Kanne Kalaimaane 5 - Deepa Babu

 


*5*


சுவாதினமாக தனக்கு ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்த இளங்கதிர் கவரிலிருந்த அலுமினியம் ஃபாயில் டப்பாக்களை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, "நான் கீழே வந்ததிலிருந்தே அவள் என் கண்களில் தென்படவில்லை!" என்று அலட்சியமாக கூறியபடி பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் சேர்த்து அவர்களிடம் ஆளுக்கொன்றாக நகர்த்தி வைத்தான்.

இருபெண்களும் திகைப்புடன் திரும்பி ஒருவரையொருவர் கலவரத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

"அப்பொழுது அவள் வீட்டில் இல்லையா?" என்றாள் அமுதா லேசான பதட்டத்துடன்.

தமக்கையை எரிச்சலுடன் நோக்கி, "இப்பொழுது எதற்காக நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள்? எல்லாம் தெரிந்து தானே அவள் இங்கே வந்தாள். அப்புறம் என்ன?" என்றுவிட்டு விழிகளை கூர்மையாக்கியவன், "சொன்னீர்கள் தானே?" என சட்டென்று தோன்றிய சந்தேகத்துடன் வினவினான்.

"ம்... ஆமாம்... ஆமாம்... இந்த திருமணத்தில் யாருக்குமே விருப்பமேயில்லை என்று தெளிவாக சொல்லி விட்டோம்!" என்றார் கனகா வேகமாக.

பிறகென்ன? என்பது போல் அசட்டையாக தோள்களை குலுக்கியபடி சாப்பிட ஆரம்பித்தான் கதிர்.

குழப்பத்துடன் அமர்ந்திருந்த கனகாவை கண்டவன், "ஏற்கனவே உணவு நேரம் தாண்டி விட்டது, உங்கள் உடல்நிலை இருக்கும் அழகிற்கு சாப்பிடாமல் இன்னும் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் முதலில் சாப்பிடுங்கள்!" என்றான் கண்டிப்புடன்.

"ம்... இதோ!" என்று விரைவாக தனக்கு முன்னே இருந்த டப்பாவை அருகில் இழுத்துக்கொண்டார் அவர்.

தம்பியின் பார்வை தன்னிடம் திரும்புவதற்குள் தன்னுடையதை படக்கென்று எடுத்துக்கொண்ட அமுதாவிற்கு உணவை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

உள்ளூர இளநகையை நினைத்து வேறு தவித்தவளுக்கு இறுதியாக தன் மகளின் மரணத்தை கேட்டு அவள் வருந்தியதே கண் முன்னே நிழலாடியது.

நெஞ்சம் முழுக்க மண்டியிருந்த முழுவெறுப்புடன் தன் பெண் இருந்து ஆசையுடன் வாழ வேண்டிய பதவிக்கு வாழ வருபவள் அவள் என்கிற தவறான கண்ணோட்டத்தில் உண்டான குமைச்சலுடன் தான் அவளை இங்கே அழைத்து வந்தாள்.

தங்கள் எண்ணம் நிறைவேறினால் போதும் வருபவளை தன் வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ விடக்கூடாது என்று வேறு மனம் துவேசத்துடன் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவை அனைத்தையும் தன் ஒற்றைப் பார்வையாலும், கேள்வியாலும் அமுதாவின் இதயத்தில் இருந்து முழுதாக தகர்த்தெறிந்திருந்தாள் இளநகை.

இதயத்தை எதுவோ பிசைவதை போல் உணர்ந்தவளின் அலைபாய்ந்த விழிகள் டேபிள் மேல் இருந்த கவரில் நிலைத்தது. நான்காவதாக அதில் ஒரு டப்பா வீற்றிருக்கவும் நெஞ்சில் நிம்மதிப் பூக்க தன் தம்பியை வாஞ்சையுடன் நோக்கினாள்.

பரவாயில்லை... மனதில் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் அவனுள் இருக்கும் மனிதாபிமானம் போகவில்லை என்று மலர்ந்தவள், இந்த பைத்தியக்காரப் பெண் வேறு எங்கே போனாள் என்று தெரியவில்லையே என சோர்வுடன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

அவளுடைய உள்ளுணர்வு அவள் எங்கும் வெளியே சென்றிருக்க மாட்டாள் என்றே உணர்த்த, ஏனோ முதலில் அவளை கண்ணால் காண வேண்டுமென்ற உத்வேகம் உந்தி தள்ளியதில் விரைந்து எழுந்தவளை நெற்றிச் சுருங்க திரும்பிப் பார்த்தான் கதிர்.

"அது... டேய்... தயவுசெய்து எதுவும் சொல்லாதேடா. நான் இதோ வந்து விடுகிறேன்!" என்று வேகமாக வெளியேறினாள் அமுதா.

சலிப்புடன் தன் அக்காவை பார்த்தவன் அம்மாவிடம் திரும்ப, அவர் அவன்புறம் திரும்பாமல் மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் உள்ளூர நிம்மதியுடன் தான்.

அவருக்கும் வீட்டிற்கு வந்தப் பெண்ணை பட்டினி போட்டுவிட்டு தான் மட்டும் ருசித்துச் சாப்பிடும் அளவிற்கு கல்நெஞ்சம் இல்லை.

காலையில் காரை விட்டு இறங்கியவுடன் இளநகை ஆவலுடன் தோட்டத்தை ரசித்துப் பார்த்தது அமுதாவிற்கு ஞாபகம் வந்தது. விறுவிறுவென்று அங்கே சென்றவள் அவள் இருந்த நிலையை கண்டு இதயம் கனக்க அசையாது நின்று விட்டாள்.

"அச்சோ... நீ ஏன் இப்படி வாடிப்போய் நிற்கிறாய்? உனக்கு யாரும் சரியாக தண்ணீரே ஊற்றவில்லையா?" என்று தோட்டத்தின் தென்கோடியில் இருந்த சிறு செம்பருத்தி செடி ஒன்றிடம் குனிந்து அதன் இலைகளை வருடியபடி பேசிக் கொண்டிருந்தாள் இளநகை.

"ஐயோ... ஏய்... உன்னை எறும்பு கடிக்கிறதா? இங்கே பார்... உன் மேல் நிறைய கட்டெறும்புகள் மேய்கிறது. கடவுளே... அதனால் தான் நீ இப்படி இருக்கிறாயா. உனக்கு எப்படி வலிக்கும்?" என்று பரிதவித்தவள் விருட்டென்று எழ, அமுதா மறைவாக நின்றுக் கொண்டாள்.

அருகில் இருந்த வாளி எடுத்து நிறைய தண்ணீர் பிடித்தவள் அதை வேகமாக செடியின் மீது விசிறியடித்தாள். அதில் பாதி எறும்புகள் கலைந்து கீழே விழ மீதியை ஒரு குச்சி எடுத்து தட்டிவிட ஆரம்பித்தாள்.

இமைக்காமல் அவளின் செய்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தாள் அமுதா.

செடியை சுற்றி சிறு வட்டமாக குழிப் பறித்தவள் அதில் நிறைய தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு புடவையை லேசாக உயர்த்திப் பிடித்து அதன் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.

"இப்பொழுது எப்படியோ தண்ணீர் ஊற்றியதால் எறும்பு போய்விட்டது. ஆனால் மறுபடியும் வந்து உன் மேல் ஏறும், மருந்து வைத்தால் தான் வராது. நான் இந்த வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு உனக்கு மருந்து பவுடர் வாங்கிப் போட்டு விடுகிறேன். சரியாக போய் விடும் என்ன? நான் இனிமேல் இந்த வீட்டில் தான் இருக்கப் போகிறேன், வேலையெல்லாம் முடிந்து விட்டால் சும்மாத்தான் இருப்பேன் போரடிக்கும்.

என்னை யாருக்கும் பிடிக்காது, அதனால் என்னிடம் யாரும் பேச மாட்டார்கள். அந்த நேரமெல்லாம் நான் இங்கே வந்து விடுகிறேன் நாம் பேசிக் கொண்டிருக்கலாம். அப்புறம் உன்னை மாதிரி காலையிலிருந்து இங்கே இன்னும் கொஞ்ச பிரெண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள்!" என்று அவள் மேலே பேசிக்கொண்டே செல்ல அது எதுவும் அமுதாவின் கருத்தில் பதியவில்லை.

அவள் விழிகள் அந்த வெகுளிப் பெண்ணை நிதானமாக அளவெடுத்தது. இன்று தான் திருமணமான புதுப்பெண் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

காலையில் கதிர் அவள் கழுத்தில் கட்டியிருந்த மாங்கல்ய சரடை தவிர்த்து அங்கே வேறொன்றும் இல்லை.

காதில் பெயருக்கு ஏதோ மொட்டு போன்ற வெளுத்த சிறிய தோடு, கைகளில் அவள் வாங்கிக் கொடுத்திருந்த கண்ணாடி வளையல்கள். புடவை லேசாக உயர்ந்திருந்ததில் தெரிந்த தந்தக் கால்கள் வெறுமையாக இருக்க, அதில் கடலை பிஞ்சென இருந்த விரல்களில் மெட்டி மின்னியது.

கை, கால்களில் மருதாணி பூச்சு எதுவும் இல்லை, தலை நிறைய மல்லிகைப்பூ பந்து இல்லை. சுவாமி பிரசாதமாக கொடுத்த சிறிய பூச்சரம் ஒன்று பின்னலில் சொருகப்பட்டிருந்தது.

இந்த இடத்தில் என் மகள் இளவேணி மணப்பெண்ணாக இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்?

கற்பனையில் தன் பெண் மணமகளாக சர்வ அலங்காரத்துடன் எதிரே வந்து நின்று புன்னகைப் புரிந்தாள்.

தலைநிறைய பூப்பந்தும், சூரிய சந்திர பிரபையுடன் நெற்றிச் சுட்டியும், காதில் பெரிய ஜிமிக்கி மாட்டலும், கழுத்தில் நெக்லஸை அடுத்து அடுக்கடுக்கான ஆரங்களும், கைகளில் வங்கியும் தங்க வைர வளையல்களும், கால்களில் சலங்கை கொலுசும் என பார்க்கப் பார்க்க அவள் மனம் தெவிட்டவில்லை.

அமுதா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இளவேணி மறைந்து அங்கே இளநகை தெரிந்தாள். பளிச்சென்ற தெரிந்த அவளின் வெறுமை இவள் இதயத்தை பலமாக தாக்கியது.

மூன்று நாட்களாக ஒன்றும் அறியாத இந்த பேதைப் பெண்ணின் மீதா நான் இத்தனை வன்மத்தை வளர்த்துக்கொண்டு காத்திருந்தேன் என்றெண்ணியவளின் விழிகள் கலங்கியது.

தன் தோள் மீது கை விழவும் திடுக்கிட்டு திரும்பியவளை கூர்ந்த கனகம், "சாப்பிட வராமல் இங்கே என்ன செய்கிறாய்? அவள் எங்கே?" என்றார்.

லேசாக தொண்டையை செறுமியவள், "ம்... அதோ செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்!" என்று கை காண்பித்தாள்.

"ஏய்... இங்கே வா!" என்று இளநகையை கனகம் அதட்டலுடன் அழைக்க, அதுவரை இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகை மறைந்து முகத்தில் லேசான பதட்டம் சூழ வேகமாக அருகில் வந்தாள் அவள்.

"இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?"

"இல்லை வந்து... மரம், செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்!" என்றாள் அவள் தடுமாற்றத்துடன்.

"ம்... ம்... சரி வா!" என கடுப்புடன் மொழிந்துவிட்டு, “நீ வா!” என்று அமுதாவின் கரம்பற்றி அழைத்துச் சென்றார் அவர்.

அவர்களின் இணைந்தக் கரங்களையே உணர்வற்று பார்த்தபடி பின் தொடர்ந்தாள் இளநகை.

வீட்டிற்குள் நுழைந்தவளை டேபிளுக்கு அழைத்தவர், "இந்தா இதை சாப்பிடு!" என்று ஒரு பாக்ஸை எடுத்து அவள் முன் வைத்தார்.

அதைப் பார்த்தவள், "இல்லை... எனக்கு சாப்பாடு வேண்டாம், பசிக்கவில்லை!" என்றாள் அவரிடம் நிமிர்ந்து தயக்கத்துடன்.

"இங்கே பார்... இந்த வீட்டில் யாருக்கும் உன்னை பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. இன்னும் அந்த பாவத்தை வேறு நாங்கள் சுமக்க வேண்டுமா?" என்றார் கனகா கோபமாக.

அவரை திகைப்புடன் பார்த்தவள் மறுபேச்சின்றி சட்டென்று அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

யோசனையுடன் அமர்ந்த அமுதா உணவருந்தியவாறே அவளை ஓரவிழியில் கவனித்தாள்.

குனிந்த தலை நிமிராமல் உணவருந்திக் கொண்டிருந்த இளநகை ஒவ்வொரு வாயையும் மிகவும் சிரமப்பட்டு தொண்டையில் விழுங்குவது நன்றாக தெரிந்தது.

அன்பில்லாத உணவு எலும்பில் குத்தும் என்ற பழமொழி அவளையுமறியாமல் மனதில் ஓடியது.

மெல்லப் பெருமூச்செரிந்தவள், "அம்மா... நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றாள்.

"நீ ஏமாற்றாமல் ஒழுங்காக சாப்பிடுவாயா... இல்லை உன் தம்பியை கூப்பிடட்டுமா?" என்று அவர் மிரட்ட தலையில் கை வைத்துக் கொண்டாள் அவள்.

"ஐயோ அம்மா... தயவுசெய்து படுத்தாமல் போங்கள். நான் ஒழுங்காக சாப்பிடுவேன்!" என்று அவரை அனுப்பி வைத்தாள்.

தலைக்குனிந்திருந்தாலும் இடையில் அவர்களின் பேச்சைக் கேட்டு இளநகையின் பார்வை தங்கள் புறம் பாய்ந்து மீண்டதை கவனித்திருந்தாள் அமுதா.

"இந்த தண்ணீரை குடித்துவிட்டு நிதானமாகவே சாப்பிடு, ஒன்றும் அவசரமில்லை!" என்று அவளிடம் தண்ணீர் பாட்டிலை நகர்த்தி வைத்தாள்.

சம்மதமாக தலையாட்டியவள் மெதுவாக பாட்டிலை எடுத்து நீரைப் பருகினாள். அவளை கனிவோடு பார்த்த அமுதா அதற்குமேல் எதுவும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

தன் உணவை முடித்துவிட்டு இளநகையை திரும்பிப் பார்க்க அவள் உணவை அளைந்தபடி திணறிக் கொண்டிருந்தாள்.

"சாப்பிடவில்லையா நீ?"

"இல்லை... சாதம் அதிகமாக இருக்கிறது என்னால் சாப்பிட முடியவில்லை!" என்றாள் அவள் தயக்கத்துடன்.

"சரி பரவாயில்லை, முடியவில்லை என்றால் விட்டுவிடு குப்பையில் போட்டு விடலாம்!"

"அச்சோ... வேண்டாம் வேண்டாம், நான் மூடி வைத்து நைட் சாப்பிட்டுக் கொள்கிறேன்!"

"ஏய்... ச்சீ... ச்சீ... வேண்டாம் நைட் வேறு சமைத்துக் கொள்ளலாம் கொடு!" என்று அவள் பாக்ஸிற்காக கை நீட்டினாள்.

வேகமாக கைகளை பின்னுக்கு இழுத்தவள், "இல்லை பரவாயில்லை, எங்கே போட வேண்டுமென்று சொல்லுங்கள் நானே போட்டு விடுகிறேன்!" என்றாள் அவசரமாக.

"சரி வா!" என்று புன்னகையுடன் அழைத்துச் சென்ற அமுதாவை வியப்புடன் பார்த்தாள் இளநகை.

அதைக் கண்டும் காணாதவாறு கைகளை அலம்பிக்கொண்டு வந்தவள் சோபாவில் சாய்ந்தமர்ந்தாள். இளநகை கூச்சத்துடன் டைனிங் வாயிலில் நின்றிருக்க கண்டவள் அவளை அருகில் அழைத்தாள்.

"ஏன் நின்றுக் கொண்டே இருக்கிறாய்? இப்படி உட்கார்!" என்று தனக்கு அடுத்திருந்த ஒற்றைச் சோபாவை காட்டினாள்.

அமர்ந்தவளையே சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்தவள் பின் கைகளில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதை வாசிக்கும் போர்வையில் அவளின் நடவடிக்கைகளை ஆராய்ந்தாள்.

சற்று நேரம் தலைக்குனிந்து அமர்ந்திருந்த இளநகை பிறகு மெதுவாக நிமிர்ந்து அமுதாவை பார்க்க, அவள் தீவிரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தாள்.

சிறுவயதிலிருந்தே சுந்தரி அவளை புத்தகங்கள் படிக்க அனுமதிக்காததால் பத்தாவது வரை படித்த பாடப்புத்தகங்கள் தான் அவளுடைய கடைசி வாசிப்பு. அதன்பிறகு எந்த வாய்ப்பும் அமையாமல் வாசிப்பின் மீதான ஆர்வமே அவளுக்கு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

இளநகை முன் இருந்த டீபாயில் செய்தித்தாள்களும், மேகஸைன்களும் அடுக்கி வைத்து இருந்தாலும் அதை எடுத்துப் படிக்க தோன்றாமல் சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவள்.

No comments:

Post a Comment

Most Popular