Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 11

 

*11*

“உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…” 

“இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை. 

திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி என்று அவளை அனுப்பிவிட, அன்னைக்கு பேசிவிட்டு பின்பு படிப்போம் என்று புத்தகத்துடன் அலைபேசியை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள், சுமதியும் அழைத்துவிட்டார்.

“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா? எதிர்பாராத நேரத்தில் சட்டுன்னு அந்தரத்தில் விட்டுட்டு போயிட்டாரு உங்கப்பா… கெட்டதிலும் ஏதோ நல்ல நேரம் இருந்திருக்கு அதுதான் உனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்துட்டு போயிட்டாரு. இல்லைன்னா ரெண்டு பொண்ணுகளை வச்சிட்டு நான் தள்ளாடியிருப்பேன்.”

“ப்ச்… விடு… பசங்க என்ன பண்றாங்க? அவங்க என்ன சேட்டை செஞ்சிட்டு இருப்பாங்கன்னு தான் மனசுல ஓடிட்டே இருக்கு. வானதி என்ன பண்றா? நித்யா ஹால்டிக்கெட் கொண்டுவந்து கொடுத்தாளா?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றாள் குந்தவை.

“அதுக்கு முன்னே நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க? மாப்பிள்ளை எப்படி இருக்காரு… மாப்பிள்ளை உன் சார்பா உங்கப்பாக்கு எல்லாம் செஞ்சதுக்கு அங்க யாரும் கோச்சிக்கிடலயே?” என்று சுமதியும் தன்பங்கிற்கு வினாக்களை அடுக்கினார்.

“எல்லோரும் நல்லாயிருக்காங்க. ஒரு பிரச்சனையும் இல்லை. நான் இருந்துப்பேன்.”

“நீ இருந்துப்பேன்னு தெரியும். ஆனால் வீணா உன்னோட கோபத்தை பிடிச்சு தொங்கிட்டு இருக்காத… பார்த்து இருந்துக்கோ…”

“சரிசரி சும்மா எதையாவது சொல்லிட்டே இருக்காத. நாளைக்கு வானதியை அப்பா ஆபீசுக்கு போய் கணக்கை முடிச்சு கொடுக்கச் சொல்லி பாக்கி பணத்தை வாங்கிட்டு வரச்சொல்லு. நாம தாமதிச்சா அவங்களும் இழுத்தடிப்பாங்க…”

“என்ன கணக்குடி? வானதி போனா தருவாங்களா? அவளுக்கு வேற ஒன்னும் தெரியாதே. பரீட்சை எழுத வரும்போது நீயே என்னனு வந்து பார்த்து முடிச்சி கொடுத்துடேன்.”

“என்னால முடிஞ்சா வர மாட்டேனா? ஒரே நாளில் முடிச்சு கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் தான் ஒருவாரத்திலாவது பணம் வரும். இந்த மாசத்தில் பாதி நாள் அப்பா வேலைக்கு போயிருக்காங்க. அதுக்கான சம்பளமும், சேமிப்புக்காக மாசாமாசம் கொஞ்சம் பணம் பிடிச்சிருப்பாங்கல்ல அதையும் சேர்த்து வாங்கனும். அப்புறம் ஏதோ ஒரு எல். ஐ. சி பாலிசி எடுத்த மாதிரி நியாபகம் இருக்கு. அந்த பாலிசி பேப்பரை தேடி எடுத்து அது என்னனு வானதியை படிச்சுப் பார்க்கச் சொல்லு. நாமினியா உன் பெயர் தான் கொடுத்திருப்பார், அதையும் இப்போவே க்ளைம் பண்ண முடியுமா இல்லை மேல வேற என்னமாதிரி பண்ணலாம்னு அதிலேயே கொடுத்திருக்கும். அவளை படிக்கச் சொல்லி அது என்னனு எனக்கு சொல்லு. இறப்புச் சான்றிதழை பத்திரமா வச்சிக்கோ அது இருந்தால் தான் சேமிப்பாய் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்து உன் பெயருக்கோ இல்லை வானதி பெயருக்கோ மாற்ற முடியும்.”

“ஏய் நில்லுடி… நீபாட்டிற்கு அடுக்கிகிட்டே போற… கேட்கவே மலைப்பா இருக்கு. இதையெல்லாம் பசங்களை வச்சிக்கிட்டு தனியா வானதி எப்படிடி செய்வா? ஒரு ரெண்டு நாள் சேர்ந்தாற்போல வந்து எல்லாத்தையும் அவளுக்கு விளாவரியா சொல்லிட்டு போ.” என்ற அன்னையின் குரலில் வெளிப்பட்ட பதட்டம் குந்தவையுமே வாட்டியது.

இனி என்ன செய்யப் போகிறார்கள்? என்ற பயமும் லேசாய் எட்டிப்பார்த்தது. இவள் அங்கிருந்தால் நிச்சயம் ஏதாவது செய்து கடனையாவது அடைத்திருப்பாள். இப்போது இங்கு பிறந்தவீட்டை விட்டு தொலைவில் ஒரு கிராமத்தில் இருப்பவளாள் அடுத்து என்ன செய்ய என்றுகூட விளங்கவில்லை. யோசித்துப் பார்த்தவளுக்கு எதுவும் புலப்படவுமில்லை. 

சில நேரம் வாழ்க்கையை அதன் போக்கில் சென்றுதான் கையாள வேண்டும். எல்லா நேரங்களிலும் முன்கூட்டியே திட்டமிடல் சாத்தியப்படுவதுமில்லை, அதற்காக திட்டமிடாமல் எதையும் சாதித்துவிடவும் முடியாது. சரியோ தவறோ இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் போது ஏதோவொரு முடிவை எடுத்துத்தான் ஆகவேண்டும். அது சரிவருமா வராதா… இப்படி நடக்காமல் இருந்திருக்கலாமே என்று அந்தநேரம் யோசித்து காலம் கடத்துவதைவிட துரிதமாய் சாதக பாதகங்களை ஆராய்ந்து அப்போதே முடிவெடுப்பதென்பது இருப்பவற்றை இழப்பதைவிட சாலச்சிறந்தது. 

அப்படித்தான் வாழ்க்கை ஓடத்தில் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்த ஓட தன்னை தயாராக்கிக் கொண்டாள் குந்தவை. கிராமத்தில் தான் மீதி வாழ்க்கை என்று முடிவான பின், கிடைக்காத நகர வாழ்க்கையை மனதிற்குள் வைத்து புழுங்கிக்கொண்டு காலத்தை கடத்துவதை விட நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற பக்குவத்திற்கு வந்திருந்தாள் அவள். ஆனால் இந்த பக்குவம் வருவதற்கு அவள் கொடுத்த விலை தான் பெரியதாகிப்போனது. எதிர்பாராத தந்தையின் இழப்பு எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. அதுவும் அவளது தந்தை குந்தவையிடம் பார்க்க நினைத்த மாற்றம். ஆனால் அந்த மாற்றத்தை பார்க்கத் தான் மனிதருக்கு காலம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. புகுந்த வீட்டினரும் அந்த மாற்றத்திற்கு செப்பனிட, நடப்பவற்றை அப்படியே ஏற்கவும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

“வானதிகிட்ட போன் கொடுக்கிறேன். நீ அவகிட்டேயே பேசு…” என்று சுமதி தன் பெரிய மகளை அழைத்து அலைபேசியை அவளிடம் கொடுக்க, அன்னையிடம் சொன்ன அனைத்தையும் மீண்டும் அக்காவிடம் கடத்தினாள் குந்தவை.

“நிறுத்து நிறுத்து… எனக்கு இதைப்பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. நீயே வந்து எல்லாத்தையும் செஞ்சிடு.” என்று அவள்பங்கிற்கு வானதியும் பதறினாள்.

“ஒன்னும் பிரச்சனையில்லை. நீ பதறாத… முதல்ல அப்பா ஆபீசுக்கு போ. அவங்க என்ன சொல்றாங்கன்னு விசாரி. அதற்கு தகுந்தாற் போல பேசு. அடிக்கடி அலைய முடியாது சீக்கிரம் செட்டில்மென்ட் பண்ணுங்கன்னு சொல்லு. இதை முதலில் வாங்கு. எல். ஐ. சி கூட பரிட்சைக்கு நான் அங்க வரும்போது பார்த்துக்கலாம். அப்போ ஒரு ரெண்டு மூணு நாள் தங்குற மாதிரி வரேன்.”

“நான் எப்படிடி…” பழக்கமில்லாததால் தயக்கம் பெரிதாய் எட்டிப்பார்த்தது வானதியிடம். 

எதுவென்றாலும் தந்தை, கணவன் என்று அவர்களை நாடியே இருந்துவிட்டாள். குந்தவை கூட வீட்டிலிருந்து தொலைவில் இருக்கும் கல்லூரியில் படிக்கிறாள் ஆனால் வானதி வீட்டிற்கு மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்த கல்லூரியில் தான் பெயருக்கு பட்டம் படித்தாள். குந்தவைக்கு நேரெதிர் குணம். அது பிறப்பால் வந்ததா இல்லை வளர்ப்பால் வந்ததா என்ற சந்தேகம் அவளுக்கே உண்டு. அதுவும் கணவனை இழந்தபின்பு நிமிர வேண்டியவளோ ஒடுங்கிவிட்டாள். இதுவரை அந்த ஒடுக்கத்தை முடக்க நினைத்ததில்லை ஆனால் காலம் அதை உடைக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. தள்ளியும் இதை ஏற்கமாட்டேன் என்று தயங்குபவளை என்ன செய்ய முடியும்?

“நீதான் போகணும். வேற வழி கிடையாது.” என்று கறாராய் சொன்ன குந்தவையே மறுநாள் அங்கு போகும்படி ஆகிற்று.

***

“நிதானமா சாப்பிடு குந்தவை. வண்டியிலத் தானேப் போறீங்க. தச்சன் நேரத்திற்கு உன்னை அழைச்சிட்டு போயிடுவான்.” இட்லிக்களை வேகமாய் விழுங்கும் மருமகளுக்கு தண்ணீர் எடுத்துவந்த நீலா அருகிலேயே அமர்ந்துகொள்ள, தச்சனும் திவ்யாவும் கன்னத்தில் கைவைத்தமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நான் ஹால்டிக்கெட் தானே வாங்கப் போறேன்… அது கல்லூரி நேரத்தில் எப்போ வேண்டுமென்றாலும் வாங்கிக்கலாம் அத்தை. ஆனால் இவரு ஆடுதுறைல வேளாண் சம்மந்தமா ஏதோ விசாரிக்கனும், அதனால என்னை விட்டுட்டு அங்க போகணும்னு சொன்னாரு… அங்கே நேரத்திற்கு போனால் தானே சரியாய் இருக்கும். என்னை பஸ் ஏற்றிவிடுங்கனு சொன்னாலும் கேட்கல… ஆடுதுறை சரியா இங்கிருந்து மாயவரம் போகும் வழியின் நடுவில் இருக்கு. இவர் இங்கிருந்து காலேஜ் வரை என்னை அழைச்சிட்டு போய் விட்டுட்டு திரும்பி அதே வழியில் வந்து அந்த ஆராய்ச்சி மையத்திற்கு போகணும். அலைச்சல் தானே… அதற்கு இவர் என்னை ஆடுதுறையில் பஸ் ஏற்றிவிட்டால் கூட நானே போயிப்பேன்.” என்றவளை தாயும் மகனும் ஒருசேர முறைத்தனர்.

“நான் தானடி கொண்டு வந்து விடுறேன்னு சொன்னேன்? சுகமா பின்னாடி உட்கார்ந்துட்டு வரவேண்டியதை விட்டுட்டு எதுக்கு இப்போ பஞ்சாயத்தை இழுக்குற?” என்று தச்சன் கடிந்துகொண்டான் என்றால் நீலாவோ, “உன்னை கூட்டிட்டு போறது எல்லாம் அவனுக்கு அலைச்சலா இருக்குமா என்ன? அதெல்லாம் சுகமா அழைச்சிட்டு போவான்… அவன் வேலை முடிச்சிட்டு திரும்ப உன்னை அழைக்க வரும்வரை உங்க வீட்டுக்கு போயிட்டு வா குந்தவை… அங்கேயே சாப்பிட்டு வந்துருங்க.” என்க, தச்சனுக்கு இவர்களின் இயல்பான பேச்சுக்களில் மண்டை காய்ந்தது.

“மாமியாரும் மருமகளும் கூடி கொஞ்சி குழாவிய தருணம் எல்லாம் எப்போ நடந்ததுன்னே தெரியல… ஆனால் சுத்தி இருக்குறவங்களை நல்லா குழப்பி காயவிடுறீங்க. இனி சண்டைன்னு என்கிட்ட வந்து புலம்பிகிட்டு நின்னுடாதீங்க.” என்று எரிச்சலாய் மொழிந்தவன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் சொன்ன தினுசில் குந்தவைக்கு சிரிப்பு வந்துவிட நீலாவுக்கு தெரியாமல் இதழ் மடித்து சிரித்துக்கொண்டாள். நீலாவின் சிந்தனையோ வேறாக இருந்தது. குந்தவையுடனான கசப்புகள் மறைந்து விட்டாலும் அதனின் தாக்கம் தச்சனை வருத்தியிருக்குமோ… நம்ம புள்ளைய நாமே ரொம்ப படுத்திட்டோமோ என்று தான் எண்ணியது.

அதற்குள் உண்டு முடித்திருந்த குந்தவை வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நீலா வாயில் வரை வந்து அவர்கள் செல்வதை பார்த்துவிட்டுத்தான் உள்ளே சென்றார். குந்தவைக்கு பரீட்சை முடியும்வரை அவளை அங்கேயே அவளது பிறந்தகத்தில் தங்கிடச் சொல்வோமா என்ற யோசனை எழுந்தாலும் ஒரேடியாக குந்தவையின் புறம் சாய்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த யோசனையை கைவிட்டுவிட்டார். 

இறுதியாண்டு என்பதால் சுயவிவரங்கள் சில சேகரிக்கவென மாணவர்கள் அனைவரையுமே ஹால்டிக்கெட் வாங்க நேரே கல்லூரிக்கு வரச் சொல்லியதால் குந்தவையே நேரில் செல்ல வேண்டியதாகிவிட்டது.

வீட்டினுள் வந்த நீலாவை கேலியாய் பார்த்த திவ்யா, “மருமகளை ரொம்பத்தான் கொஞ்சுறீங்க நீலாவதி…” 

“ஆமாமா கொஞ்சுறாங்க… அதுவும் நல்ல பொண்ணு தான் ஆனால் ஒரு உறையில் ஒரு கத்தி தானே இருக்க முடியும்? அளவுக்கு மீறி திணிச்சா இருக்குறதும் அறுந்துடும். அறுவதற்கு முன்னாடியே அவள் வந்து பேசுனா… நாங்க ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்னத்தை செஞ்சிட முடியும்? இருக்குறவரை நிம்மதியா இருந்துட்டு போவோம்.” என்றுவிட்டு அவர் நகர, திவ்யாவிற்கு இப்போவாவது சேர்ந்தாங்களே என்றுதான் ஆனது.

“எப்போ பேசுனீங்க? நானும் வீட்டுல தானே இருக்கேன். எனக்குத் தெரியலையே…”

“நேத்து நீயும், உங்க பாட்டியும் ராகுகாலத்தில் கோவிலுக்கு போகணும்னு போயிட்டீங்க… அப்போ தான் வந்து பேசுனா… உங்கப்பா பேச சொல்லி சொல்லியிருப்பாருனு நினைக்குறேன்.”

“என்ன பேசுனீங்க? இல்லை அண்ணி என்ன பேசுனாங்க? நீயே மாறியிருக்கானா ஏதோ தரமான சம்பவம் நடந்திருக்கு தானே…” என்று ஆவலாய் திவ்யா நீலாவின் வாய்ப்பார்த்து நிற்க, அவளையே கூர்ந்து பார்த்தவர், “அப்பப்போ உன் அண்ணன்காரன் மாதிரியே பேசிவைக்குற…”

“ப்ச்… நீ என்ன நடந்ததுன்னு சொல்லு…” என்று நச்சரிக்க நீலா நடந்ததை சொல்லிவிட, மெச்சுதலான பார்வை திவ்யாவிடம், “அண்ணி ரொம்பத் தெளிவு தான்… மனசுக்குள்ள வச்சிக்காம பட்டுனு பேசி எல்லாத்தையும் சரி பண்ணிட்டாங்க… சரி அப்போ இனி எனக்கு இங்க வேலையில்லை நாளைக்கே நான் ஊருக்கு கிளப்புறேன்.” என்று நீலாவின் வால்பிடித்துக் கொண்டே நடந்தாள்.

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போடி… இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தச்சனை கொண்டுவந்து விடச்சொல்றேன்.”

“ம்ம்மா இப்போவே இங்கன வந்து ஒருவாரமாச்சு. அவர் ஏற்கனவே எப்போ வருவேன்னு கேட்டுட்டு இருக்காரு…” என்று சிணுங்கிய மகளை வாஞ்சையுடன் பார்த்த நீலாவுக்கு இப்போது அவளின் இடத்தில் குந்தவையை பொருத்திப்பார்க்க முடிந்தது. கணவனின் அன்பிலும், ஆதரவிலும் குந்தவை கூட இப்படித்தானே மகிழ்ந்திருப்பாள். 

கணவனின் பாசம் முன்பு தாய்ப்பாசத்தை எடைக்கல்லில் நிறுத்துவது எவ்வளவு அசட்டையான புரிதலற்ற செயல். அதை செய்திருக்கவே கூடாது என்பது குந்தவையிடம் பேசிய பின்பு புரிபட்டுவிட முன்பிருந்த இறுக்கங்கள் இப்போதில்லை.

“சரி… இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு இல்லை நாளை மறுநாள் தச்சனை கொண்டுவந்து விடச்சொல்றேன்.” என்று மகளின் கன்னத்தை தட்டிவிட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.

***

வண்டியின் வேகத்திற்கு இணையான எதிர்காற்று அவள் முகத்தினில் வந்து மோதிட, அதை எதிர்கொள்ள முடியாமல் ஊக்கு குத்தியிருந்ததையும் மீறி பறந்த துப்பட்டாவையும், நெற்றியில் வந்து விழுந்த சிறு முடிகளையும் சரிசெய்து கொண்டே வந்தாள் குந்தவை. அதைக் கவனித்த தச்சன் போக்குவரத்து குறைவாக இருக்கும் சாலையில் ஓரமாய் வண்டியை நிறுத்தி தலையை மட்டும் அவள் புறம் திருப்பியவன், “ரெண்டு பக்கம் கால் போட்டு உட்காருடி… இப்படி எவ்வளவு தூரம் தான் துப்பட்டாவை பிடிச்சிகிட்டே வருவ…”

“இல்லை பரவாயில்லை… நான் இப்படியே வரேன்.” என்று அவள் மறுக்க,

“சொன்னா கேட்டுக்கணும் குந்தவை.” என்று நீலாவைப் போலவே பேசினான் தச்சன்.

அவனையே குறுகுறுவென பார்த்தவள் தலையை ஒருபுறம் சரித்து விழிகளையும், புருவத்தையும் மேலுயர்த்தி, “நீ சொன்னா நான் கேட்கணுமா… அதெல்லாம் கேட்க முடியாது போ…” என்க, முகத்தை தூக்கினான் தச்சன்.

“இதெல்லாம் செல்லாது செல்லாது… நீலா இதையே சொல்லும்போது கேட்டுக்குற… நான் சொன்னா மட்டும் சிலுப்பிக்குற.” 

“அதெல்லாம் அப்படித்தான்…” வேண்டுமென்றே சீண்டினாள் குந்தவை.

“அப்போ வண்டி இங்கிருந்து நகராது… நீ எப்படி போகிறேன்னு நானும் பாக்குறேன்.” விருப்பம் நிறைவேறாத கடுப்பில் முறுக்கிக்கொண்டவன் வண்டியை அணைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட, ஓரிரு நிமிடம் பார்த்த குந்தவை வண்டியை விட்டு கீழிறங்கி அவன் முன்னே வந்து நின்றாள்.

“பஸ் ஸ்டாப் கிட்ட சரியான இடத்தில் வண்டியை நிறுத்தி இருக்கடா… நான் பஸ்ஸில் கூட போயிப்பேன்.” என்றுவிட்டு அங்கு நடக்கும் தூரத்தில் சற்று தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடைபோடுவது போல பாவனை செய்ய பதறிக்கொண்டு வண்டியை இயக்கி அவளை மடக்கினான் தச்சன்.

“சரியான ராங்கிடி நீ… வேணும்னே என்னை இம்சை பண்ணுற.”

“நீதானே தினமும் எனக்கு பிரியாணி வேணும்னு கேட்ட… இப்போ அனுபவி.” என்று குந்தவை நயமுடன் சொல்ல தச்சனின் கடுப்பு இருந்த இடம் தெரியாமல் வடிந்தது.

ஆவல் மனதினில் உதிக்க, காதல் அவன் விழிகளில் நிரம்பி வழியக் காத்திருந்தது.

“ரொம்ப வழியுது தொடச்சிக்கோ.” என்று அதற்கும் தன் கைக்குட்டையை நீட்டி அவனை வெறுப்பேற்றினாள் குந்தவை.

“கிறுக்கி… அஞ்சு நிமிஷம் மனுஷன நிம்மதியா காதல் பண்ண கூட விடமாட்டா… நீ ரெண்டு பக்கமெல்லாம் கால் போட்டு உட்கார வேண்டாம்… உன் கையை மட்டும் என்னை சுத்தி போட்டு உட்கார்ந்துக்க…” என்று பெரிய மனது பண்ணி சொல்வது போல சொன்னவன் அவள் கைப்பிடிக்க, வெடுக்கென உருவிக்கொண்டு அவன் பின் ஏறி அமர்ந்தாள் குந்தவை.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ வண்டியை எடு.”

“நான் சொல்ற எதுக்குமே ஒத்துக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டியா குந்தவை?” அவனின் குரலில் கடினம் ஏறியிருக்க, குந்தவையின் குரலும் ஏற முற்பட்டு அது வெளிவரும் முன்னரே தாழ்ந்து தன் நிலை உரைத்தது.

“அம்பர்லா கட் சுடி போட்டிருக்கேன்… ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார முடியாது.” என்றதும் திரும்பி அவளது உடையை கவனித்தவன் அவளது காரணம் ஏற்கும்படியாய் இருப்பதை உணர்ந்து, அவளின் ஒருகையை பிடித்து தன் இடைசுற்றி போட்டுக்கொண்டான்.

அதை வெடுக்கென உருவப்பார்த்தவளின் செயலை ஏற்கனவே கணித்து தன் வயிற்றில் பதியவைத்திருக்கும் அவளது கரத்தின் மீது தன்னுடையதை வைத்து அழுத்திப் பிடித்திருந்தான்.

“ப்ச்… விடு. வண்டியில் போகும் போது இதென்ன பிடிவாதம் உனக்கு?” என்று அவள் மறுத்தாலும் அவளை விடுவதாய் இல்லை தச்சன்.

“சும்மா இருடி… ரொம்பத் தான் அலட்டுற… என்னை பிடிச்சிக்குறதுல என்ன குறைஞ்சிடப் போகுது இப்போ?” என்று எரிச்சலை வெளிப்படுத்த அவளது பதிலுமே எரிச்சலாய் தான் வந்தது.

“எனக்கு இதில் விருப்பமில்லை. என்னை கட்டாயப்படுத்தாத.” 

“என்ன கட்டாயப்படுத்துறாங்க உன்னை? இதெல்லாம் ஒரு குத்தம்னு நடுரோட்டுல பஞ்சாயத்தை இழுக்காத…” 

“இது… இதுத்தான் பிரச்சனை… ரோட்டில் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு?” அவன் எதிர்க்க, அவளது நியாயங்களும் பழையபடி உரத்த குரலில் வெளிவந்தது.

“இதுக்குப் பேரு கொஞ்சலாடி? வெளில சொல்லிடாத சிரிப்பாங்க.”

“சிரிச்சா தப்பில்லை… கெட்டுப்போனா தான் தப்பு.”

“ப்ச்… யாரு, எங்க கெட்டுப்போயிட்டாங்க இப்போ? எதுக்கு இப்படி சம்மந்தம் இல்லாம பேசுற?” என்று தச்சன் எரிந்துவிழ, இருவருக்குள்ளும் இருந்த இலகுத்தன்மை எப்போதோ கரைந்திருந்தது.

“நமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்லி சொல்லித்தான் இப்போ இருக்குற சமுதாயமும் காலமும் கெட்டுக்கிடக்கு.””

“சமூகம் கெடுறதுக்கும் என்னை பிடிச்சிக்க சொன்னதற்கும் என்னடி சம்மந்தம் இருக்கு… ஒரு மண்ணும் புரியல… என்னவோ பண்ணு.” என்று அவள் கையை அழுத்திப் பிடித்திருந்த தன்னுடையதை விலக்கிக்கொண்டு வேகமாய் அவன் வண்டியை விரட்ட, குந்தவையும் கையை உருவிக்கொண்டு பக்கவாட்டில் இருந்த கைப்பிடியை பிடித்துக்கொண்டாள்.

பதினைந்து நிமிடம் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தைவிட வேறெதுவும் கேட்கவில்லை. தச்சனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று பொறுமையாய் கேட்கும் எண்ணமில்லை. அவளுக்கோ தன்னுடைய எண்ணங்களை வன்மையாய் கொட்டாமல் மென்மையாய் புரியும்படி சொல்ல ஏதுவான நிதானத்தை கொண்டுவர அவகாசம் தேவைப்பட்டது.

“கொஞ்சம் பொறுமையா போ…”

“முடியாது.”

“நான் ஏன் மறுக்குறேன்னு உனக்கு காரணம் தெரிய வேணாமா?” என்று பொறுமையாய் சொல்லவும் அவளது வார்த்தைகள் வேலை செய்தது. வேகத்தை மிதமாக்கியவன் செவிகளை தீட்டிக்கொண்டு அதிலேயே கவனம் பதித்திருக்க, சாலையில் சென்ற வாகனங்களின் இரைச்சலையெல்லாம் அவன் கவனித்திருக்கவில்லை. ஆனால் குந்தவைக்குத் தான் பயமாகிப்போனது. ஒருநொடி கவனம் சிதறினாலும் ஆபத்து தானே என்று தாமதமாய் புரிபட இதழ்களை இறுக பூட்டிக்கொண்டாள்.

“என்னடி என்னமோ சொல்ல வந்த மாதிரி இருந்தது…ஆனால் சத்தத்தையே காணோம்?”

“இப்போ நேரமாகுது அப்புறம் பேசலாம்.” என்று அவள் மறுக்க, அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“அப்புறம் எதுக்குடி என்னை உசுப்பிவிட்ட? இதையே இன்னைக்கு முழுசும் என்னால நினைச்சுகிட்டு இருக்க முடியாது. நீ முகத்தை தூக்கிவச்சிக்குற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று பிடிவாதம் பிடித்தவன் வண்டியை நிறுத்தியே விட்டான்.

“என்னடா நேரம் காலம் பார்க்காம பிடிவாதம் பிடிக்குற? எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேன்… இதுக்கு மேல இதைப்பற்றி பேச இப்போ சரியான நேரமில்லை. நாம பொறுமையா அப்புறம் பேசலாம்… உனக்காக அந்த ஆராய்ச்சி நிலையத்தில் யாரும் காத்திட்டு இருக்க மாட்டாங்க… நீ தான் நேரத்திற்கு போகணும். அந்த எண்ணமே இல்லாம வண்டியை நிறுத்தி நிறுத்தி விளையாடிட்டு இருக்க… முதலில் வண்டியைக் கிளப்பு…” என்று குந்தவை அதட்ட, இனி முக்கினாலும் முனகினாலும் அவளிடமிருந்து இப்போதைக்கு காரணம் வரப்போவதில்லை என்பது புரிந்துவிட, அவள் பேச்சை கேட்பதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.

ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு அவளை நேரே கல்லூரியில் இறக்கிவிட்டவன், அவள் கைகளில் சில நூறு ரூபாய் தாள்களை திணித்து, “செலவுக்கு வச்சிக்கோ… நீ செலவு செஞ்சது போக மீதியில் என் அறிவு செல்லங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போ…” என்றவன் அவள் எதிர்வினை புரியும் முன்னரே கிளம்பிவிட்டான். நின்றால் இதற்கும் ஏதாவது மறுப்பு சொல்லி பிரச்சனையை கிளப்புவாள் என்று தெரியும்… அவளும் அந்த எண்ணத்தில் தான் இருந்தாள் ஆனால் தச்சன் சுதாரித்து வேகமாய் பறந்துவிட்டான்.

கல்லூரியில் கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்துவிட்டு ஹால்டிக்கெட் வாங்கியவள் வானதியை நந்தன் வேலை செய்த அலுவலகத்திற்கு வரச்சொன்னாள். வானதியோ பிடிவாதமாய், “இவ்வளவு தூரம் வந்திருக்க, நீயே போயிட்டு வந்துரு… நான் இன்னும் குளிக்கக்கூட இல்லை. மதியம் சமையலும் இன்னும் ஆரம்பிக்கல. பசங்க இப்போ தான் தூங்கி எழுந்தாங்க… இனி தான் ஓடியாடி விளையாடுவாங்க அம்மாவால் எல்லாத்தையும் தனியா பார்த்துக்க முடியாது.” என்று ஏதேதோ சாக்கு சொன்னாள்.

“என்னடி விளையாடுறீயா? நைட்டே நான் ஹால்டிக்கெட் வாங்க வருவேன், நீயும் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டா சேர்ந்த போயிட்டு வந்துருவோம்… உனக்கும் விவரம் தெரிஞ்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்ல…” என்று அதட்ட, வானதி உள்ளே போன குரலில், “நான் வரலடி…”

அக்காவின் குரல் கெஞ்சலாய் ஒலிக்க, குந்தவைக்கு ஒருமாதிரியானது. மற்றவர்களை அரட்டும் அளவிற்கு குந்தவை என்றுமே வானதியை ஒன்றும் சொன்னதில்லை. வானதி அமைதியோ அமைதி, குந்தவை அதற்கு நேரெதிரான துடுக்கான பெண் என்று உறவினர்கள் சொல்லும் போது துவக்கத்தில் பெருமையாகத்தான் இருந்தது குந்தவைக்கு. வானதி இப்படித்தான் என்று அவள் பெரிதாய் கண்டுகொண்டதில்லை. ஆனால் என்று வானதி கணவனை இழந்து வீட்டோடு முடங்கினாளோ அன்றிலிருந்து அதுவே பெரிய குற்றவுணர்ச்சி ஆகிப்போனது. 

வெளியே தைரியமாய் பேசி தவறை தட்டிக்கேட்டு, தோழிகளை தைரியமாய் இருக்கச்சொல்லி பக்கம் பக்கமாய் அறிவுரை வழங்குபவள் தன் உடன்பிறந்தவளையே தேற்றத் தவறிவிட்டாளே… மற்றவர்களிடம் சொன்ன உத்வேக வார்த்தைகளில் கொஞ்சமேனும் வானதிக்கும் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் தாமதமாகவே வந்தது குந்தவைக்கு. வந்தபின்னும் கூட உடனேயெல்லாம் அவளை தேற்றிட முடியவில்லை. உள்ளிருந்து எழும் ஆழ் உணர்வுகளை அடியோடு மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லையே… அதுவும் வானதியே மாற வேண்டும் என்ற நினையாத போது குந்தவை மட்டும் நீ இப்படித் தான் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்று எண்ணங்களை வற்புறுத்தி வானதியிடம் திணித்துவிட முடியுமா என்ன? அதுபோன்ற சமயங்களில் குந்தவை இறங்கித்தான் போவாள்… இறங்கிப் போவாள் என்பதை விட தெரிந்தே தோற்றுப் போவாள்… அப்படி தோற்பவளை வெல்ல வைக்க வேண்டும் என்று வானதியும் என்றுமே சிந்தித்ததில்லை. இன்றும் அதுவே தான் நிகழ்ந்தது. 

குந்தவையே நேரில் அவள் தந்தை வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று பேச வேண்டியதை பேச, ஒருவாரம் கழித்து கணக்கை முடித்துக் கொடுக்கிறோம் என்று அவர்கள் வாக்கு கொடுத்தனர். வந்த காரியம் நிறைவடைந்துவிட்ட திருப்தியில் அலுவலக அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அங்கோ அவளே எல்லாவற்றையும் முடித்துவிட்ட மகிழ்ச்சியில் வானதி தங்கையை உவகையுடனே வரவேற்க, குந்தவை அவளிடம் முகம்கொடுத்து பேசவில்லை. அப்படியாவது அடுத்து என்ன என்று யோசிப்பாளா என்று குந்தவை நினைத்திருக்க, இரண்டொரு நாளில் தங்கை தன்னிடம் பேசிவிடுவாள், பேசாமல் எங்கே சென்றுவிடப் போகிறாள் என்ற எண்ணத்தில் சுற்றினாள் வானதி.

“எதுக்கு குந்தவை அவகிட்ட முகத்தை காட்டுற?” என்று சுமதி சமாதானம் பேச வர,

“இனி முகத்தை மூடிக்குறேன்.” என்றவள் கண்களுக்கு மட்டும் கருணை காட்டி முகத்தை துப்பட்டாவுக்குள் மறைத்துக்கொண்டாள்.

“இதுக்கு நீ பேசாமையே இருந்திருக்கலாம்.” என்று வானதி முணுமுணுத்துவிட்டு வேலையை கவனிக்கச் சென்றுவிட, மாலையில் தச்சன் வரும்வரைக் கூட துப்பட்டாவை முகத்திலிருந்து கழற்றவில்லை குந்தவை.

தனக்காக கதவு திறந்தவளை உறுத்து விழித்து குந்தவை தான் என்று உறுதிப்படுத்திக்கொண்ட தச்சன் குழப்பமாய், “என்னடி கோலம் இது? பேசித்தான் இதுவரை எல்லோரையும் பயமுறுத்திட்டு இருந்த இப்போ இதுவுமா? ஹால்டிக்கெட் வாங்கிட்ட தானே?” என்க, ம் என்று கடைசி கேள்விக்கு பதில் கூறிவிட்டு அவள் முறைத்த முறைப்பில் இவன் கப்சிப்… 

“இவளா எதுக்குமே பதில் சொல்ல மாட்டா… அதுவும் நாம கேட்டா… ம்கூம்...” என்று முணுமுணுத்துவிட்டு அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அவனைக் கண்டதுமே அறிவழகன் சிரித்துக் கொண்டு அவனை நோக்கி தத்தை நடையிட்டு வர, வேகமாய் அவனை வாரியணைத்துக் கொண்டான் தச்சன். 

“குட்டிப்பையா எப்படி இருக்கீங்க? சித்தப்பா உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்னு பாருங்க… உன் சித்தி உனக்கு எதுவுமே வாங்கிட்டு வரலதானே...” என்று குந்தவையை சரியாய் கணித்திருந்தவன் பேச்சுவாக்கில் அவளுக்கு கொட்டுவைத்துவிட்டு, கையோடு வாங்கிவந்திருந்த ரிமோட் காரை எடுத்துக் கொடுத்தான். அதை ஆவலோடு வாங்கிக்கொண்ட அறிவழகன் அதில் லயித்துவிட, அவனின் குண்டு கன்னத்திலே அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவனை கீழே இறக்கிவிட்டான்.

“எதுக்கு மாப்பிள்ளை இதெல்லாம்?” சுமதி தயக்கமாய் அவனை ஏறிட,

“இருக்கட்டும் அத்தை…” என்றவன் விழிகள் அறிவழகியை தேட, அவள் வானதியின் புடவையை பிடித்துக்கொண்டு அவனையும் அறிவழகன் கையிலிருக்கும் புது விளையாட்டுக் காரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். சைகையாலேயே அவளை அழைக்க குறுகுறுவென பார்த்தாலே ஒழிய அவனை நெருங்கவில்லை அந்த சிட்டு.

“சித்தி மாதிரியே முழிக்குறதை பாரு… அடுத்த குந்தவையாக வர இப்போவே இந்த ராட்சசி ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டா போலிருக்கு...” என்று இதழ்களுக்குள் முணுமுணுக்கொண்டவன் அவளுக்கு வாங்கி வந்த பொம்மையை எடுத்து நீட்ட, ஓரிரு நொடி யோசித்த பின்னேதான் அவனை நெருங்கி அந்த பொம்மையை வாங்கிக்கொண்டாள் அறிவழகி. அவளின் கன்னம் தட்டியவன், குந்தவையிடம் பார்வையை திருப்பி,

“கிளம்பலாமா குந்தவை…”

“என்ன அதற்குள் கிளம்புறீங்க மாப்பிள்ளை? சாப்பிட்டுட்டு போகலாமே…”

“இல்லைங்கத்தை இப்போவே மணி ஆறாகப்போகுது… இப்போ கிளம்புனால் தான் இருட்டுறதுக்கு முன்னால் வீட்டுக்கு போக முடியும். நாளைக்கு நேரமே வயலுக்கு போகணும்.”

“நீங்க வருவீங்கன்னு பஜ்ஜிக்கு கரைச்சி வச்சேன்… அதையாவது சாப்பிட்டு போங்க… காபி குடிப்பீங்க தானே?” என்று கேட்டுவிட்டு சுமதி வேகமாய் எண்ணைக் கடாயை அடுப்பில் ஏற்றி சுடச்சுட பஜ்ஜியை தயார் செய்ய, வானதி இன்னொரு அடுப்பில் காபி போட்டாள். உள்ளே அவனை உபசரிக்கவென வேகமாய் வேலைகள் நடக்க,

“என்ன வம்புக்கு இழுக்காம உன்னால இருக்க முடியாதா?” என்று வெளியே அவனிடம் எகிறிக் கொண்டிருந்தாள் குந்தவை.

“யார் நானா? நீதான்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்தை கூட்டிட்டு இருப்ப… காலையில் கூட என்னவோ ஆரம்பிச்ச அதுவே இன்னும் முடியல…”

“நான் ஒன்னும் ஆரம்பிக்கல… நீதான் சும்மா இருந்தவளை உசுப்புன…” காலையில் விட்டது மீண்டும் நின்ற இடத்திலிருந்தே துவங்கியது.

“என்னை பிடிச்சிக்க தானே சொன்னேன்… அதிலென்ன உனக்கு கசக்குதுனு புரியல… ரூமில் எல்லாம் நல்லாத் தானடி இருக்க…” என்று புரியாமல் பேச அவன் வாயிலே பட்டென்று ஒரு அடி போட்டாள் குந்தவை.

“பிள்ளைங்க இருக்குற இடத்தில் இப்படி நடுக்கூடத்தில் என்னடா பேச்சு இதெல்லாம்?”

“ப்ச்… என்னமோ சிட்டியில தான் இருக்கனும். அங்க வேலைப் பார்க்கிறவன்தான் வேணும்னு முதல்ல சொல்லிட்டு இப்போ நீதான்டி இன்னும் பட்டிக்காடாவே இருக்க…” என்று சிலுப்பியவன் அவளை கண்டுகொள்ளாது மழலையோடு மழலையாய் விளையாடச் சென்றுவிட்டான்.

அவனையே முறைத்துப் பார்த்தவள் மனம் தாளாது, “சாப்பிட்டியா மதியம்?” என்ற அவளது கேள்விக்கு அவனிடம் சிறு தலையசப்பு மட்டுமே… போடா என்றுவிட்டு அவளும் டீவியை போட்டு அமர, அவனுக்காய் சுடச்சுட ஆவிபறக்க வந்தது பஜ்ஜியும், காபியும். 

பொருமலோடு அவனுக்கு கிடைத்த உபசாரத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்து கிளம்பும் வரையில் வாயே திறக்கவில்லை. வானதியிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.

காலைப் போலவே பயணம் அமைதியாய் இருக்க, போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும் இடத்தை தாண்டியதுமே தச்சனின் வார்த்தைகள் வெளிவந்து விழுந்தது, “எதுக்குடி இப்படி உர்ருனு வர? சிரிச்சா குறைஞ்சா போயிடுவ?”

“ரோட்டுல போறவங்க வர்றவங்கள பார்த்து சிரிக்கச் சொல்றியா? நான் இப்போ சிரிச்சா அப்படித்தான் இருக்கும்.” வெடுக்கென அவள் பேச அவன் தலையிலடித்துக் கொண்டான்.

“நீ யோசிக்காம பேசிட்டு இப்போ என்னமோ என் பதிலை கேட்டு தலையிலடிச்சுக்குற? சிரிக்கணும்னா எதிரில் யாராவது தெரிஞ்சவங்க வரணும் இல்லையா ஏதாவது ஜோக்குக்கு சிரிக்கலாம். ரெண்டுமே இல்லாம வண்டியில் போகும்போது ஈன்னு பல்லை காட்டிட்டு வரச் சொல்றியா?” என்று குந்தவை தன்னிலை விளக்கம் கொடுக்க, 

‘இன்று ஒரு முடிவோடு தான் இருக்கிறாள்… வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளாமல் நாம தான் சுதாரிப்பா இருந்துக்கணும்.’ என்று நினைப்பில் அவன் வாயே திறக்கவில்லை. நாள் முழுதும் வேலை செய்யாமல் பாதி நேரம் சும்மாவே நாற்காலியில் அமர்ந்து காத்திருந்ததில் உடல் சோர்வாகியிருக்க, அவளுடன் மல்லுக்கு நிற்பது எவ்வளவு பிடித்ததோ அதே அளவிற்கு கசத்தது இப்போது. வீட்டிற்கு போய் கால்நீட்டி படுத்தால் தேவலாம் என்பது போல தோன்ற விரைவாய் வண்டியை விரட்டி வீட்டுக்கு வந்துவிட்டான்.

இறங்கியவுடன் நேரே அறைக்குச் சேர்ந்து கைலிக்கு மாறியவன் மேல்ச்சட்டையை கழற்றி கைபோன போக்கில் வீசிவிட்டு மெத்தையில் படுத்துவிட்டான். படுத்த வேகத்தில் உறங்கியும் விட்டான். வேலை செய்திருந்தால் கூட இவ்வளவு களைப்பு வந்திருக்காது ஆனால் ஆராய்ச்சியாளரை பார்க்கவென சும்மாவே காத்திருந்திருந்தது அவ்வளவு சோர்வாக இருந்தது. ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற காரியமும் நம்பகக்கரமாய் இருக்க நேற்றிருந்த கவலையெல்லாம் இன்றில்லை. கவலையற்ற நிம்மதியான உறக்கம் கலையவே வெகுநேரம் பிடித்தது.

அதுவும் பின்னிருந்து யாரோ தன்னை இறுக்கமாய் பிடித்திருப்பது போன்று உணர, அந்த இறுக்கத்தின் பிடியில் தூக்கத்தை தொடரமுடியாது சிரமப்பட்டு இமைகளை பிரித்தான். 

அறை இருளில் மூழ்கியிருக்க கண்ணை கசக்கியவன் நேராய் படுக்க முற்பட, அவனை திரும்பவிடாமல் தடுத்தது அவனைச் சுற்றியிருந்த குந்தவையின் கரம்.

அவளது மூச்சுக்காற்று அவனது வெற்றுமுதுகில் பட்டுத்தெறிக்க மூச்சு முட்டியது இவனுக்கு.

“என்னடி இப்படி பிடிச்சிருக்க? வலிக்குது…” உறக்கத்திற்கு பின்னான குரல் சோபையாய் ஒலிக்க, அவனை மேலும் ஒண்டிக்கொண்டாள் குந்தவை.

“நீதானே உன்னை பிடிச்சிக்க சொன்ன.” அவன் காலையில் சொன்னதை அவனது அருமை மனைவி இரவு செய்து கொண்டிருந்தாள்.

“மணி என்ன இரவாகிடுச்சு தானே?”

“பத்து.”

“நான் காலையில் பத்து மணிக்கு சொன்னதை நீ ராத்திரி பத்து மணிக்கு செஞ்சிட்டு இருக்க… இவ்வளவு ஸ்லோவா இருந்தா பத்து மாசத்துல புள்ளை பெத்துகொடுப்பியா இல்லை இருபது மாசமாகுமா?” 

அவன் நெஞ்சில் பதிந்திருந்த தன் கரம் கொண்டே அவனை செல்லமாய் குத்தியவள், “இருபது மாசத்தில் ரெண்டு புள்ளை வேண்ணா பெத்துத் தரேன். ஆனால் எல்லாமே ரெண்டு வருஷம் கழிச்சு தான்.” என்று மையலாய் பேசிவிட்டு முகத்தை அவன் முதுகினில் தேய்க்க, சிலிர்த்து திரும்பியவன் அவள் கன்னத்தை மென்மையாய் பற்றிக்கொண்டான்.

“இதை காலையிலேயே செஞ்சிருக்கலாம்…”

“காலையில் செஞ்சிருந்தா என்னவாகியிருக்கும்?”

“செம்ம கிக்க்கா இருந்திருக்கும்.”

“இப்போ செய்றது அப்படி இல்லையா?”

“நான் அப்படி சொல்லல… காலையில வண்டியில போகும் போது நீ செஞ்சிருந்தா அதோட பீலே{feel) தனி…” என்று ரசித்துக் கூற அவளது முகம் சிந்தனைக்குத் தாவியது.

“என்ன பீல்?”

“ப்ச்… அதெல்லாம் பசங்க விஷயம்… சும்மா கெத்தா இருக்கும்... வண்டியில வேகமா போகும்போது சில்லுனு காத்தடிக்கும், அப்போ நமக்கு பிடிச்ச பொண்ணு நம்ம பின்னாடி நம்மள இறுக்கப் பிடிச்சிக்கிட்டு மேல சாஞ்சி...” என்று கனவுலகில் மிதந்துகொண்டு கூற, பட்டென்று கத்தரித்தாள் குந்தவை.

“இதுதான் எனக்குப் பிடிக்காது.”

அவளது குரலில் இருந்த பேதம் அவனது சிறகுகளை சட்டென வெட்டிவிட அவன் முகமும் யோசனைக்குத் தாவியது. அவனை அதிகம் யோசிக்கவிடாமல்,

“வண்டியில போகும்போது இருக்கும் நெருக்கத்தைவிட இப்போ நெருக்கம் நெருக்கியே இருக்கு…” என்று ஒருவரை ஒருவர் அணைத்திருக்கும் அவர்களின் நிலையை சுட்டிக்காட்டியவள், “இதுல கிடைக்காதது அதில் கிடைச்சிடப் போகுதா?”

“என்ன சொல்லவர? தெளிவா சொல்லு…” அவனிடம் உவமை வைத்து மறைமுகமாய் பேசினால் எடுபடுமா என்ன… என்னவென்று தெரிந்துகொள்ள அவசரம் தான் அதிகமாகியது.

“அணைப்பும், முத்தமும் அன்போட வெளிப்பாடு. அதை யாருக்கு எங்க கொடுக்குறோம் என்பது தான் முக்கியம். தவிர்க்க முடியாத சமையத்திலோ இல்லை வீட்டினுள்ளோ முகம் சுழிக்க வைக்காத கண்ணியமான அணைப்பு கணவன் மனைவிக்கிடையில் பொதுவெளியில் இருக்கலாம் ஆனால் நீ கேட்ட அந்த அணைப்பு தேவையில்லாதது. வண்டியில போகும்போது சும்மா கெத்துக்காட்டணும்னு நீ நினைக்குற… யாருக்கு காட்டணும்னு நினைக்குறேன்னு தான் எனக்கு புரியல… ஒரு சமூகத்தில் வாழறோம்ன்னா அதற்கான கட்டுப்பாட்டில் கட்டுப்பட்டு வாழனும். முன்னுதாரணமா இருக்கணும்னு கூட அவசியமில்லை ஆனால் என்னோட சுதந்திரம் தான் பெருசுனு பொதுவெளியில் அநாகரீகமா நடந்துக்குறதில் எனக்கு விருப்பமில்லை.

நீ சொல்ற மாதிரி நான் உன்னை இறுக்கமா அணைச்சிகிட்டு வண்டியில் போறதுனால என்ன நடந்துடும்னு நினைக்குற? நம்மோட தரம் தான் கீழே இறங்கும், அதுவும் எப்போதுன்னா நம்மை பார்த்து இன்னொருத்தர் செய்யும் போது… அது சின்ன பசங்களா கூட இருக்கலாம்… சாலையில் எல்லோரும் தான் பயணிக்குறாங்க. அதில் பாதிப்பேர் வேடிக்கை பார்த்துட்டு வருவாங்க… விடலைப்பசங்க பார்க்குறாங்கன்னு வச்சிக்கோ… என்ன ஆகும்? நீயே இதெல்லாம் கெத்துனு நினைச்சிட்டு இருக்க… அந்த பிம்பம் தான் அவங்க மனசிலும் பதியும்.

இதை ஏன் நாம செய்யக்கூடாதுனு தோணும். ஆர்வக்கோளாறான அந்த வயசில் இதெல்லாம் செஞ்சா நாளைக்கு அவங்க எதிர்காலம் என்ன ஆகும்? ஏற்கனவே எந்த இடத்தையும் விட்டுவைக்காம சுத்திட்டு இருக்காங்க… அப்படி சுத்துறவங்க எல்லாருமே அதே துணையோடு தான் இறுதி வரை இருக்காங்களா?

அதோட இப்போ சமூகம் கெட்டுப்போச்சு கெட்டுபோச்சுனு அதிகமா புலம்புறோம். அந்த சமூகம் யாரு? அவங்க எப்படி கெட்டுப் போறாங்க? நம்மைப் போல தனிமனிதர்கள் பலர் சேர்ந்தால் தான் அது சமூகம். சிறுதுளி பெருவெள்ளம் தான்… 

நம்மோட செயல்கள் எல்லாமே கண்காணிக்கப்படுது. அதை பார்த்துட்டு அதையே காப்பி பண்றாங்க… அப்போ அந்த பசங்க மனதில் இதுபோன்ற எண்ணங்களை விதைக்குறது யாரு? நாம தானே… நாம விதைக்குறதை தான் அடுத்த தலைமுறையில் அறுவடை பண்றோம்… நாளைக்கு நம்ம குழந்தைகளும் இந்த சமூகத்தில் தான் வளரப்போறாங்க… அவங்களுக்கு ஒரு ஆரோக்கிய சூழல் வேண்டாமா…”

“நீ இவ்வளவு பொறுமையா பேசுவியாடி…” அவள் இவ்வளவு விளக்கமாய் பொறுமையாய் பேசியதற்கு அவனது எதிர்வினை இப்படியிருக்க, அவளுக்கு கடுப்பாகுமா ஆகாதா… கோபத்தில் அவனை ஒரே தள்ளாய் தள்ள முயலும்போதே அவள் மேல் உருண்டு மறுபக்கம் சென்றுவிட்டான் தச்சன்.

“நீயெல்லாம் திருந்தவே மாட்ட டா… உன்கிட்ட போய் சொல்லிக்கிட்டு இருக்கேனே என்ன சொல்லணும்…” சொற்கள் அவள் பற்களுக்கு இடையில் இடிபட, அவள் இடையினில் கைவிட்டு அவளை தன்மேல் இழுத்துக்கொண்டான் தச்சன்.

“இதெல்லாம் பழைய பஞ்சாங்கம்டி… இதைவிட அதிகமா சினிமாவில் காட்டுறாங்க… இப்போ யாருதான் டிவி பார்க்கல சொல்லு. உன்னையும் என்னையும் பார்த்து யாரும் கெட்டுப் போகப்போறதில்லை. நீவேணும்னா பார்க், பீச்சுன்னு போய் களநிலவரத்தை ஆராய்ஞ்சிட்டு வாயேன்… நாம ரெண்டு பேருமே சேர்ந்து கெட்டுப்போவோம்…” என்றவன் அவள் இதழை வன்மையாய் சிறைபிடிக்க, நாவறண்டது குந்தவைக்கு.

இடையில் ஏற்பட்ட இடைஞ்சலில் எரிச்சல் வந்தாலும் இனிமை வாசிக்கும் அவனது இதழ்களுக்கு இடையூறு செய்ய விருப்பமில்லாமல் போனது குந்தவையின் இதழ்களுக்கு. அவனாய் விடுவிக்கும் வரை அவள் அதனை மறுக்கவுமில்லை முழுமனதுடன் ஒன்றவுமில்லை.

“என்னடி அமைதியா இருக்க?”

“எனக்குப் புரியல… பொதுவெளியில் வெளிப்படுத்தினால் தான் காதலா? பாசமா? நாலு சுவருக்குள் இதே அன்பை நீ என்கிட்ட பொழிஞ்சாலும் குற்றம்குறை எதுவுமில்லையே… 

உன்னோட பாசம் எனக்குத் தெரிஞ்சா போதும் என்னோடது உனக்குத் தெரிஞ்சா போதும். ஆனால் ஒருத்தருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் பொதுவெளியில் முக்கியம். நீ என்னை மதிக்குற, நானும் உன்னை மதிக்குறேனு தெரிஞ்சா தான் நாளைக்கு நம்ம பசங்களும் நம்மை சமமா மதிப்பாங்க… அதைத்தான் நீ வெளிப்படுத்தனும்… அப்புறம் தான் இந்த காதல் எல்லாம்… நீ என்ன சொன்னாலும் எவ்வளவு வற்புறுத்தினாலும் நான் இதிலிருந்து மாறுவதா இல்லை… பலருக்கு சினிமா வேற வாழ்க்கை வேற என்ற உண்மை புரிந்தும் அதை ஏத்துக்காம இருக்கலாம். ஆனால் நான் என் அளவில் சரியா இருப்பேன். இருக்கணும். உனக்கு இதில் உடன்பாடு இல்லைனாலும் நீ என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துத்தான் ஆகணும்…” என்று கறாராய் தன் நிலையிலேயே நின்றாள் குந்தவை. 

“சரிடி என் செல்லக்குட்டி… இன்னைக்கு இவ்வளவு பிரியாணி போதும்… வயிறு முட்ட, திகட்டத் திகட்ட கொடுத்துட்ட… இப்போ எனக்கு சாப்பாடு போடு…” என்று எழுந்துகொள்ள, எழாமல் படுத்தபடியே இருந்தாள் குந்தவை.

அவளின் அழுத்தத்தை உணர்ந்தவன் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, “உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன் போதுமா…” என்றவுடன் தான் சட்டென எழுந்து பச்சக்கென அவன் கன்னத்தில் இதழை ஒற்றி எடுத்துவிட்டு துள்ளலாய் வெளியே ஓடினாள் குந்தவை.

ஓடியவள் கதவருகே நின்று திரும்பிப் பார்த்து, “சீக்கிரம் வா… உன்கூட சாப்பிடணும்னு நானும் சாப்பிடாம இருக்கேன்…” என்றுவிட்டு செல்ல,

வீராப்பாய் ‘என் விருப்பப்படி தான் எல்லாமே செய்வேன். யாரும் என்னை அடக்கமுடியாது’ என்று சுற்றித் திரிந்த காலங்கள் அவனுக்கு நினைவு வந்து தொலைக்க, “அன்பரசன் சாபம் பலிச்சிடுச்சே… இவள் என்ன சொன்னாலும் கடைசியில நான் கேட்டுத் தொலைச்சிடுறேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.” என்று மனதில் கவுண்டர் கொடுத்தபடியே உண்ணச் சென்றான் பெருந்தச்சன்.

No comments:

Post a Comment

Most Popular