*3*
தங்களுக்குள் பேசி முடித்தவர்கள் இளநகையை அருகில் அழைத்தனர்.
"இங்கே பார்... நீ சொல்பேச்சு கேட்டு ஒழுங்காக நடந்துக் கொள்வாய் என்று உன் அக்கா கூறியதால் தான் உன்னை என் மகனுக்கு முடிவு செய்கிறேன். அவனுக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பமேயில்லை நாங்கள் வற்புறுத்தியதால் தான் சம்மதித்திருக்கிறான். அதனால் அவனிடம் தேவையில்லாமல் பேசுவது நெருங்கிப் பழக முயற்சிப்பது என்றெல்லாம் எதுவும் இருக்கக்கூடாது புரிகிறதா? உனக்கு ஏதாவது தேவையென்றால் கூட அதை நீ எங்களிடம் தான் கேட்க வேண்டும்!" என்றார் மாப்பிள்ளையின் அம்மா கனகம் அவளிடம் அதட்டலாக.
மாப்பிள்ளைக்கு விருப்பமில்லை என்ற சொல்லிலேயே குழம்பிக் கொண்டிருந்தவள் ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியாமல் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
"சரி இவ்வளவு தூரம் வந்தப்பிறகு ஏன் நாட்களை வளர்த்திக் கொண்டு, இத்திருமணத்திற்கு எப்படியும் அழைப்பிதல் அச்சடிப்பது, உறவினரை அழைப்பது என வேலை ஒன்றுமில்லை. அடுத்து வருகிற ஒரு நல்ல நாளில் நாம் மட்டும் கோவிலுக்கு சென்று திருமணத்தை முடித்து விடலாமே. நாங்களும் இவளை அப்படியே எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவோம்!" என்று யோசனை கூறினாள் மாப்பிள்ளையின் அக்கா அமுதா.
'பத்திரிகை அடிக்க மாட்டார்களா... திருமணத்திற்கு யாரையும் கூப்பிடவும் மாட்டார்களா...'
மூவருக்கும் அது ஏற்புடையதாக இருக்க, தன் சிந்தனையில் தனியாக உழன்றுக் கொண்டிருந்த இளநகையை அதட்டி சுந்தரி காலெண்டர் எடுத்து வரச் சொன்னாள். நல்ல நாள் பார்க்க அடுத்த மூன்றாம் நாளே முகூர்த்த நாளாக இருந்தது.
அதையே முடிவு செய்தவர்கள் சரி உடனே ஆகின்ற வேலையை பார்க்கலாம் நாளையே புடவையும், மாங்கல்யமும் வாங்கி விடுகிறோம். எந்த கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதை புடவையும், வளையல்களும் கொடுக்க வருகின்றப்பொழுது சொல்லி விடுகிறோம் என்று அவர்கள் கிளம்பிச் சென்று விட்டனர்.
இளநகையின் நிலை தான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறி விட்டது. இந்த திருமணம் குறித்து தான் மகிழ்ச்சியடைய வேண்டுமா அல்லது வருந்த வேண்டுமா என்று அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள் பிறகு ஏன் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் புரியவில்லை. இருபத்திநான்கு மணி நேரமும் அதே குழப்பத்தில் இருந்தவள் தன் நண்பர்களிடமும் பேசவில்லை.
இது பற்றாது என்று அவ்வப்பொழுது அவளுக்கு புதிது புதிதாக ஏதாவது சந்தேகம் வேறு தோன்றியது, கேட்டாலும் அக்கா திட்டுவாள் என்பதால் தனக்குள்ளேயே மௌனமாக புதைத்துக் கொண்டாள்.
மறுநாள் நண்பகலில் அமுதா வந்து மணமகளுக்கு என்று எடுத்த முகூர்த்த பட்டுப்புடவையையும், இரண்டு டஜன் கண்ணாடி வளையல்களையும் அவளின் தமக்கையிடம் கொடுத்து திருமண ஏற்பாடுகள் குறித்து விவரம் பேசிச் சென்றாள்.
எதையுமே இளநகையிடம் காட்ட முயற்சிக்காமல் அவற்றை தன் அறைக்கு எடுத்துச் சென்று விட்டாள் சுந்தரி. மெல்ல பெருமூச்செரிந்த பாவையவளின் மனதில் இனம்புரியா பாரம் தோன்றி நெஞ்சத்தை அழுத்த தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தன் மனதின் அலைபுறுதல்களை எல்லாம் எந்த உயிர்களிடத்திலும் பகிரத் தோன்றாமல் வெறித்தவளின் விழிகள் அங்கே இருந்த மருதாணி செடியின் மீது விழுந்தது.
எப்பொழுதுமே இளநகையை மருதாணி வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டாள் சுந்தரி. மனதில் எத்தனை ஆசைகள் இருந்தாலும் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்பவள் வழக்கம்போல் அதையும் விழுங்கிக் கொள்வாள்.
இப்பொழுது திருமண நேரத்திலேயாவது தன்னை மருதாணி வைக்கச் சொல்வார்களா மாட்டார்களா என்னவென்று தெரியவில்லையே என்று ஏக்கத்துடன் எண்ணிக் கொண்டாள் பெண்.
யாரோ தன்னை பிடித்துப் பலமாக உலுக்கவும் திடுக்கிட்டு அடித்துப் பிடித்து எழுந்த இளநகை தன்னெதிரே சிடுசிடுவென சுந்தரி நின்றிருக்க கண்டு திருதிருவென விழித்தாள்.
"ஏன்டி சனியனே... தன்னால் எழுந்துக்கொள்ள மாட்டாயா... முகூர்த்தத்திற்கு நேரமாகிறது இல்லை. மகாராணியை ஒரு ஆள் வந்து அப்படியே தனியாக எழுப்ப வேண்டுமோ!" என எரிந்து விழுந்தவள்,
"இந்தா... சீக்கிரமாக தலைக்கு குளித்துவிட்டு இந்தப் புடவையையும், வளையல்களையும் போட்டுக்கொண்டு கிளம்பு பஸ்ஸுக்கு நேரமாகிறது!" என்று விட்டு அவள் வேகமாக வெளியேற, மௌனமாக குனிந்து தன் மடியில் கிடந்தப் புடவையை பார்த்தவளுக்கு அப்பொழுது தான் அன்று தனக்கு திருமணம் என்பதே நினைவிற்கு வந்தது.
அந்நாளுக்குரிய எந்தவித தனிப்பட்ட பதற்றமோ, உற்சாகமோ, பரவசமோ மனதில் தோன்ற மறுத்தது.
அந்த வீட்டிலும் என்னை யாருக்கும் பிடிக்காது என்கிற சலிப்பு ஒருபுறம் தோன்ற, மெதுவாக எழுந்து குளித்து முடித்து இளம்பச்சை வண்ணப் புடவையில் ஆரஞ்சு வண்ணக் கரையிட்டு அதில் மெல்லிய தங்கச்சரிகை இழையோடிய பட்டுப்புடவையை தன் மேனியில் சுற்றியவள் பச்சையும், சிகப்புமாக இருந்த கண்ணாடி வளையல்களை கைகளில் வரிசையாக அணிந்துக் கொண்டாள்.
தலைமுடியை லேசாக உலர வைத்து தளரப் பின்னியவள் தன் அறையில் இருந்த சின்னக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒருமுறை நிதானமாக ஆராய்ந்தாள்.
'இன்று எனக்கா திருமணம்?'
அவள் விரல்கள் மெல்ல வெறுமையை சுமந்திருக்கும் தன் நெற்றி வகிட்டையும், கழுத்தையும் இயலாமையுடன் வருடியது.
மணப்பெண்ணுக்கான அடிப்படை எளிய அலங்காரம் கூட சிறிதும் இல்லாமல் பூஜையறையில் அலங்காரமின்றி துடைத்து வைக்கப்பட்டிருக்கும் குத்துவிளக்கை போன்று தோற்றம் கொண்டிருந்தவளின் விழிகள் இமைக்காது சில நிமிடங்களுக்கு தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
சுற்றம் மறந்து உணர்வின்றி சிலையாக நின்றிருந்தவளை சுந்தரி தான் அதிகாரமாக அழைத்துக் கலைத்தாள்.
செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு பேருந்தில் கிளம்பிச் சென்று குறிப்பிட்ட கோவிலுக்கு இளநகை, சுந்தரி, முருகன் மூவரும் ஆட்டோவில் வந்து இறங்கினர்.
ஆதவன் வருவதற்கான அறிகுறியாக மெல்லப் பொழுது புலரத் துவங்கியிருந்தது.
கோவிலுக்குள் நுழையும் பொழுதே எதிரே அமுதா வந்து வேகமாக மணவறைக்கு அழைத்துச் சென்றாள்.
வெளியிடங்களுக்கு எங்கும் அனுமதிக்கப்படாமல் வீட்டிற்குள்ளேயே கூண்டுக்கிளியாக வாழ்ந்து வந்தவளின் விழிகள் சுற்றுப்புறத்தை ஆர்வமாக ஆராய்ந்தது.
சுவாமி சந்நதிகளின் பெயர்களையும், அதன் உருவங்களையும் ஒவ்வொன்றாக கூர்ந்துக் கவனித்தபடி சென்றவளின் மனதில் மருந்துக்கும் திருமண பரபரப்பு எதுவும் தோன்றவில்லை.
யாருக்கு வைத்த விருந்தோ என்பது போல் சற்றும் கவலையில்லாமல் தன் போக்கில் அவர்கள் பின்னே நடந்துக் கொண்டிருந்தாள்.
ஐயரின் மந்திர உச்சாடனம் காதில் விழவும் பார்வையை மெதுவாக குரல் வந்த திசையில் திருப்பியவளின் விழிகளில் மணமகன் கோலத்தில் வெண்பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்த இளங்கதிர் விழுந்தான்.
'ஓ... இவர் தான் மாப்பிள்ளையா?'
"ம்... ஒரு பத்து நிமிடங்கள் இங்கேயே நில், ஐயர் கூப்பிடும் பொழுது வந்து மனையில் அமர்ந்தால் போதும்!" என்று கட்டளையிட்டு விட்டு தன் அம்மாவிடம் சென்றாள் அமுதா.
அவளின் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டு நிதானமாக மணமகனை ஆராய்ந்தாள் இளநகை.
'தான் வந்து விட்டது தெரிந்தும் அவன் தன்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை!' என்பதை பிள்ளை மனம் குறித்துக் கொண்டது.
'ஆமாம்... அப்படியே உன்னை ஆசைப்பட்டு கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள் நீ வந்தவுடனே ஆசையாக நிமிர்ந்துப் பார்த்துச் சிரிப்பதற்கு... ஒன்றுமில்லாமல் வெறும் கைகளை வீசிக்கொண்டு செல்பவள் தானே... உனக்கு அவ்வளவு தான் மரியாதை!' என்று தன்னை தானே பழித்துக் கொண்டவள் நிந்திக்கவும் மறக்கவில்லை.
'ப்ச்... போதும் போதும், அவரை பார்த்தது. நீ எவ்வளவு நேரம் பார்த்தாலும் பிடிக்காத உன்னை அவர் திரும்பிக் கூட பார்க்கப் போவதில்லை!' என்று தன்னையே கடிந்துக் கொண்டிருந்தவளின் எண்ணவோட்டத்தில் அருகே காகங்கள் கரையும் ஓசைக் குறுக்கிட்டது.
'அடடா... காலையில் கிளம்பிய அவசரத்தில் நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளவேயில்லையே... அவர்கள் எல்லோரும் என்னை காணாமல் தேடுவார்களே, இனி அவர்களை எல்லாம் எப்பொழுது பார்ப்பேன். போகிற இடத்தில் எப்படி இருக்கும்? மரஞ்செடிகள், தோட்டம் எதுவும் இருக்குமா... இருந்தால் தானே பறவைகளும், அணில்களும் அதில் வசிக்கும்!' என்று வருந்திக் கொண்டிருந்தவளை சுந்தரி அதட்டலுடன் அழைத்தாள்.
"ஏய்... இங்கே வந்து இப்படி உட்கார்!"
இளங்கதிரின் பார்வை அந்த நொடியில் அவள் முகத்திற்கு பட்டென்று உயர, எந்தவொரு சலனமுமில்லாமல் அவனை நேருக்குநேர் நோக்கியவள் அமைதியாக அவனருகில் சென்று மனையில் அமர்ந்தாள்.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தன் கழுத்தில் தாலி ஏறுவதை படபடக்கும் இதயத்துடனும், தன்னை விரும்பாதவரின் வாழ்வில் நுழைகிறோம் என்கிற ஏமாற்றத்துடனும் தொண்டையில் அடைத்த எச்சிலை துக்கத்துடன் விழுங்கியபடி கண்கள் கலங்க கவனித்தவளின் மீது அட்சதைகள் விழுந்தது.
அக்னி வலம் வந்து மூத்தவர்களின் பாதத்தில் பணிந்து எழுந்த மணமக்களை கோவில் பிரஹாரத்தை சுற்றி அழைத்துச் சென்றனர்.
இடையில் ஒரு முறை மட்டும் கதிரின் முகத்தை ஓரவிழியில் நோக்கிய இளநகை அதில் தெரிந்த இறுக்கம் கண்டு அவளையுமறியாமல் மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு முகத்தில் எந்தப் பாவமுமின்றி அமைதியாக உடன் நடந்தாள்.
அருகிலுள்ள உணவகம் ஒன்றில் காலை உணவை முடித்துக்கொண்டு சுந்தரி, முருகனை வழியனுப்பி வைத்துவிட்டு இவர்கள் நால்வரும் தங்கள் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தனர்.
காரின் அருகில் வரவும் இளநகையின் மனதில் கரைக்காணாத ஆசை ஊற்றெடுக்க உற்சாகமானாள் அவள்.
'இந்த கார் இவர்களுடையதா? அப்பொழுது நான் காரில் செல்லப் போகிறேனா?'
"ம்... இப்படி உட்கார்!" என்று காரின் பின்பக்க கதவை திறந்து வைத்த அமுதாவிடம் தலையசைத்தவள், உள்ளே ஏறி அமர்ந்தாள்.
மறுபுறம் கனகம் வந்து அமர, முன்புறம் டிரைவிங் சீட்டில் அமர்ந்த கதிர் அருகே சென்று அமுதா அமர்ந்தாள்.
அதைக் கண்ணுற்றவளின் மனதில் ப்ரீத்தியின் திருமண நிகழ்வுகள் அலைமோதியது. மாப்பிள்ளையும், பெண்ணும் காரில் அருகருகே அமர்ந்து மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசியபடி சென்றது நினைவு வர முகம் லேசாக வாடியது.
புடவை முந்தியை இறுகப் பற்றி உணர்வுகளின் தாக்கத்தால் மீண்டும் தொண்டையில் அடைத்த எச்சிலை விழுங்கி தன் உணர்வுகளை சமனப்படுத்தியவள் முகத்தை சீராக்கிக் கொண்டு அமைதியாக காருக்கு வெளியே பார்வையை வீசினாள்.
அரைமணி நேர பயணத்தில் வீடு வர காரிலிருந்து இறங்கியவள் நிமிர்ந்து வீட்டை சுற்றி விழிகளை அலைய விட்டாள்.
பெரிய வீடாக தான் இருந்தது, அவள் தேடுதலுக்கு விடையாக வலப்புறம் முழுவதும் தோட்டம் அமைந்திருக்க முகம் மலர்ந்தாள்.
பெரிய மரமாக என்னவோ வேம்பு மட்டும் தான் முதலில் நின்றது. மற்றபடி வாழை, முருங்கை, செம்பருத்தி இன்னும் பிற பூச்செடிகளும், காய்கறி செடிகளும் இருக்க அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தாள் அமுதா.
"இப்படி நில்!" என்று அவளை கதிரிடம் சேர்ந்து நிற்கச் சொல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவனுடைய பார்வை தொலைதூரத்தை வெறிக்க கண்டு யோசனையுடன் அருகில் நின்றாள்.
யாரோ இரு பெண்மணிகள் வந்து அவர்களுக்கு ஆரத்தி சுற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு பணித்தனர்.
அவர்களின் அறிவுரைப்படி தனது வலது காலை முதல் அடியாக வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள் இளநகை.
பூஜையறையில் விளக்கேற்றி வந்தவளின் கரங்களில் தாம்பூலம் கொடுத்து வந்திருந்த இரு சுமங்கலிப் பெண்களிடமும் கொடுக்கச் சொன்னார் கனகம்.
அவ்வாறே செய்தவளுக்கு குங்குமம் இட்டு வாழ்த்திவிட்டு அவர்கள் விடைப்பெற்று சென்றனர்.
அடுத்த நொடி எதுவும் பேசாமல் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி தன் தமக்கையின் கைகளில் திணித்துவிட்டு மடமடவென்று மாடிப்படி ஏறிச் சென்றான் இளங்கதிர்.
மூத்தப் பெண்களின் முகங்கள் வாட்டத்தை தத்தெடுத்திருக்க, இளநகை அவன் சென்ற திசையை வேடிக்கைப் பார்த்தபடி நின்றாள்.
கனகம் அமுதாவின் கரம்பற்றி ஆதரவாய் அழுத்திக்கொடுக்க, ஒரு நொடி முகம் கலங்கியவள் மறுவினாடி படமெடுக்கும் நாகமாக திரும்பி இளநகையிடம் சீறினாள்.
அவள் கரம்பற்றி வெடுக்கென்று தன்புறம் திருப்பியவள், "ஏய்... இங்கே பார்... உன்னிடம் சொன்னது எல்லாம் நினைவிருக்கிறது அல்லவா. என் தம்பியிடம் வலியச் சென்றுப் பேசுவது அவனிடம் உரிமையெடுத்துக் கொண்டு நெருக்கமாக பழக முயற்சிப்பது என்று எதுவும் வைத்துக் கொள்ளாதே. அப்படி மட்டும் ஏதாவது முயற்சித்தாய் என்றால் அவனும் சரி, நானும் சரி அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். என்ன புரிகிறதா?" என்று அவளை நோக்கி கனல் கக்கும் பார்வையோடு மிரட்டினாள்.
முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அமுதாவை அமைதியாக பார்த்திருந்தாள் இளநகை.
'இப்பொழுது நான் எதுவுமே செய்யவில்லையே... இவர்கள் ஏன் திடீரென்று இவ்வளவு கோபப்படுகிறார்கள்?'
"என்னடி பார்க்கிறாய்?" என்று அதற்கும் எரிந்து விழுந்தாள் அவள்.
இவள் எதுவும் பேசாமல் விழிகளை தாழ்த்த, "என் தம்பியை திருமணம் செய்துக்கொள்ள உனக்கு எல்லாம் என்னடி தகுதி இருக்கிறது? என் பெண் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் அவள் தான்டி இந்த வீட்டின் மகாராணி, நீயெல்லாம் அவள் கால் தூசிக்கு இடம் பெற மாட்டாய்!" என்றாள் அமுதா கட்டுக்கடங்காத ஆவேசத்துடன்.
அதுவரை குழப்பத்துடன் தலைக்குனிந்து நின்றிருந்தவள் பட்டென்று நிமிர்ந்து அமுதாவின் முகம் நோக்கினாள்.
முகத்தில் லேசான பதற்றம் சூழ, "உங்கள் பெண் இறந்து விட்டார்களா? ஐயோ... எப்படி? என்னவாயிற்று?" என்றாள் இளநகை வேகமாக.
அதுவரை தன் மகளின் இழப்பை எண்ணி ஆங்காரத்தின் பிடியில் சிக்கியிருந்த அமுதா, இளநகையின் கேள்வியிலும், கவலையிலும் செய்வதறியாது விக்கித்து நின்றாள்.
இளநகை கேட்ட இந்தக் கேள்வி தான் கதையோட ட்விஸ்ட் பாயின்ட். இனி கதையோட போக்கு மொத்தமா மாறப் போகுது.
No comments:
Post a Comment