Matru Kuraiyatha Mannavan 2 - Deepa Babu

 

*2*


லேசாக வாயைப் பிளந்து கைமறைவில் கொட்டாவி ஒன்றை விட்டவாறே அறையை விட்டு வெளியே வந்த ரித்திகா, மூக்கு கண்ணாடி என்கின்ற பெயருக்கு ஏற்ப தாத்தா அணிந்திருந்த கண்ணாடி அவர் மூக்கின் சரிவில் முழுவதும் சரியாமல் இடையில் தடையிட்டு தேங்கி நிற்பதை சிரிப்புடன் பார்த்தவாறே அருகில் வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கையில் ஏதோ ஒரு தடிமனான தமிழ் புத்தகத்தை வைத்து கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவரின் தோளில் வசதியாக தலையை சாய்த்துக் கொண்டாள்.

"என்னடா குட்டிம்மா நல்ல தூக்கமா?"

"ஆமாம் தத்து... சரியான அலுப்பு, நன்றாக மூன்று மணி நேரம் தூங்கி விட்டேன்!" என்றவாறு சுவரில் மாட்டியிருந்த பழங்கால பென்டுலம் கடிகாரத்தின் மீது தன் பார்வையை ஓட்டினாள்.

"சரி... நீங்கள் என்ன செய்தீர்கள்? மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடாமல் இப்படியே தான் படித்துக் கொண்டிருந்தீர்களா?"

"இல்லைடாம்மா... ஒரு அரைமணி நேரம் முழுதாக தூங்கி எழுந்தேன் அவ்வளவு தான். அதற்குமேல் தூங்கினால் வயதாகி விட்டது அல்லவா... இரவில் உறக்கம் வராது!" என்றார் சிவலிங்கம்.

"ஹஹா... தத்து... இதை மட்டும் வெளியில் சொல்லி விடாதீர்கள். உங்களை பார்த்தால் யாரும் அறுபதை தாண்டி சொல்ல மாட்டார்கள். ஆனால் அப்பாவிற்கு எந்த உடற்பயிற்சியும் கிடையாது என்பதால் ஐம்பது வயதிலேயே அறுபது வயது மாதிரி தோற்றமளிக்கிறார் என்று அம்மா தான் உங்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சமாவது அக்கறை செலுத்துங்களேன் என்று அவ்வப்பொழுது அவரிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிலும் கண்டிப்பும், கெடுபிடியுமாக இருக்கின்ற அப்பா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மகா சோம்பேறியாக இருக்கிறார்!"

"ம்... அவன் மூளைக்காரன்மா, அதனால் தான் தொழிலும் அதற்கேற்றவாறு உடல் உழைப்பு தேவைப்படாததாகவே அவனுக்கு தேடிவந்து அமைந்துவிட்டது!" என்றவர், "சரி அதிருக்கட்டும்... நான் டீ குடித்துவிட்டு தோட்டத்தின் பக்கம் ஒரு சுற்றுப் போய் பார்வையிட்டு வருகிறேன். நீ என்ன செய்கிறாய்? இங்கேயே இருக்கிறாயா... சிறிது நேரத்தில் தமிழும் பள்ளியில் இருந்து வந்து விடுவான்!" என்று பேத்தியிடம் வினவினார்.

"இல்லை... இல்லை... அத்தை சொன்னதை வைத்துப் பார்த்தால் அவன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதுவரை உள்ளேயே அடைந்துக் கிடப்பது எல்லாம் ஒரே போர், இதோ உடனே தலை வாரிவிட்டு நானும் உங்களுடன் வருகிறேன்!" என்று எழுந்து உள்ளே சென்றவளை பார்த்து சலிப்புடன் முணுமுணுத்தார் இவர்.

"ஆமாம்... எப்படியும் தலைமுடியை விரித்துப் போட்டுத்தான் வரப்போகிறாய். அதற்கெதற்கு தலைவாருகிறேன் நானும் என பெயர் செய்து நேரத்தை வீணாக்குகிறாய். ஏற்கனவே விரித்துப் போட்டிருப்பதோடு அப்படியே வருவது தானே?"

அறைக்குள்ளே சென்று விட்டவள் அதே வேகத்தில் திரும்பி வெளியே வந்து அவரை எட்டிப் பார்த்து, "எனக்கு எல்லாம் காதில் விழுந்து விட்டது!" என உதட்டை சுழித்தாள்.

"ம்க்கும்... உனக்கு நன்றாக விழ வேண்டும் என்று தான் நான் இப்படி சத்தமாக சொன்னதே!" என்றவாறு பேத்தியை செல்லமாக முறைத்தார் அவர்.

"ஆங்... அப்பொழுது எனக்கு எதுவும் விழவில்லை!" என்று அவள் வேகமாக உள்ளே ஓடிவிடவும் இவர் முகத்தில் நகை அரும்பியது.

"ஓம்க்... தத்து... கொஞ்சம் மெதுவாக தான் நடங்களேன், உங்கள் வேகத்திற்கு நான் ஜாகிங்கில் ஓடிவருவது போல் வந்தால் தான் சரியாக இருக்கிறது!" என்று லேசாக மூச்சு வாங்க கூறினாள் ரித்திகா.

"ஆமாம்... நடைபயிற்சி என்பதே இல்லாமல் எந்நேரமும் வண்டியை முறுக்கிக்கொண்டு பறப்பவர்களுக்கு முதலில் ஒழுங்காக நடக்கத் தெரிய வேண்டுமே!"

"ஏன்? நாங்கள் தான் த்ரெட்மில்லில் நடக்கின்றோமே!" என்ற பேத்தியை திரும்பி ஏளனமாகப் பார்த்தார் பெரியவர்.

"எது? இருக்கின்ற இடத்தை விட்டு அசையாமல் நடந்த இடத்திலேயே நடப்பீர்களே... அந்த மிஷினா? ஹும்... இப்படி காற்றாட கை, காலை வீசி நடப்பதற்கு ஈடாகுமா அது?"

"அப்படியே பார்த்தாலும் இதைவிட சிறந்தப் பயிற்சியாக இப்பொழுது எல்லாம் வேகநடை, மிதவேக நடை, அப்புறம்... ஆங்... நடையில் எட்டு போடுவது என்றெல்லாம் புதிது புதிதாக உடலுக்கு ஆரோக்கியம் தருவதை ஒவ்வொன்றாக இந்த தலைமுறையினர் ஏதாவது கண்டுப்பிடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்!"

"ஆமாம்... இருப்பதை விட்டு விட்டு பறப்பதை தான் தேடிப் போவீர்கள் நீங்கள்!" என அங்கலாய்த்தார் சிவலிங்கம்.

"அட ரித்திகாம்மா... ஊரிலிருந்து வந்தாயிற்றா? தாத்தா ரொம்பவும் சந்தோஷமாக சொல்லிக்கொண்டே இருந்தார்!" என்று ஆவலுடன் வரவேற்றான் மாணிக்கம்.

"ஹாய் அண்ணா... காலையில் தான் வந்தேன். அண்ணி, குட்டிப்பையன் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?" என அவனிடம் பதிலுக்கு நலம் விசாரித்தாள் ரித்து.

"நன்றாக இருக்கிறார்கள்மா. சரி இளநீர் சாப்பிடுகிறாயா?"

"ஆங்... உங்களிடம் ஸ்டிரா இருக்கிறதா, இல்லையென்றால் வேண்டாம்!" என அவள் மறுக்க சிவா கேலியாக சிரித்தார்.

"உனக்கு இது தேவையா மாணிக்கம்... கடைத்தெரு பக்கம் போனாய் என்றால் ஸ்டிராவை பாக்கெட்டாகவே வாங்கி வந்துப் போட்டு வைத்துவிடு. இனி இவள் இங்கிருக்கும் வரையில் அது நிச்சயமாக தேவைப்படும்!" என்றவரிடம் சிணுங்கியவள், அடுத்து மாணிக்கத்திடம் தோட்டத்தை பற்றி ஆர்வமாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

விவசாயம் பற்றி அடிப்படை கூட தெரியாதவள் கேட்கின்ற அர்த்தமற்ற கேள்விகளுக்கு எல்லாம் சிறு புன்னகையும், பொறுமையுமாக அவன் பதிலளிக்கத் துவங்க, இவர் வரப்பு ஓரத்தில் மெதுவாக தன்னுயிர் பயிர்களை கண்களில் படம் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பொழுதும் அவர் மனதை மிகவும் நிறைவடையச் செய்வது இந்த ஒரு விஷயம் தான். தளிர் பச்சை நிறத்தில் தழைத்தோங்கி நிற்கும் பயிர்கள் தான் அவருக்கு கண்ணான கண்மணிகள்.

எதிர்காலத்தில் தன் பிள்ளைகள் எவரும் விவசாயம் பார்க்கப் போவதில்லை என்றாலும் அதை இப்பொழுதே விற்றுவிட அவருக்கு மனம் வரவில்லை. அதனால் தான் பொருத்தமான ஆளாக மாணிக்கத்தை தேர்ந்தெடுத்து அவனிடம் தன்னுடைய நிலத்தை குத்தகைக்கு விட்டவர் தன் காலத்திற்குப் பிறகு அவற்றை தன் வாரிசுகள் இருவரும் சமபங்குக்கு இவனிடம் மட்டுமே விற்க வேண்டும் என்றும் ஸ்திரமாக உயில் எழுதி வைத்திருக்கிறார்.

லேசாக இருட்டுகின்ற வேளையில் தாத்தாவும், பேத்தியும் தங்கள் வீடு திரும்ப ஆரம்பித்தனர். அவரிடம் எதையோ வளவளத்தபடி வந்தவளின் கண்களில் அது விழுந்தது.

இரண்டு சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு வேகமாக சைக்கிளை ஓட்டி வரும்பொழுது அடுத்தவர் மேல் மோதி தடுமாறி ஓரிடத்தில் கீழே விழுந்தனர்.

அவர்களிடம் விறுவிறுவென ஓடிய பெரியவர் ஒருவன் மேல் விழுந்திருந்த சைக்கிளை வேகமாக தூக்கி நிறுத்த, சிறுவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாள் ரித்து.

"ஏன்டா? இன்னும் உங்களுக்கு முழுதாக பத்து வயது கூட நிரம்பவில்லை... அதற்குள் எதற்காகடா இப்படி சைக்கிளை எடுத்து ஓட்டி வந்து கீழே விழுந்து கை, காலை உடைத்துக் கொள்கிறீர்கள்?" என்று அதட்டினார்.

சிவாவின் சொல்லில் சிறுவர்கள் இருவரும் 'ஙே' என்று பெரிதாக விழிக்க, ரித்திகா பொங்கி வரும் சிரிப்பை தாத்தா அறியாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"டேய்... கால்களை நன்றாக உதறுங்கள். அடி எதுவும் பலமாக படவில்லையே?" என்று அவர்களிடம் நலம் விசாரித்தாள்.

அவள் கூறியது போல் செய்த பிள்ளைகள், "இல்லைக்கா..." என ஒன்றாக தங்களுடைய ஆரோக்கியத்தை அவளுக்கு தெளிவுப்படுத்தினர்.

"சரி சரி... போட்டிப் போடாமல் நேராக ஒழுங்காக வீட்டிற்குச் செல்லுங்கள்!" என்றாள் பெரியவளாக கண்டிப்புடன்.

ஒப்புதலாக தலையசைத்தவர்கள் சைக்கிளை எடுக்க வர, "இருங்கள்... இருங்கள்!" என்ற சிவா வண்டிக்கு நேராக டயர் முன்னே நடுவில் நின்று ஹேன்டில் பார் இரண்டும் வளையாமல் இருக்கிறதா என பரிசோதித்து திருப்பினார்.

"ம்... இப்பொழுது எடுத்துச் செல்லுங்கள்!" என மிடுக்காக வழிவிட்டு நின்றார்.

அவர் செய்வதை பார்த்திருந்த ரித்துவிற்கு ஒருமுறை தன் அத்தை கூறிய கதை நினைவு வர, தாத்தாவை பார்த்து நமட்டுப் புன்னகை சிந்தியவாறு நடக்க ஆரம்பித்தாள்.

"அப்புறம் குட்டிம்மா..." என்று அவளிடம் எதையோ சொல்ல திரும்பியவர் அவளின் மர்மப் புன்னகையை கண்டு தானும் மலர்ந்தபடி, "என்னடா?" என்று ஆர்வமாக விசாரித்தார்.

"இல்லை... நான் ஒருமுறை பள்ளி விடுமுறையில் இங்கு வந்திருந்தப் பொழுது உங்களை பற்றி அத்தை ஒரு கதை கூறினார்கள் அது நினைவு வந்து விட்டது!" என்றாள்.

"யார் மங்களமா?"

"இல்லை தாத்தா... நம் சுசீலா அத்தை!" என்று தன் தந்தையின் உடன்பிறந்தவளை குறிப்பிட்டாள்.

"ஓ... அப்படியென்ன என்னை பற்றி சொன்னாள்?" என்று அடுத்து தன் பேத்தி காலை வாரப்போவது தெரியாமல் அப்பாவியாக வினவினார் அவர்.

"அதுவா... உங்கள் நடையின் வேகத்திற்கான வரலாற்றை சொன்னார்கள்!" என்றவள் பக்கென்று சிரித்தாள்.

"ஏய் போக்கிரி... என்ன ரொம்பவும் தான் சிரிக்கிறாய்?"

"பின்னே... நடக்க ஆரம்பிக்கும் வயதிலிருந்தே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கென்று விதவிதமாக மார்க்கெட்டில் பல சைக்கிள்கள் வருகிறது. நீங்கள் என்னடாவென்றால் ஏழெட்டு வயதுடைய பிள்ளைகளிடம் போய் ஏன்டா சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்று அதட்டுகிறீர்கள். நகர் புறங்களில் எல்லாம் பன்னிரண்டு வயதில் பிள்ளைகள் பைக்கே ஓட்டி விடுகிறார்கள்!"

"ஆமாம்... துளியும் பொறுப்பில்லாத பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள். அவ்வளவு சின்ன வயதில் வண்டியை தொட அனுமதிக்கலாமா? அரசாங்கம் வண்டியை ஓட்டுவதற்கு அனுமதித்திருக்கும் வயதே பதினெட்டுக்கு மேல் தான். இவர்கள் என்னடாவென்றால் சின்னப் பிள்ளைகளின் கைகளில் வண்டியை கொடுத்து அவர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்குகிறார்கள்!" என்று சலித்தார்.

"அது சரிதான் தாத்தா... ஆனால் உலகின் வேகத்திற்கு ஈடாகவும் அவர்கள் செல்ல வேண்டுமே, என்னவொன்று வெறிச்சோடி இருக்கின்ற சின்ன சின்ன சாலைகளில் பயன்படுத்தலாம். மக்கள் நெருக்கடி மிகுந்த பெரிய போக்குவரத்து சாலைகளை பயன்படுத்தக் கூடாது என்று பிள்ளைகளை கட்டுப்படுத்தி வைக்கலாம்!"

"ம்... ம்..."

"ஆஹா... பேச்சு திசை மாறிவிட்டது பாருங்கள். நீங்கள் எப்படி இவ்வளவு வேகமாக நடக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியுமே!" என்று அவரை பார்த்து குறும்பாக நகைத்தாள்.

"என்ன... எப்படி?" என்றார் சிவலிங்கம் ஆச்சரியமாக.

"சொல்கிறேன்... நீங்கள் ஏன் சைக்கிள் ஓட்டுவதில்லை? சரி அதைக் கூட விட்டு விடுங்கள். பைக்கில் அடுத்தவர் பின்னால் அமர்ந்து செல்வதை தவிர்த்து ஏன் பக்கத்து ஊர் வரையிலும் என்றாலும் கூட நடந்தே செல்கிறீர்கள்?" என்று வினவி அவரிடம் கேலியாக கண்சிமிட்டினாள்.

பேத்தியிடம் அசடுவழிந்தபடி சிரித்த சிவலிங்கம், "உன் அத்தை வேலை மெனக்கெட்டு விடுமுறையில் வந்தால் உங்களிடம் இதையெல்லாம் தான் கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறாளா... இதோ போய் முதலில் அவளுக்கு ஒரு போனை போட்டு வெளுத்து வாங்குகிறேன்!" என வீட்டின் அருகில் வந்து விட்டவர் சூளுரைத்தார்.

கலகலவென்று நகைத்தவள், "சரி... ஆனால் நான் தான் போட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் அவர்களிடம் சொல்லி விடாதீர்கள். நான் சென்று தமிழோடு சிறிது நேரம் விளையாடிவிட்டு வருகிறேன். பை!" என்று மங்களத்தின் வீட்டிற்கு ஓடிச் சென்றாள்.

சிவலிங்கம் தன் வாலிப வயதில் மிதிவண்டி ஓட்டுவதற்கு பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டும் சரிவர கற்றுக்கொள்ள முடியாமல் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து அடிபட்டதால் அலுத்துப்போய் அம்முயற்சியையே கைவிட்டு விட்டார்.

அடுத்த சோதனையாக சற்று வயதான பிறகு ஒருமுறை கடைத்தெருவிற்கு சென்றுவிட்டு அவர் வீடு திரும்பும் பொழுது முதன் முதலாக உறவினர் ஒருவர் அழைத்தார் என்று அவருடைய பைக்கில் ஏறி அமர்ந்தவர் நன்றாக பிடித்துக் கொள்ளாமல் அதில் சரியாக உட்கார தெரியாமல் பயணித்ததால் வண்டி ஓரிடத்தில் பள்ளத்தில் இறங்கி ஏறும்பொழுது இவரும் அந்த பள்ளத்தில் விழுந்து வலது கையில் லேசாக எலும்புமுறிவு ஆகிவிட்டது.

அதிலிருந்து சிவா மனசுல சக்தி படத்தில் நடிகர் சந்தானத்திற்கு போன் என்றாலே அலர்ஜி வருமே அது போல இவருக்கு இருசக்கர வாகனங்கள் என்றாலே அலர்ஜியாகி விட்டது. அதன்பிறகு என்ன? எங்கே சென்றாலும் நடராஜா சர்வீஸ் தான்.

மறுநாள் காலையில் அவர் வழக்கம் போல் கோவிலுக்கு கிளம்பவும் பேத்தியும் அதில் உற்சாகமாக இணைந்துக் கொண்டாள். பக்திக்காக அல்ல இயற்கை எழிலுக்காக... மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் கண்களுக்கு குளிர்ச்சியான பசுமைக்கு பஞ்சமா என்ன?

முருகன் குன்றின் மேல் ஏறுவதற்கு இரு வழிப்பாதை உண்டு. ஒன்றில் கிராமத்தில் இருந்து மக்கள் வருவதற்காக வசதியாக படிகற்கள் அமைக்கப்பட்டிருந்தது. மற்றொன்று மலைக்கு பக்கவாட்டில் சற்றே கரடுமுரடான பாதையாக இருக்கும். ஆனாலும் ஒற்றையடி யானைத்தடம் போல் நடப்பதற்கு சிரமமாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடிய நிலையில் தான் அது இருந்தது.

அந்த வழியாக கீழிறங்கிச் சென்றால் சலசலத்து ஓடும் தாமிரபரணி ஆறும் சற்று தொலைவில் ஆர்ப்பரிக்கும் சிறு அருவி ஒன்றும் இருக்கும். உயரத்தில் குறைவாக இருக்கும் அதன் பெயர் தான் சிறு அருவியே தவிர மேலிருந்து கொட்டுகின்ற தண்ணீரில் நம் தலையை காட்டினால் வானிலிருந்து நேராக இறங்கும் இடியென நங்நங்கென்று ஆக்ரோஷத்துடன் உச்சந்தலையில் விழும்.

பெரியதாக சுற்றுலா துறையால் ஊக்குவிக்கப்படாத பகுதி என்பதால் உள்ளூர் மக்களே அதைப் பராமரித்து அடைமழை காலங்களில் வெள்ளத்தால் பொங்கிப் பிரவகித்து வரும் நீரருவி அருகில் பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் பாதுகாப்பையும் பலப்படுத்தி விடுவர்.

"சரி தத்து... நீங்கள் வீட்டிற்கு போங்கள். நான் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்!" என்று சிவலிங்கத்தை நயமாக அனுப்ப முயன்றாள் ரித்திகா.

"சொல்பேச்சு கேட்கின்றாயா நீ? இன்று ஷஷ்டி என்பதால் சந்நிதியில் பொங்கலை பிரசாதமாக கொடுத்தார்கள். நீ என்னடாவென்றால் அதுவே எனக்கு போதும் வயிறு நிரம்பி விட்டது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வீடு வருகிறேன் என்றால் என்ன அர்த்தம்? நேர நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிட வேண்டாமா?" என்று முறைத்தார்.

"ஹைய்யோ தத்து... எங்கள் ஊரில் எல்லாம் பிரசாதம் என்றால் தொன்னை அளவு கப்பில் சிறிதளவு தருவார்கள், இங்கே பார்த்தால் வாழை இலையில் தருகிறார்கள். என் குட்டி வயிற்றுக்கு அது போதாதா? சும்மா... நீங்களும் டென்ஷனாகி என்னையும் டென்ஷனாக்காதீர்கள். நானே கொஞ்ச நேரத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு நேரமாக வீட்டிற்கு வந்து விடுவேன்!"

"என்னவோ போ... இன்னமும் நீ பேருந்தில் ஊருக்கு வந்தது உன்னுடைய அப்பனுக்கு தெரியாது. தெரிந்தால்... உன்னை தனியாக இந்த ஊர்பக்கமே விடமாட்டான், சின்னப்பிள்ளை ஆசைப்படுகிறாயே என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் நீ ரொம்பவும் தான் அடம்பிடிக்கிறாய்!" என்றார் கண்டிப்போடு.

"நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கண்டிப்பாக போன முறை செய்ததை போல் அருவியில் அதிகநேரம் ஆட்டம் போட்டு காய்ச்சலை இழுத்துக்கொள்ள மாட்டேன். அவ்வளவு ஏன்? இன்று நான் குளிக்கவே போக மாட்டேன் தத்து, காட் ப்ராமிஸ்!" என்றாள் தொண்டை குழியை விரல்களால் பற்றி.

பேத்தி சரியாக தன் கருத்தை பிடித்து விடவும் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பெரியவர்.

"சரி இன்று நீ நடந்துக் கொள்வதைப் பொறுத்து தான் நான் இனி உன்னை இங்கே சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதிப்பேன். ஜாக்கிரதையாக சுற்றிப் பார்த்துவிட்டு வா, அப்புறம் ரொம்பவும் புதர்கள் ஓரமாக எல்லாம் நடக்காதே பூச்சி, பொட்டுக்கள் அதிகமிருக்கும்!" என்று எச்சரித்தவர் அவளின் விண்ணப்பத்தை பொருட்படுத்தாமல் கையை பற்றி வேகமாக இழுத்துக்கொண்டு படிகள் வழியாகவே குன்றிலிருந்து கீழே அழைத்து வந்தார்.

குறுக்கு வழியில் இறங்கிக் கொள்கிறேன் என ரித்திகா ஒற்றையடி பாதையை தேர்ந்தெடுத்தால், சுற்றி நடந்தாலும் பரவாயில்லை அதில் இறங்கி கை, கால்களை உடைத்துக் கொள்ளப் போகிறாய் என மாற்றுப் பாதையாக சாலை வழியே அருவிக்கு செல்வதற்கு கை காட்டியவர், நேரமாக வீட்டிற்கு வரும்படி மிரட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இந்த தாத்தாவோடு... என்று தன் தலையில் அடித்துக் கொண்டவளுக்கும் தன்னுடைய பொறுப்பில் இருப்பவளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவரின் மகா அச்சம் புரிந்ததால் வீர நடை போடுபவரை சின்னப் புன்சிரிப்போடு பார்த்திருந்து விட்டு இவள் ஆற்றங்கரையை நோக்கி நிதானமாக செல்ல துவங்கினாள்.

அருகில் நெருங்க நெருங்க ஓவென்ற பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் ஒலியும், மனதை மயக்கும் மெல்லிய நீர் சாரலும் அவள் மேனியை தீண்டி உடல் முழுவதையும் மெய்சிலிர்க்க செய்தது.

உள்ளிருந்து பொங்கும் இனிய பரபரப்பில் ஆர்வம் பெரிதாக தலைதூக்க விறுவிறுவென்று நடந்தவளின் பார்வையில், ஆற்றங்கரையின் ஓரமாக படர்ந்திருந்த மிகப்பெரிய பாறை ஒன்றின் மீது அமர்ந்து அதன் மேல் உள்ள ஒரு சிறு பாறையில் லேசாக பின்னால் சாய்ந்தவண்ணம் கால் மீது கால் போட்டிருந்தபடி தன் கையில் இருந்த ஏதோ ஒரு நோட்டில் தன்னுடைய எழுதுகோலால் எதையோ மிகவும் தீவிரமாக வரைந்துக் கொண்டிருந்த ஆண்மகன் ஒருவன் விழுந்து அவளின் நடைவேகத்தை தேங்கச் செய்தான்.

கீழுதட்டை கடித்தபடி நின்றவள், 'இவன் என்ன எதுவும் ஆர்டிஸ்ட்டா? எதையோ ரொம்பவும் தீவிரமாக வரைந்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது நாம் அங்கே சென்றால் எதுவும் தொந்திரவாக இருக்குமோ!' என்று சிந்தித்தாள்.

பின்பு தன் பிறவிக் குணமான அலட்சியம் தலைத்தூக்கவும், 'அவன் வரைந்தால் அவனோடு... அவன் என்ன இங்கே தவமா செய்கிறான் நான் சென்றால் கலைந்து விடுவதற்கு? வரையத்தானே செய்கிறான், வரையட்டும்!' என தோள்களை குலுக்கிக் கொண்டவள் முன்னேற துவங்கினாள்.

அவனுக்கு பக்கவாட்டில் நடந்துச் செல்லும்பொழுது இவள் நடையின் சலசலப்பு உணர்ந்து திரும்பிப் பார்த்தவனின் முகம் கண்டு இவள் விழிகள் வியப்பில் பெரிதாக விரிந்தது.

'இவனா... இவன் எப்படி இங்கே?' என வாயைப் பிளக்காத குறையாக தன் கண்களையே நம்ப முடியாமல் இமைக்க மறந்து அவனையே பேவென்று பார்த்தாள் நம் ரித்திகா.

இவளின் வரவு அவனை அதிருப்திப்படுத்தியது போலும்... லேசான முகச்சுளிப்புடன் வேகமாக எழுந்தவன் தன் கையில் இருந்ததை எல்லாம் ஒழுங்குப்படுத்தி எடுத்துக்கொண்டு பாறையில் இருந்து இறங்க ஆரம்பித்தான்.

மனதும், உடலும் சிறு புத்துணர்ச்சிக் கொள்ள ஆவலுடன் அவனை விடாமல் பார்த்தவள், அவன் தன்னை தாண்டிச் செல்லவும் சுதாரித்து அவனருகில் ஓடிச் சென்றாள்.

"ஹேய்... நீங்கள்... வந்து... அது... நீங்கள் பரத் சீனிவாசன் தானே?" என்றாள் உற்சாகமாக விழிகள் மின்ன.

மின்சாரம் பாய்ந்தது போல் உடல் ஒருமுறை விறைத்து இறுக, பட்டென்று அவளிடம் சீற்றத்துடன் திரும்பியவனின் விழிகளில் மிகுந்த வெறுப்பு தெரிந்தது.

இவளின் நெற்றி குழப்பத்தில் சுருங்கும் பொழுதே சற்றே எரிச்சலுடன் அவளை உற்று நோக்கிவிட்டு மடமடவென்று திரும்பி விரைவாக நடந்தவன் சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புயலென பறந்துச் சென்று விட்டான்.

No comments:

Post a Comment

Most Popular