Yennai Theriyuma 5 - Deepababu

 


*5*


"சரி அம்மா... நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் தங்கை பெண் மணியை இவர்கள் வண்டியை விட்டு விட்டு வந்தார்களே அங்கே அழைத்து சென்று அந்த பசங்களை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்து எச்சரித்து வருகிறேன்!" என்று லட்சுமியிடம் அனுமதி கேட்டான் ஜெய்சங்கர்.
சிந்தனையுடன் அவளை திரும்பி பார்த்தவர், "ஆனால் தம்பி அவர்களை மிரட்ட போய் இந்தப் பிள்ளைகளுக்கு எதுவும் ஆபத்தாக முடிந்து விட போகிறது!" என்று பயந்தார் அவர்.

"ஒன்றும் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்படியே பயந்து விட்டாலும் அவனுக்கு குளிர் விட்டுப் போய்விடும் பிறகு எதையும் செய்ய துணிவான். நான் மிரட்டவில்லை எச்சரிக்க மட்டும் தான் போகிறேன் அதுவும் அவன் வீட்டாரோடு சென்று!" என்றவன் வேதாவிடம் திரும்பி, அவனுடைய முகவரியை கேட்டான்.

"அவன் வீடு எனக்கு தெரியும், வாங்கப் போகலாம்!" என வேகமாக எழுந்தாள் மணி.

அவளை ஒரு மாதிரி பார்த்தவன் லட்சுமியிடம் விடைப்பெற்றுக் கிளம்பினான்.

வண்டி தெருமுனையை கடந்ததும், "ஆமாம்... கிளம்பும்பொழுது எதற்கு என்னை அப்படிப் பார்த்தீர்கள்?" என்றாள் மணி சந்தேகமாக.

"அதுவா... ஊரிலிருக்கும் இளைஞர்களின் முகவரியெல்லாம் உனக்கு தெளிவாக தெரியும் போலிருக்கிறது என்று பார்த்தேன்!"

"ஹேய்... ஹலோ... இதுவே வேதா காண்பித்து தான் எனக்கு தெரியும். மற்றபடி ஊரிலிருப்பவர்கள் அனைவரின் முகவரியும் எனக்கு தெரியாது!" என்றாள் கடுகடுவென்று.

இதழில் குறுஞ்சிரிப்பு மலர மேலே ஏதும் வாதிடாமல் வண்டியை ஓட்டினான் ஜெய்.

"இதோ இந்த வீடு தான் நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!" என்று அவன் தோளை தட்டினாள்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவன் விவரம் கூறி அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு மணி குறிப்பிட்ட இடத்திற்கு கிளம்பினான்.

அவர்கள் கண் பார்வையில் விழாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தப் பையனுடைய பெற்றோரை மறைந்திருந்து கவனிக்கச் சொன்னவன், இவன் மட்டும் மணியுடன் தன் வண்டியில் அவர்களை நெருங்கி இறங்கினான்.

குடிபோதையில் முழுதாக ஏறிவிட்ட வெறியுடன் பெண்களுக்காக காத்திருந்த இருவரும் இவர்களை கண்டு வேகமாக எழுந்தனர்.

"ஏய்... எப்படியும் வண்டியை எடுக்க வருவாள் என்று சொன்னேனே பார்த்தாயா வந்து விட்டாள். எங்கே அவளை காணோம்? ஓ... அடிக்க ஆள் கூட்டி வந்திருக்கிறாயா?" என்று அருகிலிருந்த பாட்டிலை எடுத்து உடைத்துவிட்டு அவன் ஜெய்யை நெருங்கவும், உண்மையிலேயே தைரியம் மிகுந்த மணியே அவன் கண்களில் தெரிந்த வெறியை கண்டு ஒருகணம் நடுங்கித்தான் போனாள்.

அவன் ஜெர்னலிஸ்ட், பாதுகாப்பு கலையை நிச்சயம் கற்று வைத்திருப்பான் என்று தெரிந்திருந்தாலும் தன் பங்குக்கு தானும் ஏதாவது உதவுவோம் என தாக்குவதற்கு தயாராய் நின்றவள் ஜெய்யின் அதிரடியில் இமைக்க மறந்து வியந்து நின்றாள்.

'ஹேய்... இப்பொழுது இவன் என்ன செய்தான்? கையை, காலை என ஒன்றையுமே தூக்கித் தாக்கவில்லையே... விரல்களை மட்டும் நீட்டி அவனுடைய இடுப்பில் திருகினான் அவன் சுருண்டு விழுந்து விட்டானே!'

"வாவ்... நீங்கள் இந்தியன் தாத்தாவா?" என்றாள் பெண் குதூகலமாக.

"என்ன?" என்றவன் விழிக்க, "ஓ... ஐ மீன் வர்மக் கலையா?" என ஆவலாகப் பார்த்தாள்.

ஆமாம்... என்றவன் மற்றவனையும் அடுத்து கீழே சுருண்டு விழ வைத்தான்.

கைகளை தூசு தட்டியவன் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, "ம்... இப்பொழுது உனக்கு என்ன பிரச்சினை? எதற்கு அவளிடம் இப்படி வெறி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறாய்?" என்று நிதானமாக கேட்டான்.

உச்சக்கட்ட வெறியில் இருந்தவன், "ஏய்... என் விஷயத்தில் தலையிடாதே... உன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவேன்!" என எகிறினான்.

"ஓஹோ... எங்கள் வீட்டுப் பெண்ணை நாசம் பண்ணி துடிக்கத் துடிக்க கொல்வீர்கள். நாங்கள் தலையிடாமல் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக வேடிக்கைப் பார்க்க வேண்டுமா?" என்று சீறியவன்,

"ஏன்டா? இப்படி வெறிப்பிடித்து நீங்கள் அலைவதற்கு பெயரெல்லாம் காதலா... அந்த வார்த்தையோட புனிதத்தையே கேவலப்படுத்துகிறீர்கள்.

நீ மனமாற காதலித்திருந்தாலே அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு கட்டாயம் மதிப்பளித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவளிடம் தவறாக நடக்க முயன்ற உன்னை விலக்கி விட்டாளே என்று எந்த நியாயத்தில் அவளை பழி வாங்க சுற்றிக் கொண்டிருக்கிறாய்.

நீ யோக்கியமானவனாக இருந்திருந்திருந்தால் அவள் விலகியதும் உன் வீட்டில் விஷயத்தை சொல்லி அவர்கள் வீட்டில் பேச முயன்றிருக்க வேண்டும்.

இல்லை... எனக்கு அதற்கு துணிவும், விருப்பமும் கிடையாதென்றால்... அவளை விட்டு நல்ல ஆண்பிள்ளையா ஒதுங்கி இருக்கனும். உலகத்தில் பெண்களா இல்லை?

நீ உருப்படியாக ஒரு வேலைக்கு சென்று உன்னால் உன் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்துக் காட்டினால் பெண்கள் தன்னால் வரப் போகிறார்கள்.

அப்படி இல்லையென்றால் உன் பெற்றோரின் மூலம் விருப்பான பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொள். அதை விட்டுவிட்டு இப்படி செய்வதால் யாருக்குடா லாபம் உனக்கா?" என்று நிறுத்தி அவனை இளக்காரமாகப் பார்த்தான் ஜெய்.

அவன் பதிலின்றி முறைக்க, "இங்கே பார்... உன் பழி வெறிக்கு அது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் அவ்வளவு தான். போலீஸில் மாட்டும்பொழுது மகனே எல்லாம் தெரியும், அப்படியே தப்பித்து விட்டாய் என்றாலும் ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் ஒரு உயிரை துடிக்கக் கொன்ற பாவம் உன்னை சும்மா விடாது உன்னை சேர்ந்தவர்களையும் சேர்த்துதான்.

உடன்பிறப்போ, பெற்றவர்களோ என்றில்லை... நாளை உனக்கு என்று உருவாகும் குடும்பத்தினரையும் சேர்த்துதான் அது துரத்தும். இதற்கு கூட்டாளிகள் வேற... தூ..." என்று காறித் துப்பியவன் பின் கேலியாக உதட்டை வளைத்துப் பேசினான்.

"ஏன்டா டேய்... உங்கள் இரண்டு பேரிடமும் எனக்கு ஒரு சந்தேகம். இவன் ஒரு பெண்ணை கொல்லலாம் என்றவுடனே வரிந்து கட்டிக்கொண்டு திட்டம்போட்டு கிளம்பி வந்து விட்டாயே... இது தான் சிறந்த நட்பு என்று எண்ணிக் கொண்டாயா?

ஆபத்திலிருப்பவனுக்கு உதவுபவன் தான் நண்பன் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்னவென்று சரியாக தெரியுமா?

நண்பனுக்கு பிரச்சினை எனும்பொழுது உதவுவது மட்டுமில்லை, நண்பனே பிரச்சினையை உருவாக்க முயல்கிறான் என்கிற பொழுது அதிலிருந்து அவனை வெளிக்கொண்டு வந்து நல்வழிப்படுத்த வேண்டும் அது தான் சிறந்த நட்பு.

இப்படிப்பட்ட உங்கள் இருவரின் நட்பும் நாளை எதில் சென்று முடிவடையும் தெரியுமா? ஏற்கனவே கொலை செய்த தெனாவட்டும், இளக்காரமும் உங்கள் இருவர் மனதிலுமே அழுத்தமாகப் படிந்திருக்கும்.

அது எதிர்காலத்தில் உங்களையே ஒருவரையொருவர் மாற்றிக் கொன்று விடுகிற வரை கூட சென்று நிறுத்தும். அவ்வளவு தான்... இதுவே உங்கள் மண்டையில் ஏறியதோ இல்லையோ தெரியவில்லை, இதற்குமேல் சொன்னால் அட்டர் வேஸ்ட் தான்!" என்றவன் தன் மொபைலை எடுத்து அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்தான்.

ஜெய் பேசப் பேச போதையும், வெறியும் சற்று இறங்கி மரமாய் உணர்வற்று அமர்ந்திருந்தவர்கள் அவன் போட்டோ எடுக்கவும் திடுக்கிட்டார்கள்.

"இப்பொழுது எதற்கு போட்டோ எடுக்கிறாய்?" என்றான் திகைப்புடன்.

"சொல்கிறேன்!" என்று பாக்கெட்டில் மொபைலை வைத்தவன், "இனி அந்தப் பெண் வேதாவுக்கும், இவளுக்கும் உங்களால் எதிர்காலத்தில் எந்த ஒரு தொந்திரவும் ஏற்படக் கூடாது.

இந்த போட்டோ அதற்காகதான், காவல் நிலையத்தில் உங்கள் இருவர் மேலும் பாதுகாப்பு கருதி புகார் ஒன்றைக் கொடுக்கப் போகிறோம். இப்பொழுது நடவடிக்கை எடுக்கவில்லை எச்சரிக்கை புகார் மட்டும் தான்.

ஆனால் ஜாக்கிரதை... நான் மீடியாவில் உள்ளவன் பெண்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் தான் இத்தோடு விடுகிறேன். இதை மதிக்காமல் தவறாக ஏதும் முயற்சித்தீர்கள் என்றால் வெளியே தலைக்காட்ட முடியாமல் செய்து விடுவேன்.

பி கேர்ஃபுல்!" என்று எச்சரித்தவன் அவன் பெற்றோரை அருகில் வரும்படி கையாட்டினான்.

அவர்களை கண்டதும் அதிர்ச்சியில் மிச்சமிருந்த போதையும் இறங்கிவிட, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக தவித்தார்கள் அந்த இளைஞர்கள்.

"நீ அந்த மெக்கானிக்குக்கு திரும்ப போன் செய், அரைமணி நேரம் ஆகப் போகிறது. அவனை எங்கே இன்னும் காணோம்?" என்று மணியை ஏவினான் ஜெய்.

இன்னமும் முழுவதுமாக அவனுடைய பிரமிப்பிலிருந்து வெளி வராதவள் பொம்மையென தலையாட்டினாள்.

நெற்றியை சுருக்கியவன், 'என்ன ரியாக்ஷனே சரியில்லையே...?' என்று யோசித்தபடி அவள் வண்டியிடம் சென்றான்.

"இன்னும் பத்து நிமிடங்களில் மினி டோரோடு வந்து விடுகிறார்களாம், வாடகைக்கு கிடைக்க தாமதமாகி விட்டதாம்!" என்று அவனிடம் வந்து நின்றாள்.

ம்... என்று தலையசைத்தவனை அவள் வைத்தக் கண் வாங்காமல் பார்க்க, அவனுக்குள் எச்சரிக்கை அலாரம் அடித்தது.

"என்ன செய்கிறாய் நீ?" என்று அவள் கண் முன்னே சொடக்கிட்டான் ஜெய்.

இமைகளை சிமிட்டியவள், "உங்களை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு போல்டாகவும், சாதுர்யமாகவும் இந்த விஷயத்தை ஹேன்டில் செய்கிறீர்கள். ரியலி கிரேட்... பெயருக்கேற்றார் போல் ஹீரோ மாதிரியே நடந்துக் கொள்கிறீர்கள்.

உண்மையில் எனக்கு ஜெய்சங்கரையும் அவருடைய படங்களையும் ரொம்பவும் பிடிக்கும்!" என்று கண்கள் மின்ன வேகமாக பேசியவளை அவன் நக்கலாக பார்த்து வைக்க, விரைவாக முக பாவனையை மாற்றினாள் மணி.

"அதற்காக... அதற்காக தவறாக எல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பிரேவ்னஸ்ஸுக்கும், பேச்சிற்கும் தான் நான் விசிறியாகி விட்டேன் என்று சொல்ல வந்தேன் மற்றபடி வேறொன்றும் இல்லை!" என அலட்சியமாய் தோள்களை குலுக்கினாள்.

ஜெய் எதுவும் பேசாமல் தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்க்க, "ஆமாம்... நீங்கள் வர்மக் கலையை முறையாக கற்றுள்ளீர்களா?" என்று பேச்சை மாற்றினாள்.

"ம்... ஆமாம் படிக்கும் வயதிலேயே கராத்தே கற்றுக் கொண்டேன் இருந்தாலும் அதில் முழுத் திருப்தி ஏற்படவில்லை. நம் கை, கால்களை அசைக்க முடியாதபடி எதிரி தடுத்தாலும் விரல்களை கொண்டு அவர்களை தாக்குகிற நம் நாட்டு பாரம்பர்ய வர்மக்கலை மீது மிகவும் ஆர்வம் தோன்றியது. அதனால் அதை முழுவதும் முறையாக பயின்றுக் கொண்டேன்!"

"ஓ... நீங்கள் எப்படி இந்த துறையை தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் பெயர் காரணத்தினாலா..."

"ஏய்... நீ என்ன என்னை பேட்டி எடுக்கிறாயா?"

"எனக்கு இது போல் ஜெர்னலிசத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் என் அப்பா சம்மதித்தாலும் அம்மா வெளியூரெல்லாம் அனுப்ப மாட்டேன் என்று தடுத்து விட்டார்கள்.

அதனால் வேறு வழியில்லாமல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்து மாஸ்டர் டிகிரி செய்தேன். ப்ச்... இப்பொழுது என்ன உங்களை பற்றி சொன்னால் குறைந்தா போய் விடுவீர்கள்?

இல்லை... பெரிய ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி ரகசியம் காக்க வேண்டுமா? சின்னப்பிள்ளை ஆசையாக கேட்கிறதே விவரம் சொல்வோம் என்றில்லாமல் குறுக்கே கேள்வி வேறு கேட்கிறார்!" என மூக்கை சுளித்தாள் மணி.

அதை ரசித்தவன், "நீ சின்னப்பிள்ளை என்றால் இந்த ஊர் உலகம் வேண்டுமானால் நம்பலாம், நான் நம்ப மாட்டேன். காலையில் என்ன அடாவடியாக என் வண்டியில் ஏறினாய்!" என்றான் கேலியாக.

No comments:

Post a Comment

Most Popular