Menu

Search This Blog

Chinna Chinna Poove 14 - Deepa Babu

 


*14*


மெல்ல சிரித்தவன், "இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை... எல்லா இடங்களிலும் நடப்பது தான். உனக்கு வெளி அனுபவம் குறைவு என்பதால் விவரம் தெரியவில்லை!" என்றான் ரமணன்.

"ம்... ஆமாம் ஆமாம்!" என்றாள் நந்தினி யோசனையோடு.

"அப்புறம் என்னவாயிற்று?"

"ப்ச்... அப்புறம் என்ன? அவன் லவ்வரை திருமணம் செய்துக் கொண்டால் சொத்தில் ஒரு பைசா தர மாட்டேன் என்று அவன் அப்பா அவனை மிரட்டி எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

இது எல்லாமே என் அப்பாவுக்கு தெரியுமாம்... அவர் நண்பர் என்ற முறையில் என் அப்பாவிடம் எல்லாவற்றையும் புலம்பி இருக்கிறார். அதற்கு நல்லப் பெண்ணாக பார்த்து சீக்கிரமே அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடு என்று அப்பா ஐடியா கொடுத்திருக்கிறார்.

அவரோ, ஐயோ... இவன் நடவடிக்கையால் வருகிற பெண் எங்கள் மானத்தை சந்தி சிரிக்க வைத்து விடுவாள் என்று அலறி இருக்கிறார். உடனே என் அப்பா, என் பெண் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாள்... அதனால் அவளையே உன் பையனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

அவரும் இதை விட்டால் சந்தர்ப்பம் கிடைக்காது என்று உடனே சம்மதித்து அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டனர். திருமணமானால் வேறு வழியில்லாமல் அவன் அடங்கி விடுவான் என்று இவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் அவனோ... உங்களை பழி வாங்க தான் இவளை திருமணம் செய்துக் கொண்டேன், எல்லாம் திட்டம் போட்டு என்னை மிரட்டினீர்கள் இல்லை... இப்பொழுது எப்படி இவளை என்னோடு வாழ வைக்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என சவால் விட்டு விட்டு வெளியே போய்விட்டான்!" என்று சலித்துக் கொண்டவள்,

"ஆனால் மாட்டிக் கொண்டது என்னவோ நான் தான். அவன் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருந்தான். எனக்கும் கோபம் வந்து விட்டது... நான் என்ன செய்தேன்? எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது என்று நான் கூறவும், அவன் என்னை நம்ப முடியாது பொய் சொல்கிறாய் என்று அலட்சியப்படுத்தினான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... நான் சத்தியமாக உண்மையை தான் சொல்கிறேன் என்று மறுபடியும் அழுத்திக் கூறினேன். அவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான், பின்பு நிமிர்ந்து 'அப்போ எனக்கு ப்ரூப் பண்ணு...' என்றான்.

நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டேன். 'நான் டைவர்ஸ்க்கு அப்ளை பண்றேன் அதில் உனக்கு பரிபூரண சம்மதம் என்று கையெழுத்து இட்டு விட்டு என் வாழ்க்கையிலிருந்தே நீ நிரந்தரமாக வெளியேறிவிட வேண்டும்' என்று கூறினான்.

டைவர்ஸ் என்றதும் எனக்கு பயமாகி விட்டது, ஐயோ அப்பா திட்டுவாரே என்று. அதற்கு அவனோ 'இங்கே பார் உன் அப்பாவிற்கு பயந்து கொண்டு நான் என் வாழ்க்கையை விட்டுத் தர முடியாது... உன்னை என்றும் என் மனைவியாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றான் தீர்மானமாக.

எனக்கும் அதை நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. அப்பாவிடம் சொன்னதும் அவர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டால் வீட்டிற்குள்ளேயே சேர்க்க மாட்டேன் என்று மிரட்டினார்.

அதை நான் அவனிடம் சொன்னதும் 'உனக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து, தங்குவதற்கு ஹாஸ்டலும் நானே ஏற்பாடு செய்து தந்து விடுகிறேன், நீ என்னை விட்டு போனால் போதும்' என்றதும் எனக்கு மிகவும் அசிங்கமாகி விட்டது!" என்றாள் நந்தினி, இதழ்கள் துடிக்க விழிகளில் நீர் பெருகியது.

அவளின் நிலையை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது ரமணனுக்கு.

விழிநீரை துடைத்துக் கொண்டவள், "அங்கிருந்து வெளியேறி இப்பொழுது வரை பார்ப்பது அவன் வாங்கி கொடுத்து வேலை தான், ஒன்றரை வருடம் ஆகி விட்டது. யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன்... நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்.

யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் பயமாகவே இருந்தது. டைவர்ஸ் ஆனவள் என்று மற்றவர்கள் என்னைத் தவறாக கணித்து விடுவார்கள் என்கிற எண்ணம் அடி மனதில் எந்நேரமும் இருந்துக் கொண்டே இருக்கும்.

அதனால் யாரையும் நம்புவதற்கு மிகவும் பயந்தேன், தனியாக இருக்கின்றவள் என்று என்னை ஏதாவது ஏமாற்றி விடுவார்களோ என யாரிடமும் என்னைப் பற்றிய விவரம் எதையும் நான் சொல்ல மாட்டேன். உங்களிடம் தான் முதன் முதலில் எல்லாம் சொல்கிறேன்!" என்று சோகமாக சொல்லி முடித்தாள்.

அவளை இலகுவாக்க, "அடடா... என்னிடம் உன்னை பற்றி எல்லாம் சொல்லி விட்டாயே... நான் ஏதாவது செய்து விடுவேன் என்று உனக்கு இப்பொழுது பயமாக இல்லையா?" என கேலியாக புருவம் உயர்த்தி கேட்டான் ரமணன்.

ஒரு நிமிடம் அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்தவள் பின் என்ன நினைத்தாளோ, "ப்ச்... எனக்குத் தூக்கம் வருகிறது, நான் தூங்குகிறேன்!" என்று திரும்பி படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

ஒரு கணம் திகைத்து விழித்தான் ரமணன்.

'என்ன... தூங்குகிறாளா?' என்று உள்ளிருந்து மட்டமான குரல் ஒன்று கேள்வி கேட்டு அவனை பார்த்து நக்கலாக சிரித்தது.

வேகமாக கட்டிலை விட்டு கீழே இறங்கியவன், ஒரு ஸ்டூலை அவள் முன்னே இழுத்துப் போட்டுக் கொண்டு எதிரே அமர்ந்தான்.

"ஏய்... இங்கே பார். ஒழுங்காக கண்களைத் திற... நான் எவ்வளவு சீரியசாக பேசிக் கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால் அசால்டாக தூங்குகிறேன் என்கிறாயே!" என்று தவிப்புடன் அவள் கன்னத்தை லேசாக தட்டி எழுப்பினான்.

"இன்னும் என்ன சொல்ல வேண்டும்? அதுதான் எல்லாம் சொல்லி விட்டேனே... அப்புறம் என்ன? ஆங்... உங்களை பார்த்து பயப்படவில்லையா என்று கேட்டீர்கள் இல்லை... முதலில் பயமாக தான் இருந்தது, ஆனால் இப்பொழுது இல்லை. ஓகே? நான் தூங்குகிறேன்!" என்றாள் மீண்டும்.

"நோ... நோ... நீ இப்பொழுது தூங்க கூடாது. நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும்!" என்றான் தீர்மானமாக.

அவனையே எரிச்சலுடன் புருவம் சுளித்துப் பார்த்தவள், "இப்பொழுது உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? இதற்கு மேல் என்னிடம் எதுவும் கிடையாது!" என்றாள்.

"உன்னிடம் எதுவும் கிடையாது தான், ஆனால் என்னிடம் நிறைய இருக்கிறது. நான் இப்பொழுது பேசியே ஆக வேண்டும்!" என்றான் உறுதியாக.

ஆங்... என அவனை விசித்திரமாக நோக்கியவள், "ஓ... உங்களை பற்றிப் பேச வேண்டுமா? பேசலாமே... நாளை பேசலாம். எனக்கொன்றும் உங்களை மாதிரி அவசரமில்லை, நாளை பகல் வேளையில் நிதானமாக கேட்டு தெரிந்துக் கொள்கிறேன். ஓகே?" என்று தலைசரித்து அழகாக வினவினாள்.

இவனுக்கு தான் டென்ஷன் ஏகத்திற்கும் ஏறிற்று, 'முதலில் இவளுக்கு ஏதாவது ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து, இவள் தூக்கத்தை கலைக்க வேண்டும். அப்பொழுது தான் நான் சொல்வது இவளது மண்டையில் ஏறும்!' என்று முடிவு செய்து, அவள் கண்களை நேருக்கு நேராக நோக்கினான்.

ஒரு கணம் கண்களை மூடி தன் மனதை ஒருமுகப்படுத்தியவன் பின் இமைகளை திறந்து, "ஐ லவ் யூ! நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாமா?" என பட்டென்று கேட்டே விட்டான் ரமணன்.

அவள் உதடுகள் தன்னால் பிளந்துக் கொள்ள அவன் முகத்தையே சிமிட்டாமல் கண்கள் அகற்றிப் பார்த்தவள், ம்... என்று குரல் சரியாக வெளி வராமல் என்னவென்று கேள்வியாக தலையை மட்டும் குத்துமதிப்பாக ஆட்டினாள்.

அவளின் நிலையைப் பார்த்த ரமணன், தான் போகின்ற பாதை சரி தான் என்கிற உணர்வுடன் நந்தினியின் முகத்தை இன்னும் நெருங்கி, அவள் விழிகளை ஆழமாக ஊடுருவி... ஹஸ்கி வாய்ஸில் மீண்டும் கூறினான்.

"ஐ லவ் யூ!"

நந்தினி இமைக்க மறந்து அவனையே பிரமித்துப் போய் பார்த்தாள்.

அவள் கண்களை விட்டு இம்மியளவும் தன் பார்வையை அகற்றாமல், அவன் தன் இதழ்களை குவிக்க அவள் விழிகள் பதற்றத்தில் தெறித்து விழுகின்ற அளவுக்கு விரிந்தது. இதயத்துடிப்பு உயர்ந்து மேலும் கீழுமாக நெஞ்சம் தன் ஓட்டத்தை துவக்க, மூச்சுக்காற்றும் சீரற்று வேக வேகமாக வெளி வரத் துவங்கியது அவளுக்கு.

மெல்ல அவள் முகத்தில் ஃஉப் என்று காற்றை ஊதினான் அவன். உடல் சிலிர்த்தவள் தன்னையுமறியாமல் கண்களை மெல்ல மூடிக் கொண்டாள்.

உதட்டில் மெல்லிய புன்னகை தவழ, "எவ்வளவு நேரம் தான் கண் சிமிட்டாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாய் நீ?" என்றான் கேலியாக.

ம்... என்கிற சத்தத்தை தவிர அவள் தொண்டையிலிருந்து வேறு வரவில்லை.

முகத்தில் கனிவு தோன்ற அவள் கன்னத்தை மென்மையாய் ஆசையுடன் வருடியவன், "எதற்கு 'ம்' என்று கூறினாய்... நம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தா?" என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டியபடி.

மீண்டும் படக்கென்று விழிகளை விரித்தவள், "ம்ஹும்... ம்ஹும்..." என்று மின்னலினும் விரைவாக மறுத்து தலையசைத்தாள்.

"என்ன ம்ஹும்?"

"இல்லை... இல்லை..." என்றாள் அவசரமாக வாயைத் திறந்து.

'அப்பா... ஒரு வழியாக நாம் எதிர்பார்த்த டாபிக்கை அவளின் வாய் வழியாகவே ஆரம்பித்து வைத்து விட்டோம்!' என்று வெற்றி பெருமிதத்தில் உள்ளம் மலர்ந்தான் ரமணன்.

"என்ன இல்லை?

"திருமணமெல்லாம் இல்லை..." என்றாள் நந்தினி பதற்றமாக.

"ஏன்?" என்றான் ஒற்றை வார்த்தையில்.

"ம்... ஏன் என்றால்... நான் ஏற்கனவே திருமணம் ஆனவள்!" என்றாள் முகம் வாட சோகமாக.

"ஸோ வாட்? நானும் தான் திருமணம் ஆனவன்!" என்று அசால்டாக அவளை நோக்கி ஒரு குண்டை தூக்கி போட்டான் ரமணன்.

ஒரு கணம் திகைத்து மீண்டும் அவனை பார்த்து பேந்த பேந்த விழித்தவள், "அப்புறம் ஏன் என்னை திருமணம் செய்ய கேட்கிறீர்கள் நீங்கள்?" என்றாள் பரிதாபமாக.

உண்மையிலேயே அப்பொழுது அவளுக்கு மிகவும் குழப்பமாகத் தான் இருந்தது.

'ஒருவன் என்னடாவென்றால்... வீட்டில் வற்புறுத்தினார்கள் என்று காதலித்த பெண்ணை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொள்கிறான்!'’

'இவன் என்னடாவென்றால்... தான் ஏற்கனவே திருமணமானவன் என்கிறான்... இவர்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தால் எப்படி தான் தோன்றுகிறது... இளித்தவாய் என்றா?' என்ற கோபம் சட்டென்று தலைக்கேற அவனை முறைத்துப் பார்த்தாள் நந்தினி.

அவள் குழம்பியபடி கேள்வி கேட்கவும் அதற்கு தகுந்த பதிலளிக்க முயன்றவன், அவள் சட்டென்று முறைக்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"என்ன திடீரென்று பயங்கரமாக முறைக்கின்றாய்?" என்றான் வியப்புடன்.

"பின்னே... என்னைப் பார்த்தால் எப்படி தோன்றுகிறது உங்களுக்கு?" என்றாள் ஆத்திரத்துடன்.

"ம்... எனக்கு என்ன என்னவோ தோன்றுகிறது!" என்றான் அவன் ஏக்கப் பெருமூச்சொன்றை உஷ்ணமாக வெளியேற்றியபடி.

அவள் முகத்தில் உடனே பதற்றம் தொற்றிக் கொள்ள, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.

"என்னவாயிற்று? எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாய்!" என்றான் மீண்டும் சீண்டலாக.

'எப்படியாவது இப்பொழுதே அனைத்தையும் பேசி ஒரு நல்ல முடிவாக எடுத்து விட வேண்டும்!' என்றும் உறுதியாக தனக்குள் எண்ணிக் கொண்டான்.

மறுபடியும் சற்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டவள், அவனிடம் மெதுவாக பேசினாள்.

"ஆமாம்... நீங்கள் தான் என்னென்னவோ பேசுகிறீர்களே!" என்று அவனை குற்றம் சாற்றினாள் நந்தினி.

"ஏன் நான் என்ன பேசினேன்?" என்றான் ரமணன் அப்பாவியாக.

'ப்ச்... இவன் என்ன பேசினதையே திரும்ப திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறான்...' என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள் அவள்.

அவன் தன்னை இயல்பாக பேச வைக்க முயற்சிக்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.

"அப்புறம் ஏற்கனவே திருமணம் ஆன நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்யக் கேட்கிறீர்கள்? அது எவ்வளவு பெரிய தப்பு?" என்றாள் வேகமாக.

"மனைவி உயிரோடு இருந்து உன்னை திருமணம் செய்ய கேட்டால் தான் தப்பு... அவள் இறந்து நான் மட்டும் தனியாக இருக்கும் பொழுது கேட்பதில் என்ன தப்பு?" என்றான் கேலியான கேள்வியாக.

சட்டென்று திகைத்தவள், அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"ஐயோ... உங்கள் மனைவி இறந்து விட்டார்களா... எப்படி?" என்றாள் படபடப்புடன்.

"ப்ச்..." என்று சலித்தவன், "உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாள்!" என்றான் விட்டேற்றியாக.

"அச்சோ... அப்படியா? என்னவாயிற்று அவர்களுக்கு?" என்று சோகமாக அடுத்து கதை கேட்க தயாரானாள் நம் நாயகி.

ஒரு கணம் அமைதியாக இருந்த ரமணன், "நந்தினி! ப்ளீஸ்... இதைப் பற்றி நாம் இன்னொரு நாள் பொறுமையாகப் பேசுவோமே... இப்பொழுது நம் திருமணத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்!" என்றான்.

"ஓ... சரி சரி. நீங்கள் ரொம்ப ஃபீல் பண்ணாதீர்கள்... நான் எதுவும் கேட்க மாட்டேன்!" என்று தன்னையுமறியாமல் அவன் கரம் மீது தன் கரத்தை வைத்து ஆறுதல் கூறினாள் அவள்.

மெல்லப் புன்னகைத்தவன், அவள் கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் பொக்கிஷமாக பத்திரப்படுத்திக் கொண்டான்.

"சரி இப்பொழுது உன் முடிவு என்ன?" என்றான் நேரிடையாக.

அவன் தன் கரத்தை எடுத்து அவனுடைய கரங்களுக்குள் புதைத்துக் கொண்டதையே வேடிக்கைப் பார்த்திருந்தவள், குரல் கேட்டு நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.

"இது தப்பில்லையா?" என்றாள் லேசாக தயங்கியபடி.

"இது எப்படிடா... தப்பாகும்? உனக்கும் யாருமில்லை... எனக்கும் யாருமில்லை. என்னுடைய வீட்டில் நான் ஒருவன் மட்டும் தான் தனியாக இருக்கின்றேன். உடம்பு சரியில்லை என்றால் ஒரு மாத்திரை எடுத்து கொடுக்க கூட ஆளில்லை தெரியுமா?" என்றான் வருத்தத்துடன் அவளின் பரிதாபத்தை தூண்டும் விதமாக.

"என்ன? உங்களுக்கு யாருமே இல்லையா... அப்பொழுது உங்கள் அப்பா, அம்மா..." என்றாள் கவலையுடன்.

"ம்... அவர்கள் இறந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது!" என்றான் சோகமாக.

அவளின் இந்த இரக்க குணத்தையும், பரிதாபத்தையும் தூண்டிவிட்டு எப்படியாவது அவளை இந்த திருமணத்திற்கு உடனடியாக சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான் அவன்.

"வந்து... அப்பொழுது இது தப்பில்லை என்கிறீர்களா?" என்றாள் நந்தினி மீண்டும் தயக்கத்துடன்.

"இல்லைம்மா..." என்றவன், "சரி இதற்கு பதில் சொல். உனக்கு என்னை பிடித்திருக்கிறதா இல்லையா? என்னுடன் பழகுவது எதுவும் வெறுப்பாக இருக்கிறதா உனக்கு?” என்று கூர்மையான பார்வையோடு கேட்டான்.

கண்ணெடுக்காமல் ரமணன் முகத்தையே சில நிமிடங்களுக்கு நேராக பார்த்திருந்தவள், பின்பு மெல்ல இல்லையென்று தலையசைத்தாள்.

No comments:

Post a Comment

Most Popular