Mudiya Oviyam Nee - Deepa Babu

 



கதைக்கரு


என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சிநேகிதியின் வாழ்வை தழுவி கற்பனையில் உதித்த நாவல். சிலருக்கு கதையின் கரு கொஞ்சம் முரண்பாடாக கூட தெரியலாம். ஆனால் எனக்கு அவ்வாறு தவறாக தோன்றாததால் நான்கைந்து வருடங்களாக சிறிது தயங்கி கிடப்பில் போட்டு இருந்த கதையை தூசு தட்டி எடுத்து முழு நாவலாக உருவாக்கி இருக்கிறேன்.

இக்கதையின் மாந்தர்கள் தங்களின் மேம்பட்ட குணங்களினால் வாசிப்பவர்களை நிச்சயம் கவர்ந்து இழுப்பார்கள் என நம்புகிறேன். சற்றுப் பிசகினாலும் விரசமாக போய்விடும் என்கிற காரணத்தினால் மிகவும் கவனமாகவே கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கிறேன். மீண்டும் எனது கைவண்ணத்தில், மற்றுமொரு கதைக்களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,

தீபா பாபு


Mudiya Oviyam Nee - Amazon Ebook Link



***********


கதையிலிருந்து சிறு துளிகள்



“அப்போ... காலையில நான் சொன்ன மாதிரி டிவோர்ஸுக்கு ரெடியா தான் இருந்து இருக்கே!”

நவ்யுத் கூர்மையாக கேட்கவும் தடுமாறியவள், “வேற என்ன செய்ய முடியும்?” என்று முனகினாள்.

“ம்... முதல்லயே தெளிவா என் வாழ்க்கையில வராம இருந்து இருக்கனும் நீ!”

முகம் கசங்கியவள், “அதுக்குத்தான் அவங்க விடலையே... உங்க தாத்தா மூலமா தன் பையனோட தொழிலை முன்னுக்கு கொண்டு வர என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க!” என்றாள் இயலாமையுடன்.

“சரி... நீ தனியா போகனும்னு முடிவு பண்ணிட்ட, என் நிலைமையை நினைச்சுப் பார்த்தியா? ஒரு டிவோர்ஸியா எல்லார் முன்னாடியும் நிக்கனும் நான்!”

நெற்றிச் சுருக்கத்துடன் நிமிர்ந்தவள், “அதனால என்ன? பொதுவா இந்த மாதிரி சங்கடம் எல்லாம் பொண்ணுங்களுக்கு தானே வரும், நீங்க ஆம்பிளைங்க உங்க வசதிக்கு எப்படி வேணா வாழ்க்கையை அமைச்சிக்கலாமே... அதோட நீங்க பணக்காரர் வேற, ரொம்ப சுலபமா பொண்ணுங்க கிடைப்பாங்க!” என்றாள் அலட்சியமாக.

‘அடிப்பாவி...’ என பார்த்தவன், “உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? என்னை பத்தி எதுவும் தெரியாம, என்னோட கொள்கைகள் என்னென்னும் தெரிஞ்சிக்காம, நீ எப்படி உன் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம்? உன்னோட சேர்ந்து என் வாழ்க்கையும் தான் பாதிக்குது அப்படிங்கும் போது, நீ என்கிட்ட நேரா வந்து பேசி இருக்கனும் இல்ல...

ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒரு லவ், ஒரு வொய்ஃப், ஒரு லைஃப்னு எனக்கு உள்ள நானும் சில சட்ட, திட்டங்கள் வச்சு இருக்கேன். அதை எல்லாம் உன் வசதிக்கு மொத்தமா மாத்தி இருக்க. என்னை சுத்தமா கலந்துக்காம, நீயா எப்படி இப்படி தன்னிச்சையா ஒரு முடிவு எடுத்த? சொல்லு... உன் பிரச்சனையை என்கிட்ட நேர்ல வந்து பேசி இருக்கனுமா, இல்லையா?” என்றான் கோபமாக.

அவளுமே அப்பொழுது தான் அதை யோசிக்க, ‘அச்சோ... ஆமா, இவர் சொல்ற மாதிரி நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? இவரு கிட்ட பேச கொஞ்சமும் ஸ்டெப் எடுக்கலையே நான்... எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டேன்!’ என கலக்கம் கொண்டாள்.

தன்னை மிரண்டு பார்ப்பவளை அழுத்தமாக பார்த்தவன், “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? பதிலை சொல்லு...” என அதட்டினான்.

“நா... நான்... இதை எல்லாம் இப்படி யோசிக்கவே இல்லை. அம்மா பத்தி, என்னை பத்தி மட்டும் தான் நினைச்சு இருக்கேன். தப்பு தான்... புரியுது...” என மூக்கின் நுனி சிவக்க கண் கலங்கியவள், “அப்போ கொஞ்சமும் தோணவே இல்லை, ரொம்ப செல்ஃபிஷா நடந்து இருக்கேன். ஸாரி...” என மன்னிப்பு கேட்டு விட்டு, “இப்போ என்ன செய்றது?” என்று பரிதாபமாக கேட்டாள் ராகவி.

அவ்வப்பொழுது தன்மானத்திலும், ரோஷத்திலும் மட்டுமே பொங்கி எழுபவள் இன்னமும் சிறுமியாகவே இருக்க, உள்ளுக்குள் அவளை ரசித்தாலும், வெளியே இரும்பாகவே காட்டிக் கொண்டான் கணவன்.

“என்ன செய்றது? வாழ்ந்து தான் ஆகனும்!”

பட்டென்று வெடிப்பவனை புரியாது பார்த்தவள், “ம்...?” என்று கேட்க, இவனுக்கு தான் மீண்டும் இதயம் சலனப்பட்டது.

***


‘என்னடா இது?’ என இவனுக்கு தர்மசங்கடமாக இருக்க, அவளுக்கு படபடப்பாக இருக்க, மெதுவே ஆற்றை நோக்கி நடந்தனர்.

“கீழே கவனமா பார்த்து நடக்கனும். இது மண் பாதை, சமதளமா இல்லாம கல்லுங்க வேற இருக்கும்!”

“ஓ...” என்றவள் அவன் சொல்படி கவனத்துடன் நடந்தாள்.

ஆற்றின் அருகே வந்து விடவும் அவளிடம் காண்பிக்க வேண்டி திரும்பியவன், ஏற்கனவே அதை பார்த்து விட்டதற்கு அடையாளமாக மெல்லிய பூரிப்புடன் அடி எடுத்து வைப்பவளை கண்டு முகம் கனிந்தான்.

“ஒரு அஞ்சு நிமிஷம் நிதானமா ஆத்து தண்ணில நின்னு காலை நனைச்சிட்டு, வேடிக்கை பார்த்துட்டே போகலாம். இப்போ பாதையில கவனம் இல்லைன்னா தடுமாறி விழனும்!”

திடுக்கிட்டுப் பார்த்தவள், “இல்ல... அது எல்லாம் வேணாம்!” என்றாள் அவசரமாக.

‘பெரிம்மா சொல்ற மாதிரியே வேணாம் பாட்டு ஆரம்பிச்சிட்டா...’

பதில் ஏதும் தராமல் அவன் மௌனமாக நடக்க, இவளும் அவனை பின்பற்றினாள்.

“சில நேரம் படி வழுக்கும், அழுத்தமா கால் வச்சு இறங்கனும்!”

தலை அசைத்தவள் பயந்து பயந்து பாதம் பதித்து இறங்க, தன் நமட்டை கடித்து புன்னகையை அடக்கியபடி அவளுடன் இறங்கினான் நிஜந்தன்.

தண்ணீரில் கால்களை நனைத்ததும் அவள் மேனி சிலிர்க்க, “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்கு!” என்றாள் ஆர்வமாக.

தன்னை மீறி அவளாக பேசிய முதல் பேச்சு. திரும்பி பக்கவாட்டில் பார்த்தான், அவள் கவனம் இவனிடத்தில் இல்லை. முகம் முழுவதும் பெரும் உற்சாகத்தில் திளைத்து இருந்து, கருவிழிகள் ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாக சுழன்று, புதிதாக தெரிந்த ஒவ்வொன்றையும் ஆவலுடன் படம் பிடித்தது.

பார்த்த நிமிடம் முதலாக எந்நேரமும் கலக்கம், பதற்றம், கவலை என்றே மாற்றி மாற்றி சுமந்து பரிதவித்து இருந்த அந்தப் பூ முகம், இப்பொழுது தான் இத்தனை தூரம் மலர்ந்து ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அதை கலைக்க மனம் வராமல் அமைதியாக அருகில் நின்று இருந்தான் அவன்.

முழுதாக பத்து நிமிடங்கள் கடந்த பிறகே மெல்ல உணர்வுக்கு திரும்பி, அவனை பார்த்தாள் சுரபி.

“இங்கே வேற ஏதாவது செய்யனுமா?”

“என்ன?” என்று புருவங்களை சுருக்கினான்.

“இல்ல... நேரம் ஆகிடுச்சு போலிருக்கே!”

“ம்... போகலாம்!”

அவன் திரும்பி படிகளில் ஏறத் துவங்க, ‘எதுக்கு இவ்வளவு நேரம் இங்கே சும்மா நின்னோம்?’ என புரியாமல் அவன் பின்னே ஏறினாள் அவள்.

***


ராகவியின் உபயத்தால் அவளுடன் பேசி, பழகுவதில் ஓரளவு ஆங்கிலம் நன்றாக புரியும் என்றாலும் அவன் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாறி விட்டாள் தான். பிறகு மனைவி என்கிற சொல்லோடு தொடர்பு படுத்தி, அவனிடம் வெளிப்படும் அதீத கோபத்திலும் சரியாக உணர்ந்து கொண்டாள்.

அதில் இன்னும் கொஞ்சம் மிரண்டு, “அச்சோ... அவங்க மனசுல இப்படியா பதியறது? நீங்க...” என எதையோ சொல்ல விழைந்தவளை தனது சொற்களால் மிரட்டி விட்டான் அவன்.

“சுரபி... ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சன்ஸ். நான் அதைவிட்டு வெளியில வரனும்னு நினைக்கறேன், மறக்கனும்னு விரும்பறேன். நீங்க திரும்பத்திரும்ப அதையே பேசி என் மனசுல எதையும் விபரீதமா பதிச்சிடாதீங்க... காட் இட்?”

அவன் அழுத்தமாக சொன்னதில் இவள் முதுகு தண்டுவடம் சில்லிட, உறைந்து போய் பார்த்தாள்.

“புரிஞ்சுதா...?”

“ம்...” என்றாள் கலக்கத்தோடு.

“ஓகே... எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும், நீங்களும் ச்சில் ஆக ட்ரை பண்ணுங்க!” என்று கண்களை மூடி சாய்ந்து விட்டான்.

பயணம் முடியப் போகும் நேரம் நெருங்கவும், தன்னால் எழுந்து கொண்டவன் திரும்பி பார்க்க, சுரபி சோர்வாக வெளியே பார்த்து இருந்தாள்.

இவனுக்குமே அவள் நிலை சங்கடத்தை தான் கொடுத்தது. ஆனால் இவன் திட்டமிட்டா எதுவும் நடந்தது... அவளாக வந்தாள், பேசினாள். அதற்கு நான் பொறுப்பேற்று அவளிடம் போய் தெளிவுப்படுத்த வேண்டும் என்றால் அது எல்லாம் நடக்க கூடிய காரியமா என்று இப்பொழுதும் கடுகடுப்பு கிளம்பியது.

‘நோ... அதைவிட்டு வெளியே வா நிஜா. சும்மா அந்தப் பிசாசையே நினைச்சுக்கிட்டு...’ என சலித்தவனாக அருகில் இருந்தவளை அழைத்தான்.

அவள் திரும்பி பார்க்க, “ஏர்போர்ட்ல அவளை பார்த்ததையும் சரி, பேசினதையும் சரி... யார் கிட்டயும் சொல்ல வேணாம்!” என்றான்.

“ஹான்... சொல்ல மாட்டேன்!”

“பெரிம்மா, அக்கான்னு யார் காதுக்கும் விஷயம் போக கூடாது!”

அவள் தலை ஆட்ட, “ஆமா... இதை மறந்துட்டேனே. நீங்க தான் உங்க பொண்ணு கிட்ட எல்லாம் சொல்லிடுவீங்களே...” என சந்தேகமாக இழுத்தான்.

திருதிருவென்று விழித்தவள், “பாப்பா கிட்டயும் சொல்ல கூடாதா?” என கேட்டாள்.

“கண்டிப்பா கூடாது... அவளுக்கு தெரிஞ்சா அடுத்து நவிக்கு போகும், அப்படியே அக்கா, பெரிம்மான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!”

“ஓ... சரி, சொல்லலை!”

“நம்பலாமா?” என்று அவன் கேலிப் புன்னகையுடன் கேட்க,

இவள் முகத்திலும் சின்ன ஆசுவாசம் பிறந்து, “ம்... நம்பலாம்!” என முறுவலித்தாள்.

***


ஸ்வப்னாவிடம் முதல் ஆளாக இருந்து மருதாணி வைத்து இருக்கும் தன் மனைவியை கண்டு நவ்யுத்தின் இதழ்கள் புன்முறுவல் பூக்க, அருகில் லேசாக தொண்டையை செருமினான் ஹர்ஷா.

அவனிடம் கண்களை இடுக்கியபடி திரும்பியவன், “என்னடா?” என்றான் அதிகாரமாக.

“தெரியலை மாம்ஸ்... தொண்டையில ஏதோ கிச்சுக்கிச்சு போல இருக்கு!”

“ம்... அங்கே ஓரத்துல பெரிய தடியை சாச்சு வச்சு இருக்காங்க பாரு, அதை எடுத்துட்டு வா. வாயை பொளந்து ஒரே குத்துல சிக்கிட்டு இருக்கறதை வயித்துக்கு உள்ள தள்ளிடறேன்!”

“அட கொலைகார பாவிகளா... நான் போய் என் சித்தப்பா கிட்ட உட்கார்ந்துக்கறேன்!” என எழுந்துச் சென்றான்.

தன்னிடம் வந்து அமர்பவனை கண்ட நிஜந்தன், “என்னடா பம்மிட்டு வர்ற?” என சந்தேகமாக பார்த்தான்.

“நான் என்ன பம்முறேன்... இந்த நவி மாம்ஸ் அநியாயம் பண்றாரு!”

அவன் பொருமலில் அக்கா மகனை பார்த்த நிஜந்தன் சிரித்தவாறு, “ஏன்? என்ன செஞ்சான்?” என விசாரித்தான்.

“ம்... அவரு பொண்டாட்டியை சைட் அடிக்கறதை லேசுபாசா கேட்டுட்டேனாம், அதுக்கு டெர்ரர் பேஸ் காண்பிக்கறாரு!”

அவன் புலம்பலில் பெண்கள் கூட்டத்தின் பக்கம் பார்வையை விரட்டியவன், பின் நெற்றியை சுருக்கினான்.

‘இவளை எங்கே காணலை? வழக்கம்போல வேணாம் பாட்டு படிச்சிட்டு உள்ளயே உட்கார்ந்து இருக்காளா...’

“யாரை சித்தப்ஸ் தேடறீங்க?”

சட்டென்று தோன்றிய திகைப்பை மறைத்து, “நான் யாரை தேடறேன்? எல்லாம் என்ன பண்றாங்கன்னு பார்த்தேன்!” என்று சமாளித்தான்.

“மருதாணி வைக்கற இடத்துல என்ன தோசை சுட்டா சாப்பிடுவாங்க... எல்லாம் மருதாணி தான் வச்சிட்டு இருப்பாங்க!”

பல்லைக் கடித்தவன், “உன்கிட்ட அவன் டெர்ரர் பேஸ் காண்பிச்சதுல தப்பே இல்லைடா!” என முறைத்தான்.

“போங்க சித்தப்ஸ்... நீங்களும், உங்க மருமகனும் ஒரு டைப்பா தான் சுத்தறீங்க. டேய் அண்ணா... நீயாவது என்கிட்ட ஒழுங்கா பேசுடா!” என்று அருண் புறமாக திரும்பி அமர்ந்தான் ஹர்ஷா.

“அதுக்கு நீ ஒழுங்கா பேசனும்டி... போயிடு அங்கிட்டு. நான் பிரேம் அண்ணா கூட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்!”

“ஆமா... ரெண்டு பேரும் முக்கியமா பேசி அப்படியே கோயமுத்தூருக்கும், மேட்டுப்பாளையத்துக்கும் நடுவுல மெட்ரோ ட்ரைன் விடப் போறீங்க. ஓவர் அலட்டலா இல்ல இருக்கு...” என்றவன் நொடிக்க,

“உன்னை...” என்று அருண் கழுத்தை நெரிப்பது போல் கைகளை கொண்டு வரவும், ஹர்ஷா அலறியடித்து அங்கிருந்து ஓடி விட்டான்.

ஆண்களின் பலத்த சிரிப்பு ஒலியில் திரும்பிய பெண்கள், தங்களை நோக்கி தலைதெறிக்க ஓடி வருபவனை புரியாமல் பார்த்தனர்.

“நீ ஏன்டா இப்படி ஓடி வர?”

“போங்க பாட்டி... அங்கே எல்லாரும் டூ பேட். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்!”

“என்னத்தையோ சேட்டையை இழுத்துட்டு, தப்பிச்சு ஓடி வந்து இருக்கான் இவன்!”

சரியாக கணித்து சொல்லும் ஸ்வப்னாவை முறைப்பாக பார்த்தவன், “நாளையில இருந்து உங்க பிள்ளைங்களை நீங்களே பார்த்துக்கோங்க. என் தலையில கட்டினீங்க, நடக்கறதே வேற...” என்றான் விறைப்பாக.

“டேய்... டேய்... என் செல்லம் இல்ல... அண்ணி சும்மா விளையாடினேன்டா. உனக்கு வேணும்னா எல்லாரை விட அழகா மருதாணி வச்சு விடறேன், கையை காட்டு!” என்று தாஜா செய்தாள் பெரியவள்.

“எனக்கு எதுக்கு அதெல்லாம்... இந்தாங்க, இவங்களுக்கு வேணா வச்சு விடுங்க!”

அங்கே வந்த சுரபியின் கையை பிடித்து பட்டென்று முன்னே இழுத்துக் கொடுத்தான் ஹர்ஷா. ருக்மணிக்கு மாத்திரை, மருந்து சாப்பிட வெந்நீரை வைத்து எடுத்து வந்து இருந்தவள், அவன் செயலில் திடுக்கிட்டு வேகமாக கையை இழுத்துக் கொண்டாள்.

“எனக்கு எல்லாம் வேணாம்!”

“ஆரம்பிச்சிட்டாடா...” என்று தலையில் கை வைத்துக் கொண்டார் மூதாட்டி.

“சரி, உன்னோட ஆசையை ஏன் கெடுப்பானேன்... உன் சித்தியை பிடிச்சு இழுத்து உட்கார வை. மகளுக்கு முடிச்சிட்டு அடுத்து அம்மாவுக்கு வரேன்!”

ஸ்வப்னா அலட்டாமல் கூறவும், “இல்ல... தம்பி சும்மா விளையாடறாங்க. நீங்க மத்தவங்களுக்கு பாருங்க!” என்றாள் சுரபி அவசரமாக.

“ஏன்டா ஹர்ஷா... நீ வந்து இத்தனை நாள் ஆகியும், எப்படிடா இவங்க இப்படியே இருக்காங்க. நமக்கு எல்லாம் எத்தனை மரியாதை பார்த்தியா?”

“என்ன செய்றது? உங்களை மாதிரி ரௌடிங்களை பார்த்து எங்க சின்ன அத்தைக்கு தன்னால மரியாதை வந்துடுது. அப்படித்தானே அத்தை...”

வைசாலி நக்கல் செய்யவும், “சித்தி... அப்படியா?” என்று நெஞ்சில் கை வைத்தான் ஹர்ஷா.

அவனுடைய அதிகப்படியான அதிர்வில் அரண்டு போன சுரபி, “அப்படிலாம் இல்லைப்பா!” என்றாள் பதறி அடித்து.

“அப்போ, டேய் ஹர்ஷா... நகர்ந்து உட்கார்ந்து எனக்கு இடம் கொடுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!”

விழித்தவள், “இல்ல... பரவாயில்லை, நான் இப்படியே கூட உட்கார்ந்துக்கறேன்!” என இருந்த இடத்தில் அவள் பட்டென்று அமர்ந்துவிட, சுற்றி இருந்த பெண்கள் பக்கென்று வெடித்து சிரித்து விட்டனர்.

“அங்கேயும் போய் இவன் வேலையை ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு!” என்ற நவி, “வாங்க மாம்ஸ்... என்னென்னு போய் பார்ப்போம்!” என்று நிஜந்தனின் பார்வை அங்கேயே இருப்பதை கவனித்து விட்டு கிளப்பிக் கொண்டு நடந்தான்.

“இருந்தாலும் நீங்க என்னை இப்படி இன்சல்ட் செஞ்சு இருக்க கூடாது சித்தி!” என்று நெற்றியில் கை விரல்களை மடக்கி முட்டிக் கொண்டு, சோகமாக தலை அசைத்தான் ஹர்ஷா.

அவள் தடுமாற்றத்துடன், “நான் ஒன்னுமே செய்யலையே...” என்று மெல்லிய குரலில் பேசி இருக்கும் பொழுதே, ஆண்கள் இருவரும் அங்கே வந்து விட்டனர்.

“என்ன... என்ன நடக்குது இங்கே? சத்தம் பெருசா வருது!”

நவ்யுத் தன் மனைவியின் அருகே அமர்ந்தபடி விசாரணை நடத்த, “உங்க மாமன் மகன் இருக்க இடத்துல சத்தத்துக்கு என்ன அண்ணா குறைச்சல்... ஒரே காமெடி தான் போங்க!” என்று பொங்கி சிரித்தாள் வைசாலி.

“உங்க ஊட்டுக்காரரும் அவருக்கு மாமன் மகன் தான்!” என்று கண்களை உருட்டினான் சின்னவன்.

“இருந்தாலும் காமெடின்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லி இருக்கேன் இல்ல... அது எல்லாம் உங்க அண்ணாக்கு வராதுன்னு என் அண்ணனுக்கு நல்லா தெரியும்!”

“ம்க்கும்...” என்றவன் உதட்டை கோணிக்க, நிஜந்தன் அவன் அருகில் அமர்ந்தான்.

“ஆமா... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்கே வந்தீங்க?”

“உனக்கு என்னடா... நாங்க எங்க வேணா வருவோம்!” என்று அலட்டிய நவி, “ஆமா ஸ்வப்... என்ன கலாட்டா போயிட்டு இருக்கு இங்கே?” என தமக்கையிடம் விவரம் கேட்டான்.

***


உறங்கும் நேரம் நெருங்கவும் தனிமையில் அறைக்குச் சென்றவரை பின்தொடர்ந்து சென்று மௌனமாக நின்றாள் சுரபி.

மெத்தையில் கிடந்த தலையணையை நேராக வைத்து விட்டு திரும்பிய மூதாட்டி, தன்னெதிரே வந்து நிற்கும் பெண்ணை நிதானமாக ஏறிட்டார்.

“உங்களுக்கு என் மேலே கோபமா?”

வெறுமையாக முறுவலித்தவர், “அந்த உரிமை எனக்கு இருக்கா என்ன?” என்று பதில் கேள்வி கேட்டார்.

அவள் வழக்கம்போல் கரகரவென்று நீரை உகுக்க, “ப்ச்... உட்காரு!” என்று தானும் கால் நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தார்.

“நான் எதுவும் உங்களை கஷ்டப்படுத்த நினைக்கலை!”

வேகமாக சொல்லும் பெண்ணை பார்த்தவர், “நானும் உன்னை கஷ்டப்படுத்திட கூடாதுன்னு தான் தள்ளி இருக்கேன்!” என்றார் அமைதியாக.

“உங்களால என்னை கஷ்டப்படுத்த முடியாது அத்தை!”

விரைந்து சொல்பவளை கூர்மையாக நோக்கி, “அந்த நம்பிக்கை உனக்கு இருந்து இருந்தா, என்கிட்ட இருந்து தப்பிச்சு உன் மகள் கூட ஓடனும்னு நினைச்சு இருக்க மாட்ட!” என அழுத்தமாக மொழிபவரை, வாயடைத்து போய் பார்த்தாள் அவள்.

“இதை இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா?”

முகம் சிவந்தவள், “அப்போ இருந்த பதட்டத்துல தப்பு பண்ணிட்டேன்!” என்றாள் பாவமாக.

“சரிவிடு... புரியுது!” என மெல்ல புன்னகைத்தார்.

“இனிமே அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டேன், எப்பவும் உங்க கூடவே இருந்துக்கறேன்!”

அவளை ஆதூரமாக பார்த்தவர், தலை அசைத்துக் கொண்டார்.

சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பின் நிமிர்ந்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா... நான் ஒன்னு சொல்லவா?” என்றாள் தயக்கத்துடன்.

“உன் மனசுல பட்டதை நீ சொல்லப் போற... அதை ஏன் நான் தப்பா நினைக்கப் போறேன்?”

இலகுவாக கூறும் அம்மூதாட்டியின் வார்த்தைகளில் இவளுக்குத்தான் குற்றவுணர்வாக இருந்தது.

‘அவங்கவங்க மனசுல பட்டதை பேசுறதுல தப்பு இல்லைங்கிற மாதிரி இவங்க எவ்வளவு பெருந்தன்மையா சொல்றாங்க? ஆனா அவருக்கு என்னை பிடிச்சு இருக்குன்னு அவங்க அண்ணா எல்லார் கிட்டயும் சொன்னதும் நான் எவ்வளவு கோபப்பட்டேன், தேவை இல்லாததை எல்லாம் நினைச்சு கஷ்டப்பட்டேன்...’

“என்ன கண்ணு...? சொல்லு!”

“அது...” என திணறியவள், “பெரியவங்க குடும்பம் இங்கே ஊர்ல இருக்கும் போதே, நீங்க அவருக்கு வேற இடத்துல நல்லப் பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணம் முடிக்கலாமே... எல்லாரும் இதை நினைச்சு தானே கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க, அவரு மனசு மாறி இருக்குற நேரம் சட்டுன்னு ஏற்பாடு பண்ணுங்களேன்!” என்றாள் மெல்லமாக.

“உன்கிட்ட அபி அவனை பத்தி சொன்னதா சொன்னாளே...”

“ம்... சொன்னாங்க. அப்போ அவருக்கு கல்யாணத்து மேலே வெறுப்பு இருந்தது, அதனால ஒத்துக்கலை. இப்போ தான் அவரே ஆசைப்பட்டு கேட்கறாரே...”

‘அவன் ஆசைப்பட்டு கேட்கறது கல்யாணத்தை இல்லை தாயி... உன்னை, இதை எப்போ இவள் புரிஞ்சிக்க போறாளோ?’

மனதின் சலிப்பை மறைத்து, “சரி பேசிப் பார்க்கறேன்!” என்றதும், பெண்ணின் முகம் மலர்ந்தது.

தானும் முறுவலித்தவர், “நீ பயப்பட வேணாம், இந்த விஷயத்துல கண்டிப்பா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். இதுவரைக்கும் செஞ்சது எல்லாம் உன்னோட நன்மைக்கு மட்டும் தான் அப்படிங்கிறதால, எனக்கு எதுவும் தப்பா தோணல தைரியமா விரட்டினேன். ஆனா இது அப்படியில்லை... என் பையன் மேலே வச்சு இருக்க பாசத்துக்கு, அவன் நல்லா இருக்கனும்கிற ஆசையில நான் சுயநலமா நடந்து, உன் மனசை நோகடிச்சிட கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கேன்!” என்று தன் எண்ணங்களை பகிர்ந்தார்.

தன்னை எதுவும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என நினைத்து மகிழ்வதா, அல்லது இதனால் இவரது மகனின் வாழ்வு பாதிப்பதை நினைத்து உள்ளூர கவலையில் தவிப்பவரை எண்ணி நோவதா என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி... இதை எல்லாம் நினைச்சு மனசை குழப்பிக்காம, நிம்மதியா போய் தூங்கு. இதுக்கு மேலே நான் எதுவும் நினைக்கப் போறது இல்லை, எல்லாம் அவன் செயல். ஆண்டவன் போட்ட விதிப்படி எதுனாலும் நடக்கட்டும்!”

அலுப்புடன் கூறி பெருமூச்சு விடுபவரை வேதனையோடு பார்த்தவள், செய்வதறியாது பரிதவித்தாள்.

***


அனைவருக்கும் தனது திருமணத்திற்கான உடைகளை எடுத்துக் கொடுத்து விட்ட நிஜந்தன், மணப்பெண்ணின் முகூர்த்த புடவையை மட்டும் ரகசியமாக வைத்து இருந்து அனைவருக்கும் போக்கு காட்டினான்.

“டேய்... கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. புடவையை கண்ல காட்ட மாட்டேங்குற, வீட்ல வச்சு சாமி கும்பிட வேணாமா... இதுல ப்ளவுஸ் வேற அவளுக்கு அளவு சரியா இருக்கனும், நீ பாட்டுக்கு ஏதாவது ரெடிமேடை கடைசி நேரத்துல தூக்கிட்டு வந்துடாத...” என்று ருக்மணி வேறு ஒருபக்கம் அதட்டினார்.

“ப்ச்... பெரிம்மா, அதெல்லாம் எனக்குத் தெரியும். அவளோட அளவு ப்ளவுஸோட தான் தைக்க கொடுத்து இருக்கேன்!”

“என்னது? அளவு ப்ளவுஸா... அது ஏது உனக்கு?”

மாட்டிக் கொண்ட பாவனையில் சற்றே விழித்தவன், “அது...” என இழுத்துவிட்டு, “ஸாரிம்மா மருமகளே...” என்று வைசாலியிடம் கூறியவன், “அவளை தான் எடுத்து தரச் சொன்னேன்!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“அட கூட்டு களவாணிகளா... ஏய் புள்ளை... அப்போ நீ புடவையை பார்த்துட்டியா?” என மருமகளிடம் சண்டைக்கு நின்றார் புவனா.

“அச்சோ இல்லை அத்தை... புடவைலாம் என் கண்ணுல காட்டுலை. மாமா, சொல்றதை சரியா சொல்லுங்க!” என்று அவனிடம் முறைத்தாள்.

“ஆமாமா... அவளுக்கும் தெரியாது!”

“ஷ்... அப்பா... என்னடா பண்ற நீ?”

அபிராமி அலுப்புடன் கேட்க, “நாளைக்கு காலையில ப்ளவுஸ் வந்துடும் க்கா, அதோட சேர்த்து காண்பிக்கறேன்!” என்றான் நிஜந்தன்.

“ப்ளவுஸை நாங்க தனியா கூட பார்த்துக்குவோம்... நீங்க முதல்ல புடவையை காட்டுங்க மாமா, ரொம்பத்தான் பண்றீங்க!” என்று அடுத்து சண்டைக்கு தயாரானாள் ஸ்வப்னா.

“ஏய்... இந்த பொம்பளைங்களை அடக்க முடியாதுடா, நீ எடுத்துட்டு வந்து காட்டு!”

தாமு தம்பியிடம் பேச, “ஓ...” என்று ஸ்வப்னாவும், வைசாலியும் ஒருசேர ராகமிழுத்து அவரிடம் வேகமாக திரும்பினர்.

“நான் வரலைம்மா இந்த ஆட்டத்துக்கு... என்னை ஆளை விட்டுடுங்க!” என்று அவர் பெரிய கும்பிடாக போட்டு விட்டார்.

நிஜந்தன் தலை அசைத்து நகைத்தபடி, புடவையை எடுக்க அறைக்குச் சென்றான்.

“இங்கே இத்தனை களேபரம் நடக்குது... இந்த அம்மாவும், பொண்ணும் எங்கே?” என்று சுரபி, ராகவியை தேடினாள் வைசாலி.

“ஆமா... அதுங்களை முதல்ல வெளியில வரச் சொல்லு!” என்றார் ருக்மணி.

ஒரு ஆர்வத்தில் வேலை செய்வது என்னவோ செய்து விட்டான். ஆனால் இப்பொழுது அதை அனைவரின் முன்னிலும் காண்பிக்க, அவனுக்கு கூச்சம் நெட்டித் தள்ளியது. சிறிதே மூளையை தட்டி விட்டவனுக்கு ஒரு அருமையான யோசனை தோன்ற, அதன்படி தெளிவாக வெளியே வந்தான் நிஜந்தன்.

“சரி, நீங்க எல்லாம் புடவையை பாருங்க. எனக்கு மில்லுல கொஞ்சம் வேலை இருக்கு, போய் என்னென்னு பார்த்துட்டு வந்துடறேன்!” என்று நழுவ முயன்றான்.

“எங்கே... எங்கே ஓடறீங்க நீங்க? அதை ஒரு அரைமணி நேரம் கழிச்சு பொறுமையா கூட போய் பார்த்துக்கலாம்!” என்று குறுக்கே பாய்ந்து, வழி மறித்து நின்றான் நவ்யுத்.

“அருண்... நீ போய் அந்த கதவை லாக் பண்ணுடா!”

“டேய்... அவ்வளவு சீன் எல்லாம் இல்லைடா!”

மாமன் பதற, “அதை நாங்க முடிவு பண்ணிக்கறோம், நீங்க இப்படி வந்து உங்க அண்ணாவோட உட்காருங்க மாம்ஸ்!” என்று அவனை பிடித்து தாமுவின் அருகில் அமர வைத்தான் மருமகன்.

“இங்கே என்ன நடக்குது?”

ராகவி கேட்க, “ம்... உன் அம்மாவோட கல்யாண புடவையில உன்னோட அப்பா ஏதோ ஸ்பெஷலா வேலை பார்த்து இருக்கார். அதைத்தான் இப்போ என்னென்னு எல்லாரும் தெரிஞ்சிக்க போறோம்!” என்றான் நவ்யுத் கேலிச் சிரிப்புடன்.

அவள் நிஜந்தனை வியப்புடன் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த சுரபியின் முகம் என்னவோ, ஏதோ என்று கலவரம் ஆகியது.

**********

நேரடி புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.

Vazhkkai Kavithai Vasippom - Deepa Babu

 



வாழ்க்கை கவிதை வாசிப்போம்

கதைக்கரு


நீரிழிவு மருத்துவன் மற்றும் சித்த மருத்துவளின் வாழ்வில் ஏற்படும் திருமண பந்தமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் அழகான காதல் கதையாக விரிகிறது.

இக்கதையில் குறிப்பிடும் நபர்கள், சம்பவங்கள், வைத்தியசாலைகள் அனைத்தும் எப்பொழுதும் போல் எனது கற்பனையே தவிர, நிஜத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்கள் மட்டும் பொது வெளியில் இருந்து எடுத்து பகிர்கிறேன். முயன்று பார்த்து உங்களுக்கு ஒத்துக் கொண்டால் தொடர்ந்து பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நன்றி.


கதையிலிருந்து சிறு துளிகள்


முன்பு போல தனது விளக்கத்திற்கு அவனிடம் எதுவும் பிரதிபலிப்பு தெரிகிறதா என பேச்சு வாக்கில் லேசுபாசாக அவனை நோட்டம் இட்டவள், அவன் முகம் சலனமின்றி இருக்கவும் தன்னைப் போல மேலும் தொடர்ந்தாள்.

“இன்னொரு உதாரணம் கூட இருக்கு. இப்போ உங்களுக்கு ஒரு காய்ச்சல் வருதுன்னு வச்சுக்கோங்களேன், அலோபதி டாக்டர் கிட்ட போனீங்கன்னா... கண்ணை மூடிட்டு காய்ச்சல் குறையறதுக்கான மருந்தை மட்டும் தான் எழுதித் தருவாங்களே தவிர, அந்த காய்ச்சல் எதனால வந்ததுன்னு காரணியை தேடிக் கண்டுபிடிச்சு அதுக்கான வைத்தியத்தை தர மாட்டாங்க!”

“ஓ... அப்போ உங்க சித்தால என்ன செய்வீங்க நீங்க?”

“ம்... நாங்க அந்த காய்ச்சல் எதனால வந்ததுன்னு அவங்களோட நாடியை பிடிச்சுப் பார்த்து முதல்ல தெரிஞ்சுப்போம். அதாவது... அஜீரண கோளாறா, சீதோஷ்ண நிலை மாற்றமா, உடல் வறட்சியினாலா... இல்ல... பயம், மன அழுத்தம்னு இப்படி சைக்காலஜிக்கல் பாதிப்புனால வந்த ஜுரமான்னு சரியா தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மருந்துகளை கொடுத்து சரி செய்வோம்.

சிம்பிளா சொல்லனும்னா... அலோபதி வெறும் சிம்டம்ஸை சரி செய்யறதோட நிறுத்திக்குவாங்க, நாங்க அந்த டிசீஸோட ரூட் காஸை தேடிப்பிடிச்சு சரி பண்ணுவோம்!” என்றாள் நதியா பெருமையாக.

“ஓஹோ...” என்றவன், “அப்போ... அலோபதி சிம்ப்ளி வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா நீங்க!” என்று இன்னும் பெண்ணின் வாயை கிளறினான் அவன்.

“நோ... நோ... அப்படி எல்லாம் அதை மொத்தமா ஒதுக்கிட முடியாது. அதுவும் குட் சிஸ்டம் தான். எப்போன்னா... எந்த ஒரு உடனடி தேவையான, தீவிரமான மருத்துவத்துக்கு அது தான் சிறந்ததா இருக்கும். ஓப்பன் இஞ்சுரீஸ், ஆக்ஸிடென்ட்ஸ் இந்த மாதிரி கேசஸுக்கு எல்லாம் கூட அவங்களோட ட்ரீட்மென்ட் தான் பெஸ்ட் அன்ட் இம்மிடியட் ரெக்கவர் கொடுக்கும்!”

“பரவாயில்லையே... உங்களுக்கு ஆப்போஸிட்டான சிஸ்டெத்துக்கும் சப்போர்ட் பண்றீங்களே!”

“ஸார்... அது என்ன எனக்கு பங்காளி வீடா? வாய்க்கா தகராறு செஞ்சுக்கிட்டு, எதிரா போர்க்கொடி பிடிச்சு சண்டை போட... எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எங்கே இருந்தாலும் ஏத்துக்கனும், இது தான் என்னோட பாலிஸி!” என்று அலட்டலாக தோள்களை குலுக்கி கொண்டாள்.

ஆடவனின் முகத்தில் புன்னகை வெளிப்பட துடிக்க, மின்னும் விழிகளுடன் முயன்று அதை அடக்கிக் கொண்டவன், தன் தாத்தாவிடம் பார்வையை திருப்பினான்.

அவர் கண்ணசைவில் பேரனின் அபிப்பிராயம் விசாரிக்க, அவனோ இன்னும் தனது சந்தேகம் தீரவில்லை என்பது போல் சைகை செய்துவிட்டு, தன் எதிரே இருந்தவளிடம் மேலும் பேச்சுக் கொடுத்தான்.

“நீங்க என்னை இன்னும் நல்லா குழப்பி விட்டுட்டீங்க டாக்டர் நதியா. உங்க பார்வையில இப்போ எந்த சிஸ்டம் பெஸ்ட்டுன்னு சொல்ல வர்றீங்க?”

‘அட ராமா...’ என தனக்குள் சோர்வாக அலுத்தவள், “ஸார்... பொதுவுல சொல்லனும்னா, எந்தவொரு நாள்பட்ட நோய்க்கும், சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கும் நாம அலோபதியை தேடிப் போய் ட்ரீட்மென்ட் எடுத்து நம்ம உடம்பை கெமிக்கல் குப்பை குடோனா மாத்தறதுக்கு பதிலா, இயற்கை முறை வைத்தியம் மூலமாவே அதை சுலபமா சரி செஞ்சுக்கலாம்னு சொல்றேன்!” என்று நிதானமாக பேசினாள்.

“பட்...” என உதடுகளை பிதுக்கியவன், “எனக்கு இன்னமுமே சாட்டிஸ்ஃபை இல்லை, இதுல இன்னொன்னு பாருங்க...” என்று எதையோ தொடங்கும் பொழுதே, இவளுக்கு கோபம் வந்து விட்டது.

‘நானும் எவ்வளவு தூரம் சின்னப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா இவனுக்கு படிச்சுப் படிச்சு சொல்றேன்... ஆனா ஓவரா ஆட்டிட்யுட் காட்டுறான்!’ என பொங்கி எழுந்தாள்.

“சாட்டிஸ்ஃபை ஆகாது ஸார்... ஏன் தெரியுமா? உங்க தாத்தாவோட பேச்சுக்கு மதிப்பு கொடுத்து என் வேலை, வெட்டி எல்லாம் விட்டுட்டு வந்து தனியா விளக்கம் கொடுக்கறேன் இல்ல... இளக்காரமா தான் இருக்கும்.

இதே உங்க சுகர் டாக்டர் அருள்மொழி வர்மன் போல நாலு மாத்திரையை எழுதிக் கொடுத்து... தினமும் காலையில, ராத்திரின்னு வேளைக்கு ரெண்டு போடுங்க அவ்வளவு தான் முடிஞ்சதுன்னு அனுப்பி வச்சா, பூம்பூம் மாடு கணக்கா தலையை ஆட்டிட்டு ஒரு கேள்வி கேட்காம அதை ஃபாலோ பண்ணுவீங்க!” என்று பொருமினாள் அவள்.

லேசாக திகைத்துப் போனவன், “என்ன?” என்றான் அவளை அதிர்ச்சியாக பார்த்தபடி.

“பின்னே என்ன... உங்க தாத்தாவுக்கு அந்த டாக்டரை தானே பார்க்கறீங்க நீங்க?”

“ம்... ஆமா!” என்று அவன் தலை மெதுவாக அசைந்தது.

“அவர்கிட்ட இப்படி ஒரு பேஷன்ட் எதிர்ல உட்கார்ந்து நிதானமா அவங்களோட சந்தேகத்தை கேட்க முடியுமா?” என்றாள் கேள்வியாக.

தாத்தாவை ஒரு பார்வை பார்த்தவன், “இல்லை... முடியாது!” என மறுத்தான்.

“ஹ்ஹ... அவ்வளவு ஏன்? என்கிட்ட இத்தனை க்ராஸ் கொஸ்டீன்ஸ் பண்றீங்களே... ஒரு நாளாவது அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் கேட்டு இருக்கீங்களா நீங்க...”

அவன் மௌனமாக அவளை பார்க்க, “இது தான் சார் உலகம்... தங்க நகை விக்கறவங்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் சொல்லி, இல்லாத வரி எல்லாம் போட்டு... வாங்குற தங்கத்துக்கு மேலா நம்ம பணத்தை சுளையா கறக்கும் போது, அமைதியா கேட்கறதை கொடுத்துட்டு வருவோம். ஆனா அதுவே ஒரு ப்ளாட்பார்ம்ல காய்கறி விக்கறவங்க, துணிமணி விக்கறவங்க கிட்ட மட்டும் வாய் கிழிய பேரம் பேசி விலையை குறைக்க பார்ப்போம்!” என்று தத்துவம் பேசினாள் நாயகி.

தன் பொறுமையை இழுத்துப் பிடித்து பின்னங்கழுத்தை தடவிக் கொண்டவன் சன்னப் பெருமூச்சோடு நிமிர்ந்து அமர, பெண் இன்னமும் அவனை சோதித்தாள்.

“என்னால தாங்கவே முடியாத விஷயம் என்ன தெரியுமா? இப்போ எல்லாம் நேர்மையா ஒரு பிஸினஸ் பண்றவங்களை விட, இந்த மாதிரி கார்ப்ரேட் கிரிமினல்ஸோட பேச்சுக்கு தான் இங்கே மதிப்பு அதிகம் இருக்கு!”

திடுக்கிட்டவன், “டாக்டர்.நதியா...” என்று வேகமாக குறுக்கிட முயன்றான்.

அதற்கு அவள் விட வேண்டுமே... கிடைத்தது வாய்ப்பு என வீறு கொண்டு எழுந்து, அவனுக்கு இடம் கொடாது மேலே படபடவென்று பேசிச் சென்றாள்.

“இருங்க... நான் இன்னும் பேசி முடிக்கலை. எங்கள மாதிரி நேட்சுரல் ரெமடீஸ் டாக்டர்ஸ் சொல்றதை விட, நல்லா மார்க்கெட்டிங் ட்ரிக் கத்துக்கிட்டு அவர்கிட்ட வர்ற பேஷன்ட்ஸை எல்லாம் தன்னோட வாய் ஜாலத்துல மயக்கி, பல கார்ப்ரேட் மருந்து கம்பெனிகளோட பிரதிநிதியா அவங்களுக்கு கண்ட கண்ட மாத்திரை, மருந்துகளை பிரஸ்கரைப் பண்றாரே உங்க டாக்டர்.அருள்மொழி வர்மன், அவர் சொல்றது தான் உங்களை மாதிரி ஆட்களுக்கு வேத வாக்கா தெரியும்!” என்று நொடித்தாள்.

வேக வேக மூச்சுக்கள் எடுத்து தன்னை சமன்படுத்த முயலும் பேரனை சங்கடத்துடன் பார்த்தபடி, நதியாவிடம் பேச முயன்றார் கோபால்.

“அம்மாடி... டாக்டர் பொண்ணே...”

“ப்ச்... இருங்க தாத்தா, உங்க பேரன் மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சுக்க முடியாது. பார்த்தீங்க இல்ல... நான் இத்தனை தூரம் விவரம் சொல்லியும் இன்னமும் நம்பாம குறுக்கு விசாரணை பண்றார். இதை எல்லாம் அப்படியே எடுத்துட்டு போய் மிஸ்டர் அருள்மொழி கிட்ட விவாதம் பண்ணச் சொல்லுங்களேன் பார்ப்போம்!” என்றாள் சவாலாக.

தன் பொறுமையை முழுதாக தொலைத்தவன், “தாத்தா...” என்று பற்களை கடித்தான்.

“ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நான் உண்மையை தானே சொல்றேன். அந்த டாக்டர்.அருள்மொழி மேலே அவ்வளவு விசுவாசமா...”

“உங்க பேச்சை இதோட நிறுத்திக்கறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது மிஸ்.நதியா!” என்றான் அவன் அழுத்தமாக.

தனது பெயரின் முன்னே இருந்த டாக்டரை நீக்கி அவன் மிஸ் என்று அழைத்ததில் பெண் லேசாக திகைத்துப் பார்க்க, பெரியவர் தன் பேரனிடம் சமாதானத்தில் இறங்கினார்.

“வர்மா... சின்ன பொண்ணு தானே, ஏதோ பேச்சு வாக்குல படபடன்னு பேசுது. நீ கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசிக்கறேன்!”

“என்னது? சின்ன பொண்ணா... தாத்தா, நவ் ஐம் ட்வென்டி செவன். நீங்க என்ன இப்படி சொல்றீங்க? அப்படி ஒரு மெட்சூர்ட் லுக் கொடுக்கனும் தான் நானே ஸ்ஸரில வந்து இருக்கேன்!” என படபடத்தவள் சட்டென்று நிறுத்தி, அவர் பேசியதை தனக்குள் ஒரு முறை திரும்பவும் அவசரமாக ரீவைன்ட் செய்து பார்த்து விட்டு, எகிறும் இதயத்துடிப்புடன் நிமிர்ந்து முதியவரை கலவரத்துடன் நோக்கினாள்.

“எ... என்ன? இப்போ இவரை என்ன சொன்னீங்க நீங்க? வ... வர்மனா...”

“எஸ்... டாக்டர்.அருள்மொழி வர்மன், ஜென்ரல் பிசிஸியன் அன்ட் இன்டன்சிவிஸ்ட், டயபிடாலாஜிஸ்ட் இன் ஆரோக்யா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்!”

அவனிடம் இருந்து வெளிவந்த ஆளுமையான குரலில் பெண்ணின் நா வறண்டு போக, மெல்ல எச்சிலை கூட்டி விழுங்கினாள் அவள்.

**********

மெதுவாக மேலெழும்பி வந்து கொண்டு இருக்கும் கதிரவனின் ஒளிக்கற்றைகள், பேரனின் வதனத்தில் பட்டுத் தெறிப்பதில் இன்னமும் அவனின் தேஜஸ் கூடி தெரிவதை ஆசையுடன் பார்த்து இருந்தார் கோபால்.

இடைவிடாது சத்தமிடும் கடல் அலைகளின் பேரிரைச்சலை சில நிமிடங்கள் மௌனமாக ரசித்து இருந்து விட்டு, தன் தாத்தாவிடம் எதையோ கேட்க வேண்டி திரும்பியவன் மெல்ல குறுநகை பூத்தான்.

“இது என்ன தாத்தா? கோவிலுக்கு வந்து இப்படி ஒரு வேலை பார்க்கறீங்க...”

“என்னப்பா?” என்ற சின்ன திடுக்கிடலுடன் அவனை பார்த்தார் அவர்.

“பின்னே... இங்கே எல்லாம் வந்தா நம்ம மனசை அலைபாய விடாம, தெய்வத்தை மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கனும். நீங்க என்ன இப்படி சைட் அடிக்கறீங்க?”

“என்னது? நானா...” என வாயை பிளந்தவர், “என்னடா சொல்றே?” என்று அவனிடமே விவரம் கேட்டார்.

“ம்... இப்போ எதுக்கு என் முகத்தையே கண் சிமிட்டாம பார்த்துட்டு இருக்கீங்க?”

“உஃப்... இதுக்கு ஏன்டா அப்படி சொல்லி பீதியை கிளப்புறே? என்னமோ என் பேரன் இன்னிக்கு கொஞ்சம் அழகா தெரியறானேன்னு லேசா பார்த்து வச்சேன் அவ்வளவு தான்” என்றார் முதியவர் அலட்டலாக.

“ஆஹான்...” என்றவன் ராகம் இழுக்கும் பொழுதே, சற்றுத் தொலைவில் கேட்ட ஆர்ப்பாட்டமான குரல் ஒன்று அவனது கவனத்தை ஈர்த்தது.

“இங்கே வேணாம்மா... அங்கே உட்கார்ந்தா தான் நல்லா கடலை வேடிக்கை பார்க்க முடியும்!”

“ஏன்டி... எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அங்கே போய் தான் கொட்டம் அடிக்கப் போறே நீ? கோவில்ல இருக்க இந்த பத்து நிமிஷம் ஆச்சும், கடவுளை பார்த்து உட்கார்ந்து அமைதியா தியானம் பண்ணேன்!”

“மை டியர் மம்மி... ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. நாம தியானம் பண்றது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா, அதை எப்படி பண்ணனும் தெரியுமா? வெளியே கடவுள் எந்த திசையில இருக்காங்கன்னு அவங்களை பார்த்து உட்கார்ந்து செய்ய கூடாது, நம்ம மனசை ஒருமுகப்படுத்தி... அவங்களை நமக்குள்ள வாங்கி, அமைதியா ஒரு இடத்துல உட்கார்ந்து செய்யனும்!”

அவளின் விளக்கம் கேட்டு தன்னை மீறி உதடுகளில் பிரசவித்த புன்னகையை பற்களுக்கு இடையில் கடித்தவன், பார்வைக்கு எட்டிய தூரம் வரை மேலோட்டமாக கோவிலை சுற்றி கண்களை அலைய விட்டான். அதைக் கண்டு கொண்ட பெரியவரின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

அவளிடம் உரையாடிய குரல் சில நொடிகள் வாயடைத்துப் போயிருக்க வேண்டும், சிறிது இடைவெளி விட்டே அவளிடம் கடுகடுத்தது.

“உன்கிட்ட எல்லாம் மனுஷி பேசுவாளா?”

“ஹஹா... மை காட்... அப்பா கேட்டீங்களா? அதனால தானே இவங்க என்கிட்ட பேசிட்டு இருக்காங்க!”

அங்கே மீண்டும் சின்ன திகைப்பு நிகழ்ந்து இருக்கும் போல் இருக்கிறது. இரண்டு கேலிச் சிரிப்புகளுக்கு இடையே இன்னமுமே காரமாக, அழுத்தமாக அக்குரல் ஒலித்தது.

“அப்பாவும், பொண்ணும் எப்படியோ போங்க. நான் இங்கே தான் உட்காருவேன்!”

“சரி வாங்கப்பா... நாம போய் அப்படி உட்காருவோம்!”

படு இலகுவாக மொழிந்த அவளின் குரல் அடுத்து அமைதியாகி விடவும், இவன் உடலில் சின்ன பரபரப்பு எழுந்தது. கடலை பார்க்க என்றால் இந்த பக்கம் வருவார்களா, அல்லது கோவிலின் மற்றொரு புறம் சென்று விடுவார்களா என்று பரிதவித்தது நாயகனின் உள்ளம்.

ஆனால் அவனின் எதிர்பார்ப்பை குளிர்விப்பது போல், அவனை கடந்து சென்று கொண்டு இருந்தாள் அவள்.

அன்றும் அவன் பார்வைக்கு அழகிய சில்க் காட்டன் புடவையில் தான் தரிசனம் தந்தாள் அந்த சித்த மருத்துவர். விழிகளில் மெலிதான ஆர்வம் பிறக்க, அவளை கீழிருந்து மேல் வரை நிதானமாக அளந்தான் அருள்மொழி.

தன் தந்தையின் கை பிடித்து, தான் விரும்பிய இடத்தில் அமர்ந்து கொண்டவள், அவரிடம் எதையோ சுட்டிக் காட்டியபடி வளவளக்க தொடங்கி விட்டாள்.

‘என்னது? சின்ன பொண்ணா... தாத்தா, நவ் ஐம் ட்வென்டி செவன்!’

‘பார்த்தா அப்படியா தெரியுது? நல்லா சூட்டிகையான பிள்ளைடா அவள்!’

இருவரின் குரலும் அடுத்தடுத்து அவன் மனதில் எதிரொலிக்க, ‘ம்... உண்மை தான்!’ என்று தன் தாத்தாவின் கூற்றை ஏற்றுக் கொண்டான் அவன்.

அவள் முகத்தில் வெளிப்பட்ட பலவித பாவனைகளும், விதவிதமான சிரிப்புகளும் இவனை மெதுவாக அவளை நோக்கி கட்டி இழுத்துக் கொண்டு இருக்க, சட்டென்று கேட்ட கோவில் மணி ஓசையில் தன் நிதானத்திற்கு வந்தான் நாயகன்.

அப்பொழுது தான் அருகில் இருந்த தாத்தாவின் நினைவு வர, இதயத்தில் லேசாக பிறந்த பதற்றத்துடன் அவரை ஓரவிழியில் நோக்கினான். அவரோ சற்று தள்ளி அமர்ந்து இருந்த குடும்பத்தில் உள்ள ஒரு சிறு குழந்தையின் விளையாட்டை சுவாரசியமாக வேடிக்கை பார்த்து இருந்தார்.

அதுவரை இழுத்துப் பிடித்து இருந்த மூச்சுக்காற்றை நிம்மதியாக வெளியேற்றியவன், பின்னங்கழுத்தை அழுந்த தடவியபடி தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அதில் கலைந்தவர் அவனிடம் திரும்பி, “என்ன வர்மா?” என்று விசாரித்தார்.

“ஆங்... ஒன்னுமில்லை தாத்தா!” என்றவன், ‘இவர் இன்னும் அவளை பார்க்கலையோ...’ என்று சிந்தனையில் மூழ்கும் நேரம், அவரோ பெருங்குரல் எடுத்து ஆர்ப்பரித்தார்.

“அட... நம்ம நதியா பொண்ணு!” என்று உற்சாகமாக கூவினார்.

“ம்... என்ன தாத்தா?” என்றான் இவன் ஏதும் அறியாதவனாக.

“டேய்... அங்கே பாருடா, டாக்டர்.நதியா!”

அசுவாரசியமாக அங்கே பார்வையை செலுத்தியவன், “ஓ...” என்று மட்டும் கூற, கோபால் எழுந்து விட்டார்.

அவரின் எண்ணம் புரிந்து திகைத்தவன், “தாத்தா... என்ன பண்றீங்க? அவங்க பேமிலியா வந்து இருக்காங்க போலிருக்கு!” என்று அவரை தடுக்க முயன்றான்.

“அதனால என்ன? நாம அறிமுகம் ஆகிக்கலாம்!”

“தாத்தா... தேவை இல்லாத வேலை பார்க்காதீங்க, நாம கிளம்பலாம் வாங்க!”

“அட இருடா... பார்த்துட்டு பார்க்காத மாதிரி கிளம்பிப் போனா, அந்தப் பொண்ணு தப்பா எடுத்துக்க போகுது!”

“அதெல்லாம் அவள் பார்க்கறதுக்கு முன்னாடி நாம கிளம்பிடலாம் வாங்க!” என்று அவசரத்தில் அவளை உரிமையாய் ஒருமையில் சொல்லி விட்டவன், பின்பே தடுமாற்றத்துடன் தாத்தாவின் முகம் பார்த்தான்.

நல்லவேளையாக அவர் இவன் பேச்சை கவனிக்காமல், அவளை ஆர்வமுடன் கவனித்து இருந்தார்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் அடுத்து, ‘அப்படி என்ன தான் சொக்குப் பொடி போட்டு இவரை மயக்கினாளோ தெரியலை... அவளை பார்க்கறதுக்கும், பேசறதுக்கும் இப்படி பரபரன்னு பறக்கறார்!’ என்று தனக்குள் புகைந்தான்.

இவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் நம் பெண்ணே இவர்களை பார்த்து விட்டு, விரைந்து அருகில் வந்தாள்.

“தாத்தா!” என ஆச்சரியமாக கூவியவளை, அவரும் உற்சாகமாக எதிர்கொண்டார்.

“மை காட்... உங்களை இங்கே நான் சுத்தமா எதிர்பார்க்கவே இல்லை!” என்று கண்களை விரித்தாள்.

“நானும் தான்மா...” என்றவர் வாயெல்லாம் பல்லாக கூற, நாயகியின் கவனம் நம் நாயகனிடம் திரும்பியது.

**********

மாலை தன் பணிக்கு சென்று விட்டு வீடு வந்த மருத்துவன், இன்னமும் தன்னுடைய தாத்தா அதே கவலையில் உழலுவதை கண்டு அவரிடம் பேச முடிவு எடுத்துக் கொண்டான்.

குளித்து உடை மாற்றி வந்து தனக்கான, இலகுவான இரவு உணவை கைகளில் ஏந்தியவாறு அவரின் எதிரே வந்து அமர்ந்தான் அவன். நிமிர்ந்து பேரனை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் விழிகளை திருப்பிக் கொண்டார்.

லேசாக தொண்டையை செருமியவன், “சாப்பிட்டீங்களா?” என்று விசாரித்தான்.

“ம்... அது ஆச்சு ஏழு மணிக்கு எல்லாம்!” என்று முகத்தை சுருக்கினார்.

தன்னுள் பிறக்கும் புன்னகையை மறைத்து, “குட்... மாத்திரை?” என்றான் அடுத்து.

“ப்ச்... அதுவும் போட்டாச்சுடா!”

“ஃபைன்... உங்க கால் வலி இப்போ எப்படி இருக்கு?”

“இப்போ உனக்கு என்னடா பிரச்சனை? எதுக்கு இப்படி நொய் நொய்னு மாத்தி மாத்தி கேள்வி கேட்கறே... உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் நம்ம நதியா பொண்ணு பேசற முறை தான் சரி வரும்!” என்று எரிந்து விழுந்தார்.

அந்த டாக்டர் பொண்ணு, தற்பொழுது நம்ம நதியா பொண்ணு ஆகி விட்டதை மனதில் குறித்துக் கொண்டவன், அவரிடம் நிதானமாக பேசினான்.

“முதல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை? அதைச் சொல்லுங்க நீங்க!”

“எனக்கு என்ன பிரச்சனை... நான் தான் இந்த எண்பத்து நாலு வயசுலயும் நல்லா குத்து கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேனே...” என்றார் வேகமாக.

முகம் அப்படியே இறுகிவிட, பற்களை அழுந்த கடித்தபடி அமைதி ஆனான் ஆடவன். அப்பொழுதே தன் தவறு புரிய, தவிப்புடன் பேரனை பார்த்தார் அவர்.

“டேய் வர்மா...”

“குட்நைட்!” என சட்டென்று எழுந்து விட்டவன் அறைக்கு செல்ல முயல, பெரியவர் மன்றாடினார்.

“டேய்... ஸாரிடா, என்னால இப்போ உன் பின்னால வேகமா எழுந்து கூட வர முடியாது!”

மெல்ல தன்னை நிதானித்தவன், “சரி... தூங்க வர்றீங்களா, கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்டான்.

“ம்... சரி போகலாம்!” என்றதும் அவரை மெல்ல தாங்கி அழைத்து சென்று படுக்கையில் விட்டான்.

மீண்டும் வெளியே வந்து முன்னறை கதவை பூட்டி விட்டு, அங்கிருந்த மின் விளக்குகளையும் அணைத்து உள்ளே வந்தவனை பார்வையால் தொடர்ந்தார் கோபால்.

தன்னருகில் அமைதியாக படுத்த பேரனை கவலையுடன் பார்த்தவர், “வர்மா... இப்படி இருக்காதடா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!” என்றார் வருத்தமாக.

“ஐம் ஓகே தாத்தா, நீங்க அமைதியா தூங்குங்க!”

“உன் முகத்தை வச்சு என்னால அதை கண்டுபிடிக்க முடியாதா?”

அவன் பதில் ஏதும் கூறாமல் இருக்க, “தப்பு தான்டா... ஏதோ ஒரு அவசரத்துல அப்படி சொல்லிட்டேன்!” என்றார் தவிப்புடன்.

“ம்... என்னை அனாதை ஆக்கிட்டு போறதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோசம்!”

உணர்வற்று கூறியவனின் குரலில் இவர் கண்கள் நீரில் மிதக்க, “டேய் கண்ணா...” என்று தழுதழுத்ததில், விரைவாக தன்னை மீட்டுக் கொண்டான் அவன்.

“ப்ச்... ஓகே... நானும் ஸாரி சொல்லிக்கறேன், இப்போ நிஜமா ரிலாக்ஸ் ஆகிட்டேன்!” என்று அவரிடம் திரும்பி முறுவலித்தான்.

“ப்ராமிஸா தானே...” என்று அவன் முன்னே கையை நீட்டினார்.

“பேசுறதை எல்லாம் பேசிட்டு... இப்போ சின்னப் பிள்ளை மாதிரி சத்தியமா கேட்கறீங்க நீங்க?” என்று பொய்யாய் முறைத்தான் அருள்.

“அட போடா... சாயந்திரத்துல இருந்து நானே எவ்வளவு கவலையில இருக்கேன் தெரியுமா?” என்றார் குரலில் வெறுப்புடன்.

“தெரியும்!” என்று விட்டு நேராக படுத்துக் கொண்டான்.

“என்ன தெரியும் உனக்கு?” என்றார் சந்தேகமாக.

“எல்லாம் தெரியும்!” என்று இதழ் மடித்து சிரித்தான்.

இன்னமும் அவனை நம்பாமல் பார்த்தவரிடம், “அன்னிக்கு எல்லோருமே அவளை பாப்பா, குட்டின்னு மட்டும் கூப்பிட்டு பேசுனதுல முகமும், பேரும் தான் சரியா ஞாபகம் இல்லையே தவிர, சின்னப் பொண்ணா திருப்பதியில மீட் பண்ணி பேசிப் பழகினது எல்லாம் நல்லா பசுமையா நினைவுல இருக்கு. அவள் கேட்டப்போ வேணும்னே தான் ஞாபகம் இல்லைன்னு பொய் சொன்னேன்!” என்று அவரை குறும்பாக பார்த்தான் அவன்.

“ஏன் அப்படி?” என குழப்பத்துடன் விசாரித்தார்.

“இது என்ன கேள்வி? ஒருவேளை ஞாபகம் இருக்குன்னு நான் சொல்லி இருந்து, அதே ஃப்ளோல அவள் சட்டுன்னு என்னை அண்ணான்னு கூப்பிட்டுட்டான்னா... எதுக்கு வம்பு? அதனால தான் அப்படி ஒரு சிட்சுவேஷனே வந்துட கூடாதுன்னு வேகமா அவாயிட் பண்ணிட்டேன்!”

அவன் முகத்தையே இமைக்காது பார்த்தவர், “டேய் வர்மா... அப்போ நீ...” என்று கோபால் இழுக்க, அவன் அசட்டையாக உதட்டை பிதுக்கினான்.

பல்லைக் கடித்து, “அடி தான் வாங்க போறே நீ?” என்றார் அவனிடம் கோபமாக.

“எதுக்கு?” என்றான் நாயகனோ கூலாக.

“ப்ச்... வர்மா...” என அலுப்புடன் அழைத்தவரை அழுத்தமாக பார்த்தான் அவன்.

“இதை எதிர்பார்த்து தானே இத்தனை வேலை செஞ்சீங்க... அப்புறம் என்ன? ஃபர்தரா ப்ரொசீட் பண்ணுங்க!”

“அப்போ முதல்ல இருந்தே உனக்கு எல்லாம் தெரியும்!”

“ம்... அப்படியும் சொல்லிட முடியாது. ஸ்டார்ட்டிங்ல டௌட் இல்லை, ஆனா போகப் போக ஈஸியா கெஸ் பண்ண முடிஞ்சுது. அதுவும் என் போனுக்கு போட்டோஸ் அனுப்ப சொல்லி அவ கிட்ட நம்பரை கொடுத்தீங்களே... அப்பவே கன்ஃபார்மும் பண்ணிட்டேன்!” என்று அவரிடம் திரும்பி கண் சிமிட்டினான்.

பெரியவரால் அதை ரசிக்கவோ, ஏற்கவோ முடியவில்லை.

“அப்புறம் ஏன்டா இத்தனை நாள் அமைதியா இருந்தே?”

“நீங்களும் என் கிட்ட உடைச்சு பேசலை, அதனால நானும் என் மனசை உடைச்சு சொல்லலை!”

“ஆனாலும் உனக்கு இவ்வளவு ஏத்தம் இருக்க கூடாதுடா...” என்று பேரனை முறைத்தார்.

அவன் பதிலின்றி புன்னகைக்க, “வந்து... ஆனா வர்மா... இப்போ எனக்கு கொஞ்சம் குழப்பமாவும், தடுமாற்றமாவும் இருக்கு!” என்றார் கவலையுடன்.

“தெரியும்... அதனால தான் இப்பவே நான் விஷயத்தை ஓப்பன் பண்ணேன். இல்லைன்னா... இன்னும் கொஞ்ச நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை என்ஜாய் பண்ணிட்டு சுத்திட்டு இருந்து இருப்பேன்!”

பேரனின் ரசனை சிரிப்பில் அவருக்குள் கலவரம் தான் மூண்டது. நதியாவை சந்தித்த நாள் முதலாக இப்படி ஒரு சுபமான தருணத்துக்காக தான் அவர் ஆவலுடன் காத்து இருந்தார். ஆனால் இன்று அது நிறைவேறும் நேரம், மனதார ஏற்று அவரால் மகிழத்தான் முடியவில்லை.

**********

மதிய உணவிற்கு வீடு வந்த நதியா, தன்போக்கில் வளவளவென்று பெற்றோரிடம் கதை அளந்தபடி சாப்பிட்டு இருந்தாள்.

“சாப்பிடும் போது பேச கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது? இதுல சித்தா டாக்டர் வேற...”

சாவித்திரியின் அலுப்பில் அவரை முறைத்து பார்த்தவள், “என் ப்ரொஃபஷனை வச்சு என்னை டேமேஜ் பண்ணாதீங்கன்னு, உங்க கிட்ட நானும் தான் எத்தனை தடவை சொல்றது?” என்று பல்லைக் கடித்தாள்.

“ஆமா...” என்று முகத்தை சுளித்துக் கொண்டார் அவர்.

“வர்ற வர்ற இந்த அம்மாவோட அராஜகம் அதிகமாகிட்டே போகுது, எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான்!” என சட்டென்று தந்தையை அதட்டினாள்.

மகளின் பேச்சில் வாய் விட்டு நகைத்த கணேசனுக்கு உடனே புரையேறி இருமல் வரத் தொடங்க, “இதெல்லாம் தேவையா... அவளோட சேர்ந்து நீங்களும் தான் கெட்டுப் போறீங்க!” என்று கணவனின் தலையை தட்டியபடி, தண்ணீர் எடுத்து கொடுத்தார்.

“ஓகே... இனி நான் பேசலை, அமைதியா சாப்பிட்டுட்டு என் ரூமை பார்த்து போறேன்!”

அன்னை அதற்கு அலட்டிக் கொள்ளவில்லை, மகளின் மனது தான் பொருமியது.

“பாப்பா... இப்படி வந்து உட்காரு, உன் கிட்ட நாங்க ஒரு விஷயம் பேசனும்!”

அம்மாவை ஒரு பார்வை பார்த்தவள், “அதை உங்க பொண்டாட்டி சொல்ல மாட்டாங்களோ...” என்று வீம்பாக கேட்டாள்.

“இப்போ என்னடி? சரி, வந்து உட்காரு!” என்றார் அவர்.

“இது எல்லாம் செல்லாது... என்ன ஒரு அதிகாரம்? பணிவா, குனிஞ்சு, வளைஞ்சு கேளுங்க!”

“என்னது?” என்றவர் மெல்ல சிரித்து, “சரி... வாங்க டாக்டர் அம்மா, இப்படி வந்து என் பக்கத்துல உட்காருங்கன்னு நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!” என்றார் கேலியாக.

“நக்கலு... ஏதோ என் அப்பாவுக்காக போனா போகுதுன்னு உட்கார்றேன்!”

பெண்ணின் அலட்டலில் புன்னகைத்துக் கொண்டவர், கணவருக்கு ஜாடை காட்டினார். அதை கவனித்து விட்டவள், இருவரையும் திரும்பித் திரும்பி பார்த்தாள்.

“இங்கே என்ன நடக்குது?”

“ம்... ஒன்னும் நடக்கலை. உன் அப்பா ஏதோ சொல்லனுமாம், அமைதியா குறுக்கே பேசாம கவனி!”

“என்னப்பா?”

“இன்னிக்கு அந்தப் பெரியவர் கோபால் நம்ம வீட்டுக்கு வந்து இருந்தார்டா!”

“என்ன? தாத்தாவா... அவர் ஏன் க்ளினிக் வராம இங்கே வந்தார்? ஆமா... அதுக்கு முன்னே அவருக்கு எப்படி நம்ம வீடு தெரியும்?”

“ஷ்... அப்பா... இப்போ தான்டி குறுக்கே பேச கூடாதுன்னு சொன்னேன்!” என்று தலையை தாங்கினார் பெற்றவர்.

“ப்ச்... நீங்க சும்மா இருங்க. நீங்க சொல்லுங்கப்பா!”

“அவரு எனக்கு போன் செஞ்சு கேட்டாருடா...”

“ஓ... ஆமா, என்கிட்ட தான் போன வாரம் நம்பர் வாங்கினார். இப்போ கால் பரவாயில்லையா... எப்படி இருக்கார்? என்ன விஷயமா நம்ம வீட்டுக்கு வந்தார்?”

தன் கணவர் வாயை திறக்கும் முன், “நீங்க இருங்க... நானே சொல்லிடறேன். அவரு பேரனுக்கு உன்னை கல்யாணம் செஞ்சு தரனும்னு பொண்ணு கேட்டு வந்தார்!” என பட்டென்று விஷயத்தை கூறினார் சாவித்திரி.

முதலில் சற்றே அலட்சியமாக, “ஓஹோ...” என்றவள் அடுத்து பரபரப்புடன் நிமிர்ந்து அமர்ந்து, “என்னது? என்ன சொன்னீங்க? அவர் பேரனுக்கு பொண்ணு கேட்டு வந்தாரா...” என படபடத்தாள்.

“ஆமா...” என்றார் அவர் அழுத்தமாக.

சற்றே புருவங்களை சுருக்கியவள், “அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” என்று தீவிரமாக எதையோ சிந்தித்தவாறு கேட்டாள்.

கணவனிடம் கண்களை உருட்டி விட்டு, “உன்னை கேட்டுட்டு பதில் சொல்றோம்னு சொல்லிட்டோம்!” என்றார் சாவித்திரி பதவிசாக.

பெருமையில் முகம் பூரித்து வழிய, “ம்... கரெக்டா தான் சொல்லி இருக்கீங்க!” என அலட்டலாக புன்னகைத்தவள், “ஓகே... இப்போ என்னோட பதில் வேணுமா, ஆனா... நான் கொஞ்சம் யோசிச்சு தான் சொல்வேன்!” என்றாள்.

“அதனால என்ன பரவாயில்லை... நல்லா யோசிச்சு முடிவெடு!”

தாயின் கிண்டலை கவனிக்க தவறியவள், “ஆமா... இதை மறந்துட்டோமே, எனக்கு சுகர் இருக்கறது பத்தி எல்லாம் அவர் கிட்ட தெளிவா பேசினீங்களா?” என வேகமாக விசாரித்தாள்.

“ம்... அவருக்கு தான் அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தெரியுமே!”

“இல்லைம்மா... அது வேற... இப்போ கல்யாணத்துக்கு கேட்கும் போது நம்ம பக்கம் இன்னும் தெளிவா பேசிடனும்!”

அவள் கையை பற்றிக் கொண்டவர், “அது எனக்கு தெரியாதா பாப்பா... தாத்தா கிட்ட எல்லாம் தெளிவா பேசிட்டேன். அதோட மாப்பிள்ளைக்கும் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்காம்!” என்று முறுவலித்தார் சாவித்திரி.

“யாருக்கு... நம்ம சுகர் டாக்டருக்கா...” என்று கண்களை விரித்தாள் பெண்.

“ஆமா... அதோட அவரு இன்னொரு விஷயமும் சொன்னாரு...” என்ற அன்னையின் வார்த்தைகளில் இவள் மனதில் ஆர்வம் கூடியது.

“என்ன சொன்னார்?”

“திருப்பதியில பழகினது எதுவும் அவர் மறக்கலையாம்...” என அவர் தெரிவித்த தகவலில், இவள் இதழ்களில் லேசான கூச்சப் புன்னகை பிறந்தது.

“அச்சோ... எனக்கு பயந்துட்டு அப்படி சொல்லிட்டாரா?”

“ஆமா... ஒரு மனுஷனை உன் பேச்சால எப்படி அரள வச்சு இருக்கே பாரு!”

“ப்ச்... போங்கம்மா!” என்று சிணுங்கிய பெண்ணின் முகம் மலர்ந்து இருந்த விதத்திலேயே, அவளுக்கும் இதில் பிடித்தம் தான் என்பதனை உணர்ந்து கொண்டனர் பெற்றோர்.

“நீ எப்போடா உன் பதிலை சொல்வே?”

“ம்... என்னம்மா?” என்று திடுக்கிட்டு விழித்தாள் அவள்.

“இல்ல... தாத்தாவுக்கு நம்ம முடிவை சொல்லனுமே...”

“ஓ... நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று பெற்றோரின் முகம் பார்த்தாள்.

“எங்களுக்கு பிடிச்சு இருக்கு, மாப்பிள்ளை நல்ல குணமா தான் தெரியறார். தாத்தாவை பத்தி சொல்லவே தேவையில்லை, உன் மேலே ரொம்ப பாசமா இருக்கார்!”

“ஆமா... ஆமா...” என சந்தோசமாக தலையை உருட்டியவள், “அப்போ ஓகே சொல்லிடலாமா?” என்று தயக்கத்துடன் அவர்களை கேட்டாள்.

“எங்களை ஏன் கேட்கறே? இதுல நீதான் ஸ்ட்ராங்கா நிக்கனும்!”

“ம்மா... நீங்க தானே என்னை பெத்தவங்க, அப்போ நீங்க தான் பொறுப்பா முடிவு எடுக்கனும்!”

தனக்குள் சிரித்துக் கொண்ட சாவித்திரி, “சரி... நாளைக்கு தாத்தாவுக்கு போன் பண்ணி எங்களுக்கும் இதுல விருப்பம், மேற்கொண்டு கல்யாண பேச்சை தொடங்கிடலாம்னு சொல்லிடறேன்!” என்றார் தன் பிடியில் இருந்த அவளின் கரத்தை அழுந்த பிடித்தபடி.

“ம்... ஓகே!” என்றவளுக்கு மனதில் வர்மனின் முகம் வந்து போனது.

“சரி... நீ போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ!” என்றதும், அதற்காகவே காத்து இருந்தது போல் எழுந்து தன்னறைக்கு விரைந்தாள் பெண்.

“ஹஹா... உனக்கு இருக்க திறமை யாருக்கும் வராது சாவி, அழகா அவள் போக்குல போய் சட்டுன்னு பதிலை வாங்கிட்டியே!” என்று நகைத்த கணவனிடம், மௌனமாக முறுவலித்தார் சாவித்திரி.

**********

“இந்தாங்க!” என்று தன்னிடம் சிற்றுண்டியை கொடுக்கும் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், நேராக அமர்ந்து அதை எடுத்துக் கொண்டான்.

தனக்கானதை கையில் வைத்து இருந்தபடி, மேசை அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் எதிரே அமர்ந்தாள் நதியா.

அதில் அவன் முகத்தில் ஒருவித திருப்தி தோன்ற, “என்ன? ரெண்டு வகையில எடுத்துட்டு வந்து இருக்கே!” என்று விசாரித்தான்.

“ம்... பொதுவுல நம்ம வீட்டுல இந்த மாதிரி சுண்டல், கொழுக்கட்டை வகைகள் தான் ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு அம்மா கொடுப்பாங்க. உங்களுக்கு எப்படி பழக்கம்னு தெரியலை, இன்னொன்னு விசேஷ வீடுன்னு கொஞ்சம் பக்கோடா வேற போட்டு இருக்காங்க போலிருக்கு!”

“ம்ஹும்...” என்றபடி சிறிது சுண்டலை எடுத்து வாயில் போட்டவன், அவளை மேல் இருந்து கீழ் வரை பார்வையால் அளந்தான்.

என்னவள், எனக்கானவள், என் மனைவி என்று தோன்றும் பொழுதே, இதயத்தில் ஒரு இதம் பரவியது. அவள் பார்வை தன்னிடம் இல்லாமல் தீவிரமாக பக்கோடாவில் இருந்த பூண்டை நீக்கி கொண்டு இருப்பதை கவனித்து புன்னகைத்துக் கொண்டான்.

“ஆமா... பூண்டு சாப்பிட மாட்டியா நீ?”

“ம்... சாப்பிடுவேன், ஆனா இந்த மாதிரி பொரிச்சது பிடிக்காது!” என்றவள், “உங்களுக்கு இங்கே ரொம்ப போரா இருக்கா?” என்று கேட்டாள்.

“நீ இப்படி பக்கத்துல இருந்து பேசிட்டு இருந்தா இருக்காது. எல்லோரும் பார்க்க வெளியே உட்கார்ந்து இருந்தது தான் கொஞ்சம் சங்கடமா தோணுச்சு!”

“ஆங்... அம்மா அது தான் என்னை இங்கே அனுப்பினாங்க!”

“அத்தை எப்பவுமே ரொம்ப ஸ்மார்ட் தான் போல...”

“ம்க்கும்... மெச்சிக்கோங்க!” என்று நொடித்தாள் பெண்.

“உனக்கு இத்தனை பார்த்துப் பார்த்து செய்யறவங்க கிட்டயே நீ எப்பவும் சண்டைக்கு நின்னுட்டு இருக்கே!”

“ஹான்... எல்லாத்தையும் செஞ்சிட்டு என்னை நல்லா திட்டவும் செய்வாங்களே. அப்படியே கரெக்டா எப்படி மெயின்டைன் பண்ணுவாங்க தெரியுமா? கொஞ்சற மாதிரி இருக்கும் போதே, தடாலடியா திட்டவும் ஆரம்பிச்சுடுவாங்க!” என்று மூக்கை சுருக்கினாள்.

“அம்மான்னா அப்படித்தான் இருப்பாங்களோ...”

அவன் குரலின் வித்தியாசத்தில் முகத்தை உற்று நோக்கியவள், அதில் தெரிந்த உணர்வற்ற தன்மையில் சுதாரித்து பேச்சை மாற்றினாள்.

“ஆமா... நீங்க எத்தனை நாள் லீவ் ப்ளான் பண்ணி இருக்கீங்க?”

“ம்...” என அவளிடம் திரும்பியவன், “நேத்து வரை ஹாஸ்பிடல் போயிட்டு வந்தேன். இன்னியில இருந்து ஒன் வீக், ரிசப்ஷன் வரை ப்ளான் பண்ணி இருக்கேன். எதுவும் எமர்ஜென்ஸின்னா மட்டும் போயிட்டு வர மாதிரி இருக்கும், மத்தபடி போன்லயே மேனேஜ் பண்ணிக்கலாம். உன்னோட ப்ளான் எப்படி?” என்று மனைவியின் திட்டத்தை விசாரித்தான்.

“ஹ்ஹ... நாங்க எல்லாம் ஓனர், எதுனாலும் என் இஷ்டம் தான். ஆனா நீங்க கிளம்பும் போது, நானும் போகலாம்னு தான் இருக்கேன். இல்ல... வீட்டுல ஏதாவது வொர்க் இருக்குமா?”

ஓனர் என்ற அவளின் அலட்டலில் சிரித்து இருந்தவன், “அதெல்லாம் இல்லை... நீ வந்து பார்த்து உனக்கு எதுவும் ரெடி பண்ணனும்னா மட்டும் ஆல்டர் பண்ணிக்கலாம்!” என்றான்.

“ம்... பார்த்துக்கலாம். சரி, நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்!”

அறையில் இருந்து வெளியேறுபவளை பார்த்து இருந்தவனுக்கு, அப்பொழுது தான் அவள் கோவிலில் பேசியது நினைவு வர, உதட்டோரம் பூத்த குறுநகையுடன் அவளின் வரவிற்காக ஆவலுடன் காத்து இருந்தான்.

“ப்ச்... குட்டிம்மா எழுந்து இருந்தா கூட்டிட்டு வரலாம்னு பார்த்தேன், அது இன்னும் சிணுங்கிட்டு உருண்டுட்டு இருக்கு!”

சின்னவளை நினைத்ததும் முகம் கனிந்து விட, எதிரில் அமர சென்ற மனைவியின் கரம்பற்றி இழுத்து அருகில் அமர வைத்தான்.

“இப்படி பக்கத்துல உட்காரு... ஏன் அங்கே போய் உட்கார்றே?”

“ம்...” என விழித்தவள், “இல்ல... முகம் பார்த்து பேச அது வசதியா இருக்குமேன்னு பார்த்தேன்!” என்றாள் சமாளிப்பாக.

“நீ எங்கே என் முகத்தை பார்த்தே? பக்கோடால இருந்த பூண்டை எடுக்கவும், சுண்டல்ல இருந்த மிளகாயை பொறுக்கவும் தானே இருந்தே!”

அவன் கேலியில் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவள், “அது... அப்படியே பழகிடுச்சு!” என்று பற்களை காட்டினாள்.

மின்னும் விழிகளுடன் அதை ரசித்தவன், “சரி... டீயை குடிச்சு முடி!” என்றதும் தலை அசைத்து, சொன்னதை செய்தாள்.

அவள் கையில் இருந்த டம்ளரை வாங்கி மேசை மீது வைத்தவன், அறை வாசல் பக்கம் பார்வையை செலுத்த, அவளும் அவனை தொடர்ந்தாள்.

“அங்கே என்ன பார்க்கறீங்க? யாரும் வந்தாங்களா...”

“இப்போதைக்கு யாரும் வர மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன், நீ சட்டுன்னு காலையில கொடுக்க நினைச்சதை இப்போ கொடுத்துடு!”

அவனுடைய தீவிரமான பேச்சில், “ஹான்...” என இழுத்தபடி திரும்பியவள், “என்ன கொடுக்கனும்?” என்று புரியாமல் கேட்டாள்.

“என்ன இப்படி கேட்கறே? நீதானே எனக்கு முத்தம் தர்றனும்னு சொன்னே...”

மூச்சுக்காற்று விக்கித்து நின்று விட, அவனை மலங்க மலங்க பார்த்தவள், கைகளை பிசைய ஆரம்பித்தாள்.

“ம்... சீக்கிரம், யாராவது வந்துட போறாங்க!”

”அது... டாக்டர், நான் சும்மா அப்போ விளையாட்டுக்கு டீஸ் பண்ணேன். நீங்க உண்மைன்னு நம்பிட்டீங்களா?” என்று சிரித்து சமாளிக்க முயன்றாள்.

“நீ இப்போ தான் பொய் சொல்றே, அப்போ உன் கண்ணுல ஒரு ரசனையோட தான் சொன்னே!”

உண்மை தான், ஏதோ மன வருத்தத்தில் சோர்ந்து தெரிந்தவனை அப்பொழுது ஆறுதலாக அணைத்து முத்தமிட தோன்றியது தான். ஆனால் இப்பொழுதோ இதயம் தடதடத்தது.

ஒரு வேகத்தில் தன்னிடம் சொல்லி விட்டு மாட்டிக் கொண்டு விழிப்பவளை கண்டு தனக்குள் நகைத்துக் கொண்டவன், “ஓய்... என்ன? அப்படியே உட்கார்ந்து இருக்கே, சீக்கிரம்!” என்று விரட்டினான்.

“இங்கே பாருங்க... நீங்க நல்லா என்னை டீஸ் பண்றீங்கன்னு தெரியுது, இதெல்லாம் வேணாம்!” என அவன் முன்னே தன் சுட்டு விரலை நீட்டிப் பேசினாள்.

“என்னை பார்த்தா அப்படியா தெரியுது... எவ்வளவு ஆசையா நம்ம பொண்டாட்டியோட ஃபர்ஸ்ட் கிஸ் எப்படி இருக்கும்னு ரொம்ப எக்ஸ்பெக்டேஷனோட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!”

விழிகளை இதற்கும், அதற்கும் சிறிது உருட்டியவள், “ப்ளீஸ்... ப்ளீஸ்... நாம ஒரு சமாதானத்துக்கு வந்துடலாமே...” என்றாள் பாவமாக.

கண்களை சுருக்கி சற்றே யோசித்தவன், “ஓகே!” என்று ஏற்றுக் கொள்ள, இவள் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

“தேங்க் யூ... தேங்க் யூ... என்ன பண்ணனும்?”

“நீ ஒன்னும் பண்ண வேணாம், நான் பண்ணிக்கறேன்!” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அருகில் இழுத்து, பெண்ணின் கன்னத்தில் தனது முதல் முத்திரையை அழுந்த பதித்து இருந்தான்.

அதில் அதிர்ந்து போனவள், “டாக்டர்...” என்று தடுமாற, அவளின் மறு கன்னத்திலும் உதடுகளை புதைத்து மீட்டான் அவன்.

உடலெங்கும் ஒருவித குளிருடன் கூடிய சிலிர்ப்பு ஊடுருவ, “டாக்டர்...” என்ற முனகலே மீண்டும் பெண்ணிடம் பிறந்தது.

அவனோ அவளை தோளோடு அணைத்து தன் மீது சாய்த்து, “மிஸஸ்.நதிவர்மன்... சீக்கிரமா இந்த டாக்டரை விட்டு வெளியில வர பாருங்க. இல்லைன்னா... நான் திரும்ப திரும்ப உங்க ஹஸ்பண்ட் அப்படிங்கிறதை நினைவுப்படுத்துற மாதிரி ஆகிடும்!” என்றான் அமர்த்தலாக.

அவன் தோளில் கிடந்தபடியே புரியாமல் விழி உயர்த்திப் பார்த்தவளிடம், “இப்போ ஞாபகப்படுத்துன மாதிரியே...” என்று கண் சிமிட்ட, இவள் முகம் சிவந்தது.

**********

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த வழியில், தனக்கு இருபுறமும் அமர்ந்து இருந்த ஆண்களை ஓரவிழியால் பார்வை இட்டாள் நதியா.

இருவருமே ஏதோ மலையையே புரட்டிப் போட்டது போல் அத்தனை அயர்வாக தெரிந்தனர். மக்கள் கூட்டம் ஓரளவு குறைய துவங்கியதும், தாத்தாவை எங்கேயும் தனியாக விடாமல் தன்னுடனே வைத்துக் கொண்டான் அருள்மொழி.

அபார்ட்மெண்ட் வளாகத்தில் கார் சென்று நிற்க, “நதி... நீ தாத்தாவை அழைச்சிட்டு வீட்டுக்குப் போ, ரஞ்சித் காரை பார்க் பண்ணிட்டு வந்ததும் சாவி வாங்கிட்டு வர்றேன்!” என்றான் அவன் மனைவியிடம்.

அவள் தலை அசைத்து மெதுவாக பெரியவரின் கைப்பிடித்து நடக்க, தன் பின்னங்கழுத்தை அழுந்த தடவியபடி அண்ணார்ந்து வானத்தை நோக்கியவன், கண்களை அழுந்த மூடி ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தான்.

அதைக் கவனித்தபடி மின் தூக்கியின் உள்ளே நுழைந்தவள், பெரியவரின் முகம் பார்த்தாள். வயதின் சுருக்கங்களை மீறி, ஏதோ தாள முடியாத துக்கத்தில் அவர் மூழ்கி இருப்பது அப்பட்டமாய் தெரிந்தது.

வீட்டை திறந்து அவரை மெதுவாக நடத்திச் சென்று சோபாவில் அமர வைத்தவள், “ஒரு நிமிஷம் தாத்தா... இதோ வந்துடறேன்!” என்று சமையல் அறைக்கு விரைந்தாள்.

அதைக் கூட சரியாக உணர முடியாது அவர் ஏதோ போல அமர்ந்து இருக்க, பார்த்து இருந்தவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கிளம்பும் நேரம் தன் வீட்டினரிடம் ரகசியமாக இருவரும் சற்று மன வருத்தத்தில் இருப்பதை நாசூக்காக தெரியப்படுத்தி, இப்பொழுதைக்கு அவர்களை வேறு எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி அழைத்து வந்து விட்டாள்.

எலுமிச்சை சாறில் சிறிது உப்பும், சர்க்கரையும் சமபங்கில் கலந்து எடுத்துக் கொண்டு அவள் முன்னறைக்கு வரவும், அருளும் சரியாக வீட்டிற்குள் நுழைந்தான்.

“ம்... நீங்களும் வந்து இப்படி உட்கார்ந்து இதைக் கொஞ்சம் குடிங்க, ரெண்டு பேரும் சரியாவே சாப்பிடலை!” என்றவாறு கோபாலின் அருகில் அமர்ந்தவள், அவர் தோளை பற்றி திருப்பினாள்.

“தாத்தா... இந்த ஜியூஸை கொஞ்சம் குடிங்க!”

அவரோ அலுப்புடன், “ப்ச்... வேணாம்மா!” என்றார் விட்டேற்றியாக.

“என்ன வேணாம்... சுத்தமா எனர்ஜியே இல்லாம ரொம்ப ஓய்ஞ்சு போய் தெரியறீங்க, குடிங்க!” என்று அதட்டினாள்.

“வர்மனும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டான், அவனுக்கும் கொடும்மா!”

“அதெல்லாம் உங்க பேரனுக்கும் கொடுத்தாச்சு, நீங்க கவலைப்பட வேணாம். என்னை கவனிச்சிக்கறதுக்கு தான் இந்த வீட்டுல ஆள் இல்லை!” என்று போலியாக நொடித்துக் கொண்டாள்.

அதுவரை இருந்த இறுக்கம் சிறிது தளர, “அதுக்கு என்ன... இந்த வீட்டு மகாராணியை தனிப்பட்ட முறையில கவனிச்சிட்டா போச்சு!” என்ற நாயகன் சட்டென்று எழுந்து அவள் அருகில் அமர்ந்து, தன் கையில் இருந்த பழச்சாறை அவளின் வாயில் புகட்ட முயன்றான்.

“அச்சோ அமர்... என்ன பண்றீங்க?” என்று அவள் வாயை இறுக்கப் பூட்டிக் கொள்ள,

“வர்மா... தாத்தா வேணா எழுந்து என் ரூமுக்கு போயிடவாடா?” என்று கேலியாக கேட்டார் கோபால்.

“ஆமா தாத்தா... நீங்க கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுங்க, நான் என் பொண்டாட்டியை சிறப்பா கவனிச்சிட்டு வர்றேன்!” என்று பெண்ணை தன் கை வளைவுக்குள் இழுத்தான்.

பெரியவரின் முன்னால் அவளுக்கு கூச்சம் நெட்டித் தள்ள, “டாக்டர்...” என்று அதட்டியபடி அவனை விலக்கி தள்ளினாள்.

முகத்திலும், விழிகளிலும் பளிச்சென்ற புன்னகையுடன் கூடிய தனி ஒளி தோன்றிட, முன்பு இருந்த தளர் நடை மாறி சிறிதே தெம்புடன் தன் அறைக்கு நடந்தார் கோபால்.

“நீங்க என்ன இப்படி தாத்தா முன்னாடி...” என படபடத்தவளும், அவன் பார்வையை தொடர்ந்து அவரை வேடிக்கை பார்த்து இருந்தாள்.

அறைக்குள் நுழைந்தவர் வெளியே இவர்களை எட்டிப் பார்த்து, “நான் உள்ளே கதவை லாக் பண்ணிக்கறேன்!” என்று வேறு பெருஞ்சிரிப்புடன் அறிவித்து தாழிட, இவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.

“ஹைய்யோ... என் மானமே போச்சு!” என்று சிணுங்கியபடி அவன் தோளில் முகம் புதைத்தாள் பெண்.

அதை அனுமதிக்காதவன் அவளை நிமிர்த்தி, முகம் எங்கும் முத்த மழை பொழிந்து பெண்ணை கொண்டாடி தீர்த்தான்.

“ஸ்வீட்டி, பேபி, நதி பொண்ணே, சர்க்கரை கட்டி, என் தேவதைடி நீ...” என்றவனின் பிதற்றலுக்கு சமமாக, “டாக்டர், அமர்...” என மாறி மாறி குளறியபடி அவனின் தொடர்ந்த முத்தத்தில் அவளும் கிடந்து கிறங்கினாள்.

இறுதியாக அவளின் இதழ்களில் ஆழமாக சில நிமிடங்களை மூழ்கி களித்து விட்டே அவன் நிறைவுடன் விலக, லேசான மூச்சிரைப்புடன் அவன் மார்பில் சரிந்தாள் அவள்.

அதில் தூண்டப்பட்டு பெண்ணின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கும்படி ஒரு முறை இறுக்கி அணைத்து, “ஐ லவ் யூ டி பட்டு!” என்று உச்சியில் அழுந்த இதழ் பதித்து விடுவித்தான் அவன்.

“அம்மாடி...” என மூச்சை இழுத்து விட்டவள், “டாக்டர்... என்ன பண்றீங்க நீங்க? என்னால சுத்தமா முடியலை!” என்று சோர்வுடன் முனகினாள்.

அவள் நெற்றியோரம் கலைந்து இருந்த கூந்தலை ஒதுக்கி மென்மையாக முத்தமிட்டு, “என்னை அவ்வளவு மயக்குறேடி... கடவுள் எனக்கு கொடுத்த ஆகச்சிறந்த வரம்டி செல்லம்மா நீ, உன்னை எத்தனை கொண்டாடி தீர்த்தாலும் பத்தாது!” என்று மீண்டும் அவள் முகத்தோடு இழைந்தபடி உருகினான்.

“என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க?” என்று அவன் கன்னம் வருடினாள்.

“ம்... சில உணர்வுகளுக்கு வார்த்தையில விளக்கம் கொடுக்க முடியாதுடா பட்டு, அதை அப்படியே உளப்பூர்வமா அனுபவிக்கனும்!”

“ஹும்... உங்களுக்கு புரிஞ்சதால நீங்க சந்தோசமா அனுபவிப்பீங்க, ஆனா எனக்கு மண்டை காயுது!” என்று முறைத்தாள்.

“ஹஹா...” என வாய் விட்டு நகைத்தவன், “வீட்டுக்கு வந்ததும் தாத்தாவுக்கு ஊசி போட்டு தான் கொஞ்சம் அமைதியா தூங்க வைக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். பட்... நீ அப்படியே எல்லாத்தையும் தலைகீழா மாத்தி அவரை சந்தோஷமா ரூமுக்கு அனுப்பி வச்சிட்டே!” என்று அவள் கீழுதட்டை லேசாக பற்களால் கடித்து இழுத்தான்.

“ஷ்... அப்பா... சரியான அசைவ டாக்டர்டா நீ!” என்று செல்லமாக கடிந்தபடி, அவன் பிடரி கேசத்தை அழுந்த பற்றினாள் அவள்.

“ம்ஹும்...” என்றவன், “ஹேய்... என்ன சொன்னே நீ? ‘டா’வா... எங்கே? மறுபடியும் சொல்லு!” என்று நேயர் விருப்பம் கேட்டு, அவள் உதட்டில் திரும்பவும் ஒரு கொஞ்சல் கவிதை எழுதினான் மருத்துவன்.

“கடவுளே... இனிமே என் வாய்க்கு ஒரு ஹெல்மெட் போட்டுட்டு தான் நான் சுத்தனும் போலிருக்கு, இப்படி படுத்துறானே...”

இருவருக்குமான நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, இடையே இருந்த தடைகள் அனைத்தும் தகர்ந்து, உரிமை மீறல் எல்லை மீறிச் சென்று கொண்டு இருந்தது.

“வாய்க்கு ஹெல்மெட்டா... என்னடி இது புதுசா இருக்கு? அப்படி எவனாவது கண்டுபிடிச்சு அதை உன் பக்கம் வித்துட்டு வந்தான், அவன் மண்டையை பொளந்துடுவேன்!”

வெடுக்கென்று நகர்ந்து அமர்ந்து அவனை விழிகள் அகற்றி பார்த்தவள், “ஹேய்... நீங்க என் சுகர் டாக்டர் தானே, வேற யாரும் இல்லையே. ஒருவேளை... ஏதாவது காத்து, கருப்பு அடிச்சுடுச்சா? இத்தனை வியர்டா, வயலன்டா பிஹேவ் பண்றீங்க!” என்று சந்தேகமாக கேட்டாள்.

அதில் மனம் விட்டு உல்லாசமாக சிரித்தவன், “உன் சுகர் டாக்டர் தான், உன் டாக்டர் தான், உன் அமர் தான்!” என அடுக்கடுக்காக கூறி அவள் தோளில் கை போட்டு அருகில் இழுத்துக் கொள்ள, இம்முறை பெண்ணும் மலர்ந்து அவன் கன்னத்தில் இதழ்களை அழுந்த பதித்தாள்.

“என் சர்க்கரை டாக்டர்...” என கொஞ்சி, “ஐ லவ் யூ!” என்று அவன் இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டாள்.

பளீரென்று மலர்ச்சியை பூசிக் கொண்டவன் அப்பொழுது தான் ஓய்ந்து போனவனாக, “தேங்க்ஸ்டி பட்டு!” என ஆத்மார்த்தமாக கூறி, அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.

“சரி...” என்றவாறு அவன் நெற்றியில் புரண்ட கேசத்தை மிருதுவாக கலைத்தவள், “எதுக்கு தாத்தாவுக்கு தூக்க ஊசி எல்லாம் போட்டு பழக்குறீங்க நீங்க? ரொம்பவே தப்பான பழக்கம் இல்ல அது...” என சட்டென்று அவன் காதை பிடித்து திருகினாள்.

“ஷ்... ஆ... ஏய்...” என அவள் கையை விலக்கியவன், “அது ரெகுலர் ஹேபிட் இல்லைடா. இதுவரை ஒரே ஒரு முறை உங்க வீட்டுக்கு அவர் வந்துட்டு வந்த பின்னாடி தான் போட்டேன். அன்னிக்கு எல்லாம் ரொம்ப மன உளைச்சல்ல இருந்தார் அவர், எவ்வளவு பேசி சமாதானப் படுத்தியும் என்னால சமாளிக்கவே முடியலை. என்ன பேசினாலும் திரும்பத் திரும்ப அழ ஆரம்பிச்சவரை அமைதியா தூங்க வைக்க ட்ரை பண்ணலாம்னா, கொஞ்சம் கூட கோ-ஆப்ரெட் பண்ண மாட்டேன்னுட்டார்.

என் மனசுல அமைதி இல்லை, படுத்தா தூங்க முடியாதுன்னு புலம்புறார். அடுத்து தூக்க ஊசி போடுன்னு அவர் சொல்லும் போது, எனக்கு அத்தனை ஷாக். ஆனாலும் அவரை பேசி கன்வின்ஸ் பண்ணலாம்னு பார்த்தேன், அடுத்து ஹை டிப்ரஸனுக்கு அவரு போக ஆரம்பிக்கவும் தான் வேற வழி இல்லாம அந்த ஊசியை போட்டேன்!”

அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள், “அதெல்லாம் இருக்கட்டும்... எனக்கு ஒரு சந்தேகம்...” என்று மெதுவாக இழுத்தாள்.

“சொல்லுடி பட்டு!” என்று அவள் நெற்றியில் முட்டினான்.

அருகில் தெரிந்த அவன் கண்களை ஆழமாக ஊடுருவியபடி, “எங்க வீட்டுக்கு வந்த தாத்தா ஏன் தூக்க ஊசி போட்டுக்குற அளவுக்கு அவ்வளவு அப்செட் ஆனார்?” என்று அமைதியாக கேள்வி எழுப்பினாள்.

மருத்துவனின் முகம் அப்படியே மாறிவிட, வேகமாக அவளை விட்டு விலகி அமர்ந்தான்.

**********

கோபாலின் பேச்சில் சித்த மருத்துவர் வாய் மூடி சிரிக்க, மருத்துவனோ தன் தாத்தாவை தீயாய் முறைத்தான்.

“இல்லைன்னா மட்டும் அப்படியே இளமை ஊஞ்சலாடி இருந்து இருக்கும், எண்பத்து நாலு வயசுல கிழத்துக்கு பேச்சை பாரு!”

“ஹலோ... என்ன தாத்தாவை கிழம்னு சொல்றீங்க?” என்று சண்டைக்கு வந்தாள் பேத்தி.

“மிஸஸ்.நதிவர்மன்... நீங்களே அவரை தாத்தான்னு தான் சொல்றீங்க, அதை நான் கொஞ்சம் பட்டவர்த்தனமா சொல்றேன் அவ்வளவு தான்!” என்று தோள்களை குலுக்கினான்.

“ஆமாடா... நான் கிழம் தான். என் நதியா பொண்ணு மட்டும் ஒரு பத்து வருஷம் முன்னாடியே நம்ம வீட்டுக்கு வந்து இருந்தான்னா, இந்நேரம் பத்து வயசு குறைஞ்சு நான் துள்ளிட்டு நடந்து இருப்பேன்!”

“ம்... அப்போ அவளை பதினேழு வயசுலயே நான் கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்து இருக்கனும்!”

“எக்ஸ்க்யூஸ் மீ... ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க? நம்ம இண்டியன் ஆக்ட்படி அது சைல்ட் மேரேஜ்!” என்று முறைத்தாள் நாயகி.

“இல்லைன்னா... கல்யாணம் பண்ணி இருந்து இருப்பியா?”

கணவன் கூர் பார்வையோடு அழுத்தமாக கேட்க, “வாய்ப்பில்லை ராஜா... உங்க மாமியார் அப்படி எல்லாம் சுலபமா என்னை தூக்கி உங்களுக்கு கொடுத்து இருக்க மாட்டாங்க. அவங்களே ஆசை தீர கூட வச்சு இருந்து நல்லா திருப்தியா சண்டை போட்டு முடிச்சப்புறம் தான் கொடுக்கலாமா, வேணாமா அப்படின்னே யோசிச்சு இருப்பாங்க!” என்று கண் சிமிட்டினாள்.

வாய் விட்டு நகைத்தவன், “பேச்சை பாரு... அவங்க பாட்டுக்கு பாவம் சிவனேன்னு தான் வீட்டுல நிம்மதியா இருப்பாங்க. நீ இங்கே இருந்துட்டு அவங்களை சீண்டிட்டு இருக்கே!” என்று அவள் காதை திருகினான்.

“ப்ச்... எங்களை டைவர்ட் பண்ணாதீங்க!” என்று அவன் கையை விலக்கியவள், “தாத்தா... வாங்க, நாம விளையாட்டை ஆரம்பிக்கலாம்!” என்று ஆவலாக தொடங்கினாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் நம் நீரிழிவு நோய் நிபுணன் தன் பின்னங்கழுத்தை அழுந்த தடவியபடி, சுற்றி இருந்த கூட்டத்தின் நடுவே சங்கடத்தில் நெளிந்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

ஆம்... நதியா மற்றும் தாத்தாவின் கலாட்டா சிரிப்பு சத்தத்தில் ஆங்காங்கே உடற்பயிற்சியிலும், விளையாட்டிலும், பேச்சுக்களிலும் ஈடுபட்டு இருந்த அவ்வளாகத்தின் குடியிருப்பு வாசிகள் சிலர், வயது வித்தியாசம் இன்றி வந்து அவர்களுடன் ஆர்வமாக இணைந்து கொண்டனர்.

சற்று நேரம் பேச்சுக்களும், கலாட்டாக்களுமாக சென்ற இடத்தில் மத்திம வயது உடைய பெண்மணி ஒருத்தர் தனது ஐயத்தை எழுப்பினார்.

“ஏன்மா... நம்மோட தினசரி வாழ்க்கைக்கு தேவையான நிறைய டிப்ஸ் நீங்க சொல்வீங்கன்னு தாத்தா சொன்னாரே, எனக்கு முதல்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்க. வீட்டுல டீனேஜ் பிள்ளைங்களை வச்சுக்கிட்டு ஒரே போராட்டமா இருக்கு!” என்று தலையை பிடித்துக் கொண்டார்.

அவ்வளவு தான் கணவனின் இதயம் வெடித்து விடும் நிலைமைக்கு வந்து விட்டது, ‘ஐயோ... இது இவளுக்கு ரொம்பவே பிடிச்ச டாபிக் ஆச்சே. வாயை திறந்தா மூடவே மாட்டாளே, பக்கம் பக்கமா பேசுவாளே!’ என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான்.

“நீங்க கவலையே படாதீங்கம்மா... உங்க பிரச்சனை என்னென்னு மட்டும் சொல்லுங்க, எங்க பிள்ளை தீர்த்து வைப்பா!” என்று உற்சாகமாக அறிவித்தார் கோபால்.

பிறர் அறியாது தன் தாத்தாவை கொலை வெறியோடு முறைத்து இருந்தான் நாயகன்.

“இல்லை... இந்த வேளை தவறாம நேரத்துக்கு சாப்பிடறது, அப்புறம் பசி எடுத்து மட்டும் சாப்பிடறது... இதுல எது சரி, எது தப்பு? என் பிள்ளைங்க ஆளுக்கொரு முறையை ஃபாலோ பண்ணிட்டு என் உயிரை எடுக்குதுங்க. சரியான வேளைக்கு அவங்க சாப்பிடலைன்னா எனக்கு தான் மனசு கிடந்து அடிச்சுக்குது!” என குழப்பத்துடன் கேட்டார் அப்பெண்மணி.

மெல்ல சிரித்த நாயகி, “இதுல நீங்க குழம்பவே தேவை இல்லை, ரெண்டுமே சரியான விஷயம் தான். அப்படித்தான் நாம காலம் காலமா முறையா சாப்பிட்டுட்டு வந்தோம்!” என்றாள்.

“என்ன? என்ன டாக்டர் சொல்றீங்க நீங்க? வேளா வேளைக்கும் சாப்பிடனும், பசி எடுத்தும் சாப்பிடனுமா... ரெண்டுமே எப்பவும் ஒத்து வராதே. நேர நேரத்துக்கு சாப்பிடற அளவுக்கு பசியே எடுக்காதே, அப்புறம் எங்கிருந்து சாப்பிட...” என்று அலுப்போடு குறுக்கிட்டான் ஒரு இளைஞன்.

“அப்போ... நீங்க சாப்பிடற முறையும் தப்பு, உணவும் தப்பு, உங்களோட ஜீரண மண்டலமும் சரியா வேலை செய்யலைன்னு அர்த்தம்!”

அவளை அதிர்ச்சியோடு பார்த்தவன், “என்ன நீங்க... எல்லாத்தையும் தப்பு சொல்றீங்க!” என்று ஆட்சேபித்தான்.

“சரி சொல்லுங்க... தினமும் எப்போ, என்ன சாப்பிடுவீங்க நீங்க?”

“ம்... நான் செகன்ட் ஷிப்ட்ல வொர்க் பண்றேன். ஸோ, எப்பவும் காலையில பத்தரையில இருந்து பதினோரு மணி போல சாப்பிடுவேன். உடனே மதியம் சாப்பிட பசி எடுக்காது, அதனால அதை ஸ்கிப் பண்ணிட்டு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் எடுத்துப்பேன். அப்புறம் நைட் வொர்க் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஒரு பதினோரு மணி போல டின்னர் சாப்பிட்டுட்டு படுத்துடுவேன்!”

“ஓகே... எல்லாமே தலைகீழா பண்ணிட்டு இருக்கீங்க நீங்க!” என குறுக்காக தலை அசைத்தவள், “எப்பவுமே நாம ரெகுலரா ஃபுட் எடுத்துக்க வேண்டிய டைமுன்னு பார்த்தா... காலையில ஏழு டூ ஒன்பது, மதியம் ஒன்னு டூ மூனு, அப்புறம் நைட் ஏழு மணிக்கு உள்ள முடிச்சுக்கனும்...” என்றவளை வேகமாக இடைமறித்தான் அவன்.

“இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு, ஆனா இன்னிக்கு இருக்குற மெஷின் லைஃப்ல அதை ஃபாலோ பண்றது தான் கஷ்டம்!” என்றான் சலிப்புடன்.

“ஓஹோ... உங்களுக்கு ரஃப்பா ஒரு ஃபுட் டைம் சார்ட் போட்டுத் தர்றேன் நான், கொஞ்சம் சிரமமா இருந்தாலும் பல்லைக் கடிச்சிட்டு ஒரு மாசத்துக்கு ஃபாலோ பண்ணி பாருங்க. அப்போ வேளா வேளைக்கு பசி எடுக்குதா, இல்லையான்னு என்கிட்ட வந்து சொல்ல வேணாம், நீங்களே அப்ஸர்வ் பண்ணி பாருங்க.

ஆனா, உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இருந்து கண்டிப்பா ஃபாலோ பண்ணுவீங்கன்னு உறுதியா சொன்னா மட்டும் தான் நான் கைட் பண்ணுவேன், இல்லைன்னா சொல்ல மாட்டேன். சும்மா டைம் பாஸுக்கு நான் என் எனர்ஜியை வேஸ்ட் பண்ண முடியாது!” என அழுத்தமாக கூறினாள்.

மனைவியையே பார்த்து இருந்தவனின் முகத்தில் அந்த நிமிடம் மெல்லிய முறுவல் ஒன்று தோன்றியது. இலவச ஆலோசனை தானே என கேட்பவர்கள் அலட்சியப்படுத்தி விட கூடாது என்பதில் அவள் முன் எச்சரிக்கையாக செயல்படுவதை எண்ணி பெருமையாக இருந்தது.

“இல்லயில்ல... நீங்க சொல்லுங்க. எனக்குமே கொஞ்சம் என் லைஃப் ஸ்டைல் நினைச்சு பயமா தான் இருக்கு. ஒரு ஹெல்த்தியான மூவுக்கு நான் தயாராக விரும்பறேன்!”

“குட்... முதல்ல உங்க தூக்கத்துல இருந்து ப்ளானை நான் சொல்றேன், இன்னிக்கு உங்களுக்கு வீக்லி ஹால்ப் இல்லையா?” என்று விசாரித்தாள்.

“ம்... ஆமா!” என்றவன் ஆமோதிக்க,

“நைட் டின்னர் அரௌன்ட் செவன் டூ செவன் தர்ட்டிக்கு உள்ளே முடிச்சுடுங்க. அதுக்கு அப்புறம் உங்களுக்கான அதிகபட்ச டைம் பத்து, பத்தரை தான் தூங்கிடுங்க!”

ஏதோ குருவிடம் தீட்சை வாங்க அமர்ந்து இருக்கும் சிஷ்யன் போல மிகவும் தீவிரமான முகத்துடன் அவள் முன்னே பவ்யமாக இருப்பவனை பார்த்து மருத்துவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“நெக்ஸ்ட் டே மார்னிங் நீங்க பொறுமையா ஒரு ஆறரை மணிக்கு எழுந்தா கூட போதும்...”

“என்னது ஆறரையா?” என்றவன் திகைக்க, சுற்றி இருந்தோர் நகைத்தனர்.

“ஹலோ... உங்களை என்ன நான் நாலு மணிக்கா எழுந்திரிக்க சொன்னேன், இவ்வளவு ஷாக் ஆகறீங்க. ஆக்சுவலா நம்ம ஆர்கன் க்ளாக் பிரகாரம் நாம அந்த டைமுக்கு தான் சரியா எழனும்!”

“வேணாம்... வேணாம், நீங்க என் க்ளாக்குக்கே கொஞ்சம் பார்த்து டைம் அட்ஜஸ்ட் பண்ணி சொல்லுங்க!”

அவன் பதற்றம் கண்டு நதியா நமட்டை கடித்து சிரிக்க, “அது என்னம்மா ஆர்கன் க்ளாக்கு?” என கூட்டத்தில் ஒருவர் சந்தேகம் கேட்டார்.

“அது ஒன்னும் இல்லை அங்கிள்... நம்ம உடம்புல இருக்குற உறுப்புகள் ஒவ்வொன்னும் இந்தந்த டைம்ல சிறப்பா செயல்படும்னு இயற்கையிலும், மருத்துவத்திலும் சில விதிமுறைகள் இருக்கு. அதுபடி நாம சரியா செயல்பட்டோம்னா நம்ம ஆரோக்கியம் சிறப்பா இருக்கும்.

இப்போ உதாரணத்துக்கு விடியற்காலையில மூனுல இருந்து அஞ்சு மணி வரை நுரையீரல் நேரம். அப்போ எழுந்து நாம வாக்கிங், மூச்சுப்பயிற்சி மாதிரி விஷயங்கள் செய்யறது ரொம்ப நல்லது. அடுத்து பெருங்குடல் நேரம், அதோட வேலை என்ன? நம்ம உடல் கழிவுகளை வெளியேத்தறது. அது அஞ்சு மணியில இருந்து ஏழு மணிக்கு உள்ள முடிச்சிடனும்...”

“அட கடவுளே... இதுக்கு எல்லாம் கூடவா நேரம் இருக்கு?” என்று கூச்சத்துடன் கேட்டார் ஒரு பெண்மணி.

“ஹஹா... ஆமா ஆன்ட்டி. அந்த காலத்துல வீட்டுக்கு வீடு டாய்லெட் இல்லாம பொதுவெளியில கழிக்கனுமே அப்படின்னே எல்லாம் சரியா விடியற் கருக்கல்ல பண்ணிட்டு இருந்தாங்க. இன்னிக்கு நாகரீகம்கிற பேர்ல அதுவும் சேர்ந்து மாறிப் போச்சு. அவ்வளவு ஏன்? பேதி மாத்திரையே காலையில நேரமா தானே எடுத்துக்க சொல்வாங்க!”

“ஆங்... ஆமா, ஆமா. நாட்டு மருந்து கடையில வாங்கும் போதே சொல்லித்தான் கொடுப்பாங்க!” என்றார் கோபால் வேகமாக.

“ஓகே... அடுத்து ஸ்டொமக், வயிறுக்கான நேரம் ஏழு டூ ஒன்பது. நம்ம குடலை எல்லாம் சுத்தம் செஞ்சிட்டதால நம்மோட செரிமான மண்டலம் புத்துணர்ச்சியா தன்னோட வேலையை செய்ய தயாரா இருக்கும். அந்த நேரத்துல நாம சாப்பிடற உணவு நல்ல ஹெவியா இருந்தாலும் சரியா ஜீரணமாகி, அடுத்த மூனு மணி நேரத்துல நிச்சயமா பசி எடுக்கும்.

சரி, இதோட இதை நிறுத்திக்குவோம். பாவம்... நம்ம செகன்ட் ஷிப்ட் ஸார் வேற அவரோட க்ளாக் டைமுக்காக ரொம்ப நேரமா காத்து இருக்கார், அவரு பொறுமையை நாம சோதிக்க வேணாம். இதைப் பத்தி இன்னும் தெளிவா தெரிஞ்சுக்கனும்னா இன்னொரு நாள் ஒரு ஸ்பெஷல் மீட் போடுவோம், இல்லையா... யூடியூப் பார்த்து தெரிஞ்சிக்கோங்க. அதுல தான் இப்போ எல்லாம் தெளிவா சொல்றாங்களே!”

அந்த செகன்ட் ஷிப்ட்காரன், “டாக்டர்... என்னோட பேரு சரண்!” என்றான் அவசரமாக.

“ஓ... கிளாட் டு மீட் யூ மிஸ்டர்.சரண்!” என்று புன்னகையுடன் அவன் கைப்பற்றி குலுக்கினாள் அவள்.

பெண்ணின் அணுகுமுறையும், பேச்சும் அங்கிருந்த அனைவரையுமே கவர்ந்துவிட, நேரடியாக அவள் கணவனிடம் பேச்சு எடுத்தனர்.

**********

மறுநாள் காலை வழக்கம்போல் மருத்துவமனையை அடைந்து உள் நோயாளிகளை பார்வையிட சென்றவனை முதல் நோயாளியாக வரவேற்றது, புதிதாக அங்கே இவன் மருத்துவத்தின் கீழ் சேர்ந்து இருந்த மாதவி தான்.

முகத்தில் எந்த சலனமும் இன்றி அவரின் மருத்துவ அறிக்கையை எடுத்து அவன் விழிகளை ஓட விட, “டாக்டர்... நேத்து நைட் இவங்க பையன் அடிபட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன அதிர்ச்சியில இவங்களுக்கு சடன்னா பிபி ஷூட் அப் ஆகிடுச்சு. அப்புறம் இப்போ ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டதுல கொஞ்சம் ஸ்டேபிள் ஆகிட்டாங்க!” என்று விவரம் தந்தாள் உடன் இருந்த பயிற்சி மருத்துவர்.

மாதவி விழித்து இருந்தாலும் தன் பார்வையை அவனிடம் உயர்த்தவில்லை, “ம்... ஓகே, ஒரு ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு பார்த்துட்டு டிஸ்சார்ஜ் டிஸைட் பண்ணிக்கலாம்!” என்று நகர்ந்தவன் மெல்ல நின்றான்.

“நீங்க நைட் வீட்டுக்கு போகலையா அத்தை?”

அருகில் நின்று இருந்தவரிடம் கேட்க, “இல்லை மாப்பிள்ளை... அண்ணிக்கு இப்படி ஆகவும் இங்கேயே இருந்துட்டேன். மாமாவும் கீழே அண்ணா கூட துணைக்கு இருக்கார்!” என்றார் சாவித்திரி.

“ஓ... கான்ஸியஸ் வந்தாச்சா?”

“ம்... தினேஷுக்கு நைட்டு ஒரு பதினோரு மணி போல நினைவு திரும்பிடுச்சு!”

“ஃபைன்... நீங்களும், மாமாவும் சாப்பிட்டீங்களா? இல்ல...” என்றவனை முடிக்க விடாமல்,

“நாங்க எட்டரைக்கே கேண்டீன்ல சாப்பிட்டோம் மாப்பிள்ளை!” என வேகமாக தகவல் தந்தார்.

“சரி பாருங்க!” என்று அடுத்த நோயாளியை பார்க்க நடந்து விட்டான் அவன்.

சாவித்திரி திரும்பி மாதவியை பார்க்க, இமைகளை தாழ்த்தி இருந்தவர் கலங்கிய முகத்துடன் தன்னுள் எதையோ சிரமப்பட்டு விழுங்குவது இவருக்கு நன்றாகவே தெரிந்தது. லேசாக பெருமூச்சு எடுத்துக் கொண்டவர், அமைதியாக நோயாளி உதவியாளர் கட்டிலில் அமர்ந்தார்.

அன்றிலிருந்து மூன்றாம் நாள் அவனது மேசையில் அடுக்கப்பட்டு இருந்த கடைசி மருத்துவ கோப்புக்கு உரிய நோயாளியையும் பார்த்து முடித்து விட்டு, “அவ்வளவு தானா... முடிஞ்சுதா நிர்மலா, இல்ல... இன்னும் பேஷன்ட்ஸ் இருக்காங்களா?” என்று தனக்கு உதவியாக பணி புரியும் செவிலியரிடம் விசாரித்தான் அருள்.

நேரம் இரண்டு மணியை தாண்டி இருந்தது. தனக்கான பிரத்யேக அறையில் இருந்து வெளி நோயாளிகளை பார்வை இட்டுக் கொண்டு இருந்தான் அவன்.

“பேஷன்ட்ஸ் இல்லை ஸார்... உங்க ரிலேட்டிவ்ஸ் ரெண்டு பேர் மீட் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்காங்க!”

‘அத்தை. மாமாவா இருக்குமோ... அவங்க இப்போ எங்க வீட்டுல தானே தங்கி இருக்காங்க, இங்கே எதுக்கு தனியா பார்க்க வெயிட் பண்றாங்க? அந்த தினேஷ் டிஸ்சார்ஜ் விஷயமா பேச வந்து இருப்பாங்களா...’

“சரி, அவங்களை அனுப்பிட்டு நீங்க கிளம்புங்க!”

அவன் சொன்னதை செய்ய அவள் வெளியேறிவிட, அடுத்த நிமிடம் உள்ளே வந்தவர்களை பார்த்து அவனது புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. உள்ளுக்குள் ஒரு பரபரப்பு எழுந்தாலும் வெளியே நிர்மலமாக காண்பித்துக் கொண்டவன், எதிரே இருந்த இருக்கைகளை அவர்களுக்கு கை காட்டினான்.

“அகைன் எதுவும் ஹெல்த் இஸ்யூவா... முந்தா நாளே எல்லாம் நார்மலுக்கு வந்தாச்சே...” என்று குமரனிடம் யோசனையாய் கேட்டான்.

“இல்லை... இவள் நல்லாத்தான் இருக்கா!” என்றார் அவர் தயக்கத்துடன்.

“குட்... அப்போ என்னை பார்க்கனும்னு வெயிட் பண்ணது...” என்று நிறுத்தி கேள்வியாக நோக்கினான்.

“அது... உங்களுக்கு தனிப்பட்டு நன்றி சொல்லனும்னு தான் வந்தோம். அன்னிக்கு நீங்க மட்டும் தங்கச்சி மாப்பிள்ளைக்கு தகவல் தரலைன்னா, பையனை பத்தி ஒன்னும் தெரியாம நாங்க பதறிப் போய் இருப்போம்!” என்று தடுமாறினார்.

“இட்ஸ் ஓகே... ரிசப்ஷன் அப்போ நதி உங்களை அவள் மாமா பேமிலின்னு எனக்கு அறிமுகம் செஞ்சு இருந்ததால அடையாளம் தெரிஞ்சது சொன்னேன், அவ்வளவு தான்!” என அசட்டையாக தோள்களை குலுக்கினான்.

“ம்...” என்று தலை அசைத்தவர் தனது மச்சினன் செல்வாவின் மூலம் ஏற்கனவே அருளின் நிலைப்பாட்டை அறிந்து இருந்ததினால், அதற்குமேல் தனிப்பட்டு எதுவும் நெருக்கம் காண்பித்து பேச இயலாமல் எழுந்து கொண்டார்.

“ரொம்ப நன்றி... காலத்துக்கும் மறக்க முடியாத உதவியை செஞ்சு இருக்கீங்க!” என்று குமரன் கரங்களை குவிக்க, அதுவரை இருந்த அழுத்தம் மறைந்து இவனுக்கு சற்று சங்கடமாக இருந்தது.

“பரவாயில்லை விடுங்க... எப்போ டிஸ்சார்ஜ் சொல்லி இருக்காங்க?”

அவன் அப்படி கேட்டதற்கே முகத்தில் தனி வெளிச்சம் பரவ, “நாளைக்கு பண்றது போல தான் டாக்டர் சொன்னாங்க. கை, கால் கட்டு மட்டும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வந்து ட்ரெஸ்ஸிங் பண்ணிக்கற மாதிரி இருக்கும் போலிருக்கு!” என்று தகவல் தந்தார்.

“ஓகே... பார்த்துக்கோங்க!” என்று அவனும் எழுந்து கொள்ள, அவர்கள் வாசல் நோக்கி நகர்ந்தனர்.

மாதவி வந்ததில் இருந்து தலை குனிந்து அமர்ந்து இருந்தவர் தான், அவனை பார்க்கவும் முயலவில்லை, பேசவும் இல்லை. அன்று தன் பொறுப்பை தட்டிக் கழித்து இருந்ததில் பார்க்க பயந்து ஓடினார் என்றால், இன்று உள் இருக்கும் குற்றவுணர்வால் பார்க்க முடியாமல் செல்கிறார் என புரிந்து உதட்டோரம் கசப்பாக புன்னகைத்து கொண்டான் அருள்மொழி.

கதவு வரை சென்ற குமரன் நின்று அவனிடம் திரும்ப, மருத்துவன் மௌனமாக ஏறிட்டுப் பார்த்தான்.

“எனக்கு ஒரு திருக்குறள் தான் ஞாபகம் வருது!”

அவன் நெற்றியை சுருக்க, “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்!” என்று சொல்லி முடித்து அவனை ஒரு பார்வை பார்த்தவர், வேகமாக தன் மனைவியோடு வெளியேறி விட்டார்.

நாயகன் தான் சில நொடிகளுக்கு அசைவற்று நின்று விட்டான். பின் நீண்டதொரு பெருமூச்சுடன் கண்களை மூடி சில நொடிகள் அப்படியே நின்றவன், தன்னை மெதுவாக நிலைப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

**********

Vazhkkai Kavithai Vasippom 1 - Amazon Kindle Link

Vazhkkai Kavithai Vasippom 2 - Amazon Kindle Link

Ithu Valiba Sothanaiya - Deepa Babu

 



இது வாலிப சோதனையா...

கதைக்கரு


“சின்ன சின்ன பூவே” நாவல் முடிச்சதுல இருந்து ரமணன், நந்தினி மகன் மதுநந்தனை நாயகனா போட்டு ஒரு ஜாலியான நாவல் எழுதுங்களேன் என்று என் அபிமான வாசகி ஒருவர் நாலைந்து வருடங்களா கேட்டுட்டு இருந்தாங்க. எனக்கு இதை எழுத நேரம் அமையாம வரிசையா வெவ்வேறு கதைக்களம் எடுத்து அதுல பிஸி ஆகிட்டேன்.

மொத்தமா இருபது நாவல் முடிச்சிட்டு, இருபத்து ஒன்றாவது நாவலாக தான் இதை எழுத முடிந்தது. மதுவை ரொம்பவே ஜாலியான சுட்டிப் பையனா தான் அந்தக் கதையில காட்டி இருப்பேன். ஸோ... இதைப் பக்காவாக மதுவின் குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு இலகுவான காதல் கதையா தான் எழுதி இருக்கேன்.

அடுத்து நம்ம நாயகி பக்கம் வந்தா... இவள் வேற யாரும் இல்லைங்க, மதுவை போல என்னுடைய மற்றொரு நாவல் குடும்பத்தில் இருந்து தான் தேர்வு செஞ்சு ஜோடி போட்டு இருக்கேன். அம்மணி யாருன்னா... “உனக்காகவே நான் வாழ்கிறேன்” நாவல் கவின்வாணன், சிவணி தம்பதி தவமிருந்து பெற்ற ஒற்றை மகளான இன்மதி தான்.

ஸோ... இரண்டு நாவல்களின் கதைமாந்தர்களையும் அழகாக ஒன்றிணைத்து, ஒரு கலகலப்பான கதையை கொடுத்து இருக்கிறேன், வாசித்து மகிழுங்கள்.

Ithu Valiba Sothanaiya - Kindle Link

**********

கதையிலிருந்து சிறு துளிகள்


முகமெங்கும் புன்னகையில் மலர்ந்துப் பளபளக்க, விழிகள் மின்ன பேசுபவனின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், அமைதியாக இருந்தாள்.

“என்ன ஆச்சு? இவ்வளவு ஸைலன்ட்டா இருக்கே...” என்றவாறு மதுநந்தன் நெருங்கி வர, இவளின் இதயம் படபடத்தது.

“ஒன்னுமில்லை... கொஞ்சம் ஷாக். உங்களை எதிர்பார்க்கலை, நெக்ஸ்ட் வீக் வர்றதா கேள்விப் பட்டேன். எப்போ வந்தீங்க?” என பொதுவாய் விசாரித்தாள் இன்மதி.

“ம்... இயர்லி மார்னிங் தான். எல்லார்க்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க சொல்லாம, கொள்ளாம முன்னாடி வந்துட்டேன். வந்த உடனே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழலாம்னு நினைச்சுப் படுத்தேன், நல்லா தூங்கிட்டேன்.

அக்காவும், பசங்களும் பார்க்க வந்துட்டுப் போனதா அம்மா சொன்னாங்க. அது தான் உடனே கிளம்பி அவளை பார்க்க வந்தேன், இங்கே நீ எனக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்டே!” என பளீரென்று சிரித்தான்.

அதைத் திருப்ப மனம் வராதவளுக்கு மனஸ்வினி தன்னை அழைத்து விட்டு, விஷயத்தை சொல்லாமல் விழுங்கியதன் மர்மம் புரிந்தது.

“என்ன அவ்வளவு டீப் திங்கிங்? ஏன் நின்னுட்டே இருக்கே? உட்கார்!” என்றபடி அவள் இருக்கைக்கு எதிரே உள்ள நாற்காலியில், மிகவும் சுவாதீனமாக அமர்ந்துக் கொண்டான் மது.

மதிக்கு தான் அவன் அங்கே இருப்பதும், பேசுவதும் சின்ன அதிருப்தியை கொடுத்தது.

“இப்போ கவின் அங்கிளோட வொர்க்ஸ் எல்லாம் நீயும் ஷேர் பண்ணிட்டு இருக்கியா என்ன? இங்கே ஆடிட்டிங் ரூம்ல இருக்கே!”

“ம்... ஆமா... இன்னிக்கு இங்கே வொர்க் இருக்கவும் தான் வந்தேன்!” என்றவாறு சென்று தன் இடத்தில் அமர்ந்தவள், “மனு அக்கா அவங்க ரூம்ல தான் இருக்காங்க. நீங்க அவங்களை போய் பார்க்கலையா?” என்று அவனை நாசூக்காக விரட்ட முயன்றாள்.

“ப்ச்... அக்கா தானே, அவளை கிளம்பும் போது பார்த்துக்கறேன். உன்னை பார்த்து தான் ரொம்ப நாளாச்சு. எப்படியும்... ஒரு நாலைஞ்சு வருஷம் இருக்கும் இல்லை?”

வெறும் தலை அசைவில் பதிலைக் கொடுத்தவள், இவனை எப்படி இங்கிருந்து விரட்டுவது என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஆனா... ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே லட்டு. எவ்வளவு அழகா ச்சப்பியா புசுபுசுன்னு இருந்தே நீ? க்யூட்டி உன்னை லட்டுன்னு கூப்பிடறது அவ்வளவு பொருத்தமா இருக்கும். இப்போ என்னடான்னா இப்படி ஸ்லிம் ப்யூட்டியா ஆகிட்டே... ஓகே, நல்லா தான் இருக்கு. அதுவும் இந்த ஸ்ஸாரில செம கலக்கலா இருக்கே!”

ஆர்வமாக தன்னை வர்ணிப்பவனின் பேச்சில் லேசாய் மூச்சடைக்க, தடுமாற்றம் ஒருபுறம், மெலிதான கோபம் மறுபுறம் என திணறியவள், முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவனிடம் பொறுமையாகப் பேசினாள்.

“மது... இஃப் யூ டோன்ட் மைன்ட். எனக்கு வொர்க் லோட் ஹெவியா இருக்கு, அன்ட் இங்கே முடிச்சிட்டு அப்பா ஆபிஸுக்கு வேறப் போகனும். ஸோ ப்ளீஸ்...” என்று கண்களை சுருக்கினாள் இன்மதி.

“டூ பேட்... எவ்வளவு பாலிஷ்டா என்னை விரட்டறே நீ? உன் கேரீர்ல ரொம்ப பிஸி ஆகிட்டியா பேபி... கமிட்மென்ட்ஸ் அதிகமோ...”

**********


மதி அவனை பல்லை கடித்துப் பார்த்து வைக்க, “என்ன லுக்கு? அட ச்சீய்... போய் கிளம்பி வா!” என்று பெண்ணிற்கு அசட்டையாக கட்டளையிட்டான் மது.

பக்கென்று சிரித்த திலகா, “அப்படி போடுடா அவளை... வர வர ரொம்பத் தான் ஆட்டிட்டியூட் காட்டுறா!” என்று குதூகலமாக மதுவின் கையில் தட்டினார்.

“பாட்டி...” என்றவள் அதட்ட, அனைவரின் முகத்திலும் நகை அரும்பியது.

“சத்தம் எல்லாம் ரொம்ப பெருசா வருது... உனக்கு அஞ்சே நிமிஷம் தான் டைம், பரபரன்னு கிளம்பி வந்து என் முன்னாடி நிக்கறே!” என்றான் அதிகாரமாக.

பையனிடம் கோபமாக கண்களை உருட்டியவள், “முடியாது!” என்று மறுத்து அடமாக கைகளை குறுக்கே கட்டிக் கொண்டாள்.

சட்டென்று எழுந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்து, “அப்போ சரி... போட்டு இருக்க ட்ரஸ்ஸோடவே போயிட்டு வரலாம் வா, இதுவே நல்லாத் தான் இருக்கு!” என்று அவள் கரம் பற்றி எழுப்பினான்.

“மை காட்... மது, எனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடுங்களேன்!”

உச்சக்கட்ட எரிச்சலில் முகம் சுளிப்பவளை நிதானமாகப் பார்த்தவன், “அப்படி எல்லாம் விட முடியாது லட்டு, வா போகலாம்!” என்றான் தன் பிடிவாதமாக.

“அப்பா...” என சலிப்புடன் தன்னிடம் திரும்பிய மகளை யோசனையுடன் அளவெடுத்த கவின்,

“ஒரு சின்ன ரிலாக்ஸ் ட்ரிப்பா போயிட்டுத் தான் வாயேன்டா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்து மது கூப்பிடறான் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

மீதம் இருக்கும் வீட்டினரின் பார்வையும் அதையே எதிரொலிக்க, வேறு வழியின்றி கடுப்புடன் எழுந்தவள், நாயகனை அழுத்தமாக முறைத்து விட்டு தனது அறைக்குச் சென்றாள்.

**********


பின் சீட்டில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தவளை விழிகளால் அளந்தவன், அக்கா மகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சின்னு... உன் புக்ஸ்ல உர்ரான்கோட்டான் போட்டோ எதுவும் பார்த்து இருக்கியா நீ?”

“ஓ... பார்த்து இருக்கேனே மாமா!”

“வாவ்... சூப்பர்... நேர்ல?”

“ப்ச்... இல்லை மாமா, ஜூல கூட பார்க்கலை!” என்று சோகமாக குட்டி இதழ்களை பிதுக்கினான்.

“அதுக்கு ஏன்டா சின்னு நீ இவ்வளவு கவலைப்படறே? அப்படியே நம்ம காருக்கு உள்ளேயே பின்னாடி திரும்பிப் பாரு, எவ்வளவு பெரிய உர்ரான்கோட்டான் உட்கார்ந்து இருக்குன்னு!”

தன்னை வைத்து குழந்தையிடம் கேலிப் பேசுபவனை ஒன்றும் சொல்ல முடியாமல், அவள் மேலும் கடுப்புடன் அமர்ந்து இருக்க, மதுவின் உதடுகளில் சீண்டல் புன்னகை துளிர்த்தது.

“யாரை... நம்ம லட்டுக்காவையா சொல்றீங்க?”

வியப்புடன் கேட்கும் சிறுவனிடம் கண்ணடித்து, “அவளையே தான் சொல்றேன்!” என்றவனின் இதழ்கள் மேலும் நகைப்பில் விரிந்தது.

மதி கை முஷ்டிகளை இறுக்க, “அட போங்க மாமா... அக்கா எவ்வளவு அழகா இருக்காங்க? அவங்களை போய் அப்படிச் சொல்றீங்க. நானாவது உர்ரான்கோட்டானை போட்டோல பார்த்து இருக்கேன், நீங்க அது கூட பார்க்கலை போல் இருக்கு!” என பெரிதாய் சலித்துக் கொண்டான்.

அதைக் கேட்டு பக்கென்று சிரிப்பை சிதற விட்டவளோ, வேகமாக கதவின் ஜன்னலில் கையூன்றி முகத்தை தாங்கி வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள்.

“டேய்... என்னடா பொசுக்குன்னு இப்படி மாமாவை இன்ஸல்ட் பண்ணிட்டே?” என்று பொங்கினான் மது.

அவனை அலட்சியமாய் பார்த்தவனோ, “ம்... நான் என்ன பண்ணேன்? நீங்க தப்பா சொல்றதை சரியா தப்புன்னு மட்டும் தானே சொன்னேன். உர்ரான்கோட்டான் பத்தி எனக்கு நிறைய டீட்டைல்ஸ் தெரியும். குட்டிம்மாட்ட கேட்டு, கூகுள்ல தேடிப் பார்த்தோம்!” என்று மேலும் விளக்கம் சொல்ல முயன்ற மருமகனை பாய்ந்து தடுத்தான் நாயகன்.

“அடேய் போதும்டா என்னை டேமேஜ் பண்ணது... நீ வெறும் எல்.கே.ஜி. தானே படிக்கறே? அப்படி நம்பித் தானேடா கொஞ்சம் சீனோட்ட பார்த்தேன். நீ என்னடா ஒத்தை வார்த்தையை வைச்சு இவ்வளவு பேசறே? இதெல்லாம் எப்படிடா தெரியும் உனக்கு?” என்று திகைப்பாய் கேட்டான்.

“ஆங்... எனக்கு அனிமல்ஸ் பத்தி தெரிஞ்சுக்கறது ரொம்ப பிடிக்கும்னு, குட்டிம்மாட்ட கேட்டு எல்லாம் தேடி எடுத்து சொல்லித் தரச் சொல்வேன்!”

அசட்டையாய் மொழிபவனை பல்லைக் கடித்துப் பார்த்தவன், “அப்போ உன் குட்டிம்மாவும் இதுல எக்ஸ்பர்ட்டா?” என்றான் கடுப்பாக.

“ஆமா... ஆமா...” என்று சிறுவன் துள்ளலுடன் சொல்ல,

“நல்லா சேர்ந்தீங்கடா கூட்டு!”

ஒற்றைக் கையில் காரை ஓட்டியபடி தலையில் அடித்துக் கொண்டவனை பார்த்து கண்களை இடுக்கியவன், “உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டாகுது? என் பிரெண்ட் ஸ்னேக் ஓட போட்டோவை பார்த்தே அது பாய்ஸ்னஸா ஆர் நான்- பாய்ஸ்னஸான்னு சொல்வான் தெரியுமா?” என்றான் அலட்டலாக.

(இது உண்மை... என் உறவினர் வட்டத்தில் உள்ள எல்.கே.ஜி. குழந்தை ஒருவன், விஷமுள்ள பாம்பு, இல்லாத பாம்புன்னு புகைப்படம் பார்த்தே தெளிவா சொல்றான்.)

அதில் அதிர்ச்சியாகி விழிகளை விரித்தவன், “இது வேறயாடா... நீங்க எல்லாம் வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோஸ்டா!” என்று வேகமாய் தலை அசைத்துக் கொண்டான்.

“நோ... வி டூகே கிட்ஸ் ஆர் வெரி ஸ்மார்ட் யூ க்னோ?” என்று பெருமையாக தோள்களை குலுக்கிக் கொண்டான் அஸ்வந்த்.

“டேய் சில்வண்டு... நீ டூகே கிட் இல்லைடா, டூதௌசன்ட் டென்ல கூட வர மாட்டே!” என்று நக்கலாய் மொழிந்தான் மது.

சட்டென்று குழம்பி விழித்தப் பையன், “ம்... அப்போ நான் எதுல மாமா வருவேன்?” என்று வேகமாக விசாரித்தான்.

“ஹான்... இவ்வளவு வாய் அடிக்கறே இல்லை, போய் உன் குட்டிம்மாட்ட கேட்டே அதையும் தெரிஞ்சிக்கோ!”

அலட்சியமாய் உதடுகளை சுழித்து கேலிச் செய்யும் மாமனை, கண்களை உருட்டி சின்னக் கண்ணன் முறைக்க, சற்று முன்பு இருந்த இறுக்கம் தொலைத்து மிகவும் இலகுவாக அவர்களின் பேச்சுக்களை ரசித்து இருந்தாள் இன்மதி.

**********


விழிகளில் கடுமைப் பரவ பேசும் மகளை சிந்தனையுடன் பார்த்து, “ஏன் பாப்பா... நம்ம மதுவுக்கு என்ன? ரொம்ப நல்லப் பையன், பேமிலியும் நமக்கு நல்லா பழக்கமானவங்க, உனக்கு...” என்ற சிவணியை வேகமாக இடைமறித்தாள் அவள்.

“அம்மா போதும்... என்ன நல்லப் பையன்? வெறும் நல்லப் பையன் மட்டும் போதுமா... ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்க...” என்று கடுப்புடன் கேட்டாள்.

‘வேற என்ன வேணும்?’ என்று பெற்றவர் விழிக்க,

“வேற என்ன வேணும்னு நீ எதிர்பார்க்குறே?” என பட்டென்று கேட்டு இருந்தார் திலகா.

“ப்ச் பாட்டி... அது எல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது!”

“ஏன் சொல்லேன்? உங்க யூத்தோட டேஸ்ட் என்னென்னு நானும் தான் தெரிஞ்சிக்கறேன்!”

தன்னை மீறி மாமியாரின் நையாண்டியில் சிவணியின் இதழ்கள் சட்டென்று சிரிப்பை சிந்திவிட, வீட்டின் வாரிசோ மூத்தப் பெண்கள் இருவரையும் ஒரு சேர முறைத்தாள்.

“இல்லை... உன்னோட டேஸ்ட் தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி நான் மாப்பிள்ளை பார்ப்பேன் இல்லை...”

“பாட்டி...” என்று அதட்டியபடி வேகமாக எழுந்தவள், “உங்களை யார் எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னா?” என்றாள் ஆவேசமாக.

“இது என்னடி வம்பா இருக்கு? இருபத்து நாலு வயசுப் பொண்ணுக்கு, வீட்டுல இருக்கப் பெரியவங்க கல்யாணத்துக்கு பார்க்க மாட்டாங்களா?” என்று நாடியில் கை வைத்து அப்பாவியாக கேட்டார்.

“இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட வேணாம்!” என அவரிடம் பல்லைக் கடித்தவள் பட்டென்று தந்தையிடம் திரும்பி, “அப்பா... இவங்களை அமைதியா இருக்கச் சொல்லுங்க. எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம். என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விட்டாலே போதும்!” என்று இறுக்கத்துடன் கூறினாள்.

அவசரமாக மகளை நெருங்கி, “சரிம்மா விடு... அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறே?” என்று அவளின் கையை பிடித்து சமாதானப் படுத்தினார் கவின்.

தனக்குள் மெதுவாக உச்சுக் கொட்டிக் கொண்டவள், “ஆனா நீங்க எதுவும் என்னை தப்பா நினைக்கலை இல்லை அப்பா!” என்று விசனத்துடன் விசாரித்தாள்.

சன்ன முறுவலிப்புடன் அவள் தலையில் கை வைத்து ஆட்டியவர், “நீதான் ஒரே வரியில உனக்குப் பிடிக்காத விஷயத்தை, எங்ககிட்ட ஷேர் பண்ணத் தோணலைன்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன? விடு!” என்றார் இலகுவாக.

“தேங்க் யூ ஸோ மச் பா!” என்று அவரை அணைத்து நன்றி கூறியவள், “ஓகே குட்நைட்... நான் தூங்கப் போறேன்!” என்று அறைக்கு கிளம்பினாள்.

“சரிடா லட்டு... குட்நைட்!” என்று திலகா விரைந்து பேத்திக்கு இரவு வணக்கம் சொல்ல, அவளோ திரும்பி அவரை முறைத்துப் பார்த்தாள்.

“நான் உங்களுக்குச் சொல்லலை... என் அப்பாவுக்குச் சொன்னேன்!” என்று நொடித்தபடி, அம்மாவையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள்.

“போச்சு... உங்களால அவ என்கிட்ட கோவிச்சிட்டுப் போறா. இன்னும் ரெண்டு நாளைக்கு என்னை திரும்பிப் பார்க்காம, உம்முன்னு முகத்தை தூக்கி வைச்சிக்குவா!” என்று சிவணி தவித்தார்.

“அடப்போடி இவளே... உன் பொண்ணை பத்தி தெரியாது, இல்லை... உன்னை பத்தி தான் தெரியாது. நீ அவ பின்னாடியே பூனைக் குட்டி மாதிரி சுத்தற சுத்தல்ல, அவ தன்னால மலை இறங்கி உன்கிட்ட கொஞ்ச ஆரம்பிச்சிடுவா. எப்பவும் இந்த வீட்டுல நடக்குறது தானே இது!”

மகள் அறைக்குள் சென்று விட்டதை கவனித்தபடி, அம்மாவின் சொற்களையும் காதில் வாங்கியவாறு பெருமூச்சுடன் அமர்ந்தார் கவின்.

**********


பார்வை முழுவதும் ஆர்வம் நிறைந்து இருக்க, தன்னை ஆசையுடன் பார்த்து இருந்து பேசும் விழிகளை கண்டவள், விரைந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

அவன் கைகளை விலக்கியபடி நகர்ந்தவள், “என்ன உளர்றீங்க?” என்று வேகமாக கோப முகமூடியை அணிந்துக் கொண்டாள்.

“நான் உளறலை... நீதான் உளறிட்டே!”

கண்கள் மின்ன குறுநகையோடு நின்று இருந்தவனை கடுமையாக முறைத்தவள், “என் வார்த்தைகளுக்கு தப்புத் தப்பா புதுசா நீங்க ஒரு அர்த்தம் கொடுத்துக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது!” என்று ரோஷமாக உரைத்தாள்.

அதற்கு அவன் இலகுவாக, “ஓஹோ...” என்று மட்டும் ஓர் ராகம் போட்டான்.

“ப்ச்...” என முகத்தை சுளித்தவள், “அதை விடுங்க... ஸ்போர்ட்ஸ் எக்யூமென்ட் கம்பெனி வொர்க்ஸை எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?” என்று அதிகாரமாக கேட்டாள்.

“நீ எப்போ சொல்றியோ, அப்போ உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் லட்டு!” என்று தோள்களை குலுக்கி, பின்னால் இருந்தச் சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி ஊன்றிச் சாய்ந்துக் கொண்டான் மது.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “ஓகே... பாட்டிகிட்ட சொல்லி ஒரு நல்ல நாள் பார்க்கச் சொல்றேன்!” என்றாள் அமைதியாக.

“நல்ல நாள் எதுக்கு லட்டு?”

பலமாக அவனை முறைத்தவள், “வேற எதுக்கு? கம்பெனி ஸ்டார்ட் பண்ணத்தான்!” என்று பற்களை கடித்தாள்.

“ஓகே... ஓகே... அப்படியே அங்கிள்ட்ட சொல்லி, அதுக்குள்ளே உன்னோட வொர்க்ஸை ஃப்ரீ பண்ணிட்டு நீயும் ரெடி ஆகிடு!”

அசால்டாக சொல்பவனின் வார்த்தைகளில் திகைத்தவள், “அது எதுக்கு?” என்றாள் வேகமாக.

“வேற எதுக்கு? நம்ம கம்பெனியை ஸ்டார்ட் பண்ணத்தான்!”

தன் வார்த்தைகளை திருப்பிப் படித்தவனை, “மது...” என்று அழைத்து அயர்வோடு பார்த்தாள் அவள்.

“ஏன் பேபி அதுக்குள்ளே டயர்ட் ஆகிட்டே? இனிமே தானே நமக்கு வேலையே இருக்கு!”

அவளை நெருங்கி வந்து நாடியை உயர்த்தி அவன் கேட்க, “எனக்குப் பிடிக்கலை, வேணாம்!” என்றாள் பெண் கெஞ்சலாக.

பார்வையை கூர்மையாக்கியவன், “எது பிடிக்கலை... என்ன வேணாம்?” என்று அழுத்தமாக கேட்டான்.

**********


அனைவரின் வாயையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த நந்தினி, “நீங்க எல்லாம் என்ன பேசிக்கறீங்க? எனக்கு ஒன்னுமே புரியலை!” என்று வேகமாக இடையில் கேள்வி எழுப்பினார்.

அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு தகப்பனிடம் திரும்பிய மனஸ்வினி, “அப்பா... போச்சு, இன்னிக்கு உங்க குட்டிம்மாகிட்ட உங்களுக்கு ஓவர் டியூட்டி ஆகப் போகுது!” என்று எச்சரித்தாள்.

“ஐ’ம் ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் தட் ஸ்வீட் மொமன்ட் மனும்மா!” என்றவாறு மனைவியை குறும்புடன் பார்த்தார் ரமணன்.

“மை குட்னஸ்... மாமா, மனு அன்னிக்கு உங்களை பத்தி சொன்னப்ப கூட நான் முழுசா நம்பலை. இன்னிக்கு நேர்லயே பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்!” என்று வியந்தான் அஸ்வின்.

“நீங்களா எனக்கு ஒரு உருவகம் கொடுத்துக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பு இல்லை மாப்பிள்ளை!” என அட்டகாசமாக நகைத்தார் அவர்.

“ஏய் மனு... அப்பாவும், பொண்ணும் என்ன திருட்டுத்தனம் பண்றீங்க? ஒழுங்கா என்கிட்ட விஷயத்தை சொல்லுங்க!” என்று முறைப்பாக விசாரித்தார் நந்தினி.

“அது ஒன்னும் இல்லைம்மா...” என்ற மகள் நடந்ததை விவரிக்க, மூத்தவர் பார்வையாலே தன் கணவரை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு இருந்தார்.

**********


அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள, “அதுக்குள்ளே இவன் அவளை ஒரு வழி பண்ணப் போறான்!” என்று தலை அசைத்துக் கொண்டான் அஸ்வின்.

“அது என்னவோ நிஜம் தான்... அன்னிக்கு என்னையே செம டென்ஷன் பண்ணிட்டான் மது!” என்று புலம்பினார் கவின்.

என்னவென்று ஆவலாக விசாரித்தவர்களிடம் சோகமாக அவர் விஷயத்தை கூற, அனைவருக்கு உள்ளும் சிரிப்பு வெடித்துக் கிளம்பியது.

“சரியான வாலு இந்தப் பையன்... இன்னமும் அப்படியே தானே இருக்கான்!” என்று முறுவலித்தார் திலகா.

“ஆமா ஆமா... அன்னிக்கே எதுவும் சொல்ல கூடாதுன்னு அவள் மிரட்டிட்டு இருக்கும் போதே, இவன் எதையும் லட்சியம் பண்ணாம எல்லாத்தையும் நம்மகிட்ட கொட்டிட்டானே!”

அறிவும் நகைப்புடன் கூற, கவினின் முகத்தில் தான் பெரும் குழப்பம் நிலவிக் கொண்டு இருந்தது.

“என்னாச்சு? எதுனாலும் நாம ஓப்பனா பேசிக்கலாம், அவங்க எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்!” என்று கேலிச் செய்தார் ரமணன்.

“இல்லை... இதுல அம்முவோட ஸ்டேண்டை என்னால க்ளியரா ஸ்டடி பண்ண முடியலை. மதுவை நினைச்சு அவ்வளவு கோபப்படுறா, அப்செட் ஆகறான்னு தள்ளி வைக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் ரொம்ப வொர்ஸ்ட்டா ஃபீல் பண்றா? எந்தப் பக்கம் மூவ் பண்றதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது!”

“ஹஹா... அங்கிள்... இதுக்குப் பேர் தான் லவ். விலகிப் போன்னு அவங்க ஈகோ எடுத்துச் சொல்லி தள்ளி விட்டாலும், அவங்க மனசு அதை முழுசா ஏத்துக்க முடியாம தவிச்சுப் போய், ஒரு ஸ்டேஜ்ல திரும்பவும் தான் விரும்பறவங்களோட சேரப் பார்க்கும்!” என்று புன்னகைத்தாள் மனு.

“அதெல்லாம் என் பையனுக்கு ஒன்னும் புரியாதும்மா... கல்யாணம் பண்ணியும் ஈகோ பார்த்துட்டு பொண்டாட்டிகிட்ட தள்ளி இருந்தவன் இவன்!” என்று நக்கலாகச் சொன்னார் திலகா.

“அச்சோ ஆன்ட்டி... நீங்க என்னை விட பாவம், இவராவது என்னை கல்யாணம் வரைக்கும் தான் டென்ஷன் படுத்தினார். அங்கிள் உங்களை அதுக்கு அப்புறமும் அப்செட் பண்ணாரா?”

“அந்தக் கொடுமையை ஏன்டா கேட்கறே? அதை எல்லாம் கடந்து வந்து இப்போ என் பொண்ணு கல்யாணத்துக்கும் திரும்ப அதையே ஃபேஸ் பண்றேன் நான். அப்படியே அவங்க அப்பாவோட ஈகோவும், பொஸஸிவ்னஸும் அவளுக்கும் மாறாம வந்து இருக்கு!” என்று பெருமூச்சு எறிந்தார் சிவணி.

தாயையும், மனைவியையும் கவின் ஒரு சேர முறைத்துப் பார்க்க, ரமணன் நமட்டுச் சிரிப்புடன் சமாதானத்தில் இறங்கினார்.

**********


“அது உங்கப் பொண்ணு கையில தான் இருக்கு. எதையும் பளிச்சுன்னு உடைச்சுப் பேசாம, உள்ளுக்குள்ளே அழுத்தமா புதைச்சி வைச்சிக்கிட்டு மறுகறது எல்லாம் அப்பா, பொண்ணுக்கு கை வந்த கலை ஆச்சே...

அன்னிக்கு நீங்க செஞ்சீங்க, இன்னிக்கு இவள் செய்யறா. ஆகமொத்தம்... நீங்களும் நிம்மதியா இருக்க மாட்டீங்க, உங்களை சுத்தி இருக்கற மனுஷங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்க!”

தன்னிடம் இருந்து விலகி எரிச்சலுடன் நொடித்துக் கொள்ளும் மனைவியை பாவமாகப் பார்த்தவர், “நான் தான் அதுக்கு அப்புறம் அப்படி எல்லாம் செய்யாம உன்கிட்ட ஓப்பனா தானே இருக்கேன்!” என்று அவரின் கையை பற்றிக் கொண்டு கெஞ்சலாகப் பார்த்தார்.

“ம்... இப்போ அது உங்கப் பொண்ணு டேர்ன்னு புரிஞ்சு அமைதியா ஏத்துக்கோங்க. சொல்லப் போனா... இவளை விட மது தான் பாவம், ஜாலியா இருக்கப் பையனை இவள் இப்படி உர்உர்ருன்னு இருந்து பரிதாபமா மாத்தாம இருந்தா சரி!”

“உனக்கு ரொம்பத் தான் லொள்ளு... அம்மு எப்பவும் அப்படியா இருக்கறா?” என்று மெத்தையில் சரிந்துப் படுக்கும் மனைவியை லேசாக முறைத்தார் கவின்.

“இல்லை தான்... ஆனா கோபம் வந்துட்டா எத்தனை கெஞ்சி மலை இறக்க வேண்டியதா இருக்கு, அதெல்லாம் அனுபவப் பட்டவங்களுக்கு தான் தெரியும். சரி... நான் கொஞ்ச நேரம் தூங்கறேன், காலையில நேரமா எழுந்தது அசதியா இருக்கு!” என்று கண்களை மூடிக் கொண்டார் சிவணி.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர், “நான் வேணும்னா பாப்பாட்ட மதுவை பத்தி என்ன, ஏதுன்னு தெளிவா பேசிப் பார்க்கவா...” என்றார் பெற்றவர் வேகமாக.

“இதே ஃபார்ம்ல போய் உங்கப் பொண்ணுகிட்ட பாப்பான்னு ஆரம்பிச்சீங்க... அவ்வளவு தான் உங்க ஜோலி முடிஞ்சது!”

**********


அவனின் வார்த்தைகளில் கன்னங்கள் சூடேறுவதை தவிர்க்க, “ஆங்... பாருடா... அப்புறம்?” என்று கேலியாக சிரித்து, விழிகளில் மெலிதாக ஐலைனரை தீற்றினாள்.

“என்ன அப்புறம்?” என்று எழுந்து வந்தவன் அவளை பின்னிருந்து அணைக்க,

“மது...” என்று தடுமாறினாள் அவள்.

“நீ சொல்ல வேணாம்... நான் ஆயிரம் முறைச் சொல்வேன். ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...” என்று அவள் காதோரம் இதழ் பதித்து ஆடவன் குழைய ஆரம்பிக்க,

அவன் மீது பெரும் ஆசை வைத்து இருந்தப் பெண்ணின் மனமோ, அவனுடைய செயலில் இன்னமும் மயங்க ஆரம்பித்தது.

“மது...” என்று அவன் கைகளில் அவள் நெகிழத் தொடங்க,

“வெறும் பேர்ல மட்டும் தான்டி நான் மது... ஆனா நீதான் அத்தனை போதை தர்றே எனக்கு...” என்றவன் பிதற்றத் துவங்கவும், பெண்மை வேகமாக சுதாரித்தது.

அவனை அவசரமாக நகர்த்தியவள், “ப்ச்... இப்போ தான் புடவையை சரி பண்ணேன்!” என்று அலுப்புடன் கடிந்தவாறு மீண்டும் சரி செய்தாள்.

இதழ்களில் புன்னகை பெரிதாக விரிய, “ஆமா... உனக்கு ஸ்ஸாரி கட்டத் தெரியுமா லட்டு?” என்று ஆவலாக விசாரித்தான் மது.

“இது என்ன கேள்வி? கட்டத் தெரியாம தான் கட்டி இருக்கேனா நான்...” என்று அவன் முகம் பார்த்தாள்.

“இல்லை... என்னோட டீன் ஏஜ்ல அப்பாவை நான் ரொம்ப கலாய்ச்சு இருக்கேன்!”

“என்ன? எதுக்கு?” என்று வியப்புடன் விழிகளை விரித்தாள்.

“அம்மாவுக்கு ஸ்ஸாரி ப்ளீட்ஸ் எடுக்கச் சரியா வராதுன்னு அப்பா தான் எப்பவும் ஹெல்ப் பண்ணுவார்!” என்றவன் நமட்டை கடித்துச் சிரிக்க, நாயகியின் முகமும் ரசனையில் மலர்ந்தது.

“அதை நான் கிண்டல் பண்றேன்னு, உன் வொய்ஃப் வரும்போது நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கத் தான்டா போறேன்னு அப்பா பதிலுக்கு ஓட்டுவார், அது தான் கேட்டேன்!”

“ஹான்... அப்படின்னு பார்த்தா பல லேடீஸுக்கு அது கஷ்டம் தான். புடவையை சுலபமா கட்டற அளவுக்கு ப்ளீட்ஸ் எடுக்கறது சரியா படிமானமா வராது. ஆனா இப்போ எல்லாம் கட்டறதுக்கு முன்னாடியே நல்லா நீட்டா மடிப்பு எடுத்து தனியா வைச்சிட்டு, பங்ஷன் டைம்ல ஈஸியா நாங்க கட்டிடுவோம்!”

பெருமையாகச் சொல்பவளை புன்னகையுடன் பார்த்தவன், “ம்... டெக்னாலஜிக்கு ஈக்வலா லேடீஸ் நீங்களும் நல்லா டெவலப் ஆகிட்டு வர்றீங்க!” என்று மெச்சுதலாக இதழ்களை வளைத்தான்.

“அதே தான்...” என்று அலட்டலாய் தோள்களை குலுக்கியவளை, அவன் மீண்டும் ஆசையாய் கட்டி அணைக்க முயல, பெண் முரண்டினாள்.

“மது... என்ன இது? எப்போ பாரு... இதே வேலையா இருக்கீங்க!” என்று அவனை முறைத்தாள்.

“என்ன பண்றது? நீ என்னை அவ்வளவு அட்ராக்ட் பண்றே... தள்ளி நிக்கவே முடியலை!” என்று சிணுங்கினான் அவன்.

“அடி தான் விழும்... சரி வாங்க, கீழே போகலாம்!” என்று வாசலை நோக்கி விரைந்தாள்.

“ம்ஹும்... இது ஆகறது இல்லை. இந்த அக்கா வேற சொன்ன வேலையை ஒழுங்கா செய்தாளா என்னென்னு தெரியலை, அடுத்து வர்ற முகூர்த்தத்துல சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சிடனும்!”

தன்னை பின் தொடர்ந்து புலம்பிக் கொண்டே வந்தவனின் வார்த்தைகளில் நின்றவள், “இல்லை வேணாம்... நாம முதல்ல என்கேஜ்மென்ட் செஞ்சுக்கலாம்!” என்றாள் அவசரமாக.

“என்ன?” என்று முகம் சுளித்தவன், “அது எல்லாம் ஒன்னும் வேணாம்!” என வேகமாக மறுத்தான்.

“ப்ளீஸ் மது... நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி தான், நாம ஒவ்வொரு பிரொஸிஜர்ஸையும் என்ஜாய் பண்ணிச் செய்யலாம்!” என்று கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

**********


அங்கே தன் பெற்றோர், வீடு என விசாரித்துக் கொண்டு இருந்த மனிதரிடம், சிறுவன் பயந்துப் பயந்து விவரங்களை கக்கிக் கொண்டு இருந்தான்.

அருகில் வந்தப் பெண்ணின் முகத்தை பார்த்தவர், “என்னம்மா?” என்று கேட்க,

“மாமா... இங்கே எங்கேயாவது பக்கத்துல காபி ஷாப்ல போய் பேசலாம்!”

அவர் சம்மதிக்க, பையன் அங்கிருந்து கழன்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்தான்.

“நான் வீட்டுக்கு கிளம்பறேன், ப்ளீஸ்...”

“டேய்... ஒரு காபி குடிச்சிட்டுப் பேசிட்டு போகலாம்டா, வா வா... ஏன் இவ்வளவு பதட்டமாகுற?”

நண்பனாய் அவன் தோள் மீது கை போட்டு அவர் அழைத்துச் செல்ல, அச்சிறுவன் தான் மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் அவருடன் நடுங்கிக் கொண்டு நடந்தான்.

“ம்... என்ன சாப்பிடறீங்க?”

ஒரு மேசையின் முன்னே அமர்ந்ததும் ரமணன் மற்றவரை பார்த்து கேட்க, புனீத் பதறி அடித்துக் கொண்டு தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தான்.

“அட... நீ எங்க கெஸ்ட்டுடா, உன்னை எப்படி அப்படி விட முடியும்?” என்றவர் சிறுமியின் பக்கம் திரும்பி, “நீ சொல்லும்மா... இவனுக்கு என்ன பிடிக்கும்?” என்று வினவ, அவளோ பேய் விழி விழித்தாள்.

மதியோ, “ஹஹா மாமா... பிள்ளைங்க ரொம்ப பயப்படுதுங்க, விடுங்க!” என்று நகைத்தாள்.

முறுவலித்தவர், “ஓகே... எல்லோருக்கும் கோல்ட் காபி ஆர்டர் பண்ணலாம். காபி, டீ பிடிக்காதவங்க கூட கோல்ட் காபி குடிக்காம இருக்க மாட்டாங்க!” என்றபடி அதையே ஆர்டர் செய்தார்.

“ஆக்ட்சுவலி மாமா... நாம இவங்களை ஐஸ்க்ரீம் பார்லருக்கு கூட்டிட்டுப் போய் இருந்து இருக்கனும், பையன் அது தான் ஆசைப்பட்டு இருக்கான்!”

மதியின் கேலியில், “அப்படியாடா புனீத்?” என்று அவரும் வம்பில் இறங்கினார்.

அவனோ குனிந்த தலை நிமிராமல், கண்களில் நீர் மல்க அமர்ந்து இருந்தான்.

அதைக் கண்டு தவித்த கீர்த்தி, “ஸாரி புனீத்!” என்றாள் வேகமாக.

“ஹேய்... என்ன ஆச்சு?” என்று அப்பொழுது தான் அவன் முகத்தை சரியாக கவனித்தார் ரமணன்.

அவன் அவசரமாக கண்களை துடைத்துக் கொள்ள, “சியர்அப் மை பாய்... உன்னை நாங்க டீஸ் பண்ணலை, ரிலாக்ஸ் பண்ணத் தான் நினைச்சோம்!” என்று அவனை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினார்.

“இட்ஸ் ஓகே அங்கிள்... நான் கிளம்பறேனே...” என்றான் மீண்டும் தவிப்புடன்.

“நோ புனீத்... நாம கொஞ்சம் பேசறது பெட்டர்னு நினைக்கறேன். உன் மேலே தப்பு இல்லைன்னா நீ எதுக்காகவும் பயப்பட வேணாம். நாங்க உங்களை கிரிட்டிஸைஷ் பண்ண ட்ரை பண்ணலை. உங்களுக்கு ஒரு வெல்விஷரா சப்போர்ட் பண்ணத் தான் நினைக்கறோம்!”

பெரியவரை ஆச்சரியமுடன் நோக்கியவன், “அப்போ... நீங்க எங்க பேரண்ட்ஸ் கிட்டயோ, ஸ்கூல்லயோ எங்களை மாட்டிவிட நினைக்கலையா?” என்று கேட்டான்.

“நோ... நாட் அட் ஆல்!” என்றவர் கண்சிமிட்ட, அவனின் முகமும் அமைதியானது.

“ஓகே... கோல்ட் காபி வந்தாச்சு, ரிலாக்ஸா குடிங்க!” என்று அவரே இருவருக்கும் எடுத்துக் கொடுக்க, பிள்ளைகளின் மனதில் அவர் மீது பெரும் பிரமிப்பு தோன்றியது.


**********


“ஓகே... ஜோக்ஸ் அப்பார்ட். மதியை நான் ஏன் செலக்ட் பண்ணேன் தெரியுமா? அவள் எந்த இடத்துலயும் மதுவோட வளர்ச்சிக்கு தடையா இல்லை, அதாவது அவனை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணலை. அவளும் அதே மாதிரி ஒரு நல்ல பொஸிஸன்ல படிச்சு வாழ்க்கையில முன்னேறி காண்பிச்சா.

இப்படி ஒரு பொறுப்பான நல்லப் பொண்ணு, நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்குமேன்னு என்னை யோசிக்க வைச்சா. அவளா எங்கேயும் தான் காதலை நிரூபிக்கலை, நாங்களே பிடிச்சுப் போய் பொண்ணு கேட்டோம். அப்படி அவளே தான் விருப்பத்தை சொல்லி இருந்தாலும், நான் சந்தோசமா இவங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருப்பேன்!” என்று அவர்களின் முகம் பார்த்தார்.

இருவரின் தலையும் லேசாக அசைய, “கீர்த்தியை நினைச்சா இந்த அன்பும், மரியாதையும் உன் பேரன்ட்ஸுக்கு வர்றனும். அதே போல உன்னை நினைச்சு அவளோட பேரன்ட்ஸுக்கும் ரொம்ப பொறுப்பான பையன், தான் பொண்ணை நல்லா பார்த்துப்பான் அப்படின்னு ஒரு எண்ணம் வரனும்... புரியுதா?” என்று வினவினார்.

அவன், “எஸ் அங்கிள்!” என்றும் அவள், “புரியுது பெரியப்பா!” என்றும் ஏற்றுக் கொண்டனர்.


**********


Most Popular