Chinna Chinna Poove 1 - Deepa Babu





*1*



ரமணன் அந்த குடிலின் உள்ளே கண்கள் மூடி மண்டியிட்டிருந்தான்.

கரங்களில் மலர்செண்டு இருந்தது, விழிகளில் கண்ணீர் மொட்டு துருத்திக் கொண்டிருந்தது.

அவன் முன்னே இருந்த சமாதியில், சற்று முன் அவன் ஏற்றி வைத்த மெழுகு தீபம் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

கண்களைத் திறந்தவன், வெளியில் வரத் துடித்த நீரை கண்களை அகற்றி மீண்டும் உள் வாங்கினான்.

முகத்தில் சொல்லிலடங்காத வேதனை குடிக் கொண்டிருந்தது.

மெல்ல எழுந்தவன் பெருமூச்செரிந்து, தன் கையிலிருந்த பூச்செண்டை அந்த சமாதியின் மீது வைத்தான்.

அவன் கரங்கள் அந்த பீடத்தை மென்மையாய் ஒரு பூவை வருடுவதுப் போல் வருடியது.

அவனையும் மீறி அவன் உணர்வுகள் வெடித்து, விழிகளில் பெருகிய நீர் மளமளவென்று அவன் கன்னங்களில் இறங்கியது.

கண்களையும், கை விரல்களையும் இறுக்க மூடி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றவன், அதில் வெற்றியும் கண்டான்.

விழிகளைத் துடைத்தவன், வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

காற்று பலமாக வீச, மெழுகு தீபம் நின்று எரிய முடியாமல் காற்றில் வேகமாக அலைமோதியது.

சட்டென்று அமைதியாக எந்த வித ஆர்பாட்டமுமின்றி நேராக எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் காற்றின் வேகம் மட்டுப்பட, ரமணன் வைத்து விட்டு சென்ற மலர்செண்டிலிருந்த மலர்கள், தலைமுடிக் கலைவதுப் போல் கலைந்து கலைந்து நேரானது.

பிறகு அப்படியே சற்று நேரம் அமுங்கி கிடந்தது.

ரமணன் தோட்டத்திலிருந்து வேகமாக உள்ளே வருவதைக் கண்ட வேலைக்காரி கண்ணம்மா, "சார்! டிபன் எடுத்து வைக்கட்டுங்களா?" என்று வினவினாள்.

அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தான் அவன், அதைக் கண்டவளுக்கு மனம் நடுங்கியது.

"அறிவில்லை உனக்கு?" என்று சீறியவன், "எத்தனை நாட்களாக இங்கே வேலைப் பார்க்கிறாய்?" என்றான்.

"மூ... மூ... மூன்று வருடங்களாக!" என்றாள் வார்த்தைகளில் தந்தியடித்தபடி.

"மூன்று வருடங்களாக இந்த வீட்டில் வேலைப் பார்க்கிறாய்... ஆனால் நேற்று வந்தவள் போல் கேள்வி கேட்டுக் கொண்டு நிற்கிறாய். உன்னை யார் இன்று இங்கே வரச் சொன்னது, இந்த நாளில் யாரும் வீட்டுக்குள்ளே கால் எடுத்து வைக்க கூடாது என்று சொல்லியிருக்கின்றேனா... இல்லையா? பிறகு எவ்வளவு தைரியமிருந்தால் நீ இங்கே வந்திருப்பாய்? முதலில் வீட்டை விட்டு வெளியே போ!" என்று வெறிப்பிடித்தவன் மாதிரி கத்தினான்.

பயந்து நடுங்கியவள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வெளியே ஓடினாள்.

வாசல் கதவை அறைந்துச் சாற்றியவன், வேகமாக மாடியேறினான்.

ரூமிற்குள் நுழைந்து கதவைத் தாளிட்டவனுக்கு ஆத்திரம் மட்டுப்பட மறுத்தது.

நேரமாக நேரமாக இயலாமையால் வெறி அதிகமாகியது.

கைக்கு கிடைத்ததையெல்லாம் தூக்கி சுவற்றில் விசிறியடித்தான். கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்க்க பார்க்க அவன் கோபம் பன்மடங்குப் பெருகியது. தன் முழுப் பலத்தையும் கைக்கு கொண்டு வந்து கண்ணாடியை ஓங்கி குத்தினான். கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது.

கையில் கண்ணாடி கிழித்து இரத்தம் வழிந்தது, விழிகளுக்கு நேராக தன் கையை உயர்த்தியவன், அதையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தபடி நின்றான்.

எங்கோ தொலைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. விழிகளைத் திருப்பியவன், போனருகே சென்று ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தான்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு, "ஹலோ!" என்றான்.

"சார்! நான் கவுசிக் பேசுகிறேன். சாரி சார்! ஒரு எமர்ஜென்சி... அதனால் தான் வேறு வழியில்லாமல் போன் செய்தேன்..." என்றான் தயக்கத்துடன்.

"ப்ச்... மென்று விழுங்காமல் நேரடியாக விஷயத்துக்கு வா!" என்றான் அதிகாரமாக.

"வந்து சார்... கம்பெனியில் வொர்க் நடந்து கொண்டிருந்தப் பொழுது ஒரு எம்ப்ளாயி மெஷினில் தவறுதலாக கையை விட்டுவிட்டான்... கை துண்டாகி விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துள்ளோம், அதை தான் உங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்று..." என்று இழுத்தான்.

"ஹு ஈஸ் தி ப்ளடி ஹெல்? முட்டாளா அவன்? மெஷினை எப்படி ஆப்ரேட் பண்ண வேண்டும் என்று தெரியாது அவனுக்கு? இவனுங்க மெஷின் ஆப்ரேட்டிங் கற்றுக் கொள்வதற்கு கம்பெனி செலவிலேயே ஒரு ட்ரைனிங் கோர்ஸ் கொடுக்கிறோம். அது பற்றாது என்று இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சேப்டி பிரிகாஷன்ஸ் ட்ரைனிங் புரோகிராம் வேற ச்சை..." என்று சலித்தவன்,

"ஹாஸ்பிடலில் அவன் எத்தனை நாட்கள் இருக்கின்றானோ... அதற்கான முழுசெலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விடு. அவனுடைய ட்ரீட்மென்ட் முடிந்ததும் கம்பெனி சென்டில்மென்ட் அமௌன்ட்டை கொடுத்து வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்து விடு. பொறுப்பில்லாதவன் என் கம்பெனிக்குத் தேவையில்லை!" என்றான் எரிச்சலோடு.

"பட் சார்... ஹீ ஈஸ் எ சின்சியர் எம்ப்ளாயி. ஏதோ பர்சனல் பிராப்ளம் இருக்கும் போலிருக்கிறது, அதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் வேலையில் கவனக்குறைவாக இருந்திருக்கிறான் சார்!"

"ஸோ வாட்? யாருக்குத் தான் பிரச்சினை இல்லை... ஏன் நான் இல்லை...?" என்றவன் மேலே பேசாது அமைதியானான்.

சில நிமிடங்களில் தன்னை நிதானப்படுத்தியவன், "ஓகே மற்றதை நாளை நேரில் பேசிக்கலாம். நீங்கள் எஸ்.ஐக்கு இன்பார்ம் செய்து ஹாஸ்பிடல் வரச் சொல்லி அந்த பையனிடம் பார்மலா இது நேச்சுரல் ஆக்ஸிடன்ட் தான் என்று ஒரு ஸ்டேட்மென்ட்ல சைன் வாங்கிடுங்க!" என்றான்.

"ஓகே சார்! தாங்க் யூ!" என்று போனை வைத்தான் கௌசிக்.

ரிசீவரை அதன் தாங்கியில் வைத்தவன் புருவத்தை நெறித்தபடி கட்டிலில் அமர்ந்தான்.

'பெர்சனல் பிராப்ளமாம் சார்!'

ஹும்... என்று இகழ்ச்சியாய் இதழ்களை வளைத்தான் ரமணன்.

மனதில் பல எண்ணங்கள் அலைமோத அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு,அப்பா சொன்னது காதில் ஒலித்தது. நமக்கென்று பர்சனல் லைஃபில் ஆயிரம் பிரச்சினைகள் வரலாம். ஆனால் அது தொழிலை பாதிக்கும் அளவுக்கு நாம் தடுமாறக் கூடாது.

நான் கம்பெனியை ஆரம்பிக்கும் பொழுது, என்னை நம்பி என் வளர்ச்சிக்காக பணியாற்ற தொழிலாளர்கள் பல பேர் உறுதுணையாய் இருந்தனர்.

என்ன தான் நம் கம்பெனியின் வளர்ச்சிக்காக நான் அயராது உழைத்திருந்தாலும், அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் நாம் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அதை என்றும் நீ மனதில் கொள்ள வேண்டும். நம்மை நம்பி ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள் என்ற பொறுப்புணர்வு உனக்கு என்றும் இருக்க வேண்டும்.

ஒரு வகையில் நாமும் நாட்டை ஆளும் மன்னர்கள் மாதிரி தான்... அவர் எப்படி தன் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழி நடத்திச் செல்கிறாரோ... அதே மாதிரி தான் நம் தொழிலாளர்களின் நலனை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நம்மால் முடிந்தளவு நம் கம்பெனியில் அவர்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று அவன் முதன் முதலில் கம்பெனி பொறுப்பேற்கச் சென்ற பொழுது, அவன் அப்பா கூறிய அறிவுரை இன்னமும் அவன் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அதனால் தான் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளான போதும், தன்னை நம்பி இருக்கும் தொழிலாளர்களை எண்ணி அவன் அதிலிருந்து மீண்டு வந்தான்.

மனம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்க, தவித்தவன் கண்களை இறுக மூடி அப்படியே படுக்கையில் சரிந்தான்.

அதிக மனச்சோர்வினால் அவன் உடலும் தளர்ந்ததால், தன்னையும் மீறி சற்று நேரத்தில் அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.

அவன் கையில் கண்ணாடி கிழித்ததால் ஏற்பட்ட காயத்திலிருந்து லேசாக இரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது.

ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும், படுக்கையை விட்டு கீழே தொங்கி கொண்டிருந்த அவன் கரம் மெதுவாக மேலே நகர்ந்து கொண்டது.

ஒரு ஈரத்துணி தானாக வந்து, இரத்தம் வடிந்த அவன் கையை சுத்தம் செய்தது. அவன் சற்றும் அசையாது ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.

சிறிய இடைவெளிக்கு பிறகு, டேபிளில் இருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வந்து படுக்கையின் அருகிலிருந்த டீபாயில் அமர்ந்தது.

அந்த டப்பாவிலிருந்து ஒவ்வொரு ஆய்ன்மென்டாக வெளியில் வந்து இப்படியும், அப்படியும் தன்னைத் தானே திருப்பிக் கொண்டது, பின் மீண்டும் டப்பாவில் போய் அமர்ந்துக் கொண்டது.

பின்பு சேவ்லான் பாட்டில் வெளி வந்து அந்தரத்தில் நின்று அதன் மூடி தானாகத் திறந்துக் கொண்டது. ஒரு சிறிய காட்டன் பந்து வந்து லேசாக சாய்ந்த பாட்டிலில் நனைந்தது. மீண்டும் பாட்டில் டீபாயின் மேல் சென்று உட்கார்ந்துக் கொண்டது.

ரமணன் கை லேசாகத் திரும்பியது, காயம்பட்ட இடத்தில் அந்த பஞ்சு துடைக்க ஆரம்பித்தது.

பிறகு அனைத்து பொருட்களும் டப்பாவிற்குள் சென்று தானாகவே மூடிக் கொண்டு மேலே எழும்பிச் சென்று பழையபடி டேபிளில் அமர்ந்தது.

சற்று நேரத்தில் கட்டிலின் மறுபுறம் இருந்த ரமணனின் கரம் லேசாக நகர்ந்தது.

நீண்ட நேர இடைவெளிக்குப் பின் லேசாக தூக்கம் கலைய திரும்பி படுத்தான் ரமணன்.

மெதுவாக கண்களைத் திறந்தான், ரூம் முழுக்க கும்மிருட்டாக இருந்தது. கை நீட்டி அருகிலிருந்த நைட் லேம்பை ஆன் செய்தான்.

விழிகள் அறையைச் சுற்றி வலம் வர, காலையில் நடந்தது எல்லாம் கண் முன்னே நிழலாடியது. பெருமூச்சு விட்டவன் படுக்கையை விட்டு எழுந்தான்.

வாஷ் ரூம் சென்று ரெப்ரஷ் செய்து வந்தவன், ரூம் முழுக்க உடைந்து சிதறி இருந்த பொருட்களை, ஒரு ஓரமாக வாக்வம் கீளினரால் ஒதுக்கி வைத்தான்.

கீழே கிச்சனுக்குச் சென்று காபி மேக்கரில் காபி கலந்து எடுத்துக் கொண்டவன், சோபாவில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

மேலே சீலிங்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அப்பொழுது தான் கை காயம் நினைவுக்கு வந்தது.

ஏதும் கைகளில் இரத்தம் உறைந்திருக்கிறதா என்று திருப்பி பார்த்தவன், திகைத்தான்.

கையைக் கிழித்து கொண்டதற்கான அடையாளமாக சிறிய கீறல் மட்டுமே இருந்தது. மற்றபடி இரத்தக் கறை எதுவும் இல்லாமல் கை சுத்தமாக இருந்தது.

ஆச்சரியத்தில் விழிகளை விரித்தான், இது எப்படி சாத்தியம்? காயம் துணி கொண்டு துடைத்தாற் போல் சுத்தமாக உள்ளதே என்று வியந்தான்.

முதலில் குழம்பியவனுக்கு பின்பு உண்மைப் புரிந்தது, ஓ... வாஷ் ரூமை பயன்படுத்தும் பொழுது தண்ணீர் பட்டு தானாகவே சுத்தமாகியிருக்கும் போலிருக்கிறது என்று தனக்கு தானே முடிவு செய்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.

அன்று கம்பெனியில் முக்கியமான டீலர்ஸ் மீட்டிங் இருந்ததால் அதை முடித்து ரமணன் தன் வேலையைத் தொடங்கியதே மாலை ஏழு மணிக்கு மேல் தான்.

அனைத்து வேலையும் முடிந்து, அவன் வீடு திரும்ப விடியற்காலை மூன்று மணி ஆகி விட்டது.

மாதத்தில் பாதி நாட்கள் இப்படித்தான் வீடு திரும்புவான். உடல் நன்றாக அயரும் வரை வீட்டிற்கு வர மாட்டான்.

காரை நிறுத்தி விட்டு வந்து கதவைத் திறந்தவன், நேராக ரூமிற்குச் சென்று காலணியை கழற்றி வீசி விட்டு சோர்வாக அப்படியே படுக்கையில் சரிந்தான்.

அவனின் ஆழ்ந்த மூச்சு விடும் சத்தம் மட்டும் அந்த அறையை நிறைத்திருந்தது.

சிறிது நேரத்தில் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வியர்வையினால் அவன் உறக்கம் கலைய படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்.

உடனே ஏசி தானாகவே உயிர் பெற்றது. அதிலிருந்து வெளியேறிய குளிர் காற்று மெல்ல அந்த அறையை நிரப்ப ஆரம்பித்தது.

ரூம் டெம்ப்ரேட்சர் மிதமான குளிர்காற்றால் நிரம்ப ஆரம்பிக்கவும், வியர்வை அடங்கி படுக்கையில் புரள்வதை நிறுத்தி மறுபடியும் அமைதியாக தூங்க ஆரம்பித்தான் ரமணன்.

சில நிமிடங்களில் அவனது இடது கை லேசாக நகர்ந்து விரிந்தது.

காலையில் சூரிய ஒளி முகத்தில் பட கண்களைச் சுருக்கியபடி விழித்தான்.

அசையாமல் அப்படியே படுத்திருந்தவனின் நெற்றி மெல்ல சுருங்கியது.

திரும்பி தன் இடது கரத்தை குழப்பத்தோடு தூக்கி பார்த்தான், சற்று முன் அவன் கரத்தில் ஏதோ பாரம் அழுத்தியது போல் இருந்தது... ஆனால் இப்பொழுது இல்லை.

கையில் ஏதாவது வீக்கம் இருக்கிறதா என்று மெல்ல அழுத்தி பார்த்தான், சாதாரணமாக தான் இருந்தது.

ப்ச்... என்று சலித்தபடி எழுந்து அமர்ந்தான்.

பிளாங்கட்டை விலக்கியவுடன் லேசான குளிர்காற்று உடம்பில் மோதியது, புருவம் முடிச்சிட வேகமாகத் திரும்பி பார்த்தான். ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது...

அதைக் கண்டவுடன் மனதில் மீண்டும் குழப்ப மேகம் சூழ்ந்தது.

மிகவும் டயர்டாக வந்த நான் அப்படியே படுத்து விட்டேனே... உடையைக் கூட மாற்றவில்லை. பின் எப்படி...?

பிளாங்கட்டை தடவி பார்த்தான், அவனுக்கு நன்றாக நினைவு இருந்தது, அவன் படுக்கும் பொழுது போர்த்திக் கொள்ளவில்லை. அதே போல் ஏ.சியையும் அவன் போடவில்லை, நான் தூங்கும் பொழுது யார் ரூமிற்கு வந்திருப்பார்கள் என்று குழம்பினான்.

என் பர்மிஷன் இல்லாமல் ரூமிற்கு வர அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என்று கோபத்தில் முகம் சிவந்தான்.

வேகமாக ரூம் கதவைத் திறந்து வெளியே வந்து சுற்றும்முற்றும் பார்த்தான்.

ஆட்கள் யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் வீட்டில் மயான அமைதி நிலவியது.

போர்டிகோ தாண்டி வாசல் கேட்டருகே சென்றான்.

அவனைக் கண்டதும் வேகமாக எழுந்த செக்யூரிட்டி, "குட்மார்னிங் சார்!" என்றான்.

ம்... என்று தலையசைத்தவன், "யாராவது இங்கே வீட்டிற்கு என்னைத் தேடி வந்தார்களா?" என்று கேட்டான்.

"இல்லை சார்... நான் நேற்று இரவு எட்டு மணியிலிருந்து டியூட்டியில் இருக்கிறேன், உங்களை கேட்டு யாரும் வரவில்லை!"

"ஓஹோ..." என்று அமைதியானான்.

அவன் முகத்தில் குழப்பத்தைக் கண்டதும், "நான் நேற்று பகல் டியூட்டியிலிருந்த கேசவனை வேண்டுமென்றால் கேட்கிறேன் சார், பகலில் யாரும் வந்தார்களா என்று!" என்றான் அவன்.

"நோ... நோ... தேவையில்லை. அவர்கள் ஈவ்னிங்க்கு மேலே தான் வருகிறேன் என்று சொல்லியிருந்தார்கள். சரி நான் அவர்களிடம் பேசிக் கொள்கிறேன். யூ ஜஸ்ட் கேரி ஆன்!" என்று விலகி நடந்தான்.

இருந்தும் மனதில் திருப்தி ஏற்படாமல் வீட்டைச் சுற்றி ஒரு முறை வலம் வந்து பார்த்தான்.

யாருமில்லை!!!


CCP - Amazon Kindle Link


















No comments:

Post a Comment

Most Popular