Yennai Theriyuma 3 - Deepababu

 


*3*



ஜெய்சங்கர் திரும்பிப் பார்த்தால் அங்கே ஒருவரும் இல்லை. சுற்றிலும் விழிகளை சுழற்றியவன் செண்பகத்தின் தொடர்ந்த ஹலோ... ஹலோ... என்ற பொறுமையற்ற கூக்குரலால் மீண்டும் திரும்பி மொபைலை காதுக்கு கொடுத்தான்.
"ஓகேம்மா... நான் பிறகு பேசுகிறேன், டேக் கேர்!" என்று அவரின் சொற்களை காதில் வாங்காமல் வேகமாக லைனை கட் செய்துவிட்டு, அலைபேசியில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தன் காதுகளை கூர்மையாக்கினான்.

ஏதோ ஒன்று தரதரவென்று இழுபடும் சத்தம் மெதுவாக கேட்க, மெல்ல இயல்பாய் வண்டியை நோக்கி நடந்தான் ஜெய்.

சைட்லாக் போட்டு அவன் நிறுத்தியிருந்த வண்டி இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்திருந்தது. வண்டி ஹார்ன் இருந்த ஹான்டில் பாரை பட்டும் படாமல் தடவினான். அதில் லேசான எண்ணெய் பிசுக்குடன் கூடிய வியர்வை படிந்திருந்தது.

'அப்பொழுது நம் வண்டி ஹார்னை தான் யாரோ அடித்திருக்கிறார்கள். நான் உடனே திரும்பி பார்த்தப் பொழுது அருகில் ஒருவரும் இல்லையே...'

யோசனையில் உதடு கடித்தவன் நிமிர்ந்து மரத்தை பார்க்க, ஏதோ ஒரு பெயரறியா மரம் வெளுத்த நீல நிறத்தில் பூ பூத்திருந்தது. தன் பின்னால் இருக்கும் மண் சாலையை மறைக்கும் அளவுக்கு மரம் நன்றாக அடர்ந்துப் பரந்து விரிந்திருந்தது.

ஜெய் எகிறி ஒரு குதிக் குதித்து அதிலுள்ள பூவைப் பறிக்க முயன்றான், எட்டவில்லை. ஷுவை கழற்றிவிட்டு மெதுவாக வண்டியின் மீதேறி கைக்கெட்டிய கிளையை வளைத்தவன் அதிலுள்ள பூவை நிதானமாகப் பறித்தான்.

அவன் விழிகள் கீழே தழைந்து வண்டியைச் சுற்றி வட்டமிட, மண் தரையில் எதையோ இழுத்துச் சென்றிருந்த அடையாளம் பதிந்திருந்தது. அது மரத்தின் பின்னே சென்று முடிவடைந்திருக்க, தன் யூகம் சரியென்பது அவனுக்கு உறுதியாகி விட்டது.

யாரோ யாரிடமிருந்தோ தப்பி ஓடி வந்திருக்க, தன் உதவியை நாடி அவர்கள் அருகே வருவதற்குள் அவனுடைய... அவனா? அவளா? எதிரிகள் அவனை பிடித்து விட்டார்கள்.

வாயைப் பொத்தி இழுத்துச் செல்லும்பொழுது சட்டென்று சமயோசிதமாக ஹார்னை அடித்து விட்டார்கள். அநேகமாக மரத்தின் பின்னே தான் அவர்கள் மறைந்திருப்பார்களாக இருக்கும்.

ஜெய் சட்டென்று கிளையை பற்றியிருந்த கைகளை விலக்கிக் கொள்ளவும் அது உயரே போய் சற்றே சலசலத்து அடங்கியது.

கீழே இறங்கியவன், "இது என்ன பூ என்று தெரியவில்லையே... வீட்டில் காண்பித்து கேட்க வேண்டும்!" என்று தனக்குள் உரக்கப் பேசியவாறு பூவை சட்டைப்பையில் பத்திரப்படுத்தினான்.

'மரத்தின் பின்புறம் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியவில்லையே... அட்டாக் செய்யலாமா? நோ... எனக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியே இருக்கட்டும்!' என்று எண்ணமிட்டபடி ஷுவை மீண்டும் காலில் மாட்டியவன் வண்டியில் ஏறி அதை உதைத்துக் கிளப்பினான்.

சற்று தூரம் சென்றவன் வண்டியை ஓரமாக நிறுத்தி லாக் செய்துவிட்டு தான் வந்த திசையில் திரும்பி அதிவேகமாக ஓடி வந்தான். சிறிது தொலைவில் மறைந்திருந்துப் பார்க்க, அந்த மரத்தின் பின்னே ஒருவரும் இல்லை.

குழம்பியவன் மரத்தின் அருகே வேகமாக ஓடி வந்து மூச்சிரைக்க நிற்க, அங்கே சில கால் தடங்கள் இருந்தன. அவற்றை அடையாளமாக வைத்துப் பின் தொடர்ந்து சென்றான் ஜெய்.

அப்பொழுதுதான் அந்தச் சன்னக்குரல் அவன் காதுகளில் மெலிதாக விழுந்தது.

"அண்ணா... வேண்டாண்ணா என்னை விட்டுடுங்க, நான் எங்கேயாவது போய்விடுகிறேன். என்னால் முடியலை அண்ணா, ப்ளீஸ்..." என்று கெஞ்சியது ஒரு சிறுவனின் அழுகைக் குரல்.

"வாயை மூடிட்டு வாடா!" என்ற அதட்டலை தொடர்ந்து ஓங்கி அறையும் ஒலிக் கேட்டது.

அதன்பிறகு சிறிது அமைதி நிலவ, சிறு விம்மல் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது.

"உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? தப்பித்தா ஓடுகிறாய்... வா... உன்னை அறையில் போட்டு அடைத்து வைத்து சூடு வைக்கிறேன். வெளியூர் போயிருக்கிற ஐயா நைட் வரட்டும் உனக்கு இருக்கிறது கச்சேரி!" என்ற மிரட்டலை தொடர்ந்து அந்த சிறுவன் சத்தமாக அலறினான்.

முரட்டுத்தனமாக சிறுவனுக்கு வலிக்கும்படி ஏதோ செய்கிறார்கள் போலிருக்கிறது.

"நல்லவேளைடா... அந்தக் கண்ணாடிக்காரன் பார்க்கிறதுக்குள்ள இவன் வாயைப் பொத்தி இழுத்து மரத்திற்கு பின்னாடி ஒளித்து வைத்தாய். அவன் நம்பக்கம் திரும்பி வண்டிக்கு அருகில் வரவும் அவ்வளவு தான் மாட்டிக்கொண்டோம் என நான் பயந்தே போய்விட்டேன். அந்த லூசு என்னவோ மரத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள பூவை பறிச்சிட்டுப் போய்விட்டது!" என்று கிண்டலாக சிரித்தான்.

"நீ வேறடா... இவன் எல்லாம் அவ்வளவு விவரம். வண்டி ஹாரனையா அடிக்கிறாய்?" என்று ஒருவன் பல்லைக் கடிக்கும் ஓசைக் கேட்க, ஆ... என்று அலறிய சிறுவனின் கேவல் தற்பொழுது சற்றுச் சத்தமாக தொடர ஆரம்பித்தது.

"வாயை மூடுடா... மூச்சு விட்டாய் கொன்றே விடுவேன்!" என பொத்தென்று அவனை பலமாக அடித்தான் அந்த ரௌடி.

"ஆமாம்... யாருடா அவன்? ஆள் புதிதாக இருக்கிறான். யாரோ வெளியூர்காரன் மாதிரி தெரிந்தது!"

"ஆமாம்டா... எவனாவது நிலத்தையும், ஊரையும் ஆராய்ச்சி செய்ய வந்தவனாக இருக்கும். இங்கே தான் அவர்களுக்கு தீனிப் போட நிறைய..." என்ற குரல் அடுத்து தேய்ந்துக்கொண்டே வந்து முழுவதுமாக நின்றுப்போனது.

கால் தடங்களை பின்தொடர்ந்து சென்ற ஜெய்சங்கர், அங்கிருந்தப் பாறைக் குவியல்களின் பின்னே மறைந்திருந்து தான் அவர்களின் சம்பாஷனையை அதுவரை கேட்டுக் கொண்டிருந்தான்.

குரலின் ஒலிகள் மெல்லத் தேயவும் மெதுவாக எழுந்துப் பார்க்க, அவர்கள் தொலைதூரத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். இரண்டு முரட்டு ஆண்கள் அந்தச் சிறுவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர்.

சிறுவனின் உயரத்தைப் பார்த்தால் பத்து, பன்னிரெண்டு வயதுடையவன் போல் தோன்றியது.

முழுவதும் வெட்டவெளியாய் இருந்த அந்த இடத்தில் அதற்குமேல் அவனால் அவர்களை தொடர முடியாமல் போனது. மனதில் சலித்தவன் மொபைலை எடுத்து முன்னே சென்றுக் கொண்டிருந்த ஆட்களையும், அந்தச் சிறுவனையும் படம் பிடித்தான்.

இடம் அடையாளம் தெரிவதற்காக சுற்றுப்புறத்தையும் படம் பிடித்தவன் திரும்பி அவர்களை பார்க்க, புள்ளி உருவமாய் அடி வானத்தில் மறைந்தனர்.

அந்தப் பாறையில் யோசனையோடு சாய்ந்துக் கொண்டவன், 'யார் இவர்கள்? அந்தச் சிறுவனை கடத்தி வைத்து மலையடிவாரத்தில் என்ன செய்கிறார்கள்? அந்தப் பக்கம் ஊரோ ஆள் நடமாட்டமோ இருப்பது போல் தெரியவில்லையே...

இப்பொழுது அச்சிறுவனை எப்படி மீட்பது? இந்த வெட்ட வெளியிலும், வெளிச்சத்திலும் பின்தொடர்ந்து செல்வதும் உசிதமில்லை. என்ன செய்யலாம்?' என்று எழுந்து வண்டி இருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வீட்டை அடைந்தவன் கதவை தட்டிவிட்டு உள்ளே வர, அடுக்களையிலிருந்து வெளியே வந்தார் லட்சுமி.

"என்னப்பா போன வேலை முடிந்ததா? எந்தெந்த இடத்திற்கு எல்லாம் போனாய் சுற்றிப் பார்த்தாய்?" என்று விசாரித்துக் கொண்டே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்துக் கொடுத்தார்.

"தாங்க்ஸ்மா!" என தண்ணீரை வாங்கி அருந்தியவன் தான் சென்ற இடத்தை பற்றிக் கூறினான்.

"அதிகாலையில் கிளம்பி வந்தது மிகவும் சோர்வாக இருந்ததால் திரும்ப வந்து விட்டேன்!"

"ஆமாம்... ஆமாம், சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வெடுங்கள் கொஞ்சம் தெளிவாக இருக்கும். அந்த இடம் வெறும் பாலையா... பொட்டல் காடாக தானே இருக்கும், அந்தப் பக்கம் சுவாரஸ்யமாக ஒன்றுமே இருக்காது. நீங்கள் நாளை ஊருக்கு தெற்குப் பக்கம் போங்க. அங்கே தான் கோவில், பாழடைந்த கோட்டையெல்லாம் இருக்கிறது!" என்றார்.

"ம்... சரிம்மா!" என்றவன் இன்று தான் சென்றப் பகுதியில் வேறு என்னென்ன இருக்கிறது, ஊர் எதுவும் இருக்கிறதா என்று அவரிடம் சில தகவல்களை கேட்டறிந்துக் கொண்டான்.

உணவை முடித்துக்கொண்டு மாடியேறியவன் படுக்கையில் விழுந்தது தான் தெரியும் நன்றாக அயர்ந்து உறங்கி விட்டான்.

மாலை மங்கிய பிறகே உறக்கம் கலைந்துப் புரண்டவன் மொபைலை எடுத்து நேரம் பார்க்க மணி ஏழு, எழுந்து சோம்பல் முறித்தவன் முகம் கழுவி கீழே வர விஸ்வநாதனின் குரல் கேட்டது.

"குட்ஈவ்னிங் சார்!" என்றபடி அருகில் வந்தவனை வரவேற்றவர் எதிரில் உட்கார சொல்லிவிட்டு லட்சுமிக்கு குரல் கொடுத்தார்.

"அந்த தம்பி வந்து விட்டார் பாரும்மா... காபி கொண்டு வா!" என்று விட்டு அவனிடம் திரும்பியவர் அன்றைய நாளைப் பற்றி விசாரித்தார்.

இருவரும் தீவிரமாய் ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, அதில் வந்து தானும் இணைந்துக் கொண்டார் லட்சுமி.

"ரியலி... யூ ஆர் சச் எ நைஸ் பெர்சன் சார்! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... என் நண்பனின் வீட்டில் தங்கிக்கொள் என்று எங்கள் ஹெட் என்னிடம் சொன்னவுடனே... வாத்தியார் வீட்டில் தங்க வேண்டுமா என எனக்கு கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது.

பட்... நீங்கள் நான் நினைத்த மாதிரி கண்டிப்பான வாத்தியாராக இல்லாமல் நல்லா ஜாலியாகப் பழகி, சுவாராசியமாகவும் பேசுகிறீர்கள்!" என்று அவரை பாராட்டினான் ஜெய்.

அதைக்கேட்டு அவர் அட்டகாசமாய் நகைக்க, "அட ஏன்பா நீங்கள் வேற... வீட்டிற்கு வந்தால் அங்கே எடுக்கின்ற பாடம் மாதிரி இங்கே எனக்கு ஏதாவது பாடம் எடுத்து அறுக்க ஆரம்பித்து விடுவார். உங்களுக்கு விஷயங்கள் புதிதாக இருப்பதால் சுவாரசியமாக இருக்கிறது அவ்வளவு தான்!" என்று தன் கணவனை வாரினார் லட்சுமி.

அவரின் செல்ல முறைப்பைக் கண்டு சிரித்த ஜெய், "விடுங்கள் சார்... ஆணாகப் பிறந்தால் இதையெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு சில நேரம் என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டு நான் என்ன பாடுபடுவேன் தெரியுமா?" என்று போலியாக வருந்தி தன் சொந்தக் கதை, சோகக் கதையை எடுத்துவிட்டு அந்த வீட்டையே கலகலப்பாக்கினான்.

"அச்சோ... போதும்பா, நிஜமாக உங்கள் இருவரின் அலும்பையும் இதற்குமேல் என்னால் கேட்க முடியாது!" என்று நெஞ்சில் கை வைத்து சிரித்தார் லட்சுமி.

முகம் இளக அதைப் பார்த்த விஸ்வா, "உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறதுப்பா... மரியாதையாக பழகும் அதே நேரம் ஒதுங்கி இல்லாமல் நன்றாக கலகலப்பாகவும் பழகுகிறாய்!" என்று அவன் தோளைத் தட்டினார்.

வயதில் சிறியவனான தன்னை ஒருமையில் அழைக்குமாறு அவன் தான் அவரிடம் கேட்டுக் கொண்டான்.

மறுநாள் காலையில் கிளம்பியவன் தெற்கே செல்லாமல் மீண்டும் வடக்கை நோக்கியே வண்டியை செலுத்தினான்.

பாதி தூரம் கூட சென்றிருக்க மாட்டான், திடீரென்று அவன் பாதையில் குறுக்கே ஓடி வந்த இரண்டுப் பெண்களில் ஒருவள் வேகமாக கையை ஆட்டி வண்டியை நிறுத்தினாள்.

'ஆள் அரவமற்ற இந்த வனாந்தரத்தில் இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள்?' என்ற சிந்தனையோடு பிரேக்கிட்டு நிறுத்தினான் ஜெய்.

"ஏய் வேதா... சீக்கிரமாக வண்டியில் ஏறு, ம்... சீக்கிரம் சீக்கிரம்!" என்று தன் தோழியை அவசரப்படுத்தியவள் அவளுக்கு முன்னால் ஜெய்யை அடுத்து தான் வேகமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

No comments:

Post a Comment

Most Popular