*4*
தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த பரத், இவள் சமைத்ததையா நாம் உண்கிறோம் என்று திகைத்துப் போய் பார்க்க, ரித்திகாவோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
இங்கே வந்தது முதலே தன்னை அலட்சியமாய் சீண்டிப் பார்ப்பவளின் மீதிருந்த கோபம் அவளுடைய சிரிப்பால் மேலும் பெருக அவளை உறுத்து விழித்தான் பரத்.
அதை மருந்துக்கும் கண்டுக் கொள்ளாதவள் அவனுக்கு தன் நகைப்பையே பரிசளிக்க, சிவலிங்கம் தான் பேத்தியை வியந்துப் போய் பார்த்தார்.
"என்னம்மா இப்படி சிரிக்கிறாய்?"
"அது... தத்து, நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதர் நான் சமைத்ததாக நீங்கள் சொல்லவும் வாயில் இருப்பதை துப்பி விடுவோமா என்கிற மாதிரி விழித்தாரா... எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. ஓ காட்... எனக்கு வயிறு கூட வலிக்க ஆரம்பித்து விட்டது தத்து!" என்று ஓய்ந்துப் போய் தன் வயிற்றில் கை வைத்தவளின் விழிகளும் கூட லேசாக கலங்கி தளும்பி நின்றிருந்தது.
"அட பிள்ளையே... அதற்காக இப்படியா சிரிப்பாய்?"
தன் தோளிலிருந்த மேல் துண்டால் அவள் விழிகளை மெதுவாக துடைத்துவிட்டு அவனிடம் திரும்பினார்.
"என்னப்பா? குட்டிம்மா சொல்வதை போல சாப்பிடுவதற்கு நீ பயந்தாயா என்ன?"
"அப்படியெல்லாம் இல்லை தாத்தா... நான் சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் பேத்திக்கு தான் லேசாக மற்... அது... ம்... சந்தேகம் தோன்றியிருக்கும் போலிருக்கிறது!" என்று சமாளித்து வாயில் இருந்ததை சிரமப்பட்டு விழுங்கி வைத்தான்.
விழிகள் குறும்பில் மின்ன, 'மறை கழன்றுவிட்டது என சொல்ல வந்தா மாற்றிக்கொள்கிறாய் நீ? உனக்கு என் கையால் பெரிய சங்கு காத்திருக்கிறது மகனே வாடா!' என்று உள்ளுக்குள்ளே எச்சரித்தவள் வெளியே அவனை பார்த்துக் கண்ணடித்து வைத்தாள்.
அவள் செயலில் அதிர்ந்து விழித்தவன் வாயில் இருந்த உணவோடு புரையேறி இருமத் துவங்க, "அடடா... இங்கே தண்ணீர் இல்லை போலிருக்கிறதே, குட்டிம்மா... சீக்கிரமாக போய் தண்ணீர் கொண்டு வா!" என உத்திரவிட்டார் சிவா.
"இதோ தாத்தா!" என்று நல்லப்பிள்ளையென சமையலறை சென்று வந்தவள் அவனிடம் சொம்பை நீட்டினாள்.
வேறுவழியின்றி ரித்துவிடம் இருந்து வேண்டாவெறுப்பாக பெற்றுக்கொண்டவன், தாங்க்ஸ் என்கிற வார்த்தையை மெல்ல முணுமுணுக்க தவறவில்லை.
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தட்டில் இருந்ததை மளமளவென்று காலி செய்த பரத், விடைப்பெறும் விதமாக வேகமாக எழுந்துக்கொள்ளவும் இவள் அவனை பாய்ந்து தடுத்து நிறுத்தினாள்.
"ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்!"
தாத்தாவின் முன்பாக எதையும் வெளிப்படுத்த இயலாமல், "என்ன?" என்றான் தயக்கத்துடன்.
"தாத்தாவை மட்டும் தான் நீங்கள் வரைவீர்களா? என்னை எல்லாம் அதுபோல அழகாக வரைந்து தரமாட்டீர்களா?" என்று தன் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு நாயகனிடம் வினவினாள் பெண்.
முகத்திற்கு மாறாக விழிகளில் வெளிப்பட்ட சீண்டலும், குறும்பும் அவனை வெகுவாக சிந்திக்க தூண்டியது.
தன்னை குறித்த அடையாளம் தெரியாதவர்களின் மத்தியில் நிம்மதியாக நாட்களை கடத்தவென்று வந்திருந்தவனுக்கு முதலில் அவள் தன்னை அடையாளம் கண்டுக்கொண்டதே சற்றும் பிடிக்கவில்லை. அதற்கும் மேலாக அவள் இவனை விளையாட்டாக என்றாலும் சீண்டுவது போலவே நடந்துக்கொள்வது இவனுடைய தன்மானத்தை வெகுவாக தட்டி எழுப்பி சந்தேகத்தை உருவாக்கியது.
பேத்தியின் கேள்வியால் தாத்தாவிற்கு தான் ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்தது.
'என்ன இருந்தாலும் ஒரு வாலிப பையனிடம் தான் எப்படி இளவயதுப் பெண்ணை வரைந்து தரச்சொல்லி கேட்பது?' என்று ரித்துவை தடுத்து நிறுத்தும் மார்க்கம் புரியாமல் குழம்பி நின்றார் பெரியவர்.
"அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்?"
"சாரி... இது ஜஸ்ட் என்னுடைய பொழுதுப்போக்கு தான். வெளியாட்கள் யாருக்கும் நான் வரைந்துக் கொடுக்கின்ற பழக்கமில்லை!" என்று மறுத்தான் பரத்.
"அது எப்படி? என் தாத்தா உங்கள் குடும்பத்தை சேர்ந்தவரா என்ன?" என்று இடக்காக வினா எழுப்பினாள் ரித்து.
பரத் சலிப்புடன் வாயை திறக்கும் முன் பெரியவர் முந்திக்கொண்டார்.
"ஏன்மா? என்னிடம் போட்டோ எதுவுமில்லை என்று பரத் வரைந்துக் கொடுத்தான். உங்களுக்கு எல்லாம் அப்படியா... நீங்கள் தான் நிறைய புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் இல்லை?”
"புகைப்படங்கள் எத்தனை இருந்தாலும் இதுபோன்று நம் உருவத்தை வரைந்து ப்ரேம் போட்டு மாட்டி வைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? வெளியில் நிறைய ஆர்டிஸ்ட் இதுபோல நம் உருவத்தை அழகாக வரைந்து பெயிண்ட் செய்து தருவார்கள். ஆனால் சார்ஜ் எவ்வளவு தெரியுமா? குறைந்தப்பட்சமாக ஐந்நூறிலிருந்து லட்சம் வரை கூட செல்லும். இங்கே நமக்கு தெரிந்தவராக இலவசமாக சிக்கி இருக்கிறாரே என்று பார்த்தால் விட மாட்டேன் என்கிறீர்களே..." என அவர்களுக்கு பெரியதாக விளக்கம் கொடுத்து அலுத்துக்கொண்டாள் அவள்.
அந்த வாயாடிப் பெண்ணிடம் பேசும் பாஷை புரியாது ஆண்கள் இருவரும் பெரும் மலைப்புடன் நிற்க, இவள் வேண்டுமென்றே தான் கோபித்துக்கொள்வது போல் நாடகமாடினாள்.
"சரி பரவாயில்லை விடுங்கள்... வரைபவருக்கும் விருப்பம் இல்லை, என்னை பொறுப்பேற்று கொண்டிருப்பவருக்கும் இதற்கு அனுமதிக்க மனம் வரவில்லை. நான் எங்காவது வெளியிலேயே பார்த்துக் கொள்கிறேன்!" என்றபடி அருகில் கிடந்த தாத்தாவின் கம்பராமாயணம் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
'அடங்கொக்கமக்கா... இதென்ன இவ்வளவு பெரியதாக இருக்கிறது? இதை நான் எழுத்து கூட்டிப் படிக்க இந்த ஒரு ஜென்மம் பற்றாது போலவே...' என மிரண்டாள்.
அவள் எடுத்தப் புத்தகத்தை பார்த்ததுமே சிவலிங்கத்திற்கு சிரிப்பு வந்துவிட்டது. ஒழுங்காக தமிழ் எழுதப் படிக்க தெரியாதவள் படிக்கின்ற புத்தகத்தை பார் என தனக்குள் நகைத்துக் கொண்டவர் பரத்தை சங்கடத்துடன் ஏறிட்டார்.
"பரத்... தவறாக நினைக்காதேப்பா, இப்படியே கொஞ்சம் பிடிவாதமாகவும், குறும்புத்தனமாகவும் வளர்ந்து விட்டாள் இவள். உன்னால் வரைய முடிந்தால் பார், இல்லை உனக்கு நேரமில்லை தொந்திரவாக இருக்கும் என்று ஏதாவது தோன்றினால் பரவாயில்லை சொல்லிவிடு!"
பெரும் தர்மசங்கடத்தில் தள்ளப்பட்டவன் வேறுவழியின்றி அவருக்காக ஒத்துக்கொண்டான்.
"ஹேய்... தாங்க் யூ... தாங்க் யூ!" என்று அவனிடம் மிகவும் உற்சாகமாக கூவியவள், "லவ் யூ தத்து!" என அவரை கட்டியணைத்து விலகினாள்.
"சரி, நான் போய் முகம் கழுவி லேசாக டச்சப் செய்து வருகிறேன்!" என துள்ளலுடன் அறைப்பக்கம் திரும்பினாள்.
"ஏய்... இரு இரு..." என்று அவளை விரைவாக தடுத்த பரத் பின்பே சூழ்நிலை உணர்ந்து, "ஷிட்... சாரி தாத்தா, ஏதோ ஒரு வேகத்தில் அது வந்து..." என தடுமாறி, "இனி சரியாக அழைக்கிறேன்!" என்று அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.
அவனுடைய பண்பைக் கண்டு முறுவலித்தவர், "அட... இதிலென்ன இருக்கிறது? பரவாயில்லை விடுப்பா, உன்னை விட சின்னவள் என்றதும் அவ்வாறு பேசி விட்டாய்!" என ஆறுதல் கூற இவன் முகத்தில் நிம்மதிப் பரவியது.
அவனுடைய அசைவுகளை எல்லாம் நிரம்பவும் ஆழமாக கண்காணித்துக் கொண்டிருந்தவள், "என்னை எதற்காக நிற்கச் சொன்னீர்கள்?" என்று சந்தேகம் கேட்டாள்.
விழிகளில் கடுமை பரவ அவளை பலமாக முறைத்தவன், "உன்னுடைய முகத்தை தெளிவாக வரைவதற்கு ஒரு அடையாளப் படம் தான் வேண்டுமே தவிர, அலங்காரம் செய்துக் கொண்டு வருமளவிற்கு இங்கே எதுவும் போட்டோ ஷூட் நடக்கவில்லை. சோ... நீ அப்படியே நிற்கலாம்!" என்றான் அழுத்தமாக.
"அதெல்லாம் முடியாது... காலையில் அருவியில் இருந்து வந்ததிலிருந்தே ஒரே அப்செட். தலைவலி வேறு வந்து விட்டது என தைலம் தேய்த்துக்கொண்டு படுத்து தூங்கி விட்டேன். எழுந்ததும் என் மனதை திசை மாற்ற என்று அத்தைக்கு சமையலில் உதவியவாறு கட்லெட், அல்வா செய்தது வேறு வியர்த்து வடிந்து விட்டது. இப்படியே நின்றேன் என்றால் அப்புறம் என் படத்தை எண்ணெய் வடியும் ஆயில் பெயின்டிங்காக தான் வரைந்துக் கொடுத்து விடுவீர்கள்!" என அவனுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் உள்ளே ஓடிவிட்டாள் ரித்திகா.
"நீ உட்காருப்பா பரத்... அவளை எல்லாம் திருத்த முடியாது. பிடிவாதம் பிடித்தக் கழுதை, உனக்கு தான் ரொம்பவும் தொந்திரவாகப் போயிற்று!" என்றார் சற்றே வருத்தமாக.
"சேச்சே... அதெல்லாம் இல்லை தாத்தா. ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு வந்தால் பொழுது போகாததால் தானே இப்படி படங்கள் வரைந்துக் கொண்டிருக்கிறேன்!" என்று அவரை கனிவாக சமாதானப்படுத்தினான் பரத்.
மனமோ அவளுடைய சொற்களை கவனமாக அலசிக் கொண்டிருந்தது. அவள் என்னை பெயர் சொல்லி விசாரித்ததில் எனக்கு தான் பயங்கர அப்செட்டாகிப் போயிற்று. நேராக வீட்டிற்கு வந்து சிறிது நேரம் வலி தரும் அந்நினைவுகளில் மூழ்கி வெறுத்துவிட்டு மனதை மாற்றவென்று ஏற்கனவே வரைந்து வைத்திருந்தப் பெரியவரின் வரைப்படத்தை எடுத்துச் சென்று லேமினேஷனுக்கு கொடுத்து வாங்கி இங்கே வந்தால் இவள் இங்கேயே உட்கார்ந்துக் கொண்டு என்னை வெறுப்பேற்றுகிறாள்.
இதில் இவளுக்கு என்ன பெரியதாக கஷ்டம் நிகழ்ந்துவிட்டது என்று ரொம்பவும் அலுத்துக் கொள்கிறாள்? என எரிச்சலுடன் எண்ணமிட்டான்.
"நான் ரெடி!" என ஆர்ப்பரித்து வெளிவந்த ரித்திகாவை உணர்வற்று நோக்கியவன் பின்னர் குனிந்துக் கையில் இருக்கும் அலைபேசியின் லாக்கை ஸ்வைப் செய்தான்.
ஒருகணம் தன் பேத்தியின் அழகை மெய்மறந்து ரசித்த சிவலிங்கம் சற்றே உணர்வு வரப்பெற்றவராக வேகமாக பரத்திடம் விழிகளை திருப்ப, அவனோ அலைபேசியை வெறித்திருந்தான். மனதில் பெரிய நிம்மதிப் பூக்க, அவனை மிகுந்த மதிப்புடன் நோக்கினார் முதியவர்.
"தயாரா?" என்ற கேள்வியுடன் அவன் தன் மொபைல் கேமராவில் அவளை கோணம் பார்த்தான்.
"ம்... ஓகே, பட்... இந்த ஹேர்ஸ்டைலை என்ன செய்வது? அப்படியே முழுவதுமாக பின்னால் இருக்கட்டுமா அல்லது பாதி முடியை மட்டும் எடுத்து இப்படி முன்னால் போட்டுக்கொள்ளவா?" என்று அதிமுக்கியமாக வினவினாள்.
பரத்தின் விழிகளில் தாறுமாறாக ஜுவாலை பற்றி எரிந்தது. பெரியவர் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் வருகின்ற கோபத்திற்கு அவளை பிடித்து வெளுத்து வாங்கியிருப்பான்.
பதிலுக்கு அவளும் நன்றாக திருப்பிக் கொடுத்திருப்பாள்... அது வேறு விஷயம், ஹஹா.
"ஆமாம்... இப்படி விரித்துப் போட்டிருக்கின்ற முடி முன்னால் இருந்தால் என்ன இல்லை... அது பின்னால் இருந்தால் தான் என்ன?" என்று மிகச்சரியாக தன் பேத்தியை வாரினார் சிவா.
காலை, மாலை என்று இருவேளை மெனக்கெட்டு தலை வாருகிறாள். ஒரு வேளையாவது ஒழுங்காக தலையை பின்னலிட்டு கொள்கிறாளா என்கின்ற கடுப்பு அவருக்கு.
"ஹஹா... ரொம்பவும் சரியாக சொன்னீர்கள் தாத்தா!" என்று அதுவரை இருந்த இறுக்கம் மாறி பரத் பெரிதாக நகைக்க, ரித்துவோ இருவரையும் முறைத்தாள்.
"இப்படியே போட்டோ எடுத்து வரைய நான் ரெடி. ஆனால் நாளைப் பின்னே யாரிந்த சிடூமூஞ்சி மாற்றி வரைந்து விட்டீர்கள் என்று என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது!" என அவளை நக்கலாக எச்சரித்தான் பரத்.
அதில் எரிச்சல் அதிகமானாலும் முன்பிருந்த இறுக்கத்திற்கு மாறாக முகத்தில் இளநகை துலங்க தன்னை குறும்புடன் நோக்கியவனை கண்டு அவள் மனம் இளகியது.
இவளிடம் இருக்கின்ற நான்கு வருடங்களுக்கு முந்தைய அவனுடைய புகைப்படங்களில் எல்லாம் இவ்வகை வசீகரப் புன்னகை தான் அவன் முகத்தில் நிறைந்திருக்கும். அந்த டீனேஜில் விழிகள் மின்ன அவன் தன்னிடம் ஏதோ கதைப் பேசுவது போலவே பல கற்பனைகள் அவளுக்குள் விரியும்.
"ஹும்... இந்தப் பாவனை அதற்குமேல் கொடுமையாக இருக்கிறது. என்ன தாத்தா?" என்று அவரிடம் அபிப்பிராயம் கேட்டான் பரத்.
"அட குட்டிம்மா... ஒழுங்காக சிரித்த முகமாக இரு. பரத்தும் பாவம்... உனக்காக எவ்வளவு நேரம் தான் காத்திருப்பான்!" என்று அதட்டினார் சிவா.
ம்... என்றவள் லேசாக இதழ் பிரித்து முத்துப்பல் காண்பித்து அழகிய கயல் விழிகள் ஒளிர சிறிதாக முறுவலித்தாள்.
எந்தச் சலனமுமின்றி அலட்சியமாக அதைப் படம்பிடித்தவன், "சரி வருகிறேன் தாத்தா!" என்று நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து விரைந்து வெளியேறினான்.
விழிகளில் சிறிய ஏமாற்றம் பரவ நின்றிருந்தப் பேத்தியிடம், "சரிடாம்மா... நான் தோட்டத்திற்கு கிளம்புகிறேன். நீ எதுவும் வருகிறாயா?" என்று வினவினார் சிவலிங்கம்.
"இல்லை தாத்தா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் வரவில்லை!" என்றாள் பெண் சோர்வாக.
"என்ன? அந்தப் போனோடு தானே உனக்கு வேலை, பாரு பாரு!" என்று தலையசைத்து விட்டுக் கிளம்பினார் அவர்.
மெதுவாக வாசலில் வந்து நின்றவள் விழிகளை சுழற்றி அண்டை வீட்டை நோட்டமிட்டாள், கதவு அடைத்திருந்தது. அவனுடைய இருசக்கர வாகனம் வெளியே நிற்பதிலேயே அவன் உள்ளே தான் இருக்கிறான் என்பது புரிந்தது.
ஒரு காலத்தில் அவனை என்றாவது நேரில் சந்திப்போமா, அவனுடன் இணைந்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வோமா, அவனுடைய கையெழுத்து கிடைக்குமா என்று நித்தமும் ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு இன்று அவன் இவள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் எதையும் செய்ய முடியவில்லை.
திடுமென்று மனதில் இனம் புரியாத சோர்வு மூள, தனது அறைக்குச் சென்று சலிப்புடன் படுக்கையில் விழுந்தவள் தனது மொபைல் கேலரியில் இருந்த அவனுடைய பழைய புகைப்படங்களை திறந்தாள்.
ஒன்று விடாமல் தன் அலைபேசியில் இருந்த அத்தனை படங்களையும் வரிசையாக பார்த்தவள் இறுதிப் படத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.
அந்த இரண்டு விழிகளிலும் தான் எத்தனை மகிழ்ச்சி, நாம் நிச்சயமாக ஜெயித்து விடுவோம் என்கின்ற உறுதியும் கூட. உதடுகளில் வசீகரம் சிந்தும் புன்னகையில்லாத தீவிரமான முகத்தை சுமந்து இருக்கின்ற எந்தவொரு புகைப்படமும் இதுவரை இவள் கைகளில் சிக்கியதே இல்லை.
ஆனால் மாறாக இப்பொழுதோ... எந்நேரமும் புன்னகையை தொலைத்த இறுக்கமான முகமும், கூடுதலாக இவள் அவனை அறிந்துக்கொண்டாளே என்கின்ற ஆத்திரத்தில் தன்னை கண்டாலே சிடுசிடுவென்று அவன் முகத்தில் வெளிப்படும் வெறுப்பும்... இதெல்லாம் எதற்காக?
'யாரை ஏமாற்ற நீ இங்கே வந்து ஒளிந்துக்கொண்டு உன் தகுதியை விட்டு இப்படியொரு சாதாரண வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உன்னுடைய ஆற்றல் என்னவென்று உனக்கு தெரியுமா தெரியாதா? அதைக் குலைக்க வெறும் ஒரு அவச்சொல் போதும் என்று நீ நினைத்து விட்டாயா? ஒட்டுமொத்தமாக உன் துறையையே ஒதுக்கி தள்ளிவிட்டு வாழ்நாள் முழுவதும் இங்கேயே கழித்து விடுவதாக உத்தேசம் கொண்டுள்ளாயா என்ன?' என்று அவன் நிழல்படத்திடம் கோபமாக மாறி மாறிக் கேள்வி கணைகளை தொடுத்தாள் ரித்திகா.
No comments:
Post a Comment