*11*
ஒருவித தயக்கத்துடனேயே அவன் வீட்டில் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் சிந்து. தருண் தான் ஆர்வமாக வீடு முழுக்க சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.
அதைக் கண்ட சித்து, "என்ன தலைவரே வீட்டை சுற்றி சுற்றி வருகிறீர்கள்? எதுவும் நிறை குறை உண்டா?" என அவனிடம் குனிந்து கேலியாக கேட்க, ஹாங்... என விழித்த தருண் "நீங்கள் பேசறது எனக்கு புரியலைப்பா?" என்று அழகாக கை விரித்தான்.
கலகலவென்று நகைத்தவன், "அது... நம் வீடு எப்படி இருக்கிறது என்று கேட்டேன்!" என விளக்கினான்.
"ம்... நல்லா தான் இருக்கு. ஆனால் ஏன் ஒன்னுமே இல்லை, கட்டில், பீரோ, சோபா எதுவுமேயில்லை?" என்று யோசனையோடு கேட்டான்.
அவனை தாழ்த்தி மதிப்பிடுவதாக சித்து எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறான் என்ற பதட்டத்தில் தருணை அதட்டினாள் சிந்து.
"தருண் என்ன பழக்கம் இது? இப்படித்தான் பேசுவார்களா?" என லேசாக முறைத்துப் பார்த்தாள்.
"உஷ்... இப்பொழுது எதற்கு குழந்தையை விரட்டுகிறாய்? அவன் மனதில் என் மீது தோன்றியிருக்கின்ற உரிமையை தான் இது காட்டுகிறது. தன் அப்பா என்கிற எண்ணத்தில் கேட்கிறான், இதில் எந்த தவறும் இல்லை. தயவுசெய்து அவனை ஏதாவது அதட்டி எங்களுக்குள் உருவாகும் நெருக்கத்தை கெடுத்து விடாதே... அவனிடம் எதையும் நீ திணிக்க வேண்டாம், அவனியல்பு போல அவன் நடக்கட்டும். ஏதாவது தவறிழைத்தால் நானே சுட்டிக் காட்டுகிறேன்!" என்றான் தீர்மானமாக.
அவள் எதுவும் பேசாமல் தலைக்குனிய, சில நொடிகள் பார்த்தவன் அவளை நெருங்க சிந்துவின் முகத்தில் லேசான மிரட்சி தோன்றியது.
'இது என்ன இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் இப்படி பயப்படுகிறாள்? சரி போக போக தான் சரியாகும். தருண் மாதிரி இருந்தால் கூட நம்பும் விதமாக இவளுக்கும் ஏதாவது கதையை உருவாக்கி அவனைப் போலவே இவளையும் இயல்பாக பழகும்படி செய்து விடலாம்!' என்றெண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது.
"உனக்கும் தருணுக்கும் இடையே நிச்சயம் நான் குறுக்கே வரமாட்டேன். உன்னுடைய அன்பும், கண்டிப்பும் அவசியம் அவனுக்கு தேவை. ஒரு தாயின் வழிகாட்டுதலில் வளரும் குழந்தை கண்டிப்பாக சமுதாயத்தில் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவனாக தான் வளருவான். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை, அதே சமயம் நீ இன்னொரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இனி நாம் மூவரும் ஒரே குடும்பம், இது தான் நம் வாழ்க்கை என்று முடிவாகி விட்டது. அதனால் அதற்கேற்றார் போல் நாம் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். துவக்கத்தில் சற்று சங்கடமாக தான் இருக்கும், ஆனால் மாறுவதற்கு முயல வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டால் அது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். குழந்தை தன் சொந்த தந்தை என்கிற உரிமையில் இயல்பாகி விட்டான். கணவனாக சொல்லவில்லை ஒரே குடும்பத்தின் உறுப்பினன், தோழன் என்று உனக்கு ஏதுவாக நீயே ஏதாவது ஒன்றை முடிவு செய். அது குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் நல்லது என்பதை முக்கியமாக நினைவில் கொள். அவன் வளர வளர நமக்கிடையே இருக்கும் இடைவெளி அவனுடைய மனதை பாதிக்கும்!" என்றவன் விளக்க தயக்கத்துடன் சம்மதமாக தலையசைத்தாள் சிந்து.
"குட் கேர்ள்!" என்று புன்னகையுடன் பாராட்டியவன் அவளிடம் தன் கரத்தை நீட்ட, அவள் தவிப்புடன் தன் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
"ம்... குட்டிபப்பு! அம்மாவை பார்த்தாயா... அவள் இன்னமும் அப்பாவிடம் பழம் விட்டு கை கொடுத்து பிரெண்டாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாள் பார்!" என்று குறும்பாக குழந்தையிடம் புகார் படித்தான் சித்து.
சிந்து அவனை திகைப்புடன் பார்க்க, தருண் அவளுடைய கரத்தை பிடித்திழுத்து தன் புறம் திரும்பச் செய்தவன், "ம்மா... அப்பா பாவம்மா, அவரிடம் பழம் விடுங்கம்மா. இனிமேல் நாம் மூன்று பேரும் ஒன்னா மத்தவங்க மாதிரி ஜாலியாக இருக்கலாம்மா, ப்ளீஸ்..." என்று கெஞ்சினான்.
அவன் விழிகளில் தெரிந்த ஏக்கம் மனதை பாதிக்க விரல்களை இறுக்கியவள் பின் தயங்கியபடி மெல்ல சித்துவிடம் கரம் நீட்டினாள்.
சிந்துவின் கரம் பற்றி மென்மையாக அழுத்திய சித்து, "தாங்க்ஸ்!" என்று முறுவலித்தான்.
அவள் எந்த உணர்வும் இன்றி விழிகளை தாழ்த்த, "சரி தருண்குட்டி மணி ஒன்றாக போகிறது. நாம் பருப்பு சாதம் செய்து வத்தல் பொரிக்கலாமா?" என்று அவனை தூக்கி கொண்டான்.
"இல்லை... நான்... நானே சமைத்து விடுகிறேனே!" என தடுமாறியபடி வேகமாக முன் வந்தாள் சிந்து.
"நோ... நாட் அலவ்ட். இந்த வீட்டில் உரிமையெடுத்து பழகுகிறவர்கள் மட்டும் தான் கிச்சனுக்கெல்லாம் சென்று சமைக்கலாம் மற்றவர்களை நான் உள்ளே விட மாட்டேன். என் செல்லக்குட்டி என்னுடன் நல்ல பிரெண்டாகி விட்டான், ஸோ நாங்கள் இரண்டு பேர் மட்டும் தான் சமைப்போம். வாடா கண்ணா நாம் போகலாம்!" என்று கிச்சனுக்குள் நுழைந்தனர் இருவரும்.
"அச்சோ அப்பா... எனக்கு சமைக்கத் தெரியாதே!" என்று மேடை இரகசியமாக கை விரித்து கவலைப்பட்டான் தருண்.
வாய் விட்டு சிரித்த சித்து, "டோன்ட் வொர்ரி... அப்பாவுக்கும் சூப்பராகவெல்லாம் சமைக்க தெரியாது. எப்படியோ அதையும் இதையும் போட்டு ஏதோ ஒரு சமையலை சுமாராக சாப்பிடும் அளவுக்கு ரெடி செய்து விடுவேன். உனக்கும் அதை சொல்லித் தருகிறேன். இப்பொழுது உனக்கு முதல் பாடம் அப்பா செய்வதை கவனமாக பார்க்க வேண்டும், பிறகு அப்பாவின் சமையலை டேஸ்ட் பார்த்து உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று சொல்ல வேண்டும் ஓகே?" என கேட்டவனிடம், ஓகே என தலைசரித்து சிரித்தான் தருண்.
அவன் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு மூக்குரசி பின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் சித்து. அவனும் குஷியாக பதில் முத்தமிட்டு அவன் கழுத்தை கட்டிக்கொள்ள சிந்து அவர்களின் நெருக்கத்தை வெறித்துப் பார்த்தாள்.
அவர்கள் இருவரும் கதையளந்தபடி தங்கள் உலகத்தில் மூழ்க, சில கணங்கள் நின்ற இடத்திலேயே வேரூன்றி இருந்தவளின் மனதை வெறுமை சூழ கால்கள் தன் போக்கில் தனிமை தேடி சிட் அவுட்டுக்கு சென்றது.
அடுத்த அரை மணியில் பேசிக்கொண்டே பருப்பு சாதம் செய்து வத்தல் பொரித்தவன் அனைத்தையும் பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு குழந்தையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.
அவனிடம் ஒரு சின்ன கிண்ணத்தில் வத்தலை போட்டுக் கொடுத்து, "இதை சாப்பிட்டுக் கொண்டு இரு, நான் போய் அம்மாவை அழைத்து வருகிறேன்!" என்று அவளை தேடிச் சென்றான்.
சுவற்றில் சாய்ந்து இலக்கில்லாமல் வானில் தெரிந்த சூன்யத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.
'குழந்தையை எப்படியோ சமாளித்து மகிழ்ச்சியடைய வைத்தாயிற்று, இவளை எப்படி மீட்பது? இழந்ததையே எண்ணி நோகுகிறவளிடம் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது?' என்ற வருத்தம் மேலோங்கியது.
மெல்ல நெருங்கி, "சிந்துஜா!" என்று அழைத்தான்.
அவளிடம் எந்த அசைவுமில்லை, பெருமூச்செரிந்தவன் மென்மையாக அவள் கரம்பற்றி, "சிந்து!" என்று லேசாக உலுக்கினான்.
திடுக்கிட்டு விழித்தவள் தன்னியல்பு போல வேகமாக அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டாள். அதை கண்டுக்கொள்ளாதவன் சாப்பிடலாம் வா என அழைத்துச் சென்றான்.
அதே வெறுமை நிறைந்த முகத்துடன் இயந்திரம் போல் வந்து அமர்ந்தவளுக்கு தட்டில் சாதத்தை வைத்து நீட்டினான் சித்து,, தட்டை கை நீட்டி வாங்க அவள் கூசுவது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
நிதானமாய் அவளை அளந்தவன் காது மடல் சிவந்திருக்க தலைக் குனிந்திருந்தவளின் கரத்தை மெல்ல முன்னிழுத்து தட்டை திணித்தான்.
சட்டென்று கன்னங்களில் விழிநீர் உருண்டோட தட்டை பிடித்திருந்தவளின் கரங்கள் நடுங்க கண்டவன், "ஷ்... சிந்தும்மா... ப்ச்... என்ன இது?" என்று அவள் கைகளிருந்த தட்டை வாங்கி கீழே வைத்தான்.
நாசி விரிய இதழ்களை கடித்து நீரை விழுங்கப் போராடும் அவளின் உணர்வுப் போராட்டத்தை கண்டு செய்வதறியாது தடுமாறினான் சித்தார்த்.
"அம்மா! நாம் தான் அப்பா கூடவே ஒன்றாக வந்துட்டோம் இல்லை. அப்புறம் ஏன் இன்னும் முன்ன மாதிரியே அழறீங்க?" என்று கேள்வி எழுப்பினான் குழந்தை.
சடாரென்று வேகமாக எழுந்தவள், "சா... சாரி... எனக்கு பசிக்கவில்லை, நீங்களும் குழந்தையும் சாப்பிடுங்கள். நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்!" என்று மொழிந்துவிட்டு விரைந்து பழைய இடத்துக்கு சென்றாள்.
தருண் அவளையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்திருக்க தன்னை சுதாரித்தவன், "செல்லக்குட்டி... அம்மாவுக்கு பசிக்கவில்லையாம், அப்புறம் சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டாள். முதலில் நீ சாப்பிடு, நான் உனக்கு ஊட்டி விடுகிறேன்!" என்று அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தான்.
"ஆனால் ஏன் அம்மா அழறாங்க?"
பெரியவர்களின் உணர்வுகளை குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது என்று குழம்பியவன், "அவளுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போல..." என்று முடிக்காமல் பூசி மெழுகினான்.
"பழைய ஞாபகம்னா?"
"அது..." என்று இழுத்து என்ன கதை கூறி சமாளிப்பது என்றவன் யோசிக்க, "பாட்டி, தாத்தாவை நினைத்தா?" என அவனே எடுத்து கொடுக்க, வசதியாக அதைப் பிடித்துக் கொண்டு ஆமாம் சாமி போட்டான் சித்து.
"ஆனால் பாட்டி, தாத்தாவை பற்றியெல்லாம் இதுவரை அம்மா பேசியதேயில்லையே!" என்றான் அவன் குழப்பத்துடன்.
"அது... என்னிடம் பேசியிருக்கிறாள்!"
"ஓ... சரி!" என்று தலையாட்டியபடி வேறெந்த கேள்வியும் கேட்காமல் சமர்த்தாக சாப்பிட ஆரம்பித்தான் தருண்.
சித்துவிற்கு தான் மண்டையை காய்ந்தது, 'ஆமாம்... நான் ஏன் இந்த திசையில் யோசிக்கவில்லை, அவளுடைய பெற்றோர் என்ன ஆனார்கள்? கணவனை இழந்தவள் என்றாலும் பெற்றோரிடம் சென்றிருக்கலாமே... ஏன் இப்படி நிராதரவாக குழந்தையை வைத்துக் கொண்டு தனிமையில் சிரமப்பட வேண்டும்?' என்று குழம்பினான்.
"அப்பா போதும்பா!" என்று குழந்தை அவன் கரம் பிடித்து தடுக்க, நினைவிலிருந்து மீண்டவன், "இன்னும் கொஞ்சம் மட்டும்டா கண்ணு!" என கொஞ்சியவனை கண்டு தருண் சிரித்தான்.
"அப்பா! இங்கே பாருங்க என் வயிறு எவ்வளவு பெரிசாயிடுச்சின்னு இடமேயில்லை..." என்று அவன் அணிந்திருந்த பனியனை தூக்கி காண்பித்து தன் சின்ன இதழ்களை பிதுக்கினான்.
முகம் கனிய புன்னகைத்தவன், "சரி போதும் வா, அப்புறம் பசிக்கும் பொழுது சாப்பிடு!" என்று அவன் வாயை துடைத்து ஹாலில் இருந்த சேரில் அமர்த்தி விட்டு, டிவியில் கார்டூனை போட்டு விட்டான்.
"சரி நீ இதை பார்த்துக் கொண்டிரு, அம்மாவும் நானும் சாப்பிட்டு வந்து விடுகிறோம்!"
சிட்அவுட்டில் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சிந்து, ஆள் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள்.
நிலையில் சாய்ந்தபடி சித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவனை கண்டதும் வேகமாக எழுந்து நின்றாள்.
நேராக நிமிர்ந்தவன், "குழந்தை சாப்பிட்டு விட்டான், நீயும் நானும் தான் சாப்பிட வேண்டும். உனக்கு இப்பொழுதாவது பசி வந்ததா? இல்லையென்றால் நான் தருணுடன் டிவி பார்த்து கொண்டிருக்கிறேன் உனக்கு பசிக்கும் பொழுது சொல்லு சாப்பிடலாம்!" என்றபடி உள்ளே திரும்ப,
'இவர் இன்னும் சாப்பிடவில்லையா? தன்னால் ஏற்பட்ட இன்னல்கள் போதாதென்று இவர் பட்டினி வேறு கிடக்க வேண்டுமா?' என்று அதிர்ந்தவள், அவனை தடுத்தாள்.
"ஒரு நிமிடம்... நாம் இப்பொழுதே சாப்பிடலாம்!" என்று அவனிடம் வந்தாள்.
'அப்படி வாங்க மேடம் வழிக்கு!' என உள்ளுக்குள் புன்னகைத்தபடி சாப்பிட அமர்ந்தான்.

No comments:
Post a Comment