Aayiram Kaalam Oar Varam - Deepa Babu

 


ஆயிரம் காலம் ஓர் வரம்

(இணையத்தில் வெளிவராத நேரடிப் புத்தகம்)

கதைக்கரு


ஆயிரம் காலம் என்பது வரமா, சாபமா? அவரவர் வாழ்க்கை அமைவதை பொறுத்தும், அமைத்துக் கொள்வதை பொறுத்தும் அவை மாறுபட கூடும். உண்மை தான், இக்கதை மாந்தர்களின் வாழ்வு எவ்வாறு வரமாக மாறுகிறது என்பதை வாசித்துப் பார்க்க தயார் ஆகுங்கள்.

**********

கதையிலிருந்து சிறு துளிகள்


தோப்புக்கு நடுவே இருக்கின்ற வீடு என்பதால் பல்வேறு பறவைகளின் இரைச்சல் ஒலியை உள்வாங்கியபடி தான் அங்கே விடியல் தொடங்கியது.

மகள் அதிகாலை நான்கு மணி அளவில் ஒரு முறை எழுந்து தன்னிடம் பசியை போக்கிக் கொண்டு இருந்ததால், எந்த ஒரு சத்தத்துக்கும் அசைய முடியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் நிரஞ்சனி.

சில நிமிடங்களில் சாய்சரண் லேசாக புரண்டு படுத்தவன், மெல்ல தூக்கம் கலைந்து இமைகளை திறந்தான். புதிதாக தெரிந்த இடத்தை சன்ன மிரட்சியுடன் விழிகளை சுழற்றிப் பார்த்தவன், அருகில் தாயும், தங்கையும் இருப்பதை கண்டு சிறிது ஆசுவாசமானான்.

எழுந்து அமர்ந்தவனின் செவிகளில் ஏதோ பறவையின் கீச்சுக்குரல் உரக்க கேட்கவும் தலையை திருப்பியவன், ஜன்னல் வழியே தெரிந்த காட்சியில் இதழ் மலர்ந்தான்.

வெளியே சற்று தள்ளி இருந்த கொய்யா மரத்தில், கிளி ஒன்று அமர்ந்து பழத்தை கொத்தி தின்று கொண்டு இருந்தது. இவன் ஆவலாக எழுந்து அருகில் சென்று வேடிக்கை பார்த்தான்.

இமை சிமிட்டாது அங்கேயே பார்வையை பதித்து இருந்தவனின் கவனத்தை கதவு திறக்கும் ஒலி கலைக்கவும், கண்களை திருப்பினான்.

அறையில் இருந்து வெளியே வந்தவனோ, தன் எதிரே நிற்கும் குழந்தையை கண்டு திகைத்து விழித்தான்.

‘யார் இந்தப் பையன்?’

ஒன்றும் புரியாமல் பிள்ளையையே அவன் குழப்பத்துடன் பார்த்து நிற்க, திடீரென்று அங்கே தோன்றிய புதிய மனிதனை கண்டு சிறுவனும் மிரண்டுப் போனான்.

சுளித்த புருவங்களுடன் தன்னை நெருங்கி வருபவனை கண்டதும், குழந்தை அச்சத்தில் பதறி வேகமாக தன் தாயிடம் ஓடினான்.

அவனை தொடர்ந்து விழிகளை செலுத்தியவனை அறையின் ஒருபுறம் மெத்தையில் படுத்து இருக்கும் இளம்பெண்ணும், கைக்குழந்தையும் மேலும் திடுக்கிட செய்தார்கள்.

‘என்ன நடக்குது இந்த வீட்டுல?’

தன் கவனத்திற்கே வராமல் அவ்வீட்டில் புதிதாக முளைத்து இருப்பவர்களை சிறு கடுப்புடன் அவன் நோக்கும் பொழுதே, “ம்மா...” என நிரஞ்சனியை போட்டு உலுக்கத் தொடங்கினான் சாய்.

இன்னமும் தீராத உடல் சோர்விலும், சரியான தூக்கம் இன்மையாலும் பெண்ணால் எழவே முடியவில்லை. லேசாக முனகினாளே தவிர்த்து மகனுக்கு சிறிதும் அசைந்துக் கொடுக்காமல் அவள் இருக்க, பையனோ தங்களையே உற்றுப் பார்த்து இருப்பவனை கண்டு அஞ்சி நடுங்கினான்.

“ம்மா...” என கண் இரண்டிலும் நீரைத் தேக்கி, சன்ன அழுகையோடு அவள் முகத்தில் அடித்து எழுப்ப முயன்றான் குழந்தை.

சுளீரென்று விழுந்த அடியில் உறக்கம் முழுதாக கலையாத போதும், முயன்று இமைகளை சிரமப்பட்டு பிரித்தாள் நிரு.

“எ... என்னடா தம்பி? கொஞ்... கொஞ்சம் அம்மாவை தூங்க விடேன், ரொம்ப டயர்டா... இருக்கு, ப்ளீஸ்... பாப்பா... எழுந்துட்டா முடியாது!” என நிறுத்தி நிறுத்தி குளறலாகப் பேசினாள் அவள்.

பையனுக்கு அன்னையின் கவலை எல்லாம் புரியவில்லை, அறையின் மற்றொரு மூலையில் நின்று இருந்து தங்களை முகம் சுருக்கிப் பார்த்து இருப்பவன் பெரும் பீதியை கிளப்பினான்.

பெற்றவள் திரும்பவும் உறக்கத்தை தொடரவும் செய்வது அறியாது தவித்தப் பிள்ளை, அவளை எழுப்புவது ஒன்றே குறியாக மீண்டும் தன் கைவரிசையை காட்டினான்.

இம்முறை தொடர்ந்து விழும் அடிகளை பொறுத்துக் கொள்ள இயலாமல் வெடுக்கென்று எழுந்தவள், “டேய்... என்னடா பண்ற? அம்மா தான் கொஞ்ச நேரம் தூங்குறேன்னு சொல்றேன் இல்ல...” என்று தன் உபாதையில் உழன்றவளாக மகனிடம் கத்தினாள் நிரஞ்சனி.

சாய்சரணுக்கோ தாயின் வசவுகளை விட அங்கே இருப்பவன் தான் பிரச்சனையாக தெரிந்தான். அதனால் அவளின் கைப்பிடித்து இழுத்து, அவனை விரல் நீட்டிக் காண்பித்தான்.

“என்ன இப்போ உனக்கு?”

தன்னிடம் எரிந்து விழுபவளின் மடியில் விரைவாக ஏறி அமர்ந்து கொண்டு, “ம்மா...” என மறுபடியும் அழைத்து புதியவனை சுட்டிக் காட்டினான்.

“ப்ச்... என்னடா இருக்கு அங்கே?” என நெரித்த புருவங்களுடன் அத்திசையை நோக்கியவள், நெஞ்சம் அதிர கண்களை அகற்றினாள்.

பேச்சு, மூச்சின்றி தன்னையே இமைக்காது வெறித்தவளின் செயலில் கடுப்பான ஆடவனோ, சுள்ளென்று கிளம்பிய எரிச்சலுடன் மடமடவென நடந்து வாசல் கதவை திறந்து வெளியேறினான்.

அப்பொழுதே சிறிது நிம்மதியான குழந்தை, தாயின் மார்பில் அமைதியாக தலை சாய்த்துக் கொண்டான். அதனுள் இருந்த அவளின் இருதயமோ இடைவிடாது மத்தளமாக முழங்கி இருந்தது.

‘யார் அது? பூட்டின வீட்டுக்குள்ள எப்படி வந்தான்? முகமே தெரியாத அளவுக்கு தலையிலயும், தாடையிலயும் முள்ளுப் புதரா முடியை வேற அவ்வளவு வளர்த்து வச்சு இருக்கான்... ஆளைப் பார்த்த உடனே ஒரு நிமிஷம் என் ஹார்ட்டே நின்னு போச்சு!’

ஒற்றைக் கையால் தன் நெஞ்சை அழுத்திக் கொண்டவளுக்கு, ‘முதல்ல அந்தாளு யாரு? எவ்வளவு நேரமா இங்கே இருக்கானோ தெரியலையே... அவன் வசதிக்கு உள்ள வந்துப் போறான்னா... என்னால எப்படி இந்த வீட்டுல பிள்ளைங்களை வச்சுக்கிட்டு பாதுகாப்பா தங்க முடியும்?’ என்கிற பதற்றம் எழுந்தது.

**********

“உனக்கு என் கூட விளையாட பிடிக்குமா, பிடிக்காதா... அதை மட்டும் சொல்லு..” என்றான் தேவ் அழுத்தமாக.

சாய் சம்மதமாக மேலும் கீழும் ஆட்டியதில் மகிழ்ந்துப் போனவன், “குட் பாய்டா செல்லம் நீ..” என ஆசையாக கன்னத்தில் முத்தம் வைத்து, “அப்போ..” என தொடங்கும் போது வெளியே குழந்தையை அழைக்கும் சத்தம் கேட்டது.

“ம்மா... கூப்பி...”

நிரு தான் அவனை தேடிக் கொண்டு இருந்தாள்.

“தம்பி.. சாய் குட்டி...”

‘ம்மா...’ என அவன் குரல் கொடுக்க விளையவும், அவசரமாக அவனது உதடுகளை பொத்தி தடுத்து விட்டான் ஆடவன்.

அதோடு, “ஷ்... கீப் க்வைட், அம்மா கூட ஹைட் அன்ட் சீக் விளையாடலாம்!” என கண் சிமிட்டியதும், பிள்ளை குதூகலமாகி விட்டான்.

“எங்கே போனான் இவன்? சாய்...” என நிரு உரக்க அழைக்க,

“எதுக்குப் பிள்ளையை ஏலம் விட்டுட்டு இருக்க..?” என்று அடுத்து சுபத்ராவும் வந்து விட்டார்.

“ம்மா... கொஞ்சம் முன்னாடி கூட இங்கே தான் விளையாடிட்டு இருந்தான், இப்போ காணோம்..” என சுற்றும்முற்றும் பார்வையை வீசினாள்.

“டோர் லாக்ல தான் இருக்கு, வீட்டுக்குள்ள தான் இருப்பான். பாத்ரூம்ல இருக்கானா பாரு..”

“ஹான்...” என நாயகி அங்கே விரைய, சின்னவளை திரும்பிப் பார்த்த சுபா தானும் பையனை அழைத்துப் பார்த்தார்.

“சாய் குட்டி... எங்கே இருக்கீங்க?”

“ம்மா... ரூம்லயும் இல்ல...” என பதற்றமாக வந்தாள் நிரு.

இவருக்கும் குழப்பம் வர, “மாடிக்கு எல்லாம் போவானா, என்ன..?” என்று சந்தேகமாக கேட்டபடி படிகளில் ஏறினார்.

“அவன் அப்படிலாம் போக மாட்டானே ம்மா..”

“இது வரைக்கும் இல்லைன்னாலும் இன்னிக்கு போய் இருக்கலாம் இல்ல... சில நேரம் குழந்தைங்க மனம் போன போக்குல நடந்துக்குவாங்க, பார்த்துடுவோம்..”

சுபா முடிக்கும் முன்னே, சத்தமாக குரல் கொடுத்தபடி அவரை விடவும் விரைவாக தடதடவென படிகளை கடந்து மேலேறினாள் பெண், இதயத்தின் படபடப்பு வேறு கூடிக்கொண்டே சென்றது.

இங்கே அறைக்குள், “இன்னமும் இந்த செல்லக்குட்டியை கண்டுபிடிக்க முடியாம தேடறாங்க... புவர் ஃபெலோஸ்..” என தேவ் தன் நெற்றி முட்டி சிரித்ததில் பாலகனும் உற்சாகமாக அவன் கழுத்தை கட்டிக் கொண்டு நகைத்தான்.

“ஷ்... சத்தம் போட கூடாது!” என்று எச்சரிக்கவும், வேகமாக தலை அசைத்துக் கொண்டான் அவன்.

“ம்மா...” என பரிதவித்த நிரஞ்சனியின் விழிகளில் கண்ணீர் பெருக துவங்கவும், சுபத்ரா அதட்டினார்.

“சும்மா டென்ஷன் ஆகக்கூடாது... இங்கே தான் எங்கேயாவது இருப்பான்..”

அவருக்கும் கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் அவளுக்கு தைரியம் சொல்லியபடி அங்குமிங்கும் விழிகளை விரட்டிய நேரம், தன்னால் மகனின் அறைக் கதவின் மீது சிந்தனையுடன் அவரது பார்வை தேங்கியது.

‘ஒரு வேளை தேவ் ரூம்ல இருக்கானா...’ என்ற ஐயம் உதித்தவுடன் அவசரமாக கீழே இறங்கினார்.

“என்னம்மா?”

தன் பின்னால் கேள்வி எழுப்பியவாறு வந்தவளிடம் வாய் மீது விரல் வைத்துக் காண்பித்து விட்டு, “தேவ்...” என கதவை தட்டினார்.

சில நொடிகளை கரைத்து விட்டே திறந்தவன், “என்ன?” என்றான் இறுக்கமாக.

அறையினுள் பார்வையை அலைய விட்டவர், “சாய் குட்டி எங்கே?” என தீவிரமாக விசாரித்தார்.

“என்னை கேட்டா..?” என்றவன் அலட்சியமாக தோள்களை குலுக்கியதிலேயே பிள்ளை அவனிடம் தான் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டார் அவர்.

வெடுக்கென்று அவனை தள்ளி விட்டு உள்ளே செல்ல, “ம்மா...” என்ற மகனின் அதட்டல் எல்லாம் அவரிடம் செல்லுபடி ஆகவில்லை.

கதவின் பின்னே இரகசியமாக பதுங்கி இருந்த பாலகனை கண்டு கொண்டவர், ஆடவனை பலமாக முறைத்து வைத்தார்.

அவன் எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொள்ள, “உள்ள வா... உன் பையன் இங்கே தான் ஹைட் அன்ட் சீக் விளையாடிட்டு இருக்கான்!” என்று மைந்தனை பார்த்தவாறு பல்லைக் கடித்தார் சுபத்ரா.

பாய்ந்து வந்த நிரு முதலில் அவனை அள்ளி அணைத்து விட்டு பின் விலக்கி, “இங்கே இருந்தவன் ஏன்டா அம்மா கூப்பிட்டப்போ அமைதியா இருந்த..?” என கோபமாக கேட்டாள்.

“குழந்தையை அதட்டி என்ன பிரயோஜனம்..? இங்கிருக்க மலை மாடு பேச்சை கேட்டு விளையாட்டுக்கு தேடறோம்னு நினைச்சு இருப்பான் அவன்..”

தன்னிரு கரங்களையும் பின்பக்கம் கோர்த்தபடி, விறைப்பாக நின்று இருந்தான் தேவ்.

“அறிவில்லைடா உனக்கு... குழந்தையை டென்ஷனா தேடி அலைய விடறது எல்லாம் என்ன பழக்கம்? தோளுக்கு மேலே வளர்ந்து நிக்கறியேன்னு பார்க்கறேன், இல்லைன்னா இந்நேரம் அறைஞ்சு கன்னத்தை வீங்க வச்சு இருப்பேன்!”

அவன் இதழ்களை சுழித்துக் கொள்ள, “ஹால்ல விளையாடிட்டு இருந்தவன் எப்படிடா இங்கே வந்தான்?” என்று கடுப்புடன் வினவினார்.

நாயகன் தன் அழுத்தத்தையே பதிலாக தர, “தேவ்...” என அதட்டினார் சுபா.

அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறுவது தான் நாகரீகம் என கருதி, கையில் மகனை சுமந்தபடி வாசல் நோக்கி நகர்ந்த நிரஞ்சனியின் முதுகில் தேவ்வின் கடுஞ்சொற்கள் வந்து மோதி அவளை பதறச் செய்தது.

**********


No comments:

Post a Comment

Most Popular