Yennai Theriyuma 4 - Deepababu

 


*4*


அடுத்தடுத்து ஜெய்யிடம் அனுமதி வாங்காமல் வேகமாக அவன் வண்டியில் ஏறி அமர்ந்தது மட்டுமில்லாமல் அவனை விரட்ட ஆரம்பித்தாள் அவள்.
‘என்னடா நடக்கிறது இங்கே?’

"ஹலோ... என்ன வேடிக்கை? சீக்கிரம் வண்டியை எடுங்கள். ஹேய் வேதா... நன்றாக உட்கார்ந்து விட்டாய் அல்லவா?"

"ஆங்... நான் நன்றாகப் பிடித்து கொண்டேன்டி!" என்றாள் அப்பெண் வேதா.

"ஹும்... எனக்கு தான் சரியாகப் பிடிக்க வசதியில்லை, இதில் சீட் வேறு இப்படி சரிவாக இருக்கிறது. என்ன வண்டியோ?” என சலித்துவிட்டு,

“ஹலோ சார்... வண்டியை ஸ்டார்ட் பண்ணாமல் என்ன பண்ணிட்டிருக்கீங்க? சீக்கிரமாக கிளம்புங்கள்!" என்று அவனிடம் திரும்பவும் அதிகாரம் பண்ண ஆரம்பித்தாள் அந்தப் பெண்.

அடிங்... என உள்ளுக்குள் பற்களை கடித்து, "ஏய்... யார் நீ? உன் பாட்டுக்கு குறுக்கே வந்தது மட்டும் இல்லாமல் என்னிடம் அனுமதி கேட்காமலேயே என் வண்டியில் ஏறி அமர்ந்துக்கொண்டு என்னையே வேறு அதிகாரம் செய்கிறாய். முதலில் கீழே இறங்கு நீ!" என்று அவளை கோபமாக அதட்டினான் ஜெய்.

"அண்ணா... அண்ணா... ப்ளீஸ் அண்ணா, எங்களை இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் தான் ஹெல்ப் பண்ணணும்ணா ப்ளீஸ்... சீக்கிரம் வண்டியை எடுங்கள்!" என்று கெஞ்சினாள் வேதா.

போனால் போகிறது உனக்காக செய்கிறேன் என்பது போல் பார்வை ஒன்றை அவள்புறம் வீசிவிட்டு அலட்சியமாக திரும்பி வண்டியை முறுக்கினான் ஜெய்சங்கர்.

பாதி தூரம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுதே நடுவில் அமர்ந்திருப்பவள் உடலை நெளித்துக் கொண்டே பயணித்தாள்.

அவள் எவ்வளவு தான் முயன்று அவனிடம் இருந்து தள்ளி தள்ளி அமர்ந்தாலும், வண்டி செல்கின்ற வேகத்திற்கும், சீட் அமைந்திருந்த முறைக்கும் அவளால் அவன் மேல் மோதாமல் இருக்க முடியவில்லை.

'கடவுளே... வண்டியை தேர்ந்தெடுக்கும் பொழுது இதற்கென்றே தேர்ந்தெடுப்பான்கள் போலிருக்கிறது!' என்று மனதிற்குள் புலம்பியபடி மீண்டும் சரிந்து அவன் முதுகில் மோதியவள் அடுத்து வழக்கம் போல் தள்ளி அமர்ந்தாள்.

உடனே ஜெய் பட்டென்று சடன் பிரேக்கிட்டு வண்டியை நிறுத்த, இந்த முறை சற்று பலமாகவே அவன் மேல் விழுந்தவளுக்கு சுறுசுறுவென்று சினம் ஏறியது.

அவள் வாயைத் திறக்க எத்தனித்த நேரம் அவன் எரிச்சலுடன் அதட்டினான்.

"ஏய்... வண்டியை ஆட்டாமல் ஒழுங்காக உட்கார்ந்து வர மாட்டாயா? நானும் அப்பொழுது இருந்துப் பார்க்கிறேன் நெளிந்துக்கொண்டே வருகிறாய். நான் எப்படி தான் வண்டி ஓட்டுவது? அப்புறம் மூன்று பேரும் சேர்ந்து ஏதோ ஒரு பள்ளத்தில் விழ வேண்டியது தான்!"

"ஏய் மணி... வண்டியை ஆட்டாமல் ஒழுங்காக தான் உட்கார்ந்து வாயேன். அவருக்கு ஓட்டுவதற்கு கஷ்டமாக இருக்கிறது இல்லை!"

"வேண்டாம்டி... என் வாயைக் கிளறாதே, நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்வாய். வண்டியாடி இது? நான் ஒருபக்கம் உட்கார்ந்தால் அது ஒருபக்கம் என்னை தள்ளுகிறது.

நான் என்ன செய்வது? இதுபோன்ற வண்டியெல்லாம் இப்படி மோதுவதற்கென்றே வாங்குவார்கள் போலிருக்கிறது!" என்று கடைசி வாக்கியத்தை வாய்க்குள்ளேயே மெதுவாக முணுமுணுத்தாள் பெண்.

"எதைப் பேசுவதென்றாலும் வெளியே தெளிவாகப் பேசு, சும்மா வாய்க்குள்ளே முனகாதே. நான் ஒன்றும் இந்த வண்டியை உன்னை பின்னால் அமர்த்திக்கொண்டு செல்வதற்கு வாங்கவில்லை. என் வசதிக்கும், வேகத்திற்கும் எது தேவையோ அதைத்தான் வாங்கினேன்!" என கடுப்புடன் மொழிந்துவிட்டு வண்டியை எடுத்தான் ஜெய்.

ஊருக்குள் நுழைந்தவுடனே இப்படிப் போங்கள், அப்படிப் போங்கள் என்று அவனை வழி நடத்தியவள், "ஆங்... இந்த வீடு தான், நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!" என ஒரு வீட்டின் முன்னே நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினாள்.

'இந்த வீடா?' என்று புருவம் சுருக்கி நின்றான் ஜெய்சங்கர்.

"ரொம்ப தாங்க்ஸ் அண்ணா... இந்த உதவியை நான் என்றும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்!" என்றாள் வேதா.

"ஆமாம்... ஆமாம்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், நீ வா!" என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் அந்த மணி.

'இவளெல்லாம் என்ன கேரக்டர் என்றே தெரியவில்லையே... இவள் இங்கே எதற்கு வந்திருக்கிறாள்?' என்று வண்டியை லாக் செய்துவிட்டு உள்ளே சென்றான்.

அங்கே இரண்டு பேரும் லட்சுமியிடம் தீவிரமாக எதையோ கூறிக் கொண்டிருந்தனர். அந்த மணி சொல்லச் சொல்ல கேட்டிருந்த லட்சுமியின் முகபாவம் கோபமாக மாறியது, சட்டென்று அவள் காதைப் பிடித்து திருகினார் அவர்.

விழிகளில் ஆச்சரியம் படர, "யார் இவள்?" என்று தனக்குள் முனகினான் ஜெய்.

"ஆ... பெரியம்மா வலிக்கிறது விடுங்கள்!" என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு சிணுங்கினாள் மணி.

"ஒரு நாளாவது பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடந்துக் கொள்கிறாயாடி நீ? கரணம் தப்பினால் மரணம் என்பது போல் என்ன வேலை செய்து வந்திருக்கிறாய்? மனதில் பெரிய ஜேம்ஸ் பாண்ட் என்று நினைப்பு... அந்த ஆள் மட்டும் அந்நேரம் அங்கே வரவில்லை என்றால் என்னவாகி இருக்குமோ... பாவி மகளே!" என்று முதுகில் ஒன்று வைத்தார்.

'என்னை போல் ஒரு ஜேம்ஸ் பாண்டா?’ என வியப்புடன் அவளை பார்த்தவன், ‘ஓ... நாம் தான் அந்த ஆளா!' என மந்தகாசமாக முறுவலித்தான்.

"முதலில் உன்னை சொல்ல வேண்டும்... என்ன படித்து என்ன பிரயோஜனம்? மூளையில்லாமல் இன்னமும் விட்டில் பூச்சியாக தானே இருக்கிறீர்கள். உங்களையெல்லாம் எத்தனை காலம் மாறினாலும் திருத்தவே முடியாது!" என்று வேதாவை சாடினார் லட்சுமி.

"இல்லை அத்தை... இதுபோல் எல்லாம் நடக்கும் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. தவறு என்னுடையது தான், ஆனால் இதிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். அப்பா, அம்மாவுக்கு தெரிந்தால் கொன்று விடுவார்கள்!" என்று கண்ணை கசக்கினாள் வேதா.

"ஏய்... என்ன நீங்கள் பாட்டுக்கு வீட்டிற்குள்ளே வந்து விட்டீர்கள்?" என்று ஜெய்யை பார்த்து திகைப்புடன் கேட்டாள் மணி.

அவனோ அதை அலட்சியம் செய்து அவர்கள் அருகில் சென்றான்.

"அடடே வாப்பா... என்ன அதற்குள் திரும்பி விட்டாய்?" என்று வினவினார் லட்சுமி.

"இல்லைம்மா... என்னை எங்கே போக விட்டார்கள்? பாதி வழியிலேயே இதோ... இவர்கள் இருவரும் குறுக்கே வந்து இங்கே இழுத்துக்கொண்டு வந்து விட்டார்கள்!" என்றான் ஜெய் புன்னகையுடன்.

"அட... அப்பொழுது நீதான் இவர்களுக்கு உதவினாயா? ரொம்ப நல்ல வேலை செய்தாய்பா!" என்று அவர் பாராட்ட, மணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

'நமக்கு தெரியாமல் நம் வீட்டிலே ஒரு ஆளா?' என்று யோசனையோடு அவனை பார்வையால் அளவெடுத்தாள்.

"யார் பெரியம்மா இது?" என்றாள் அவர் தோள்மீது கையை ஊன்றிக்கொண்டு.

"என்னடி இது? ஒழுங்காக மரியாதையாக பேசிப்பழகு. இவர் பெரியப்பாவின் நண்பர் வேலை பார்க்கின்ற டிவி சேனலில் ஒன்றாகப் பணிபுரிபவர். இங்கே நம் ஊரின் வரலாற்றை பற்றி நிறைய ஆராய்ந்து, தகவல்கள் சேகரித்துவிட்டு தொடராக ஒரு நிகழ்ச்சி இயக்கப் போகிறார். நம் வீட்டு மாடியில் தான் தங்கி இருக்கிறார், உட்காருங்கப்பா!" என்று அனைவரையும் அமரச் சொன்னவர் தானும் அமர்ந்தார்.

"என்ன பிரச்சினைம்மா?" என்று ஜெய் அவரிடம் விவரம் கேட்டான்.

"அதை ஏன்பா கேட்கிறாய்? இதோ இவள் இருக்கிறாளே என் தங்கை பெண், சரியான அடாவடி. அனைத்திற்கும் அவள் அப்பா தான் காரணம், இந்தக் காலத்தில் பெண்ணை தைரியசாலியாக வளர்க்க வேண்டுமென்று அவர் செய்யாத வேலையில்லை.

கராத்தே கிளாஸ் அனுப்புவதிலிருந்து என்னவெல்லாம் செய்கிறார்... பெயர் கூட என்ன தெரியுமா? ஜான்சி ராணியின் இயற்பெயரான மணிகர்ணிகா என்று தான் வைத்தார்.

அந்தப் பெயர் வைத்ததாலோ இல்லை... இயற்கை குணமோ, எதற்கென்றாலும் துள்ளிக்கொண்டு திரிவாள் அடக்க முடியாது.

என் தங்கை தான் இவளை பற்றி ரொம்பவே புலம்பித் தள்ளுகிறாள்!" என்று மணியை குறித்து அவர் படபடவென்று பேசவும், சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் மனதில் தன் தாய் தன்னை குறித்து புலம்புவது அலைமோதியது.

"பெரியம்மா!" என்றவள் முறைக்க அவன் இதழ்களில் கேலிப் புன்னகை மலர்ந்தது.

அவள் சிலுப்பிக்கொண்டு மறுபுறம் திரும்ப, "எதற்காக யார் உங்களை துரத்தினார்கள்?" என்று வேதாவிடம் வினவினான் ஜெய்.

"அது எதற்கு உங்களுக்கு?" என்று எகிறிய மணியை, “உன் வேலையை பார்!” என முறைத்து அடக்கியவன் வேதாவிடம், “நீ சொல்!” என்று ஊக்கினான்.

சற்றுத் தயங்கியவள் பின் அனைத்து விவரங்களையும் மளமளவென்று கூறினாள்.

அதே ஊரில் படித்து விட்டு வேலையில்லாமல் வெட்டியாக இருந்த இளைஞன் ஒருவன் அவளை துரத்தித் துரத்திக் காதலித்து உள்ளான். துவக்கத்தில் விருப்பமில்லை என மறுத்துக் கொண்டே இருந்தப் பெண்ணவள் ஒரு கட்டத்தில் அவனுடைய மயக்கும் பேச்சில் ஏமாந்து சம்மதித்து இருக்கிறாள்.

வெளியே எங்கேயும் வர மாட்டேன் என கட்டுக்கோப்பாய் ஒதுங்கி இருந்தவளை பிறந்தநாள் என்று ஏமாற்றி ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று தவறாக நடந்துக் கொள்ள பார்த்திருக்கிறான்.

தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவனிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டாள். அதன்பிறகு அவனுடனான பழக்கத்தை முற்றிலுமாக இவள் வெட்டிக் கொள்ளவும் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

அவளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து பிளாக்மெயில் செய்தவன் மரியாதையாக நான் சொல்லும் இடத்திற்கு வா இல்லையென்றால் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டி விடுவேன் என்று மிரட்டவும் பயந்துப் போய் தோழியின் உதவியை நாடியிருக்கிறாள் வேதா.

நம் ஆரவல்லி, சூரவல்லியும் அவனை ஒரு கை பார்த்து விடலாம் வா என்று தைரியமளித்து தன் கராத்தே பெல்டை நம்பி அவளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் அவன் சொன்ன இடத்திற்குப் போயிருக்கிறார்கள்.

அங்கே அவனுடன் மறைந்திருந்த கூட்டாளி ஒருவன் முதல் வேளையாக இவர்கள் சென்ற வண்டியின் டயரை பஞ்சர் செய்து விட்டான். அதைக்கண்டு அதிர்ந்த மணி கூட்டாளியிடம் சண்டையிட போவதற்குள் மற்றொருவன் வேதாவை பிடித்து மயக்க மருந்து கொடுக்க முயன்றுள்ளான்.

அவனை தடுத்தபடி வேதா அலறிய அலறலில் திகைத்த மணி செய்வதறியாது சட்டென்று கீழே குனிந்து மண்ணை வாரி அவர்கள் கண்ணில் வீசிவிட்டு வேதாவின் கையை பிடித்திழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டாள்.

வேறு வழியில்லை... யாராவது ஒருவர் மயக்கமடைந்து விட்டாலும் பிரச்சினை தான் என்று ஓடி வந்து விட்டனர்.

"ஏன்டி? நாட்டில் நடக்கும் எத்தனை பிரச்சினைகளை நியூஸில் காண்பிக்கிறார்கள். இருந்தும்... புத்தியில்லாமல் தனியாக போய் இப்படி மாட்டிக்கொள்ள பார்த்திருக்கிறீர்களே!" என்று சண்டைப் போட்டார் லட்சுமி.

"ப்ச்... வேறு என்ன செய்வது? அவள் வீட்டிற்கு தெரிந்தால் அவ்வளவு தான்!" என்று சலித்தாள் மணி.

அழுதுக் கொண்டிருந்த வேதாவை யோசனையோடு பார்வையிட்டான் ஜெய்சங்கர்.

No comments:

Post a Comment

Most Popular