Alaipayum Oru Kili - Deepababu

 




அலைபாயும் ஒரு கிளி

கதைக்கரு

தான் கடந்து வந்தப் பாதையால் லேசான மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் தன் கணவனிடமும், அவன் தங்கையிடமும் ஆவேஷமாக வெளிக் காட்டுகிறாள். கிட்டத்தட்ட எதிர்மறை குணம் கொண்டு தங்களை வாட்டி எடுக்கும் மனைவியின் பிரச்சனை புரிந்து, நாயகன் எவ்வாறு அவளை மீட்டு எடுக்கிறான் என்பதே கதை.


***********


கதையிலிருந்து சிறு துளிகள்



"உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?"

தன் எதிரில் நின்றவள் எழுப்பிய கேள்வியில் திடுக்கிட்டு விழித்தான் ஷ்ரவண்.

"ஆங்..."

தனக்குள் ஏற்படும் சலிப்பை அவள் சிரமப்பட்டு மறைப்பது, அவளுடைய மாறும் முக பாவனையில் நொடிக்கு குறைவாக என்றாலும் தெளிவாக இவன் பார்வையில் விழுந்தது.

"உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டேன்!"

தற்பொழுது மனம் முழுவதும் சிலந்தி வலைப் பின்னலிட, "இல்லை..." என்று குழப்பத்துடன் பதில் அளித்தான் ஷ்ரவண்.

"ஓ..." என்று நெற்றியை சுருக்கியபடி சில நொடிகள் அவனை காக்க வைத்தவள், "திருமணம் ஆகவில்லை சரி, வேறு... நீங்கள் எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறீர்களா?" என்று அடுத்த கேள்வியை எழுப்பினாள்.

இம்முறை ஷ்ரவணின் பொறுமை அவனை விட்டுப் புயல் வேகத்தில் பறந்துச் செல்லத் துடிக்க, மனதில் பரவுகின்ற எரிச்சலை முகத்திற்குப் பரவாமல் தடுத்தபடி, "இல்லை..." என்று மீண்டும் பிறந்தப் பதிலை சற்றே இறுக்கத்துடன் கூறினான் அவன்.

ம்ஹும்... என்றபடி கைகளை குறுக்காக கட்டிக் கொண்டவள், "அப்பொழுது... உங்கள் வாழ்க்கையிலும் சரி, மனதிலும் சரி... இதுவரை எந்தப் பெண்ணும் இல்லை. சரியா?" என்று அவன் விழிகளை நேருக்கு நேராக ஊடுருவிப் பார்த்தாள்.

அவளுக்கு எந்தவித பதிலையும் அளிக்காது தானும் அவளை நேர் பார்வையாய் வெறித்தவன், "இப்பொழுது உங்களுக்கு எதற்கு இந்த டீடெயில்ஸ் எல்லாம்?" என்று எதிர்கேள்வி கேட்டான்.

"ம்... என்ன செய்வது? நீங்கள் வேறு எனக்கு ஏதாவது உதவ வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்கள். உங்கள் ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று தான் எனக்கு தேவையான உதவியாக, உங்களிடம் இருந்து எதைப் பெறலாம் என தீவிரமாக விசாரித்துக் கொண்டு இருக்கிறேன். என்ன தான் நீங்களாக எனக்கு உதவ முன் வந்தாலும், என்னால் உங்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்பட்டு விடக் கூடாது பாருங்கள்!"

இவள் குரலில் ஏளனம் கலந்து இருக்கிறதோ என்றவன் ஆராய்ச்சியில் ஈடுபடும் பொழுதே, அதை தடை செய்யும் விதமாக தனது வார்த்தைகளை அவனிடம் தெளிவாகவும், நிதானமாகவும் வெளியிட்டு அவனை உறைய வைத்தாள் அவள்.

"ஓகே... நான் என்னுடைய எதிர்பார்ப்பை சொல்லி விடுகிறேன். அடுத்து வர இருக்கின்ற முகூர்த்தத்தில் அது நாளை என்றாலும் சரி, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..." என்று அலட்சியமாக தோள்களை குலுக்கியவள் அவனை நேராக நோக்கி,

"நீங்கள் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்!" என்றாள் அழுத்தமாக.

அவளை உச்சக்கட்ட அதிர்ச்சியோடு ஏறிட்டவன், "என்ன?" என்று வினவியது கூட வெறும் காற்றாக தான் வெளியில் வந்தது.

********************

"ஆமாம்... நீ இந்த அளவிற்கு அவசரப்பட்டு இருக்க கூடாது தான். அட்லீஸ்ட்... என்னிடமாவது இந்தப் பிரச்சனையை சொல்லி இருந்தாய் என்றால், நானாவது அவர்களிடம் சுமூகமாகப் பேசி எப்படியாவது இதை தடுத்து நிறுத்தி இருப்பேன்!" என்றாள் சுவாதி.

"ப்ச்... முடிந்துப் போனதைப் பற்றி ஆலோசித்து என்ன செய்வது?" என்று எழுந்து குறுக்கும், நெடுக்கும் நடந்தான் ஷ்ரவண்.

"எஸ்... யூ ஆர் ரைட். இனி முடிந்துப் போனதை பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. முதலில் போய் உன் பெண்டாட்டியை சமாதானப் படுத்துகின்ற வேலையைப் பார்!"

"என்ன? எனக்கு வேறு வேலை இல்லை பார்!" என்று முகத்தை சுளித்தான் அவன்.

"நிச்சயமாக... இது தான் இப்பொழுது உனக்கு இருக்கும் முக்கிய வேலை. சாரி டு ஸே திஸ்... நீ எனக்காக தான் அண்ணியின் கட்டாயத்தால் இந்த அவசர திருமணத்தை செய்துக் கொண்டாய்.

ஆனால் ஒன்றை தடுக்க முடியாது அதில் பங்கு கொண்டு விட்டோம் என்றால், அதில் உருவாகும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள தான் வேண்டும்.

அடுத்தவர் மீது சுலபமாக பழியை போட்டு விட்டு தப்பி ஓட பார்க்க கூடாது. ஸோ... கோபித்துக் கொண்டு இருக்கும் அவர்களை அப்படியே விட்டு விடாமல், நம் வழிக்கு இழுக்க முயற்சி செய்!"

"என்ன முயற்சி செய்வதோ போ... அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா?"

*********************

மாலை தேநீர் தருகின்ற சாக்கில் அண்ணனின் அறைக்குள் நுழைந்தவள் வார்த்தைகள் ஏதுமின்றி அவனை முறைத்தபடி நிற்க, ஷ்ரவண் குழம்பிப் போனான்.

"என்ன பாப்பா?" என்றான் புரியாமல்.

"வாய் நிறைய வக்கணையாக பாப்பா என்று மட்டும் அழைக்கிறாயே, என் தலையில் என்னென்ன பொறுப்பை நான் சுமக்க முடியும் என்கிற யோசனை கொஞ்சமாவது உன் புத்தியில் இருக்க வேண்டாமா?" என்றாள் கட்டுக்கு அடங்காத எரிச்சலுடன்.

அண்ணன் என்கின்ற மரியாதை இன்றி அவள் புத்தியை குறிப்பிட்டுப் பேசவுமே, அவள் விரும்பத் தகாத செயலை பெரிய அளவில் ஏதோ செய்து விட்டோம் என்பது அவனது மூளையில் உறைக்க, என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

"ரொம்பவும் போட்டுக் கசக்காதே... நானே சொல்கிறேன்!" என்றாள் சுவாதி கடுப்புடன்.

அண்ணன் தன்னை பரிதாபமாகப் பார்ப்பது புரிந்தாலும், தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் அவள்.

"மதியம் வீட்டிற்குள் வந்ததும் நீ பாட்டிற்கு உன் அறையில் புகுந்துக் கொண்டாயே... அவர்களை எங்கே தங்க வைப்பது என்று யோசிக்க வேண்டாமா!" என வேகமாக ஆரம்பித்து, மெதுவாக முடிக்கும் தங்கையின் கூற்றை கேட்டவனுக்கு லேசாய் விஷயம் புரிய, மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.

**********************

ஒரு வழியாக வரவேற்பிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து, அடுத்த இரு தினங்களில் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர் ஷ்ரவண் வீட்டினர்.

மணமகனுக்கு என அடர் சிகப்பும், தங்க நிறமும் கலந்த ஷெர்வானியும், மணமகளுக்கு அதே நிறத்தில் பிரைடல் எம்ப்ராய்டரி ஒர்க் அதிகம் செய்யப்பட்ட லெஹங்காவும் தேர்ந்து எடுத்து இருந்தாள் சுவாதி.

இருவருக்கும் அவரவர் உடைகளின் அளவு சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க என்று அணிந்து வரச் சொல்ல, கடமையே என தனக்கானதை அணிந்து வந்த ஷ்ரவண், சோபாவில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர, சுவாதியின் அறையில் இருந்து முகத்தில் விவரிக்க இயலாத உணர்வுடனும், பெரும் தயக்கத்துடனும் தலையை குனிந்தபடி வெளியே வந்தாள் ஶ்ரீநிதி.

"வாவ்... என்னுடைய அண்ணி அப்படியே வானில் இருந்து இறங்கிய அப்ஸரஸ் தான். செம சூப்பராக இருக்கிறீர்கள் அண்ணி!" என்று ஆவலுடன் அவள் அருகில் சென்று கரங்களை பற்றிக் கொண்டாள் சுவாதி.

மெல்லிய கூச்சத்துடன் அவளிடம் விழிகளை உயர்த்தியவள், "தாங்க்ஸ்!" என்று முணுமுணுத்தாள்.

"ம்... பாருடாப்பா மருமகனே... என்னுடைய மகளின் அழகிற்கு அவள் அணிந்து இருக்கும் உடைப் பொருத்தமாக இருக்கிறது தானே?" என்று ஷ்ரவணை சீண்டினார் கற்பகம்.

அவருக்காக வேண்டா வெறுப்பாக இமைகளை உயர்த்திய அவனுக்கு, தன்னெதிரே அவனுடைய பார்வையை கற்பனையில் எண்ணி மெல்லிய படபடப்புடன்,

தாவணியின் முனையை விரல்களால் பற்றியபடி கன்னக் கதுப்புகள் இரண்டும் லேசான சிவப்பை பூசி இருக்க, புதிதாய் பூத்த நாணத்தில் துடிக்கும் ரோஜா இதழ்களுடன் ஆளை அசரடிக்கும் அழகில், தலை நிமிராது நின்று இருந்தவள் ஒரு கணம் மனதை மயக்கவே செய்தாள்.

ஆனால் அதன் பின்னே ஒளிந்து இருக்கும் தன் மீதான அவளின் அலட்சியமும், வெறுப்பும் சட்டென்று நினைவில் எழும்ப, மனம் கசந்துப் போனது இவனுக்கு.

தன் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் தங்கையையும், அத்தையையும் கவனித்தவன், "ம்... குட், ஓகே. எனக்கு உடையின் அளவு சரியாக தான் இருக்கிறது, ஆல்ட்ரேஷன் எதுவும் தேவை இல்லை. நான் சென்று இரவு உடை மாற்றிக் கொள்கிறேன்!" என வேகமாக எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டான்.

ஷ்ரவணின் ஆர்வம் இல்லாத பதிலில், வெளிப்படை ஆகவே முகம் வாடிப் போனாள் ஶ்ரீநிதி.

அதைக் கவனித்த மற்ற இரு பெண்களுக்கும், அவள் மனதின் ஆழத்தில் ஷ்ரவணுக்கு என்று ஓர் இடம் இருப்பது தெளிவாகப் புரிந்துப் போனது.

********************

அவனிடம் சின்னதாக முறுவலித்தவள், "தெரிகிறது!" என்றபடி ஶ்ரீநிதி அணிந்து இருந்த முழுக்கை சட்டையை பார்த்து விட்டு, "இது எதற்கு?" என்றாள்.

"இல்லை... வரும் வழியில் யாரும் பார்த்தால், நிறுத்தி வைத்து தேவை இல்லாத கேள்வி கேட்டு நேரத்தை வீண் அடிப்பார்களே என்று தான்..." என்றவன் மென்று விழுங்க, மருத்துவர் வித்யாவின் இதழ்களில் இம்முறை புன்னகை நன்றாகவே விரிந்தது.

'இவர் ஏன் நம்மை பார்த்து இப்படிச் சும்மா சும்மா சிரிக்கிறார்?' என பின் இருபதுகளில் தெரிந்த மருத்துவரை பார்த்து ஷ்ரவண் குழம்பத் துவங்க அதை தடுப்பது போல், "ஷர்ட்டை ரிமூவ் பண்ணுங்கள்!" என்றாள் வித்யா.

ம்... என்றபடி மனைவியை நெருங்கியவன் தயங்கித் தயங்கி, அவள் உடலில் இருந்து தன் உடையை விலக்கினான்.

இது வரை தொட்டுக் கூடப் பேசி இராதவளை ஏதோ ஓர் வேகத்தில் தூக்கி வந்து விட்டவனுக்கு, இப்பொழுது தன் சட்டையை அவள் மேனியில் இருந்து அகற்றவும், மெத்தையில் படுக்க வைக்கப் பட்டிருந்த கோலத்தில் அவள் புடவை ஆங்காங்கே விலகி உடல் பளிச்சிட்டதில், இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

தன்னை மீறிய கூச்சத்தில் முகம் சிவந்தவன், அவசர அவசரமாக அவளின் புடவையை சரியாக இழுத்து விட்டான்.

ஷ்ரவணின் உடல் மொழிகளை கூர்மையாக பார்வையிட்டுக் கொண்டு இருந்த வித்யாவை கலைத்த செவிலியர், அறைக்கு வந்து விட்ட மருந்துகளை கொடுத்தார்.

அதை ஒரு முறை சரி பார்த்து விட்டு, "சரி... பேஷன்ட் கையில் அவர் கட்டி இருக்கின்ற கட்டை பிரித்து விட்டு, சுத்தம் செய்யுங்கள்!" என்று பணித்தவள் ஷ்ரவணிடம் திரும்பினாள்.

"விடிந்தும் விடியாததுமாக, உறக்கம் கூட சரியாக கலையாத காலை நேரத்தில், எதற்காக இப்படி ஒரு முடிவை உங்கள் மனைவி எடுத்து இருக்கிறார்கள்?" என்றாள் நேரடியாக.

அவன் தடுமாறி விழிக்க புருவம் சுருக்கியவள், "இவரிடம் தேவையான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து வாங்கி விட்டீர்களா?" என்று செவிலியரிடம் வினவினாள்.

ஶ்ரீநிதியின் கை கட்டை பிரித்துக் கொண்டு இருந்தவர், "இன்னும் இல்லை டாக்டர்... முதலுதவி சிகிச்சையை முதலில் முடித்து விட்டு, பிறகு வாங்கிக் கொள்ளலாம் என இருந்து விட்டேன்!" என்றார்.

"ம்... பிரித்து விட்டீர்களா?" என்று அருகில் சென்றவள், ஶ்ரீநிதியின் கரத்தை பார்த்து திகைத்தாள்.

வேகமாக ஷ்ரவணிடம் திரும்பி, "இது எப்படி? கையில்..." என அவள் கரத்தை எடுத்து, "பை பர்த்தா... அல்லது விபத்து எதுவுமா?" என்று அவனிடம் தீவிரமாக விசாரித்தாள்.

சற்றே தயங்கியவன், "தெரியவில்லை!" என்றான் மெதுவாக.

முகம் கடினமுற அவனை உற்றுப் பார்த்து விட்டு, ஶ்ரீநிதியின் காயத்தை பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

"திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது?"

"இரண்டு வாரம் ஆகிறது!"

அவனிடம் ஒரு பார்வையை செலுத்திக் கொண்டே, "இன்னமும் ப்ளட் வருகிறது சிஸ்டர், காட்டன் எடுங்கள்!" என்று வித்யா கூறும் பொழுது, ஷ்ரவணும் கவலையுடன் அருகில் வந்து நின்றான்.

"லவ் மேரேஜா... அரேன்ஜ்ட் மேரேஜா?"

தன்னிடம் தான் அவள் வினவுகிறாள் என்பதை தாமதமாக உணர்ந்த அவனுக்கு, அதற்குப் பதில் கூறத் தான் முடியவில்லை.

"நல்ல வேளையாக வெட்டு ஆழமாகப் பதியவில்லை, அவ்வளவு தான் இவர்கள் பலம் போல் இருக்கிறது!" என்று ஶ்ரீநிதியின் சோர்ந்த முகத்தை அளவு எடுத்தபடி, காயத்தில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தாள் வித்யா.

"சரியாக சாப்பிடுவது இல்லையோ... ஆளைப் பார்த்தால் ரொம்பவும் பலவீனமாக தெரிகிறார்கள்!" என்றாள் அடுத்து.

வித்யா கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாது, மிகவும் திணறிப் போனான் ஷ்ரவண்.

ஶ்ரீநிதியின் மீது இருந்த கோபத்தில், இது வரை அவள் சாப்பிட்டாளா இல்லையா என்று ஒரு முறை கூட அக்கறை எடுத்து வினவி இராத அவனுக்கு, அந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என ஒன்றும் புரியவில்லை.

*******************

சட்டென்று சிரித்து விட்ட வித்யா, "அவ்வளவு தான்... ப்ராப்ளம் சால்வ்ட்!" என்று தோள்களை குலுக்கினாள்.

அவளை குழப்பத்துடன் நோக்கியவன், "எப்படி? எல்லா பிரச்சனைகளும் அப்படியே தானே இருக்கிறது!" என்றான் யோசனையோடு.

"எஸ்... எல்லாம் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்றி விட்டால், அனைத்தும் தன்னால் சரியாகி விடும்!" என்றாள் சின்னப் புன்னகையுடன்.

"என் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டுமா... என்ன? எப்படி?" என்று பரபரத்த அவனிடம், தன் சிந்தனையை கூற ஆரம்பித்தாள் வித்யா.

"முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். இது தான் ரொம்பவுமே உங்கள் இருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துக் கொண்டு இருக்கும் குழப்பங்களுக்கும், பிரச்சனைக்கும் முக்கிய காரணம்..." என்றவள் முடிக்கும் முன்னரே,

"என்ன அது?" என்றான் அவன் வேகமாக.

"ப்பா... என்ன அவசரம்?" என்று கேலிச் செய்து விட்டு, "உங்கள் மனைவி உங்களை விரும்புகிறார்கள்!" என்றாள் அழுத்தமாக.

தன்னையே விந்தையாக நோக்குபவனை பார்த்து, "என்ன?" என்றாள் இவள்.

"இதில் இருந்தே உங்களுக்கு நான் சொன்னது எதுவுமே புரியவில்லை என்பது நன்றாக தெரிகிறது!" என்றான் ஷ்ரவண் அலுப்புடன்.

"ஆஹான்... எப்படிப்பா?" என்று கைகளை குறுக்கே கட்டிக் கொண்டாள்.

"ப்ச்... சும்மா கேலிப் பேசாதீர்கள் வித்யா. எனக்குத் தெரியும், அவளுக்கு என்னை பிடிக்காது. ஒரு முறை கூட அவள் என்னை அந்த மாதிரி பார்த்தது இல்லை!"

"ஓஹோ... சரி, அவள் உங்களை பிடிக்காமல் பார்ப்பதை நீங்கள் எத்தனை முறைப்பா பார்த்தீர்கள்?" என்று ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள் வித்யா.

"அது... அவ்வப் பொழுது பார்ப்பேன்!" என்று தடுமாறினான்.

"அப்பொழுது உங்கள் பெண்டாட்டி பார்க்காத நேரங்களில், நீங்கள் அவளை நன்றாக சைட் அடித்து இருக்கிறீர்கள்!" என்றாள் இவள் தீவிரமாக.

"எது?" என்று விழித்தவன் பக்கென்று சிரித்து விட்டு, "ப்ச்... இந்தக் கேலி தானே வேண்டாம் என்கிறேன்!" என்றான் சின்ன வெட்கத்தோடு.

அதை ரசித்தவள், "ஷ்ரவண்... ஒரு உண்மையை சொல்லட்டுமா? நீங்கள் இரண்டுப் பேருமே ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களுக்குள் இருக்கும் ஈகோவும், கோபமும் தான் அதை ஏற்க விடாமல் வெறுப்பாக மாற்றிக் கொண்டு இருக்கிறது!" என்றாள் அமைதியாக.

அது... என்று இழுத்தவன், "ஓகே... நான் ஒத்துக் கொள்கிறேன். எனக்கு அவளை பிடிக்கும் தான், இடையில் நடந்த கசப்பான நிகழ்வுகள் தான் அதை மாற்றி விட்டது. ஆனால் அவளுக்கு என்னை நிஜமாகவே பிடிக்காதும்மா!" என்றான்.

"இல்லை ஷ்ரவண்... நீங்கள் அவ்வளவு தான் கவனித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு ஶ்ரீநிதியை பற்றிச் சரியாக தெரியவில்லை. சரி நான் சொல்கிறேன்!" என ஆழ மூச்செடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

"ஶ்ரீநிதியை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள் சொன்னதை வைத்து தான் இதை முழுக்க முழுக்கச் சொல்கிறேன்!"

ம்... என்று ஒருவித எதிர்பார்போடு தலை அசைத்தான் ஷ்ரவண்.

"நீங்கள் சொன்ன விஷயத்தில் முதலும், கடைசியுமான சம்பவங்கள் தான் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. அதை உங்கள் மனைவி தான் தெளிவுப் படுத்த முடியும், மீதியை நான் சொல்கிறேன்.

அதாவது அவள் ஏன் முதல் சந்திப்பிலேயே உங்களை அலட்சியப் படுத்தினாள், அன்ட் குழந்தை விஷயத்தில் ஏன் அவ்வளவு அரகன்ட்டாக நடந்துக் கொண்டாள் என்பது தெரியவில்லை!" என்று நெற்றிச் சுருக்கி விட்டு,

"சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள். திருமணமாகி வந்ததும் உங்கள் வீட்டிற்குள் மனைவியை எப்படி அழைத்துச் சென்றீர்கள்?" என கேள்வி எழுப்பினாள்.

********************

"அத்தை என்ன சொன்னார்கள்?" என்றான் பிரசாத் சிறு ஏமாற்றத்துடன்.

நிமிர்ந்து அவனை பார்த்தவள், "குட்டிம்மா இப்பொழுது தானே கல்லூரியே சேர்ந்து இருக்கிறாள், அதற்குள் ஏன் இப்படி அனைவரும் குழம்புகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவள் முதலில் அவளுடைய படிப்பை நன்றாக முடிக்கட்டும். காலமும், அனுபவமும் அவளுக்குள் நல்லப் பக்குவத்தை ஏற்படுத்தும்.

திருமணத்தை பற்றிப் பேச்சு எடுக்கும் பொழுது அவளிடம் விஷயத்தை கூறுவோம். அப்பொழுது அவள் என்ன நினைக்கிறாளோ, முடிவு எடுக்கிறாளோ அதற்கேற்ப நாம் செயல்படலாம் என்றார்கள். அப்பாவை போலவே எனக்கும் அது சரியாகப் பட்டதால், நானும் இத்தனை நாட்களாக படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன்!"

ஓ... என்றவன் வேறு எதுவும் பேசாமல் உணவை தொடர, "பார்த்தீர்களா... வந்ததில் இருந்து நான் மட்டும் தான் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டு இருக்கிறேன். நீங்களோ வாயையே திறக்காமல் என்னை நன்றாக ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்!" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

இவன் என்ன பதில் சொல்வது? இன்னமும் அவள் தன் மனதை வெளிப்படையாக பகிரவில்லை எனும் பொழுது, தான் எதைப் பேசுவது? அது அவளுக்கு ஏதேனும் சங்கடத்தை உருவாக்கி விட்டால்... என்று அமைதி காத்தான் பிரசாத்.

"என்ன?" என்றாள் பெண் அழுத்தமாக.

"அது... சுவாதி... மாமா அப்படி கூறியதாக அம்மா சொன்னவுடன், எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. முக்கியமாக நான் இன்னும் நன்றாகப் படித்து இருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

அப்புறம் அம்மாவே சொன்னார்கள், உங்கள் இருவருக்குமே இது திருமண வயது இல்லைடா... உள்ளுக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. ஏதோ நமக்குள் உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று தான் பேச்சை ஆரம்பித்தேன், அது இல்லை என்று முடிவாகி விட்டது.

இதை இப்படியே விட்டு விடு. நாளை நம் சுவாதி படிப்பு முடிந்து வேறு இடத்தில் திருமணம் முடித்துச் சென்றாள் என்றால், உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். அதற்குப் பிறகு உன் வாழ்க்கையை பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்றார்கள். அதனால் நானும் அந்த எண்ணத்தை அப்படியே நியூட்ரல் ஆக்கி விட்டேன்!" என்றான் மெதுவாக.

லேசாக முகம் இறுகியவள், "அப்பொழுது... நான் திருமணம் முடித்து வேறுப் பக்கம் சென்று விட்டால், நீங்கள் இந்தப் பக்கம் வேறுப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருக்கிறீர்கள், சரியா?" என்று கண்களை இடுக்கினாள்.

கற்பகம் இதைக் கூறித் தான் அவனை சமாதானப் படுத்தி வைத்து இருந்தார். மனதில் ஏக்கமும், ஏமாற்றமும் வெகுவாக இருந்தாலும், அவளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று தன்னை ஒருவாறாக தேற்றி வைத்து இருந்த அவனுக்கு இன்னமும் வேற்றுப் பெண் குறித்தோ, திருமணம் பற்றியோ எந்தச் சிந்தனையும் எழவில்லை.

சுவாதியை காணும் பொழுது எல்லாம் அவனுக்குள் தோன்றும் ஏமாற்றத்தையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் தன் மீது பாசம் வைத்து விட்ட ஒரே காரணத்திற்காக அவளை மேலும் சஞ்சலப்படுத்த வேண்டாம், அவளுடைய வாழ்க்கையை அவள் நிம்மதியாகப் பார்த்துக் கொள்ளட்டும் என்று தான் அவ்வாறு கூறினான்.

மாறாக சுவாதியோ இவனை குற்றவாளிப் போல் பார்த்துக் கேள்வி எழுப்பியவள், அடுத்து வேகமாக அமுதனை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.

"நான் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பூங்காவில் இவனை விளையாட வைத்துக் கொண்டு இருக்கிறேன்!"

அவளின் செயலில் திடுக்கிட்டவன், 'இவள் தன்னிடம் கோபம் கொள்கிறாளா என்ன... ஆனால் ஏன்?' என்று தானும் சட்டென்று எழுந்து, அவளை பின்தொடர முயன்றான்.

இரண்டடி எடுத்து வைத்து விட்டவள் திரும்பி தன் பின்னால் வருபவனை ஒரு முறை முறைத்து, "இன்னும் சாப்பிட்டதற்கு பில் பே பண்ணவில்லை என்று நினைக்கிறேன்.

என் கூடவே கிளம்புகிறீர்கள், அங்கே பாருங்கள்... சர்வீஸ் மேன் நீங்கள் நழுவுவதைப் பார்த்து பதறிப் போய் ஓடி வருகிறார்!" என சிரியாமல் சொன்னவள், திருதிருவென்று விழித்த அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

தன்னை நெருங்கி விட்ட மனிதரிடம் அசடு வழிந்து உணவிற்கான பில்லை விசாரித்தபடி, வாலட்டில் இருந்து கார்ட் ஒன்றை எடுத்தான் பிரசாத்.

நடையின் வேகத்தை குறைக்காமல் பக்கவாட்டில் திரும்பி அவனை ஓர விழியில் நோக்கியவள், பொங்கும் சிரிப்பை இதழ்களுக்குள் பூட்டி மறைத்து வெளியேறினாள்.

**************************

வா... என்ற ஒற்றைச் சொல்லுடன் தன்னை அறைக்கு இழுத்துச் செல்பவனை புரியாமல் பின் தொடர்ந்தவள், அவன் கதவை மூடவும் முன்பு போல பதறித் தவிக்காமல் குழப்பத்துடன் ஏறிட்டாள்.

"என்ன?"

அவள் விழிகளை உற்றுப் பார்த்தவன், "ம்... பரவாயில்லை. கண்களை நேருக்கு நேர் பார்க்கின்ற அளவிற்கு கூச்சத்தையும், பதற்றத்தையும் ஜெயித்து விட்டாய்!" என்று பாராட்டி விட்டு,

"இப்பொழுது ஒன்றும் பிரச்சனை இல்லையே... வெளியே பார், நன்றாக இருட்டி விட்டது. அறையின் விளக்கை அணைத்து விட்டால், சத்தியமாக... எனக்கு கண் தெரியாது!" என்க, இவளுக்கு மெல்ல விஷயம் புரிந்தது.

'உடையை மாற்றச் சொல்கிறார், ஆனாலும் அதில் கூட எத்தனை கேலி, கிண்டல் பார்...' என்று கூச்சத்தை ஒதுக்கி ரசித்தவள், அவனிடம் பார்வையை திருப்பாமல் நைட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கை அணைத்தாள்.

"பாருடா... சொன்னது தான் சாக்கு என்று உடனே லைட்டை அணைத்து விட்டாளே என் பெண்டாட்டி. ஆனாலும் மதியத்தில் இருந்து விடாமல் நான் பேசிய பேச்சிற்காவது ஒரு மரியாதை கொடுத்து, இல்லை மாமா இருக்கட்டும் பரவாயில்லை என ஏதாவது சொல்கிறாளா... அவ்வளவு தான் நமக்கு மரியாதை!" என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டான் ஷ்ரவண்.

கணவனின் புலம்பலில் ஶ்ரீநிதி பக்கென்று நகைத்து விட, "இருட்டில் எனக்கு கண்கள் தான் தெரியாது, காது நன்றாகவே கேட்கும்!" என்று எச்சரித்தான் அவன்.

'அது எங்களுக்குத் தெரியாது பாருங்கள்!' என உதட்டை சுழித்தாள் மனைவி.

"இன்னும் என்ன செய்கிறாய்? உன்னால் முடிகிறதா... முடியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினான்.

அப்பொழுது தான் மெதுவாக புடவையை அவிழ்த்து இருந்தவள், "கொஞ்ச நேரம் அமைதியாக தான் இருங்களேன்!" என்றாள் தாங்க முடியாத வெட்கத்துடன்.

"என்ன? நான் நல்லப் பிள்ளையாக அமைதியாக ஒதுங்கித் தானே நிற்கிறேன், உன் பக்கத்திலா வந்தேன்..." என்றவன் விடும் உஷ்ணப் பெருமூச்சின் மெல்லிய ஒலி, இவள் செவி வழி தீண்டி உடலை குப்பென்று சூடாக்கி தகிக்கச் செய்தது.

ஒரு வழியாக அவன் விரல் நகம் கூட மேனியை தீண்டாமல், உடையை மாற்றிய அவளுக்குப் பெரும் பாரம் நீங்கியது.

ஒருபுறம் கசகசவென்று இருந்தது நீங்கி உடல் புத்துணர்ச்சி கொண்டது என்றால், கணவனாக இருந்தாலும் தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஷ்ரவண் கண்ணியமாக நடந்துக் கொண்டது வேறு அவளுக்குள் பேருவகையை தோற்றுவித்தது.

"இப்பொழுதாவது லைட்டை போடு!" என்றான் ஷ்ரவண் அலுப்பாக.

முகம் கொள்ளாச் சிரிப்புடன் விரைந்துச் சென்று ஸ்விட்சை போட்டவள் அவனிடம் திரும்பி, "தாங்க்ஸ்!" என்றாள்.

அவளையே கண்கள் இடுங்க நோக்கியவன், "என்ன? முகம் எல்லாம் ரொம்பவும் டாலடிக்கிறது!" என்றான் கேள்வியாக.

"ம்... மனது அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது!" என்றவாறு கழற்றிப் போட்ட உடைகளை எல்லாம் எடுத்துச் சென்று, அதற்குரிய கூடையில் போட்டாள் ஶ்ரீநிதி.

"எப்பொழுதுமே மனதில் மகிழ்ச்சி அதிகமாக தோன்றினால், அதை மற்றவர்களிடம் பகிர்வதால் அது இரட்டிப்பு ஆகுமாம்..." என்றவன் பாவனையாக கூறவும்,

'என்ன சொல்ல வருகிறார் இவர்?' என குழம்பியவள், ம்... என்று அவன் முகம் பார்த்தாள்.

"நீ பழமொழி கேள்விப்பட்டது இல்லையா... துன்பத்தை பகிர்வதால் அது பாதியாகி மனம் லேசாவதை போல், இன்பத்தை பகிர்வதால் அது இரட்டிப்பாகி சந்தோஷம் கூடுமாம்!" என்றபடி நெருங்கி நின்றான்.

**************************

“சும்மாவே இருக்க மாட்டீர்களா?” என்று அவன் தோளில் தட்ட கையை உயர்த்தி விட்டு, முகம் சுளிப்பவளை கண்டு நக்கலாக நகைத்தான் பையன்.

“இதற்குத் தான் நம்ம பாடி கண்டிஷனை தெரிந்துக் கொண்டு, தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பது!” என்று கண் சிமிட்டினான்.

சில மணி துகள்களாக முகத்தில் இருந்த வெறுமை மறைந்து விழிகளில் வெளிச்சம் பிறக்க, “நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தானா?” என ஆர்வமாக வினவினாள் ஸ்ரீநிதி.

“இப்படித் தானா என்றால்… நீ என்ன கேட்க வருகிறாயோ, அதை தெளிவாக கேள். அப்புறம் நான் ஏதாவது ஏடாகூடமாக உளறி விடக் கூடாது இல்லை…” என்றவன் கூறியதும், அவளின் அதரங்கள் பளிச்சென்று மலர்ந்தது.

தன் முகத்தை ஆசையுடன் அளவெடுக்கும் கருந்திராட்சை விழிகளை கூர்மையாகப் பார்த்தவன், “இப்பொழுது எதற்காக இப்படி பப்ளிக்காக சைட் அடிக்கிறாய்?” என்று தீவிரமாக வினவினான்.

கணவனின் நெருக்கம் தந்த துணிவில், “நீங்கள் தானே கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்... கழுத்தில் தாலி கட்டி விட்டேன், காதலும் சொல்லி விட்டேன், அப்புறம் என்ன திருட்டுத்தனம் என்று மிரட்ட கூட செய்தீர்களே…” என அவனுக்கு நினைவுப் படுத்தினாள்.

“ம்… மேடம் ரொம்பவும் தேறி விட்டீர்கள்!” என இதழ் மலர்ந்து இருந்தவளின் அழகை ரசித்தவன், “இப்படி இருந்தால் முகம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? அதை விட்டு விட்டு எப்பொழுது பார், இஞ்சி தின்றக் குரங்காக தூக்கி வைத்துக் கொள்கிறது!” என்று போலியாக முறைத்தான்.

அவன் கேலியில் புன்னகைக்க முயன்று தோற்றவள் அமைதியாக, மெல்லக் குனிந்தவன் அவளின் மூக்கின் நுனியில் முத்தமிட்டான்.

*********************

மூளையில் அபாயச் சங்கு அலற முகம் இறுகியவள், “நாம் வீட்டிற்குப் போகலாம்!” என்றாள் அதிரடியாக.

“அண்ணி…” என்று விழித்தவள், “இன்னும் ஒரு மணி நேரம் தான்... சாப்பிட்டு விட்டுப் போகலாமே. இங்கிருந்து வீட்டிற்குப் போக அரைமணி நேரமாவது ஆகும், உடனே திரும்பி வருவதும் சரி வராது!” என்றாள்.

எரிச்சலுடன் முகம் சுளித்தவள், “எனக்கு சாப்பாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். வீட்டிற்கு போக வேண்டும் அவ்வளவு தான்!” என்றாள் வேகமாக.

குழப்பத்துடன் திரும்பி தன் அண்ணனை பார்த்தவள், “அண்ணா… நான் அண்ணாவிடம் கேட்டு வருகிறேன்!” என அங்கே செல்ல முயன்ற அவளின் கரத்தை அழுந்தப் பற்றித் தடுத்தவள், அவளை எரித்து விடுவதை போல் பார்த்தாள்.

“ஏன்? உன் அண்ணாவின் அனுமதி கிடைத்தால் தான் நான் வீட்டிற்குப் போக முடியுமா... யாருடைய அனுமதியும் எனக்குத் தேவை இல்லை. மரியாதையாக... இப்பொழுது என்னை அழைத்துச் செல்கிறாய் நீ!” என்று ஸ்ரீநிதி கிட்டத்தட்ட மிரட்ட, தன் அண்ணியின் புதிய முகம் கண்டு திகைத்துப் போனாள் சுவாதி.

“இல்லை அண்ணி… இங்கிருந்து நம்மை அழைத்துச் செல்ல ஏதாவது வண்டி வேண்டுமே, அதற்காகவாவது நான் அண்ணாவிடம் கேட்டுத் தான் ஆக வேண்டும்!” என்றாள் தயக்கத்துடன்.

புருவம் சுளித்தவள், “நீ பிரசாத் அண்ணாவிற்கு போன் செய்து வரச் சொல், அவர் நம்மை அழைத்துச் செல்லட்டும். நீ உன் அண்ணாவிடம் போகாதே!” என்றாள் அழுத்தமாக.

‘கொஞ்ச நேரமாக இவர்களுக்கு என்னவாயிற்று? காலையில் வீட்டில் இருந்துக் கிளம்பும் பொழுது நன்றாகத் தானே இருந்தார்கள். அப்புறம் முதலில் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்கினார்கள், இப்பொழுதோ இவ்வளவு கோபப் படுகிறார்கள்!’

"ஏய்… என்ன யோசிக்கிறாய்? சீக்கிரம் அண்ணாவை கூப்பிடு!” என்று சுவாதியை உலுக்கினாள் ஸ்ரீநிதி.

“ம்… இதோ!” என்றவள் பிரசாத்தை அழைத்து விஷயத்தை சொல்ல, அவனோ இவளை சில பல கேள்விகளால் கடுப்படித்து விட்டு, பின் வருவதாக ஒப்புக் கொண்டான்.

“மாமா வருகிறாராம் அண்ணி!”

இறுக்கமாக, ம்… என்றவள் மீண்டும் அவசரமாக அவன் தன் கணவனை விட்டு விலகிச் சென்று விட்டானா, இல்லையா என்று கவலையுடன் நோட்டம் இட்டாள்.

ஸ்ரீநிதியிடம் வெளிப்பட்ட அசாதாரண நிலை சுவாதியை வெகுவாக சிந்திக்க தூண்ட, அவளையே பார்த்து இருந்தவள் அவளின் பார்வையை தானும் தொடர்ந்தாள்.

பிரசாத் ஷ்ரவணிடம் செல்லக் கண்டு திடுக்கிட்டவள், “ஏய்… இந்த அண்ணா ஏன் உன்னுடைய அண்ணாவிடம் செல்கிறார்?” என்றாள் பதற்றத்துடன்.

அதைத் தானும் கவனித்து இருந்தவள், “கார் சாவி வாங்குவதற்காக இருக்கும்!” என்றாள் அமைதியாக.

“ப்ச்… அவரிடம் தான் பைக் இருக்கிறது அல்லவா?”

“பைக்கில் மூன்று பேர் போக முடியாது அண்ணி, அதுவும் நீங்கள் இப்படி இருக்கின்ற நிலைமையில்…”

முகத்தை வேறுபுறம் திருப்பி சீறும் பெருமூச்சு ஒன்றை வேகமாக வெளியேற்றிய அவள், “சீக்கிரமாக அவரை ஒரு கார் வாங்கச் சொல்!” என்றாள் எரிச்சலுடன்.

வியப்பில் தன்னால் விழிகள் விரிய, அந்தச் சூழ்நிலையிலும் தன்னை மீறி அண்ணியின் பேச்சை கேட்டுச் சிரித்து விட்டவள், மெல்ல உதட்டை கடித்து அதை அடக்கினாள்.

அருகில் நின்றவளோ, “என்னை பார்த்தால் உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?” என்று முறைத்தாள்.

“ஐயோ… இல்லை அண்ணி, நீங்கள் சொன்னதை மாமாவிடம் சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று நினைத்தேன், சிரிப்பு வந்து விட்டது!”

ப்ச்… என அலுப்புடன் முகத்தை திருப்பிய அவளின் கவனத்தில், ஷ்ரவண் பிரசாத்தை அவனிடம் அறிமுகப் படுத்தவது தெரியவும், இவளுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“சுவாதி… வா… நாம் காரிடம் சென்று நிற்கலாம்!” என்று அவளின் கரம்பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள் ஸ்ரீநிதி.

“அண்ணி… மாமாவும் வந்து விடட்டுமே!”

“வேண்டாம்… நீ அவருக்கு போன் பண்ணு!” என்று இவள் கூறும் பொழுதே, இவளின் அலைபேசி இன்னிசைத்தது.

இவள் கண்டுக் கொள்ளாமல் நடக்க, “அண்ணி… உங்கள் போன் தான்!”, என்று சுவாதி கூறியும் நில்லாமல் நடந்தவள், சற்று மறைவாக சென்றப் பின் தன் அலைபேசியை எடுத்து காதிற்கு கொடுத்தாள்.

“ஸ்ரீநிதி… நீ வீட்டிற்குப் போக வேண்டும் என்றாயா?” என்று வினவினான் ஷ்ரவண்.

“ஆமாம்!”

“ஏன்டா உடம்பு எதுவும் முடியவில்லையா? இன்னும் கொஞ்சம் நேரம் தான் சமையல் முடிந்து விட்டது, சாப்பிட்டு விட்டு அனைவரும் ஒன்றாக கிளம்பலாம்!”

“இல்லை… எனக்கு தூக்கம் வருகிறது, நான் போக வேண்டும்!”

“சரி… பிரசாத்திடம் கார் சாவி கொடுத்து அனுப்புகிறேன், நீ அதிலேயே கொஞ்சம் ஓய்வெடு. நான் விரைவாக இங்குள்ள வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்து, உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்!” என்றான் தணிவாக.

“இல்லை வேண்டாம்… நீங்கள் இங்கேயே இருங்கள், அண்ணா எங்களை அழைத்துச் செல்லட்டும்!” என்றாள் மீண்டும் பிடிவாதமாக.

ஷ்ரவண், “ஸ்ரீநிதி…” என்று அதட்ட, இவள் டப்பென்று அலைபேசியை அணைத்து கவுச்சில் போட்டுக் கொண்டு,

“வா!” என சுவாதியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

அண்ணனின் அதட்டலை அலட்சியம் செய்து மேலே நடக்கும் அண்ணியை புதிராகப் பார்த்தவாறு உடன் நடந்த சுவாதி, அவள் தங்களின் கார் அருகே சென்று நிற்கவும், தானும் பிரசாத்தின் வருகைக்காக அமைதியாக காத்திருக்க ஆரம்பித்தாள்.

**********************

Alaipayum Oru Kili - Amazon Kindle Link


No comments:

Post a Comment

Most Popular