காதல் வந்ததும்...
கதைக்கரு
காதல் வந்ததும்... தலைப்பிற்கேற்ற கதைக்கரு தான். நாயகியை பார்த்த நொடி முதலாக அவள் மேல் நம்பிக்கையற்று தன் வசதிக்கு அவளை ஆட்டிப்படைக்கும் நாயகன், அவள் மீது காதல் வந்ததும் எப்படி தலைகீழாக மாறி அவளிடம் தானும் சரணடைந்து அவளையும் தன்னை உணர வைத்து காதலை ஏற்க வைக்கிறான் என்பதே கதை.
*******
கதையிலிருந்து சிறு துளிகள்
முகம் முழுவதும் பயத்துடனும், மருண்டு விழிக்கும் விழிகளுடனும் தன்னெதிரே வந்து நின்ற பதினெட்டு வயது நிரம்பிய பூம்பாவையை ஆச்சரியமாகப் பார்த்தான் ராஜ்குமார்.
“உட்காரும்மா!”
“பரவாயில்லைங்க!”
அவளின் நடுங்கிய மெல்லிய குரலில் தனக்குள் சிரித்துக் கொண்டவன், “நீ உட்கார்ந்தால் தான் என்னால பேச முடியும்!” என்க, மிகுந்த தயக்கத்தின் பின்னே நாற்காலியின் நுணியில் அமர்ந்தாள்.
“உன் பேரென்ன?”
“ரஞ்சனி!”
குயிலிசையாக மென்மையாக பதில் வந்தது.
“என்ன படிச்சிருக்கே?”
“ப்ளஸ்டூ மேத்ஸ்!”
“ஓ... அக்கவுண்ட்ஸ் பத்தி ஏதாவது தெரியுமா?”
மிரண்டு விழித்தவள், “அது எதுவும் தெரியாதுங்க!” என்றாள் அச்சத்துடன்.
“இட்ஸ் ஓகே... இங்கே ஜாயின் பண்ணவுடனே சொல்லித் தருவாங்க. ஈசியா கத்துக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லை!”
சம்மதமாக அவள் தலையசைக்க, பெண்ணின் கையிலிருந்த மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்து திருப்தி அடைந்தவன் மேஜை மீதிருந்த அழைப்பு மணியை அழுத்தி பியூனை வரச் செய்தான்.
“இந்தப் பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுப்பா!”
எதிரே தலைக்குனிந்தவாறு பயத்தோடு அமர்ந்திருந்த பெண்மையின் அழகிய வதனமும், அவளின் அமைதியும் ராஜ்குமாரின் மனதில் மெல்லிய ஈர்ப்பை உண்டாக்கியது.
***
‘இவன் நிஜம்மாவே இந்த கம்பெனிக்கு எம்.டி.யா இல்லை ஏதாவது சினிமாவுக்கு கதை எழுதறவனா... உண்மையே இல்லாத ஒரு விஷயத்துக்கு கற்பனையிலேயே இந்தப் போடு போடுறான்!’ என பிரமித்தாள் வினயா.
அவளை சொடக்கிட்டு அழைத்தவன், “ஏய்... என்னை பார், இந்த விஷப்பரீட்சையே வேண்டாம். உன் வீட்டை விற்று பணத்தை கொடுக்குற வழியைப் பார். இல்லை முடியாதுன்னா... நாங்களே அதை ஏலம் விட்டு வர்ற பணத்துல எங்க பங்குப் போக மிச்சத்தை உன் கையில கொடுத்துடறோம். என்ன சொல்றே?” என்று அதிகாரமாய் கேட்டான்.
விஷ்ணு ஏதோ கதைப் போல சொல்லிக் கொண்டிருக்கிறான் என மனதில் அதனை சரியாக ஏற்றாமல் அமர்ந்திருந்தவள் அவன் மீண்டும் வீட்டை விற்பதை பற்றிப் பேச்செடுக்கவும் கோபமானாள்.
‘என்னது வீட்டை விற்கணுமா? அது வெறும் வீடா என்ன... என் அப்பா, அம்மாவின் அன்பு சின்னமாச்சே. அதைப் போய் எத்தனை சுலபமா வித்துடு வித்துடுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றான் இவன். அம்மாவோட ஆசையை நிறைவேத்த அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டினார்.
இப்படி அஞ்சு வருஷத்துல விக்கறதுக்கா அவர் அன்னிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டார்? அந்த வீடு ஒண்ணு தான் இப்போ எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல். வாரம் ஒரு முறை வீட்டுக்குப் போய் மாடி ரூம்ல தங்கி, அவங்க பயன்படுத்துன கட்டில்லயும், சோபாவிலயும் படுக்கும் போது அப்படியே அவங்க மடியில படுக்குற மாதிரி ஒரு அமைதி கிடைக்குமே.
அதை வித்துட்டா... அந்த அமைதிக்கும், நிம்மதிக்கும் நான் எங்கே போவேன்? என் அப்பா, அம்மாவோட வாசமும், நினைவுகளும், எங்க குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோசமும், உணர்வுகளும் அங்கே மட்டும் தானே உயிர்ப்போட இருக்கு. அதையும் அழித்து விடுவதா?
நோ... முடியாது. இதையெல்லாம் பார்த்தால் நிச்சயமா என் அப்பா, அம்மாவோட ஆத்மா சாந்தியடையாது. இவன் என்ன சொன்னாலும் வீட்டை மட்டும் விற்கவே கூடாது. அதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, இல்லை... இவன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் சரி... அதுக்கு மட்டும் கண்டிப்பாக நான் ஒத்துக்கவே மாட்டேன்!’ என உறுதியாக நிமிர்ந்தாள்.
“என்ன? பதிலே சொல்லாம யோசனையெல்லாம் பலமா இருக்கு. உனக்கு இதை தவிர வேற வழியில்லை... நீ அந்த வீட்டை விற்று...”
தனக்குள் சிந்தனையில் உழன்றவளை விஷ்ணு கலைத்துப் பேச ஆரம்பிக்கவும் வேகமாக அவனை இடைமறித்தாள் வினயா.
“சாரி சார்... என்னை மன்னிச்சுடுங்க. அந்த வீட்டை என்னால் கண்டிப்பா விற்க முடியாது. அதைத் தவிர வேற ஏதாவது இருந்தால் சொல்லுங்க!”
அவளின் உறுதியான குரலில் சில நொடிகள் திகைத்தவன், “என்ன?” என்க, “என்னால் வீட்டை விற்க முடியாது!” என்றாள் வினயா மீண்டும் அழுத்தத்துடன்.
“ஏன்?” என்று புருவங்களை சுருக்கினான் நாயகன்.
“அது என் அப்பா, அம்மா வாழ்ந்த வீடு. என் அம்மாவோட ஆசைக்காக அப்பா அதை ரொம்ப கஷ்டப்பட்டு கட்டினார். அவங்களோட அன்புச்சின்னம் அது, அதை விக்கறதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்!” என்றாள் நாயகி தீர்மானமாக.
அவளை வியப்புடன் பார்த்தவன், “உனக்கு ரொம்ப தைரியம் தான்... உட்கார்!” என்றான் அதுவரை அவள் நின்றுக் கொண்டிருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தவனாக.
“பரவாயில்லை நான் நிக்கறேன், உங்க கண்டிஷன்ஸ் என்னன்னு சொல்லுங்க!”
“உன்னை உட்கார தான் சொன்னேன், அநாவசியமா வேற எதுவும் பேசச் சொல்லலை!” என்றான் விஷ்ணு அழுத்தமாக.
சின்ன சலிப்புடன் அமர்ந்தவளை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவன், “உன் பெயர் என்ன சொன்னே? வினயாவா...” என்று தீவிரமாக கேட்டான்.
“ம்... ஆமாம் சார்!”
“இப்போ என்ன செஞ்சிட்டிருக்க? படிக்கிறியா இல்லை... ஏதாவது ஜாப்ல இருக்கியா?” என கேட்கும் பொழுதே அவள் சரியாக வட்டிப் பணத்தை கட்டி விடுவேன் என்று கூறியது அவன் நினைவுகளில் மின்னலடித்தது.
விஷ்ணுவின் நினைப்புபடியே, “பி.இ. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடிச்சிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் புரோக்ராமரா இருக்கேன் சார். என் சம்பளத்தில் கண்டிப்பாக மாசாமாசம் வட்டி கட்டிடுவேன்!” என்றவள் அவன் இதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வான் என்கிற எதிர்பார்ப்புடன் தன்னுடைய நிறுவனத்தின் பெயரையும் அவசரமாக கூறினாள்.
அவனோ சற்றே அலட்சியமாய் உதட்டை பிதுக்கி, “இதை நான் எப்படி நம்புவது?” என்றான் பெண்ணின் சொல்லில் நம்பிக்கையற்று.
திகைத்தவள், “இல்லை... நான் நீங்க நினைக்கிற மாதிரி ஆள் இல்லை. நிஜமாவே வட்டி எல்லாம் சரியா கட்டிடுவேன். ஆங்... அப்புறம் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்.
எனக்காக அவங்க காசு, பணம் நிறைய சேர்த்து வைக்காம போயிருந்திருக்கலாம். ஆனா எனக்குள்ள நேர்மையையும், நிறைய தன்னம்பிக்கையையும் பெரிய சொத்தா கொடுத்துட்டு தான் போயிருக்காங்க!” என்று வேகமாக பேசிய வினயாவின் குரலில் அவளையும் மீறி லேசான ரோஷம் எட்டிப் பார்த்தது.
அதை உணர்ந்தப் பிறகும், “எனக்கு உன் மேலே அந்த நம்பிக்கை வர வேண்டுமே!” என்று விஷ்ணு அலட்சியமாக கூறியதில் அவளையும் மீறி இயலாமையில் முகம் சிவந்து அவமானத்தில் கண்கள் கலங்கப் பார்க்க, கை முஷ்டியை இறுக்கி அதை தடுக்க முயல்பவளை கண்கள் இடுங்கப் பார்த்தவன் யோசனையானான்.
“வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம்...” என்று வார்த்தைகளை முடிக்காமல் அவன் இழுத்து நிறுத்த, சிறு நம்பிக்கையுடன் நிமிர்ந்து அவனுடைய முகத்தை பார்த்தாள் வினயா.
“உன் வேலையை ரிசைன் பண்ணிட்டு, நீ இங்கே வந்து என் கம்பெனியில ஜாயின் பண்ணிடு!” என்று அடுத்த குண்டைப் போட்டான்.
‘வேலையை விடுவதா... இவனுக்கென்ன பைத்தியமா? அது எவ்வளவு பெரிய கம்பெனி? அவனவன் அங்கே வேலை கிடைக்காதான்னு தலைகீழா நின்னு பல முயற்சிகள் செய்யறான். என் அதிர்ஷ்டம்... கேம்பஸ்ல எனக்கு சுலபமா கிடைச்சது. அதைப் போய் இந்த முட்டாள் விடச் சொல்றான். என் கேரியருக்கு அங்கே வொர்க் பண்றது எவ்வளவு பெரிய வாய்ப்பு...
வந்ததிலிருந்து இவனுக்கு இதே வேலையாகப் போயிற்று, எதையாவது சொல்லி நம்மள டென்ஷன் படுத்தி நம்மோட பிரஸ்ஸரை குறையாம பார்த்துக்கறான்!’ என்று எரிச்சலுடன் தனக்குள் விஷ்ணுவை சரமாறியாக அர்ச்சித்தாள் வினயா.
***
மறுநாள் காலை விஷ்ணு வந்தவுடன், “இந்தாங்க சார்!” என்று அவன் முன் பணக் கவரை நீட்டினாள் வினயா.
அதைப் புரியாமல் பார்த்தவன், “என்ன இது?” என்று கேட்டான்.
“வட்டிப் பணம்!”
“அதை ஏன் என்கிட்ட தர்றே?”
“அப்புறம்... வட்டி கட்டணுமில்லை!” என்றாள் குழப்பத்துடன்.
“கட்டு... யார் வேணாம்னு சொன்னா. எங்கே கடன் வாங்கி இருக்கோமோ அங்கே தானே வட்டி கட்டணும். நீ என்ன என்கிட்ட வந்து தர்றே?” என்றவன் கேலியாக சிரிக்கவும் தான் அவளுக்கு பல்ப் எரிந்தது.
“ஓ... பைனான்ஸ்ல கட்டச் சொல்றீங்களா?”
“ஹப்பா... லைட் எரிஞ்சுடுச்சுடா!”
“ப்ச்... சார்!” என்று முறைக்க முயன்று தோற்றவள், “லஞ்ச் ப்ரேக்ல போய் கட்டிடறேன்!” என்று புன்னகையுடன் நகர்ந்தாள்.
“அவ்வளவு அவசரமா ஓடிப் போய் கட்டணும்னு இல்லை. நிதானமா அந்தப்பக்கம் போகும் போது கட்டு. சன்டே கூட பைனான்ஸ் இருக்கும்!”
தன்போக்கில் சொல்லிக் கொண்டே தன்னிடத்திற்கு செல்பவனின் குரலில் அவனை வியப்பாய் திரும்பிப் பார்த்தவள் ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக அவன் காணும் முன்னே அவசரமாய் தன் பார்வையை மாற்றிக்கொண்டாள்.
‘என்னை ஒரே ஆங்கிள்ல பார்க்கறதை வைச்சு நான் இப்படித்தான்னு உன்னால முடிவு பண்ண முடியாது!’
அன்று அவன் சொன்னதை எண்ணி தனக்குள் சிரித்தபடி அமர்ந்தவள் தன் வேலையை தொடர்ந்தாள்.
***
எரிச்சலில் முகத்தை சுருக்கியவள், “சார்... இதற்குமேல் இதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. நீங்கள் இப்படி பேசியதிலிருந்தே தெரிகிறது, ஹாஸ்டல் வார்டனை பார்க்க வேண்டுமென்று நீங்கள் சொன்னதெல்லாம் வெறும் பொய்யாக தான் இருக்கும். என்னிடம் இப்படி பேசுவதற்காகவே பொய் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கீங்க நீங்க, நான் கிளம்பறேன்!” என விசுக்கென்று எழுந்தாள்.இந்தப் பதற்றத்திலும் தான் பொய் சொல்லி அழைத்து வந்ததை கண்டுப்பிடித்த அவளின் புத்திக் கூர்மையை ரசித்தான் விஷ்ணு.
“ஆமாம்... பொய் சொல்லி நான் தான் தப்பு பண்ணிட்டேன். ஸோ... நானே உன்னை ஹாஸ்டலில் ட்ராப் பண்ணிடறேன்!” என்று தானும் உடன் கிளம்ப முயன்றான்.
“ஒண்ணும் தேவையில்லை!” என்று விறைப்பாக நடந்தாள் வினயா.
அவளை பின்தொடர்ந்தபடி, “வேண்டாம் வினயா... எதிர்பேச்சு பேசாமல் நான் சொல்றதை கேள், காரில் ஏறு!” என்று வற்புறுத்தினான் நாயகன்.
“முடியாது சார்... நீங்க சொல்ற எல்லாவற்றையும் நான் கேட்கனும்னு அவசியமில்லை!”
“சரி, எல்லாவற்றையும் இப்பவே கேட்க வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமா மாற்றிக்கலாம். இப்போ என் கூட வான்னு சொல்றதை மட்டும் உடனடியா கேளு!”
வார்த்தைகளில் ஜாலம் காட்டுபவனின் பேச்சில் அயர்ந்துப் போய் நின்றுவிட்ட வினயாவிற்கு சோர்வுடன் சற்றே சலிப்பும் வந்துவிட்டது. ச்சே... இவனோட இதே தொல்லையாய் போச்சு, எதையாவது சொல்லி நம்மை கடுப்பாக்கி செய்ய வைச்சிடறான்.
“இப்போ என்னை என்ன செய்ய சொல்றீங்க?” என்றாள் உர்ரென்று.
“சிம்பிள்... என்னோட வந்துக் காரில் ஏறு!”
தன் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஏறி அமர்ந்தவளை பார்வையிட்டபடி காரை கிளப்பியவன், “அப்பா... கொஞ்ச நேரத்தில் எப்படி பயமுறுத்தி விட்டாய்? ஐயோ... இவள் நமக்கு கிடைக்கவே மாட்டாளான்னு தவிச்சுப் போயிட்டேன். ஆனால் இப்போ கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வந்துடுச்சு, முயற்சி செய்யற விதத்துல செஞ்சா இந்த அம்மிக்கல்லை அசைச்சுடலாம்!” என்று சிரித்தான் விஷ்ணு.
அவனை உஷ்ணப் பார்வை பார்த்தவள் கோபமாக முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“நீ ரொம்ப சாதுன்னு நினைச்சேன் வினயா. ஆனா உனக்கு என்ன இப்படி கோபம் வருது? நினைக்கவே பயமா இருக்கு!” என்று போலியாக மிரண்டான்.
கடுப்பானவள், “கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக ரோட்டைப் பார்த்து காரை ஓட்டறீங்களா?” என வெடுக்கென்று கத்தினாள்.
‘கடவுளே... என்ன இப்படி அட்டகாசம் செய்யறான்? எனக்கு பொறுமையை கொடு!’ என்று வெளிப்புறம் பார்வையை வீசினாள்.
விடுதி வந்ததும் அதற்காகவே காத்திருந்தவள் போல் வேகமாக இறங்கி விறுவிறுவென்று வினயா உள்ளே செல்ல முயல, அவளை விரைந்து தடுத்தான் நாயகன்.
“வினயா... குட்நைட் சொல்லாம போறே!” என்று உரக்க கூவினான்.
அவசரமாக சுற்றிலும் பார்வையை செலுத்திவிட்டு திரும்பி அவனை முறைத்தவள், “வெரி பேட் நைட்!” என்றாள் பல்லிடுக்கில்.
“அது என்னவோ உண்மை தான். என்னிக்கு உன்னை காதலிக்கறேன்னு தெரிஞ்சதோ... அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வராமல் நீதான் கனவில் வந்து என்னை ரொம்ப தொந்திரவு செய்யறே. ஸோ... எனக்கு பேட் நைட் தான்!” என்று கண்சிமிட்டி சிரித்தவாறு காரை கிளப்பினான் விஷ்ணு.
அவனுடைய அதிரடி ஆட்டத்தில் மலைத்து நின்றதென்னவோ வினயா தான்.
***
சாயந்திரம் ஐந்து மணி ஆனதோ இல்லையோ, “கிளம்பலாமா வினயா?” என்ற கேள்வியுடன் அவள் முன்னே தயாராக வந்து நின்றான் விஷ்ணு.விதியே என்று தனக்குள் நொந்துக் கொண்டவள் அவனுடன் அமைதியாக கிளம்பிச் சென்றாள்.
அவன்புறம் தலையை திருப்பாமல் சாலையிலேயே கண்களை பதித்து பயணம் செய்தவள் கார் ஓரிடத்தில் நின்று ஹாரன் அடிக்கவும் அந்த இடத்தை நன்றாக கவனித்துப் பார்த்தாள்.
ஒரு பெரிய கேட்டின் வாயிலில் இவர்கள் காத்திருக்க, காவலாளி ஒருவன் அவசரமாக கேட்டை திறந்துவிட்டு விஷ்ணுவிற்கு ஒரு சல்யூட் வைத்தான்.
நெற்றிச் சுருங்க, ‘இந்த இடத்தை பார்த்தால் ஹோட்டல் மாதிரி ஒன்றும் தெரியலையே...’ என்றவள் ஐயத்துடன் பார்த்திருக்கும் பொழுதே கார் உள்ளே செல்ல, கண் முன்னே அழகிய பெரிய பங்களா காட்சிக்கு கிடைத்தது.
அதைப் பார்த்ததுமே பெண்ணின் இதயம் திக்கென்று அதிர்ந்துப் போனது.
‘இது என்ன இவன் வீடா இல்லை கெஸ்ட் அவுஸா? இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வரான்? நான் சந்தேகப்பட்ட மாதிரியே பொய் சொல்லி இருக்கான் பாரு!’ என்று மனம் பதறும் பொழுதே பார்த்த சினிமாக்களும், படித்த கதைகளும் அவளுக்குள் கண்டதையும் விதைத்து பீதியுறச் செய்ய கலங்கிப் போனாள்.
தன்னவளின் பாவனைகளையே நமட்டை கடித்து சிறு புன்சிரிப்புடன் ரசித்துப் பார்த்திருந்தவன் அவளின் கற்பனை எல்லை மீறுவதை அவளுடைய மிரண்ட கண்களிலும், நெற்றியில் முத்து முத்தாகப் பூத்த வியர்வையிலும் கண்டு ஓங்கி அதட்டினான்.
“ஏய்... ச்சீய்... போதும் நிறுத்து, ரொம்ப ஓவராக கற்பனை பண்ணாதே!” என்று அவளை முறைத்தவன், “இது என் வீடு தான். காலைல இருந்து போட்டிருக்குற டிரஸ்ஸோட பங்ஷனுக்கு போனால் நல்லா இருக்காது, அதனால் டிரஸ் சேஞ் பண்ணனும் தான் இங்கே வந்தேன். இறங்கு கீழே!” என்றான்.
“ஏன்? நீங்க வீட்டுக்கு வந்து தயாராகிட்டு, அப்புறம் கம்பெனிக்கு வந்து என்னை கூட்டிட்டு வந்திருக்கலாமில்லை!” என்றாள் உர்ரென்று.
“அட ராமா... இங்கே வந்து டிரஸ் சேஞ் பண்ணி, மறுபடியும் கம்பெனிக்கு வந்து உன்னை ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போகனும்னா ரொம்ப லேட் ஆகிடும். ரெண்டும் ரெண்டு கார்னர், அதனால் தான் போற வழி தானேன்னு உன்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்!” என்று விளக்கம் கொடுத்தான்.
அவள் இன்னமும் யோசனையில் இருக்க, “சரி, உள்ளே வா!” என்றழைத்தான்..
“நான் வரலை... நீங்க போய் மாத்திட்டு வாங்க. நான் கார்லயே வெயிட் பண்றேன்!”
இவளை... என தனக்குள் அலுத்துக் கொண்டவன், “அட... பரவாயில்லை வா வினயா. நான் ஒண்ணும் உள்ளே போனவுடனே கதவை சாற்றி உன்னை பெட்ரூமுக்கு தூக்கிட்டு போயிட மாட்டேன்!” என்றான் கிண்டலாக.
அயர்ந்துப் போனவளோ, ‘இதற்கு என்ன பதில் சொல்வது? பேச்சைப் பார்...’ என்று கோபமாக தனக்குள் பொருமிக் கொண்டிருந்த நேரம் அன்னம்மா வெளியே வந்தார்.
“என்ன தம்பி? கார் வந்து நின்றச் சத்தம் கேட்டுச்சு. வீட்டுக்குள் வராம இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க?”
“அதுவா அன்னம்மா... என்னோட பி.ஏ.வும் என் கூட கார்ல வந்திருக்காங்க. உள்ளே வாங்கன்னு கூப்பிட்டா... நீங்க மட்டும் தனியா இருக்குற வீட்டுக்குள்ள நான் வரமாட்டேன்னு சொல்லி அடம் பண்ணிட்டிருக்காங்க!” என்று அவளை மாட்டி விட்டான் விஷ்ணு.
மானத்தை வாங்குகிறானே என தனக்குள் புலம்பியபடி, “அப்படியெல்லாம் இல்லீங்க!” என்று வேகமாக கீழே இறங்கினாள் வினயா.
“அட என்னம்மா நீ... தம்பி ஆபிஸ்லயே வேலை செய்யறே. உனக்கு அவரோட குணம் பற்றி ஒண்ணும் தெரியாதா? எங்க தம்பி சொக்கத் தங்கம் தெரிஞ்சிக்கோ!” என்று இவள் எதுவும் கேட்காமலே விஷ்ணுவுக்கு கேரெக்டர் சர்டிபிக்கேட் கொடுத்தார் அன்னம்மா.
“அதற்கில்லை... நான் வரலைன்னா சார் டக்குன்னு டிரஸ் மாற்றிட்டு வந்துடுவார். நான் உள்ளே வந்தா என்னை கவனிக்கனுமேன்னு வேற லேட்டாகும். அது தான்...” என மென்று விழுங்கினாள் வினயா.
‘யப்பா... என்ன நடிப்புடா சாமி?’ என்றவளை கள்ளச்சிரிப்புடன் பார்த்திருந்தான் நாயகன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா... நான் எதற்கு இருக்கிறேன்? நீ வா!” என்றவாறு வீட்டிற்குள் சென்றார் அன்னம்மா.
ம்க்கும்... என்று லேசாக தொண்டையை செறுமிப் பெண்ணை தன் முகம் காணச் செய்தவன், “இனி வேற வழியில்லை, வா போகலாம்!” என்று கண்களை சிமிட்டி அவளிடம் வெற்றிப் புன்னகையை வீசினான்.
‘இவனை ஜெயிக்கவே முடியாதா?’ என்று பல்லைக் கடித்தபடி வீட்டினுள் நுழைந்தாள் வினயா.

No comments:
Post a Comment