*3*
தன்னை எரித்து விடுவதை போல் பார்த்துவிட்டு விலகிச் சென்றவன் தனது இருசக்கர வாகனத்தை அந்த இடமே பலமாக அதிரும்படி உதைத்து வேகமாக முறுக்கிவிட்டு கிளப்பிச் சென்றதிலேயே அவனுடைய கோபத்தின் அளவு உறைக்க அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள் ரித்திகா.
'இந்தக் கோபம் என் மீதா? ஆனால் ஏன்... நான் என்ன செய்தேன் அவனை?'
'ஒருவேளை அவனுடைய வேலைக்கு இடையூறாக வந்து விட்டேன் என்று எதுவும் எரிச்சலா? இல்லையே அப்படியும் சொல்ல முடியாதே... என்னை இங்கே முதலில் பார்த்ததும் முகத்தை தான் சுளித்துக்கொண்டு எழுந்துச் சென்றானே தவிர ஆத்திரம் கொள்ளவில்லையே...' என்று குழம்பினாள்.
இறுதியில், 'யெஸ்... கரெக்ட், நான் அவனுடைய பெயரை சொல்லி அழைத்ததும் தான் கோபமாக திரும்பிப் பார்த்தான். அப்படியென்றால் நான் அவனை அறிந்துக் கொண்டதை விரும்பவில்லையா அவன்?' என்று அந்தக் கோணத்தில் சிந்தனையை பறக்க விட்டாள்.
'அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... முதலில் நீ இதற்குப் பதில் சொல். இவன் எப்படி இங்கே இருக்கிறான்? இவனுடைய சொந்த ஊர் இது இல்லையே... இவனை பற்றி நீ தகவல் சேகரிக்காத இடமே இல்லை எனும்பொழுது இந்த ஊர் மட்டும் எப்படி விடுபட்டு இருக்கும்?' என்று அவள் தலையில் இருக்கும் ஜந்து வேறு அதிமுக்கியமாக அவளிடம் தன் கேள்வியை எழுப்பியது.
'சரி தானே... இவன் மீது எத்தனை நம்பிக்கை வைத்து அனைவரிடமும் சவால் விட்டு எவ்வளவு எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். ஆனால் ஒரே நாளில் அத்தனையையும் தரைமட்டமாக்கி விட்டானே... அதுமட்டுமா? கடந்து நான்கு வருடங்களாக இவனை பற்றி நான் தகவல் தேடாத இடமே இல்லை. எங்கே சென்றாலும் பூஜ்யமே முடிவாக இருக்க, கூகுள் தேடுதல் இயந்திரத்தையே ஏமாற்றிவிட்டு இங்கே வந்து இவன் ஒளிந்து இருக்கிறானே... இதற்கு என்ன அர்த்தம்?' என்று ஒன்றும் புரியாமல் மண்டை காய்ந்தாள்.
பான்ட் பாக்கெட்டில் இருக்கும் அலைபேசி தன் இருப்பை உணர்த்தி அவளுக்கு அழைப்பு விடுக்க, சின்ன சலிப்புடன் அதைக் கையில் எடுத்தாள்.
"ஆங்... அம்மா, குட்மார்னிங்!"
"ஏய்... இப்பொழுது தான் நான் தாத்தாவிடம் பேசினேன். நீ தனியாக அருவிக்கு சென்று இருக்கிறாயாமே?" என்று அதட்டினார் காஞ்சனா.
"ப்ச்... இந்த தத்து வேறு வேலையே இல்லையென்று உன்னிடம் போட்டுக் கொடுத்து விட்டாரா? நான் தான் குளிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேனே!" என கடுப்புடன் மொழிந்தாள்.
"அவராக ஒன்றும் சொல்லவில்லை, உன்னிடம் பேசலாம் என்று அழைத்தப் பொழுது தான் தகவல் சொன்னார்!"
'அதுதான் தெரியுமே... நீ எப்படிப்பட்ட கில்லாடி? என்னிடம் பேச வேண்டும் என்றால் என் நம்பருக்கு அழைக்க வேண்டியது தானே, அதை விட்டு விட்டு உன் மாமனாருக்கு அழைத்தால் தானே என்னை பற்றி தகவல்கள் சேகரிக்க வசதியாக இருக்கும்!' என உள்ளுக்குள் நொடித்தாள்.
"என்ன சத்தத்தையே காணோம்?"
"ம்... ரோட்டில் நடந்துப் போய் கொண்டிருக்கும் பொழுது, உன்னிடம் பேசியபடியே நடந்தேன் என்றால் இந்த ஊர் ரோடு இருக்கின்ற அழகிற்கு எங்காவது விழுந்து வார வேண்டியதாக இருக்கும் பரவாயில்லையா?" என்றாள் ரித்திகா நக்கலாக.
"ஓ... கிளம்பி விட்டாயா? சரி சரி பார்த்துச் செல், பை!" என அழைப்பை துண்டித்தார்.
உண்மையில் ரித்துவும் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தாள் தான், அவனை கண்டபிறகு அவள் மனதில் இருந்த இயற்கை ரசிகை அடி ஆழத்தில் ஓடி ஒளிந்துக்கொண்டு மற்றொரு ரசிகையை வெளியே தள்ளி விட்டாள். அவள் வந்த பிறகோ இவள் மனம் அதை தவிர்த்து வேறெதிலும் ஈடுபட மறுத்தது. நெஞ்சம் மீண்டும் பரத்தை சுற்றி வந்து அவன் நடவடிக்கையை தீவிரமாக ஆராய்ந்தது.
ஆ... என வழியில் உள்ள சிறுகல் ஒன்று நொடிக்க தடுமாறியவள், காலை நேராக்கி நின்றாள்.
'உஃப்... நல்லவேளை சமாளித்தேன், இல்லையென்றால் அம்மாவிடம் வேடிக்கையாக சொன்னதுப் போலவே கீழே விழுந்து வாரியிருப்பேன். டாமிட்... எல்லாவற்றிற்கும் காரணம் அவன் மட்டும் தான், நியூரான்களில் சம்மணமிட்டு அமர்ந்து குடையோ குடை என்று குடைகிறான். இந்த லட்சணத்தில் என்மீது கோபித்துக்கொண்டு அவமதித்துச் செல்கிறான் வேறு துரை. அவன் மட்டும் என் கையில் வசமாக மாட்டட்டும் அப்பொழுது இருக்கிறது அவனுக்கு...' என பல்லைக் கடித்தவள் அதிர்ந்தாள்.
'ஐயோ... நிமிடத்திற்கும் குறைவாக என் கண்ணில் பட்டு மறைந்து விட்டவனை நான் மீண்டும் எங்கிருந்து எப்படி தேடுவது? நான்கு வருடங்களாக அவனை பற்றி ஒரு தகவலும் தெரியாமல் எவ்வளவு சோர்ந்துப் போனேன். இப்பொழுது கைக்கு எட்டும் தூரத்தில் அவன் கிடைத்தும் தொலைத்து விட்டேனே... இந்த இடத்தில் இருக்கின்றான் என்றால் வசிப்பிடமே இங்கே தானா அல்லது தென்காசி பக்கம் எதுவும் சுற்றுலா போல வந்திருப்பவன் இங்கேயும் பார்வையிட வந்தானா? அப்படியல்லாமல்... ஒருவேளை அது அவனே கிடையாதா வேறு யாராவது இருக்குமா?' என்று மறுபடியும் குழம்ப ஆரம்பித்தாள்.
தன்னுடைய பள்ளி இறுதி ஆண்டுகளில் இருந்து அவன் மீது அவ்வளவு மோகம் கொண்டிருந்தாள் நம் ரித்திகா. போனில் வைத்திருந்த வால்பேப்பரில் இருந்து, அனைத்து ஃப்ரொபைல் புகைப்படங்கள், வீட்டில் அவள் அறையில் ஸ்டடி டேபிளில் ஒட்டப்பட்டு இருந்த சிறு சிறு ஸ்டிக்கர்கள் என அனைத்திலும் அவன் உருவம் தான்.
விட்டிருந்தால் அவள் அறை சுவரிலிருந்து வீட்டுச் சுவர் முழுவதுமே கூட அவனுடைய போஸ்டர்களை ஒட்டியிருப்பாள். ஆனால் அதற்கு அவள் தந்தை ஒப்புக்கொள்ளாமல் எகிறவும் தான், கொஞ்சம் ஓவராக தான் போகிறோமோ என தன்னை சற்று அடக்கிக் கொண்டாள் பெண். அந்த அளவிற்கு அவன் மீது பைத்தியமாக இருந்தாள் அவள். தன்னுடைய கருத்தை வெற்றியடைய வைக்கப் போகும் நம்பிக்கை நாயகனாகவே அவனை தன் மனதில் உருவேற்றிக் கொண்டாள்.
"அட குட்டிம்மா... பரவாயில்லையே, சொன்னதுப் போலவே சீக்கிரம் வந்து விட்டாயே..." என குதூகலித்த பெரியவர், "சரி வா சாப்பிடலாம்!" என்று வீட்டிற்குள் நுழைந்த பேத்தியை உணவருந்த அழைத்தார்.
"ப்ச்... தத்து... நான் தான் கோவிலில் சாப்பிட்டதே போதும் என்று சொன்னேன் இல்லை. அப்புறம் என்ன? விடுங்கள்!" என சென்று கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவள் பரத்தின் நினைவால் மனதில் உண்டாகிய அழுத்தத்தின் விளைவு தன் நெற்றியில் தெறிப்பதை உணர்ந்துக் கொண்டாள்.
பேத்தி சலித்தபடி சென்றுக் கட்டிலில் அமர்ந்து நெற்றிப் பொட்டை வேறு அழுத்திவிடவும் அருகில் வந்தவர், "என்னடாம்மா தலைவலி எதுவும் வந்து விட்டதா?" என்று ஆதரவாக அவள் தலையை தடவினார்.
மனச்சோர்வு உடலையும் சேர்ந்துப் பாதிக்கத் துவங்க சில நிமிடங்களாக தொல்லை கொடுக்கும் தலைபாரத்தை தாங்க முடியாமல் தாத்தாவின் வயிற்றில் தலையை சாய்த்துக் கொண்டவள், ம்... என்று முனகினாள்.
"அருவிக்கு செல்லும் வரை நன்றாக தானே இருந்தாய், ஒருவேளை பழக்கமில்லாமல் மலை மீதேறி உடலுக்கு அதிக உழைப்பை கொடுத்து விட்டதால் தலைவலி வந்து விட்டதோ!" என்று உரக்க யோசித்தார்.
"தத்து... அது என்ன இமயமலையா? ஜஸ்ட்... நூற்றைம்பது படிகற்களை கொண்ட சிறு குன்று தானே!"
"ஆமாம்... ஆனால் உனக்கு தான் வலிக்கிறது என்கிறாயே!" என்று அவர் கவலையுடன் முகம் பார்க்கவும் மெலிதாக புன்னகைத்தவள், "கொஞ்ச நேரம் நன்றாக படுத்து தூங்கி எழுந்தால் சரியாக போய்விடும் தத்து!" என்று எழுந்தவளை வேகமாக தடுத்தார் முதியவர்.
"சரி அப்பொழுது இரு... உனக்கு சூடாக சுக்கு காபி போட்டு தருகிறேன், தலைவலிக்கு நல்ல இதமாக இருக்கும்!" என்று சமையலறைக்கு விரைந்தார்.
சின்ன சிரிப்புடன் சிவலிங்கத்தின் அன்பை ரசித்தவாறே அவருடன் நடந்தாள் ரித்திகா.
***
"தாத்தா..." என்று வாசலில் இருந்து ஆண் குரல் ஒன்று அழைக்கவும், அலைபேசியில் ஏதோவொரு வீடியோவில் தன்னை மூழ்கடித்து இருந்த ரித்து திரும்பி பின் பக்கமுள்ள தோட்டத்தை எட்டிப் பார்த்தாள்.சற்று முன்னர் தான் மதிய உணவு முடித்து குட்டித்தூக்கம் போட்டு எழுந்து வந்திருந்தார் தாத்தா. பின்னால் உள்ள கொய்யா, மா, சப்போட்டா போன்ற பழ மரங்களுக்கும், காய்கறி, பூச்செடிகளுக்கும் இயற்கை உரம் வைக்க வேண்டி மாணிக்கத்திடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் சொல்லி வைத்திருக்க, அவன் அனுப்பிய ஆளுடன் அங்கே தோட்டத்தில் ஐக்கியமாகி இருந்தார் சிவலிங்கம்.
"தாத்தா..."
இம்முறை குரல் சற்று உரக்க ஒலிக்கவும், இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் நன்றாக இராது என்று எழுந்து வேகமாக வாசலுக்கு வந்தாள் நாயகி.
தன் வீட்டு வாசலில் தாத்தாவை அழைத்துக்கொண்டு நின்றிருந்தவனை கண்டு அவளுக்கு அப்படியே மயக்கம் வராத குறைதான். நம்ப முடியாத பிரமிப்பு அவளுடைய சுணக்கத்தை பின்னால் தள்ளி, தான் முன்னால் முந்திக்கொண்டு அவள் மனதை படபடக்க செய்தது.
அங்கே அவளை சுத்தமாக எதிர்பார்த்திராத அவனுக்குமே இம்முறை பெரும் திகைப்பு தான் போலும்.
ஆனால் ஓரிரு கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டவன் அலட்சியத்துடன் அவளை தாண்டி வீட்டினுள் பார்வையை செலுத்தி சிவலிங்கத்தை சல்லடையிட்டு தேடினான்.
பார்வைக்கு அவர் கிடைக்கவில்லை எனவும் சுணங்கிய மனதை அடக்கி , "தாத்தா இல்லையா?" என்று அவளிடம் நேரடியாக சற்று எரிச்சலுடன் வினவினான்.
அவனுடைய கடுகடு கேள்வியும், நெற்றியில் சுளித்திருந்த புருவங்களும் அவளை இவ்வுலகிற்கு மீட்டு வர, தன்னை கண்டு அவனுக்கு அவ்வளவு அலட்சியமா என்று சினம் கொண்டவள் பின் அதனை அடக்கி அவன் பாணியிலேயே திருப்பி அசால்டாக பதிலடி கொடுத்தாள்.
"இருக்கிறார்..." என்று கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு நிதானமாக கதவின் நிலையில் சாய்ந்தவள், கிருஷ்ண பரமாத்மா போல் சாவதானமாக ஒரு காலை தரையில் ஊன்றியும் மறுகாலை அதற்கு குறுக்காக லேசாக மடக்கி விரல்களால் ஊன்றியும் நின்று அவனை கடுப்பேற்றினாள்.
ரித்துவின் செயலால் கொந்தளித்த பரத், 'யாரிவள்?' என்று பொருமியபடி அவளை முறைத்துப் பார்த்தான்.
அவன் முகத்தில் நன்றாக எள்ளும், கொள்ளும் வெடிப்பதை ரசித்தவளுக்கு உள்ளூர இன்னொன்றும் தோன்றி பெரும் உவகை கொள்ளச் செய்தது.
'தாத்தாவை தேடி வருகிறான் என்றால் இவனை பற்றிய விவரங்கள் நிச்சயம் நம் தாத்தாவிற்கு தெரிந்திருக்கும். ஹுர்ரே...' என உள்ளுக்குள் குதியாட்டம் போட்டவளிடம், 'ஏன்டி? நீ சந்தேகம் கொண்டது போல் ஒருவேளை இவன் பரத் இல்லையென்றால்...' எனவும் உள்ளம் தன் ஆட்டத்தை நிறுத்தி சோர்ந்து சுருண்டுப் படுத்துக்கொண்டது.
தான் தாத்தாவை பற்றி விசாரித்தப் பிறகும் தெளிவாகப் பதிலளிக்காமல் அவரையும் கூப்பிடாமல் மிகவும் திமிராக வாசலில் ஒய்யாரமாக சாய்ந்து தன்னை வெறுப்பேற்றிக் கொண்டு நிற்பவளை கண்டு பரத்திற்கு சகிக்க முடியா கோபம் பொங்கியது.
எவ்வளவு நேரம் தான் இப்படியே வாசலில் அசிங்கமாக நிற்பது என்றெண்ணி அவளை உறுத்து விழித்தவன் சட்டென்று முடிவெடுத்து அவளை தாண்டி கடகடவென்று வீட்டிற்குள் சென்றான்.
'இங்கே பாருடா... அவ்வளவு உரிமையா?'
"தாத்தா... தாத்தா..." என்று நடுக்கூடத்தில் நின்று அவன் சத்தமாக அழைக்க, "யாரது? இதோ வருகிறேன்!" என பதில் குரல் கொடுத்தபடி சிவா வீட்டினுள் வந்தார்.
அவனை கண்டதும் வேகமாக முகம் மலர்ந்தவர், "அடடே... பரத் நீயாப்பா? வா வா, உட்கார்!" என்று அவனுக்கு அங்கே இருந்த இருக்கை ஒன்றை கை காட்டினார்.
'பரத்... சந்தேகமே இல்லை, இவன் பரத் சீனிவாசனே தான்!' என தனக்குள் உறுதி செய்துக் கொண்டாள் ரித்திகா.
தன்னெதிரே நின்றுக்கொண்டு கூர் அம்பென துளைக்கும் விழிகளால் தன்னை கூறு போடுபவளுக்கு முன்பு தான் காட்சிப் பொருளாவதை விரும்பாத பரத் அவரிடம் மறுத்து தலையசைத்தான்.
"இல்லை தாத்தா... எனக்கு வேலையிருக்கிறது. உங்களிடம் இதை கொடுக்கத்தான் வந்தேன் நான் கிளம்புகிறேன்!"
"அட... என்ன நீ? இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என்றால் உனக்கு இன்று நைட் ஷிப்டாக தானே இருக்கும். அதற்குள் அப்படியென்ன அவசர வேலை இருக்கிறது? வீட்டிற்குள் வருவதே எப்பொழுதாவது தான் வருகிறாய், முதலில் உட்கார்!" என்று அவன் கரம்பற்றி கட்டாயமாக இழுத்து வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தார்.
'ஷிப்டா... இங்கே வேலை பார்க்கிறானா இவன்?' என்று அவனை திகைப்புடன் நோக்கினாள் ரித்து.
"என்ன இது?" என்று அவன் தன் கையில் கொடுத்ததை பிரித்துப் பார்த்தவர் பளீரென்று புன்னகைத்தார்.
"ஏய்... என்னப்பா நீ? நான் சும்மா விளையாட்டிற்கு சொன்னால் நீ உண்மையாகவே வரைந்து விட்டாயா... ப்ரேமெல்லாம் போட்டு மிகவும் அருமையாக இருக்கிறது. குட்டிம்மா... இங்கே பார்த்தாயா உன் தாத்தாவை... எப்படி இருக்கிறேன்?" என்று ஆவலுடன் அந்தப் படத்தை தன் பேத்தியிடம் காண்பித்தார் பெரியவர்.
அருகில் வந்து அதை கைகளில் வாங்கிப் பார்த்தவள் உண்மையில் வியந்து தான் போனாள்.
'காட்... இவனுக்குள் இப்படியொரு திறமையான ஓவியர் ஒளிந்திருக்கிறாரா?'
"பார்... அறிமுகப்படுத்தவே மறந்து விட்டேன். பரத்... இவள் என்னுடைய பேத்தி வடநாட்டில் இருந்து ஓய்விற்காக வந்திருக்கிறாள். அப்புறம்... குட்டிம்மா, இவன் பெயர் பரத் நம்முடைய பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறான். ரொம்பவும் நல்லப்பையன்!" என்று சான்றிதழ் வழங்கினார்.
'வாவ்வ்வ்வ்... பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் தானா நீ? ரொம்பவும் வசதியாகப் போயிற்று!' என்று தன் நினைவில் துள்ளிக் குதித்தவளை, "குட்டிம்மா..." என்றழைத்து சிவா கலைக்கவும் சுதாரித்தவள் லேசாக அசடுவழிந்தாள்.
பின் தீவிரமாகி, "ஓ... இவர் ஆர்டிஸ்ட்டா தாத்தா?" என்று தாத்தாவிடம் கேள்விக் கேட்டாலும் பார்வை என்னவோ தன்னெதிரே இறுகிப் போய் அமர்ந்திருக்கும் அவனை தான் தேவையில்லாமல் சீண்டிக் கொண்டிருந்தது.
"என்னம்மா? புரியவில்லையே..."
"ஷ்... சாரி, ஓவியரா என்று கேட்டேன் தத்து!"
"அட இல்லைம்மா... நம் பரத் பக்கத்து ஊர் சர்க்கரை ஆலையில் கரன்ட் எடுக்கிற பகுதியில் சூப்பர்வைஸராக வேலை செய்கிறான். ஓவியம் வரைவது அவனுடைய பொழுதுபோக்கு!" என்று விளக்கமளித்தார்.
'ஆஹான்... சுகர் மில்லில் வேலை செய்கிறானா...' என அவள் மூளை ஒருபுறம் தகவல்களை சேகரித்து வைத்தது.
அதேசமயம் வெளியில், "ஓ..." என்று அளவிற்கு அதிகமாக இழுத்தபடி அவனெதிரே இருந்த கயிற்றுக் கட்டிலில் சென்று சுவாதீனமாக அமர்ந்தவள் கைகளை பின்னால் ஊன்றி, "அப்புறம் சாருக்கு வேறென்ன எல்லாம் பொழுதுபோக்கு இருக்கிறது?" என்று அசட்டையாக கேட்டாள்.
கை முஷ்டிகளை இறுக்கியவனின் விழிகளில் தீப்பொறி பறப்பதை பார்த்தும், நான் எதற்கும் அசரமாட்டேன் என்பது போல் அவனை நேர்பார்வையாக பார்த்தாள் ரித்திகா.
"இல்லைம்மா... எனக்கு தெரிந்து வேறெதுவும் இல்லை. அப்படித்தானே பரத்?" என்று அவனிடம் தன் சந்தேகத்தை வேறு கேட்டார் பெரியவர்.
வேகமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டவன், "ஆமாம் தாத்தா!" என்றான் அமைதியாக.
"ஆங்... சரி இரு, நான் போய் உனக்கு பலகாரம் எடுத்து வருகிறேன்!" என்று எழுந்தவரை விரைந்து தடுத்தான் பரத்.
"இல்லை தாத்தா, அதெல்லாம் வேண்டாம்..." என மறுத்து உடன் எழுந்தவனை மீண்டும் நாற்காலியில் தள்ளியவர், "அசையக் கூடாது... அப்படியே உட்கார்ந்திருக்கிறாய். இதோ வருகிறேன்!" என்று உத்திரவிட்டு உள்ளே விரைந்தார்.
ப்ச்... என பெரும் சலிப்போடு வெளிப்புறம் திரும்பியவனை அப்பொழுது தான் முழுமையாக ஆராய்ந்தாள் ரித்திகா.
நான்கு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்பொழுது இன்னும் வாட்ட சாட்டமான வாலிபனாக மாறியிருந்தான் அவன். இருபதுகளின் துவக்கத்தில் ஒல்லியாக இருந்தவன் தற்பொழுது இந்த பின்னிருபதுகளில் ஆண் என்கிற தனி கம்பீரத்தில் விழுந்துப் பார்வைக்கு மிடுக்காக தெரிந்தான்.
தன்னை பார்க்கவே பிடிக்காதவனை போல் வெளிப்புறம் திரும்பியிருந்தவனின் உச்சிமுடியை அழுந்தப் பிடித்திழுத்து தன் முகம் காணச் செய்ய வேண்டும் என்கின்ற ஆவேசம் அவளுக்குள் சுறுசுறுவென்று கிளம்பிய நேரம் பரத்தை காப்பாற்றும் விதமாக சிவலிங்கம் வந்துச் சேர்ந்தார்.
"இந்தாப்பா... இது பாதாம் அல்வா. அப்புறம் இது... ஏதோ... இது பெயரென்ன?" என்று பேத்தியிடம் வினவினார்.
"வெஜிடபிள் கட்லெட்!"
"ஆங்... கட்லெட் சாப்பிடு!" என்று அவனிடம் கொடுத்தார்.
"எதற்கு தாத்தா இதெல்லாம்?" என்று அவன் சங்கடப்பட, "அட... என்னப்பா நீ? குடும்பத்தினரை எல்லாம் விட்டுவிட்டு இவ்வளவு தூரம் வந்து தனிமையில் இருக்கின்றாய். வாய்க்கு ருசியாக ஏதாவது கிடைத்தால் அமைதியாக சாப்பிடுவாயா, அதை விட்டுவிட்டு..." என்று அதட்டினார்.
அவரிடம் மெலிதாக முறுவலித்தவன் சாப்பிட துவங்கவும், 'பாருடா... இந்த கடுவன் பூனை தாத்தாவிடம் மட்டும் இப்படி அழகாக சிரிக்கிறது!' என்று குமைந்தாள் ரித்து.
"சுவை எப்படியிருக்கிறது... நன்றாக இருக்கிறதா?"
"ம்... ரொம்பவும் சூப்பர் டேஸ்டாக இருக்கிறது தாத்தா. இனிப்பும் சரி, உப்பு, காரமும் சரி... சரியான அளவில் பதமாக இருக்கிறது!" என்று மனதார பாராட்டினான் பரத்.
ரித்திகாவின் விழிகள் விஷமத்தில் மின்னும் நேரம், ஆங்... என்று தன் தொடை தட்டிச் சிரித்தார் பெரியவர்.
"நானும் அதையே தான் சொன்னேன்!" என்பதோடு அவர் நிறுத்தி இருந்திருக்கலாம் அதையும் தாண்டி, "என் பேத்தி தான் செய்தாள். போனில் பார்த்துச் செய்தாளா... சுவை எப்படி இருக்கப் போகிறதோ என்று பயந்துக்கொண்டே தான் வாயில் வைத்தேன். ஆனால் நாவில் பட்டதும் சுவையின் அபாரம் ரொம்ப பிடித்துவிட்டது!" என்றார் குதூகலமாக.
இந்த திருப்பத்தை முற்றிலும் எதிர்பார்த்திராத பரத், இவள் சமைத்த உணவா என்று வாயில் மென்றுக் கொண்டிருக்கும் உணவை வெளியில் துப்பவா அல்லது விழுங்கவா என்கிற ரீதியில் தடுமாறி விழிக்க, அவனின் பாவனை கண்ட ரித்து அதுவரை சிரமப்பட்டு இதழுக்குள் பூட்டியிருந்த சிரிப்பை பக்கென்று வெளியே வெடித்துச் சிதற விட்டாள்.
No comments:
Post a Comment