Chinna Chinna Poove 5 - Deepa Babu



*5*


"சித்தி என்னை பார்த்தவுடனே பயங்கரமா அடிக்கப் போறாங்கன்னு நினைத்து ரொம்ப பயந்தேன்.

ஆனால் அவங்க அடிக்கவேயில்லை... ஏன் திட்ட கூட இல்லை... என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு திரும்ப உள்ளே போயிட்டாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்தது... ஆனாலும் அடியில் இருந்து தப்பிச்சுட்டோமே என்று ரொம்ப சந்தோசமாக இருந்தது!" என்று அவள் சொல்லி கொண்டிருக்க, ரமணனின் விழிகள் எந்த உணர்வுமின்றி சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தன.

அவன் உள்ளத்தில் ஒருவித நடுக்கம் தோன்றியது. அக்குழந்தைக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழப் போவதாக எண்ணி அவன் மனம் பதறியது.

அதிலிருந்து அவளை காப்பவன் போல தன்னோடு சேர்த்து இறுக்கி தனக்குள் அவளை புதைத்துக் கொண்டான் அவன்.

"கொஞ்ச நேரம் கழித்து தோட்டத்து பக்கம் போனேனா... அங்க சித்தி அடுப்பில் சுடு தண்ணி காய வைச்சுட்டிருந்தாங்க. சாயந்திரம் எதுக்கு காய வைக்கறாங்கன்னுட்டு... நான் கம்முன்னு உள்ளே வந்து சித்தி தம்பிக்கு போட்டிருந்த கார்ட்டூனை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போ சித்தி உள்ளே வந்தாங்க..." என்று அவனோடு ஒண்டிக் கொண்டாள்.

ரமணனுக்கு நெஞ்சை அடைத்தது.

"என் கையை பிடித்து ரூமுக்குள்ளே இழுத்துட்டு போனாங்க. எனக்கு என்னவோ பயமா இருந்துச்சு. ஒரு கயிரை எடுத்து என் கையை கட்டினாங்க, நான் அவங்களை பயந்துட்டே பார்த்தேன். ஒரு டவலை எடுத்து என் வாய்க்குள்ளே வைச்சு அடைச்சாங்க. எனக்கு வாந்தி வர மாதிரி இருந்தது, மூச்சு அடைத்தது. அதை விட என்னை என்னமோ செய்யப் போறாங்கன்னு நினைச்சு பயமாக இருந்தது..." என்று அவள் அழுதுக் கொண்டே கூறினாள்.

ரமணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாக வழிந்துக் கொண்டிருந்தது.

"அப்புறம்... அப்புறம்... அடுப்பிலிருந்து விறகை எடுத்துட்டு வந்து, இனிமேல் என்னை கேட்காம பாலை எடுத்து குடிப்பியான்னு கேட்டு என் இரண்டு கால்லையும் சூடு போட்டாங்க..." என்று வேகமாக சொல்லி முடித்தவள் ஓவென்று கத்தி அழ ஆரம்பித்தாள்.

"அப்பா... அப்பா... என்னால முடியலைப்பா... ரொம்ப எரிஞ்சதுப்பா. வேண்டாம்னு கூட சொல்ல முடியலைப்பா... ஐயோ... பயங்கரமா எரிஞ்சதுப்பா... என்னால கத்தி அழக் கூட முடியலை. எனக்கு ரொம்ப மூச்சை அடைத்தது... என்னால மூச்சே விட முடியவில்லை... ரொம்ப தவிச்சேன். எனக்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்லை... அப்புறம் கொஞ்ச நேரத்தில் எனக்கு எல்லாம் சரியா போயிடுச்சுப்பா... எந்த வலியும் இல்லை... மூக்கை அடைக்கலை... சாதாரணமாக இருந்தேன். ஆனால் ஏன்னு தெரியலை என் உடம்பு அசையாமல் கிடந்தது. அப்புறம் சித்தி வந்து என்னை பார்த்துட்டு ஐயோ... செத்து போயிட்டா போலிருக்கேன்னு சொல்லவும் தான், நான் செத்து போயிட்டேன்கிறது எனக்கு தெரிந்தது!" என்று அவள் சொல்லவும்,

" போதும்டா..." என்று பதறியபடி அவளை கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தான் ரமணன்.

சற்று நேரம் அழுது ஓய்ந்த பின்னர், "அப்பா..." என்று ஏக்கத்துடன் அழைத்தாள் அவள்.

"என்னம்மா?" என்றான் குரலில் உயிரைத் தேக்கி.

"நீங்க அந்த மாதிரி எல்லாம் எனக்கு சூடு போட மாட்டீங்க இல்லை... நீங்க என்ன சொன்னாலும், நான் குட் கேர்ளா கேட்டுப்பேன்பா. சூடு மட்டும் வேண்டாம்பா... ரொம்ப எரியும்!" என்றாள் நடுங்கியபடி.

விழிகளில் நீர் வழிய கண்ணுக்குத் தெரியாத அவள் முகத்தை மிருதுவாய் தடவியவன், "அப்பா அந்த மாதிரி எல்லாம் செய்வேன் என்று நீ நினைக்கிறாயாடா...?" என்று குரல் பிசிர கரகரப்புடன் கேட்டான் அவன்.

"இல்லைப்பா... நீங்க அந்த மாதிரி எல்லாம் எதுவும் செய்ய மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்குப்பா. சாரிப்பா!" என்று அவனை கட்டிக் கொண்டாள்.

"ப்ச்... அதற்கெல்லாம் எதற்குடா செல்லம் சாரி... இனிமேல் அப்பாவிடம் சாரி எல்லாம் சொல்ல கூடாது!" என்றான் ரமணன் செல்ல கண்டிப்புடன்.

"ம்..." என்றாள் சிரிப்புடன்.

அவன் மனம் புயலடித்து ஓய்ந்ததுப் போல் அமைதியாக இருந்தது.

"அப்பா!"

"ம்..."

"அப்புறம் என்னாச்சு தெரியுமா? என்னை யாரோ ரெண்டு பேர் கார்டூன்ல வர ராஜா மாதிரி டிரஸ் பண்ணியிருந்தவங்க ஒரு இடத்துக்கு கூட்டிப் போனாங்க. அந்த இடம் ரொம்ப அழகா இருந்தது. அங்கே என்னை மாதிரி நிறைய குட்டி பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. வயசானவங்களும் கொஞ்சம் பேர் இருந்தாங்க. எல்லோருமே சிரிச்சுட்டு சந்தோசமா இருந்தாங்க. அதை பார்க்கும் பொழுது அப்பாடா... நல்ல வேளை அந்த வீட்லிருந்து இங்கே சீக்கிரமா வந்துட்டோம்னு நிம்மதியா இருந்தது. என்னை அங்கு கூட்டி போனவங்க அங்கிருக்கிற எல்லோருக்கும் அறிமுகம் பண்ணி வைச்சாங்க. அப்புறம் நாங்க எல்லோரும் நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டு ஜாலியா ஒண்ணா விளையாட ஆரம்பிச்சிட்டோம்!"

அவள் கூறுவதையெல்லாம் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் ரமணன்.

"நான் அங்கே போய் ஒரு வாரம் ஆயிருக்கும். அன்னிக்கு என்னை மட்டும் பக்கத்திலிருந்த இன்னொரு இடத்துக்கு கூட்டிப் போனாங்க. அந்த இடம் அப்ப நான் இருக்கிற இடத்தை விட ரொம்ப ரொம்ப அழகா வாசனையா இருந்தது. நான் ஆசையா சுத்தி சுத்தி வேடிக்கைப் பார்த்துட்டே போனேன். அங்கே இருந்த ஒரு பெரிய தங்கச் சேர்ல ரொம்ப பெரிய ராஜா மாதிரி ஒருத்தர் உட்கார்ந்திட்டிருந்தார். நான் அவரை பார்த்து பெப்பேன்னு வாயைத் திறந்து நின்னிட்டிருந்தேன்னா... அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே பக்கத்தில் வருமாறு கூப்பிட்டார். நான் போனதும், என்னை அவர் சேரிலேயே பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்!" என்று அவள் கூற கூற இங்கு ரமணன் அவளை மாதிரி 'ப்பே' என்று பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான்.

"இந்த இடம் உனக்குப் பிடிச்சிருக்கா... சந்தோசமா இருக்கியா... என்று என்னிடம் கேட்டார். நான், ம்... ரொம்ப பிடிச்சிருக்குன்னு சிரிச்சிட்டே தலையாட்டினேன். நீங்க யாரு? இது தான் உங்க வீடா... ரொம்ப பெரிசா... அழகா இருக்குன்னு சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே... நான் கடவுள்! என்றார். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சி, கடவுள்னா... சாமியா? அப்படின்னு கேட்டேன். ஆமான்னு சொன்னார், எனக்கு அப்ப தான் பக்கத்து வீட்டு அண்ணா சொன்னது ஞாபகம் வந்துச்சு... செத்துப் போறவங்க எல்லாம் சாமிகிட்ட போவாங்கன்னு. எங்கம்மா கூட சாமிகிட்ட போயிட்டாங்கன்னு தான் சொல்வாங்க. நான் அவரிடம் அதை கேட்டேன், எங்கம்மாவும் செத்துட்டாங்களே... இங்கே தான் இருக்காங்களா? என்று. ஆனால் அதற்கு அவரோ, அப்படியெல்லாம் இல்லை... இறப்பவர்கள் எல்லோரும் இங்கே வர மாட்டார்கள், அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உலகிற்குச் செல்வர் என்றார். உன்னை மாதிரி சிறு குழந்தைகள் எந்த பாவமும் அறியாதவர்கள், அவர்கள் அனைவரும் நேராக என்னை வந்தடைவர்னு சொன்னார்பா!" என்றாள் அந்த மழலை.

ரமணன் என்ன பேசுவதென்றே புரியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

"அப்புறம் என்ன சொன்னாங்க தெரியுமா? உன்னுடைய பிறவி இன்னும் முடியவில்லை... நீ மறுபடியும் பூலோகத்தில் மறுஜென்மம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்று சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை அப்படீன்னா என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படியென்றால்... நீ மறுபடியும் யாருடைய மகளாகவோ மீண்டும் உங்கள் ஊரில் பிறக்க வேண்டும் என்றதும் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. ஐயோ சாமி வேண்டாம்... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கேயே தான் இருப்பேன்னு சொல்லி அழுதேன். அடடா... இங்கே பாருடாம்மா, அழக் கூடாது. நீ பயப்படற மாதிரி எதுவும் உனக்கு நடக்காது... உன் முன் ஜென்மத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ வேறு ஒரு புது அப்பா, அம்மாவுக்கு தான் பெண்ணாக பிறப்பாய். அவர்கள் உன் சித்தி மாதிரி எல்லாம் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள், உன்னை நன்றாகப் பார்த்து கொள்வார்கள் பயப்படாதே... என்றார்!"

அவளின் பேச்சில் எந்த வித இடையூரும் செய்யாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ரமணன்.

"புது அப்பா, அம்மா நிஜமாகவே நல்லவங்களா இருப்பாங்களா...? வேண்டாம்... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு என்று நான் மறுபடியும் அழுதேனா... ம்ஹூம்ஹூம்... இங்கே பார்... உனக்கு ரொம்ப பயமாக இருந்தால் ஒன்று வேண்டுமென்றால் செய்யலாம், நான் யாருக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் தருவதில்லை... ஆனால் போன ஜென்மத்தில் நீ மிகவும் மோசமான கொடுமைக்கு ஆளானதால், உனக்கு மட்டும் தனியாக இந்த வாய்ப்பளிக்கிறேன் என்றார். நான், என்ன? என்றேன். இவர்கள் உன்னை பூலோகத்துக்கு அழைத்துச் சென்று, யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற பிராப்தம் இருக்கிறதோ... அவர்களை எல்லாம் உன்னிடம் காண்பிப்பார்கள். நீ அவர்களில் உனக்கு பிடித்தமான ஒருவரை தந்தையாக தேர்ந்தெடுக்கலாம் என்றார். அவர்கள் கண்டிப்பாக நல்லவர்களாக இருப்பார்களா? என்று கேட்டேன். நீயே அவர்களுடன் சிறிது நாட்கள் தங்கியிருந்து முடிவு செய் என்றார். நானும் சரியென்று சம்மதித்து அவர்களுடன் இங்கே வந்தேன். அவர்கள் ஒவ்வொருவராக என்னிடம் காண்பிச்சு, அவர்களை பற்றிய விவரம் சொன்னார்கள். அப்பொழுது தான் உங்களையும் காண்பித்தார்கள்... எனக்கு மற்றவர்களை விட உங்களை தான் ரொம்ப பிடிச்சது!" என்று சிரித்தபடி அவனைக் கட்டிக் கொண்டாள் அவள்.

அவன் விழிகள் கலங்க அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கியபடி, "ரொம்ப தாங்க்ஸ்டா செல்லம்..." என்றான் நெஞ்சம் நெகிழ.

"ம்... பரவாயில்லைப்பா. நீங்க தான் எனக்கு சூப்பர் அப்பா கிடைச்சிருக்கீங்களே... அப்புறம் என்ன?" என்று புன்னகைத்தாள்.

"அதுவுமில்லாம அவங்க காண்பிச்ச மத்தவங்களுக்கு எல்லாம் கூட யாராவது துணைக்கு இருக்கிறாங்க, உங்களுக்கு தான் யாருமே இல்லாம தனியாக இருக்கீங்க... அதனால் தான் நான் உங்க கூடவே இருக்கனும்னு முடிவு பண்ணேன்!" என்றாள் பெரிய மனுஷி தோரணையில்.

அவள் பேசுவதைக் கேட்க கேட்க அவன் மனம் பாகாய் உருகியது.

இவளுக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றியது.

"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லைடா... என் நன்றியை உனக்கு நான் வார்த்தைகளில் கூற விரும்பவில்லை. இந்த உலகிலேயே சிறந்த தந்தையாக வாழ்ந்து உனக்கு தேவையானதை எல்லாம் கண்டிப்பாக நான் செய்வேன்மா..." என்றான் நா தழுதழுக்க.

"ரொம்ப தாங்ஸ்பா..." என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

அவள் தலையை வருடியவாறு நிச்சலனமாக அமர்ந்திருந்தான் ரமணன்.

அவள் திடீரென்று நினைவு வந்தவளாக வேகமாக, "அப்பா!" என்றாள்.

இவன் என்னவாயிற்றோ... என்று பதறி மின்னல் வேகத்துடன், "என்னம்மா?" என்றான்.

"நாம பேசிக்கிட்டே ரொம்ப நேரமாயிடுச்சு... நீங்க இன்னும் சாப்பிடவேயில்லை, முதலில் சாப்பிடுங்க!" என்றாள் அக்கறையாக.

அவளின் வார்த்தைகளில் நெகிழ்ந்தவன், "உஃப்... இவ்வளவு தானா... நான் என்னவோ... ஏதோவென்று மிகவும் பயந்து விட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம்டா... பசிக்கவில்லை!" என்று சலித்தபடி சாப்பிட மறுத்தான்.

"ஆங்... சாப்பிடலைன்னா எப்படி மாத்திரை போட முடியும்? அப்புறம் எப்படி கை வலி சரியாகும்... நான் வேற உங்களை பிடித்து கீழே தள்ளிட்டேன்!" என்றாள் மெல்லிய குரலில்.

ஹஹா... என்று சிரித்தவன், "நீ தான்டா செல்லக் குட்டி அப்பா உயிரையே காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாய்... அப்புறம் எதற்கு கில்ட்டியா ஃபீல் செய்கிறாய்..." என்றான் ஆசையுடன் அவள் கன்னம் வருடி.

"ம்... ஆமாம்... ஆமாம். சரி இப்ப சாப்பிடறதுக்கு என்ன இருக்கு?" என்று அவனை வினவினாள் அவள்.

"என்ன இருக்கிறது... காலையில் சாப்பிட்டது போக மீதியிருக்கின்ற பிரட் பாக்கெட் தான்!" என்றான் ரமணன் சிரித்தபடி அவளிடம் ராகமாக.

"ப்ச்... மறுபடியும் அதே தானா. நீங்க அந்த அத்தையை துரத்தி விடாம இருந்திருக்கலாம்... நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கும். இப்ப இந்த மாதிரி சாப்பிட வேண்டியதாக இருக்கு!" என்றாள் கவலையுடன்.

"அத்தையா... எந்த அத்தை?" என்றான் குழப்பத்துடன்.

"அது தான் உங்களுக்கு சாப்பாடு செஞ்சு தருவாங்களே..." என்று விளக்கினாள்.

"ஓ... அவங்க சர்வென்ட் மா. அதனால் தான் நான் கோபமாக திட்டியதும் திரும்பி கூட பார்க்காமல் ஓடியே போய் விட்டார்கள்!" என்றான் வறண்ட புன்னகையுடன்.

"ப்ச்... நீங்க ரொம்ப பாவம் பா..." என்று அவன் தோளில் சோகமாக சாய்ந்து கொண்டாள்.

சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டவன், "ஹேய் பாட்டிம்மா... சாப்பிடுங்கள், மாத்திரை போட வேண்டும் அது இது என்று சொன்னாய். இப்பொழுது சும்மா கதை பேசிக் கொண்டிருக்கிறாய்..." என்று அவளை கேலி செய்தவன், பிரெட் பாக்கெட்டை எடுத்து பிரித்தான்.

கையில் லேசாக வலி தோன்ற முகத்தைச் சுளித்தவன், சற்று திரும்பி நேராக அமர்ந்தான்.

"ரொம்ப வலிக்குதாப்பா..." என்று வருந்தியவாறு அவன் கையை மென்மையாக வருடினாள் அவள்.

"அதெல்லாம் ஒன்றும் இல்லைடா... இரண்டு நாளில் சரியாகி விடும்!" என்று அவளை சமாதானப்படுத்தினான்.

"இதை எப்படி வெறுமனே சாப்பிடுவீர்கள்... நான் போய் பால் சூடு செய்து எடுத்து வருகிறேன்!" என்று அவனை விட்டு நகர்ந்தாள்.

"ஹேய்... அதெல்லாம் வேண்டாம்..." என்று அவன் மறுக்க மறுக்க,

"இல்லை... நீங்கள் இந்த பாக்ஸில் எப்படி சூடு பண்ணுவீங்கன்னு நான் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரியும் இருங்க எடுத்துட்டு வரேன்!" என்ற குரல் சற்றுத் தள்ளி ஒலித்தது.

பிரிட்ஜ் தானாக திறந்து பால் பாக்கெட் வெளி வந்து இன்டக்ஷனில் உள்ள பாத்திரத்தில் சாய்ந்து ஊற்ற ஆரம்பித்தது, அதன் பின் ஸ்விட்ச் ஆன் ஆனது.

அதையெல்லாம் பார்க்கப் பார்க்க ரமணன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

No comments:

Post a Comment

Most Popular