வராது வந்த நாயகன்
கதைக்கரு
பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியலில் நிலவும் இன்றைய அலட்சியப்போக்கை மாற்றி அமைக்க நாம் வாழும் சமூகத்தில் இருந்து ஒரு சிறந்த அரசியல் தலைவன் (நோ... இவன் தொண்டன் தான் ஆனாலும் தலைவன் தான்) உருவானால் எப்படியிருக்கும் என்கிற எனது அடுத்த கற்பனை.
பள்ளி தோழனாக, தேர்ந்த அரசியல்வாதியாக, காதல் கணவனாக என்று என்னால் ரசித்து உருவாக்கப்பட்ட நாயகன். இவனை போன்று ஒருவன் நிஜத்தில் வர வேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டு வடிவமைத்த கதாப்பாத்திரம்.
*******
கதையிலிருந்து சிறு துளிகள்
மீண்டும் அடுத்த இடைவெளியில் அவன் கைபேசி சத்தமாக இசை மீட்ட ஆரம்பிக்கவும் வெளியில் இருந்து வேகமாக உள்ளே வந்த முருகன், "தம்பி... தலைவர் தான் கூப்பிடுகிறார் போலிருக்கிறது!" என்றார் அவனிடம் அழைப்பவரின் பெயரை பார்வையிட்டபடி.
"ஆங்... பேசிக்கலாம் அண்ணா!" என்று திரையை விட்டு விழிகளை சிறிதும் அகற்றாமல் அவன் அலட்சியமாக பதில் கூறவும் இவரும் திரும்பி அதில் தெரிந்தப் பெண்ணை பார்த்தவர் தனக்குள் மெதுவாக புன்னகைத்துக் கொண்டார்.
"தம்பிக்கு இந்தப் பெண்ணை ரொம்ப பிடிக்குமோ!"
சற்றே புருவம் சுருக்கி அவரிடம் தன் கண்மணிகளை லேசாக நகர்த்தியவன் பின்பு உதட்டில் நெளிந்த சிறு சிரிப்போடு மறுபடியும் பார்வையை அவள் மீது நிலைநிறுத்தினான்.
"அமைதியாக சிரித்தால் என்ன அர்த்தம் தம்பி?"
"உங்களுக்கு பதில் சொல்ல நான் பிரியப்படவில்லை என்று அர்த்தம் அண்ணா!" என்றான் மெல்லிய கண்சிமிட்டிலோடு பளிச்சென்று.
பதில் தான் அழுத்தமாகவும், ஒதுக்கமாகவும் வந்ததே தவிர அவன் முகத்தில் விரவியிருந்த வசீகரப் புன்னகை சிறிதும் குறையவில்லை.
அவன் குணம் அறிந்தவரும் சின்ன தலையசைப்போடு சிரித்த முகமாகவே வெளியேறினார்.
இடைவேளை முடிந்து மிருணாளிணி பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி மீண்டும் துவங்கவும் இவன் விழிகள் ஆவலுடன் அவள் மீது படிந்தது.
"என்ன மின்னு இந்த தம்பிக்கு உன்னை ரொம்பவும் பிடித்திருக்கிறதோ?" என்று ரகசிய குரலில் அவளிடம் குறும்பாக கேட்டுவிட்டு பிறகு எதையோ நினைத்து ரசித்தவனாக இடவலமாய் தலையசைத்து மௌனச் சிரிப்பில் குலுங்க ஆரம்பித்தான் அவன்.
***
அறைக்குள் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி மெத்தையில் படுத்திருந்தவளை அவளின் அலைபேசி ஒலி எழுப்பி கலைத்தது. விழிகளை திருப்பி கடிகாரத்தை பார்த்தவள் அழைப்பது யாரென புரிந்து மெல்ல முகம் இளகியவளாக இணைப்பை ஏற்றாள்.“சொல்லுடா தம்பி... குட் ஈவ்னிங்!” என்று மென்மையாக புன்னகைத்தாள் மிருணா.
“குட் ஈவ்னிங்கா! இன்னும் தூங்கவில்லை தானே?” என்று கேட்டான் பிரசன்னா.
“இல்லைடா... இப்பொழுது தான் வீட்டிற்கு வந்தேன். நீ என்ன அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டாயா?”
“ம்... இன்னும் வேலை இருக்கிறது. சரி... உங்களுக்கு தூங்கும் நேரம் தாண்டி விடுமே என்று தான் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் உனக்கு அழைத்தேன்!” என்று தற்பொழுது மிருவிடம் பேசிக் கொண்டிருப்பவன் அவளின் ஒரே உடன்பிறப்பான அவளுடைய தம்பி, கடந்த மூன்று வருடங்களாக ஜெனிவாவில் பணிபுரிந்து வருகிறான்.
“ஓ... நேரத்திற்கு சரியாக சாப்பிட்டு விடுடா. வேலை வேலையென்று உடல் நலனை கெடுத்துக் கொள்ளாதே!” என்று பெரியவளாய் தனக்கு அறிவுறுத்தும் அக்காவை நினைத்தால் அவனுக்கு கவலை தான் பிறந்தது.
‘வழக்கமானவள் இவள் அல்லவே... தங்களுடைய அடாவடி, குறும்புமிக்க தன்னிடம் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் அக்காவை எங்கள் குடும்பம் தொலைத்து பதினோரு வருடங்கள் ஆகி விட்டதே!’
“என்னடா அமைதியாகி விட்டாய்? நீ நன்றாக இருக்கிறாய் தானே?” என்றாள் சகோதரி சட்டென்று கவலையுடன்.
“எனக்கென்ன? நன்றாக தான் இருக்கிறேன். ப்ச்... வேறு யோசனை...” என்றவனிடம் இவள் என்னவென்று விசாரிக்க, “வேலை முடிந்து வருவதற்கு தாமதமானால் வீட்டிற்கு ஒரு போன் செய்து சொல்லலாம் அல்லவா... ரொம்பவே பயந்து விட்டார்கள்!” என்று பிரசன்னா வருத்தத்துடன் கூற இவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஓ... நாடு விட்டு நாடு... இந்தியா தாண்டி சுவிஸர்லாந்து வரை புகார் பறந்து வந்துவிட்டதா?” என்று ஏளனமாக கேட்டபடி எழுந்து அமர்ந்தவளிடம் அவன், “அக்கா!” என்றபடி குறுக்கே பேச முயல்வதை தடுத்தாள் அவள்.
“பேசுவதற்கு வேறெதுவும் இல்லை என்றால் நான் வைக்கிறேன் பிரசன்னா!” என்றாள் இறுகிய குரலில்.
“நீ ஏன்கா...” என்று எதையோ கேட்க வந்து மாற்றியவன், “இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படியே வீம்பாக இருக்கப் போகிறாய்? அவர்களுக்கு நீ கொடுத்த தண்டனை போதும் அக்கா, இனிமேலாவது...” என்றவனை கோபமாக குறுக்கிட்டு, “எனக்கு தூக்கம் வருகிறதுடா, குட் நைட்!” என பட்டென்று இணைப்பை துண்டித்து விட்டாள் மிரு.
பெருமூச்சுடன் தன்னுடைய அலைபேசி திரையை வெறித்த பிரசன்னா, ‘தங்களின் பெற்றோர் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டது ரொம்பவே தவறான செயல் தான். என்ன செய்வது? மிகவும் உணர்ச்சிகரமான தருணம் அது.
நம் நாட்டின் கலாச்சாரத்திற்கும், ஊர் பேச்சிற்கும் பயந்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவள் நிலையில் இருந்து சற்றும் யோசித்துப் பார்க்காமல் அவ்வாறு செய்து விட்டார்கள். அதற்காக... அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து வருந்தி நெருங்கும் பொழுது இவள் இப்படி விலகி செல்வது எப்படி சரியாகும்?’ என்று கவலையுடன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
“ஜேபி...” என்று கணவனை அழைத்து காரில் நிலவிய அமைதியை கலைத்தாள் மணிகர்ணிகா.
“ம்...” என்று அவளிடம் விழிகளை திருப்பியவனுக்கு அவள் என்ன பேசப் போகிறாள் என தெரிந்தே இருந்தது.
“இல்லை... மிருவின் வீட்டில் அவளுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“சந்தேகமே வேண்டாம்... அவர்களுக்கு இடையே எதுவோ சரியில்லை என்பது அங்கு போன சில நிமிடங்களுக்கு உள்ளாகவே எனக்கு புரிந்துவிட்டது. இவளும் வீட்டிற்கு தகவல் தரவில்லை, அவள் அப்பா அழைத்தப் பொழுதும் போனை எடுக்காமல் இருந்திருக்கிறாள்...”
“ஆமாம்... எனக்கும் அங்கே தான் டவுட் வந்தது. இவள் அவர்களிடம் காரணம் கூறியது போல் போனை சைலன்டில் போடவில்லை. நீங்கள் கவனித்தீர்களா... நம்முடைய வேலையின் பொழுது அவளுக்கு அடுத்தடுத்து நம் நிகழ்ச்சி குழுவினரிடம் இருந்து அழைப்பு வந்தபடி தான் இருந்தது.
அதையெல்லாம் எடுத்துப் பேசி தகுந்த பதில் அளித்தவள், இடையில் இரண்டு மூன்று முறை வந்த அழைப்பை மட்டும் ஏற்கவில்லை. நான் கேட்டதற்கும் ஒன்றும் முக்கியமான கால் இல்லை, நான் வீட்டிற்கு போய் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்!”
ம்... என்றவாறு யோசனையில் நெற்றிச் சுருங்க வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனை நெருங்கி அமர்ந்து, “என்ன பிரச்சினையாக இருக்கும்?” என்று அவனிடம் கதை கேட்கும் தீவிரமான பாவத்துடன் விசாரித்தாள் மணி.
மனைவியிடம் நக்கலான பார்வை ஒன்றை செலுத்திய ஜெய்சங்கர், “மை டியர் ஜே.ஆர்... அதை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படிடி தெரியும்? அடுத்தவர்கள் விஷயத்தை தெரிந்துக் கொள்வதில் இந்த பெண்களுக்கு தான் எத்தனை ஆர்வம்?” என்று நகைத்தான்.
***
அவன் கைகளில் அந்த வெள்ளைநிற ஜாகுவார் கார் ஈ.சி.ஆர். சாலையில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது.முகம் சிவந்திருக்க தன் கோபத்தை எல்லாம் கையில் சிக்கியிருந்த அந்த நான்கு சக்கர வாகனத்தை செலுத்துவதில் காண்பித்தவனை மெல்ல தயக்கத்துடன் அழைத்தார் முருகன்.
“தம்பி... கொஞ்சம் மெதுவாக போகலாமே, உங்கள் கோபத்தை இதை ஓட்டுவதில் காண்பிப்பதால் யாருக்கு இங்கே நஷ்டம் வரப் போகிறது?” என்றார் நயமாக.
புருவங்கள் சுருங்க அவரை சலிப்புடன் திரும்பி பார்த்தவன் மெல்ல தன்னை நிதானித்தவாறு காரின் வேகத்தை சற்றே குறைத்தான்.
“அவன் ரிசார்ட்டுக்கு வந்து விட்டானா என்று முதலில் கன்பார்ம் பண்ணுங்க!”
“ஆங்... இதோ!” என்று தன் கைபேசியை எடுத்தவர் எதிர்முனையுடன் முணுமுணுப்பாக பேசிவிட்டு இவனிடம் திரும்பி, “இன்னும் ஐந்து நிமிடங்களில் அவர் வந்து விடுவாராம் நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது!” என்றதும், ம்... என்றவன் காரை யூ-டர்ன் அடித்து சர்வீஸ் ரோட்டில் திருப்பினான்.
“என்ன தம்பி?”
“ஒரு அரைமணி நேரம் பீச்சில் காற்று வாங்கிவிட்டு போகலாம் அண்ணா!” என்றான் அவரிடம் கண்சிமிட்டியபடி உதட்டில் குமிளியிட்ட குறுஞ்சிரிப்புடன்.
‘சரி... தன்னை சந்திக்க வருபவனை காக்க வைக்க முடிவு செய்துவிட்டார் தம்பி!’ என தனக்குள் சிரித்துக் கொண்டார்.
கடற்கரையோர காற்றலையில் அவனின் அடர்ந்த கருநிற சிகை சிலும்பி நின்று நடனம் புரிய அதுகூட அவனின் கம்பீரத்திற்கு ஒரு வசீகரம் தருவதை அருகிலிருந்து ரசித்துப் பார்த்திருந்தார் முருகன்.
மார்பின் குறுக்கே கைகளை கட்டியவாறு ஏதோ நினைவில் அமைதியாக கடலலைகளை வெறித்திருந்தவன் அவரிடம் அசைவை உணர்ந்து திரும்பி பார்த்தான்.
“என்னண்ணா மீட்டிங் என்று அழைத்து வந்துவிட்டு உங்களை போரடிக்க வைத்து விட்டேனா?”
“அட... இல்லை தம்பி, இப்படி நிம்மதியாக காற்று வாங்க வருவதற்கு கூட நேரமில்லாத வாழ்க்கையை தானே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதோ இன்று அந்த கேசவனின் புண்ணியத்தில் இது நமக்கு கிட்டியிருக்கிறது. விடுங்கள்...” என்றவுடன் அவன் மௌன முறுவல் ஒன்றை வெளியிட, “என்ன தம்பி முடிவெடுத்து இருக்கிறீர்கள்?” என அவனிடம் அடுத்து ஆவலாக விவரம் அறிய முயன்றார் அவர்.
இரு கைகளையும் முன்னே நீட்டி சோம்பல் முறித்தவன், “வேறென்ன? எப்பொழுதும் போலத்தான்... நம்முடைய முன்னோர்கள் பலர் சிறப்பாக வழிக்காட்டி சென்று இருக்கின்றனரே. நாம் நினைகின்ற காரியம் சிறப்பாக நடக்க வேண்டுமென்றால் அதற்கு இடைஞ்சலாக வருகின்ற எதையும் வெட்டி எறியலாமாம்.
வீணாக நமக்கு குடைச்சல் கொடுப்பவனின் இறக்கையை வெட்டிவிட்டால் எதிராக பறக்க நினைப்பவன் தன்னால் கீழே விழுந்து விடப் போகிறான். அவ்வளவுதான்... ஸோ ஈசி!” என்று தோள்களை குலுக்கி பற்கள் பளீரிட கண்ணடித்தபடி கூலாக கண்களில் கூலர்சை மாட்டியவன், “கிளம்பலாம்!” என்ற ஒற்றை சொல்லுடன் காரை நோக்கி நடந்தான்.
சொன்ன நேரத்திற்கு வராமல் அரைமணி நேர தாமதத்தில் தன்னை காக்க வைத்து அவமானப்படுத்தியவனை சந்திக்க கேசவன் ஏககடுப்போடு சிடுசிடுவென்று காத்திருக்க, அதற்கு காரணமானவனோ மிகவும் அலட்சியமாக அவனிருந்த மேசையை நோக்கி நடந்து வந்து அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“ஹேய்...” என்று தன் சுட்டு விரலை நீட்டியபடி அவனிடம் எதையோ கோபமாக பேச முயன்றவனை, உஷ்... என தன் உதட்டில் கை வைத்து தடுத்தவன் முருகனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அவர் வேகமாக முன்னே வந்து அவன் முன்னால் அந்த காகிதத்தை நீட்டினார். கேசவன் புரியாமல் எதிரே அமர்ந்து இருந்தவனை குழப்பமாக பார்க்க புருவங்களை கேலியாக ஏற்றி இறக்கினான் அவன்.
“அட... அவர் முகத்தையே பார்த்தால் என்ன அர்த்தம்? இதை வாங்கி படித்துப் பாருங்கள் சார்!” என்று அந்த கடிதத்தை கேசவனின் கையில் திணித்தார் முருகன்.
பரபரப்புடன் அதை பிரித்து படித்துப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்த, “என்ன இது?” என்றான் ஆத்திரமாக.
“என்ன இதுவா? ஏன் அதிர்ச்சியில் உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையா?” என நக்கலாக கேள்வி எழுப்பியவன், “என் தொழிலில் குறுக்கே வர முயன்ற தவறுக்காக உங்கள் தம்பியின் தொழில் இப்பொழுது ஆட்டம் காண்கிறது. இத்தோடு நீங்கள் என் வழியை விட்டு விலகவில்லை என்றால் பிறகு ஆட்டம் கண்டுக் கொண்டிருப்பது மொத்தமாக அடிமட்டத்திற்கு அழிந்து விடும் அபாயமும் இருக்கிறது!” என்றான் அமைதியாக.
“என்ன மிரட்டிப் பார்க்கிறாயா?” என்றான் கேசவன் இகழ்ச்சியாக.
“சேச்சே... அரைமணி நேரத்தில் இதை நடத்திக் காண்பித்தவன் நாளை ஏலத்தில் எனக்கெதிராக நீங்கள் செயல்பட்டால் எந்த எல்லைக்கும் போவேன் என்பதுடைய ஒரு எச்சரிக்கை இது அவ்வளவு தான்!” என்றான் திமிராக.
***
“மிரு... என்ன செய்கிறாய்? எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் கொஞ்சம் தயார் செய்துக் கொடு. நேரமில்லை... இன்று இரவே இதை ஒளிபரப்ப வேண்டும்!” என்று அவளிடம் வந்து பரபரவென்று நின்றான் ஜெய்சங்கர்.“என்னவாயிற்று அண்ணா?”
ப்ச்... என சலித்தபடி அருகில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தவன், “விவாத மேடை நிகழ்ச்சி சூட்டிங் நாளை என்று முடிவு செய்திருந்தார்கள் இல்லை, அதை ப்ரீபோன்ட் செய்து இன்றே நடத்துகிறார்கள். அதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாற்றியமைத்து அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்!” என்றான்.
ஓஹோ... என்றவள் அவன் கொடுத்திருந்த குறிப்பில் விழிகளை ஓட்டும் நேரம் ஜெய்யின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“ஓ... அப்படியா சார்? நோ ப்ராப்ளம். இங்கே எல்லாம் தயாராக இருக்கிறது. சரியாக ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து நீங்கள் கிளம்பி விடலாம். யா... ஷுயூர்... ஷுயூர்!” என்று இணைப்பை துண்டித்தவன் ஏளனமாக உதட்டை வளைத்தபடி நெற்றியை அழுத்திக் கொண்டான்.
“எதற்குண்ணா இவ்வளவு டென்ஷன்?” என்றபடி ஸ்க்ரிப்டை எழுத தொடங்கினாள்.
“எல்லாம் அந்த வீணாப் போன... அவன் கட்சியின் ஆட்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இளம் சூறாவளி என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே அவனால் வருவது தான்!” என்றதும் அவளின் கை எழுதுவதை நிறுத்த விழிகளில் சின்ன பதற்றம் ஏற்பட்டது.
“நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?” என்றாள் உள்ளுக்குள் மூளும் கலவரத்தை மறைத்தபடி.
“ப்ச்... அதுதான்... அவன்...” என்றவனின் பெயரை கேட்டதுமே இதயத்தின் துடிப்பு அதிகரிக்க இவள் விரல்கள் நடுங்கத் துவங்கியது.
“இத்தனை மாற்றமும் அவன் ஒருவனுக்காக தான். நாளை அவனுக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கிறதாம் அதனால் நிகழ்ச்சியை இன்றே நடத்துங்கள் என்கிறான் அவன் பி.ஏ. அதோடு விட்டான்களா... சரி... மாலைவரை நேரம் கொடுங்கடா என்றால் தலைவர் அப்பொழுதும் பிஸியாம்.
சரி விட்டுத் தொலையலாம் என்றால் நம் சி.ஈ.ஓ. அவன் தான் இப்பொழுது அரசியலில் ஹாட் பெர்சன் அவனை மட்டும் விட்டுவிடாதே மற்ற யாரை வேண்டுமென்றாலும் நீ மாற்றிக்கொள் என்கிறார். மற்றவர்களும் இவனுக்கு வசதியாக நேரம் ஒதுக்கி இங்கே வருவதற்கு ஒப்புக்கொண்டார்கள்!”
அருகில் அமர்ந்திருந்தவளின் அமைதியை உணராமல் தன் போக்கில் பேசிச் சென்றான் ஜெய்.
“ஆனால் கொடுமையை பாரேன்... அப்படிப்பட்ட அப்பாவி அப்பாவிற்கு இப்படியொரு கேடுக்கெட்ட பிள்ளை. அந்த மனிதர் அரசியலில் அத்தனை வருடங்களாக நேர்மையாக இருந்து செய்த நல்ல விஷயங்கள் எதையும் தன் புத்தியில் ஏற்றிக்கொள்ளாது அவருக்கு வேண்டாத ஊழல் கட்சியில் இணைந்து இல்லாத தகிடுதத்தம் வேலை எல்லாம் செய்து இந்த இருபத்தியெட்டு வயதில் இத்தனை சீக்கிரமாக தான் நினைத்த உயரத்தை அடைந்து விட்டான்.
அவனுடைய அடாவடிகளும், தன் தொழில்களை வெற்றிப்பெற செய்ய எந்த அளவிற்கும் கீழிறங்கி செய்கின்ற அவன் செயல்களும் கட்சிக்குள்ளேயே பலத்த அதிருப்தியை கிளப்புகிறதாம். பட்... தலைமையிடத்தில் அப்படி என்ன தான் வசியம் போட்டு வைத்திருக்கிறானோ தெரியவில்லை அவனை ஒன்றும் செய்ய முடிவதில்லை என்று அங்கிருக்கும் சீனியர் ஆட்கள் ரொம்பவே புலம்புகிறார்களாம்!”
அவன் பேச்சிற்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், “அண்ணா... நான் வெளியே கிளம்புகிறேன். அதுவந்து... அண்ணி போக இருக்கின்ற இல்லத்திற்கு சென்று நான் பேட்டி எடுத்து வருகிறேன். அவர்களிடம் இந்த ஸ்க்ரிப்டை எழுதி தரச் சொல்லி விடுகிறேன்!” என மிருணாளிணி பரபரப்புடன் எழவும் அவளை புரியாதப் பார்வை பார்த்தான் ஜெய்.
“என்ன திடீரென்று?”
“இல்லை... கொஞ்சம்... அது...” என திணறியவள், “ஆங்... எனக்கு பேங்கில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதை இன்றே முடிக்க வேண்டும், இப்பொழுது தான் ஞாபகம் வந்தது!” என்றாள் வேகமாக.
அவன் அவளை நம்பாதப் பார்வை பார்க்கவும் அவனுடைய விழிகளை நேராக எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள், கைகடிகாரத்தின் மீது பதற்றத்துடன் பார்வையை ஓட்டி அவனிடம் நிமிர்ந்தாள்.
“அண்ணா... நேரமாகிறது, நான் கிளம்புகிறேன்!” என தன் க்ளட்சை எடுத்துக் கொண்டாள் அவள்.
“ம்... ஓகே!” என்றபடி எழுந்தவன், “இந்த சின்ன க்ளட்சிலா உன் பேங்க் பாஸ் புக்கை வைத்திருக்கிறாய்?” என்றான் ஆச்சரியமாக.
ஒருகணம் திடுக்கிட்டு விழித்தவள் அடுத்த நொடி, “ஆங்... ஆமாம்!” என்றாள் சாதாரணமாக.
இதழ்களில் முறுவல் பூக்க, “சரி பார், அதைக்கொடு மணியிடம் நானே விஷயத்தை சொல்லி கொடுத்து விடுகிறேன்!” என்றவாறு அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கினான்.
முகத்தில் குற்றவுணர்வு தலைத்தூக்க, “சாரி அண்ணா!” என்றாள் தயக்கத்துடன்.
“எதற்கு?” என்றவன் மிருணா விழிகளை தாழ்த்தவும் சற்றே நிதானித்து அவள் தோள்தட்டி, “டேக் கேர்!” என்று மட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் பலத்த சிந்தனையுடன் அங்கிருந்து வெளியேறினான்.
கவலையுடன் நின்றிருந்தவளுக்கு அடுத்த நொடி தன் பிரச்சினை கண்முன் பூதாகரமாக விரிய, விறுவிறுவென்று பார்க்கிங் நோக்கி நடந்தாள்.
***
ஐந்து ஐம்பதிற்கு தேவையே இல்லாத ஒரு வேலையை கைகளில் எடுத்துக்கொண்டு மிருணாவிடம் சென்ற ஜெய், அவள் மணி சொன்னது போலவே இன்னமும் பதற்றத்தில் இருப்பதை கண்டு தான் இதில் தலையிட உறுதி பூண்டான்.இந்த வேலையை முடித்துவிடு என்று தன்னிடம் வந்து நிற்பவனை திகைப்புடன் பார்த்தவள், “நா... நான் இதை நாளை செய்கிறேன் அண்ணா. இப்பொழுது அவசரமாக கிளம்ப வேண்டும்!” என்றாள் தவிப்புடன்.
“சரிம்மா... இதற்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும். இதை முடித்தவுடன் நீ கிளம்பிவிடு!”
‘பதினைந்து நிமிடங்களா... மணி இப்பொழுதே ஐந்து ஐம்பத்தைந்து ஆயிற்றே!’
இன்னும் ஐந்து நிமிடங்களில் அவன் வந்துவிடுவானே என்று நினைக்கும் பொழுதே கை, கால்கள் சில்லிட்டது.
திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தவளை, “மிருணா!” என்று அழுத்தமாக அழைத்தான் ஜெய்.
ஆங்... என்று அவனிடம் திரும்பியவள் அப்பொழுதே நிலைமை உணர்ந்து வேகமாக எழுந்து விட்டாள். ஒரு நொடி தாமதமானாலும் அவன் உள்ளே வந்து விடுவான்.
“அண்ணா... ஒரு எமர்ஜென்சி, நான் உடனே செல்ல வேண்டும். நாளை நேரமாக வந்து முடித்து விடுகிறேன்!” என கடகடவென்று பேசியவள் அவன் பதிலை கூட நின்றுக் கேட்காமல் கிட்டத்தட்ட வெளியே ஓடினாள்.
சில நொடிகள் நெற்றியை சுருக்கிய ஜெய் பின் வேகமாக அவளை பின் தொடர்ந்து சென்றான்.
தன் ஸ்கூட்டியை எடுக்க பார்க்கிங் செல்லாமல் அவள் கேட்டிற்கு விரையவும் இவன் யோசனையோடு சென்று தன்னுடைய வண்டியை எடுத்தான்.
உடனே கிளம்பாமல் கைபேசியில் எதையோ பார்த்தவாறே வெளியே பார்க்க யானையின் தந்த நிறத்தை ஒட்டிய நவீன ரக மெர்சன்டஸ் பென்ஸ் கார் ஒன்று சரேலென்று அந்த நேரம் வாயிலில் வந்து நின்றது.
மிருணாவின் முகத்தில் கலவரம் பெருக அவள் கைகள் தன்னால் துணை தேடி தன் ஸ்டோலை இறுகப் பற்றிக் கொண்டது.
காரின் உள்ளே இருந்தவன் இவளுக்கு கதவை திறந்துவிட, இவள் தயங்கி தயங்கி அதில் ஏறி அமர்ந்தாள்.
மிருணா கதவை மூடும் இடைவெளிக்குள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்து விட்டான் ஜெய்சங்கர்.
‘பாஸ்டர்ட்... அவனே தான்...’ என பல்லைக் கடித்தான்.
முகத்தை மறைத்து பெரிய கூலர்ஸ் அணிந்திருந்தாலும் அவனை எதிர்பார்த்திருந்தவனுக்கு சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது.
கார் கிளம்பவும் இவன் வேகமாக அதனின் பின்புறத்தை தன் அலைபேசியில் படமெடுத்து அதை வழக்கம் போல் மணிக்கும் ஒரு காப்பி பார்வர்ட் செய்துவிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து தன்னை மறைத்துக்கொண்டு காரை குறிப்பிட்ட இடைவெளியில் பின் தொடர ஆரம்பித்தான்.
***
காரின் அருகே மௌனமாக கைகட்டி நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு ஜெய்சங்கரின் விழிகள் விரிந்தது.இதுவரை அவனை இப்படியொரு உடையில் எந்தவொரு புகைப்படத்திலும் கூட இவன் பார்த்ததில்லை. பக்கா அரசியல்வாதியின் டிரஸ் கோடான வெண்ணிற வேஷ்டி, சட்டை தான் என்றும் அவனுடைய உடை.
இளம்நீல வண்ண ஸ்டையில்ட் டெனிம் ஸ்லிம் ஜீன்ஸும், லெமன் எல்லோ ரவுண்ட் நெக் டீசர்ட்டும் அவனின் உயரத்திற்கும், கம்பீரத்திற்கும் கனகச்சிதமாக பொருந்தி இருக்க அவனிடம் இயற்கையிலேயே ஒருவித ஆளுமை தெரிவதை இவன் ஏற்றுக்கொள்ள தான் வேண்டியிருந்தது.
தன்னை அழைத்து வந்தவன் எதுவும் பேசாது அமைதியாக கீழே இறங்கி நிற்க, சிறிது நேரம் வரை காரின் உள்ளே அமர்ந்திருந்த மிருணாளிணி இன்னும் சற்று நேரத்தில் இருட்ட ஆரம்பித்துவிடும் என்பதை உணர்ந்து தானும் காரை விட்டு கீழிறங்கினாள்.
அவனாக எதுவும் தொடங்குவது போல் தெரியவில்லை எனவும் மெல்ல தன் தயக்கத்தை உதறி, “என்ன விஷயம்?” என்று மெதுவாக அவனிடம் கேள்வி எழுப்பிய மறுநொடி விலுக்கென்று தன்னை திரும்பிப் பார்த்தவனின் சீறும் பார்வையில் இவள் இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள்.
முகத்தில் அத்தனை ஆக்ரோஷம் வெடித்துக் கிளம்ப அவளை உறுத்துப் பார்த்தவன், “என்ன விஷயம்? ம்...” என தலையசைத்து தனக்கு தானே கோபத்துடன் முனங்கியவன் அடுத்த நொடி செய்த காரியத்தில் அவள் பதறியடித்து அவனருகே ஓடிச் சென்றிருந்தாள்.
அவளுடைய கேள்வி அவனுக்குள் அத்தனை ஆவேசத்தை தூண்டிவிட்டிருக்க, தன்னுடைய கட்டுப்பாட்டை முழுதாக இழந்தவன் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அருகில் நின்றிருந்த அந்த புங்கை மரத்தில் தனது வலது கரத்தை மடக்கி பலம் கொண்ட மட்டும் ஓங்கிக் குத்தியிருந்தான்.
அவன் செயலில், “மித்து...” என அலறிய மிருணா வேகமாக காரை சுற்றி அவனிடம் ஓடினாள்.
நடப்பதை பார்த்திருந்த ஜெய்க்குமே அவனின் செயலில் அதிர்ச்சி என்றால் அதற்குமேல் இவள் அவனிடம் கதறி ஓடியதில் பேரதிர்ச்சி உருவானது.
அவள் தன்னை நெருங்கும் முன்னர் கோபமாக குறுக்கே கைநீட்டி தடுத்தவன், “பக்கத்தில் வந்தாய்... கொன்றே விடுவேன் உன்னை!” என்றான் உக்கிரமாக.
அப்படியே சடன் ப்ரேக்கிட்டு நின்றவள் தவிப்புடன் அவனின் கையை பார்த்தாள். அவனுடைய வெறித்தனத்தை தாங்க முடியாது வலியுடன் உதிரம் எனும் கண்ணீரை தன்னிடம் இருந்து வடித்துக் கொண்டிருந்தது அது.
விழிகளில் கரகரவென்று நீர் பெருக்கெடுத்து வழிய, “மித்து... ரத்தம் வருகிறதுடா!” என்றாள் குரல் தழுதழுக்க.
“வரட்டும்!” என்றான் அவன் இரக்கமில்லாதவனாக.
***
இந்த உலகின் முன் பத்தோடு பதினொன்றாக தெரியும் கேடுகெட்ட அரசியல்வாதி தான் தன் கணவன் என்பது அந்த நேரத்தில் மிருணாவுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.எல்லோரையும் போலவே இவனும் இதில் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறானே... நடந்தக் குற்றத்தை கண்டு பொது மக்களுக்கு இருக்கின்ற வேகமும், கோபமும் கூட ஒரு சட்டமன்ற உறுப்பினரான இவனுக்கு இல்லையே என்று இவள் உள்ளம் கொந்தளித்தது.
பத்து மணியை கடந்து நிதானமாக வீட்டிற்கு வந்த கணவனிடம், “உன்னோடு நான் பேச வேண்டும்!” என்றவளின் முகத்தில் ஒருவித தீவிரம் வந்து அமர்ந்துக் கொண்டது.
“ஆஹான்...” என்றவாறு அவள் அருகில் வந்து உரசிக்கொண்டு அமர்ந்தவனை, “ப்ச்... தள்ளி உட்கார்!” என்று முகத்தை சுளித்தாள் அவள்.
முதலில் நெற்றியை சுருக்கியவன் பின்னர் இயல்பான பாவனை கொண்டு வந்து அவள் கரத்தை தன் கரத்தில் எடுத்துக் கொண்டு, “ஏன் தள்ளி உட்கார வேண்டும்?” என்று அமைதியாக கேள்வி எழுப்பினான்.
“எனக்கு பிடிக்கவில்லை!” என்றாள் பட்டென்று.
“என்ன பிடிக்கவில்லை?”
“என்னடா திரும்ப திரும்ப கேள்வி கேட்கிறாய்? உன்னை பிடிக்கவில்லை, உன்னுடைய ஆட்டிடியுட் பிடிக்கவில்லை!” என்றாள் பற்களை கடித்து மூக்கு நுனி சிவந்தவளாக.
சினமேதும் கொள்ளாமல் மனைவியை ஆழ்ந்துப் பார்த்தவன், “சரி... என்ன பேச வேண்டும்?” என்று மெதுவாக கேட்டான்.
“நீ ஏன் அந்த சின்ன பிள்ளையை பற்றி என்னிடம் ஒன்றும் வருத்தமாக பேசவில்லை? நீ ஒரு எம்.எல்.ஏ. தானே... அதுவும் ஆளும்கட்சியின் எதிர்கால தூண், தலைவருக்கு வலதுகை, இளம் சூறாவளி என எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவனாக சமூகத்தில் இருக்கிறாய்.
அப்படிப்பட்டவன் ஏன் குழந்தையை இழந்தப் பெற்றோரை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை? நிருபர்கள் கேட்ட கேள்விக்கும் கடமைக்கு என்று எதையோ ஒன்று பேசிவிட்டு ஒதுங்கிக் கொண்டாயே... உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இந்தப் பிரச்சினைக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வளவு தானா?” என்றாள் ஆத்திரமாக.
அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கேள்வி கேட்கவில்லை அவ்வளவுதான் வித்தியாசம், மற்றபடி அதற்கு இணையாக பொங்கிக் கொண்டிருந்தாள் மிருணா.
“உன்னிடம் பேசுவதாலோ அல்லது அந்தப் பெற்றோரிடம் பேசுவதாலோ என்ன பெரிதாக நடந்துவிட போகிறது? ஒன்றுமில்லை... அதற்கு எதற்கு நான் தேவையில்லாமல் அதைச் செய்ய வேண்டும்?”
மிருதனின் பதிலை கேட்டு மேலும் ஆவேசம் கொண்டவள், “அவ்வளவுதானா... நீ அவ்வளவே தானாடா... நீ என்னுடைய மித்துவே இல்லைடா. நீ ஒரு சாடிஸ்ட், நீ ஒரு சுயநலவாதி. உன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று அரசியலில் இறங்கி நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன், பெரிய ஊழல்வாதி. நீ...” என்று அவள் மேலும் கோபமாக தடுமாற சட்டென்று எழுந்தான் அவன்,
“போதும் நிறுத்து.... இப்பொழுது எதற்கு தேவையில்லாததை அநாவசியமாக பேசிக் கொண்டிருக்கிறாய் நீ. அமைதியாகப் படுத்து தூங்கு, இன்னொரு முறை இந்த மாதிரி பேசுகின்ற வேலை வேண்டாம்!” என அழுத்தமாக கூறிவிட்டு நகர்ந்தான்.
“நில்டா... நான் அப்படித்தான் பேசுவேன். நீ எனக்கு பதிலை சொல்லித்தான் ஆக வேண்டும். சுயநலத்தின் முழுஉச்சமாக ஆணவத்துடன் நிற்கின்றாயே. உன் கேவலமான அரசியல் உன்னை இவ்வளவு மாற்றி விட்டதா? ஐ ஹேட் யூ!” என்று கத்தியவளின் பேச்சுக்களை இறுக்கமான முகத்துடன் காதில் வாங்கியபடி வெளியேற முயன்றான் மிருதன்.
“ஏய் இரு... நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. நான் கேட்கின்ற எந்தவொரு கேள்விக்கும் நீ பதில் சொல்லவில்லை. இதற்காவது பதில் சொல்!” என்று குறுக்கே பாய்ந்து வழி மறித்து நின்றாள் மிருணாளிணி.
புருவங்களை சுளித்தவன், “என்ன?” என்றான் மெத்தனமாக.
“உன் அரசியல் உன்னை இத்தனை தூரம் ஈவு இரக்கம் இல்லாதவனாக மாற்றி விட்டதென்றால்...” என நிறுத்தி அவன் விழிகளை நேராகப் பார்த்தவள்,
“உனக்கு பெண் பிள்ளை தான் வேண்டும் என்றாயே... நாளை உன்னுடைய பெண்ணையும் எவனாவது இப்படி கை வைக்க முயன்றால் அப்பொழுதும் இப்படித்தான் ஒரு அரசியல்வாதியாக நீ கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்பாயா...” என்று அவள் முடிக்கவில்லை,
“மிருணா...” என்று ஆவேசமாக கத்தியபடி அவள் கழுத்தை பிடித்திருந்தான் கணவன்.
சிறிதும் அச்சம் கொள்ளாது வேங்கையென சீறி உறுமும் அவனின் செந்தனல் விழிகளை அசராது நேராகப் பார்த்து நின்றாள் மிருணா.
“என்னடி திமிரா?” என்றான் கரங்களில் அழுத்தத்தை கூட்டி.
“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன், நீ பதில் சொல்!” என்றாள் உதட்டை வளைத்து ஏளனமாக.
உடல் எங்கும் ஓடும் அத்தனை இரத்த நாளங்களிலும் ஆத்திரம் முழுதாக வியாபித்து அவனை நரசிம்மமாக உயிர் கொள்ளச் செய்ய, “என் பெண்ணை தொடுவதென்ன... எவனாவது மனதில் அப்படி நினைத்தான் என்று தெரிந்தால் கூட அவனை உயிரோடு கொளுத்தி விடுவேன்!” என்று பற்களை நறநறத்தவனின் கரங்களை பட்டென தட்டிவிட்டு நகர்ந்துச் சென்றாள் அவள்.
‘ஸோ... இதில் தன் பெண்ணென்ற சுயநலம்!’
நெஞ்சம் முழுவதும் தன் கணவன் மீது மேலும் அவளுக்கு வெறுப்பு மூண்டது.
மௌனமாக திரும்பி நடந்தவளை வேகமாக நெருங்கி கரம்பற்றி சுழற்றி தனக்கு முன்னால் இழுத்து நிறுத்தினான் மிருதன்.
“ப்ச்... விடு!” என்று தட்டிவிட முயன்றவளை அழுத்தமாகப் பிடித்தவன், “என் பெண்ணை பற்றி என்னிடமே வாய் கூசாமல் கேள்வி கேட்க உனக்கு எப்படிடி மனது வந்தது?” என்றான் இன்னமும் அடங்காத கோபத்துடன்.
அவனுக்கு பதிலளிக்க விரும்பாதவளாக அவள் முகத்தை திருப்பிக் கொள்ள வெடுக்கென்று தன்புறம் அவளை திருப்பியவன், “உன்னுடைய கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லை என்றால் உன் ரத்தத்தில் உருவாக போகிறவள் என்பதை கூட உணராமல் அத்தனை உதாசீனமாக கேள்வி கேட்பாயா நீ?” என்றான் கழுத்து நரம்புகள் புடைக்க.
தன் மனதிலும் அதனுடைய தாக்கத்தை நடுக்கத்துடன் மிருணா உணர்ந்திருந்தாலும் கணவனை விடக்கூடாது என்கிற ஆவேசம் மற்றதை பின்னுக்கு தள்ளி இருந்தது.
“நன்றாக கேட்டுக்கொள்... உன்னை மாதிரியும், உன் பாஸ் மாதிரியும் சும்மா நல்லவன் என்கிற வேஷத்தை போட்டுக் கொண்டு எதற்கும் உதவாத மீடியாவிலும், சோசியல் மீடியாவிலும் வெறுமனே பொங்குகிறவன் இல்லை நான்...”
என்று வார்த்தைகளை துண்டு துண்டாக அழுத்திக் கடித்து துப்புபவனை அவன் மனைவி கோபமாக முறைத்துப் பார்க்க, “என்னடி பார்வை? இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன்!” என்று மேலும் எகிறினான் அவன்.
‘அப்படியே... அசந்துட்டாலும்...’
“நாங்களாவது அப்படி பொங்கவாவது செய்கிறோம்... நீ எல்லாம் இத்தனை பெரிய அதிகாரத்தில் இருந்துக் கொண்டு எதற்கும் பயன்படாமல் தான் இருக்கிறாய்!” என்று அவனை மேலும் உதாசீனப்படுத்தினாள் மிருணாளிணி.
அதில் இன்னமும் வெகுண்டெழுந்தவன், “என்னடி விட்டால் ரொம்பதான் பேசிக்கொண்டே போகிறாய்?” என்று அவள் கன்னங்களை அழுந்தப் பிடித்து தன் முகத்தருகே அவளின் முகத்தை இழுத்தவன்,
“நான் தேடி அடைந்திருக்கும் இந்த அதிகாரத்தை வைத்து என்னவெல்லாம் நான் சாதித்துக் கொண்டிருக்கிறேன் என்று உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று உற்றுப் பார்த்தான்.
“ஏன் தெரியாமல்? சிட்டியில் மிகப்பெரிய இன்டர்நேசனல் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ், அதோடு பைனான்ஸ், ரியல் எஸ்டேட் இன்னும் சில அன்டர்கிரவுன்ட் பிசினஸ், அடிதடி அராஜக வேலைகள் என்று எத்தனை எத்தனை கோடி கோடியாய் சம்பாதித்து வைத்து இருக்கிறாய்!”
அவளின் ஏளனத்தை அலட்சியம் செய்து இளக்காரமாக புன்னகைத்தவன், “இதெல்லாம் இந்த போலியான உலகிற்கு முன்னால் என்னுடைய சாதனையாக தெரிவது. இதற்கும் மேல் ஒரு விஷயத்தை கையிலெடுத்து அதில் ஜெயித்தும் கொண்டிருக்கிறேன்!” என்று கண்கள் மின்ன நெஞ்சை நிமிர்த்தி மிகவும் இறுமாப்புடன் பேசுபவனை அவள் புரியாமல் பார்த்தாள்.
‘இன்னும் என்ன பிராடுத்தனம் செய்கிறான் இவன்?’
ம்... என்று உதடுகளும், கண்களும் குழப்பத்தில் ஒருசேர சுருங்க தன் முகம் பார்த்தவளை கண்டதும் அத்தனை நேரமாக இருந்த ஆங்காரம் விடைபெற்று கிளம்ப அவன் மனதில் சற்று நிதானம் வந்து அவளை பார்த்திருந்த பார்வையும் முற்றிலும் வேறாக மாறிப் போனது.
***
பூஜையறையிலிருந்து வெளியே வந்த புகழேந்தி மருமகளின் சோர்ந்த முகத்தை கண்டு, “என்னம்மா உடம்பு முடியவில்லையா?” என்று அக்கறையாக கேட்டார்.“இல்லை மாமா... சரியான தூக்கம் இல்லை. அதுதான் கொஞ்சம் டயர்ட் ஆக இருக்கிறது!” என்றவாறு சென்று கணவனின் அருகே அமர்ந்தாள்.
“சரி இன்று லீவ் சொல்லிவிட்டு நன்றாக தூங்கி எழு, வேலைக்கு போக வேண்டாம்!” என்றார் மாமியார்.
“ம்... நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அத்தை!”
தன் பெற்றோருடன் மனைவிக்கு இருக்கும் நெருக்கம் கண்டு கணவனின் முகத்தில் தானாக ஒரு பூரிப்பு வந்தது.
“இரு... டிபன் எடுத்து வைக்கிறேன், சாப்பிட்டு நன்றாக ஓய்வெடு!” என எழுந்த செல்வி, “நீ என்னடா செய்கிறாய்? குளித்துவிட்டு வருகிறாயா...” என்று மகனிடம் கேட்டார்.
கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன், “எனக்கும் தூக்கம் வருகிறதும்மா, நானும் சாப்பிட்டு விடுகிறேன்!” என்க புகழேந்தியின் முகம் கடுகடுவென்று ஆனது.
‘எதிலும் ஒரு ஒழுங்கு இருப்பதில்லை. இவனை இப்படியா நான் வளர்த்தேன்? அந்தக் கட்சியில் சேர்ந்து ரொம்பவே கெட்டுவிட்டான். சோம்பேறி... சோம்பேறி...’
தந்தையின் மனக்குமறல் புரியாது, வா என்று மனைவியை அழைத்தபடி உணவறைக்கு அவன் செல்ல, மகன் அங்கே போகவும் இவர் வரவேற்பறையில் அமர்ந்து விட்டார்.
மாமியார் தட்டில் பரிமாறிய வெண்பொங்கலை எடுத்து ஒரு வாய் வைத்த மிருணாளிணி அடுத்த நிமிடம் வாஷ்பேஷினை நோக்கி ஓட, தாயும் மகனும் ஒருகணம் விழித்து விட்டு அவள் பின்னே விரைந்தனர்.
அதற்குள் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்திருக்க வேகமாக நெருங்கி அவளின் முன்நெற்றியை அழுந்தப் பிடித்தவன், “ஏய்... என்னவாயிற்று?” என்றான் பதற்றமாக.
அவன் கேள்விக்கு பதில் கூற முடியாமல் அவள் மேலும் மேலும் ஓங்கரிக்க, “அம்மா!” என்றான் மிருதன் தாயிடம் திரும்பி தவிப்பாக.
தமிழ்செல்வி ஏதோ யோசனையில் நின்றிருக்க, மருமகளின் சத்தம் கேட்டு புகழேந்தியும் அங்கே வந்தார்.
“என்ன தமிழ்?” என்றார் மனைவியிடம்.
“ம்... மருமகள் வாந்தி எடுக்கிறாள்!” என்றார் கணவரிடம் ரகசியப் புன்னகையுடன்.
வாழ்க்கையில் அனுபவமிக்க மனிதர் மனைவியின் கண் செய்தியிலும், அவர் கள்ளச்சிரிப்பிலும் விஷயத்தை கிரஹித்துக் கொண்டவராக பெருமையில் நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.
பெற்றவர்கள் இடையே நடக்கும் நாடகத்தை கவனித்திராத மிருதன், “ப்ச்... போதும், நீ வாந்தி எடுத்தது!” என்று தண்ணீரை திருப்பி மனைவியை வலுக்கட்டாயமாக வாய் கொப்பளிக்க வைத்து அவள் முகம் கழுவி அழைத்து வந்து ஒரு நாற்காலியில் அமர்த்தி வைத்து பூந்துவாலை ஒன்றை எடுத்து முகத்தை துடைத்து விட்டான்.
“டேய்... அவள் தான் வாந்தி எடுக்கிறாள் இல்லை... அதையேன்டா தடுத்து இப்படி இழுத்து வருகிறாய்?” என்று மகனிடம் நேரிடையாக சண்டைப் போட்டார் புகழேந்தி.
“நீங்கள் சும்மா இருங்கள்... அப்படியே விட்டால் எவ்வளவு நேரம் எடுப்பாளோ... இப்பொழுதே பாருங்கள் முகம் எல்லாம் சோர்ந்துப் போய்விட்டது!” என்றான் கவலையாக.
“அப்புறம் சோர்ந்துப் போகாமல்... இதெல்லாம் சும்மாவா...”
தந்தையின் பேச்சில் அவன், “ஆங்...” என்று புரியாமல் பார்க்க, வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் நேரடியாக பேசிக் கொள்வதை ஆசையுடன் பார்த்திருந்தார் தமிழ்செல்வி.
இதை எதையும் உணரும் மனநிலையில் இல்லாமல் களைப்புடன் மிருதனின் வயிற்றில் தலைசாய்த்து விழிகள் மூடி இருந்தாள் மிருணா.
மகன் தன்னை கேள்வியாக நெற்றிச் சுருக்கிப் பார்க்கவும் பதில் சொல்ல முடியாது தடுமாறியவர், “ப்ச்... அவன் தான் கேட்கிறான் இல்லை, என்னவென்று சொல்லேன்!” என்றார் மனைவியிடம் அதிகாரமாக.
‘ம்க்கும்... இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை!’ என மனதில் கணவரை நொடித்துக் கொண்டவர் மருமகளின் அருகில் சென்று அவள் தலையை கனிவுடன் வருடி, “மிரும்மா!” என்று அழைத்தார்.
ம்... என்று முனகியவள் அலுப்புடன் விழிகளை திறந்துப் பார்க்க, அவளிடம் எதையோ கேட்க வாயெடுத்துவிட்டு சட்டென்று நிறுத்தி, “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? போய் ஹாலில் உட்காருங்கள் போங்கள்!” என கணவரை வேகமாக விரட்டினார் செல்வி.
“என்ன? ஓ... சரி சரி!” என்று அவர் வேகமாக வெளியேற, ‘என்னடா நடக்கிறது இங்கே?’ என்கிற ரேஞ்சிற்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கைப் பார்த்திருந்தான் மிருதன்.
***
“சரி... நான் கிளம்பட்டுமா?” என்றவாறு தனது அதிநவீன ஆப்பிள் தொழில்நுட்ப கைக்கடிகாரத்தை எடுத்து வலது கையில் கட்டியவன் மனைவியிடம் இருந்து சத்தம் வராமல் போகவும் அவள் புறம் திரும்பிப் பார்த்தான்.விழிகளில் மெல்லிய ரசனையோடு கணவனை மேலிருந்து கீழ்வரை அளந்துக் கொண்டிருந்தாள் பெண்.
உதடுகள் புன்னகையில் விரிய மிருணாவிடம் வந்தவன், “என்னடி பார்வையெல்லாம் பலமாக இருக்கிறது?” என்று அவள் தோள்களில் மாலையாக கரம்போட்டு அருகில் இழுத்துக் கொண்டான்.
ம்... என்று சலுகையுடன் மிருதனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள், “ஒரு காலத்தில் உன்னை இந்த மாதிரி வேஷ்டி சட்டையில் பார்க்க அவ்வளவு கொலைவெறி வரும். ஆனால் இப்பொழுது என்னவோ உனக்கு அது ஒரு தனி கம்பீரத்தையும், மிடுக்கையும் கொடுப்பது அவ்வளவு பாந்தமாக அழகாக தெரிகிறது. அதுதான் எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றவளது தலையில் முட்டியவன்,
“கண்களில் காதல் இருந்தால் கணவன் அன்ட்ராயரோடு இருந்தால் கூட அழகாகதான் தெரியுமாம்!” என இதழ் கடித்துச் சிரித்தான்.
டேய்... என்று பல்லைக் கடித்து நிமிர்ந்தவள், “எவ்வளவு காதலுடன் நான் ரசித்துப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நீ இவ்வளவு கேவலமான உதாரணத்தோடு பொருத்திப் பார்த்து சொல்வாய்!” என முறைத்தாள்.
சத்தமாக நகைத்தவன், “சரி வா... நேரமாகிறது!” என்று அவள் தோளில் கைப்போட்டு கதவு வரை சென்றுவிட்டு சட்டென்று நின்று, “ஹேய்... என் ஏஞ்சலிடம் நான் இன்னும் பை சொல்லவே இல்லையே!” என்று அவளின் மேடிட்ட வயிறருகே ஆசையுடன் குனிந்தான் மிருதன்.
ஐந்து மாதத்திற்கு ஓரளவு அவள் வயிறு வெளியே தெரிய ஆரம்பித்திருந்தது.
ம்க்கும்... என மிருணா தன் உதட்டை சுழித்துக்கொள்ள பதிலுக்கு அவனும் பழிப்பு காண்பித்துவிட்டு, “ஹாய் பேபி... அப்பா முக்கியமான வேலையாக வெளியே கிளம்புகிறேன். ப்ளஸ் செய்து அனுப்புங்கள், கொஞ்ச நேரத்தில் உங்கள் அம்மா காதல் வார்த்தை பேசி என்னை மயக்கி விட்டாள்.
அதனால் சொல்ல மறந்துவிட்டேன், நீங்கள் அவளை மாதிரி கோபித்துக் கொள்ளாமல் அப்பாவிற்கு அழகாக பை சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்று தன் மகவிடம் அவன் கொஞ்சிப் பேசும் அழகை இவளும் தன்னை மறந்து லயிப்புடன் பார்த்து நின்றாள்.
வயிற்றில் அழுத்தமாகப் பதிந்த அவனின் முத்த ஸ்பரிசத்தில் உணர்வு வந்தவள் அவன் காதைப் பற்றி எழுப்பி, “போதும்... உன் கொஞ்சல்ஸ் எல்லாம், இப்பொழுது உனக்கு நேரம் போவது தெரியாதே...” என நொடித்துக் கொள்ள,
“உண்மை தான், என் பிள்ளையிடம் பேசும்பொழுது நேரம் போவதே தெரிய மாட்டேன் என்கிறது!” என்று ஏக்கப்பெருமூச்சு விட்டபடி நின்றவனின் கழுத்தில் கைவைத்து வெளியில் தள்ளியபடி, “ஒரு நாளாவது இப்படி என்னை விட்டுக் கிளம்பும்பொழுது நீ இதுபோன்று பீல் செய்து சொல்லி இருப்பாயாடா!” என்று பொருமினாள்.
“ஏன் பேபி... எத்தனை முறை உன்னை நேரம் காலம் பார்க்காமல் கொஞ்சியதால் தானே நீ இப்படி வயிற்றை தள்ளிக் கொண்டு நிற்கிறாய்?” என்று அவள் இடையில் கரம்போட்டு அருகில் இழுத்து அவன் கண்ணடிக்க முகம் சிவந்தவள்,
“டேய் லூசு... போதும் வாயை மூடிக்கொண்டு கிளம்பு!” என வேகமாக அவனை விட்டு விலகி நின்று சற்று நிதானித்து விட்டே மெதுவே கீழே இறங்கிச் சென்றாள்.
அவளின் வெட்கத்தை ரசித்தபடி முகம்கொள்ளா சிரிப்போடு மிருதன் அவள் பின்னால் வர, அவனுக்கு நேர்மாறாக முகம் முழுவதும் கடுகடுவென்று எந்நேரம் கோபத்தில் வெடித்துச் சிதறுவாரோ என காத்திருந்தார் புகழேந்தி.
அப்பாவை கண்டுக்கொள்ளாதவன், “ஓகேம்மா... நான் கிளம்புகிறேன்!” என உரக்க செல்வியிடம் குரல் கொடுக்க, மகனின் குரலில் அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவர் அடுத்து தன் கணவன் வீசிய கடுஞ்சொற்களில் அதிர்ந்து நின்றுவிட்டார்.
அவர் பேச்சு மிருணாவையே ஒரு நொடி பதறச் செய்துவிட்டது.
“அப்படியே போய் அவர்கள் காலில் விழுந்துக் கிடக்கச் சொல். இத்தனை வருடங்களாக அப்பனின் காலில் விழுந்துக் கிடந்தான். இனி தன் இஷ்டத்திற்கு பொறுக்கி தின்பதற்கு அவன் மகள் கால்களிலும் சேர்ந்து விழுந்துக் கிடக்கட்டும்!” என்றார் புகழேந்தி கடுமையாக.
விழிகள் இரண்டும் செந்தனலென சிவக்க, “அப்பா...” என கோபமாக இரைந்தான் மிருதன்.
விரைந்து அவன் அருகில் சென்று அவன் புஜத்தை அழுந்தப் பற்றியவள், “மித்து... கொஞ்சம் பொறுமையாக இரு, தப்பு உன் பேரிலும் இருக்கிறது!” என்றாள் மிருணா அவசரமாக.
“என்னடி தப்பு?” என்று மனைவியை உறுத்து விழித்து அதற்கும் தந்தையிடம் வாங்கி கட்டிக்கொண்டான் நாயகன்.
“டேய்... இப்பொழுது எதற்கு வயிற்றுப் பிள்ளைக்காரியிடம் உன் வீரத்தை காண்பிக்கிறாய்!”
அவரிடம் திரும்பி வெடுக்கென்று, “நான் என்னுடைய பெண்டாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்!” என்றான் மிருதன் திமிராக.
ஏய்... என்று அவள் அவனை அடக்க முயல, அவனோ அவளின் கையை உதறி விறுவிறுவென்று வாசலுக்கு நடந்தான்.
செல்பவனை கவலையுடன் பார்த்தவாறே, “அத்தை... இதோ வருகிறேன்!” என்று இவளும் அவன் பின்னே விரைந்தாள்.
தனது காரில் ஏறி கதவை அறைந்து மூடியவனின் அருகே குனிந்தவள், “மித்து ப்ளீஸ்... கொஞ்சம் நான் சொல்வதை பொறுமையாக கேளேன்!” என்றாள் கெஞ்சலாக.
கண்களை அழுந்த மூடித் திறந்தவன் வேகமாக கீழே இறங்கி அவளை ஒரு ஓரமாக தள்ளிச் சென்று, “எதற்குடி இப்படி டிரைவர் முன்னால் எல்லாம் கெஞ்சுகிறாய்?” என்று அதற்கும் கோபமாக சண்டைப் போட, “ஷ்... அப்பா...” என கரங்களை இடையில் வைத்து அலுத்துக் கொண்டாள் அவள்.
மனைவி நின்றிருந்த தோற்றம் மனதை அசைக்க, “என்ன?” என்றான் கணவன் பொறுமையாக.
“இந்நேரம் நீ மட்டும் அறைக்குள் இருந்து இருந்தாய் என்று வைத்துக்கொள், கன்னம் வீங்குமளவிற்கு ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்!” என்று இம்முறை அவள் எகிறினாள்.
அவளின் அதட்டலில் சிரிப்பு மலர, “என்னடி?” என்றான்.
“ப்ச்... நீ செய்வது எதுவும் சரியில்லை மித்து. மாமா, அத்தையிடம் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் உன் வரையில் நீ நல்லவனாக இருந்தால் போதும் என்கிற மாதிரி உன் வசதிக்கு தான்தோன்றித்தனமாக சுற்றுவது நன்றாகவா இருக்கிறது... வயதான காலத்தில் உன்னை நினைத்து அவருக்கு எத்தனை டென்ஷன்.
நீ செய்கின்ற விஷயத்தை ஊருக்கு மறைப்பதில் ஒரு நியாயம் உள்ளது சரி, பெற்றவர்களிடம் மறைப்பதால் அவர்களின் நிம்மதி பறிபோய்க் கொண்டிருப்பது உன்னுடைய கண்களுக்கு தெரியவில்லையா...
தங்களுக்கு இருக்கின்ற ஒற்றை மகனும் இவ்வாறு தவறான பாதையில் செல்கிறானே என அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல்? மாமாவிடம் உண்மையை சொல்லாமல் ஏன்டா இப்படி கெட்டப்பெயர் வாங்குகிறாய்? அவர் என்ன உன்னை தடுத்து நிறுத்தவா போகிறார்...”
“நிச்சயம் அவர் தடுப்பார்... உன்னிடம் நான் ஏற்கனவே சொல்லவில்லை...” என்றான் மிருதன் சிறு கடுப்புடன்.
“அது... அப்பொழுது நீ சின்னப் பையன்டா, இப்பொழுது புரிந்துக் கொள்வார் பாரேன்!”
“எனக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை மின்னு, அவர் ஏதாவது உதாசீனமாக பேசினால் எனக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். வீட்டில் சண்டை வேண்டாம் என்று தான் நான் ஒதுங்கிப் போகிறேன்!”
“சரி... அப்படியென்றால் விஷயத்தை நான் சொல்லட்டுமா?”
சிறிது யோசித்தவன், “என்னவோ செய்!” என கிளம்பினான்.
No comments:
Post a Comment