Nanoru Sindhu 18 - Deepababu

 


*18*


"ஆமாம் கமலா... எனக்கும் அதே தான் தோன்றியது, இப்படிப்பட்ட பெற்றவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கருவிலேயே கலைந்து விடலாம் பிறந்து அனுபவிக்கும் வலிகளாவது மிச்சமாகும். ஆனால்... எப்படி தன்னுயிரில் உதித்த உயிர் என்று ஒரு நேரம் இல்லையென்றாலும் இன்னொரு நேரம் மனதிலே துளி பாசம் கூடவா தோன்றாது? ச்சே..." என புலம்பினான் சித்தார்த். 

"ம்... சரி விடு முடிந்து போனதையே கிளறிக் கொண்டிருந்தால் மனதில் ஏற்படும் ரணம் தான் மிச்சம். ஏதோ இந்த அளவுக்கு அவள் வாழும் நிராதரவ வாழ்வு உன் கண்ணில்பட்டு உன்னிடம் வந்து சேர்ந்தாளே அதுவரை எனக்கு சந்தோசம். இனி அவளை உன்னால் மட்டும் தான் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியும். அவள் மனதில் பழைய எண்ணங்கள் எதுவும் தோன்றாமல் நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவளிடம் எந்த பரிதாபமோ, பச்சாதாபமோ நீ காட்டக் கூடாது. எல்லா கணவன் மனைவி போல் இயல்பாக வேலை வாங்கு, சண்டை போடு, ஒன்லி கொஞ்சிக் கொண்டு மட்டும் இருக்காதே!" என்றாள் கமலா.

"ஏய் இரு இரு... நீ அவள் நல்லதற்கு சொல்கிறாயா அல்லது பொறாமையில் சொல்கிறாயா?" என்றான் சந்தேகமாக.

"ஹிஹி... கண்டுப்பிடித்து விட்டாயா?"

"அடிங்க..." என்றவன் கையை ஓங்க, "சரி சரி போதும், எனக்கு ஷிப்டுக்கு நேரமாகிறது நான் கிளம்புகிறேன். இன்னும் த்ரீ டூ ஃபோர் அவர்ஸ்ல அவளுக்கு அரிசி கஞ்சி கொடுத்து மாத்திரையையும் கரெக்டாக கொடுத்து விடு, பை!" என்றவள் ஓடி விட்டாள்.

அவளைக் கண்டு சிரித்தபடி உள்ளே சென்றுப் பார்த்தான். சிந்துவும், தருணும் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர்.

'சரி... தருண் எழுவதற்குள் சமையல் வேலையை முடிப்போம்!' என கிச்சனுள் புகுந்துக் கொண்டான்.

சிந்துவின் உடல்நிலை இரண்டு நாட்களில் குணமாகி விட, முழுவதுமாக தேறிவிட்ட அவள் தருணுக்கு போட்டியாக சித்துவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தாள்.

"அம்மா!"

"என்னடா கண்ணு?"

"நீங்க என்ன இப்பொழுது அப்பா கூட பழம் விட்டு சரியாயிட்டீங்களா? எப்ப பாரு அப்பா பக்கத்திலேயே உட்கார்ந்திட்டிருக்கீங்க?" என்று அவளிடம் கேள்வி எழுப்பினான் தருண்.

அதுவரை சித்துவை உரசியபடி அமர்ந்திருந்த சிந்து வேகமாக விலகியபடி குழந்தையின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்று புரியாமல் திருதிருவென விழித்தாள். பொங்கிய சிரிப்பை இதழ் கடித்து அடக்கிக்கொண்டு ஒன்றும் அறியாப்பிள்ளை போல் தன் வேலையில் கவனமாய் இருந்தான் சித்து.

அவனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என புரிந்துக் கொண்டவள், "அது... ஆமாம், அப்பா கூட நான் பழம் விட்டுட்டேன். அப்புறம் அப்பா தான் சொன்னார் இதுவரை நாம் மூவரும் தனித்தனியாக இருந்தது போதும், இனிமேல் எப்பொழுதும் ஒன்றாக ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தருண்குட்டி சந்தோசமாக இருப்பான் என்று சொன்னார்கள். கரெக்ட் தானே உனக்கு பிடிக்கவில்லையா?" என்று ஒரு வழியாக தடுமாறி சமாளித்தாள்.

"ம்... இல்லை இல்லை, இனிமே இப்படியே இருக்கலாம். அப்பா கூட இருக்கும் போது தான் ரொம்ப ஜாலியா இருக்குல்ல? நாம ரெண்டு பேரும் நல்லா சிரிச்சிக்கிட்டே இருக்கோம், அப்பா நமக்கு நல்ல டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்காங்க. எனக்கு விளையாட நிறைய பொம்மை எல்லாம் வாங்கி தராங்க, புது ஸ்கூல் சூப்பராக இருக்கிறது. அப்புறம் அப்பா கூட ஜாலியா பைக்கில் போகிறோம்!" என்று விழிகள் மின்ன மகிழ்ச்சியுடன் அடுக்கி கொண்டே அவள் கழுத்தை கட்டிக்கொண்டான் குழந்தை.

அவன் பேச்சிலும், குதூகலத்திலும் பழைய வேதனையின் நினைவுகள் கிளர்ந்து எழ, குழந்தையின் மனதில் தான் எத்தனை ஏக்கங்கள் இருந்திருக்கின்றன என்றெண்ணி கண்கள் கலங்கினாள் சிந்து.

அதைக் கவனித்த சித்து அவளை தன் தோளோடு அணைத்து குழந்தையை கண்ஜாடை காட்டி மறுப்பாய் தலையசைத்தான். அவன் எண்ணத்தை உணர்ந்து ஆமோதிப்பாய் தலையசைத்து இவளும் அவனுடைய தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அனைத்துப் பிரச்சினைகளும் சரியாக, அக்குடும்பத்தின் இயல்பான வாழ்க்கை துவங்கியது. காலையில் தருணை கிளப்பி பள்ளியில் விட்டுவிட்டு அதன் பிறகே சைட்டுக்கு போவான் சித்து. மாலை வேளைகளில் வேலை அதிகம் இருந்தால் நடுவில் வந்து பிள்ளையை வீட்டில் விட்டு திரும்ப கிளம்பிவிடுவான்.

சமையலை இருவரும் கலந்தே செய்வர், இருக்கும் மூன்று பேருக்கு நானே செய்கிறேனே என்பாள் அவள். அதற்கு அவன் பதில் வேறுமாதிரி இருக்கும், அதில்லைடா வேலையை பகிர்ந்து செய்வதால் ஒன்றாக நேரம் கழிக்க முடிகிறது. நான் மட்டும் தனியாக ஹாலில் உட்கார்ந்து என்ன செய்யப் போகிறேன் என்பான்.

ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்வில் அழகாக பூக்க, குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்கள் கோவில், பார்க், சினிமா, பீச் என்று எங்கேயாவது வெளியில் அழைத்து செல்வான்.

அவனுடன் இருக்கின்ற நேரத்தை பொக்கிஷமாக உணர்வாள் சிந்து, ஒரே கேலியும் கிண்டலுமாக விளையாடுவதற்கு சமமாக தருணுக்கு இரவு வேளைகளில் நீதிக் கதைகள், பொதுஅறிவை தூண்டும் விதமான விளையாட்டுக்கள் என்று எதையாவது சொல்லிக் கொடுப்பான் அவன்.

தருண் உறங்கியிருக்க சித்துவின் தோள்வளைவில் தலைசாய்த்திருந்தாள் சிந்து, "தூங்கி விட்டீர்களா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"இல்லைம்மா... சொல்லு!" என அவள் கன்னம் வருடினான்.

"தருண் ரொம்ப ஈசியா உங்களை அப்பா என்று கூப்பிட்டு விட்டான், நான் எப்படி அழைப்பது?" என்றாள் கேள்வியாக.

"இதில் என்ன பிரச்சினை? உனக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படியே கூப்பிடு, நமக்குள் என்ன? நீ சித்து என்று அழைத்தாலும் எனக்கு சம்மதமே!" என விரலால் அவளின் காதுமடலை தீண்டிக் கொண்டே சொன்னான்.

"ப்ச்... நீங்கள் வேற... அப்படியெல்லாம் கூப்பிட எனக்கு பிடிக்காது!" என சிணுங்கினாள்.

"ஹேய்... நீ பேசுவதை பார்த்தால் ஏற்கனவே முடிவு செய்து விட்டு பேசுவதுப் போல் தோன்றுகிறது. அதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே என்னிடம் என்ன தயக்கம்?" என்று திரும்பி படுத்து அவள் முகத்தை பார்த்தான்.

அவள் முகத்தில் மெல்லிய தயக்கம் தோன்றுவதை கவனித்தவன், "ஓய்... என்ன?" என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

"இல்லை... வந்து... என் பெற்றோரிடம் மறுக்கப்பட்ட அனைத்து பாசத்தையும் நீங்கள் என்னிடம் காண்பிக்கிறீர்கள். அதற்காக கணவரை அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது அது முறையில்லை. தருணப்பா என்று கூப்பிடட்டுமா? இதனால் குழந்தை மனதிலும் சரி எனக்கும் சரி உங்களிடம் ஒரு நெருக்கமும், உரிமையும் உண்டாகும். மேலும்..." என சற்று நிறுத்தியவள், "எனக்கு முதல் வாழ்க்கை என்று எதுவும் கிடையாது, தருண் உங்களுக்கு பிறந்தவன் தான் என ஒரு திருப்தி கிடைக்கும்!" என்று அவள் முடிக்கும் முன் விழிகளில் மளமளவென்ற நீர் வழிந்தது.

"ஏய்... என்னடா கண்ணம்மா இது? மறுபடியும் மறுபடியும் தேவையில்லாமல் ஏன் அதையே இழுத்து பிடித்துக் கொண்டு வேதனையடைகிறாய்? நீ சொன்னாலும் சொல்லா விட்டாலும் தருண் எனக்கு பிறந்தவன் தான்டா!" என்று அவள் கண்ணீரை துடைத்தவன், அடுத்த நொடி அவள் காதை திருகினான்.

"உனக்கு பழைய வாழ்க்கை என ஒன்று உண்டென்றால், அது நான் வெளி உலகிற்கு கூறும் கதை தான் என்று உன்னிடம் எத்தனை முறை சொல்வது? ம்..." என மிரட்டவும்,

"ஆ... எனக்கு காது வலிக்கிறது!" என்று கொஞ்சினாள் சிந்து.

"ஹஹ்... வலிக்க வேண்டும் என்று தானே திருகுகிறேன், அப்புறம் வலிக்கிறது என்றால்..." என கேலி செய்து சிரித்தான் சித்து.

"ஹும்... போங்கள்!" என்று அவனை குத்தியவளின் கரங்களை பிடித்தவன், "நிஜமாக எழுந்து போக வேண்டுமா?" என கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.

"ம்ஹும்... அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், எப்பொழுதும் என்னுடன் தான் இருக்க வேண்டும்!" என்று அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

உலகிற்காக சிந்துஜாவை பற்றி சித்தார்த்தால் புனையப்பட்ட கதை என்னவென்றால் சிறு வயதில் இருவருமே ஆசிரமத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள் தான். அதாவது சித்து அந்த ஆசிரமத்தில் ஏழு வயது சிறுவனாக இருக்கும் பொழுது பிறந்த குழந்தையாக சிந்து வந்து சேர்ந்தாள். சித்துவிற்கு அக்குழந்தையை மிகவும் பிடித்து விட அக்கறையாய் பாசமாய் அவளை கவனித்து வந்திருக்கிறான். பத்து, பதினொன்று வயதில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் தனி தனி ஆசிரமத்தில் தங்க வைப்பார்கள். அதனால் சிந்துவை விட்டு சித்து பிரிய நேர்ந்து விட்டது, ஆனால் அவள் மேல் உள்ள பாசம் மட்டும் குறையாமல் வளர்ந்துக் கொண்டேயிருந்தது. கல்லூரி முடித்து வேலைக்கு சென்று கொண்டிருந்தவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழ அவளை தேடி சென்றால், அவள் பள்ளி இறுதியாண்டில் இருக்கின்ற பருவப்பெண்ணாக இருந்தாள். சிறு வயதுப் பாசம் இருவருக்கும் வாலிப வயதில் நேசமாக மாற திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான ஒரு மாதத்திலேயே கோவிலுக்கு என்று இவன் வேலைக்கு சென்ற பின் கிளம்பி சென்றவள் வீடு திரும்பவேயில்லை. இவன் தேடாத இடமில்லை வருடங்கள் உருண்டோட நான்கு வருடங்களுக்கு பிறகு அவளை கண்டுப்பிடித்தான் பழைய நினைவுகள் எதுவும் இல்லாதவளாக குழந்தையுடன். பிறகு அவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களிடம் விசாரித்த பொழுது தான் தெரிந்தது கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் கார் ஒன்றில் அடிப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தவள் தான் யாரென்றே தெரியாத நிலையில் இருக்க அவர்களே அவளை பேணி வந்துள்ளனர். அவர்களிடம் நன்றியுரைத்து விட்டு தன் மனைவியையும், குழந்தையையும் இவன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். எதிர்காலத்தில் தங்களுக்கு தெரிந்த வட்டத்தை சேர்ந்த எவரும் அவளைப் பற்றி ஒரு குறை சொல்ல கூடாது, தருண் மனதிலும் அவன் தன் தந்தை இல்லையா என்கிற வருத்தம் எதுவும் தோன்றிவிடக் கூடாது என இக்கதையை சீன் பை சீன் செதுக்கி வடிவமைத்திருந்தான் சித்து. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் இப்பொழுதுள்ள பில்டர்ஸிடம் இன்ஜினியராக வேலை செய்கிறான் என்பதால், ஒருவருக்கும் ஒரு சந்தேகமும் எழவில்லை.

இவ்வாறு தனக்காக அவன் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்வது சித்துவின் மேல் உள்ள நன்மதிப்பையும், அன்பையும் அவளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.

"சிந்தும்மா! இந்த வீக் என்ட் கமலாவின் வீட்டிற்கு சென்று வரலாமா? அவளுடைய மாமியார் வேறு கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள், ஆரம்பத்தில் நீ சற்று விலகி இருந்ததால் உரிமையுடன் மனைவி என்று அழைத்து போய் அறிகமுகப்படுத்த சற்று சங்கடமாக இருந்தது. அதனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், இப்பொழுது தான் நாம் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொண்டோம் இல்லையா? நம் தருணை அழைத்துக் கொண்டு சென்றால் மிகவும் சந்தோசப்படுவார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள், நம் திருமண விவரம் முழுவதும் அவர்களுக்கு தெரியும்!" என்று விளக்கினான் சித்து.

"அதற்கு எதற்கு இத்தனை விளக்கம்? போகலாம் கிளம்பு என்றால் கிளம்ப போகிறேன். ஆனாலும் தத்துவ ஞானிக்கு பெரிதாக பேசிப் பேசியே பழகி விட்டது!" என்று கேலி செய்து சிரித்தாள் சிந்து.

"உன்னை... வர வர உனக்கு வாய் ரொம்ப தான் நீண்டு விட்டது!" என்று பொய்யாய் முறைத்தபடி அவளை சித்து தன்னருகில் இழுக்க, "எவ்வளவு நீளம்? இவ்வளவா?" என விரல்களால் உதட்டை விரித்து காண்பித்து கலகலவென்று நகைத்தாள் அவள்.

ஏற்கனவே நெஞ்சம் முழுவதும் நேசம் வைத்திருந்தவளின் விளையாட்டிலும், குறும்பிலுமாக அவனுடைய மதி மெதுவாக மயங்க துவங்க ஏதோ ஓர் உணர்வின் உந்துதலில் அவளிடம் மெல்ல குனிந்தவன் தன் இதழ் கொண்டு அவள் இதழ்களை மென்மையாக மூடினான்.

No comments:

Post a Comment

Most Popular