Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 15

 

*15*

“குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.

கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த தேர்வுக்கான விடுப்பும் மூன்று நாட்களுக்கு மேலிருந்தது. அதனால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் இன்று பரீட்சை முடிந்ததும் தோழிகளுக்குள் சிறிய பார்ட்டி. குந்தவை அதை முடித்துக்கொண்டு, காப்பீடு, தந்தையின் சம்பளம் மற்றும் உதவித்தொகை தொடர்பான பண விஷயங்களையும் அங்கேயே அம்மாவுடன் மூன்று நாட்கள் தங்கி நிவர்த்தி செய்துவிடுவது என்ற திட்டத்தில் இருக்க, அந்த சிறிய விருந்திற்காக அவள் தெரிவு செய்திருந்த உடை தான் அவளை இம்சையில் மாட்டிவிட்டிருந்தது.

பார்த்து பார்த்து நேர்த்தியாய் உடுத்தியிருந்த சிகப்பும், கருப்பும் கலந்த சில்க் காட்டன் சேலை கேட்பாரற்று அவன் சட்டையோடு தரையில் கிடக்க, சிகை கலைந்து, சரீரம் அவன் கட்டுப்பாட்டில் கட்டுண்டு இருந்தது. வறண்ட அதரங்களுக்கு இணையாக தச்சனின் கரங்களும் அவளிடத்தில் ஊர்வலம் நிகழ்த்த, அவளது கரம் அவனது புஜத்தில் பதிந்து விரல்நகத்தின் தடங்களை அச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனை தடுக்கவென முதலில் பதிந்த அந்தக் கரங்கள் எப்போது பிடிமானத்திற்காக மாறியதோ அவளே அறியாள்… உடலும் உள்ளமும் அவன் புறம் சாய்ந்து அவனிடம் சிக்கி மயங்கியிருக்க, புத்தி மட்டும் காலை நேர அவசரங்களை நினைவூட்டி அவளை எழுப்ப முயன்று ஓய்ந்திருந்தது.

அவ்வளவு எளிதில் சூழ்நிலை மறந்து மயங்குபவள் அல்ல தான் என்றாலும், என்றுமில்லாத அவனது பிரத்யேக கொஞ்சல்கள் அவளை மயக்கத்தான் செய்தன. 

“வானதி கூப்பிடுறா…” 

வானதியின் அழைப்பை காரணம் காட்டி அவனிடமிருந்து விடுபடவென அவள் பேசியதில் தொண்டைக்குழி ஏறி இறங்க, அதில் ஊர்ந்த அதரங்களின் வெப்பம் இதமாய், இனிப்பாய் இருக்க பரீட்சை எல்லாம் மறந்தே போனது குந்தவைக்கு.

“எதுக்குடி தாலிச் செயின் மாத்துன? மண்ணு மாதிரி இருக்கு இந்த தங்கச்சரடு…”

அவனின் சிணுங்களில் வெடித்துச் சிரித்தவள், அவன் முகம் பற்றி நிமிர்த்தி, “தங்கம் சாப்பிடுற பொருளா உனக்கு?”

அவளது அதரங்களுக்கு இணையாக அவனதும் அகல விரிந்திருக்க, துரிதமாய் அதை அவளிழலில் ஒற்றி எடுத்து, “இல்லைடி… புது மஞ்சள் தாலியில் இருந்து வந்த மஞ்சள் வாசனை ஆளையே மயக்கி அசச்சிடுச்சுடி… அதுவே ஒரு தனி கிக்கா இருந்துது. நீ அதைப்போய் மாத்திட்ட…”

“இதுவே லேட்… எங்க வழக்கத்தில் கல்யாணம் ஆன மூணாவது நாளே தங்கத்தில் மாத்திடுவாங்க.”

“நல்லா மாத்துனாங்க…”

“எப்படி இப்போ நீ மாத்திவிடுறேனு கலச்சிவிட்ட மாதிரியா?” சிணுங்கலாய் குந்தவை அவன் சிறையினில் நெளிய, அவளிடையில் இருந்த அவனது கரம் அழுத்தம் கொடுத்து அவளை அசைய விடாமல் சிறைபிடித்தது.

“கலச்சிவிடலடி… நல்லாயில்லை வேற மாத்தலாம்னு கழட்டிவிட்டேன்…” என்க, எப்போதும் போலவே அவன் அதரங்களில் செல்ல அடிகள்.

“எல்லோரும் ஒரே மாதிரி எடுத்த சேலைடா இது…” கெஞ்சலுடன் கொஞ்சலாய் அவள் குரல் ஒலிக்க,

அவளை விடுவித்து ஓரடி பின்னெடுத்து அவளை மேலிருந்து கீழ் பார்த்து கூசச் செய்தவன், “இன்னும் உனக்கு புரியலையா மக்கு பொண்டாட்டி…” என்று விஷமமாய் இழுக்க, குந்தவை அகலமாய் கண்களை விரித்தாள்.

“டேய்… பிராடு. மணியாகுடா...” என்று அவள் எகிறிக்கொண்டு வர, நகைப்புடன் திமிறியவளை தன்வசம் இழுத்தணைத்துக் கொண்டான் தச்சன்.

“நான் எதிர்பார்த்த போதெல்லாம் விட்டுட்டு உன்னை யாரு இன்னைக்கு புடவை கட்ட சொன்னது? பார்த்ததும் பாயத்தான் தோணுது…” என்று பேசி மேலும் இரு அடிகளை சுகமாய் வாங்கிக் கொண்டான்.

“மணியாகுது விடு…” என்று அவள் மீண்டும் சிணுங்க, கேலியாய் புருவம் உயர்த்தியவன்,

அவளை சுற்றியிருந்த கரங்களை விலக்கிக்கொண்டு கிண்டலாய், “விடு விடுன்னு உன் வாய் மட்டும் தான் சொல்லுது ஆனால் உன் கை என்னமோ உடும்புப் பிடியாய் என்னை அணைச்சு புடிச்சிருக்கு.” என்று மொழியிலும், விழியிலும் உண்மை உரைக்க, பட்டென்று அவனிடமிருந்து விலகி நகர்ந்தாள் குந்தவை.

“முறைக்கும் போது கூட ஆளை சுண்டி இழுக்குறடி...” அவனது வழிசளுக்கு விழிகளை உருட்டி மிரட்டியவள், கண்ணாடி முன்னின்று கலைந்திருந்த சிகையை முழுதாய் கலைத்துவிட்டு பரபரவென தலைவாறினாள்.

தச்சனின் விழிகளோ அவளைவிட்டு பிரிய மறுக்க, பூனைக்குட்டி போல அவளை நெருங்கியவன் பின்னிருந்து அணைக்கும் முன்னமே முறைப்புடன் திரும்பினாள் குந்தவை. 

“கிட்ட வந்த தொலைச்சிடுவேன்… இப்போவே மணி ஏழரையை தாண்டிடுச்சு… நான் ஒன்பது மணிக்கு காலேஜில் இருக்கணும்.” என்று மிரட்ட, அவள் முறைப்பில் அவசரம் உணர்ந்தவன், “அதுக்குத்தான் உனக்கு உதவி பண்ண வந்தேன்… நீ திரும்பு.” என்று அந்தர்பல்டி அடித்து அவள் தோள் பற்றி திருப்பியவன், ரவிக்கையில் இருந்த கயிற்றை இழுத்துக்கட்ட,

“எல்லாம் இதில் ஆரம்பிச்சது தான்…” என்று சலுகையாய் சலித்துக்கொண்டாள் குந்தவை.

“உன் மேலத்தான் தப்பு… பாவம் பொண்டாட்டிக்கு பரீட்சை நடக்குதே... நாம தானே அழைச்சிட்டு போகனும்… அவசரமா கிளம்பிட்டு இருப்பாளேன்னு காலையில் நேரமே எழுந்து வயலுக்கு போய் தண்ணி பாய்ச்சி வேலையெல்லாம் முடிச்சு குளிச்சிட்டு வந்தா மேடம் அப்போ தான் ஆடியசைஞ்சு புடவை கட்டிட்டு இருக்கீங்க… சரி கொஞ்சம் சைட் அடிச்சிப்போம்னு பார்த்தா, பார்க்க ஒண்ணுமே இல்லடி…” என்று தன்னிலை விளக்கம் வேறு கொடுக்க, உறுத்து விழித்தாள் குந்தவை.

“என்ன சொன்ன இப்போ?”

அவனும் சளைக்காமல், “கட்டுனது தான் கட்டுன பார்க்க கொஞ்சம் இடம்விட்டு கட்டியிருக்க கூடாதா... என்னமோ சொல்லுவாங்களே இந்த லோ ஹிப்னு... அப்படியெல்லாம் கட்ட மாட்டியா நீ... சுடிதாரையே ஆறு முழத்துக்கு நீட்டி ஸ்க்ரீன் மாதிரி சுத்தி வச்சிருக்க... ஏதோ இந்த ப்ளவுஸ் தைக்குற அம்மா எனக்கு கரிசனம் காட்டி தச்சிருக்காங்க...” என்று பெருமூச்சுவிட, குந்தவையின் பாவனையில் மாற்றமில்லை. அவன் பேசத் துவங்கிய போது புருவம் சுருக்கி எப்படி உறுத்து விழித்தாளோ அப்படியே தான் நின்றாள்.

“லோ ஹிப் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்? அதுமாதிரி எத்தனை பேரை இதுவரை பார்த்திருக்க?”

“அதையெல்லாம் கணக்கா வச்சிருப்பாங்க...” என்று கிளம்புகிற போக்கில் அவளது பிந்தைய கேள்விக்கு வம்பு வரப்போவது தெரியாமல் வாய்கொடுத்தான்.

“கழுத்துக்கு கீழ பார்வை போதுன்னா அவன் ஒழுங்கானவனா இருக்க மாட்டான்.” அடக்கப்பட்ட ஆத்திரமும் அருவருப்பும் அவள் குரலில் வெளிப்பட, தலை சீவிக்கொண்டிருந்த தச்சனின் கை அந்தரத்தில் நின்றது. அவன் பார்வை முற்றிலும் மாறிவிட, அவளை கூறுபோடும் பார்வை பார்த்தவன், “என்ன சொன்ன இப்போ?”

குந்தவையின் விழியும் குரலும் உயர்ந்து, உடல் விறைத்து நிற்க அடிக்குரலில் சீற்றமுடம் பதில் பேசினாள், “உன் காதில் என்ன விழுந்துதோ அதைத் தான் சொன்னேன்.”

அவளது பதிலில் அவனின் குருதி சூடாகி, நரம்புகள் புடைக்க சீப்பை விசியடித்தவன், “என்னை அவ்வளவு கேவலமா நினைச்சியா நீ? உன்கிட்ட அப்படியா நடந்துக்குறேன்.” என்று ஆத்திரத்தில் கத்திவிட்டு வெளியேற முற்பட, அவன் கரம் பற்றி தடுத்தாள் குந்தவை.

“இந்த கேவலமானவனை எதுக்கு இப்போ தொடுற? விடுடி...” என்றானே ஒழிய அவனாய் அவள் பிடியை விலக்கவில்லை, தள்ளவுமில்லை.

“உண்மையை சொன்னா குத்துதா உனக்கு?”

ரெளத்திரத்துடன் திரும்பியவன் அவள் கரத்தை தட்டிவிட்டு, “குந்தவை... அவ்வளவு தான் உனக்கு மரியாதை. ஒத்துக்குறேன் பொண்ணுங்களோட சரளமா பேசுவேன், கிண்டலடிச்சிருக்கேன் ஏன் சைட் கூட அடிச்சிருக்கேன் ஆனால் நீ சொன்ன அளவுக்கு கேவலமான எண்ணம் என்னைக்குமே எனக்கு வந்ததில்லை. என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்துறதுக்கு முன்ன அதை புரிஞ்சிக்க முதல்ல...”

“செஞ்சதை இப்படி பகிரங்கமா ஒத்துகிட்டா நீ பண்ணது எல்லாம் சரியாகிடுமா... தப்பு என்னைக்குமே தப்புத்தான்.” அவள் எதெல்லாம் கொள்கை என்று வைத்திருக்கிறாளோ அது அனைத்தையுமே தவிடுபொடி ஆக்குபவனை காணக்காண கடுப்பு கூடியது குந்தவைக்கு.

“நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும். அதுக்கு இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற?” அவனிடமும் எரிச்சல் வந்து அமர்ந்துகொண்டது. எப்போது நெருக்கம் கூடினாலும் சண்டையும் சேர்ந்து வந்துவிடுகிறதே என்ற இயலாமை அவனை அமைதியடைய விடவில்லை.

“குந்தவை நேரமாகுது...” என்ற வானதியின் குரல் மீண்டுமொலிக்க, இருவருமே அவர்கள் இடத்திலிருந்து அசைந்த பாடில்லை.

“எதுக்கு அமைதியா இருக்க இப்போ? வாயை திறடி...”

“சரியான இம்சைடா நீ... உன்னை விட்டுத்தொலையவும் முடியல... கூடவச்சிக்கவும் முடியல...” என்று கத்தியவள் கீழே கிடந்த புடவையை எடுத்து தூர எறிந்துவிட்டு, செல்ப்பை துலாவி கையில் கிடைத்த சுடிதாரை எடுத்து அவசர அவசரமாக மாற்றினாள். மனம் முழுதும் எரிச்சல் மண்டியிருக்க அந்த நேரம் எதுவுமே பிடிக்கவில்லை குந்தவைக்கு. படிப்பு ஒன்று மட்டுமே அமைதிப்படுத்துவதாய் தெரிய, முயன்று பரீட்சையை நினைவுபடுத்திக் கொண்டு கிளம்பி வெளியேறினாள்.

அவள் செல்வதையே பார்த்தவன் அருகிலிருந்த சுவற்றில் வேகமாய் ஒரு குத்துவிட்டு கடுப்பில் எப்போதும் போல தன் துணையைத் தேடி அலமாரியைத் துலாவ, இப்போது தான் சிகரெட்டும் அந்த பழக்கமும் அவனிடம் இல்லையே... அதுவேறு எரிச்சலை அதிகப்படுத்தியது. அதே எரிச்சலுடன் அவனும் கிளம்பியவன் சாப்பிடாமலேயே வண்டியை கிளப்பி, வெளியில் நின்றபடியே அதை உறுமவிட, குந்தவை அவசர அவசரமாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். அதுவோ உள்ளே செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அவள் தொண்டையில் சிக்கி நிற்க, சற்றுமுன் அதே தொண்டையில் ஊர்ந்த அவனது அதரங்களும் அதனது நினைவுகளும் அதன் பின்னானதும் வந்து கண்களில் நீரை சுரத்தது.

“என்னாச்சுடி?”

வானதி அவளையே கவலையுடன் பார்த்துக்கொண்டு நிற்க, அவளுக்குத் தெரியாமல் கண்ணீரை உள்ளே இழுத்த குந்தவை, குனிந்த தலை நிமிர்த்தாமல் எழுந்து கைகழுவிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

வாயிலில் நின்ற அவனது பைக்கில் ஏறியவள் பட்டும்படாமல் அமர்ந்துகொள்ள,

“என் தோளை பிடிச்சிடாத... கலங்கமில்லாத உன்னோட புனிதம் கலங்கமாகிடும்... வண்டி சீட்டை புடிச்சிக்கோ.” என்று அவனாகவே வண்டியை கிளப்பும் முன் சொல்ல, ஏனென்றே தெரியாமல் அவள் விழிகள் மீண்டும் நீர்த்தது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவன் சொன்னது போலவே வண்டி சீட்டை பிடித்துக்கொள்ள, மின்னல் வேகத்தில் வண்டியை கிளப்பினான் தச்சன்.

சுற்றுபுறத்தை கவனிக்காது தங்களின் சஞ்சலங்களில் உழன்றவர்களை தவறாமல் கவனித்திருந்தாள் வானதி. முகத்தில் கவலை அப்ப, நீலாவைத் தேடி கொல்லைக்குச் சென்றவள் அங்கு பிள்ளைகளோடு பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்த நீலாவிடம் சென்று நின்றாள்.

“என்ன வானதி? ஏதாவது வேணுமா?” நிமிர்ந்து அவளை ஒருமுறை பார்த்துவிட்டு நீலா கேள்வி எழுப்ப,

“அத்தை... அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை.”

“அது எப்போதும் நடக்குறது தான். நீ கவலைப்படாத...”

“இல்லத்தை... ரூமிலிருந்து வெளியே வரை சத்தம் கேட்டுச்சு. குந்தவை சரியா சாப்பிடல, உங்க பையனும் சாப்பிடாமலேயே கிளம்பிட்டாரு.” என்றதும் நீலா புருவம் சுருக்கி பின் மீண்டு,

“என்ன கிளம்பி போயிட்டாங்களா? சொல்லாமலே போயிட்டாங்க...” என்று இழுத்தவர் வானதியின் கவலை தோய்ந்த முகத்தை கண்டு சமாதானமாய், “சண்டை போடலைன்னா அந்த நாளே அவங்களுக்கு திருப்தியா இருக்காது. அவங்களுக்குள்ள சரியாகிடுவாங்க... நீ நாலு சின்ன வெங்காயம் உரிச்சி வை... அது இல்லைன்னா உங்க மாமாவுக்கு பழைய சோறே இறங்காது. அப்படியே மேல் அலமாரியில் பச்சை வாலியில் மோர்மிளகாய் இருக்கு. அதையும் நிறையா எண்ணை ஊற்றி வறுத்து வச்சிடு. நான் வந்து பசங்களுக்கு இட்லி ஊத்தித் தரேன்...”

“இட்லி மாவு கொஞ்சம் தான் இருக்கு. உளுந்தும், அரிசியும் ஊற வைச்சு மாவு அரச்சிடவா அத்தை?”

“நானே ஊற வைக்கணும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்ட... பெரிய பித்தளை குவளையில் அரிசி இருக்கு, உளுந்தும் பக்கத்திலேயே இருக்கு.”

“தெரியும் அத்தை... நான் பார்த்துக்குறேன். அப்புறம் நேத்து தான் சிலிண்டர் மாத்துனேன், நீங்க மறக்காம புது சிலிண்டர் புக் பண்ணிடுங்க.” என்றுவிட்டு வானதி உள்ளே சென்றுவிட நீலா ஆமோதித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

இயல்பாய் அந்த வீட்டோடு ஒன்றிப்போயிருந்த வானதி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் கண்மூடி திறப்பதற்குள் ஓடியிருந்தது. அவளது வாழ்க்கை குறித்த பிரச்சனைக்கும் முடிவு வந்திருந்தது. பதினாறாம் நாள் சடங்கில் ஒன்றுகூடிய சொந்தங்களை சாட்சியாய் வைத்து விடுதலைப் பத்திரம் வாங்கியிருந்தனர். பிள்ளைகளை ஒரேடியாய் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று விட்டுக்கொடுத்திட முடியாது என்று பிடிவாதம் பிடித்த வானதியின் புகுந்த வீட்டினரை சமாதானம் செய்வதற்குள் தான் நாக்கு தள்ளிப்போனது.

பேரப்பிள்ளைகளின் மீது உண்மையான பாசத்திலும், உரிமையிலும் அவர்கள் சண்டையிட்டிருந்தாலும் வானதிக்கு அவர்களிடம் விட விருப்பமில்லாத போது எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. பிள்ளைகளை பெற்ற தகப்பன் இல்லாததும் வானதிக்கு சாதகமாக இருக்க, பிள்ளைகள் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமை மொத்தமாய் வானதியிடம் இருந்தது. அதனால் அன்பரசன் தைரியமாய், தடாலடியாய் இறங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டவும் தான் பணிந்து வந்தனர்.

பின்னரும் அவர்களை நம்பி வானதியை அவள் அன்னையோடு அங்குவிட்டு வர தயக்கம் என்பது ஒரு காரணமாய் இருக்க, பத்து நாட்கள் வீட்டையே இரண்டாக்கி மழலை மொழி பேசிக்கொண்டு காலையே சுற்றி சுற்றி வந்து கலகலப்பாய் வைத்திருக்கும் பிள்ளைகளுடன் இன்னும் கொஞ்ச நாள் கூடவே இருக்கலாம் என்ற ஆசையில் வானதியை திரும்ப அவர்கள் ஊரான திருநரையூருக்கே அழைத்து வந்துவிட்டனர்.

முதலில் தயங்கித் தயங்கி நடமாடிய வானதி பத்து நாட்களில் வளைய வலம்வரத் துவங்கியிருந்தாள். குந்தவையை விட வானதிக்கு அந்த வீட்டின் சமையலறை அத்துப்படி என்ற நிலையில் இருந்தது வானதியின் செயல்பாடுகள்.

எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சமெல்லாம் புகுந்து வீட்டினரிடமிருந்து விடுதலை கிடைத்தவுடன் சற்று தணிந்துவிட, புது இடமான குந்தவையின் வீடும் அவளை சுதந்திரமாய் உணரவைத்தது. இறந்தகாலத்தின் கசப்புகளும், நினைவுகளும் அறவே இல்லாத இந்த வீட்டில் பொழுதுகள் நன்றாகவே கழிந்தது. குந்தவை பரீட்சை என்று படிக்க அமர்ந்துகொள்ள அவள் வேலை செய்யாமல் படிக்க சென்றுவிடுகிறாள் என்று எவரும் குறை சொல்லிவிடக் கூடாது என்ற முனைப்பில் முதலில் நீலாவுக்கு சிறிது சிறிதாய் உதவ ஆரம்பித்தாள். பின்னோ கொஞ்ச கொஞ்சமாக சமலையறை கட்டுப்பாடு யாரும் அறியாமலேயே அவளின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. குந்தவை விட்ட இடத்தை நிரப்ப நினைத்து வானதி அனைத்தும் செய்ய, அவளுக்கான இடமும் அவ்வீட்டில் உறுதியாகிக் கொண்டிருந்தது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாய் துவக்கத்தில் எந்த அளவுக்கு இரட்டை பிள்ளைகள் தன் மகளுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளின் இடத்தை தச்சனிடத்தில் பிடித்துவிடுவார்கள் என்று பயந்தாரோ அதற்கு மாறாக குழந்தையோடு குழந்தையாய் விளையாட ஆரம்பித்துவிட்டார் நீலா. குழந்தைகளின் சிறு சிறு செய்கைகள் எப்போதுமே ரசிக்கும்படியாய் தான் இருக்கும், அதுவும் இந்த பாசக்கார இரட்டையர்கள் மனதை நெகிழ்த்திவிட, அவர்களின் சேட்டையை ரசிப்பதிலேயே நேரம் போய்விடுகிறது நீலாவுக்கும் மங்களத்திற்கும்.

இப்போதும் அப்படித்தான் நீலா கொல்லையை சுத்தம் செய்து இலைகளை ஓரிடத்தில் குமிக்க, அதை பார்த்துவிட்டு இரு பிள்ளைகளுமே அவர் செய்வது போல தூக்க முடியாமல் ஆளுக்கொரு ஒரு வார்கோல் பிடித்துக்கொண்டு குப்பையை பெருக்குகிறேன் என்ற பெயரில் எதுவோ செய்து கொண்டிருந்தார்கள். அந்த அழகை ரசித்தபடியே அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வேலை செய்தார் நீலா.

***

விரைவாய் வண்டியை விரட்டி குந்தவையை நேரத்திற்கு கல்லூரி வாசலில் இறக்கி விட்டான் தச்சன். உம்மென்று இறங்கியவள் அவன் முகத்தை பார்த்து நிற்க, அவனோ அவள் முகம் கூட பாராது வண்டியை கிளப்பிச் சென்றுவிட்டான்.

‛போடா டேய்… தப்பெல்லாம் நீ பண்ணிட்டு நான் பண்ண மாதிரி என்னை முறைச்சிட்டு சுத்துற!’ என்று மனதிற்குள் கறுவியவள், சுணக்கம் நீங்கி கடுப்புடன் கல்லூரிக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் தேர்வெழுதும் அறை இருக்கும் மாடிக்குச் சென்று அங்கிருந்த படிகளில் தோழிகளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். அவர்களோ இவளை பார்த்துவிட்டு எழுந்து வந்தனர்.

“ஏய் என்னடி இப்படி வந்து நிக்குற?”

“உனக்கு எத்தனை முறை நியாபகப்படுத்தினோம். பாரு நீ மட்டும் சுடிதாரில் வந்திருக்க…”

“போடி… எல்லோரும் ஒரே மாதிரி போடணும் தானே தேடித்தேடி புடவை எடுத்து இந்த நாள் பிக்ஸ் பண்ணோம்… இப்படி சொதப்பிட்டியே…”

“உன் மாமியார் வீட்டுல ஏதாவது சொன்னாங்களா...” என்று ஏகப்பட்ட கேள்விகள் அவள் தோழிகளிடமிருந்து.

அதுவேறு தச்சனின் மீதிருந்த கோபத்தை அதிகப்படுத்தின.

“என்னடி உம்முன்னு இருக்க?”

“ப்ச்... ப்ளவுஸ் சரியா இல்லைடி. அதுதான் போட்டுட்டு வரல...” கேள்விகள் தாங்காமல் குந்தவை மழுப்ப, தோழிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

“முன்னாடியே எல்லாம் சரியா இருக்கான்னு போட்டு பார்த்திருக்கணும்... கடைசி நேரத்தில் இப்படி சொதப்பிட்டீயே.” என்று குறைபட்டுக் கொண்டிருந்தனர்.

“இம்சை பண்ணாதீங்கடி... கட்டிட்டு வரலை அவ்வளவு தான்... இப்போ நான் படிக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று குரலை உயர்த்த குந்தவையின் குணம் தெரிந்த அவளது தோழமைகள் அவளுக்கு தனிமை கொடுத்து நகர்ந்துவிட்டனர். நித்யா மட்டும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு குந்தவையை ஆராயும் பார்வை பார்த்தாள்.

“என்ன பிரச்சனை குந்தவை? உன் மாமியார் வீட்டில் ஏதாவது சொன்னாங்களா?”

“திரும்ப ஆரம்பிக்காத...”

“அப்போ ஏதோ ஒன்னு இருக்கு.” என்று நித்யா இடக்காய் கேட்க, அமைதியடைய முயலும் குந்தவையை அது உசுப்புவதாய் தான் இருந்தது.

“ஆமா இருக்கு... எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது...” என்று பட்டென முகத்தில் அடித்தாற்போல குந்தவை எரிச்சலை வெளிப்படுத்த,

“குந்தவை!” என்ற அழுத்தமான அழைப்பு அவளை பார்வை உயர்த்தச் செய்தது.

இடுங்கும் பார்வையுடன் தச்சன் அவள் எதிரே நின்றுகொண்டிருக்க, குந்தவை புருவம் சுருக்கினாள். நித்யா சட்டென எழுந்து, “வாங்க அண்ணா... நல்லா இருக்கீங்களா?” என்று மரியாதைக்கு கேட்க, குந்தவையின் தோழி என்றமட்டில் நித்யாவிடம் மென்னகை புரிந்து தலையசைத்தான் தச்சன்.

“இதுல டிபன் இருக்கு. சாப்பிட்டு பரீட்சை எழுதப் போ.” என்று ஒரு வெள்ளை நுண்நெகிழிப் பையை குந்தவையிடம் நீட்ட, அவள் அசரவில்லை.

“எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டு தான் வந்தேன்.”

“நீ ஒழுங்கா சாப்பிடலைன்னு போன் வந்தது. அதுதான் பக்கத்துல வாங்கிட்டு வந்தேன். நீ கண்டிப்பா சாப்பிட்டு தான் ஆகணும்னு அம்மா ஆர்டர்.” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல், அவள் மடியில் பையை வைத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.

இருவரின் பார்வை பரிமாற்றங்களில் இருந்தே ஊடல் வெளிபட்டுவிட, நித்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் குந்தவை அருகில் அமர்ந்துகொண்டாள்.

மடியில் இருந்த பையை பார்த்த குந்தவை, நீலா சொன்னார் என்ற காரணத்திற்காக உண்டாள். முன்பு போலின்றி ஊடலிட்டு நேரம் கடந்திருந்ததால் பசிக்கவும் செய்தது, கோபத்தின் வீரியமும் சற்று மட்டுப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடித்து தேர்வறைக்கு செல்ல தயாராகும் நேரம் அவள் பையிலிருந்த அலைபேசி ஓசையின்றி அதிர, அதை அணைக்கவென எடுத்தால் வானதி மூன்று முறை ஏற்கனவே அழைத்திருந்தாள். எதற்கு கூப்பிட்டிருப்பாள் என்ற யூகம் இருந்தாலும் எதற்கும் எடுத்து பேசிவிடுவோம் இல்லையென்றால் கவலையிலேயே இருப்பாள் என்றெண்ணி அழைப்பை ஏற்றாள்.

“சாப்டியா குந்தவை?” குந்தவை யூகித்திருந்தது போலவே வானதியின் கேள்வி ஒலித்தது.

“நான் சாப்பிட்டேன்டி... எக்ஸாமுக்கு நேரமாகுது நான் அப்புறம் பேசுறேன்...”

“ஏய்... குந்தவை... உன் வீட்டுகாரரும் சாப்பிடலடி... ரெண்டு பேரும் சாப்டீங்க தானே?” என்ற கேள்வி குந்தவையின் அவசரத்தை குறைத்தது.

“அவனும் சாப்பிடலையா?”

“என்னடி அவன்னு மரியாதை இல்லாம சொல்ற? இதெல்லாம் தப்புடி.” என்று வானதி குரலை உயர்த்த, கடுப்பானாள் குந்தவை.

“ப்ச்... உன் வியாக்யானத்தை ஆரம்பிக்காத... அவனை எப்படி கூப்பிடனும்னு எனக்குத் தெரியும்.” என்று கடுப்படித்தவள், வானதியின் அழைப்பை துண்டித்துவிட்டு தச்சனை உண்ணச் சொல்லி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதோடு அலைபேசியை அணைத்து வைத்தாள்.

தேர்வுக்காக அணைத்தவள் கடுப்பில் அதை திரும்ப உயிர்பிக்கவே மறுநாள் ஆகிப்போனது. அதுவும் அவளன்னை சுமதி நினைவுப்படுத்தவும் தான் உயிர்ப்பித்தாள்.

“குந்தவை உன் செல் ஸ்விட்ச் ஆப்னு வருதாமே... வானதி என்னனு கேட்டா...”

காலை தாமதமாக எழுந்தவள் அப்போது தான் காபி குடித்துக் கொண்டிருந்தாள். சுமதி சொல்லவும் தன் பையை துலாவிபடியே, “மறந்துட்டேன்மா...” என்று அதை எடுத்து உயிர்பிக்க,

“வாழ்க்கை எவ்வளவு விசித்திரமா இருக்கு பாரேன்... பரீட்சை, வேலைன்னு சொல்லி நீ இங்க வந்து உட்கார்ந்திருக்க, விருந்தாளியா போன வானதி உரிமைப்பட்டவ மாதிரி உன் மாமியார் வீட்டிலேயே பொருந்திட்டா. இங்கன கூட அவள் குரல் சோர்வா தான் இருக்கும் ஆனால் இப்போ ரொம்ப தெளிவா பேசுறாடி... பசங்களும் மாப்பிள்ளைகூட, அப்புறம் உன் வீட்டு ஆளுங்களோட நல்லா விளையாடுறாங்கலாமே... குஷியா வீட்டையும், தோட்டத்தையும் சுத்தி சுத்தி வராங்களாம்... கன்றுக்குட்டி கூட விளையாடுறாங்களாம். ஒரு இடத்தில உட்காருறது இல்லையாமே... உங்கப்பா உனக்கு பிடிக்காத இடத்தில மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் நல்ல இடமா பார்த்திருக்கார். தங்கமான மனுஷங்க...” என்று சுமதி புகழ் பாட, குந்தவையின் முகம் யோசனையில் சுருங்கியது.

“நான் ஊருக்கு போனதும் அவளை இங்க அனுப்பி வைக்கிறேன். இவ்வளவு நாள் அங்க தங்குறது எல்லாம் முறையில்லை.”

“நீ ஏதாவது இடக்கா பண்ணி வைக்காத குந்தவை. இப்போ நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு உன் குடும்பம் மட்டும் தான். அவங்க மனசு நோகுற மாதிரி நடந்துக்க கூடாது. இந்த முறை உன் மாமனார் தான் கூட்டிட்டு போயிருக்கார். அதுக்கான மரியாதையை கொடுக்கணும்.” என்று கண்டிக்க குந்தவைக்கு அதில் விருப்பமில்லை.

“இனி பிரச்சனை இருக்காது, நீ உன் வீட்டுக்கு கிளம்புமான்னு வானதிகிட்ட அவங்க சொல்லுவாங்களா? நாம தான் சரியா இருக்கணும். நிலைமை புரிஞ்சி மரியாதையை காப்பாத்திக்கணும். ஒருத்தவங்க நமக்கு உதவுறாங்கன்னு அவங்க மேலேயே எப்போதும் சவாரி செய்யக்கூடாது.” என்று தன்பிடியில் சிந்தனையுடன் பிடிவாதமாய் நின்றாள் குந்தவை.

“நீ சொல்றதும் சரிதான்... என்னமோ பார்த்து பண்ணு... வானதி இனியாவது நல்லாயிருக்கணும்.” என்று பெருமூச்சு விட்டு நகர்ந்தார் சுமதி.

No comments:

Post a Comment

Most Popular