*4*
தன் மகளின் இழப்பை கேட்டு இளநகையின் விழிகளில் தென்பட்ட கவலையும், பதற்றமும் அமுதாவை நிலைத்தடுமாறச் செய்தது.
அசையாமல் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தவளின் மனதிலிருந்த ஆவேசம் இருந்த இடம் தெரியாமல் மறையத் துவங்கி அவ்விடத்தை குழப்பம் ஆக்கிரமித்தது.
அமுதாவின் நிலையை எண்ணி உண்மையிலேயே கவலையோடு தான் பார்த்துக் கொண்டிருந்தாள் இளநகை.
குழந்தை மனம் கொண்ட அம்மங்கைக்கு தன்னை எதிரில் இருப்பவர் துச்சமாக தரக்குறைவாக மதிப்பிட்டுப் பேசினார் என்பதெல்லாம் மனதில் பதியவில்லை.
'ஐயோ பாவம்... இவர்கள் பெண் இறந்து விட்டார்களாமே... எவ்வளவு வேதனையாக இருக்கும்?' என்று தான் அவளுக்காக வருந்தினாள் அவள்.
நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கனகத்திற்கே உள்ளூர திகைப்பு தான்.
சற்றும் விருப்பமின்றி தங்கள் சந்ததியின் எதிர்காலத்திற்காகவும், தன் மகனின் வெறுமையான நிலையை எண்ணியும் வேண்டாவெறுப்பாக அழைத்து வந்த மருமகள் தங்களின் நிலைக்கேட்டு வேதனைக் கொள்கிறாள் என்பது அவரையும் மீறி அசைத்துப் பார்க்கத்தான் செய்தது.
ஆனாலும் அவர்களின் நெடுநாள் கனவும், இழப்பும் அவள் பால் மனமிறங்க மறுக்க, எதுவும் பேசாமல் அமுதாவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
மூடியக் கதவையே சற்று நேரம் பார்த்திருந்த இளநகைக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வீட்டை பார்வையால் அலசியபடி சுற்றி வந்துப் பார்த்தாள்.
நடுநாயகமாக ஒரு பெரிய ஹாலும், அதற்கு ஒருபுறம் பூஜையறையும், கிட்சனும், டைனிங்கும் மறுபுறம் இரண்டு அறைகளும் கீழ்பகுதியில் இருந்தது. பார்வையை மாடிக்கு உயர்த்த எதிரெதிராக இரண்டு அறைக்கதவுகள் தென்பட்டது.
மீண்டும் பழைய இடத்துக்கு வந்தவள் அங்கிருக்கும் சோபாவில் அமரலாமா இல்லை வேண்டாமா என தனக்குள் சிறு பட்டிமன்றம் நடத்திவிட்டு, சரி யாராவது திட்டினால் உட்காராமல் இருந்து விடுவோம் என்று சோர்வுடன் அமர்ந்தாள்.
இரு அறைகளிலும் முடங்கிய வீட்டினர் வெளியே வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. முழங்காலிட்டு அதில் தன் கன்னத்தை சாய்த்துக் கொண்டவளுக்கு அமுதாவின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தது.
'இந்த வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் ஏன் என்னை பிடிக்கவில்லை என்ற காரணம் இப்பொழுது தான் புரிகிறது. அவங்க பெண்ணை தான் தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தப் பெண் இறந்துப் போகவும் வேறுவழியில்லாமல் என்னை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்!' என்று பரிதாபப்பட்டாள்.
'ஆனால் பாவம் இல்லை... என்னை மாதிரி கனவு, ஆசை என்று எதுவும் இல்லாமல் இருந்திருந்திருந்தால் இவர்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மூவருக்குமே மிகப்பெரிய இழப்பு தான் மகள், பேத்தி, அவருக்கு... தன் அக்கா பெண்ணையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அவரும் ரொம்ப ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால் தான் என்னை பிடிக்காமல் அப்படி உம்மென்று இருக்கிறார்!' என வருந்தினாள்.
'ம்... இவர்கள் அனைவரையும் பொறுத்தவரை நான் இந்த வீட்டுப் பெண்ணின் இடத்திற்கு போட்டியாக வந்திருப்பவள். என்னை கண்டாலே இவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும் அதில் ஒரு தப்புமில்லை!' என பெருமூச்சுவிட்டவளுக்கு, மாடியில் கதவு திறக்கும் ஓசைக் கேட்க வேகமாக கால்களை கீழே இறக்கியவள் நேராக அமர்ந்து நிமிர்ந்துப் பார்த்தாள்.
வெளியே வந்தது கதிர் தான் கீழே தன் இரத்தம் ஒருவரையும் காணவில்லை எனவும் முகத்தை சுளித்தபடி மீண்டும் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
'எதற்கு வந்தார்? மறுபடியும் உள்ளே போய் விட்டாரே... அவங்க அக்கா, அம்மாவை பார்க்க வந்தாரோ... என்னை பார்த்ததும் எரிச்சல் வந்து விட்டது போலிருக்கிறது. பாவம்... இதே அவங்க அக்கா பெண்ணாக இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?' என்று கற்பனை செய்துப் பார்த்தாள்.
ப்ரீத்தியும், அவள் கணவனும் போல நிச்சயம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். அதுபோல் தன்னிடம் பேசுவாரா? என்று வளர்ந்த அக்குழந்தையின் மனம் ஏங்காமல் இல்லை.
சற்று நேரத்தில் மீண்டும் கதவு திறக்கும் ஓசைக் கேட்கவும் திரும்பியவள் கனகம் வெளியே வருவதை கண்டு அமைதியாக எழுந்து நின்றாள்.
இறுகிய முகத்துடன் நேராக கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டார் அவர். சின்ன தயக்கத்தின் பின்னே இளநகையும் அவர் பின்னே சென்று அறை வாயிலில் நின்றாள்.
கனகம் அடுப்பில் பாலை சூடு செய்துக் கொண்டிருப்பதை கவனித்தவள் அவரை எப்படி அழைப்பது என்று புரியாமல் மெல்ல தடுமாறியபடி பேசினாள்.
"வந்து... இப்பொழுது ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்னால் தான் அவர் வெளியில் வந்து பார்த்தார். நீங்கள் இருவரும் ஹாலில் இல்லை எனவும் மறுபடியும் உள்ளே போய் விட்டார்!"
எந்த எதிரொலியும் இன்றி கனகம் தன் போக்கில் டிகாஷன் கலந்துக் கொண்டிருக்க, தான் கூறியது அவர் காதுகளில் விழுந்ததா இல்லையா என குழம்பியவள் மீண்டும் பேச முயற்சிக்க அதை தடுத்தார் பெரியவர்.
"எல்லாம் விழுந்தது, நான் பார்த்துக் கொள்கிறேன்!" என நறுக்கு தெறித்தார் போல் சொல்லிவிட்டு காபி டம்ளர்களை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
"மணி பன்னிரெண்டாக போகிறது... என்ன சமைக்க வேண்டுமென்று எதுவும் சொன்னீர்கள் என்றால் நான் சமைத்து வைத்து விடுவேன்!" என்று மெல்லிய குரலில் முனகியபடி அவரை பின் தொடர்ந்து வந்தாள் இளநகை.
வெடுக்கென்று அவளிடம் திரும்பியவர், "இன்று நீ இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த மகிழ்ச்சியில் எங்கள் அனைவருக்குமே வயிறும், மனமும் மிகவும் நிறைந்துப் போய் இருக்கிறது. பசியெடுக்கவில்லை, அதனால் சாப்பாடு ஒன்றும் வேண்டாம். உனக்கு வேண்டுமென்றால் எல்லாமே சமையலறையில் இருக்கிறது எது வேண்டுமோ எடுத்து சமைத்து சாப்பிட்டுக் கொள்!" என்று அவளை நோக்கி குத்தலாக சொல் அம்புகளை வீசிவிட்டு வேகமாக விலகிச் சென்றார்.
அவர் சொல்லில் ஒரு கணம் திகைத்து நின்றிருந்தவள், "இல்லை... எனக்கும் எதுவும் வேண்டாம்!" என்று அவர் சாற்றிய கதவை பார்த்து மெல்ல முணுமுணுத்தாள்.
உள்ளம் துவள வாடிய ரோஜாவாக சில நிமிடங்களுக்கு அப்படியே அசையாது நின்றிருந்தவள் மெதுவாக தன்னை சமாளித்துக் கொண்டாள்.
'இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்து தானே வந்தேன்... என்னை யாருக்குமே பிடிக்காமல் தானே திருமணம் செய்து அழைத்து வந்தார்கள். அப்புறம் ஏன் நான் சோகமாக இருக்கிறேன்? இது போன்ற நேரங்களில் நான் எப்பொழுதுமே என்ன செய்வேனோ அதையே இப்பொழுதும் செய்துவிட்டுப் போகிறேன்!'
தனக்குத்தானே தேற்றிக் கொண்டவளாக வெளியே வந்து தோட்டத்தை சுற்றிப் பார்த்தாள்.
மனதில் இழந்த உற்சாகம் எல்லாம் மீண்டும் புதிதாக ஊற்றெடுக்க ஆரம்பிக்க, மலர்ச்சியுடனும் இதழ்களில் மிளிர்ந்த புன்னகையுடனும் ஒவ்வொரு செடியையும் ஆவலுடன் தொட்டு தடவிப் பார்த்தாள்.
தன்னை வெறுக்கின்ற உலகத்தில் இருந்து தான் நேசிக்கின்ற உலகிற்கு வந்து விட்டதில் அவளுள் பெரும் துள்ளல் ஏற்பட்டது.
பெரிய வேப்ப மரத்தின் பின்னே கொய்யா மரமும், சப்போட்டா மரமும் இருப்பதை கண்டவள் ஆர்வமாக அதனருகில் செல்ல, அதிலிருந்த அணில் ஒன்று புதியவளின் வரவை கண்டு வேகமாக மேலேறி ஓடியது.
அதைப் பார்த்ததும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தவள், "ஏய்... போயும் போயும் என்னை பார்த்தா பயந்து ஓடுகிறாய். நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்பா. புது ஆளாக இருக்கிறேன் என்று பயந்து விட்டாயா? நான் உன் பிரெண்டுபா, இனிமேல் இங்கே தான் இருக்கப் போகிறேன்.
உன்னிடம் வந்து அடிக்கடி பேசுவேன். என்னை பார்த்தால் ஓடிப் போக கூடாது. என்ன புரிகிறதா? நீ எப்பொழுதும் என் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும். என்னை யாருக்குமே பிடிக்காதுப்பா... நீயும் ஓடாதே!" எனும்பொழுதே அவளையுமறியாமல் விழிகள் கலங்கி குரல் பிசிறடிக்க துவங்க, வேகமாக இமைகளை படபடவென்று கொட்டி கலங்கும் மனதை தடுத்தவள் மரத்தின் உச்சியை பார்த்து மெல்ல புன்னகை பூத்தாள்.
அவள் பேசும் பாஷை அந்த அணிலுக்கு புரிந்ததோ இல்லை அதற்குத்தான் என்ன தோன்றியதோ... பாதி மரத்திற்கு கீழே இறங்கி வந்து இளநகையை பார்த்து கண்களை உருட்டியது.
விழியோடு சேர்ந்து அதரமும் மலர, "சரி பரவாயில்லை... இந்த அளவிற்கு இறங்கி வந்தாயே அது போதும். என்னை தினமும் பார்த்தாய் என்றால் உனக்கு பழக்கமாகி விடும்!" என்று அடுத்த மரத்தை நோக்கி நகர்ந்தாள்.
உட்கூரையில் ஓடும் காற்றாடியை வெறித்தவண்ணம் உணர்வுகள் மரத்துப் போய் படுத்திருந்த இளங்கதிரை வெளியே சாலையில் கேட்ட ஏதோவொரு வண்டியின் ஹாரன் ஓசை திடுக்கிட்டு கலைய செய்தது.
மனதில் ஏற்பட்ட சலிப்புடன் உடலை லேசாக முறித்தவன் திரும்பி நேரம் பார்க்க, மணி மதியம் இரண்டு முப்பது.
அப்படியே சில நொடிகள் அசையாமல் படுத்திருந்து விட்டு பின் மெல்ல எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான். வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் நிசப்தமாக இருந்தது.
சமையலறையை எட்டிப் பார்க்க, அங்கே யாருமில்லை எதுவும் சமைத்ததற்கான அடையாளமும் இல்லை.
புருவங்கள் நெறிய மூடியிருந்த தனது தாயின் அறைக்கதவை ஒருமுறை திரும்பிப் பார்த்தவனின் மனதில் மெல்லிய எரிச்சல் மூண்டது.
'திருமணம் வேண்டாமென்று தலை தலையாய் அடித்துக்கொண்ட பொழுதெல்லாம் கேட்காமல் ஆயிரம் காரணங்களை சொல்லி என்னை சமாதானப்படுத்தி தேவையில்லாமல் ஒருத்தியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு, இப்பொழுது அம்மாவும், பெண்ணும் பழையதை நினைத்து அழுது புலம்பி என்ன பிரோயஜனம்? என் நிம்மதியையும் சேர்த்து அல்லவா கெடுக்கிறார்கள்...' என்று கோபமாக கண்களை இறுக்க மூடி தன் சிகையை அழுந்தக் கோதியவன் மடமடவென்று படிகளை கடந்து திரும்பவும் தனது அறைக்குச் சென்றான்.
'புதிதாக வந்திருப்பவளால் இந்த வீட்டில் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வெடிக்கப் போகிறதோ? எங்கே அவளை வேறு கீழே ஆளைக் காணவில்லை? அவளால் எதுவும் பிரச்சினை என்று மட்டும் என்னிடம் ஏதாவது வரட்டும்... இருவரையும் வைத்து நன்றாக வாங்கு வாங்கென்று வாங்கி விடுகிறேன்.
சரி... வெளியே சென்று சாப்பாடாவது வாங்கி வருவோம். இந்த அம்மா வேறு சர்க்கரை, இரத்த அழுத்தம் என்று உடம்பில் ஆயிரெத்தெட்டு புகார்களை வைத்துக்கொண்டு இன்னமும் உணவு உண்ணாமல் இருக்கிறார்கள்!' என தனக்குள் புலம்பியபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு விரைவாக கீழே இறங்கினான் கதிர்.
அரைமணியில் திரும்பி வந்தவன் உணவு பாக்கெட்டுக்களை டேபிள் மேல் வைத்துவிட்டு சென்று தன் தாயின் அறைக்கதவை திறந்தான்.
அமுதா கட்டிலில் சோகமாக படுத்துக்கொண்டு சுவரை வெறித்திருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்த கனகம் கைகளில் ஏதோ ஒரு பக்தி புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார்.
கதவு திறக்கும் அரவம் கேட்டு நிமிர்ந்தவர்களை கதிர் உறுத்துப் பார்த்தான். துரிதமாக தங்கள் முகத்தை சீராக்கியவர்கள் அவனை கண்டு இலகுவாக புன்னகைக்க முயன்றனர்.
படுக்கையில் இருந்து அமுதா வேகமாக எழுந்து அமரவும் அருகில் சென்றவன், "என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? சமையலறை பக்கமே இருவரும் போகவில்லை போலிருக்கிறது!" என்றான் குத்தலாக.
தன் தம்பியின் முகத்தை நேராகப் பார்க்க இயலாமல் தலைக்குனிந்தவளின் விழிகளில் இருந்து கரகரவென்று நீர் வழிய கண்டு அவளை பற்றி முரட்டுத்தனமாக நிமிர்த்தியவன், "உங்கள் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தாலும் கூட அடுத்து நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என் நிம்மதியை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு அழ வேறு செய்கிறீர்களா நீங்கள்?" என்று சினத்துடன் சீறினான்.
சட்டென்று முகத்தை மூடிக்கொண்ட அமுதாவிடமிருந்து பெருங்கேவல் ஒன்று வேகமாக வெளிப்பட, அதற்குமேல் தன் தமக்கையை எதுவும் சொல்ல முடியாமல் வேதனையோடு அவளை இழுத்து தன் நெஞ்சோடு ஆதரவாக சேர்த்து அணைத்துக் கொண்டான் கதிர்.
தன் வயிற்றில் உதித்தவர்களின் உடன்பிறந்த பாசத்தை கண்டு உள்ளம் நெகிழ்ந்த கனகம் விழிகளை துடைத்துக் கொண்டு இளங்கதிரின் தோளை தொட்டார்.
"சரி, நீ போய் சாப்பாடு ஏதாவது வாங்கி வந்து விடுடா!" என்றார்.
அவரை முறைத்தவன், "ஆமாம்... நீங்கள் எப்பொழுது திருவாய் மலர்வீர்கள் என்று தான் நாங்கள் காத்திருக்கின்றோம். எல்லாம் வாங்கி வந்து டேபிள் மீது வைத்து விட்டேன், முகம் கழுவி வாங்க சாப்பிடலாம்!" என்றான் அதிகாரமாக.
லேசாக அசடு வழிந்தவர், "என் மகன் ரொம்ப பொறுப்பானவன் என்பதை மறந்துவிட்டது என் தவறு தான்டா கண்ணா!" என்று வாஞ்சையுடன் அவன் கன்னம் தடவினார்.
"சரி சரி... போதும் வாங்க, ஓவர் ஐஸ் வேண்டாம்!" என்று இருவரையும் உணவறைக்கு அழைத்து சென்றான்.
வெளியில் வந்த அமுதா சுற்றிலும் விழிகளை அலையவிட்டு, "ஆமாம்... எங்கேடா அந்தப் பெண்ணை காணவில்லை?" என்றாள் தம்பியிடம் குழப்பமாக.
No comments:
Post a Comment