வாழ்வே சொர்க்கம் ஆகுமே
(இணையத்தில் வெளிவராத நேரடிப் புத்தகம்)
கதைக்கரு
எதிர்பாரா ஓர் சூழ்நிலையில் நாம் சந்திக்க நேரும் தோல்விகளையும், அவமானங்களையும் ஏற்க முடியாமல் தடுமாறி தவிப்பதை காட்டிலும், அந்த நேரம் நமக்குள் உருவாகும் எதிர்மறை உணர்வுகளை வெற்றிக் கொண்டு, என்னாலும் இந்த உலகின் முன்னே தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை விடாமல் உறுதியாக பற்றியவாறு, அடுத்த இலக்கை நோக்கி துணிவாக நகர்ந்தால் நமது வாழ்வின் சொர்க்கத்தை நிச்சயமாக அடைந்து விடலாம்.**********
கதையிலிருந்து சிறு துளிகள்
அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவன் கீழே வரும்பொழுது, “பொண்ணு நல்லப் பொண்ணு தான்... என்ன? ஒரு தடவை தடம் மாறிப் போயிடுச்சு. ஆனாலும் அதுக்கு அப்புறம் தங்கமா தான் இருக்கு...” என்ற குரலை வேகமாக இடைமறித்தார் ஜானகி.
“இல்ல... எனக்கு இஷ்டமில்லை அண்ணி, மேலே பேச வேணாம் விடுங்க. அதுவும் உங்க அண்ணனுக்கு எல்லாம் சுத்தமா பிடிக்காது. வேற நல்ல பொண்ணு வந்தா சொல்லுங்க... இவனை என்னால கைக்குள்ள பிடிச்சு நிறுத்தவே முடியலை, தான்தோன்றித்தனமா சுத்திட்டு இருக்கான். அவனுக்குன்னு வர்றவளாவது இழுத்துப் பிடிக்கறாளா பார்ப்போம்...”
“அது என்ன ஜானு, நான் உன் கைக்குள்ள நிக்கலைன்னு நீ இவ்வளவு கவலைப்படுற, இங்கே பாரு... நான் உன் கைப்பிடியில உட்காரவே செய்றேன்!” என அருகில் அமர்ந்து, குறும்புடன் அவர் முழங்கையோடு தன் கரம் கோர்த்துக் கொண்டான் ரிஷி.
“அடேய் பையா...” என எதிரில் இருந்தவர் வெடித்து சிரிக்க, இவன் முகமும் புன்னகையில் விரிந்தது.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, என் கையை விடுடா!” என எரிச்சலுடன் அவனை தட்டி விட்டு எழுந்துச் சென்றார் ஜானகி.
“அப்புறம் அத்தை... என்ன வாக்கிங்கா?”
“ஆமாடா... தினமும் பக்கத்துலயே போனாலும், வாரத்துக்கு ரெண்டு நாளாவது அம்மா கிட்ட பேசன்னே இந்தப்பக்கம் கண்டிப்பா வந்துடுவேன்!”
“அது தான் தெரியுமே... ஆனாலும் நீங்க உங்க அண்ணனையும் பார்த்துப் பேச வரலாம், இப்படி ஓரவஞ்சனை செய்ய கூடாது!”
“ம்க்கும்... அந்த சிடுமூஞ்சி கிட்ட யார் பேச்சு வாங்குறது?”
“இது எல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்... பத்தொன்பது வருஷம் மட்டும் கூட வளர்ந்த நீங்களே இவ்வளவு சலிச்சிக்கிட்டா, காலம்பூரா கூடவே ஒன்னா வாழ்ற நாங்க எவ்வளவு சலிச்சிக்கறது?” என்று போலியாக நொடித்தான் அவன்.
தன்னுடைய பெரிய தந்தையின் மகனை எண்ணி பெருமூச்சு எறிந்த அப்பெண்மணி, “ஹும்... நீங்க எல்லாம் ரொம்பவே பாவம் தான், என்ன செய்றது?” என்று பரிதாபப்படும் நேரம், ஜானகி மகனுக்கான தேநீரோடு அங்கே வந்தார்.
அதை வாங்கி மெல்ல உறிஞ்சியபடி, “அப்புறம்... நான் உள்ளே வரும்போது ஏதோ பொண்ணை பத்தி பேசிட்டு இருந்தீங்க!” என்று அத்தையிடம் சுவாதீனமாக கேள்வி எழுப்பினான் ரிஷி.
“ஆங்..?” என்றவர் அடுத்து பேச வருவதற்குள், அவசரமாக அவரிடம் கண்களை உருட்டி இருந்தார் ஜானகி.
ஏற்கனவே எதற்கும் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் மகன், திருமண விஷயத்திலும் ஏதாவது கோளாறு செய்து விடுவானோ என சடுதியில் அவருக்குள் ஒரு கலக்கம் தோன்றி விட்டு இருந்தது.
“என்ன அத்தை? கப்புன்னு ஆஃப் ஆகிட்டீங்க, சொல்லுங்க!” என்று அவரை பேசத் தூண்டினான் நாயகன்.
“அது... அது... நான் ரெண்டு, மூனு பொண்ணை பத்தி அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன், நீ எதைப்பத்தி கேட்கற?” என்றார் அவர் தடுமாற்றமாக.
“ம்...” என இழுத்து தேநீர் கோப்பையை கீழே வைத்தவன், “சரி, அந்த மூனு பொண்ணுங்களை பத்தியுமே சொல்லுங்களேன்... தெரிஞ்சிக்குறேன். நான் இப்போ ஃப்ரீயா தான் இருக்கேன்!” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.
அவர் திருதிருவென அண்ணன் மனைவியை பார்க்க, அவரோ சொல்லி விடாதே என பார்வையால் தன் ஒன்று விட்ட நாத்தனாரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்.
“என்ன? பாஷை மறந்துப் போச்சா உங்களுக்கு...” என்று நக்கலாக சிரித்தான்.
“இல்லடா... அந்தப் பொண்ணுங்க சரிப்பட்டு வராதுன்னு அம்மா சொல்லிட்டாங்க!”
“ம்ஹும்... ஏன் சரிப்பட்டு வராது?”
மிகவும் தீவிரமாக காரணம் கேட்பவனை பாவமாக பார்த்தவர், பதில் சொல்வது அறியாது கைகளை பிசைந்தார்.
“இப்போ என்னடா? நான் தான் வேணாம்னு சொல்லிட்டேனே... எதுக்கு அத்தையை இப்படி விரட்டற?” என்று மகனை முறைத்தார் ஜானகி.
“எப்பவும் நான் தானே வேணாம் சொல்வேன், இன்னிக்கு எதுக்கு நீ சொன்ன?”
அவன் வீம்பாக கேட்கவும் பற்களை கடித்தவர், “உன் டேஸ்ட் என்னென்னு எனக்குத் தெரியும், அது தான் நீ சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிட்டேன்!” என்றார் அவர் இன்னமும் தன் பிடியை விட்டுக் கொடுக்காது.
“ஓஹோ...” என்றவாறு தன் அன்னையை கேலியாக நோக்கியவன், “அந்தப் பொண்ணு பேரு என்ன அத்தை?” என்றான் பட்டென்று அவரிடம் திரும்பி.
“என்ன ரிஷி?” என்று பதறியவர், விட்டால் அழுது விடுபவர் போல கலங்கிப் போனார்.
ஏற்கனவே அண்ணி எச்சரிக்கவும் தான், தன் அண்ணனின் குணம் நினைவு வந்து தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்தவர், தற்பொழுது அவரின் மகனிடம் வசமாக மாட்டிக் கொண்டதில் மொத்தமாக அரண்டு விட்டார்.
“அவன் கிடக்குறான்... நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அண்ணி, அண்ணா வேற காத்துட்டு இருப்பாங்க!”
“அப்படியா அத்தை... மாமா வெயிட் பண்ணுவாங்களா?”
“ஆமா கண்ணு... நான் கிளம்பறேன்!” என அவசரமாக கிளம்ப ஆயத்தமானார் சரிதா.
இவன் இப்படி எல்லாம் அக்கறையாக கேட்க மாட்டானே என ஜானகி பயந்து போனதற்கு ஏற்றது போலவே, அடுத்து பேசி இருந்தான் ரிஷிகேஷ்.
“சரி வாங்க... நானே உங்களை வீட்டுல ட்ராப் பண்றேன்!” என தானும் எழுந்து நின்று, சட்டை பையில் இருந்து வண்டி சாவியை எடுத்தான்.
பெண்கள் இருவரும் அவனை திகைப்புடன் நோக்க, “அட... என்ன யோசனை? வாங்க!” என்றான் பளீர் புன்னகையுடன்.
“நா... நான் வாக்கிங்ல தானே வந்தேன்!”
அண்ணன் மகனின் நடவடிக்கையில் கலவரமானவர் திணற, “அதுக்கு என்ன? இப்போ என் கூட பைக்கிங்ல போகலாம்!” என அசட்டையாக தோள்களை குலுக்கினான் அவன்.
ஜானகியோ, “ரிஷி...” என்றார் ஓய்ந்துப் போனவராக.
அவரை அழுத்தமாகப் பார்த்தவன், “எதுக்கும்மா என்கிட்ட இத்தனை நாடகம்?” என்று கூர்மையாக கேட்டான்.
“நீ...” என தளர்ந்தவர் பின் நிமிர்ந்து, “அப்பாவுக்கு பிடிக்காதுன்னு எதையும் ஏறுக்குமாறா, வேணும்னே தானே செய்வ... அது தான்... இது உன் வாழ்க்கைடா!” என்றார் பரிதவிப்புடன்.
சன்ன முறுவலுடன் அம்மாவின் கரத்தை பிடித்தவன், “அதே தான்மா நானும் சொல்றேன்... இது என் வாழ்க்கைம்மா. அந்த மனுஷனுக்கு பிடிக்காததை செய்யனும்னு அதுல விளையாடுவேனா சொல்லு!” என்று நிதானமாக பேசினான்.
“அப்புறம் ஏன் அந்தப் பொண்ணை பத்தி கேட்கற?”
ஜானகி விறைப்புடன் வினவ, “எனக்கு என்னவோ அவள் தான் எனக்கானவனு தோணுது!” என்றான் சிந்தனையுடன்.
“ஆனா அவ...”
குறுக்கே கை நீட்டி தடுத்தவன், “அத்தை சொல்லட்டும்!” என பிடிவாதமாக அவரை ஏறிட்டான்.
**********
சிறிய துண்டு ஒன்றினால் தன் ஈரக் கைகளை துடைத்தபடி வந்து மகளின் எதிரே அமர்ந்த அகிலா, “உங்கப்பா இன்னும் சித்தப்பா கிட்ட பேசி முடிக்கலையா?” என்றபடி அறையின் புறம் பார்வையை வீசினார்.“ம்... அப்படித்தான் போலிருக்கு!”
வாய்க்குள் முணுமுணுத்தவளை நேராக ஏறிட்டவர், “உனக்கு என்ன பிரச்சனை இப்போ?” என்று அழுத்தமாக வினவினார்.
மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தி தொண்டையில் அடைத்ததை விழுங்கி விட்டு, “எனக்கு மேரேஜ் லைஃப்ல இன்ட்ரெஸ்ட் இல்லை!” என்றாள் வெறுமையாக.
“இன்ட்ரெஸ்ட் இல்லாதவ தான் பதினேழு வயசுல ஒருத்தன் கூட ஓடிப் போனியா?”
சுள்ளென்று முகத்தில் அறைந்த தாயின் எள்ளல் கேள்வியை முயன்று ஜீரணித்து விட்டு, “அந்த தப்புல இருந்து தான் லெஸன் கத்துக்கிட்டேன்!” என பொறுமையாக மொழிந்தாள்.
“என்னென்னு..?”
தொடரும் ஏளனத்தில் துவளும் மனதை இழுத்துப் பிடித்து, “எதுக்கும், யாரையும் நான் டிபன்ட் செஞ்சு இருக்க கூடாது. எந்த ஒரு மனுஷங்க கிட்டயும் எனக்கான அன்பையோ, அக்கறையையோ தனியா நான் எக்ஸ்பெக்ட் செய்ய கூடாது. இந்த லைஃப்ல என்னிக்கும் நான் தனி தான், என்னை நானே தான் பார்த்துக்கனும். அப்புறம்... அவ்வளவு தான். இதுக்கு எல்லாம் நான் ரெடியா தான் இருக்கேன்!” என்று நிமிர்ந்து அவரை நேராக பார்த்தாள்.
மகளின் மனதில் உள்ளதை சில வருடங்களுக்கு முன்பே, ஒரு தாயாய் அகிலா கண்டு கொண்டார் தான். ஆனால் தன்னுடைய எதிர்பார்ப்பை, தேவையை பெற்றவர்களிடம் சொல்லாமல் அடுத்தவனை நம்பி வீட்டை விட்டு சென்று, ஊரார் முன் தங்களை தலைகுனிய வைத்தவளை அவரால் மன்னிக்க முடியவில்லை.
“ஆல்ரைட்!” என கைகளை குறுக்கே கட்டிக் கொண்டவர், “உன் லைஃபை பத்தி நான் சில டிஸிஸன்ஸ் எடுத்து இருக்கேன். இன்பாக்ட்... உன்னோட தப்பை சரி செஞ்சு நீ மூவ் ஆன் ஆகறதுக்கான ஒரு சான்ஸா கூட இதை எடுத்துக்கலாம்!” என்றவரை வேகமாக இடையிட்டாள் ஆரா.
“இல்லை... நான்...”
“வெய்ட்... லெட் மீ கம்ப்ளீட் ஃபர்ஸ்ட்!” என அவளை தடுத்து விட்டவர், “உன் மேலே எனக்கு பயங்கர கோபம் தான். இன்னிக்கு வரை நீ செஞ்ச விஷயத்தை என்னால அக்செப்ட் செய்ய முடியலை, வெறுப்பா தான் இருக்கு. பட், அஸ் அ பேரென்ட்டா.. எங்களோட பொறுப்புல இருந்து நாங்க விலக நினைக்கலை.
உனக்குன்னு ஒரு நல்ல லைஃபை அமைச்சு கொடுக்க நினைக்கறோம். அதை சரியா கொண்டு போறது உன் கையில தான் இருக்கு. நீ டென்ஷன் ஆகற அளவுக்கு யாரோ ஒரு மோசமானவன் கிட்ட உன்னை பிடிச்சு கொடுக்கப் போறது இல்லை. பெருசா பேமிலி பேக்ரவுன்ட் இல்லாம, பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு நல்லவனா வலை வீசி தேடி, அவனுக்கு தான் உன்னை மேரேஜ் செய்ய ப்ளான் செஞ்சோம்.
அன்-எக்ஸ்பெக்டட்லி, இப்போ ஒரு அலையன்ஸ் வேற மாதிரி வந்து சிக்கி இருக்கு. பையனுக்கு அப்பா, அம்மா, அக்கா, அண்ணான்னு குடும்பம் எல்லாம் நிறைவா இருக்கு. ஆனா, அவன் யார் கன்ட்ரோல்லயும் நிக்க மாட்டானாம். அவன் வசதிக்கு நினைச்சதை நடத்தி முடிச்சிப்பானாம். அப்படி இருக்கறவன் கூட நீ வாழ்றது ரொம்ப ஈஸி. அவனோட எக்ஸ்பெக்டேஷனுக்கு ஏத்த மாதிரி மட்டும் பிடிச்சபடி நடந்துக்கிட்டா, உன் லைஃப் நல்லபடியா செட்டில் ஆகிடும்.
நாங்க விசாரிச்ச வரை, கொஞ்சம் முன்கோபம் இருந்தாலும் அவன் குணம் பரவாயில்லைன்னு தான் சொல்றாங்க. இன்னொன்னு... உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும், ஓகே ப்ரொசீட் பண்ணலாம்னு அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிட்டானாம். குவாலிஃபிக்கேஷன் குறைவுனாலும் இயர்னிங் ஓகேவா தான் இருக்கு.. அதிகமும் இல்லை, அடிமட்டமும் இல்லை. ஸோ... இது உனக்கு கிடைச்சு இருக்க பெட்டர் ஆப்பர்சுனிட்டி, மிஸ் பண்ண நினைக்காத!” என்று முடித்தார்.
“இப்போ ஓகே சொல்லிட்டு, மேரேஜ் முடிஞ்ச பின்னாடி குத்திக் காண்பிச்சா...”
ஆரா தன் கவலையில் பேசத் தொடங்க, “ஃபேஸ் பண்ணி தான் ஆகனும். கோபம் வர்ற நேரம் உன்னை குத்திக் காண்பிக்க தான் செய்வாங்க, தப்பு செஞ்ச நீதான் தழைஞ்சு போகனும்!” என்று முறைத்தார் அகிலா.
“அப்படி எதுக்கு மேரேஜ் செஞ்சுக்கனும்? தேவையே இல்லை...”
அவள் பிடிவாதமாக மறுக்க துவங்க, “உனக்கு தேவை இல்லாம இருக்கலாம். ஆனா என் பையனை பார்க்கனும் நான்... இன்னும் நாலு வருஷத்துல அவனுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கும் போது, நீ இங்கே இருந்து கிளம்பி இருக்கனும்...” என்றவரை சிவந்த முகத்துடன் பட்டென்று இடைமறித்தாள் பெண்.
“நான் இப்பவே வேணா கிளம்பிடறேன். சீக்கிரமே ஒரு நல்ல பிஜி பார்த்துக்கறேன்!”
“ஹ்ஹ... என்ன புரட்சியா? உன் ரோஷத்தை விட்டு ப்ராக்டிக்கலா தின்க் பண்ணு. நான் உனக்காகவும் தான் சொல்றேன், பதினேழு வயசுல அஃபக்ஸனை தேடின நீ, சாகுற வரை அப்படியே தனி மரமா இருந்துடறேன்னு சொல்றியா... எதையும் ஒரு ட்ரை பண்ணாம ஒதுங்கறதே உன் வேலையா போச்சு. ஒருவேளை வர்றவன் உன்னை சரியா புரிஞ்சு கேர் எடுத்துக்கறவனா இருந்தா, அதை ஏன் மிஸ் பண்ண பார்க்கற?
இல்ல... ஒரு சிச்சுவேஷன்ல அவன் கூட மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் வந்தாலும், உனக்கான பிடிப்பா அதுக்குள்ள ஒரு பேபி பிறந்துட்டாலே நல்ல சப்போர்ட்டா தானே இருக்கும். அப்புறம் நீ உன் குழந்தைக்காக வாழும் போது, அவனை அட்ஜஸ்ட் செஞ்சு போறது பெரிய விஷயமா தெரியாது. அப்படியும் முடியலைன்னா வேணா, அந்த நேரம் டிவோர்ஸ் பண்ணிட்டு உன் வழியை தனியா பார்த்துக்கோ!”
தாயின் வார்த்தைகளில், ‘என்ன பேசறாங்க இவங்க?’ என்று பெண்ணிற்கு பெரும் திகைப்பும், மலைப்புமாக தான் இருந்தது.
**********
வீட்டு வாசலில் கார் சென்று நிற்கவும், விரைவாக சுற்றுச்சுவர் கதவை திறந்து வெளியே வந்து நின்ற அன்னையை கண்டு ரிஷிகேஷுக்கு சிரிப்பு வந்தது.
“நீ இறங்கு, நான் அமௌன்ட் செட்டில் பண்ணிட்டு வரேன்!” என்று மனைவியிடம் கூறினான்.
ஆராதனா கீழே இறங்கவும், ஆவலாக அவளை நெருங்கினார் ஜானகி.
“பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?”
“ஆங் அத்தை... நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்ன..? சரி, உள்ள வா!”
“இருங்க... லக்கேஜ் எடுக்கனும்!” என்று வாகனத்தின் பின்புறம் செல்ல, ரிஷி இருவரின் பெட்டிகளையும் இறக்கி வைத்தான்.
“ஏன்டா... நாலு நாள் நல்லா ஊர் சுத்திட்டு, வெறும் உங்க பெட்டியோட மட்டும் வந்து இருக்கீங்க?”
மாமியாரின் கேலியில் மருமகள் சங்கடமாக கணவனின் முகம் பார்க்க, அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
“நாங்க என்ன டூரா போனோம்? எந்த வேலைக்குப் போனோமோ, அதைச் சிறப்பா முடிச்சிட்டு வந்துட்டோம்!”
‘ஐயோ...’ என ஆரா உள்ளுக்குள் அலற, ஜானகி மகனின் காதைப் பிடித்து முறுக்கினார்.
“பெத்தவ கிட்ட பேச்சை பாரு...” என்று அதட்டவும் தவறவில்லை.
“அப்புறம் நீ எதுக்கு அப்படி கேட்கற? அதோட அங்கே வாங்கற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லை. ஹோம்மேட் சாக்லேட்ஸ் மட்டும் ஒரு நாலு பாக்ஸ் வாங்கினேன்!” என தோள்களை குலுக்கினான்.
“ம்க்கும்...” என்றவர் நொடித்துக் கொள்ள,
“ஓகே... ஒரு ரெண்டு மணி நேரம் நல்லா தூங்கி எழுந்தப் பின்னாடி, மதியத்துக்கு மேலே வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள் எல்லாம் போய் வாங்கனும்!” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.
மகனை கவலையுடன் பார்த்து, “டிஃபனு...” என சிறு குரலில் இழுத்தார் ஜானகி.
“ட்ரைன் விட்டு இறங்கி சாப்பிட்டுட்டு தான் கார் ஏறினோம். ஸோ... யூ டோன்ட் வொர்ரி!” என்று அவர் கன்னம் கிள்ளினான்.
அவரின் முகம் தெளியவில்லை, மிதமிஞ்சிய வருத்தமே அங்கு குடியிருந்தது.
“ஆரா... இந்தா ரூம் சாவி. நீ போய் ரெப்ரெஷ் ஆகு, நான் வரேன்!”
தன் மகன் சொல்வதை இயல்பாக ஏற்றுக் கொண்டு மருமகள் மேலேறிச் செல்லவும், ஜானகிக்கு நிறைவாக இருந்தது.
“ரொம்ப அருமையான பொண்ணு தான் இல்ல... நீ சொன்ன நிமிஷத்துக்கு சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டு ஏன்னு ஒரு கேள்வி கேட்காம நகர்ந்துப் போறாளே...” என்று சிலாகித்தார்.
“இவளை கட்டிக்க உன் பையன் ஏன் அவ்வளவு அடம் பண்ணான்னு இப்போ தெரியுதா?”
மைந்தனின் அலட்டலில் ஆனந்தமாக சிரித்தவர், பின் மெல்ல சோர்ந்து வாடி நின்றார்.
“ஜானு... இதுக்கு எல்லாம் நான் உன்னை தனியா கன்வின்ஸ் பண்ணனுமா என்ன? உனக்காக மட்டும் தான் இந்த வீட்டுல இன்னும் இருக்கேன்!” என்றான் பொறுமையாக.
“அது புரியுது... வெளியூர் போய் அலைஞ்சு திரிஞ்சு வந்தப் பிள்ளைங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட முடியலையே...”
விழிகளில் தேங்கிய நீரோடு நாசி விரிய தழுதழுத்தவரை தோளோடு அணைத்து, “முடிஞ்சவரை இன்னிக்கே ரூமை பக்காவா செட் பண்ணிடறேன். உன் ஆசைக்கு மேலே வந்து எங்களுக்கு நாளைக்கு விருந்து சாப்பாடே சமைச்சுப் போடு. நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன், நல்லா திவ்யமா உட்கார்ந்து மொக்குவேன்!” என்று சிரித்தான்.
“ப்ச்... போடா!” என அலுத்தவர், “நானும் ஒரு லிஸ்ட் ரெடி செஞ்சு வைக்கறேன், எல்லாம் சரியா பார்த்து வாங்கிடு. அவங்க வீட்டுல நல்லா வசதியா இருந்தப் பிள்ளை, எதையும் குறையா நினைக்காது தான்... இருந்தாலும், நம்மளும் கொஞ்சம் ஆச்சும் சௌகரியமா வச்சுக்கனும்!” என்றார்.
“டன்... அதை எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கண்டதையும் போட்டு குழம்பி கவலையில கிடக்காம நிம்மதியா இரு, உன் மகன் இந்த கல்யாணத்துனால ரொம்ப சந்தோசமா தான் இருக்கான்!”
அவன் கன்னம் வருடி, “எனக்கு இது போதும்டா... வேற என்ன வேணும்? சரி, போய் ரெஸ்ட் எடு!” என்று ரிஷியை அனுப்பி விட்டு வீட்டினுள் சென்றார்.
கலையரசன் முன்னால் கிடந்த கூடத்து நாற்காலி ஒன்றில் தான் அமர்ந்து இருந்தார். மகன் வந்ததில் இருந்து அவர்கள் பேசியது வரை அனைத்தையும் கேட்டு இருந்தவர், உள்ளே வந்த மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அவர் இவரை கண்டு கொள்ளவில்லை, தன் போக்கில் சென்று அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
ரிஷி மேலேறி வர, ஆராதனா உடைமாற்றி கட்டிலில் படுத்து இருந்தாள்.
“ஓய்... அதுக்குள்ள படுத்துட்டியா?”
அருகில் சரிந்து தன் கன்னத்தை நிமிண்டுபவனிடம் திரும்பி ஒட்டிக் கொண்டவள், “ஸ்லீப்பர்ல தான் வந்தோம்னாலும் ட்ராவலிங் அலுப்பு இருக்கு, நல்லா தூங்கி எழுந்தா தான் கொஞ்சம் பிரிஸ்கா இருக்கும்!” என்று மூடிய இமைகளுடன் மெதுவாக முனகினாள்.
“என்னது... இப்பவே தூங்கப் போறியா? இது என்ன அநியாயமா இருக்கு... நமக்கான இன்றைய கடமைகளை நாம சரிவர செய்யவே இல்லையே, அது எல்லாம் முடியாம நீ தூங்க கூடாதே...”
அவனுடைய உல்லாச சீண்டலில், “ரிஷி...” என சிணுங்கி நகர்ந்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து கட்டிக் கொண்டவள், “தூங்கலாம்...” என்றாள் கொஞ்சலாக.
கொஞ்சியவளின் முகம் நிமிர்த்தி உதட்டில் ஆழ்ந்து முத்தமிட்டவன், “இப்படி எல்லாம் செஞ்சா.. இன்னும் தான் டெம்ப்ட் ஆகுது!” என்று அடுத்து செவிமடலை மெல்ல கடித்தான்.
தேகம் சிலிர்த்து குறுகியவள், “நோ... ரொம்ப தூக்கம் வருது!” என்று மறுத்தாள்.




