Chinna Chinna Poove 4 - Deepa Babu



*4*


உடம்பெல்லாம் புது இரத்தம் பாய்வது போல் உணர்ந்தவனுக்கு மெய் சிலிர்த்தது.

அவள் மெல்ல அவனை தட்டி, "அப்பா!" என்று அழைத்தாள்.

"ம்... நீ இதை தான் சொன்னாயாடா குட்டி?" என்றான்.

"ம்..." என்றவள் கிளுக்கி சிரித்தாள், "ம்ஹஹா... ஆனால் உங்களுக்கு தான் புரியவில்லை!" என்றாள் மலர்ந்த குரலில்.

"என்ன செய்வது? உங்கப்பாவுக்கு தான் மூளை கொஞ்சம் கம்மியாயிற்றே!" என்றான் ரமணன் வேண்டுமென்றே.

வேகமாக எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோள்களில் சாய்ந்தவள், "அப்படியெல்லாம் இல்லை... எங்கப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்றாள் அவனிடம்.

"எவ்வளவு பெரிய ஆளும்மா? சொல்லுங்கள் தெரிந்துக் கொள்கிறேன்!" என்றான் அவன் கேலியாக.

எந்த ஒரு தகப்பனுக்கும் இயல்பாக ஏற்படும் ஆசை, தன் பிள்ளை வாயால் தன் பெருமையை கேட்க வேண்டும் என்பது.

"ம்... எங்கப்பா பெரிய்ய... ஆபிஸ் வைத்திருக்கிறாங்க. அங்கே வேலை செய்கிறவங்க என்று இல்லை, ஊரில் உள்ள எல்லோரும் அவங்களை பார்த்து பயப்படுவாங்க. பெரிய கம்ப்யூட்டர் எல்லாம் வைத்து நிறைய வேலை செய்வாங்க... அப்புறம்..." என்று அவள் யோசனையோடு இழுக்க,

"சரி போதும் போதும், உங்கப்பாவோட பெருமை. ஊரில் இருக்கிறவன் கேட்டால்... உதைக்க வந்து விடுவான்!" என்று சிரித்தபடி அவளை இழுத்து மடியில் அமர வைத்தான்.

"ம்... ஏன்?" என்றாள் அவள்.

"அதை அப்புறம் சொல்கிறேன். நாம் நம் விஷயத்துக்கு வருவோம். மறுபிறவி உண்டென்றாலும்... நீ எப்படி வேறு எங்கும் செல்லாமல் எனக்கு மட்டும் மகளாக பிறப்பாய்?" என்று அவளிடம் வினவினான் ரமணன்.

அவள் வேறெங்கும் சென்று பிறந்து விடக்கூடாதே என்ற பயம் அவனுக்குள் தோன்றியது.

"கடவுள் எனக்கு பிராமிஸ் செய்து கொடுத்திருக்கிறார்பா... அப்பாவாக யார் வேண்டுமென்று நீ சொல்கிறாயோ... அவர்களுக்கே உன்னை பெண்ணாகப் பிறக்க வைக்கிறேன் என்று!" என்றாள் அவள் சந்தோசமாக.

"எனக்கு உங்களை தான் ரொம்ப பிடித்திருக்கிறது... உங்களுக்கு தான் மகளாக பிறக்க வேண்டும் என்று நான் கூறுவேன், அவரும் சரியென்று என்னை உங்களுக்கு மகளாக கொடுத்திடுவார். எப்படி?" என்றாள் ரமணன் கழுத்தை கட்டிக் கொண்டு துள்ளிக் குதித்தபடி.

அவன் இமைக்க மறந்து அப்படியே பிரமித்து போய் அமர்ந்திருந்தான்.

"அப்பா..." என்றழைத்தபடி அவள் அவனைப் பிடித்து வேகமாக உலுக்கினாள்.

ஆங்... என்று சுய உணர்வுக்கு வந்தான் ரமணன்.

"என்னப்பா எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்து இருக்கறீங்க?"

"இல்லைம்மா... நீ சொல்வதெல்லாம் உண்மையா? என்னால் நம்பவே முடியவில்லை. நீ கடவுளை பார்த்தாயா... அவர் உன்னிடம் பேசினாரா? எனக்கு வியப்பாக உள்ளது. ஏதோ மாயாஜால சினிமா கதையை கேட்டு கொண்டிருப்பது போல் தோன்றுகிறது!" என்றான் ஆச்சரியமாக.

"இல்லைப்பா... நான் சொல்வதெல்லாம் நிஜம்!" என்று அழுத்திக் கூறினாள்.

"ஓ..." என்று யோசனையோடு இழுத்தவன், "ஹேய்... முதலில் உன் பெயரை சொல்லுடா. எனக்கு உன் பெயரே தெரியவில்லை.... கூப்பிட வசதியாக இருக்கும்!" என்றான்.

சட்டென்று அவள் அமைதியானாள்.

"என்ன சத்தத்தையே காணோம்... உன் பெயர் என்ன?"

"எனக்கென்று தனியாக எந்த பெயரும் இல்லைப்பா... யாரும் எனக்கு பெயர் வைக்கவில்லை!" என்றாள் மெல்லிய குரலில்.

"என்ன?" என்றான் வியப்புடன்.

"ஆமாம்! அப்பாவும், சித்தியும் ஏய் சனியனே... பிசாசே என்று தான் கூப்பிடுவார்கள். வீட்டுக்குள்ளேயே தான் இருப்பேன், வெளியே எங்கும் அழைத்து செல்ல மாட்டார்கள். பக்கத்து வீட்டு அண்ணா மட்டும் புஜ்ஜிமா என்று கூப்பிடுவார்கள்!" என்று சோகமாக ஆரம்பித்து மகிழ்ச்சியாக முடித்தாள்.

"உன் அம்மா..." என்று தயக்கத்துடன் இழுத்தான் ரமணன்.

அவனுக்கு மனதில் ஒரு சந்தேகம் இருந்தது, அதை உறுதிப்படுத்துவது போலவே அவளின் பதிலும் இருந்தது.

"இல்லைப்பா... நான் பிறக்கும் பொழுது இறந்து விட்டார்களாம். அதனால் தான் என்னுடைய அந்த அப்பாவுக்கு என்னை பிடிக்காது. நான் தான் எங்கம்மாவை கொன்றேனாம்... நான் கொலைகாரியாம். அப்படியாப்பா?" என்று அவனிடம் கண்ணீர் குரலில் கேட்டாள்.

"சேச்சே... அப்படியெல்லாம் இல்லைடா. நீ தெய்வக் குழந்தை, அதனால் தான் கடவுளே உன்னிடம் பேசுகிறார். உனக்கு பிடித்தததை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்!" என்று அவளை தேற்றினான்.

"ஆமா... கரெக்ட். நான் நல்ல பாப்பா தான்!" என்றாள் குஷியாக.

"ஆனால்... அவர்கள் அப்படி நினைக்கவில்லை. என்னை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு சாப்பாடெல்லாம் சரியாக தர மாட்டார்கள்... ரொம்ப பசிக்கும் அழுகை அழுகையா வரும், அழுதா அடிப்பாங்களா... ரொம்ப வலிக்கும். அதனால பசித்தாலும் அழ மாட்டேன், ஒரு சில நேரம் ரொம்ப வயிறு வலிக்கும் என்னால் தாங்கவே முடியாது. அப்போ எங்க சித்தியிடம் கெஞ்சிக் கேட்டேனா... ஏதாவது தண்ணி சாதம் தருவாங்க, அதை சாப்பிட்டேன்னா... பசி அடங்கிடும். அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும். என்னப்பா?" என்று கேட்டாள்.

அவள் பேசப் பேச வேதனை தாங்க முடியாமல் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ரமணன்.

அவன் விழிகளில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

"நீ... நீ... இவ்வளவு கஷ்டப்பட்டாயாடா செல்லம். சாப்பிட சரியான சாப்பாடு கூட கிடைக்காமல்... கடவுளே!" என்று அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

அவன் மனம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகில் பல இடங்களில் நடக்கின்ற கொடுமை தானே இது.

மாற்றாந்தாய் கொடுமை, அனாதைச் சிறார்கள், பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தப்படும் குழந்தைகள், உடல் ஊனமுற்ற குழந்தைகள் என பல இடங்களில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் குழந்தைகள் கஷ்டப்பட்டு கொண்டு தானே இருக்கிறார்கள்.

நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடிகிறது? ஒன்றுமில்லை.

ஆண்டுக்கு ஒரு முறையோ... இரு முறையோ... ஆசிரமங்களுக்குச் சென்று விருந்து போடுவோம். மற்ற வேளைகளில் அதுவும் கிடையாது.

அனாதை குழந்தைகளை விட, வீட்டினரால் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமை தான் இன்னும் மோசம்... இதோ... என் மடியில் அமர்ந்திருக்கிறாளே... இந்த குழந்தையே அதற்கு ஒரு சாட்சி!

"அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள் கூட உனக்கு சாப்பிட எதுவும் தர மாட்டார்களாடா? அந்த அளவுக்கு இந்த உலகம் மோசமான நிலைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறதா?" என்றான் தொண்டையடைக்க.

"தெரியலைப்பா... எனக்கு ஞாபகமில்லை. ஆனால் பக்கத்து வீட்டு அண்ணா எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாங்க... பிஸ்கட், முறுக்கு, சிப்ஸ், சாக்லேட்..." என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருந்தவள், சட்டென்று சோகமானாள்.

"ஒரு தடவை அவங்க கொடுத்த பூரியை ஆசையாக வாங்கி சாப்பிடும் பொழுது, எங்க சித்தி அதை பார்த்துட்டாங்க. அவ்வளவு தான் என்னை போட்டு அடி அடியென்று அடித்து விட்டு அந்த அண்ணாவோட அம்மாவிடம் ஒரே சண்டை... உன் பையன் எப்படி இவளுக்கு சாப்பிட கொடுக்கலாம் என்று. அவங்க பாவம் இனிமே இப்படி நடக்காது என்று சொல்லி சித்தியை அனுப்பி வைத்தாங்க. ஹும்..." என்று பெருமூச்சு விட்டாள்.

"சரி போதும் விடும்மா. இனியும் அதைப் பற்றி பேச வேண்டாம்!" என்று அவளை தடுக்க முயன்றான் ரமணன்.

ஆனால் அவளோ, "இல்லைப்பா... என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தால் தானே... அந்த மாதிரி எந்த கஷ்டமும் எனக்கு வராமல், நீங்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வீர்கள்!" என்றவள் மேலே தொடர்ந்தாள்.

அவனுக்கோ இவள் இன்னும் என்னென்ன கொடுமையை அனுபவித்திருப்பாளோ என்றெண்ணிக் கவலையாக இருந்தது.

"அப்புறம் சாயந்திரம் வீட்டுக்கு வந்த அப்பாவிடம் நான் அக்கம்பக்கம் பிச்சை வாங்கி சாப்பிடுகிறேன்னு சொல்லி அடி வாங்கி வைத்தாங்க சித்தி. ரொம்ப வலித்தது... நைட்டெல்லாம் அழுதுட்டே தூங்கிட்டேன். காலைல எழுந்து வெளியே வந்தப்போ... பக்கத்து வீட்டு அண்ணா திண்ணையில் உட்கார்ந்து நோட்ல ஏதோ எழுதிட்டிருந்தாங்க. அவங்களிடம் அப்பா அடித்ததை சொல்லலாம்னு பக்கத்தில் போனேன், அவங்க வேகமாக எழுந்து உள்ளே போயிட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவங்க மட்டும் தான் என்னிடம் ஆசையா பேசுவாங்க... ஊரில் அவங்க அத்தைக்கு ஒரு குட்டி பாப்பா இருக்காம், அதை அவங்க வீட்டிலுள்ளவர்கள் புஜ்ஜிம்மா என்று கூப்பிடுவாங்களாம். நீயும் அந்த மாதிரி குட்டியாக இருக்க... அதனால இனி உன் பேரும் புஜ்ஜிமா தான் என்று சொன்னாங்க. சித்தியை பற்றி சொன்னால் சரி அழாதேன்னு சொல்லி சமாதானப்படுத்துவாங்க. ஆனால் அவங்களும் என்னோடு பேசாமல் எழுந்து போகவும், நான் அழுதுகிட்டே வாசல் படியில் உட்கார்ந்துட்டேன்!" என்றாள் சோகமாக.

"இல்லைடா... அவங்க சின்ன அண்ணா தானே... உன் சித்தி அவங்க அம்மாவிடம் சண்டை போட்டதால் பயந்திருப்பாங்க!" என்று அவளை தேற்ற முயன்றான் ரமணன்.

"அது தான் இல்லை..." என்று கெக்கலித்து சிரித்தாள் அந்த மழலை.

அவளின் சிரிப்பு அவனை சற்று இளக்கியது.

"என்ன இல்லை?" என்றான் புன்னகையுடன்.

"அந்த அண்ணா ஒன்றும் பயப்படவில்லையே... சும்மா நடிச்சாங்க. நீங்க நல்லா ஏமாந்துட்டீங்க!" ஹஹா... என்று சந்தோசமாக சிரித்தாள்.

"அப்படியா... நடித்தானா... ஏன்?"

"அப்புறம் எங்க சித்தி ராட்சசியை ஏமாற்றனும் இல்லை..." என்றாள் ஆர்வமாக.

"ஓஹோ... ராட்சசி பெயர் எல்லாம்..." என்று இவன் இழுக்க.

"அந்த அண்ணா தான் சொன்னாங்க. எனக்கு சரியா சாப்பாடு கொடுக்காத அவங்க ராட்சசியாம்..."

"கரெக்ட் தான்!"

"ம்... அப்புறம் மதியமா வாசல் கதவை பூட்டிட்டு தம்பியை தூக்கிட்டு சித்தி எங்கேயோ வெளியில் போயிட்டாங்க. நான் பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்து இருந்தேனா... அப்போ அந்த அண்ணா வந்து, ஏய் புஜ்ஜிம்மா... என்று என்னை கூப்பிட்டாங்க. நான் எதுவும் பேசாமல் அவங்களை பார்த்தேன். இங்கே வா என்று கூப்பிட்டாங்க... என்கிட்ட இனி பேசாதே என்று திட்ட போறாங்க போலிருக்குன்னு பக்கத்தில் போனேன். அப்போ என் கிட்ட ஒரு பாக்ஸ் கொடுத்தாங்க, அதில் என்ன இருந்தது தெரியுமா? சொல்லுங்க பார்க்கலாம்..." என்று கேட்டாள் குதூகலமாக.

இவள் மகிழ்வதை பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட கொடுத்திருப்பான்... அதை அப்படியே சொன்னால் அவளுக்கு சுவாரசியம் குறைந்து விடும் என்றெண்ணி,

"தெரியலையேடா... நீயே சொல்லு!" என்றான் வேண்டுமென்றே.

"அதில் பெரிய கேக் இரண்டு இருந்தது..." என்றாள் பெருமையாக.

அவன் எதுவும் பேசாமல் வேதனையோடு அவள் கரத்தை வருடிக் கொண்டிருந்தான்.

"இது எதுக்கு அப்படின்னு கேட்டதுக்கு, உனக்கு தான் சாப்பிடுன்னாங்க. நான் தலையை குனிஞ்சுக்கிட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். ஏன் காலையில நான் பேசலைன்னு கோபமா என்று கேட்டாங்க. நான் எதுவும் பேசலை அமைதியா நின்னுட்டிருந்தேன். நேற்று உன் சித்தி அம்மா கிட்ட சண்டை போட்டாங்க இல்லை... அதனால் அம்மா பயந்துட்டாங்க. அந்த குழந்தையை பார்த்தால் பாவமாக தான்டா இருக்கு, ஆனால் அவள் சித்தி மோசமானவள்டா... வீட்டு வாசலில் ஊரையே கூட்டி வைத்து அசிங்கமா பேசுவாள். நீ அவளிடம் பேசு, சாப்பிட ஏதாவது கொடு, ஆனால் அவள் வீட்டிலிருக்கும் பொழுது கொடுக்காதன்னு சொன்னாங்க. அதனால தான் உன் சித்தி வெளியே போன பிறகு பேசுகிறேன்னு சொன்னாங்க. உடனே எனக்கு சந்தோசமாயிடுச்சு, நிஜமாகவா என்று கேட்டேன்... ஆமான்னு சிரிச்சாங்க. அப்புறம் கேக் சாப்பிட்டுட்டு சித்தி வரும் வரை நாங்க இரண்டு பேரும் ஜாலியா விளையாடிட்டுருந்தோம்!" என்று மகிழ்ச்சியாக கூறி கொண்டிருந்தவளின் வார்த்தைகள் மெல்ல தேய்ந்து அமைதியானது.

ஏதோ விரும்பத்தகாத சம்பவத்தை சொல்லப் போகிறாள் என்று புரிந்ததால்... அவனும் ஏதும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தான்.

மடியில் அமர்ந்திருந்தவள் இன்னும் அவனை நெருங்கி ஒண்டினாள். அவன் இடையை இறுக கட்டிக் கொண்டு தன் முகத்தை அவன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டாள்.

ரமணன் வார்த்தைகளின்றி ஆதரவாக அவள் முதுகை வருடினான்.

"அப்பா..." என்றழைத்தாள் நடுங்கும் குரலில்.

"வேண்டாம்டா ப்ளீஸ்... விட்டுடு..." என்று அவளிடம் கெஞ்சினான்.

"இ... இ... இல்லைப்பா... நா... நான் சொல்லனும்..." என்றாள் திக்கியபடி.

"சரி..." என்று மெல்ல ஆதூரமாய் அவள் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டான்.

அவன் பனியனை இறுகப் பற்றிக் கொண்டவள், சொல்ல ஆரம்பித்தாள்.

"கொஞ்ச நாளில் பக்கத்து வீட்டு அண்ணாவுக்கு ஸ்கூல் லீவ் விட்டதால் அவங்க ஊருக்கு போயிட்டாங்க. அதனால் எனக்கு நேரத்துக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல் ரொம்ப பசித்தது. சித்தி கொடுத்த சாப்பாடு அளவும் கம்மியாக இருந்ததால்... எனக்கு பசி அடங்கலை. சாப்பிட்டு முடித்தாலும் வயிறு கபகபன்னு எரிந்தது. என்னால முடியவேயில்லை... என்ன பண்றதுன்னே தெரியலை. அப்ப என் தம்பி பசியில் அழுதான்னு சித்தி அவனுக்கு பாலை கலந்து பாட்டிலில் ஊத்திக் கொடுத்துட்டு உள்ளே போயிட்டாங்க. அவன் பாதி பாலை மட்டும் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி கீழே போட்டுட்டான். நான் அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன், ஆனால் அவன் அதை மறுபடியும் தூக்கி கீழே போட்டுட்டான். அவனுக்கு பசி அடங்கி விட்டது போல. எனக்கோ ரொம்ப பசித்தது... உள்ளே எட்டிப் பார்த்தேன், சித்தி ஏதோ வேலையா இருந்தாங்க. நான் அந்த பாட்டிலை எடுத்து வேகமா பாலை குடிச்சு முடிச்சுட்டேன். அப்பா... சர்க்கரையெல்லாம் போட்டு அந்த பால் எவ்வளவு டேஸ்டா இருந்தது தெரியுமா... நான் அந்த மாதிரி குடித்ததே இல்லை. கடைசி சொட்டையும் சப்பி சப்பி குடிச்சிட்டு பாட்டிலை தம்பியிடம் வைச்சிட்டு திரும்பினேன், அங்கே சித்தி நின்னுட்டிருந்தாங்க. எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி!" என்று மீண்டும் ரமணன் பனியனை இறுக பற்றிக் கொண்டாள்.

No comments:

Post a Comment

Most Popular