உனை காப்பேன் உயிராக
கதைக்கரு
தன் சுயத்தை தொலைத்த நிலையிலும் நாயகனின் ஆழ்மனதில் பதிந்துள்ள நாயகியின் மீதான அபரிதமான காதல் சரியான தருணத்தில் தனக்கேற்ற சூழ்நிலைகள் மூலம் வெளிவந்து அவளை அடைவது தான் கதை.
முதன் முதலாக என் எழுத்துக்களில் காதலுக்கு மட்டுமே தனித்துவம் கொடுத்து எழுதப்பட்ட ரொமான்டிக் குடும்ப நாவல். புதிதாக எழுதி ஜனவரி 2019 கிண்டிலில் வெளியிட்ட நேரம், அமேசான் டாப் புத்தகங்களில் 2வது ரேங்க் வரை வந்தது.
*******
கதையிலிருந்து சிறு துளிகள்
பிரணவியின் பேச்சில் முகத்தை சுளித்து தங்களுக்குள் முணுமுணுத்தபடி ஒவ்வொருவராக நகர, பொன்னம்மாவோ வாயைப் பிளந்துக்கொண்டு அவளை பார்த்திருந்தார்.
‘என்ன பொண்ணுடா இது? எல்லோரையும் இந்த போடு போடுகிறது!’ என்று வியப்பில் நின்றவருக்கு அவள் தன் பேரனை அடித்தது கூட மறந்துவிட்டது.
ராஜாவிடம் திரும்பியவள் அவன் பார்வையை நேராக எதிர்கொண்டு, “ம்… சொல்லுங்கள் சார்… நீங்கள் எப்பொழுதிலிருந்து இந்த பாட்டியம்மாவிற்கு பேரனாக இருக்கிறீர்கள்?” என்று அதிகாரமாக வினவியபடி தன் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டாள் அவள்.
என்ன இவள் சட்டென்று வந்து அவனை அடித்ததும் இல்லாமல் அதிகாரம் வேறு செய்கிறாள் என்று ஆத்திரம் கொண்டவருக்கு மெல்ல விஷயம் புரிய தன் தத்துப் பேரனை சஞ்சலத்துடன் நிமிர்ந்து நோக்கினார் பொன்னம்மா.
பதில் சொல்ல முடியாது தடுமாறி விழிக்கும் அவனை கண்டு மனம் வருந்தியபடி, “இப்பொழுது ஒரு மூன்று மாதமாக தான்டா கண்ணு… ராஜா என் வீட்டில் இருக்கிறான்!” என்றவரை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவனிடம் திரும்பினாள்.
“ஸோ… வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்து இவர்கள் வீட்டில் இருக்கிறீர்கள்!”
‘வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேனா...’
“என்னடா பாப்பா மாதிரி லுக் விடுகிறாய்?”
‘பார்ப்பதற்கு சின்னப் பிள்ளை போல தெரிகிறது… ஆனால் வயது அதிகம் போல...’ என்று எண்ணியபடி அவளை கீழிருந்து மேல்வரை அளந்தாள் முதியவள்.
“இப்பொழுது வாயை திறக்கப் போகிறாயா இல்லையா?” என்று எகிறியபடி அவள் அவனுடைய கன்னத்தை பிடித்து இழுத்து தன்புறம் குனியச் செய்ய, அவனோ இமைக்காமல் அவளின் முகம் பார்த்திருந்தான்.
‘ஐயோ… என்ன இவள் இப்படி இழுக்கிறாளே இவனுக்கு வலிக்கிறதா இல்லையா?’ என்று மனம் பதறிய பாட்டி, “யம்மா… கொஞ்சம் நான் சொல்வதைக் கேளும்மா!” என அவளிடம் கெஞ்சினார்.
“முடியாது… எனக்கு இவன் தான் பதில் சொல்ல வேண்டும்!” என்றாள் பிரணவி திமிராக.
“அது இல்லைம்மா… உன் தம்பிக்கு ஒரு சின்னப் பிரச்சினை, வா நாம் அப்படி ஓரமாக சென்று விளக்கமாகப் பேசலாம்!”
பொன்னம்மா சொன்னதில் பிரச்சினை என்கிற வார்த்தையை மொத்தமாக காற்றில் விட்டவள் கையோடு ராஜாவையும் விட்டுவிட்டு, “வாட்?” என்று அவரிடம் தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.
“அது தான் உன் தம்பி…”
“ஹைய்யோ… பாட்டிம்மா நிறுத்து… நிறுத்து. என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது உனக்கு? இல்லை இவனை பார்த்தால் தான் எப்படி தெரிகிறது? இவன் எனக்கு தம்பியா… நான் என்ன அவ்வளவு வயதானவள் போலவா தெரிகிறேன்?” என்று கண்களை அகல விரித்து அவரை முறைத்தாள்.
“இல்லை தான்… சின்னப்பெண் போல தான் தெரிகிறாய்… ஆனால் இவனை ஏகவசனத்தில் வாடா போடா என்கிறாயே!” என்று சந்தேகம் கேட்டார்.
“அது என் உரிமை அப்படி சொல்வேன், மற்றபடி…” என்றவள் ராஜாவிடம் திரும்பி, “ம்… நான் உனக்கு அக்காவா?” என்று இப்பொழுது அவனை முறைத்தாள்.
“அட… நீ யாரென்று தான் சொல்லேன் பாப்பா!”
“அதை இவன் தான் சொல்ல வேண்டும்!” என அலட்சியமாக கைக்கட்டி நின்றவளை பார்க்கும் பொழுது ராஜாவின் மனதில் மொட்டுக்கள் பூத்தது தான், ஆனால் இன்னமும் மூளையில் எதுவும் தெளிவாக உதிக்காமல் எதையும் பேசத் தயாராக இல்லாத நிலையில் நின்றிருந்தான் அவன்.
பேரனின் முகத்தை பார்த்தவர் பின் அவளிடம் திரும்பி, “ ஏய்… இங்கே பார்… முதலில் நீ யாரென்று சொல்?” என்று லேசாக அதட்டினார் பாட்டி.
‘சரியான விளையாட்டுப் பிள்ளையாக இருப்பாள் போலிருக்கிறதே…’
“என்ன ரொம்ப மிரட்டுகிறாய்? போன மூன்று மாதங்களாக இவன் உனக்கு சமையல் வேலைக் கொடுத்து வீட்டோடு வைத்துக் கொண்டால் நீ சொந்தப் பாட்டி ஆகி விடுவாயா? எங்கே போனாலும் இவனுக்கு சாப்பாடு மட்டும் நல்ல வகை தொகையாக வக்கணையாக வீட்டுச் சாப்பாடு போல வேண்டும்!” என்று அவனை பழித்தாள் அவள்.
அவளின் பேச்சைக் கேட்டு பொன்னம்மாவின் முகம் சுருங்கிவிட, அதுவரை அமைதியாக இருந்தவன் தன் சுயத்தை மீட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“போதும், இதற்குமேல் எதுவும் வார்த்தைகளை கொட்டி விடாதே… நீ நினைப்பது போல் இவர்கள் ஒன்றும் என்னிடம் வேலை செய்யவில்லை. நான் தான் இவர்களுடைய வீட்டில் தங்கி இருக்கிறேன்!”
“இந்தப் பாட்டி வீட்டிலா...” என முதியவளை ஒரு முறை தயக்கமாக ஏற இறங்கப் பார்த்தவள், “நீ ஏன் அங்கே தங்கி இருக்கிறாய்?” என்று அவனிடம் நெருங்கி கிசுகிசுத்தாள்.
லேசாக பெருமூச்செறிந்தவன், “முதலில் நீ யார் என்று சொல்?” என அவளிடம் விவரம் கேட்டான்.
“என்ன?” என்று தன் இதயத்தில் கையை வைத்து பலமாக அதிர்ந்தவள், “என்னையா… யாரென்று கேட்கிறாய்? அடப்பாவி… ஐயோ… ஐயோ… இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா… அடக்கடவுளே… சுற்றி சேர்ந்திருந்த கூட்டத்தையும் நானே விரட்டி அடித்து விட்டேனே!” என்று உடனே விரல் நகம் கடித்தாள்.
தற்பொழுது இருக்கும் இறுக்கமான சூழ்நிலை மங்கி அவளின் பேச்சில் பாட்டிக்கும், பேரனுக்கும் தன்னால் சிரிப்பு மலர்ந்தது.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவனை உரசிக்கொண்டு நின்று, “ஏன் அத்தான் இப்படி விளையாடுகிறாய்?” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
‘அத்தானா…?’
ராஜாவின் இதயம் இனிமையாக சிலீரென்று தாக்கப்பட்டது.
சட்டென்று மனதில் காதல் பொங்கி வழிய, “நான் உனக்கு அத்தானா?” என்றான் உயிர்வரை ஊடுருவும் சிலிர்ப்போடு.
“ம்… இல்லை... நீ என்னுடைய சட்டை பொத்தான்!” என்றவள் முறைக்க, பொன்னம்மா அதற்குமேல் முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்துச் சிரிக்க ஆரம்பித்தார்.
“அத்தானை அப்படி எல்லாம் மரியாதை இல்லாமல் பேசக்கூடாதுடா கண்ணு…”
ம்… என்று அவர்புறம் திரும்பி தன் புருவங்களை உயர்த்தியவள், “இவனை சீக்கிரமாக என் கழுத்தில் தாலி கட்டச் சொல்லு, அப்புறம் ரொம்ப மரியாதையாக பேசுகிறேன்!” என்றுவிட்டு, “என்ன டீல் ஓகேவா?” என அவனிடம் கண்சிமிட்டினாள்.
பளீரென்று முறுவலித்தவன், “உன் பெயர் என்ன?” என்றான் ஆசையாக.
“என்னது… என் பெயர் என்னவா?” என்று மூக்கை சுருக்கியவள், “போய்யா… மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாயா? இனி நான் உன்னோடு பேசத் தயாராக இல்லை!” என்று அவனை முறைத்துவிட்டு திரும்பி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.
பதறிப் போன ராஜா, “ஏய்…” என அவள் பின்னால் ஓடியவன், “ஒரு நிமிடம் நின்று நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து தான் கேளேன்!” என்று அவளோடு நடந்தபடி கெஞ்சினான்.
“முடியாது!” என்று அலட்சியமாக கூறியபடி தன் பான்ட் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு நிற்காமல் நடந்தாள் பிரணவி.
தவித்தவன், “ப்ளீஸ்… “ என்றான் மனம் முழுவதும் சோர்வு பரவும் இயலாமையுடன்.
அவன் குரலில் நின்றவள் திரும்பி அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தாள்.
விழிகளில் சிந்தனை படிந்திருக்க அவனருகில் வந்தவள், “நீ இந்த அளவிற்கு இறங்கி வந்து கெஞ்சுவாயா அத்தான்… அதுவும் என்னிடம்!” என்று நம்ப இயலாத பார்வையை செலுத்தினாள்.
ஒரு கணம் அமைதியாக இருந்தவன் தன் மனநிலையை அவளுக்கு தெளிவாக உணர்த்தும் பொருட்டு, “உன் அத்தான் கெஞ்சுவானா இல்லையா என்ன என்று எனக்கு தெரியாது, ஆனால்… இந்த ராஜா உன் அன்பிற்காக எத்தனை தூரம் வேண்டுமென்றாலும் கெஞ்சுவான்!” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
அவன் சொன்னதில் பெயரை தவறவிட்டு மற்றதில் கவனம் குவிய தாங்க முடியாத வியப்பில் விழிகளை விரித்தவள், “நீ இப்பொழுது என்ன சொன்னாய்?” என்றாள் அவன் விழிகளை ஆர்வமாக ஊடுருவியபடி.
அந்த நேரம் தன் மனதில் தோன்றியதை ஒருமுகப்படுத்தியவன், “ஐ லவ் யூ!” என்றான் ஆத்மார்த்தமாக.
ராஜா காதல் சொன்ன மறுநிமிடம் இரண்டு கைகளையும் உயரே தூக்கி ஹுர்ரே… என கத்திய பிரணவி பொது இடம் என்றும் பாராமல் சட்டென்று அவனை இறுக கட்டிக்கொண்டாள்.
“தாங்க்ஸ் அத்தான்… ஐ லவ் யூ டூ அத்தான்!” என உற்சாகமாக நுனிக்காலில் எம்பியவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள்.
அவளின் முத்த தீண்டல் அவனுடைய ஆன்மாவை சிலிர்ப்புடன் உரசிச் செல்ல, நினைவு பெட்டகத்தில் தான் ஏற்கனவே உணர்ந்திருந்த அவளின் ஸ்பரிசத்தை மீண்டுமொரு முறை புதிதாக சேமித்தான் ராஜா.
***
நாளை மறுநாள் திருமணம் என்கிற நிலையில் இன்று தன் கைகளுக்கு மருதோன்றி போடுவதற்கு நெருங்கிய தோழிகளை அழைத்து சின்னதாக ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தாள் பிரணவி.சற்று நேரத்தில் அனைத்து சடங்குகளோடும் மணப்பெண்ணின் கையில் அவள் தேர்ந்தெடுத்து கொடுத்த மெஹந்தி டிஸைனை வரைய ஆரம்பித்திருந்தார் அழகுகலை நிபுணர்.
வட இந்திய பாணியில் ஒருபுறம் நம் இளம்பெண்களின் கூட்டம், பல்வேறு மொழி திரைப்படங்களில் வரும் வெகு பிரபலமான திருமணப் பாடல்களை சத்தமாக அலறவிட்டு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
மருதாணி போட அமரும் பொழுதே சங்கோஜப்பட்டு ஒதுங்கி இருக்க முயன்ற சஞ்சயையும் கட்டாயப்படுத்தி இழுத்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டாள் பிரணவி. நடந்திருக்கும் கொண்டாட்டங்களை ஆர்வமாக ரசித்திருந்தபடி தன்னவளின் துறுதுறுப்பையும் அவ்வப்பொழுது ஆவலுடன் விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.
"சாரின் முழுப்பெயரும் சஞ்சய் தானா அப்படியே கைகளில் வரைந்து விடட்டுமா?" என்று வினவினாள் பியூட்டிசியன்.
"ஆங்... ஆமாம் அதே தான், நன்றாக அழகாக போட்டு விடுங்கள்!" என்றவாறு பின்னால் அமர்ந்து இருந்தவனின் மார்பில் ஆசையுடன் சாய்ந்துக் கொண்டாள் பிரணவி.
அவள் முகத்தில் தெரிந்த பெருமிதத்தில் இவன் மனதில் காதல் பித்துப் பிடிக்க, அப்படியே அவளை வாரியணைத்து முகம் முழுவதும் முத்தமழை பொழிய வேண்டும் என்று உள்ளிருந்து கிளம்பும் பேராவலை அடக்கி ஆள மிகவும் சிரமப்பட்டுப் போனான் சஞ்சய்.
'கடவுளே... என் பொறுமை எல்லை மீறுவதற்குள் இவளுடன் நான் தனித்து இருக்குமாறு ஏதாவது ஒரு வாய்ப்பை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்து விடு!' என்று மேலிருப்பவனிடம் இவன் காதலுடன் விண்ணப்பம் அனுப்ப, அதை கிடப்பில் போட்டவனோ தன்னால் அவன் கேட்பதை தர இயலாதே என ரொம்பவும் வேதனையில் ஆழ்ந்தான்.
உற்சாகமாக நடந்துக் கொண்டிருக்கும் விழாவிற்கு சற்றும் பொருத்தமில்லாமல் எதிர்மறையான ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் வேகமாக உள்ளே நுழைந்தான் அவன்.
"ரொம்பவும் நன்றாக இருக்கிறது, குடும்பம் என்றால் இப்படி இல்லை இருக்க வேண்டும்!" என குத்தலாக உரக்க மொழிந்து தன் குடும்பத்தினரை கூரிய விழிகளால் கூறுப் போட்டபடி நின்றிருந்தவனை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துப் போயினர்.
தன்னையுமறியாமல் சஞ்சய் இடமிருந்து விலகிய பிரணவி அவனை பார்த்து, "சஞ்சய் அத்தான்!" என்றாள் உச்சக்கட்ட அதிர்ச்சியில்.
அவன் விழிகளோ அவளை விட்டு அவளருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தவனை அருவருப்புடன் அளவெடுக்க ஆரம்பிக்க, மாறாக வந்திருப்பவனைக் கண்டவனின் இருதயமோ ஒன்றும் புரியாமல் அசுர வேகத்தில் படபடத்து தன்னவளின் விலகலால் இன்னமும் மனதொடிந்து கதறத் துவங்கியிருந்தது.
சாரதாவோ குழப்பத்துடன் உருவத்தில் ஒன்றாக இருக்கும் இருவரையும் திரும்பி திரும்பிப் பார்த்தவர், தன் வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து தான் ஈன்றெடுத்த மைந்தனின் உடல்மொழியை சரியாக உணர்ந்து தங்களை விழிகளால் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பவனிடம் விரைந்துச் சென்றார்.
***
“அத்தான் நீ நிஜமாகவே இதை எனக்கு பாவம் பார்த்து தான் செய்கிறாயா?” என்று ரகசியப் புன்னகையில் கன்னங்கள் குழிய குறும்புடன் வினவினாள் பிரணவி.ஏய்… என முறுவலித்து அவளது கன்னத்தில் ஆசையாக குனிந்து முத்தமொன்றை பதித்தவனை நிமிர்த்தி நேராக தன் விழிகளை காணச்செய்தவள் அவன் முகத்தையே இமைகள் சிமிட்டாமல் பார்த்திருந்தாள்.
“எதற்கு இப்படி ஒரு பார்வை?” என்று கேட்டு அவளை பிரிந்திருப்பதை தாங்க முடியாதவன் போல மீண்டும் அணைக்க முயன்றவனை குறுக்கே கைவைத்து தடுத்தவள், “இப்பொழுது எப்படி இருக்கிறது உன் முகம்?” என்று ஆழ்ந்துப் பார்த்தாள்.
“அதற்கு என்ன நீ பக்கத்தில் இருக்கிறாய் அல்லவா நன்றாகவே சிரித்திருக்கும்!” என்று முழுஅளவில் மலர்ந்து சிரித்தவனை அழுத்தமாகப் பார்த்தவள், “ஓ… நானாக தேடிப் பக்கத்தில் வந்தால் மட்டும் தான் இப்படி சிரிக்கும் இல்லை?” என்றாள் எள்ளலாக.
அந்நேரம் வரை தன்னவளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் மற்றதை மறந்து அவளிடம் உரிமைப் போர் தொடுத்தவனுக்கு சடாரென்று யாரோ தன் தலைமீது கூடை தணலை வாரி இறைத்ததைப் போல மொத்தமாக நிலைகுலைந்து நின்றான். மண்டையில் இடிஇடியென்று தாக்கும் சம்மட்டி வலியோடு தன் நிலைமை தெளிவாக உறைக்க வெளிறிய முகத்தோடு அவளை கலவரமாக பார்த்திருந்தான் ராஜா.
“என்ன? என் மீது உனக்கு உரிமை இல்லையென்று தானே என்னை திரும்பி கூடப் பார்க்காமல் இங்கே ஓடி வந்தாய்… அப்புறம் இரண்டே நாட்களில் எது தந்த உரிமையில் இப்படி என்னை கட்டிப்பிடிக்கிறாய், முத்தம் கொடுக்கிறாய்?” என்றாள் காட்டமாக.
பிரணவியின் கேள்வி இதயத்தை வாள் கொண்டு அறுக்க ஊமையாய் கதறித் துடித்தவன், அவளுக்கு பதிலளிக்க முடியாதவனாக முகம் இறுக விரக்தியுடன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
“இப்படி திரும்பிக் கொண்டால் என்ன அர்த்தம்? இப்பொழுது செய்ததற்கு பதில் கூற முடியவில்லையா அல்லது அன்று நடந்துக் கொண்டதற்கு பதில் கூற முடியவில்லையா…” என்று அவன் முன் வந்து நின்றாள்.
அவமானத்தில் முகம் சிவந்து தவிக்கும் அவனைப் பார்த்து கொஞ்சம் மனம் இறங்க நெருங்கிச் சென்றவளை விடுத்து அவன் வேகமாக விலகிச் செல்லப் பார்க்கவும், பாய்ந்து அவனுடைய சட்டையை கொத்தாகப் பற்றியவள் அவன் விழிகளுக்குள் உறுத்து விழித்தாள்.
துவண்டுப் போனவன், “அம்மு…” என்றான் சோர்வாக.
பிடித்தப் பிடியை விடாமல் அவனின் சட்டையோடு சேர்த்து அவனையும் இழுத்து வந்தவள் ஒரே தள்ளாக அவனை கயிற்றுக் கட்டிலில் தள்ளிவிட்டு அவன் திகைத்துப் போய் சுதாரித்து எழும் முன்னே இவள் அருகில் அமர்ந்து அவன் தலையை முரட்டுத்தனமாக இழுத்து தன் மடிமீது சரித்து இருந்தாள்.
பிரணவியின் செயல்களை புரிந்துக்கொள்ள முடியாமல் மூளை மரத்துப் போய் அவளையே வெறித்துப் பார்த்தவனின் பார்வையில் கசிந்துருகியவள், தன் விரல்களை கொண்டு அவன் இமைகளை மெல்ல மூடினாள்.
தன்னவளின் அருகாமையிலும், அவள் மீது தனக்கு உரிமையில்லை என்கிற கொடும் உணர்விலும் துடித்துக் கொண்டிருந்தவனின் நாசியில் இருந்து வெளியேறும் சூடான சுவாசக்காற்று சீரற்று இருக்கவும், மிருதுவாக அவன் சிகைக்குள் விரல்களை நுழைத்து ஆதரவாக வருடிக் கொடுத்தவள் குனிந்து அவன் நெற்றியில் மென்மையாக தன் இதழ்களையும் ஒற்றி எடுத்தாள்.
அவள் காட்டும் அன்பிலும், காதலிலும் இதயம் உருகி கரையும் பொழுதே இது தனக்கு நிரந்திரமில்லையே என்ற வேதனையில் முகம் கசங்கியவனின் மனபாரத்தை உணர்ந்தவள் அவனின் முகமெங்கும் உதடுகளால் கோலம் வரைந்து அவன் மனதினுள் தன் நேசமெனும் ஆறுதல் வண்ண மொழிகளை புகுத்த முயன்றாள்.
அவன் தேகத்தில் அவளுக்கென்றே காத்திருந்த உணர்வுகள் அனைத்தும் எழுந்து பேயாட்டம் போட விழிகளை திறவாமல் விரக்தியுடன் பக்கவாட்டில் தலையை திருப்பிக் கொண்டவன், "எதற்கும் உறுதியில்லாத என்னை தேடி வந்து ஏன்டா இப்படி நடந்துக் கொள்கிறாய்?" என்றான் இமைகளை மீறி கன்னங்களில் வழிந்தோடும் நீரோடு.
அதைக்கண்டு வருந்தியவள், “அத்தான்…” என்று அவன் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்திக் கொண்டாள்.
“இதற்கு கூட எனக்கு அருகதை இல்லையே… இன்னமும் ஏன் அவ்வாறு அழைக்கிறாய்?” என்று வலியோடு முணுமுணுத்தவனின் இதழ்களை இதற்குமேல் பேசுவதற்கு உனக்கு அனுமதி இல்லை என்று தன் இதழ்களால் அணைப் போட்டாள் பிரணவி.
***
தன்னை பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்ள இத்தனை காலமாக போராடியவன் இதைக் கேட்டதும் அகமகிழ்ந்துப் போவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க அவனோ அமைதியாக நின்றான்.“ப்ச்… சரி நீ யாருடன் வந்தாய்?”
“என்னை விடு, நான் எல்லாம் துணையோடு தான் வந்திருக்கிறேன். நீ ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றவளின் கரம்பற்றி வீட்டினுள் அழைத்து வந்தவன், “எனக்கு எதிலும் நம்பிக்கை வர மறுக்கிறது!” என வாசல் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
அவன் தலையை கண்டதும், “வாங்க… இப்பொழுது நாம் போகலாம்!” என்று வேகமாக நடந்த பொன்னம்மாவை பார்த்த செந்தில், “உன் முறைப்பெண்… சாரி.. சாரி… என் நண்பனின் ஆள் சரியான சர்வாதிகாரியாக இருக்கும் போலிருக்கிறதே!” என்றவாறு திரும்பி சஞ்சய்யை நக்கல் வழிய பார்த்தான்.
அவனுடன் நடந்தபடி, “வீட்டிற்குள் போனதும் அவளிடமே உன்னுடைய அபிப்பிராயத்தை பற்றி கருத்து கேட்டு விடலாம் மச்சி!” என்று பதிலாக கண் சிமிட்டியவனிடம், “உனக்கு ஏன்பா இந்த கொலைவெறி?” என அரண்டுப் போய் விழித்தான் செந்தில்.
பிரணவியை சஞ்சய் அழைத்து வந்திருப்பான் என்பதை முற்றிலுமாக எதிர்பார்த்திராத ராஜா பேசுவதறியாது தடுமாறி நிற்க, அதை உணர்ந்தவன் தானாக புன்னகைத்து அவனிடம் கைநீட்டினான்.
“எப்படி இருக்கிறாய்?”
“ம்… பைன்!” என பதிலாக முறுவலித்தவன், “இவர்…?” என்று கேள்வியாக செந்திலை நோக்கினான்.
அவனோ அவர்கள் இருவரின் உருவ ஒற்றுமையை அருகில் பார்த்து திறந்த வாய் மூடாது பிரமித்து நின்றிருந்தான்.
“ம்… இப்பொழுது நன்றாக வாயை பிளந்துக்கொண்டு நின்றுவிடு, அங்கே என்னை மட்டும் அப்படி வெளுத்து வாங்கினாய்?” என்று அவனை முறைத்தான் சஞ்சய்.
“அட இருப்பா… நானே இந்த... அது என்ன படம்? ஏன்மா உன்னை மாதிரி ரௌடி பெண்ணுக்கெல்லாம் அந்தப் படம் பெயர் நன்றாக தெரிந்திருக்குமே? அது தான்மா… ஒரே முட்டைல இரண்டு கரு என ஒரு சீன் வருமே…” என்று பிரணவியிடம் அவசரமாக சந்தேகம் கேட்டான் செந்தில்.
ம்… என இடையில் கைவைத்து உறுத்து விழித்தவள், “அந்தப் படம் பெயர் கொடி!” என்றாள் பல்லிடுக்கில்.
“ஆங்… பார்த்தாயா கரெக்டாக பாய்ன்டை பிடித்து விட்டாள்!” என்று சஞ்சயிடம் திரும்பியவன் அவன் விழிகளில் வழிந்த கேலியை கண்டு தன் நண்பனிடம் பார்வையை திருப்ப, அவனோ தன்னவளின் முரட்டுப் பாவனையை அவள் தன்னிடம் காதலில் உருகி நிற்பது போன்ற பாவனையாக ரசித்திருந்தான்.
“அடங்கொக்க மக்கா… இது அதே படம் தான். இது அப்படியே அந்த அப்பாவி பேராசிரியர் தனுஷ்… இது அப்படியே அந்த மிரட்டல் கோழி முட்டை பார்ட்டி!” என்றவனிடம், “ஹலோ… என்ன?” என்று எகிறியபடி வேகமாக இவனை தாண்டி செல்ல முயன்றவளை புன்னகையுடன் இழுத்து தனக்கருகில் நிறுத்திக் கொண்டான் ராஜா.
“விடு… இவர் தான் அந்த நண்பரா?” என்று கேட்டான்.
“அந்த நண்பரா… டேய்… நான் உன் பிரெண்டுடா!”
“சாரி… நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள், நான் உங்கள் நண்பன் அல்ல!” என்று மறுத்தான்.
“ஏய்… என்ன இது? இவ்வளவு நேரமாக நீ இவனிடம் உண்மையை விளக்கிய லட்சணம் இது தானா… நன்றாக என்னை பழிவாங்கி விட்டாய் அல்லவா?” என்று பிரணவியை முறைத்தான் செந்தில்.
“ப்ச்… நீங்கள் வேறு கடுப்பை கிளப்பாதீர்கள் அண்ணா, நான் சொன்னால் இவன் நம்ப மாட்டேன் என்கிறான்!” என்று முனகினாள்.
“கட்டிக்கப் போகிறவனுக்கு நல்ல மரியாதை… ஹும்… நமக்கு என்ன வந்தது?” என்று தனக்குள் முனகுவதாக எண்ணி சற்றே சத்தமாக பேசி அருகில் நின்றிருந்த இளைஞர்களின் முகத்தில் நகையை மலர வைத்தவன், “அதற்கு நாங்களே பேசி இருந்திருக்கலாம்!” என பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
"அப்படியா? சரி பேசுங்கள்!" என்று அலட்சியமாக கைகளை குறுக்கே கட்டிக்கொண்டாள் பிரணவி.
"இங்கே பார் பிரவீண்..." என்று செந்தில் ஆரம்பிக்க, "இல்லை... நான் பிரவீண் இல்லை, நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள்!" என வேகமாக இடைமறித்தான் ராஜா.
***
பட்டென்று சஞ்சயின் கையிலிருந்த டைரியை பறித்துக் கொண்டான் பிரவீண்.“என்னடா?”
திடீரென்று அவன் முகத்தில் பரவிய குழப்பத்தையும், அச்சத்தையும் கண்டு இவன் புரியாமல் வினவ, “ஒ… ஒன்றுமில்லை நீங்கள் கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து இருங்கள், நான் இதையெல்லாம் வேகமாக முக்கியமானதை படித்துவிட்டு வருகிறேன்!” என பதற்றத்தோடு அவர்களை வெளியே அனுப்பினான் பிரவீண்.
செந்தில் அவனை சந்தேகத்துடன் பார்த்தபடி அசையாமல் நிற்க, சஞ்சய் நகர்வது போல் போக்கு காட்டிவிட்டு சட்டென்று பிரவீண் கையில் இருந்ததை பறித்துக்கொண்டு வெளியே ஓடினான்.
ஏய்… என்றபடி இவன் பின்னால் துரத்திக் கொண்டு பாயவும், “செந்தில்… அவனை விடாதே அமுக்கிப் பிடி, நீ வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னால் தான் அவன் என்னிடம் கண்டபடி உளறிக் கொண்டிருந்தான். ஏதோ பிரச்சினையை கண்டுப்பிடித்து விட்டான் போலிருக்கிறது!”
என்றவாறு அவசரமாக டைரியின் பக்கங்களை திருப்பியபடி பார்வையை அதில் ஓட்டியவன் திரும்பி பிரவீணை அதிர்ச்சியுடன் பார்க்க, அப்படி என்ன இருக்கிறது அதில் என்று தானும் நண்பனை விட்டுவிட்டு ஆர்வமாக நகர்ந்தான் செந்தில்.
அதற்குள்ளாக சஞ்சய்யே அருகில் வந்து, “என்னடா இது?” என்று பிரவீணிடம் தன் கையில் இருந்ததை காட்டி கோபமாக கேட்டான்.
இவன் பதில் சொல்ல தெரியாமல் தவிப்புடன் போராட, அதை எட்டிப் படித்துப் பார்த்த செந்தில், “டேய்… நீ கவிதை எல்லாம் எழுதுவாயா?” என்றான் ஆச்சரியமாக.
அவன் பின்னந்தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டிய சஞ்சய், “எருமைமாடே… நன்றாக கண்ணை திறந்து படித்துப் பார், இதெல்லாம் வெறும் கவிதைகள் இல்லை. எல்லாம் முழுக்க முழுக்க காதல் கவிதைகள், அதுவும் ஒரு பெண்ணை நினைத்து இவன் உருகி உருகி எழுதி இருக்கிறான்!” என்றான் சிடுசிடுப்புடன்.
“ஐயோ… நீ காதலித்தாயா? என்னிடம் ஒரு முறை கூட சொல்லவே இல்லை…” என்றான் அவன் நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சியாக.
"ம்… ரொம்ப முக்கியம்? எல்லோருக்கும் ஒரு கவலையென்றால் உனக்கு உன் கவலை!" என்று செந்திலை நகர்த்தி விட்டு பிரவீணுக்கு எதிராக நெருங்கி நின்றவன் அவனை விழியால் வெட்டி,
"சொல்... இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? அப்பொழுது நீ ஏற்கனவே ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து இருந்திருக்கிறாய், அப்படித்தானே..." என்று புருவங்களை நெறித்தான்.
திணறியவனாக, "சஞ்சய்..." என்று தன் பின்னந்தலையை அழுத்தியவன், "தயவுசெய்து... என்னை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முயற்சி செய். என் மனதில் பிரணவியை தவிர வேறு யாரும் இல்லை, நான் அவளை என்னுயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். என்னால் வேறு எந்தப் பெண்ணையும் காதலித்திருக்க முடியாது.
இது என்னவென்று எனக்கு புரியவில்லை. சத்தியமாக சொல்கிறேன்... என் உடல், பொருள், ஆன்மா அனைத்திலும் அவள் ஒருவள் மட்டும் தான் நிறைந்திருக்கிறாள். நீ தேவையில்லாமல் இதை பெரிதுபடுத்தி எதுவும் குழப்பி விடாதே!" என்றான் பதற்றமாக.
"பிரவீண்... நீ யோசித்து தான் பேசுகிறாயா? நினைவுகள் பறிபோவதற்கு முன்னால் நீ ஒரு பெண்ணை ரொம்பவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறாய். இப்பொழுது அவள் நினைவுகள் உனக்கு இல்லை என்பதால் மட்டுமே உன்னுள் பிரணவி முழுவதுமாக நிறைந்திருக்கிறாள்.
ஒருவேளை... நாளை உனக்கு நினைவுகள் திரும்பி விட்டால் பிரணவியின் நிலை என்ன? அதோடு உன்னுடைய நிலையை எண்ணிப் பார்... உன்னை நம்பிக் கொண்டு எங்கோ காத்திருக்கும் அந்தப் பெண்ணின் மனதை நினைத்துப் பார்!"
"நோ... சஞ்சய்... என்னால் பிரணவியை விட்டுத்தர முடியாது. எங்கோ ஏதோ தவறு இருக்கிறது!" என்று உடல் நடுங்கியவனாக சென்று சோபாவில் அமர்ந்து இரு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக் கொண்டான் பிரவீண்.
"டேய்... பிரவீண்!" என்று கவலையுடன் அவனருகில் சென்று தோளை தொட்டான் செந்தில்.
நிமிர்ந்தவன் வேகமாக அவன் கரங்களை பற்றிக்கொண்டு, "இல்லைடா... பிரணவி இல்லாமல் சத்தியமாக என்னால் உயிர்வாழ முடியாது!" எனும்பொழுதே அவன் கண்கள் வேதனையில் கலங்கியது.
பிரவீண் நிலைக்கொள்ளாமல் தவிப்பதை கண்டு சஞ்சய்யின் மனதிலும் வருத்தம் பிறக்க அவனிடம் சென்று, "சரிவிடு... இது என்னவென்று கொஞ்சம் பொறுமையாக பார்ப்போம்!" என்று அவன் முதுகை தட்டி ஆறுதல் கூறினான்.
"இல்லை..." என வேகமாக தலையசைத்து மறுத்தவன் சடாரென்று எழுந்து, "இதை இப்பொழுதே முடிக்க வேண்டும், எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. அது என்னவென்று நான் முழுமையாக படித்துப் பார்க்கிறேன்!" என்று அறைக்குள் சென்றவன் இரண்டு டைரிகளையும் எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.
அதை முடித்தவன் மீண்டும் புத்தக அலமாரியில் இருந்து பல்வேறு நிறங்களில் கைநிறைய டைரிகளை அள்ள, "ஏய்… இது என்ன? இவன் இப்பொழுதைக்கு இதை முடிக்க மாட்டான் போலிருக்கிறதே... எனக்கு வேறு பசிக்கிறது!" என்று வயிற்றை தடவினான் செந்தில்.
சஞ்சய் திரும்பி அவனை ஒரு மார்க்கமாக பார்க்க, "இல்லைப்பா... சாப்பாட்டு நேரமே தாண்டப் போகிறது, மணி மூன்றாகிறது!" என்றான் பாவமாக.
அவன் பாவனையில் பக்கென்று நகைத்து விட்டவன், "சரி வா... சாப்பிடப் போகலாம்!" என்று அவன் தோளில் கைப் போட்டான்.
"பிரவீண்... நாங்கள் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு, உனக்கும் ஏதாவது பார்சல் வாங்கி வந்து விடுகிறோம்!" என்று உள்ளே எட்டிப் பார்த்து அவனிடம் குரல் கொடுத்தான் சஞ்சய்.
"ம்... சரி!" என்றவனின் பார்வை கணப்பொழுது கூட இவர்கள் புறம் திரும்பவில்லை தீவிரமாக டைரியில் மூழ்கி இருந்தது.
அதைக்கண்டு முறுவலித்தவன், “இவன் எப்பொழுதுமே இப்படி தானா செந்தில்… எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும் இவ்வளவு தீவிரமாக இறங்கி விடுவானா?” என கேலியாக அவனிடம் விசாரித்தபடி விறுவிறுவென்று படிகளில் இறங்கினான்.
No comments:
Post a Comment