Kanne Kalaimaane 2 - Deepa Babu

 


*2*


இளநகை சிறு வயது முதலே மற்றவரின் அதட்டலிலும் வெறுப்பான பார்வையிலுமே வளர்ந்து தன்னை பண்படுத்திக் கொண்டவள்.

ஆரம்பத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இயல்பாக எழக்கூடிய தனிப்பட்ட கவனிப்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கி தனிமையில் அழுதுக் கரைந்த குழந்தை வளர வளர தன் சூழ்நிலையை மெல்ல உணர்ந்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

ப்ரீத்திக்கு சிறு கீறல் என்றாலே பதறி துடிக்கும் குடும்பத்தார், தனக்கு ஜுரம் வந்துப் படுத்திருந்தால் கூட கண்டுக்கொள்வதில்லை என புரியவும் தன்னை குறித்து தனக்குள்ளேயே பலமுறை ஆலோசித்துப் பார்த்தாள் அவள்.

அதன் முடிவு அவளுக்கு பெரும் வருத்தத்தை அளித்தாலும், தான் அழுவதாலோ வருந்துவதாலோ ஒரு பயனும் இல்லை தன்னை தேற்றுவாறும் யாரும் இல்லை என்பதை புரிந்துக்கொண்டு தனக்கான அழகான உலகத்தை சிறிது சிறிதாக தானே அமைத்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

பத்து வயதில் தொடங்கிய அப்பழக்கம் இன்று விருட்சமாய் வளர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும் அவளுக்கு நேசத்தை வளர்த்தது. தன் மனதில் உடலில் என ஏற்படும் சின்னச் சின்ன மாறுதல்கள், உதிக்கும் எண்ணங்கள், சந்தோசங்கள், கவலைகள், பயங்கள் என்று அனைத்தையும் மகிழ்ச்சியோடு அவைகளிடத்தில் பகிர்ந்துக் கொள்வாள்.

அதற்கான பிரதிப்பலிப்பாக தன் தோழமையின் பதில்களையும் இவளே கற்பனை செய்துக்கொண்டு பேசிக் கொண்டிருப்பாள். ஆகமொத்தம் அழுகையை விட்டொழிந்து யார் என்ன சொன்னாலும் எந்நேரமும் மலர்ந்து முகத்துடன் வலம் வந்தாள். அவளை பொறுத்தவரை வருந்தி அழுதால் ஒரு பயனும் இல்லை என்கிற எண்ணம் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது.

இளநகையின் மலர்ந்த முகம் தவறாமல் அக்கா சுந்தரியின் எரிச்சலை கிளப்பும். அதற்காகவெல்லாம் அவள் கவலைக் கொள்வதில்லை எப்படியிருந்தாலும் அக்கா தன்னை திட்டிக்கொண்டு தான் இருக்கப் போகிறாள் என அதைப் புறம் தள்ளி உள்ளத்தளவில் தனது துடிப்புக் குறையாமல் இருந்தாள் அவள்.

எதிர்காலத்தில் சொத்துப் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என தன் தகப்பன் உயிருடன் இருக்கும் பொழுதே அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டாள் சுந்தரி. தங்கை அதிகம் படித்தாலோ வெளியில் சென்றாலோ உலக அறிவு கிடைத்து தனக்கு தேவையில்லாத சிக்கல்கள் உருவாகி விடும் என்று இளநகையின் படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டாள்.

அப்பேதை பெண்ணிற்கும் எதுவும் தெரிவதில்லை. அக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு அவ்வீட்டிற்கு நிரந்தரமான வேலைக்காரியாக மாறிப் போனாள். வழக்கம் போல தன் இயற்கை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தாள் இளநகை.

எவ்வித சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் சென்றுக் கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் முதல் சலனம் ஏற்பட்டது ப்ரீத்தியின் திருமணத்தின் பொழுது தான். தன்னை விட இரண்டு வயது சிறுபெண்ணான அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவும் தான் இவளுக்கு தன் வாழ்க்கை குறித்துக் குழப்பம் ஏற்பட்டது.

'தனக்கும் இதுபோல் எல்லாம் திருமணம் செய்து வைப்பார்களா? அப்பொழுது நான் வேறு வீட்டிற்குச் சென்று விடுவேனா? அங்கிருப்பவர்கள் தன்னிடம் எப்படி பழகுவார்கள்?' என்ற சிந்தனை தோன்றியது.

தன் சந்தேகத்தை வெளிப்படையாக தமக்கையிடம் கேட்க அவளோ ஏளனம் செய்து நகைத்தாள்.

"அப்பா, அம்மா இல்லாத கையில் ஒற்றை ரூபாய் பணம், நகை எதுவும் இல்லாத அநாதைப் பெண்ணான உன்னை எல்லாம் எவனும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டான்!" எனவும் அப்பூமகள் உண்மையிலேயே மிகவும் வாடித்தான் போனாள்.

அத்தனை வருடங்களாக தோன்றாத அழுகை அவளுக்கு அத்தருணத்தில் தோன்றியது.

இதுதான் வாழ்க்கை என செக்கு மாடாக சுற்றி வந்தவளுக்கு இடையில் திருமணம், கணவன் என இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் எனவும் மனதில் ஒருவித எதிர்பார்ப்பும், ஏக்கமும் சூழ்ந்துக் கொண்டது.

ப்ரீத்தியின் கணவன் அவளை கண்டாலே முகம் மலருவதும், ஆசையாக பேசுவதும், வெளியில் அழைத்துச் செல்வதும் என்றிருப்பதை காணக்காண இளநகைக்குள் ஆவல் தோன்றியது.

இத்தனை வருடங்களாக தான் தன்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை, இனி தனக்கு கணவன் என்று ஒருவன் வந்து விட்டால் அவன் தன்னை அன்பாக கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகமாக வளர்ந்தது.

ஆனால் அவை அனைத்தும் உன் தகுதிக்கு மீறியது என சகோதரி அலட்சியமாகப் பேசவும் உள்ளம் சோர்ந்துப் போனாள் நம் பெண்.

சில நாட்கள் அப்படியே உணர்வில்லாமல் வெறித்தபடி கடமையை செய்துக் கொண்டிருந்தவளை தோட்டத்துப் பறவைகளும், சிறு விலங்குகளும் தான் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"ஆமாம்... நீங்கள் சொல்வது சரி தான். இத்தனை வருடங்களாக எப்படி எனக்காக யாரும் இல்லையோ அதேபோல் தான் இனியும் இருக்கப் போவதில்லை. அதற்காக எதற்கு நான் வருந்திக்கொண்டு... ப்ச்... சரி போகட்டும், இனி அதையெல்லாம் நான் நினைக்க மாட்டேன். அது சரி... இத்தனை நாட்களாக நீங்கள் எல்லாம் என்னென்ன செய்தீர்கள்? நான் அதே கவலையில் இருந்ததால் உங்களையெல்லாம் கவனிக்கவில்லை!" என்று அவர்களுடன் தனிமையில் பேசுவதை தொடர ஆரம்பித்தாள் இளநகை.

காலம் முழுக்க தங்கையை தன் வீட்டு வேலைக்காரியாகவே வைத்திருக்க ஆசைக்கொண்ட சுந்தரியின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டான் அவள் கணவன் முருகன்.

சில மாதங்களாக இளநகையின் மேல் விழும் அவன் பார்வையின் பேதத்தை புரிந்துக் கொண்டவளுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அவள் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

தங்கை என்ற பெயரில் தான் வளர்த்து வைத்திருப்பது உலகறிவு இல்லாத ஞானசூன்யம் என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அவளை எவ்விதத்தில் எச்சரித்து வைத்தாலும் ஒருநாள் முருகனிடம் நிச்சயம் ஏமாந்து தான் போவாள்.

அப்படியே புரிந்துக் கொண்டாலும் அடிப்பணிந்து கிடப்பவள் அச்சத்தில் அவனுக்கும் அடங்கி தன் வாழ்க்கையை கெடுத்து விடுவாளோ என்ற குழப்பம் அவளுக்கு தோன்றியது.

முருகனை எச்சரிக்கவும் வழியில்லை, அவன் என்ன தான் தனக்கு அடங்கி இருப்பவனாக இருந்தாலும் ஆண்களை இதுபோன்ற விஷயத்தில் நம்ப முடியாது. தன் சுய லாபத்திற்காக இளநகையை வைத்து தனக்கெதிராக அவளை பயன்படுத்தும் வாய்ப்பும் அவனுக்கிருக்கிறது என்பதை உணர்ந்தவள் முடிந்தவரை தன் கணவனை கண்கொத்தி பாம்பாக கவனித்தாள்.

நாட்கள் பறந்துக் கொண்டிருந்த நிலையில் எத்தனை வருடங்கள் தான் இவர்களை நம்மால் இப்படியே கண்காணித்துக் கொண்டிருக்க முடியும் என்கிற ஆயாசம் சுந்தரிக்கு ஏற்பட்டது.

இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு இளநகை இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது. முருகன் வெளியே சென்றிருக்கும் நேரமாகப் பார்த்து அவளை வீட்டைவிட்டு விரட்டி விடலாமா என்று கூட ஒரு நேரம் யோசித்தாள். ஆனால் அதிலும் பிரச்சினை இருக்கிறது.

இந்த கிறுக்கிக்கு யாரையும் தெரியாத நிலையில் மீண்டும் முருகனின் பார்வையில் எங்கேயாவது விழுந்து விட்டால் அவன் அவளை தனி வீடெடுத்து எதுவும் தங்க வைத்துக் கொண்டான் என்றால் உள்ளதுக்கும் மோசமாகி விடும் என்று கைகளை பிசைந்த நேரம் தான் தோழி ஒருவள் மூலம் இந்த வரனை குறித்துக் கேள்விப்பட்டாள்.

அடித்தது லக்கி பிரைஸ்... இளநகையை தன் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க இருக்கும் ஒரே வழி என கெட்டியாகப் பற்றிக் கொண்டவள் அவர்களை உடனே பெண் பார்க்க வரச் சொல்லி விட்டாள். கணவனிடமும், தங்கையிடமும் விஷயத்தை மறைத்து சற்று முன்னர் தான் தெரிவித்திருந்தாள்.

வெளியே மெல்லிய பேச்சுக் குரல்கள் கேட்க, "அச்சச்சோ... அவர்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது!" என்று லேசான பதற்றத்தில் பட்டாம்பூச்சியாய் படபடத்த இமைகளுடன் ஜன்னல் அருகிலிருந்த முல்லை கொடியிடம் வேகமாக சென்று விஷயத்தைப் பகிர்ந்தாள் இளநகை.

"ஏய்... இங்கே வா!" என்று அவளை அதிகாரமாக வெளியே அழைத்தாள் சுந்தரி.

இதயத்துடிப்பு மெல்ல உயர விரல்களால் புடவை தலைப்பை இறுகப் பற்றிக்கொண்டு விழிகளை தாழ்த்தியபடி முன்னறைக்கு வந்தவளின் கைகளில் தட்டை திணித்து, போய் காபி கொடு எனவும் தான் நிமிர்ந்து எதிர்திசையை நோக்கினாள்.

இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். சுந்தரியின் வயதையொட்டிய ஒரு பெண்ணும், சற்று வயதான பெண்மணி ஒருவரும் அவளை தன் விழிகளால் அளந்தனர்.

குழப்பத்துடன், 'மாப்பிள்ளை?' என்ற கேள்வி அவள் மூளையில் உதிக்க, "எதற்குடி இப்படி மசமசவென்று நிற்கிறாய்? போய் கொடு!" என்று அக்கா அதட்டவும் மற்றதை பின்னுக்கு தள்ளி விரைந்து அவர்களிடம் சென்றாள்.

காபியை கொடுத்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அக்காவை பார்க்க, அப்படியே நில் என்பது போல் ஜாடை செய்து விழிகளை உருட்டினாள் அவள்.

பூம்பூம் மாடாக தலையை வேகமாக ஆட்டியவள் அந்த இடத்திலேயே அசையாது சிலை போல நின்றாள்.

'எவ்வளவு நேரத்திற்கு இப்படியே ஒரே இடத்தில் பொம்மை மாதிரி நிற்க வேண்டும்?' என்று யோசனையோடு அவர்களிடம் விழிகளை உயர்த்தியவள், வந்தவர்களுடைய பார்வை தன்னை கூறுப் போடுவதை உணர்ந்து சட்டென்று தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

"உன் பெயரென்ன?"

"இளநகை!" என்றாள் மெல்ல.

"படித்திருக்கிறாயா? எழுதப் படிக்கவெல்லாம் தெரியுமா?"

அவள் குழப்பத்தோடு மண்டையை பலமாக உருட்டினாள்.

"ஏன் வாயை திறந்து பதில் சொல்ல மாட்டாயோ?" என அதட்டிக் கேட்டாள் இளையவள்.

இவள் வேகமாக, "எழுதப் படிக்கத் தெரியும்!" என்றாள்.

"வீட்டு வேலை... சமையல் எல்லாம்?"

"ம்... நன்றாக செய்வேன்!"

வேறென்ன என்று தங்களுக்குள் ஒருமுறை பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டவர்கள் சுந்தரியிடம் திரும்பினர்.

"அதெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள், வீட்டு வேலை எல்லாம் நன்றாக செய்வாள். சம்பளம் கொடுத்து தேடினால் கூட உங்களுக்கு இப்படி ஒரு வேலைக்காரி கிடைக்க மாட்டாள்!" என்று நக்கலாக சொன்ன சுந்தரியை சிந்தனையுடன் ஏறிட்டாள் இளநகை.

'வேலைக்காரியா? அப்பொழுது... வீடும், ஆட்களும் தான் மாறப் போகிறார்களா? மற்றதெல்லாம்... அங்கேயும் அப்படித்தானா? ப்ச்... என்னவோ செய்துக் கொள்ளட்டும் போ, நானெல்லாம் இனிமேல் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். இங்கே செய்கின்ற வேலையை அங்கே போய் செய்துக்கொண்டு அவர்களிடம் திட்டு வாங்கப் போகிறேன் போலிருக்கிறது அவ்வளவு தான்!' என அசிரத்தையாய் எண்ணமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதற்குமேல் அவர்களிடம் சுவாரஸ்யம் குன்றிப் போய்விட பார்வையை திருப்பிக் கொண்டாள்.

ஒரே இடத்தில் அசையாமல் நின்றுக் கொண்டிருப்பது வேறு லேசாக போரடிக்க ஆரம்பிக்க, கை மறைவில் கொட்டாவி ஒன்றை மெதுவாக வெளியேற்றினாள்.

சலிப்புடன் விழிகளை திருப்பினால் இறுகிய முகத்துடன் முருகன் எழுந்து உள்ளே செல்வது தெரிந்தது. பெண்கள் மூவரும் தங்களுக்குள் எதையோ தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

'என்ன குசுகுசுவென்று பேசிக் கொள்கிறார்கள்? ஒருவேளை ஏதும் பணம், நகை பற்றி இருக்குமோ... பாவம்... என் அக்கா எப்படியும் எனக்கு எதுவும் தரப் போவதில்லை. இவர்கள் வந்ததற்கு நன்றாக ஏமாந்து போகப் போகிறார்கள். ஆ... என்ன சிரிக்கிறார்கள்? ஒருவேளை அக்கா ஏதாவது தருகிறேன் என சொல்லி விட்டார்களா?' என்று புருவம் சுருக்கி வந்திருப்பவர்களின் முகத்தை மிக உன்னிப்பாக ஆராய்ந்தாள் இளநகை.

"அப்புறம் என்ன? உங்களுக்கு திருப்தி தானே... என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் தாராளமாக என்னிடம் சொல்லலாம் நான் பேசிக் கொள்கிறேன். மாதா மாதம் சரியாக குளித்து விடுகிறாள் அது எதுவும் உங்களுக்கு பிரச்சினை இருக்காது. மற்றபடி நான் ஏற்கனவே சொன்னது தான் திருமணம் முடித்து இவளை உங்களுடன் அழைத்துச் சென்று விட்டீர்கள் என்றால் இவள் திரும்பவும் இங்கே எதற்காகவும் வரக்கூடாது. அதேபோல் எந்த நகையும், பணமும் என்னிடம் எதிர்பார்க்க கூடாது. இதை மாப்பிள்ளையிடமும் நீங்கள் தெளிவாக சொல்லி விடுங்கள். நாளைப்பின்னே அவர் எதுவும் தனியாக பிரச்சினை செய்யப் போகிறார்!" என்றாள் சுந்தரி கெடுபிடியாக.

"என் தம்பியை நினைத்தெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம் அவன் எதிலும் தலையிட மாட்டான், உங்களை விட வசதி இருக்கிறது. பணம், நகையெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை. இவளை எதற்காக அழைத்துச் செல்கிறோமோ அந்தக் காரியம் சரியாக நடந்தால் சரி!" என்றாள் அந்தப் பெண்.

'காரியமா... என்ன காரியம்? இவர்கள் தம்பி தான் மாப்பிள்ளையா? அப்பொழுது பணம், நகை எதுவும் வாங்காமலேயே என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்களா?' என்று தனக்குள் அடுத்தக்கட்ட ஆலோசனையில் இறங்கினாள் நாயகி.

No comments:

Post a Comment

Most Popular