ஒரு விதை உயிர் கொண்டது
இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து சிறு அளவில் அலசி என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறேன். கதையின் கரு பின் பகுதியில் தான் வரும். அதற்குமுன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க நாயகன், நாயகியின் மோதலையும், காதலையும் சுமந்துச் செல்லும் கதை.
*******
கதையிலிருந்து சிறு துளிகள்
இதழ்களில் பரவிய புன்சிரிப்புடன், “மாமா உன்னை காதலிக்கிறாரா மதி?” என ஆர்வத்துடன் கேட்டான் முகேஷ்.
தனக்குள் நடக்கும் களேபரத்தில் அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் நினைவுகளில் உழன்றபடி நடைப்பயின்றுக் கொண்டிருந்தவள் அளித்தப் பதிலில் இவன் அதிர்ச்சியாகி வாயைப் பிளந்து நின்றான்.
“ஐயோ... காதல் எல்லாம் இல்லை...” என அவள் மறுக்க ஆரம்பிக்கவும், ‘அது இல்லையென்றால் வேறு என்ன?’ என்று அவன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு அவளே பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்.
“என் கழுத்தில் தாலி தான் கட்டி விட்டார்!” என்று பரிதாபமாக முகத்தை வைத்தபடி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
‘காதலிக்கவில்லை... கல்யாணமே செய்துக் கொண்டாரா?’
தன் சொல்லில் அசையாமல் சிலையாக சமைந்து விட்டவனை எரிச்சலுடன் நோக்கிவிட்டு அருகில் சென்று அவனை பிடித்துப் பலமாக உலுக்கி எடுத்தாள் நிறைமதி.
“அண்ணா... உன்னிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறேன், என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்!”
ஆங்... என திடுக்கிட்டு விழித்தவன், ம்... ம்... என்றபடி, “அப்பொழுது உனக்கு திருமணம் முடிந்துவிட்டதா?” என்றான் இன்னமும் நம்ப முடியாமல்.
“கடவுளே... தாலி தான் கட்டினார் என்றேன், திருமணம் எல்லாம் இல்லை!” என அசட்டையாக கூறியவளை கொலை வெறியோடு நோக்கினான் முகேஷ்.
“உனக்கு மனதில் பெரிய சின்னத்தம்பி பிரபு என்று நினைப்பா...” என விழிகளை உருட்டினான்.
ஹான்... என விழித்துவிட்டு, “என்ன உளறுகிறாய் நீ?” என்று பெண்ணும் திரும்பி முறைத்தாள்.
“அப்புறம்... கழுத்தில் தாலி கட்டுவதற்கு பெயர் திருமணம் இல்லாமல் வேறு என்னவாம்?” என்று அவனும் பதிலுக்கு எகிறினான்.
“அதைத்தான் நான் உடனே கழற்றி வீசி விட்டேனே...” என மதி வேகமாக மொழியவும், “அடிப்பாவி... என்னடி சொல்கிறாய்? தாலியை கழற்றி வீசி விட்டாயா!” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் முகேஷ்.
‘ஐயோ... என்ன இது? ஆதரவு எதிர்பார்த்து நம்பி விஷயத்தை சொன்ன இவனே இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறான். அப்பொழுது வீட்டில் உள்ள மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?’ என்று அச்சத்தில் மிரண்டுப் போனாள் நம் மனுவின் தர்மபத்தினி.
“கடவுளே... என்னடா நீ இப்படி செய்து வைத்திருக்கிறாய்?” என்று தன் சிகையை அழுந்தக் கோதியபடி தலைகுனிந்திருந்த தங்கையுடன் சேர்ந்து தானும் தவிக்க ஆரம்பித்தான் முகேஷ்.
கீழுதட்டை அழுந்தக் கடித்தபடி மற்றவரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் நாம் என்கின்ற பயத்தில் கைவிரல்களை பிசைந்துக்கொண்டு முகம் முழுவதும் கலவரத்தை சுமந்தபடி பரிதாபமாக நின்றிருந்தவளை காணும்பொழுது நெஞ்சம் உருகித்தான் போனது தமையனுக்கு.
“எப்படி பாப்பா இது நடந்தது? உனக்கும், மாமாவிற்கும் தான் சுத்தமாக எதுவும் ஒத்துப் போகாதே... நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே மாட்டீர்கள். பிறகு எப்படி அவர் உன் கழுத்தில் தாலி கட்டினார்?” என்று விவரம் கேட்டான்.
***
சுகமான உறக்கத்தை விட்டு வெளிவர மனமில்லாதவளோ மகளை மீண்டும் இழுத்துப் பிடித்து அருகில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தாள்.“ம்மா...” என முரண்டுப் பிடித்து அவள் அணைப்பில் இருந்து திமிறி வெளியே வந்தப் பிள்ளை அவளின் கன்னம் தொட்டு எழுப்ப ஆரம்பித்தது.
“பேபி... அம்மாவிற்கு ரொம்ப டயர்டாக இருக்கிறதுடா தங்கம். நான் தூங்க வேண்டும், நீ அப்பாவை எழுப்பு!” என்று விழிகளை திறவாமலே முனகினாள் நிறைமதி.
முகத்தை சுருக்கிய குழந்தை அம்மாவின் மீதேறி உருண்டுப் பிரண்டு முகம் சுளித்த அவளின், “ஏய்...” என்கிற அதட்டலை அலட்சியம் செய்து அப்பாவின் அருகில் சென்று விழுந்தாள்.
தன்னருகில் எதுவோ பொத்தென்று விழுந்ததில் திடுக்கிட்டு விழித்த மன்வந்த், தான் இமைகளை பிரித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்து ஈயென்று உதடு பிரித்து பச்சரிசிப் பற்களை காட்டிய மழலையை கண்டு முகம் கனிந்தான்.
விரிந்தப் புன்னகையுடன், “என் பப்புக்குட்டி... எழுந்து விட்டாயாடா தங்கம்!” என்றவாறு மகளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான் அவன்.
அருகினில் திரும்பிப் பார்க்க மனைவி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தாள். “அதென்ன உன் அம்மாவை விட்டுவிட்டு நீ என்னை வந்து எழுப்பி இருக்கிறாய்?” என்று கண்களை இடுக்கினான்.
நிலாவோ திருதிருவென்று விழித்துவிட்டு தந்தையை பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தது. அதிலேயே தனக்கான விடையை கண்டுக்கொண்டவன் விஷமமாக சிரித்தான்.
“நாம் இரண்டு பேரும் எழுந்து விட்டோம் இல்லை... இவளுக்கு மட்டும் என்ன தூக்கம்?” என போலியாய் மனைவியின் புறம் ஒரு முறைப்பை செலுத்தியவன் மகளிடம் திரும்பி, “அம்மாவை எழுப்பலாமா?” என்று கேட்டு ஒற்றைக் கண்சிமிட்டினான்.
அதில் உற்சாகமானவள் தலையாட்டிக் கொண்டே மதியிடம் தவழ்ந்து செல்ல, இவன் மெதுவாக மனைவியின் முகத்தருகே குனிந்தான்.
அப்பாவின் செயலை கண்டு கிளுக்கிச் சிரித்த குழந்தை மீண்டும் அவனே தன் அம்மாவை நெருங்கவும் வேகமாக தடுத்து, “பாப்பா... பாப்பா...” என தன் நெஞ்சில் கைவைத்து காண்பித்துவிட்டு மதியை நெருங்கினாள்.
சின்ன முறுவலிப்புடன் மகளை பார்த்திருந்தவனின் முகம் அடுத்து அவள் செய்த செயலால் பேயறைந்தது போல் மாறியது.
“ஏய்... குட்டிம்மா!” என பாய்ந்து மகளை தூக்கிக் கொண்டவன், ‘ஐயோ... இவள் முன்னால் இனி கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும்!’ என்று பதற்றத்துடன் மனதில் குறித்துக் கொண்டான்.
No comments:
Post a Comment