Matru Kuraiyatha Mannavan 5 - Deepa Babu

 


*5*


இரவு உணவு உண்ணும் வேளையில் வீட்டிற்கு வெளியே பைக்கை உதைத்துக் கிளப்புகின்ற ஓசைக் கேட்கவும் அது பரத்தாக இருக்குமோ, கம்பெனிக்கு கிளம்புகிறானா என்ன என்று தன் வாயில் இருந்த உணவோடு எண்ணத்திலும் அசைப்போட்டாள் ரித்திகா.

இதைப் பேச்சுவாக்கில் கூட தாத்தாவிடம் கேட்க முடியாது, இங்கிருக்கும் கலாச்சாரம் அப்படி. இதுவே நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் இந்தளவிற்கு எல்லாம் யோசித்து தயங்க தேவையில்லாமல் அவன் பின்னோடு சாயந்திரமே அவனுடைய வீட்டிற்குச் சென்றிருப்பேன் என ஏக்கமாக பெருமூச்சு விட்டாள் பெண்.

"என்னம்மா இது சாப்பிடாமல் இப்படி உணவை அளைந்துக் கொண்டிருக்கிறாய்?" என்று வினவினார் சிவலிங்கம்.

"ப்ச்... பசிக்கவில்லை தத்து, ஈவ்னிங் சாப்பிட்ட டிபனே அப்படியே வயிற்றில் டொம்மென்று இருக்கிறது!" என்று எழுந்துக் கொண்டாள்.

"ஏய்... கொஞ்சமாவது சாப்பிடலாம் அல்லவா?"

"பாதி சாப்பிட்டு விட்டேன் போதும்!" என கிச்சனுள் சென்று மறைந்தாள்.

பெரியவர் குழப்பத்துடன் தன் நெற்றியை சுருக்கியபடி யோசனையில் ஆழ்ந்தார்.

எதிரே வந்த பேத்தியின் முகத்தை கூர்ந்துப் பார்த்தபடி, "எதுவும் பிரச்சினையா குட்டிம்மா? காலையில் அருவியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்தே உன்னுடைய முகமே சரியில்லையே... மனதில் எதைப் போட்டு அப்படி உளப்பிக் கொண்டிருக்கிறாய்? என்னிடம் சொல்வதற்கு உனக்கு மனம் வரவில்லையோ!" என வருத்தத்துடன் விசாரித்தார்.

'ஆஹா... தத்து... செம ஷார்ப்பாக இருக்கிறாரே, இனி கவனமாக இருக்க வேண்டும்!' என உள்ளுக்குள் நேர்ந்த திடுக்கிடலை மறைத்து வெளியில் சிரித்து வைத்தாள் பேத்தி.

"என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? அதெல்லாம் எதுவுமில்லை நான் சாதாரணமாக தான் இருக்கிறேன்!" என்று அவர் அருகில் அமர்ந்தாள்.

"உண்மையாக தான் சொல்கிறாயா பாப்பா?"

"ஆமாம் தத்து... இந்த வயதான காலத்தில் ரொம்பவும் பொறுப்பை தூக்கி தலையில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஐ ஆம் பர்பெக்ட்லி ஆல்ரைட். நோ வொர்ரீஸ்... ஓகே?" என அழகாக முறுவலித்தாள்.

அதில் லேசாக சமாதானம் அடைந்தவர், "சரி அப்படியே ஏதாவது என்றாலும் அம்மாவிடமாவது மனதில் இருப்பதை பகிர்ந்துக்கொள். உனக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்!" என்று அறிவுரை வழங்கினார்.

"சரிங்க தலைவரே... அப்படியே செய்து விடுகிறேன்!" என்று கண்சிமிட்டியவளை கண்டு நிறைவாய் புன்னகைத்தார்.

சிறிதும் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுவதும் பரத்தே நிறைந்திருந்தான்.

அவனை அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை அவளுக்கு. அவன் மனதில் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்றும் ஒன்றும் புரியவில்லை. இத்தனை வருடங்களில் அவன் ஏன் ஒருமுறை கூட தன் துறைக்கு திரும்ப ஆர்வம் காட்டாமல் இருக்கிறான்? எதிர்காலத்திலாவது உள்ளே நுழையும் எண்ணமிருக்கிறதா அல்லது இப்படியே இருந்துவிட தீர்மானித்து விட்டானா?

நோ... அதற்கு நான் விட மாட்டேன். அவனுடைய திறமையையும், ஆற்றலையும் எந்தப் பயனுமின்றி மங்கிப் புதைந்துப் போக விடக்கூடாது. அவன் எவ்வளவு ஆத்திரம் கொண்டாலும் சரி, அவனை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்து வர வேண்டும்.

'ஒரு ரசிகன் என்றால் அவனது தலைவனின் வெற்றியை மட்டும் ஆர்ப்பரித்து கொண்டாடுபவனாக இல்லாமல் அவன் தோல்வியில் துவண்டு சரியும் நேரம் அவனுக்கு தோள்கொடுத்து பழைய வெற்றிப்பாதைக்கு மீட்பவனாகவும் இருக்க வேண்டும். அவனே உண்மையான ரசிகன்!'

ஆம்... அதுதான் சரி, இனி அவனிடம் நேருக்கு நேர் பேச வழி தேட வேண்டும்.

ஆனால் ஒன்று இது கிராமம், மேலும் நான் தாத்தாவின் பொறுப்பில் இருப்பவள் அவர் கௌரவத்திற்கு எந்தவொரு இழுக்கும் வராதவண்ணம் என் நடவடிக்கைகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் எந்நேரமும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள் ரித்திகா.

மறுநாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் படுக்கையை விட்டு எழுந்தவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு கையில் ஒரு காபியோடு வெளியே வந்து வாசலில் உள்ள வீட்டுத் திண்ணையில் அழகாக சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டு சாலையை நோட்டமிட்டாள்.

இதில் அருகில் வந்தமர்ந்த தாத்தாவிடம் ஒரு டயலாக் வேறு, "என்ன இருந்தாலும் இப்படி காலை நேரத்தில் வாசலில் உட்கார்ந்து இயற்கை காற்று வாங்குவதே ஒரு புத்துணர்ச்சி தான். இல்லை தத்து?" என்றாள் விழி மூடி ஆழ்ந்துக் காற்றை உள்ளுக்குள் இழுத்தவளாக

அந்த அப்பாவி மனிதரும் பேத்தியின் பேச்சை உண்மை என்று நம்பி, "ஆமாம் பின்னே... இங்கே இருக்கின்ற இயற்கையின் வரங்கள் உனக்கு எங்கே சென்றாலும் கிடைக்காது!" என பெருமிதப்பட்டுக் கொண்டார்.

இதழை கடித்தபடி வேடிக்கை பார்ப்பது போல் வேறுபுறம் திரும்பிக் கொண்ட ரித்து, தனக்குள் குமிழியிடும் சிரிப்பை முடிந்தவரை வெளிவிடாமல் கட்டுப்படுத்தியபடி காபியை பருக ஆரம்பித்தாள்.

சுமார் ஏழு மணி வாக்கில் வீடு திரும்பிய பரத்தை கண்டு உடலும், உள்ளமும் புத்துணர்வு கொள்ள ஆர்வமாய் அவன் முகம் பார்த்திருந்தாள்.

"என்னப்பா இப்பொழுது தான் ஷிப்ட் முடிந்து வருகிறாயா?"

அப்பொழுது தான் நிமிர்ந்துப் பக்கத்து வீட்டை பார்த்தவன், "ஆமாம் தாத்தா!" என்று அசதியான புன்னகை ஒன்றை சிந்தினான்.

அருகில் இருப்பவளை அவன் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், "ஹாய்... குட்மார்னிங்!" என பற்கள் அனைத்தும் பளீரிட பளிச்சென்று புன்னகைத்தாள் ரித்து.

அதற்குமேல் தவிர்க்க இயலாமல், "குட்மார்னிங்!" என பெயருக்கு உதட்டை விரித்தவன், "ஓகே தாத்தா... நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்!" என்று தலையசைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்துக் கொண்டான்.

தனக்குள் எதையோ ஆலோசித்தவள், "பரத் இங்கே வந்து ஒரு இரண்டு வருடங்கள் இருக்குமா தாத்தா?" என்றாள் ரொம்பவும் சாதாரணமாக.

அவளை வியப்புடன் ஏறிட்டவர், "ம்... ஆமாம், இரண்டு வருடங்களுக்கு முன்பாக நம் ஊரில் தங்குவதற்கு வீடு தேடி அலைந்துக் கொண்டிருந்தான். வயலுக்கு செல்லும் வழியில் விசாரித்தவனிடம் அவனுடைய விவரங்களை கேட்டு திருப்தியான பின்பு தான் நம் ரங்கசாமியின் வீட்டை பேசி விட்டேன். அவனும் தன் பிள்ளையோடு வெளியூரில் சென்று தங்கிவிட்டான். இங்கே சும்மா பராமரிப்பின்றி கிடப்பதை இப்படி விட்டாலாவது அந்தப் பிள்ளைக்கும் பிரயோஜனம், அவனுடைய வீடும் நன்றாக இருக்கும் என்று தான் நான் இப்படியொரு ஏற்பாட்டை செய்தேன்!" என்றார் சிவலிங்கம் விளக்கமாக.

ஓஹோ... என்றவளிடம், "எப்படி நீ இரண்டு வருடங்கள் என்று சரியாக கணக்கு சொல்கிறாய்?" என அவளிடம் விவரம் கேட்டார் அவர்.

"ஸோ ஸிம்பிள்!" என தோள்களை குலுக்கியவள், "நான் போன விடுமுறைக்கு ஊருக்கு வந்தப்பொழுது பரத் இங்கே வசிக்கவில்லையே!" என்று முறுவலித்தாள்.

"ஆங்... என் பேத்தி புத்திசாலி தான்!" என்று அவர் நகைக்க, "ஆஹா... இதற்கே இப்படி பாராட்டுகிறீர்களே, நேற்று பரத்திடம் நான் பேசியதை வைத்தும் நீங்கள் எனக்கு கொடுத்த தகவல்படியும் இன்னும் சில கண்டுப்பிடிப்புகளை சொல்லவா?" என கண்ணடித்தாள்.

"அது என்ன?" என்றார் அவர் உற்சாகமாக.

ம்... என்று கண்களை இடுக்கி யோசிப்பது போல் சில நொடிகளை செலவிட்டவள், "அவர் இந்த வீட்டிற்கு வந்து தான் இரண்டு வருடங்களாகிறதே தவிர அந்த சர்க்கரை ஆலையில் சேர்ந்து எப்படியும் குறைந்தபட்சமாக மூன்றரை ஆண்டுகளாவது இருக்கும். அப்புறம் அவர் பேச்சுவழக்கை எல்லாம் வைத்துப் பார்த்தால்... தென்னகத்தை சேர்ந்தவர் போல் தெரியவில்லை. சேலம், திருச்சி போன்ற ஏதாவது வடதமிழகத்தை சேர்ந்தவராக தான் நிச்சயம் இருக்க வேண்டும். என்ன நான் சொல்வது சரியா?" என கேலியாக புருவங்களை உயர்த்தினாள் பெண்.

பிரமிப்புடன் தன் பேத்தியின் வார்த்தைகளை ஆர்வமாக கேட்டிருந்தவர், "எப்படிம்மா இது? நீ சொன்னதெல்லாம் ரொம்பவே சரி தான், ஒன்றரை ஆண்டுகளாக பக்கத்து ஊரில் தங்கியிருந்தவன் தான் பிறகு இங்கே வீடு மாற்றிக்கொண்டு வந்தான். அதேபோல் சொந்த ஊர் சேலம் தான், அவனுடைய குடும்பத்தினர் அங்கே தான் வசிக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட எனக்கு பெரிய அதிசயம் எது தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.

"என்ன?" என்று சற்று எச்சரிக்கையாக கேட்டாள் ரித்து.

"சாதாரண தமிழே உனக்கு ஒழுங்காக வராது... பிறகெப்படி இப்படி வட்டார தமிழ்பேச்சு குறித்த அறிவு எல்லாம் உனக்கு இருக்கிறது?"

ம்... என கண்களை இடுக்கி அவரை லேசாக முறைத்தவள் பின் பெரிய புன்னகையோடு, "அது ஒன்றுமில்லை தத்து... இதுமாதிரியான விஷயங்களை கண்டு பிடிக்கவென்று இப்பொழுது எல்லாம் இணையத்தில் நிறைய தளங்கள் இயங்குகிறது!" என்று சமாளித்தாள்.

அவள் சொல்வதில் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் விஞ்ஞானத்தோடு தொடர்புபடுத்தி கொண்டவர், "என்னவோ போ... ஒருபக்கம் விஞ்ஞானம் இந்தளவுக்கு அசுர வேகமாக வளர்கிறது. இன்னொரு பக்கம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக்கொண்டு வருகிறது. சரி நான் போய் குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறேன். நீ?" என்று கேள்வியாய் நிறுத்தினார்.

"ம்ஹும்... நான் வரவில்லை அலுப்பாக இருக்கிறது!" என்று சோம்பல் முறித்தாள்.

நம் அம்மணியின் எண்ணமே வேறு, முதலில் பரத்தின் அன்றாட நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்திருந்து விட்டு, அவனை தனிமையில் வெளியே எங்கே சந்தித்தால் வசதியாக இருக்கும் என திட்டமிட நேரம் எதிர்பார்த்து காத்திருக்கிறாள் அவள்.

சில நிமிடங்களுக்கு விடாமல் சாற்றியிருந்த பக்கத்து வீட்டுக் கதவையே பார்த்திருந்தவள் பின் யோசனையோடு எழுந்து மாடிக்குச் சென்றாள். சற்று நேரம் அவனுடைய வீட்டை அளவிட்டபடி நடைப்பயின்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அவன் வெளியே வரவில்லை.

சலிப்புடன் கீழே இறங்கியவள் மனம் போன போக்கில் தன் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். காதுகள் மட்டும் ரொம்பவே கூர்மை தீட்டப்பட்டு எந்நேரமும் அண்டை வீட்டின் அசைவுகளை கண்காணித்துக் கொண்டிருந்தது.

"என்ன பாப்பா இது? பாடிய பாட்டே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது!" என்றபடி எதிரே வந்து அமர்ந்தார் மங்களம்.

நேரம் மதியம் பன்னிரண்டு முப்பதை நெருங்கி இருக்க, அப்பொழுது தான் மதிய சமையலை முடித்திருந்தார்.

அவர் கேள்வியில், 'ஐயோ... அப்படியா பாடுகிறது!' என தனக்குள் திகைத்தவள் வெளியே அசட்டுச் சிரிப்பொன்றை முதலில் சமாளிப்பாக உதிர்த்து வைத்தாள்.

"இல்லை அத்தை... இது எனக்கு மிகவும் பிடித்தப் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது!" என விழிகள் மூடி அண்ணார்ந்து சிலாகித்தாள்.

'நல்லவேளைடா சாமி... நம் தாத்தா வீட்டில் இல்லை. அவருக்கு ஏற்கனவே என் மீது சந்தேகமாக இருக்கிறது!'

"என்ன பிள்ளைங்களோ? பெரியவன் உன்னை மாதிரி தான் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தே இப்படி கேட்டப் பாட்டையே திரும்ப திரும்பக் கேட்பான். சின்னவன் அதற்கும் மேல் பார்த்த சினிமாவையே திரும்ப திரும்பப் பார்த்து நம்மை கொல்வான்!" என்று மங்களம் புலம்ப இவள் முகத்தில் நகை அரும்பியது.

சிறிது நேரத்தில் வெளியே பரத் தன் வண்டியை கிளப்பும் ஓசைக் கேட்க, "என்ன சத்தம் அது?" என ஏதுமறியாதவளாய் வினவினாள் ரித்திகா.

"பக்கத்து வீட்டு தம்பி வெளியே கிளம்புமாக இருக்கும். பாவம்... இப்பொழுது தான் சாப்பாட்டுக்கு கிளம்புகிறது போலிருக்கிறது. நிறைய நாட்கள் இப்படித்தான் இரவு வேலை பார்த்துவிட்டு வந்தால் அசதியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டு மதிய உணவிற்கு மட்டும் தான் செல்வது.

பகல் வேலை என்றால் பரவாயில்லை போல, ஆனால் என்னவென்று தெரியவில்லை யாரிடமும் அதிகம் பழகாமல் எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே தான் அடைந்துக் கிடக்கும். ஓரிரு முறை ஆற்றங்கரையில் ஏதோ படம் வரைந்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்!" என்று வெகுளியான கிராமத்துப் பெண்மணியாய் தனக்கு தெரிந்த தகவல்களை அவளிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தார் அவர்.

ஓ... என்பதை தவிர வேறெதுவும் வார்த்தை விடாதவளிடம், "அந்தப் பையனுக்கு தன்னுடைய குடும்பத்தோடு எதுவும் பிரச்சினையா என்னவென்று தெரியவில்லை. இங்கே வந்த இரண்டு வருடங்களில் ஒரு பண்டிகை, நல்லநாள் கிழமை, விசேஷம் என்றால் கூட ஊர்பக்கமே செல்வது கிடையாது. இந்தப் பையன் தான் இப்படியிருக்கிறான் என்று பார்த்தால் அவனை தேடியும் அவன் வீட்டில் இருந்து ஒரு ஈ, காக்கா இங்கே வருவது கிடையாது.

நீயே சொல்மா... என்ன தான் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கோப, தாபங்கள் இருந்தாலும் பெற்றவர்கள் கூடவா பிள்ளையை தேடிவந்து பார்க்க கூடாது? மிகவும் அழுத்தக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு தான் மனது கேட்பதில்லை, நம் வீட்டில் பண்டிகைகள் கொண்டாடும் பொழுது தமிழிடம் பலகாரங்கள் கொடுத்து அனுப்புவேன்.

முதலில் அந்தப் பையன் இவனிடம் அதை வாங்க மறுத்து திருப்பி அனுப்ப முயன்றிருக்கிறான். நம் தமிழ் தான் கொடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டானே, இவனும் வாசலில் நின்று வாங்கியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து இருக்கிறான். அப்புறம் சத்தம் கேட்டு தாத்தா தான் வெளியே எட்டிப் பார்த்து அவனிடம் வற்புறுத்தி வாங்க வைத்திருக்கிறார்.

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் மறுக்காமல் தமிழ் கொண்டு செல்லும் பொழுது பலகாரங்களை வாங்கிக் கொள்பவன் திரும்பி இவன் கைகளில் தான் கடைகளில் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் உயர்தர இனிப்பு, கார வகைகளை ஏதோவொன்றை கண்டிப்பாக கொடுத்து அனுப்புவான். அதிலேயே அந்தப் பையன் மீது எனக்கு மிகவும் மதிப்பு உண்டாயிற்று.

ஓசியில் கொடுப்பதை வாங்கச் சங்கடப்பட்டவன் நம் மனம் நோகாத வகையில் அதை திருப்பியும் செய்து விடுகிறான் பார். நல்ல பண்புள்ள பிள்ளை தான், பாவம்... அதற்கு என்ன பிரச்சனையோ இப்படி தனியே அநாதையாக வசித்துக் கொண்டிருக்கிறது!" என்று பெருமூச்செரிந்தார்.

பரத்தை பற்றி மங்களம் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல அவன் நிலையை எண்ணி இவள் மனதில் இனம்புரியா பாரம் ஒன்று ஏறிக்கொண்டது.

'இவனுடைய விரக்தி அந்த அவப்பெயரினால் மட்டும் வந்தது அல்லவோ... அந்த நேரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டிய குடும்பத்தினரும் இவன் மீது நம்பிக்கை இழந்து ஒதுக்கி வைத்து விட்டனரா? அதனால் உண்டான வெறுப்பில் தான் இந்த உலகத்திடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறானா?' என்று வேதனையோடு எண்ணினாள்.

"என்னம்மா கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இல்லை?" என்று அவளின் வாடிய முகத்தை பார்த்து வினவினார் மங்கா.

"ம்... ஆமாம் அத்தை, ஒரு மனிதனுக்கு வெளியே எங்கே என்ன பிரச்சனை என்றாலும் வீட்டில் இருப்பவர்கள் தானே முதலில் துணை நிற்க வேண்டும். அவர்களே இப்படி ஒதுங்கி இருந்தால் நிச்சயம் அவர் பாவம் தான்!"

"சரியாகச் சொன்னாய், என்னை கேட்டால் இந்தப் பையன் சீக்கிரமாக தனக்கு ஒரு பெண்ணை தேடி கல்யாணம் செய்துக் கொள்ளலாம். அப்பொழுதாவது அவனுடைய வாழ்க்கையில் தன்னுடைய மனைவி, குடும்பம் என்று ஒரு பிடிப்பு ஏற்படும் இல்லை?" என்றார் கேள்வியாக.

"அவர் மனதில் என்ன இருக்கிறதோ யாருக்கு தெரியும்?" என்று அத்தையின் பேச்சை அதற்குமேல் வளர விடாமல் திசை திருப்பி விட்டாள் ரித்து.

மாலை இவள் திண்ணையில் அமர்ந்திருந்த நேரம் தன் வீட்டிற்கு திரும்பிய பரத், கவனமாக இவளை தவிர்த்துவிட்டு உள்ளே சென்றுக் கதவை தாளிடுவதை கவனித்து இவள் முகத்தில் மெல்ல முறுவல் அரும்பியது.

'அத்தை சொல்வதை வைத்துப் பார்த்தால் இவன் தன் வாழ்வை இந்த ஊரோடும், தொழிலோடும் தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளும் மட்டும் முடித்துக்கொள்ள திட்டமிட்டு விட்டான் போலிருக்கிறதே!'

அடுத்த இரு தினங்களில் தன் தாத்தாவிடம் ரொம்பவே கெஞ்சிக் கொண்டிருந்தாள் ரித்திகா.

"தத்து... ப்ளீஸ் தத்து... நான் உங்களை மாதிரி இல்லை, கியர் பைக்கையே நன்றாக ஓட்டுவேன். வேண்டுமென்றால் அம்மா, அப்பாவிடம் கூட கேட்டுப் பாருங்கள். தாத்தாவிற்கு ஓகே என்றால் அடுத்த நிமிடம் உன் கையில் வண்டியை தந்து விடுகிறேன் என்கிறார் சுந்தரம் மாமா. நீங்கள் தான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!"

சிவலிங்கமோ, "ஏய்... நீ உன் வரையில் மட்டும் பேசு. ஏன் இதில் என்னை இழுக்கிறாய்?" என்றார் ரோஷமாக.

"சரி சரி... நான் என்னை பற்றி மட்டும் சொல்கிறேன். வேண்டுமென்றால் வெளியே வந்துப் பாருங்களேன், உங்கள் கண் முன்னாலேயே நான் தெருமுனை வரை வண்டியை ஓட்டிக் காண்பிக்கிறேன். இல்லை, நீங்கள் என் பின்னால் அமர்ந்தீர்கள் என்றால் ஊர் முழுவதும் கூட சுற்றி வந்து காட்டுகிறேன்!" என்று எக்ஸ்டிராவாக அவள் ஒரு பிட்டை சேர்த்துப் போட அரண்டுப் போன சிவலிங்கம், "வேண்டாம்... வேண்டாம்... நீ தெருமுனை வரை மட்டும் போய்வா போதும்!" என்று வேகமாக இறங்கி வந்தார்.

அது... என்று உள்ளுக்குள்ளே குதூகலித்தவள் வீட்டினர் முன்னே சுந்தரத்தின் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸை அநாயசமாக உதைத்துக் கிளப்பி தெருமுனை வரை சீரான வேகத்தில் சென்று அங்கிருந்து லாவகமாக வளைத்து இவர்களிடம் வர, தெருவில் உள்ளோர் மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாக வியந்துப் போய் அவளைப் பார்த்தனர்.

"அட... என் மருமகளே!" என வாஞ்சையுடன் அவளுக்கு நெட்டி முறித்த மங்களம், "நான் கூட இந்த பிள்ளை உயரம் வேறு குறைவாக இருக்கிறதே... கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்துப் போய் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்!" என்றார் புன்னகையுடன்.

"ஹைய்யோ அத்தை... என்னிடம் லைசென்ஸே இருக்கிறது. ஒன்றுமில்லாத இதற்குத்தான் இந்த தாத்தா இந்தப் பயம் பயப்படுகிறார்!" என்று அவரை செல்லமாக முறைத்தாள்.

கண்களை சிமிட்டாமல் தன் பேத்தியையே பெருமையுடன் பார்த்திருந்த தாத்தாவிடம், "அப்புறம் என்ன மாமா? பிள்ளை தான் தைரியமாக இருக்கிறாளே, வண்டியில் தான் ஊரை சுற்றிப் பார்க்கட்டும்!" என்று அனுமதி கேட்டார் சுந்தரம்.

"ஆங்... சரி சரி கொடு!" என்றவர் ரித்துவிடம் மகிழ்ச்சியாக புன்னகைக்க, ஸ்வீட் தத்து... என கொஞ்சி அவர் கன்னம் கிள்ளி முத்தமிட்டவள் வண்டியை கிளப்பினாள்.

"அக்கா... அக்கா... முதலில் என்னை வைத்து ஒரு ரவுண்ட். அப்புறம் நீ எங்கே வேண்டுமென்றாலும் போ!" என்று பைக்கின் குறுக்கே பாய்ந்து வந்து தடுத்தான் தமிழரசு.

'நல்லவேளைடா... ஒரு ரவுண்டோடு நிறுத்திக்கொண்டான். நாம் நம் ஆளை வேறு ஃபாலோ செய்துப் போக வேண்டுமே!' என்று அவனை சந்தோஷமாக தன் பின்னால் ஏற்றிக்கொண்டாள் ரித்திகா.

அவனை வீட்டருகே இறக்கி விட்டதும் முதல் வேலையாக ஆற்றங்கரையை நோக்கி வண்டியை சீற விட்டவள் சற்றே நிதானித்து பைக்கை சாலையில் ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு ஓசையின்றி நடந்துச் சென்று அங்கே அவன் இருக்கிறானா என்று தேடிப்பார்த்ததில் அருவியிலிருந்து சிறிது தள்ளி வேறொரு பக்கம் இருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தான் பரத்.

அதன்பிறகும் இடைவிடாமல் அவனை பின்தொடர்ந்ததின் பலனாக தனிமையில் சந்திக்க ஏதுவான இடமாக அந்த ஊரின் ஆற்றங்கரையையே தீர்மானமாக தேர்ந்தெடுத்தாள் ரித்திகா.

No comments:

Post a Comment

Most Popular