு போகம் தானே முடிஞ்சிருக்கு… பழகப்பழக கத்துப்பான். விழுந்தா தான் எழ முடியும். இழப்பை சந்தித்தால் தான் வெற்றியோட இனிப்பு சுவையா இருக்கும். என்னால முடியுற வரை என் பசங்களுக்காக உழைச்சிட்டு போறேன். அதை ஏன் சொல்லிக் காண்பிக்கிற?”

“சரித்தான்… அப்பப்போ கால் வலிக்குது கை வலிக்குதுனு ராத்திரியில ஒரு கிழம் முனகிகிட்டு கிடக்கேன்னு அக்கறையில புள்ளையை கடிஞ்சிகிட்டா என்னையே குறை சொல்றீங்க… என்னமோ பண்ணுங்க.” என்று கழுத்தை வெட்டி நீலா முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் தலையை வாஞ்சையாய் தடவிவிட்டார்.

“அவன் எப்படி வீட்டுக்கு வந்தான்? யாரோ அவன் பக்கதுல நின்னுட்டு இருந்த மாதிரி இருந்துதே. வண்டி கூட வீட்டுக்கு வெளில தான் நிக்குது. அவனேவா வண்டி ஓட்டிட்டு வந்தான்?” என்று கேட்டுக்கொண்டே எழுந்தவர் மாட்டுக் கொட்டகையில் இருந்து வீட்டுக்கு வெளியே சென்றார்.

நீலாவும் அவரைப் பின்தொடர்ந்து, “யாரோ வந்து விட்டுட்டு போனாங்கனு நினைக்குறேங்க… தச்சா அப்படி வந்து நின்னுகிட்டு அம்மா விழுந்துட்டேன்னு சொல்லவும் படபடப்புல நான் கவனிக்கல.”

“நானும் கவனிக்காம விட்டுட்டேன்…” என்றவர் பெரிய இரும்புக்கதவை திறந்துகொண்டு வெளியே நின்ற வண்டியை ஆராய்ந்தார், “வண்டில சைட் லாக் போட்டு இருக்கே… தச்சன் கிட்ட சாவி இருக்கும் வாங்கிட்டு வா… உள்ள வைப்போம்.” என்றவுடன் நீலா தச்சன் அறைக்கு விரைந்தார். 

“குந்தவை தச்சன் சட்டையில வண்டி சாவி இருக்கானு பார்த்து எடுத்துக் கொடு. வண்டியை உள்ள வைக்கணும்.” என்று அவர் அறைக்கு வந்து இருமுறை குந்தவையிடம் கேட்டுவிட்டார் ஆனால் அவளிடமிருந்து பதில் வந்தபாடில்லை. ஏதோ யோசனையில் தச்சனையே பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்.

“குந்தவை உன்னைத்தான் கேக்குறேன். என்ன நினைப்புல இருக்க?” என்று அவர் நெருங்கி குந்தவையை உலுக்கவும் தான் தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல திடுமென நிமிர்ந்து உறுத்து விழித்தாள்.

“ஏதாவது வேணுமா அத்தை?”

புருவம் சுருக்கிய நீலா தணிவுடன், “என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்போ கப்பல் கடல்ல மூழ்கின மாதிரி உட்கார்ந்திருக்க? ஜூசையும் குடிக்காம இருக்க… அவனுக்கு ஒன்னும் இல்லை. காலையில எழுந்திருச்சதும் எப்போதும் போல உன்கிட்ட வம்பு பண்ண கிளம்பிடுவான். அவனை சமாளிக்க வேண்டாமா நீ? உன்னை தைரியமான பொண்ணுனு நினைச்சேன். ஆனால் என்ன இப்படி இருக்க?”

“இல்லை… அது… நான் இவரை திட்டிட்டேன்…” என்றாள் மென்று விழுங்கி யோசனையினூடே. சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் இருவருக்குள் நடந்த பிணக்கை சொல்லியிருப்பாளோ என்னவோ இப்போது மனம் துவண்டிருக்கவும் ஆறுதல் தேவைப்பட்டது.

“அது எப்போதும் நடக்குறது தானே… விடு…”

“என்கிட்ட கோச்சிகிட்டு இப்படி பண்ணிட்டாரு… நான் நல்லதுக்குத் தான் சொன்னேன்.”

“நியாயமா ஒன்னு சொல்லவா… இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு நீ சொல்லாம இருக்குறது நல்லது. சொன்னா எனக்கு கோபம் தான் வரும். என் பையனை திட்டுறதை என்கிட்டையே சொல்ற உன்னோட நேர்மைக்கு முன்னாடி என்னோட பாசம் தான் நிக்கும். என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம். அவன் மனசு நோகுறபடி நடந்துக்காத. அவன் கூட உட்கார்ந்து பொறுமையா பேசு. உனக்கு பிடிச்சது, பிடிக்காததை பகிர்ந்துக்க, அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டு தெரிஞ்சிக்க. கருத்து முரண்படுற விஷயத்துல யாராவது ஒருத்தவங்க விட்டுக்கொடுத்து போங்க. வாழுற காலம் இன்னும் நிறையா இருக்கு. வாழ்க்கையை கட்டமைக்கிறதும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்ட பிறகு செய்யலாம். அப்போ தான் அது செழிப்பா இருக்கும். இப்போ உங்களை புரிஞ்சிக்கோங்க முதல்ல… மற்றது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…” 

தோணியதை தீர்க்கமாய் வெளிப்படுத்தியவர் அப்போது தான் குந்தவையின் மடியில் தலை வைத்து வெற்றுடம்போடு உறங்கும் தச்சனைக் கவனித்தார். குந்தவையின் துப்பட்டா எப்போதோ கீழே சரிந்திருந்தது. உடனே எழுந்து மெத்தையில் இருந்த போர்வையை எடுத்து மகன் மீது போர்த்திவிட்டு, மெத்தையில் கிடந்த அவனது சட்டையை துலாவி சாவியை எடுத்துக்கொண்டார்.

“நல்லா தூங்குங்க… காலையில எதுனாலும் பேசிக்குவோம்.” என்று ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். மனதில் சிந்தனை ரேகைகள் துளிர்க்க, முற்றத்தை ஒட்டி மங்களுத்துடன் படுக்கத் தயாரான வானதியை அழைத்தார்.

“தச்சன்கூட யாராவது வந்தாங்களா? நீதான அங்க நின்னுட்டு இருந்த?”

“ஆமாங்கத்தை… எனக்கு யாருன்னு தெரியல. லாரி டிரைவருன்னு சொன்னாரு. அப்புறம் அப்படியே கிளம்பிட்டாரு.” என்று பதில் கூறியவளிடம் தடுமாற்றம் நிரம்பி வழிந்தது. இந்த விஷயத்தை நோண்டி துருவினால் குந்தவையின் புறம் கோபம் திரும்பிவிடும் என்ற பயம் அவளை தடுமாற வைக்க, நீலா அவளது உடல்மொழியில் துணுக்குற்றார்.

“லாரி டிரைவரா?”

“அப்படித்தான் சொன்னாங்க.” என்று மென்று விழுங்கினாள் வானதி.

“வேற என்ன சொன்னாங்க? வயசாவனா இல்லை சின்ன பையனா?”

“நடுத்தர வயசிருக்கும்.” 

“நீ ஏன் இப்படி நிக்குற?” நீலா தோண்டித் துருவ, வானதி செய்வதறியாது நெளிந்தாள்.

“நீலா, உன்னை சாவி வாங்கிட்டு வரச் சொன்னா நீ என்ன இங்க கதை பேசிட்டு நிக்குற.” என்று அன்பரசனே தேடி உள்ளே வந்துவிட்டார்.

“சாவி எடுத்துட்டேங்க. தச்சன் கூட வந்தது யாருன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். ஏதோ லாரி டிரைவர் வந்தானாம்.”

“லாரிக்காரனா? தச்சன் எதுவும் வம்பு பண்ணிட்டானா? எதுக்கு லாரிக்காரன் வீடு வரைக்கும் வரனும்? தச்சனுக்கு தெரிஞ்சவனா கூட இருக்கலாம். காலையில விசாரிப்போம்.” என்று அந்த பேச்சை அப்போதைக்கு முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்துவிட்டுச் சென்றார். வானதிக்கு அப்போது தான் இயல்பே மீண்டது.

“நீயும் விளக்கை அணைச்சிட்டு தூங்கு வானதி. நான் தூங்கும் போது கதவடச்சிக்கிறேன்.” என்றுவிட்டு நீலாவும் கணவரை தொடர்ந்துச் சென்று, வண்டியை அன்பரசன் அதனிடத்தில் விட்டுவரும் வரை திண்ணையில் அமர்ந்திருந்தார்.

“தூங்காம எதுக்கு இப்போ இங்கன உட்கார்ந்து காவல் காத்திட்டு கிடக்க?”

“மனசே சரியில்லை. கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசமும் சொச்சமும் தான் ஆகியிருக்க. ஆனா தினம் சண்டை. ஏதாவது சங்கடம் வந்துருது. முதல்ல குந்தவை அப்பா அது முடிஞ்சதும் வானதி பிரச்சனை. இதுக்கு இடையில் இதுங்க ரெண்டும் வேற புரிதல் இல்லாம பால்வாடி பசங்க மாதிரி சண்டை போட்டுக்குதுங்க.” என்று பெருமூச்சு விட அன்பரசன் அவரருகில் வந்து அமர்ந்தார்.

“புரிதல் இல்லைனு சொல்லிட முடியாது. கருத்து வேறுபாட்டை எப்படி கையால்றதுன்னு ரெண்டு பேருக்கும் தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம்.”

“எல்லாம் ஒன்னு தான். இப்போ தான் குந்தவையை பார்த்துட்டு வந்தேன். ஆளே சரியில்லை. ஒரு மாதிரி இருக்கா. பெரிய பிரச்சனையா இருக்குமோன்னு பயமா இருக்கு. அதுனாலத் தான் தச்சனும் போய் குடிச்சிட்டு வந்தானோன்னு தோணுது. அவள் எதுக்கோ சண்டை போட்டிருக்கா. ப்ச்… எதுவுமே சரியில்லை. பிரச்சனையா வந்துட்டு இருக்கு. எதுவோ மனசை உறுத்துது. என்னனு சரியா சொல்லத் தெரியல.” எண்ணங்கள் அலைக்கழிக்க நீலாவின் மனம் அடங்கவே இல்லை. என்றுமில்லாத ஒரு உறுத்தல், நெருடல், அமைதியின்மை அவரை சூழ்ந்து கொண்டது. 

மனைவியின் முகத்தில் தெரிந்த கலக்கத்திற்கு சற்றும் குறையாத அமைதியின்மை அன்பரசனிடமும் இருந்தது.

“இந்த வாரம் ஞாயிறு வந்தா அவனுக்கு முப்பத்திரண்டு முடிஞ்சிரும்.”

நீலா சட்டென நிமிர்ந்து விழி விரித்து கணவரைப் பார்த்தார், “அதுதான் மனசு தவிக்குதோ… எங்க இருக்கானோ… என்ன பண்றானோ… கல்யாணம் ஆகியிருக்குமா? குடும்பமா சந்தோஷமா இருப்பான் தானே?”

“தெரியலையே…” என்றார் விரக்தியாய்.

“இருப்பான்… மனசறிந்து நாம யாருக்கும் கெடுதல் பண்ணல, அதுவே அவனை நல்லா பார்த்துக்கும்.” கணவருக்கு சமாதானம் சொன்னாரா இல்லை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாரா… ஆனால் காரணம் தெரிந்தபின் மளமளவென அடுத்து செய்ய வேண்டியதை அடுக்கிவிட்டார். 

“தச்சன் கல்யாணம் முடிஞ்ச பிறகு கோவில்ல பொங்கலும் வைக்கல, விருந்தும் வைக்கல… இதையே சாக்காய் வைத்து சாமிக்கு பொங்கல் வச்சி ஊருக்கு விருந்து கொடுத்துடுவோம். இதெல்லாம் செய்வது மூலமாவது அவன் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். தச்சன் வாழ்க்கையிலும் பிரச்சனை குறையும். ராஜாவோட பிறந்தநாள் அன்னைக்கே செஞ்சிட்டா ரெண்டு பேருக்கும் சேர்த்து செஞ்ச மாதிரி ஆகிடும். இதோ புதன் முடிஞ்சி போச்சு. இன்னும் மூணு நாள் தான் இருக்கு, நீங்க சீக்கிரமா எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க.”

“குந்தவை அப்பா இறந்து இன்னும் ரெண்டு மாசம் கூட முழுசா முடியல அதுக்குள்ள கோவிலுக்கு கூட்டிட்டு போய் விழான்னு அந்த பொண்ணை முன்ன நிறுத்தி பொங்கல் வச்சா நல்லாவா இருக்கும். ஒரு ஆறு மாசம் போகட்டுமே. விருந்து மட்டும் வேணும்னா ராஜா பிறந்தநாள் அன்னைக்கே வச்சிப்போம்.”

“ம்… நீங்க சொல்றபடியே செஞ்சிடுவோம். திவ்யா வீட்டுக்கு நேராப் போய் விருந்துக்கு அழைச்சிட்டு வந்துருங்க. மத்தவங்களுக்கு போன்ல சொல்லிப்போம்.”

நீலாவின் திட்டமிடலுக்கு சற்றும் சளைக்காமல் அன்பரசனும் மனதை தேற்றிக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டார்.

“குந்தவை அம்மாகிட்ட நீயே பேசிடு. நாளைக்கே சமைக்க ஆள் பார்த்து வீட்டுக்கு அனுப்பி விடுறேன். நீ என்னென்ன வேணுமோ அதை பேசி முடிச்சிடு. காசை பத்தி யோசிச்சிட்டு இதுல சிக்கனம் பிடிக்காத. ராஜன் பிறந்தநாளா இருக்கு, சைவ விருந்தே போட்டுடுவோம். அசைவம் வேண்டாம். கும்பகோணம் பெரிய மார்கெட்டில் தச்சனோட தோஸ்து ஒருத்தன் கடை வச்சிருக்கான். தச்சன்கிட்ட சொல்லி நியாயமான விலைக்கு பேசி காய்கறி இறக்கச் சொல்லு. அந்த பய எதுவும் சொதப்புனா மட்டும் என்கிட்ட கொண்டுவா மற்றபடி அவனே எல்லா ஏற்பாட்டையும் பார்க்கட்டும். நாமளும் அவனை கஷ்டம் தெரியாம வளர்த்து உள்ளங்கையில் தாங்குனதாலத் தான் அலட்சியமா இருக்கான். இறங்கி வேலை பார்க்கட்டும், அப்போ தான் வரவு செலவு கணக்கு புரியும். அடக்கமா செலவு பண்ணுவான்.”

“அதுதானே அவனை ஏதாவது சொல்லிடனுமே உங்களுக்கு அப்போ தான் தூக்கம் வரும்…”

“ஆமாமாம்… உன் புள்ளையை சொன்ன பிறகு தான் எனக்கு தூக்கமே வருது… சீக்கிரம் வீட்டை பூட்டிட்டு வா…” என்று நகைப்புடன் நீலாவின் சுருங்கிய கன்னத்தை தட்டிவிட்டு உள்ளே சென்றார் அன்பரசன்.

***

மறுநாள் விடியல் யாருக்கு புத்துணர்ச்சியாக அமைந்ததோ இல்லையோ தச்சனுக்கு உற்சாகமாகவே இருந்தது. யாரும் எழுப்பாமலேயே விழிப்பு தட்ட, கண்களை திறக்க சோம்பல் பட்டுக்கொண்டு மீண்டும் உறக்கத்திற்கு செல்ல முயன்றவன், தன்னுடலை உரசிக்கொண்டு இருக்கும் மென்மையை மெத்தையென்று எண்ணி அதில் முகத்தை அழுந்த புதைத்து தேய்க்க, அந்த மென்மையில் திடுமென வெளிப்பட்ட அசைவில் பட்டென சோர்வை விரட்டி கண் விழித்தான்.

தூக்க கலக்கத்தில் என்னவென்று முதலில் புரியாவிட்டாலும், புரிந்த நொடி அவனிதழில் புன்னகை தானாய் பிறந்தது. கூடவே விசிலும் சேர்ந்து பறந்தது.

வெறும் தரையில் தன்னருகில் தன்னை இறுக கட்டிக்கொண்டு அமைதியாய் உறங்கும் மனைவியைக் காணக் காண தலை கனத்த போதிலும் அவனுள் ஊறிய உற்சாக ஊற்றுக்கு பஞ்சமில்லை.

“எப்போதும் இப்படியே அமைதியா இருடி… அழகா இருக்க…” என்று மென்மையாய் சொன்னவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, அவனை சுற்றியிருந்த அவளது கரங்களின் அழுத்தம் அதிகமானது.

அதில் துணுக்குற்றவன் தலையை பின்னிழுத்து நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான். அவளது கண்கள் மூடியிருந்தாலும் அதனுள் விழிமணிகள் அசைந்தது.

“தூங்கலையா குந்தவை?”

இல்லை என்று மறுப்பாய் அவள் தலையாட்ட, அவளது செயல்களில் வித்தியாசம் உணர்ந்தான் தச்சன்.

“என்னாச்சுடி? அமைதியா படுத்திருக்க?” 

மீண்டும் இடவலமாய் அசைந்தது அவள் சிரம். 

“ஏய்… என்னைப் பாரு? கண்ணைத் திற...” என்று குந்தவையின் தாடையை வன்மையாய் பிடித்தாலும் அவள் அசைந்தபாடில்லை. அவனுள் மீண்டும் மீண்டும் ஒன்றிப்போனாள்.

“எதுக்கு இப்போ தயிர்சாதமா மாறியிருக்க?” என்று கேட்டது தான் தாமதம் அவள் விழியில் நீர் துளிர்த்து அவனுடலை ஈரப்படுத்தியது.

“என்னடி குந்தவை?” என்று எழுந்தே விட்டான் தச்சன். கடினமாகவே பார்த்த முகம் இன்று அழுகையில் சிவக்கவும், நேற்று நடந்த பிணக்குகளும் அவன் செய்துவைத்த சாகசங்களும், பின் அவளிட்ட சண்டையும் நினைவுக்கு வந்தது. 

தன்னையே நொந்துகொண்டவன் அவள் கன்னத்தை வருடி, அதில் அழுந்த முத்தம் வைத்தான், “பயந்துட்டியாடி… அழுகாத.”

“போடா… என்கிட்ட வராத… நான் முக்கியம் இல்ல தானே உனக்கு.” அவன் இறங்கி வரவும், மங்கையவள் மிஞ்சினாள்.

சிரித்துக் கொண்டவன் அரணாய் தன் கரங்களை அவளைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, அவள் தோளில் முகம் பதித்து, அவள் மேலே சரிந்தான்.

“கிட்ட தான் வருவேன்… என்ன பண்ணுவ?”

“அடிச்சிடுவேன்டா.”

“புதுசா ஏதாவது சொல்லுடி. திட்டுறது, அடிக்குறது எல்லாம் நீ ஏற்கனவே பண்றது தான்…”

“கடிச்சிடுவேன்.”

“எப்படி… இப்படியா?” என்று பேச்சோடு பேச்சாய் அவள் கன்னத்தை கடிக்க, தச்சனை தள்ளிவிட்டு எழுந்தாள் குந்தவை.

“ச்சீ… என்னடா பண்ற… பல்லு கூட விளக்காம...யக்…” அவன் பற்தடம் பதிந்த கன்னத்தை திரும்பத் திரும்ப துடைத்தவள் முகத்தில் தற்போது அழுகைக்கான சாயல் துளியுமில்லை.

“ம்ம்… இப்போ தான் என் பிரியாணி ஃபார்முக்கு வந்திருக்கா.”

“உன் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைடா.” என்று அவன் கையிலே பட்டென்று ஒரு அடி போட்டவள் சற்று நகர்ந்து சுவரில் சாய்ந்தமர்ந்தாள்.

“என்ன உட்கார்ந்துட்ட? அம்மா ஜூஸ் போட்டு வச்சிருக்கும். போய் வாங்கிட்டு வா…” என்று காலாட்டிக் கொண்டு அப்படியே தரையில் படுத்திருந்தான்.

“எதுக்கு அப்படி பண்ண நேத்திக்கு?”

“எப்படி பண்ணேன்?”

“விளையாடாத… நான் சொன்னது கொஞ்சமாச்சும் உன் மண்டையில ஏறி இருந்தா இப்படி குடிச்சிட்டு வந்திருப்பீயா?”

“ஏன் ஏறல… எல்லாம் நல்லாவே ஏறியிருக்கு… நீ இல்லாம நான் என்னடா பண்ணிவேன்னு நீ அழுத தானே?” 

அவனின் அலட்டல் தணிந்திருந்தவளையும் உசுப்பிவிட்டது.

“திருந்தவே மாட்டடா நீ… நான் என்ன சொல்றேனோ அதுக்கு நேரெதிரா செய்யுறதே உனக்கு வேலையாப் போச்சு… என்னை டென்சன் பண்ணி பார்க்குறதில் உனக்கு அவ்வளவு சந்தோசம்.” என்று பற்களை கடித்தவள் எழப்போக, அவளைத் தடுத்து அவள் மடியில் தலை வைத்து அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் தச்சன்.

“நான் எது செஞ்சாலும் நீ திட்டுறேன்னு கோபத்துல தான் குடிச்சேன். ஆனா நீ போன் போட்டு வீட்டுக்கு வான்னு பயந்துகிட்டே என்கிட்ட பேசுனதும் என்னால அங்க இருக்கவே முடியல… உன்கிட்ட வந்துடனும்னு தோனுச்சு. அதுதான் வேகமா வந்தேன்.”

“வண்டியில வேகமா போக்கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேன் தானே…” என்றாள் அவளும் தணிவாய் அவன் விரலோடு விரல் பிணைத்துக் கொண்டு… அவன் உருக்கமாய் பேசவும் அந்த நேரம் அவனிடம் சண்டை பிடிக்க மனமில்லை அவளுக்கு.

“இனி போகல… உனக்கு பிடிக்காததையும் செய்யல. ஒன்னை நல்லா புரிஞ்சிக்க குந்தவை, எனக்கு விவசாயம் பிடிக்கும் தான் ஆனா அதையே பெரிய அளவில் எடுத்துச் செய்யுறது எனக்கு இதுதான் முதல் முறை. அதனால கொஞ்சம் சறுக்கிட்டேன். அதுக்காக அல்பத்தனமா என் வாழ்க்கையையே முடிச்சிக்க மாட்டேன். எனக்குத் தெரியும் என் குடும்பம் என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. நான் உங்க எல்லார் மேலையும் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு… உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது, அது இந்த மண்ணிலும் சரி விண்ணிலும் சரி… நீங்க எனக்கு முக்கியம். காசு எல்லாம் எனக்கு பொருட்டே இல்லை அதைத்தான் உன்னால ஏத்துக்க முடியலைன்னு நினைக்குறேன்…”

“உனக்கு முக்கியம் இல்லாம இருக்கலாம். ஆனால் அதே காசு பிரச்சனையில் தான் என் அக்கா வாழ்க்கையே போயிடுச்சு…”

“ப்ச்… உன் அக்கா புருஷன் கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழாம…  அதை ரசிக்காம போனதால எல்லோரும் அப்படியே இருப்பாங்கன்னு சொல்ல முடியாது… எங்களுக்கும் கடன் இருக்கு தான். அதை அடைக்க முடியாத சூழல்னு ஒன்னு வந்தா அப்போ அதை சமாளிக்க எதாவது வழி பிறக்கும். வெளியே வரமுடியாத பிரச்சனைன்னு ஒன்னு கிடையவே கிடையாது. எனக்கு என் அம்மா, அப்பா, ஆச்சி, தங்கச்சி, நீ, நமக்கு வரப்போற பாப்பா, அறிவுக் குட்டிங்கன்னு எல்லோருமே வேணும். எல்லோரோடும் வாழனும். அந்த வாழ்க்கையை நீயும் ரசிக்கணும்னு நான் விரும்புறேன். இப்படி தேவையில்லாம கோபப்பட்டு அதை கெடுத்துக்காத…” என்று அவன் பக்க சிந்தைகளை முன்வைத்தாலும், குந்தவையால் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது. நாளைக்கு நம்ம பசங்களுக்கு தரமான படிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரணும். நமக்கே நாளைக்கு வயசாகும் ஆரோக்கியம் குறையும் அதை சரிபண்ண பணம் தேவைப்படும். பணத்தை குறைச்சு எடை போட்டுறாத. அது இருந்தா தான் இப்போ வயிற்றை நிரப்ப முடியும். அதுல நீ அலட்சியமா இருக்க. அதுதான் எனக்கு கோபம் வருது…”

“சரிங்க அம்மையாரே… தங்கள் சித்தமே இனி இந்த அடியேனின் சித்தம். நானே வியர்வை சிந்தி உழைச்சி சம்பாரிக்குற காசுல உங்களுக்கு போன் வாங்கிக் கொடுக்கிறேன். அதுவரை என்னோட பழைய போன் ஒன்னு டீவி செல்ப்பில் இருக்கு. அதை எடுத்துக்கோங்க. இல்லைனா இப்போ நான் யூஸ் பண்ற போன் வேணும்னாலும் எடுத்துக்கோங்க.” என்று தீவிரமாய் கூற, அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் குந்தவை.

“இப்போ தான் என் புருஷன் உருப்படியா ஒன்னை ஒத்துகிட்டு சரியா யோசிச்சி இருக்கான்.”

“அடியேய்… நீ சொன்னதாலத் தான் இப்ப தம் கூட அடிக்கிறது இல்லை… இனி தண்ணியும் கிடையாது. பசங்க எல்லாம் பொண்டாட்டிக்கு பயமான்னு கிண்டல் பண்றானுங்க.”

“கிண்டல் பண்றாங்கன்னு மறுபடியும் சிகரெட், குடின்னு உன்னை பார்த்தேன் தொலைச்சிடுவேன் படவா…”

“நீ என்னை தொலைச்சாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்டி என் பிரியாணி…” என்று சொல்லி அவள் இதழை கவ்வ, அவனை தள்ளிவிட்டு எழுந்தாள் குந்தவை.

“பல்லு விளக்கிட்டு குளிடா தடிமாடு…” என்று சிரித்துவிட்டு ஓடினாள் குந்தவை.

“ஓய் பொண்டாட்டி… நீ குளிப்பாட்டி விடுடி…” என்று அவனும் சிரித்துக்கொண்டே அவளை துரத்திச் செல்ல, நடுவில் அவன் கால்களை பிடித்துக்கொண்டான் அறிவழகன். அவனையும் வாரி அள்ளிக்கொண்டு மனைவியை கேலி செய்யக் கிளம்ப, இருவரின் தெளிந்த முகத்தை பார்த்தபின் தான் அங்கிருந்த பெரியவர்களுக்கு மனம் நிறைந்தது.

“இப்போ தான் ரெண்டு பேரு முகமும் தெளிஞ்சிருக்கு. இனி பிரச்சனை இருக்காது பாரு…” என்று மங்களம் மருமகளிடம் சொல்ல, நீலா ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

“நீங்க சொல்றபடியே இருந்தா எல்லோருக்கும் சந்தோசம் தானே… விருந்துக்கு என்ன சாப்பாடு போடுறதுன்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். அது சரியா இருக்கான்னு பாருங்க. எதாவது விட்டிருந்தா சொல்லுங்க சேர்த்திடுவோம்…” என்று சொல்லி லிஸ்டை எடுத்துவந்து கொடுக்க, அதை சரி பார்த்துவிட்டு தச்சனிடம் என்னென வாங்கச் சொல்ல வேண்டும் என்று அதற்கு தனி லிஸ்ட் போட்டனர். விருந்தின் பரபரப்பில் தச்சனை அழைத்து வந்து விட்டவனைப் பற்றி மறந்தே போயிருந்தனர்.

வெள்ளியன்று கடைசி பரீட்சைக்கு குந்தவையை கல்லூரியில் விட்டுவிட்டு மார்க்கெட்டில் தேவையானவற்றை சனியன்று வீட்டிற்கு லோட் இறக்க சொல்லிவிட்டு வந்திருந்தான் தச்சன். 

வீட்டில் சனி பிறந்ததும் உறவினர்களின் வருகை ஒற்றை இலக்கத்தில் அதிகரித்த வண்ணம் இருக்க, காய்கறி, வெற்றிலை, வாழை எல்லாம் எப்போது வந்திறங்கும் என்ற யோசனையில் அமர்ந்திருந்தார் அன்பரசன். அவர்களது ஊரில் விருந்தே திருவிழா போல களைகட்டும். வாழை முதல் தோரணம் வரை அனைத்தும் வாயிலில் கட்டப்பட்டு ரகளையாய் இருக்கும். திண்ணைக்கும் வெளிக்கதவுக்கும் இடையே இரண்டு கார் தாராளமாய் நிற்கும் அளவுக்கு இடம் இருப்பதால் சாமியானா பந்தல் போட்டு அங்கேயே உணவு பரிமாற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதை மேற்பார்வை பார்த்தபடி இருந்தார் அன்பரசன். 

“காய்கறி எல்லாம் ஒழுங்கா கொண்டு வந்து போட்டுருவாங்க தான தச்சா? உன் பிரண்டுன்னு தான் உன்னை நம்பி பொறுப்பை ஒப்படச்சிருக்கேன்.” என்று அன்பரசன் கேட்கவும், 

“நம்பிக்கை இல்லாதவரு எதுக்கு என்கிட்ட சொல்லணுமாம்… நீங்களே செய்ய வேண்டியது தானே…” என்று முறுக்கினான் தச்சன். 

“சரியான நேரத்துக்கு கொண்டு வந்து போட்டுடுவாங்கன்னு நேரா சொன்னா முத்து உதிர்ந்திடுமோ…” என்று அன்பரசனும் பதிலுக்கு வம்பு வளர்த்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்க, இரும்புகேட்டின் மறுபுறம் மாருதியின் செல்ல லோடு வண்டியான குட்டியானையின் ஹார்ன் சத்தம் கேட்டது. 

“சும்மா தானே உட்கார்ந்திருக்க. போய் திறந்து விடுடா… உன் பிரென்ட் எவனாவது வந்திருப்பான்… போ…” என்று தச்சனை உந்தினார் அன்பரசன்.

அவரிடம் சலித்துக்கொண்டு எழுந்து சென்று இரும்புகேட்டை திறந்துவிட்டான். காய்கறிகள், வாழை மரம் என்று அதன் பின்புறம் முழுதும் பச்சைகள் நிரம்பி வழிந்தபடி அந்த மாருதி உள்ளே நுழைய,

“தோ… சரியான நேரத்துக்கு வந்துடுச்சுல்ல…” என்று மிதப்பாய் அன்பரசனைப் பார்த்தான் தச்சன்.

“வண்டியை கொல்லைக்கே விட்டு அங்க இருக்குற ரூமில் இறக்கிடுங்க…” என்றுவிட்டு வேலை முடிந்தது என்பது போல அவர் நகர்ந்துவிட்டார்.

தச்சன் அவர் சொன்னபடியே வண்டியை உள்ளே விடச் சொல்லி வீட்டின் பின்புறம் இருக்கும் ஸ்டோர் ரூமை அந்த டிரைவரிடம் காண்பிக்க, டிரைவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் ஒருவித ஆர்வத்தோடு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.

“அண்ணன் வாழையையும் இங்கேயே இறக்கிடவா?” என்று அந்த ஓட்டுனன் தச்சனிடம் கேட்க, அவனை முந்திக்கொண்டு பதில் சொன்னான் அருகில் அமர்ந்திருந்தவன்.

“அதை நாமலே வெளில கட்டிருவோம்டா… இங்க வச்சா வாடிடும்…”

அப்போது தான் அவனை கவனித்த தச்சன் புருவம் சுருக்கி, “நீங்க? நீங்கதானே அன்னைக்கு லாரில வந்தது?” அதில் தடுமாறியவன் சங்கடமாய், “நல்ல நியாபக சக்தி உனக்கு.” என்றான்.

“புகழாதீங்க பாஸ்… இன்னும் என்ன வண்டிக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கீங்க… கீழ இறங்குங்க. என்னை சேதாரம் இல்லாம வீட்டுல சேர்த்திருக்கீங்க… அதுக்கே உங்களுக்கு ஒரு பெரிய விருந்து வைக்கணும். நீங்க சுதாரிக்காம இருந்திருந்தா என் பொண்டாட்டி உங்களை கொன்னிருப்பா… நீங்க வாங்க என்கூட…” என்று வலுக்கட்டாயமாக வண்டிக் கதவைத் திறந்து ராஜராஜனை கொல்லை வழியாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் தச்சன்.

“ஹேய்… என்ன பண்ற நீ? நான் வேலை முடிச்சிட்டு சீக்கிரம் போகணும்… வீட்டுக்கு வந்தா லேட் ஆகிடும்.” என்று கையை உருவப்பார்த்த ராஜனை எப்படியோ வீடு முற்றம் வரை இழுத்து வந்திருந்தான் தச்சன்.

“அம்மா… குந்தவை…” என்று அழைக்க அவர்கள் வந்தபாடில்லை. ‘எங்க தான் போனாங்கனு தெரியல இந்த ரெண்டு பேரும்…’ என்று தச்சன் முணுமுணுக்க, வேகமாய் அடுப்பறையில் இருந்து வெளியே வந்தாள் வானதி.

“அத்தை, அம்மா, குந்தவை எல்லோரும் கொல்லையில் மருதாணி பறிக்க போயிருக்காங்க.”

“ஓ… கொல்லை கடைசியில் இருந்திருப்பாங்க போலிருக்கு. சமைக்க கொட்டகை போட்டதில் அவங்க அங்க இருந்ததே தெரியல… திவ்யா எங்க?”

“திவ்யா அண்ணி அண்ணன் கூட போனில் பேசிட்டு இருக்காங்க…” என்று அதுவரை பவ்யமாய் பதில் சொன்ன வானதி, ராஜராஜனை பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள்.

“பாஸ்… நீங்க உட்காருங்க. என் பொண்டாட்டி உங்களுக்கு நன்றி சொல்லனும்னு சொல்லிட்டு இருந்தா… இதோ கூட்டிட்டு வந்துறேன்.” என்று ராஜனை அமரவைத்தவன் வானதி புறம் திரும்பி, “இவருக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடுங்க… வீட்டுக் கொலையில் டிரைவர் காய்கறி இறக்கிட்டு இருக்கான் அவனுக்கும் சேர்த்து கொடுத்துடுங்க. நான் குந்தவையை கூட்டிட்டு வரேன். பசங்க எங்க சத்தத்தையே காணோம்?”

“குந்தவை கூட இருக்காங்க.” தச்சனை விரட்டினால் போதும் என்ற எண்ணத்தில் வானதி அவசரமாய் பதில் சொல்ல, தச்சனும் அவசரமாய் வெளியேச் சென்றான்.

தச்சன் வெளியேச் சென்ற நேரம் ராஜனும் வெளியேற எழுந்திருக்க, வானதியும் அவனை வேகமாக நெருங்கினாள்.

“நீங்க இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிடுறீங்களா? தப்பா நினைக்காதீங்க… இங்க பெரியவங்களுக்கு அவர் லாரில விழுந்தது தெரியாது… தெரிஞ்சா வருத்தப்படுவாங்க… என் தங்கச்சிக்கும் பிரச்சனை ஆகிடும்.” என்று இறைஞ்ச, அவளை இன்னும் விசித்திரமாய் பார்த்தான் ராஜராஜன்.

“உண்மையை மறைக்கிறது தாங்க பிரச்சனை. உங்க தங்கச்சி வீட்டுக்காரரே என்னை நியாபகம் வச்சி வீட்டுல அறிமுகப்படுத்த கூட்டிட்டு வரும் போது நீங்க கேக்குறது உங்களுக்கே அபத்தமா இல்லையா? நீங்க தேவையில்லாம ரொம்ப பயந்து போயிருக்கீங்க. அன்னைக்கும் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசும் போது குறுக்கிட்டு என்னை தடுக்காம அப்படியே ‘பே’ன்னு பார்த்துட்டு நின்னீங்க. இந்த பொண்ணு திட்டுனத்துக்கா அவன் குடிச்சான்னு நினைச்சேன்.” என்று பேசிக்கொண்டே சென்றவன் அதிகப்படியாய் பேசுகிறோம் என்று உணர்ந்த நொடி பின்வாங்கினான்.

“உஃப்… மன்னிச்சிடுங்க அன்னைக்கு பேசுனதுக்கும், இப்போ பேசியதுக்கும்… நான் கிளம்புறேன்.” என்று ராஜன் கிளம்ப,

மென்குரலில், “தேங்க்ஸ்,” என்றாள் வானதி.

ஓரடி எடுத்து வைத்தவன் அப்படியே திரும்பி, “எதுக்குங்க?” 

“இல்லை… நான் சொன்னதும் கிளம்பிட்டீங்க… அதுக்கு தேங்கஸ்.” என்று வானதி சொல்ல புன்முறுவல் உதிர்த்தான் ராஜராஜன்.

“நீங்க சொன்னதால கிளம்புறேன்னு தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க… எனக்கு வேலை இருக்குங்க அதுதான் கிளம்புறேன்.” என்றான் தெளிவாய்.

“எல்லாம் ஒண்ணுதான்…” என்று பல்லை கடித்தாள் வானதி.

“அதெப்படி ஒன்னாகும்? நீங்க சொன்னதால நான் கிளம்பியிருந்தால் உங்க பொய்யுக்கு நான் துணை போகிற மாதிரி ஆகிடும். ஆனால் இப்போ நானாகத் தான் கிளம்புறேன். உங்க வேண்டலுக்கு நான் செவி சாய்க்கல…” என்று விளக்கம் கொடுக்க,

‘சரியான காட்டான் எப்படி பதில் சொல்றான் பாரு… டீசன்ட்டா பல்ப் கொடுக்குறான். உனக்கு இது தேவையா வானதி.’ என்று மனதுக்குள் அவனுக்கும் அர்ச்சனை கொடுத்து தன்னையும் திட்டிக்கொண்டாள் வானதி.

“அப்போ நான் கிளம்புறேங்க.” என்று ராஜன் மீண்டும் சொல்லிவிட்டு கிளம்ப, திடுமென எதிரே வந்த அன்பரசனை அருகில் கண்டு திகைத்து நின்றுவிட்டான்.

அவரும் அவனைப் பார்த்து புருவம் சுருக்கி, “தச்சன் பிரெண்டா?” என்று கேட்க, ராஜனுக்கு புஸ்சென்றானது…

அவன் ஆமாம் என்று தலையசைக்க, அன்பரசனின் பார்வை இன்னும் கூர்மையானது, “உன்னை பார்த்த மாதிரி இருக்கு ஆனா நியாபகம் வரமாட்டேங்குதே… பரிட்சையமான முகமா இருக்கு... எந்த ஊருப்பா நீ?” என்று ஆராய்ச்சியில் அவர் இறங்க இப்போது திக்கென்று இருந்தது ராஜனுக்கு. 

அவனுக்கு என்ன உணருவது, எதை எதிர்பார்ப்பது என்றே புரியவில்லை. ஆரம்பத்தில் அன்பரசன் அவனை அடையாளம் காணத் தவறியது வருத்தமாய் இருந்தாலும், குற்றவுணர்வு கொண்ட அவன் புத்தி அதை ஏற்றுக்கொண்டு நிம்மதியடைந்தது. இப்போதோ அன்பரசன் பார்த்த முகம் போல இருக்கு என்று சொல்லவும் உணர்ச்சிகள் அனைத்தும் உல்டாவாக மாறியது.

“என்ன தச்சன் பிரெண்டா இருந்துகிட்டு வாயே திறக்க மாட்டேங்குற?” என்று அவர் மேலும் துருவ, ராஜனின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. 

“நா… நான் கிளம்புறேன்.” என்று எப்படியோ வார்த்தையை கோர்த்து ராஜன் சொன்னாலும் அவன் குரல் மெல்லமாகவே ஒலித்தது.

“நாளைக்கு விருந்துக்கு மறக்காம வந்துடனும்…” என்று அன்பரசன் தணிவாய் உத்தரவு போலச் சொல்ல, ராஜனின் மண்டை தானாய் சம்மதமாய் ஆடியது. 

“ஐயா ராசா… இவ்வளவு தூரம் வந்துட்டு யாரோ மாதிரி திரும்பப் போறீயே… அடியே நீலா… இப்போன்னு பார்த்து எங்கப் போன… இங்க பாரு உன் புள்ளை உன்னைத் தேடி வந்துட்டான்.” என்ற கூக்குரலில் ராஜன் திகைத்து நின்றுவிட்டான்.

அன்பரசன் மூச்சுவிடுவே மறந்து கால்கள் தள்ளாட, தொய்ந்து அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.

No comments:

Post a Comment

Most Popular